மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


தலித் பிரச்சனைகள் மீதானப் போராட்டங்கள்: சில அனுபவங்கள்


பி.வி. ராகவலு

தமிழில்: ச.வீரமணி

நம்முடைய அரசியல் அமைப்புச் சட்டத்தின் இலக்குகளில் ஒன்று, தலித்துகளை சமூகப் பொருளாதார சுரண்டல்களிலிருந்து விடுவித்தல் என்பதுமாகும். அதற்காகப் பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் கடந்த அறுபது ஆண்டு கால அனுபவங்களை அலசி ஆராய்ந்தோமானால் விளைவுகள் ஒன்றும் திருப்திகரமானதாக இல்லை. இதற்கான முக்கிய காரணம் தலித்துகளின் நிலைமையை மாற்றுவதற்காகப் போராடும் அமைப்புக்களை விட நிலைமை அப்படியே இருக்க வேண்டும் என எண்ணும் சக்திகள் அரசின் மீதும் சமூகத்தின் மீதும் அதிக செல்வாக்கு செலுத்துவதுதான்.

தலித் பிரச்சனைகள் மீதானப் போராட்டங்களை நாங்கள் நடத்திய சமயத்தில் எங்களுக்கு ஏற்பட்ட சில அனுபவங்களைத் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டப் பிரிவினரின் முன்னேற்றத்திற்காகவும், சாதிய அமைப்பு முறைக்கு எதிராகவும் பல அமைப்புகள் இருக்கின்றன.  அவற்றின் செயல்பாடுகளில் சில பலவீனங்கள் இருப்பதால்தான் அவற்றால் தாங்கள் விரும்பக்கூடிய அளவிற்கு முன்னேற முடியவில்லை. இவற்றைக் கணக்கில் கொண்டுதான் ஆந்திராவில் நாங்கள் 1998 இல் பல்வேறு வெகுஜன அமைப்புகளில் செயல்படும் ஊழியர்கள் ஒன்றுபட்டு, சாதியப் பாகுபாடுகளுக்கு எதிரானப் போராட்டக் குழு (‘Struggle Organization Against Caste Discrimination’) ஒன்றை உருவாக்கினோம்.

Engelsஅங்கக இயற்கையின் (organic nature) வளர்ச்சி விதியை டார்வின் கண்டுபிடித்ததைப் போல, மனித சமூகவரலாற்றின் வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டுபிடித்தார்.  மனிதன் அரசியல், அறிவியல், கலை, மதம், இதரவற்றில் ஈடுபடும் முன்னர் முதலில் உண்ண உணவையும், இருக்க இருப்பிடத்தையும், உடுக்க உடையையும் பெற்றிருக்க வேண்டும் என்னும் சாதாரணமான உண்மை இதுவரை

சித்தாந்த மிகை வளர்ச்சியினால் மூடி மறைக்கப்பட்டிருந்தது. ஆகவே உடனடியான பொருளாதார வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்தி செய்தல், அதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட மக்களினம் அல்லது குறிப்பிட்ட சகாப்தத்தின் போது அடைந்திருக்கின்ற பொருளாதார வளர்ச்சியின் அளவு என்னும் அடிப்படையின் மீது சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள், சட்டவியல் கருத்தாக்கம், கலை மற்றும் மதக் கருத்துக்கள் கூட வளர்ச்சியடைகின்றன. ஆகவே அதன் ஒளியில் அவற்றை விளக்க வேண்டுமே அல்லாது இதுவரை செய்யப்பட்டதைப் போல மறுதலையாக விளக்கக் கூடாது.

– எங்கெல்ஸ்

அது ஐந்து அம்சங்களில் மாற்றங்களை உருவாக்கும் என எதிர்பார்த்தோம்.

  1. சாதி அமைப்புமுறைக்கு எதிராகப் போராட பல்வேறு அமைப்புகள் நிறுவனங்கள் தனி நபர்கள் இருந்தாலும் அவை சில நிகழ்வுகளுக்கு எதிராகப் போராட முன்வந்தனவே தவிர தலித்துகள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளுக்காகவோ அவர்களின் உரிமைகளை நிலைநாட்டக் கூடிய விதத்திலோ போராட முன்வரவில்லை.
  2. இந்து மதத்திலிருந்து வெளியேறாமல் சாதி முறையை ஒழிக்க முடியுமா? வர்க்க சமுதாயத்தை ஒழிக்காமல் சாதிய சமுதாயத்தை ஒழிக்க முடியுமா? சாதிய அமைப்பு முறையை ஒழிக்காமல் சாதியப் பாகுபாட்டையும், தீண்டாமைக் கொடுமைகளையும் ஒழிக்க முடியுமா? இந்த விவாதங்கள் முடிவில்லாதவை. அத்துடன் ஒருவர் மீது ஒருவர் குறை சொல்வதாகவும், வரம்பு மீறி தரங்கெட்டும் செல்லும். இதைத் தடை செய்ய தத்துவ ரீதியிலான விவாதங்கள் தேவை. அதன் மூலம் விவாதங்களில் தெளிவு பிறக்கும். கால விரயத்தைத் தவிர்க்கும். விவாதங்களால் தீர்க்க முடியாத சில பிரச்சனைகள் கூட நல்ல நடைமுறைகள் தீர்த்து வைக்கும். எனவே நடைமுறைகளையும் அத்துடன் தொடங்க வேண்டும். அதனால் தான் நாம் நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். இத்தகைய விவாதங்களுக்கு முடிவே இல்லை. பல சமயங்களில் இத்தகைய விவாதங்கள் எல்லை மீறிச் சென்று பரஸ்பரம் குற்றம் சுமத்தக் கூடிய விதத்திலும், அவதூறு செய்யக் கூடிய அளவிற்கும் கூட சென்றன. தத்துவார்த்த விவாதங்கள் அவசியம் தான். அவற்றின் மூலம்தான் பிரச்சனைகளில் தெளிவு காண முடியும். ஆனால் அதற்காக விவாதங்கள் புரிவதிலேயே நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கவும் கூடாது. விவாதங்கள் மூலம் தீர்வு காணப்பட முடியாத பல பிரச்சனைகளை, நடைமுறையின் மூலம் தீர்வு காண முடியும். எனவே தான் நடைமுறைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
  3. சாதிய அமைப்பு முறையை ஒழிக்காமல் சாதிப் பாகுபாட்டை ஒழிக்க முடியாது என்று நினைப்பது முறையற்றது. குறைந்த பட்சம் தீண்டாமைக் கொடுமைகளுக்கும், அதீதமான சாதியப் பாகுபாடுகளுக்கும் முடிவு கட்ட முடியும்.  இதனை எய்திட நாம் இயக்கங்களைத் தொடங்க வேண்டும். இந்தப் புரிந்துணர்வு சாதியப் பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டக்குழு என்று பெயரைத் தேர்ந்தெடுத்ததிலேயே பிரதிபலித்ததைக் காண முடியும். பல்வேறு சாதிய மற்றும் அடையாள அமைப்புகளின் மனப்பாங்கு என்பது ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்பதை விட வேற்றுமையை அதிகரிக்க வேண்டும் என்ற விதத்திலேயே இருக்கின்றன. சமூக நீதியை எய்திடும் பணியில் பிரதானமான முட்டுக்கட்டை இதுவேயாகும். சாதிகளுக்கு இடையே ஒற்றுமை ஏற்படுவது போல் தோன்றினாலும் அது தற்காலிகமானதே. வித்தியாசங்கள் அடிப்படையானவை.
  4. தலித்துகள் பிரச்சனைகளைத் தலித்துகளால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்றும், தலித்துகள் மட்டுமே தங்கள் பிரச்சனைகளுக்காகப் போராட முடியும் என்றும் கருதுகிற போக்கு கடந்த காலங்களில் வலுவாக இருந்தது. தற்போது இப்போக்கு கணிசமான அளவிற்குப் பலவீனமடைந்திருந்தாலும் இப்போக்கு இன்னும் நீடிக்கவே செய்கிறது. இத்தகைய குறுகிய சாதியக் கண்ணோட்டத்திலிருந்து மீளாமல், சாதியப் பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தை வெற்றிகரமாக்கிட முடியாது. தலித்துகள் சுயமரியாதைக்கானப் போராட்டத்தில் தலித்துகள் கேந்திரமான பங்கினைச் செலுத்திட வேண்டும். ஆயினும்,  இத்தகையப் போராட்டத்திற்கு ஜனநாயக மற்றும் தலித் அல்லாத சக்திகளை அரவணைத்திட மேற்கொள்வதற்கான முயற்சிகளை நிராகரித்திட வேண்டும் என்று இதற்குப் பொருள் அல்ல.
  5. சமதர்ம சமூதாயத்திற்காகப் போராடுவோர் குறிப்பாகக் கம்யூனிஸ்டுகள் மக்களைப் போராட்டத்தில் ஈடுபடவைக்க பல்வேறு அமைப்புக்களை உருவாக்கியுள்ளனர். அவர்கள் தொழிலாளர்கள்,  விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள்,  மாணவர்கள், வாலிபர்கள்,  மாதர் அமைப்புகளை ஏற்படுத்தி அவர்களின் பிரத்யேகக் கோரிக்கைகளை முன்வைத்து செயல்பட்டு வருகிறார்கள். இவ்வாறு இந்த அமைப்புகள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை மேற்கொண்ட போதிலும்,. சாதியப் பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தையும், தலித்துகளின் முன்னேற்றத்திற்கான போராட்டத்தையும் போதுமான அளவிற்கு இவை செயல்பட்டதாகச் சொல்வதற்கில்லை. தங்கள் வழக்கமானப் போராட்டங்களுடன் இவற்றிற்கான போராட்டங்களை இவை இணைத்துக் கொள்ளவில்லை.

நாங்கள் உருவாக்கிய சாதியப் பாகுபாடுகளுக்கு எதிரானப் போராட்டக்குழு இத்தகைய புரிந்துணர்வை நடைமுறைப்படுத்திட கடந்த பதினைந்து ஆண்டுகளில்  பல்வேறு இயக்கங்கள் மூலம் முயற்சித்தது. அவ்வாறு நடைபெற்ற மூன்று முக்கியமான இயக்கங்களின் போது  பல்வேறு சக்திகள் எங்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் செயல்பட்டன. சமூகத்தில் சமத்துவம் வந்துவிடக் கூடாது என்பதிலும், எங்கள் முயற்சிகளைத் தடுத்து நிறுத்திட அனைத்து விதமான முயற்சிகளையும் எங்களுக்கு எதிரான சக்திகள் மேற்கொண்டதையும் அப்போது நாங்கள் கண்டோம்.

முதலாவதாக, தலித்/பழங்குடியினருக்கான ஆணையம் அமைப்பது தொடர்பான போராட்டத்தில் நாங்கள் எதிர்கொண்ட சவால்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆந்திர மாநிலத்தில் எங்கெங்கெல்லாம் சாதியப் பாகுபாடுகள் காணப்படுகின்றன என்பதைத் துல்லியமாக ஆய்வு செய்திட 1999 அக்டோபரில்  மாநில அளவில் ஓர் ஆய்வினை மேற்கொண்டோம். மாநிலம் முழுதும் தலித்துகள் வாழும் 11 ஆயிரம் சேரிப் பகுதிகளில் கிட்டத்தட்ட 15 நாட்கள் இந்த ஆய்வினை நாங்கள் மேற்கொண்டோம். ஆய்வின் முடிவுகள் அனைவரின் கண்களையும் திறக்கக் கூடிய விதத்தில் அமைந்திருந்தது.

முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவக் கட்சிகளின் பின்னிருப்பவர்கள் தலித்துகளுக்கு எதிராகப் பாகுபாடு எதுவும் காட்டப்படுவதில்லை என்றும், அவ்வாறே சில இடங்களில் அது காணப்பட்டாலும், அது இடதுசாரிக் கட்சிகள் சொல்வது போன்றும், சில தலித் அமைப்புகள் சொல்வது போன்றும் அவ்வளவு உக்கிரமானது அல்ல என்றும் கூறிக் கொண்டிருந்தார்கள். இக்கட்சிகளின் கீழ் இயங்கும் தலித் தலைவர்கள் சாதியப் பாகுபாடுகளின் வீரியத்தைக் குறைத்துக் காட்டவே முயற்சித்தார்கள்.

மாநிலத்தில் இயங்கிடும் தொலைக்காட்சி அலைவரிசைகளும் சாதியப் பாகுபாடுகள் குறித்து கண்டுகொள்ளாமல் மவுனம் சாதித்தன. அப்படியே இவை தொடர்பாக செய்திகள் சொல்ல வேண்டி வந்தபோது, உண்மைகளைத் திரித்து செய்திகளை ஒளிபரப்பின. சங்பரிவாரக் கூட்டமோ சில கிறித்துவ அமைப்புகள் தான் மத மாற்றங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றன என்று பிரச்சாரத்தை மேற்கொண்டன.

எனவே, சாதியப் பாகுபாடுகள் தொடர்பாக அரசாங்கமே உண்மையைக் கூறினால்தான் சரியாக இருக்கும் என்ற காரணத்தால், மாநிலத்தில் சாதியப் பாகுபாடுகள் தொடர்பாக ஆய்வு செய்திட ஓர் ஆணையத்தை அரசாங்கமே அமைத்திட வேண்டும் என்று நாங்கள் போராடினோம்.

இதற்காக 1998-99 ஆம் ஆண்டில் பலகட்டப் போராட்டங்களை மேற்கொண்டோம். போராட்டக்குழுவின் சார்பாக மார்ச் 22 அன்று சட்டமன்றம் நோக்கிப் பேரணி நடத்தினோம். சட்டமன்றப் பேரவையில் இடதுசாரி உறுப்பினர்கள் இப்பிரச்சனையை எழுப்பினார்கள். இவ்வாறு சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்ததன் பேரில் ஆந்திர அரசு 2001 மார்ச் 23 அன்று ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி புன்னையா தலைமையில் ஒரு நபர் ஆணையம் ஒன்றை அமைத்தது. நீதிபதி புன்னையா தலைமையிலான ஆணையம் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தலித்துகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாகுபாடுகள் குறித்து சாட்சியங்களை சேகரித்தது. தான் பெற்ற சாட்சியங்களின் அடிப்படையில் 1996 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை ஆணையம் அரசுக்கு சமர்ப்பித்தது.

மாநிலத்தில் எந்த அளவிற்கு மிகவும் குரூரமாக தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை இந்த அறிக்கை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. இக்கொடுமைகளுக்குத் தீர்வு காண ஆணையமானது 42 பரிந்துரைகளையும் அளித்திருந்தது. ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று கோரி மீண்டும் போராட்டத்தில் இறங்கினோம். இதனை அடுத்து ஆந்திர அரசாங்கமானது 2003 இல் மாநில அளவில் தலித்/பழங்குடியினர் ஆணையம் அமைப்பதற்கான சட்டத்தை நிறைவேற்றியது.  நீதிபதி புன்னையா அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். முதல் ஆணையம் மூன்று ஆண்டுகளுக்கு செயல்பட்டது.

முதல் மூன்றாண்டு காலம் ஆணையத்தின் நடவடிக்கைகள் என்பது ஓரளவுக்கு தலித்துகளுக்கு நன்மை பயப்பதாக அமைந்திருந்தது. ஓரளவுக்கு தலித்துகளுக்கு தார்மீக பலத்தை அளித்தது. ஆயினும் தலித்துகள் மீதான கொடுமைகளுக்கு எதிரான சட்டங்களை அமல்படுத்த வைக்கக்கூடிய அளவிற்கு ஆணையத்திற்கு அதிகாரங்கள் இல்லை. ஆணையத்தின் அடுத்த மூன்றாண்டு காலத்திற்கு அதன் தலைவராக ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவர் அமர்த்தப்பட்டார். இது ஆணையத்தின் நடவடிக்கைகளை பெயரளவிலானதாக மாற்றியது. இதன் தலைவராக நியமிக்கப்பட்டவர் ஆளும் கட்சியின் வேட்பாளராக ஒரு தொகுதியில் நிறுத்தப்பட்டதால் தலைவர் பணியிடமே நிரப்பப்படாமல் காலியாக இருந்தது. ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னரும் கூட ஆணையத்தின் தலைவர் பணியிடம் மேலும் கடந்த நான்காண்டு காலமாக நிரப்பப்படவே இல்லை.

இவ்வாறு மாநில அளவில் தலித்/பழங்குடியினர் ஆணையம் அமைக்கப்பட்டதாலேயே தலித்/பழங்குடியினருக்கு எதிரான கொடுமைகள் ஒழிந்துவிடும் என்றோ தலித்/பழங்குடியினர் பிரச் சனைகள் அனைத்திற்கும் தீர்வுகாணப்பட்டு விடும் என்றோ  நம்மில் எவருக்கும் மாயை எதுவும் கிடையாது. சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராக மக்களைத் திரட்டுவதற்கான ஒரு மேடையாக இதனை நாம் பயன்படுத்திக் கொண்டோம். இதன் தலைவர் செயல்படும் சமயத்தில் அரசாங்க நிர்வாகத்தின் மீது அதிக நிர்ப்பந்தத்தைக் கொண்டு வர முடியும்.

உண்மையில் ஆணையத்தின் முதல் மூன்றாண்டுகளில் இதனைச் செய்ய முடிந்தது. உண்மையிலேயே அதன் தலைவராக இருந்தவர் தலித்துகள்/பழங்குடியினர் அவல நிலைமைகள் குறித்து ஆதங்கப்பட்டார், அவற்றைச் சரி செய்ய வேண்டுமென்று அக்கறை கொண்டிருந்தார். அடுத்து தலைவராக வந்தவர் தன் கடமைகளை உதாசீனம் செய்தார். ஆணையமானது, பெரிய அளவிற்கு அதிகாரங்கள் படைத்த அமைப்பாக இல்லாதிருந்த போதிலும் கூட, தலித்துகள் பிரச்சனைகளை கையிலெடுத்துக் கொண்டு போராடுபவர்களுக்கு ஒரு கருவியாக இருந்தது. இதனைக் கூட ஆளும் கட்சிகளாலும், ஆளும் வர்க்கங்களாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் இதற்கு இதுநாள் வரை தலைவர் ஒருவர் நியமிக்கப்படவில்லை.

எல்லாவற்றையும் விட கொடுமை என்ன தெரியுமா? இவ்வாறு ஆணையத்திற்குத் தலைவர் நியமிக்கப்படாதது குறித்து தலித் அமைப்புகள் சிறிதுகூட கவலைப்படாது மவுனம் சாதிப்பது தான். தலைவர் பதவி தனக்குக் கிடைக்க வேண்டும் என்றுதான் அவை குறியாக இருக்கின்றனவே தவிர, இதனை இயங்க வைப்பதில் எவ்வித அக்கறையும் காட்டவில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் தலித் அமைப்புகளின் தலைவர்கள் பொதுவாக நகர்ப்புற ஊழியர் பிரிவுகளிலிருந்து வந்தவர்களாக இருப்பதும், கிராமப்புற தலித் மக்களிடமிருந்து அந்நியப்பட்டிருப்பதுமேயாகும்.

அடுத்து, சாதியப் பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டக் குழுவின் சார்பில் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக நேரடியாகவே களத்தில் இறங்கினோம். அப்போது ஏற்பட்ட அனுபவங்கள் என்னவென்று பார்ப்போம்.

2006 இல் போராட்டக் குழுவினர் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக மாநிலம் முழுதும் களத்தில் இறங்கினார்கள்.

ரங்கா ரெட்டி மாவட்டத்தில் என் தலைமையில் 25 இளைஞர்கள் மக்கள் மத்தியில் சமூக விழிப்புணர்வைக் கொண்டு வருவதற்காக சைக்கிள் பேரணி மேற்கொண்டோம்.

2006 ஏப்ரல் 2 முதல் 14 வரை 13 நாட்கள் சைக்கிள் பேரணி நடைபெற்றது. 152 கிராமங்கள் வழியாக 950 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தோம்.

69 கிராமங்களில் கோவில்களுக்குள் நுழைவுப் போராட்டம், இரண்டு டம்ளர்கள் முறை இருக்கும் இடங்களில் அவற்றை உடைக்கும் போராட்டம் போன்ற பல்வேறு விதமான நடவடிக்கைகளில் இறங்கினோம்.

மீண்டும் 2007 இல் இதேபோன்று சைக்கிள் பேரணி நடத்தினோம். பத்து நாட்களில் 8336 கிராமங்களில் 41 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்தோம்.

இந்த சமயத்தில் எங்களுக்குப் பாராட்டுக்கள் கிடைத்தது போலவே கடும் விமர்சனங்களுக்கும் ஆளானோம்.

அமைதியாக இருந்த கிராமங்களில் மோதல்களை உருவாக்குவதாக எங்கள் மீது கண்டனக் கணைகளை சிலர் வீசினார்கள்.

சொந்த சகோதரர்கள் போல வாழ்ந்து கொண்டிருப்பவர் மத்தியில் நெருப்பைப் பற்ற வைக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்கள்.  பல கிராமங்களில் தலித்துகளே எங்களை உள்ளே வரவிடாமல் தடுத்தார்கள். அவர்களிடம் கேட்ட போது, மேல்சாதி ஆண்டைகள் தங்களை நன்றாகக் கவனித்துக் கொள்வதாக அவர்கள் கூறினார்கள். தாங்கள் நல்லிணக்கத்துடன் வாழ்வதாகவும், சாதியப் பாகுபாடு எதுவும் கிடையாது என்றும் எங்களிடம் கூறினார்கள். விசாரணை செய்தபோது, இவர்கள் அனைவரும் மேல்சாதி ஆண்டைகளின் அடிமைகள் என்பது தெரிய வந்தது.

ஆண்களோடு ஒப்பிடுகையில் பல இடங்களில் பெண்கள் முன்னுக்கு வந்து எதார்த்த உண்மைகளைத் துணிவுடன் எங்களிடம் பகிர்ந்து கொண்டார்கள். கோவில் நுழைவுப் போராட்டம் மேற்கொண்ட போதும் இதேபோன்று விமர்சனங்கள்.

சாதிய அமைப்பு முறைக்கு ஆதரவாக இருக்கும் இந்து மதத்தை ஊக்குவிக்கும் விதத்தில் கோவில் நுழைவுப் போராட்டங்களை கம்யூனிஸ்ட்டுகள் எப்படி நடத்தலாம் என்று சிலர். அவர்கள் மற்ற மதங்களுக்கு மாறுவதை ஏன் தடுக்கிறார்கள் இவர்கள் என்று சிலர். கடவுள் நம்பிக்கையற்ற இவர்கள் ஏன் கோவில் நுழைவுப் போராட்டத்தை ஊக்குவிக்கிறார்கள் என்று சிலர் விமர்சித்தார்கள்.

இவர்கள் அனைவருமே இதன் பின்னே தீண்டாமைக் கொடுமை இருப்பதை வசதி கருதி கண்டு கொள்ளவில்லை. நாம் எந்த மதத்திற்கு ஆதரவாகவும் இல்லை. நம் தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு, மத நம்பிக்கையுள்ளவர்கள் தாங்களும் கோவில்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரும்போது, சாதியப் பாகுபாடுகளின் காரணமாக அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதன் காரணமாகவே நாம் அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறோம். அவ்வாறு நிற்பதன் மூலமாக மட்டுமே சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராகவும் நாம் போராட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்ல முடியும்.

சில இடங்களில் எங்களின் நேரடி நடவடிக்கைகளுக்கு எதிராக ஏணிப் படி போன்ற சாதி அடுக்கில் மேல் தட்டில் இருப்பவர்களை விட, மிகவும் கீழ் நிலையில் உள்ள பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் எங்கள் மீது கடும் ஆவேசத்துடன் மோதினார்கள்.

ஒவ்வோராண்டும் ஏப்ரல் 14, அம்பேத்கர் பிறந்த நாளன்று, தலித் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் நகரங்களிலும் கிராமங்களிலும் பல்வேறு விதமான செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.

அப்போது அவர்கள் தீண்டாமைக்கெதிராக கோபத்தைக் காட்டுவார்கள். ஆனாலும் தீண்டாமைக் கொடுமையை எதிர்த்திட எவ்வித நேரடி நடவடிக்கைக்கும் முன்வரமாட்டார்கள். பல இடங்களில் நம்மிடம் தீண்டாமைக் கொடுமைகள் குறித்து அவர்கள் கூறியபோதிலும், இன்றைக்கு நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். நீங்கள் போய்விட்டால், நாளை, இந்த நிலப்பிரபுக்களிடமிருந்தும் உயர்சாதியினரிடமிருந்தும் யார் எங்களைக் காப்பாற்றுவார்கள்? என்று நம்மிடமே கேட்பார்கள். இது ஒரு முக்கியமான கேள்வியாகும்.

நாம் அமைப்பு ரீதியாக வலுவடைந்துள்ள இடங்களில் மட்டுமே தீண்டாமைக் கொடுமைக்கு ஆளான மக்கள் நம்முடன் நின்று எதிர்த்திட முன்வந்தார்கள். இவ்வாறு நம் நடவடிக்கை எதுவாக இருந்தாலும் நம் அமைப்பு வலுவாக உள்ள இடங்களில் மட்டுமே நிலையான வெற்றியை ஈட்டித் தந்துள்ளது.

நம் அமைப்பு வலுவாக இல்லாத இடங்களில் நம் சைக்கிள் பேரணியோ அல்லது மற்ற இயக்கங்களோ வெறும் பிரச்சாரமாக மட்டுமே நடந்து முடிந்துள்ளன. நம்மால் நடைமுறையில் உள்ள தீண்டாமைக் கொடுமைகளையோ, சாதிய பாகுபாடுகளையோ ஒழித்திட முடியவில்லை.

நம் போராட்டக்குழு சார்பாக மேற்கொண்ட மூன்றாவது இயக்கம் தலித்/பழங் குடியினருக்கான துணைத் திட்டமாகும். தலித்துகள்/பழங்குடியினர் சமூக ரீதியாக மட்டுமல்ல பொருளாதார ரீதியாகவும் பாகுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். தலித்துகள்/பழங்குடியினர் வாழும் சேரிப் பகுதிகள் கிராம வளர்ச்சித் திட்டங்களின் போதும் கண்டு கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றன. பட்ஜெட் ஒதுக்கீடுகளிலும் அவர் களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.

எனவே, அனைத்து பட்ஜெட் நிதி ஒதுக்கீடுகளின் போதும் தலித்/பழங்குடியினர் மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கேற்ப நிதியும் ஒதுக்கப்பட வேண்டும் என்று போராட்டக்குழு கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டது.

2007 பிப்ரவரியில் 25 மாவட்டத் தலைநகர்களில் போராட்டக்குழு சார்பில் ஆறு நாட்கள் சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெற்றது. இவ்வாறு நாம் நிர்ப்பந்தம் அளித்ததன் விளைவாக அரசாங்கம் இதற்காக ஓர் அமைச்சரகத் துணைக்குழுவை நியமித்தது. ஆயினும் அது எந்த முடிவையும் எடுத்திடவில்லை.

எனவே மாநிலத்தில் 100 அமைப்புகளை ஒருங்கிணைந்து 2011 மார்ச் 27 அன்று கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்தினோம். அதன் பின்னர் அரசாங்கம் 2012 டிசம்பரில் இது தொடர்பாக ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. இவ்வாறு துணைத் திட்டத்திற்காக சட்டம் இயற்றப்பட்ட போதிலும், அவை ஒழுங்காக செலவிடப்படுகிறதா என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. இதனை உறுதிப்படுத்தும் விதத்திலும் நாம் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம்.

முன்பு கூறிய இரு போராட்டங்களை விட தலித்/பழங்குடியினருக்கான பட்ஜெட் துணைத் திட்டம் கோரி நடைபெற்ற போராட்டத்திற்கு, தலித் அமைப்புகள் ஒத்துழைப்பு என்பது சிறப்பாக இருந்தது. பல தலித் அறிவுஜீவிகள் மற்றும் குழுக்கள் மிகப்பெரிய அளவில் ஒத்துழைத்தன.

தலித்/பழங்குடியினர் மத்தியில் விழிப்புணர்வைக் கொண்டுவர அவை பெரிதும் செயல்பட்டன. இவ்வாறு தலித்/பழங்குடியினர் பிரச்சனைகள் தொடர்பாக நாம் மேற்கொண்ட போராட்டங்களின் மூலம் பல்வேறு அனுபவங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. தலித்/பழங்குடியினர் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டுமானால், அங்கே நமது அமைப்புகள் வலுவாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் இப்போராட்டங்கள் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளன.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: