(தோழர் பி.சுந்தரய்யா நினைவு கருத்தரங்கில் பேரா. சிரஸ்ரீ தாஸ் குப்தா அளித்த கட்டுரையினைத் தழுவியது)
தமிழில் சுருக்கம்: ஆர். எஸ். செண்பகம்
இந்த கருத்துத் தாளில் இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகான முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் 1950 முதல் 1966 வரையிலான காலகட்டத்தில் முதலாளித்துவ ஒருங்கிணைப்பு மற்றும் அதன் பல்வேறு செயல் உத்திகள் பற்றி ஆய்வு செய்யப்படுகிறது; அதே காலகட்டத்தில் சமூக உறவுகளின் கட்டமைப்பில் அது எத்தகைய உறவினைக் கொண்டிருந்தது என்பன போன்ற விஷயங்களும் விவாதிக்கப்படுகின்றன.
அதேபோல இந்திய நாட்டின் வளர்ச்சி குறித்தும், அந்த வளர்ச்சியின் மூலம் அரசாங்கத்திற்கும் இந்திய முதலாளி வர்க்கத்திற்கும் இடை யில் முதல் மூன்று ஐந்தாண்டு திட்டக்காலத்தில் ஏற்பட்ட உறவு குறித்தும் இந்தக் கருத்துத் தாள் குறிப்பிடுகிறது. இப்படி ஏற்பட்ட வளர்ச்சியும் உறவும் எவ்வாறு மிகப்பெரிய நெருக்கடியை முதல் இரு பத்து ஆண்டுகளிலேயே சந்தித்தது என்பதும் நம்முன் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியானது நமது நாடு சர்வதேச அளவில் பிற நாடுகளுடன் வைத்திருந்த வர்த்தக மற்றும் நிதி பரிவர்த்தனைகளில் (அந்நிய) பரிவர்த்தனை பட்டுவாடா நிலுவையாக மாறிப்போனது. இதனுடன் கூடவே மிகப்பெரிய பணவீக்கமும் சேர்ந்து கொண்டது. 1965-66ன் இறுதியில் (shortage of wage goods i.e. shortage of consumer goods i.e. final goods for mass market) நுகர்பொருட்களின் பற்றாக்குறையும் இதனுடன் சேர்ந்து கொண்டது. இந்த நெருக்கடி என்பது மிக ஆழமாக விவாதிக்கப்படுகிறது. அது இந்தியாவில் வளர்ந்து வந்த முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே இருந்த உறவின் தன்மையினை பற்றி தெரிந்து கொள்வதில் முக்கிய வழிகாட்டுதலாக இருந்தது.
மேலும் வரலாற்று, சமூக, பொருளாதார ஆய்வாளர்கள் இந்திய வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யும்போது அதற்கேற்றவாறு காலக்கட்டங்களை பிரித்து எழுதுவர். அதிலிருந்து மாறுபட்டு அரசுக்கும் மூலதனத்திற்கும் உள்ள 1947க்கும் 1967க்கும் இடைப்பட்ட காலத்தை 1947 முதல் 1956 வரை (திட்டமிடல்) என்றும், 1956 முதல் 1966 வரை (பாதுகாத்தல்) என்றும் இரு வேறு குறிப்பிட்ட கட்டங்களாக இந்தக் கட்டுரையின் கட்டுரையாளர் பிரித்துள்ளார். இந்த முறையில் காலக்கட்டங்கள் பிரிப்பதற்கான அவசியம் என்னவென்றால், முதல் பத்தாண்டுகளில் அரசாங்கத்தின் கொள்கைகள் தாராளமயத்தை மையமாகக் கொண்டிருந்தது. அதே நேரம் அரசு தலைமையிலான குறிப்பிடப்பட்ட திட்ட வளர்ச்சியினை (Indicative Planning) ஐ மையமாகக் கொண்டு அரசு நிறுவனங்கள் இரண்டாவது பத்தாண்டுகளில் உருவாக்கப்பட்டன.
அதே போல, முதலில் தாராளவாதக் கொள்கைகளுடன் செயல்பட்டு வந்த அரசு தன்னுடைய நிலையில் இருந்து மாறி, நேரடி தலையீட்டுக் கொள்கைகள் மற்றும் திட்டங்களுடன் செயல்படத் தொடங்கியது என்ற மிக முக்கியமான விவாதத்தினை இந்த கருத்துத் தாள் நம் முன்னே வைக்கிறது. இந்த மாற்றம் என்பது முதலாளித்துவ வர்க்கத்தின் பெரும் ஆதரவுடன் நடைபெற்றது என்பதையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. எனவே இந்த மிக முக்கியமான காலக்கட்டங்களில் நிகழ்ந்தவற்றை ஆய்வு செய்து நம்முன்னே விஷயங்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அவ்வாறு தொகுக்கப்படும் போது இந்தக் கட்டுரையாளர் தன்னுடைய கருத்துக்களுக்கு ஆதாரமாக பல்வேறு ஆய்வாளர்களை, அவர்களது நூல்களை, அந்த நூல்களின் காலக்கட்டங்களை, அரசாங்க புள்ளி விவரங்களை, அமைப்புகளின் அறிக்கைகளை, நாடாளுமன்றப் பதிவுகளை மேற்கோளிட்டு காட்டியுள்ளார். இந்தக் கட்டுரையில் மூன்று பாகங்கள் உள்ளன. முதல் பாகம் நாட்டின் முன்னேற்றம் என்பது அரசு தலைமையேற்று நடத்துவது என்பதே தனக்குப் பாதுகாப்பானது என்ற புரிந்துணர்வுடன் அந்தப் புரிந்துணர்வின் அடிப்படையில் முதலாளித்துவம் தனக்குள்ளேயே ஒரு கருத்தொற்றுமைக்கு வந்ததை விளக்குகிறது.
இரண்டாவது பாகம் 1947ம் ஆண்டில் இருந்து முதல் ஐந்தாண்டு திட்டத்தின் இறுதிப் பகுதியான 1956ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத் தில் அரசிற்கும் மூலதனத்திற்கும் இடையில் இருந்த உறவு பற்றிய ஆய்வாக அமைகிறது.
மூன்றாவது பாகம் 1956க்கும் 1966க்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தின் ஆய்வாக அமைகிறது. இந்தக் காலக்கட்டத்தில் நேரு மஹாலா னோபிஸ் மாதிரித் திட்டத்தின் நகல் வடிவத்தில் Indicative Planning என்பதை மையமாகக் கொண்டு அரசின் செயல்பாடுகள் எவ்வாறு திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டன என்பது குறித்து இந்தக் கருத்துத் தாள் விளக்குகிறது.
பாகம் 1
அரசு தலைமையில் வளர்ச்சி என்பதில் கருத்தொற்றுமை
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே இரண்டாம் உலகப் போரின் காரணமாகவும், இந்தியாவில் நடைபெற்ற பெரிய அளவிலான இந்திய தேசிய சுதந்திரப் போராட்டத்தின் காரணமாகவும் காலனிய முதாலாளித்துவ மூலதனம் பலவீனமடையத் தொடங்கிவிட்டது. ஆனால், இந்தக் காலக்கட்டம் இந்திய முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு மிகச் சரியான சந்தர்ப்பமாக அமைந்தது. அவர்கள் இந்த சந்தர்ப்பத்தினை தங்களுடைய வளர்ச்சிக்கும், விரிவாக்கத்திற்கும், பல்வேறு துறைகளில் கால்பதிப்பதற்குமான சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டனர். 1947ல் தனியார் தொழில் மூலதனம் என்பது இந்தியாவில் அதிக லாபத்துடன் வளர்ச்சி பெற்றது. அதே நேரம் இந்தியச் சமுதாயம் போர் மற்றும் பிரிவினையின் தழும்புகளுடன் இருந்தது. அதனால் பொருளாதாரம் சரிவினை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பணவீக்க விகிதம் மிகக் கடுமையாக இருந்தது.
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை என்பது நாட்டு மக்களை மிகக் கடுமையாகப் பாதித்தது. பல துன்பங்களுக்கு உள்ளாக்கியது. மக்கள் தங்கள் இடங்களை விட்டு புலம் பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. அதே நிலைமை உருவாகிக் கொண்டிருக்கும் முதலாளிகளுக்கும் வேறுவகையில் ஏற்பட்டது. ஆனால், அவர்கள் இதையும் தங்கள் லாபத்தினை பெருக்குவதற்கு ஏதுவாகப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் வளர்ச்சியினை பார்த்துக் கொண்டார்கள். உதாரணமாக ரான்பாக்சியின் ஸ்தாபகரான பாய் மோகன் சிங்கின் வரலாற்றை எடுத்துக் கொள்ளலாம். அவருடைய அப்பா பாய் கியான் சந்த் ஒரு நிலக் கிழாரும் வட்டிக்குக் கடன் கொடுப்பவருமாவார். அவர் ராவல்பிண்டியில் இரண்டாம் உலகப் போரின் போது அரசாங்கக் காண்ட்ராக்டராக உருமாறி போர் முகாம்கள் கட்டுவது, சிறைக் கூடங்கள் கட்டுவது மற்றும் அஸ்ஸாமில் இருந்து ரங்கூனுக்கு நெடுஞ்சாலை போடுவது, விமான தளங்கள் அமைப்பது என தன்னுடைய செல்வத்தை பெருக்கிக் கொண்டார். பிரிவினையின் போது அப்போதிருந்த பாகிஸ்தான் அரசிற்கு பிரதிக்கிரய வரியாக ரூ. 5 கோடியினை செலுத்திவிட்டு ஒரு விமானத்தின் மூலம் இந்தியா வந்து இம்பீரியல் ஹோட்டலில் தங்கிய குடும்பம் தான் பாய் மோகன் சிங்கின் குடும்பம். மீண்டும் வட்டிக்குக் கடன் கொடுக்கத் துவங்கியது அந்தக் குடும்பம். பிருத்விராஜ் ரோட்டில் ஏராளமான பங்களாக்களை முதன் முதலில் கட்டியதும் இவர்கள் தான். பிற்காலத்தில் மருந்து விற்பனை மற்றும் உற்பத்தியிலும் முன்னணி நிலைக்கு வந்தது. எனவே, பிரிவினையைக் கூட சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு முதலாளித்துவம் வளர்ச்சி கண்டது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
சுதந்திரத்தின் போது, தேச வளர்ச்சிக்கு தொழில் வளர்ச்சி என்பது மிகவும் அவசியமானது என்று உணரப்பட்டது. அதே வேளையில் இந்திய நாட்டு வர்த்தக முதலாளிகளின் நலன்களுக்கு பங்கம் வந்துவிடாமலும் இந்த வளர்ச்சி அமைய வேண்டும் என்று இந்திய முதலாளி வர்க்கம் நினைத்தது. முக்கியத் துறைகளான கனரகத் தொழில் மற்றும் உள்நாட்டுக் கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்ய அதிக நிதி பலம் தேவைப்படும் என்பதாலும், அப்படி முதலீடு செய்யும்போது தேவையான உடனடி லாபம் என்பது ஈட்டப்பட முடியாது என்பதாலும், இந்திய முதலாளி வர்க்கம் இதில் முதலீடு செய்யத் தயாராக இல்லை. ஏதேனும் ஒரு வகையில் பொருளாதாரத்தில் ஆபத்தினையும், கட்டுப்பாட்டினையும் சந்திக்கத் தயக்கம் காட்டினர்; ஏனெனில் அது தென்கொரியாவில் நிகழ்ந்ததைப் போன்று அரசு வழிகாட்டலுடன் கூடிய நவீன வர்த்தகமுறை என்ற கட்டுப்பாட்டு முறைக்குள் அகப்பட்டுவிடக்கூடிய சூழல் ஏற்பட்டு விடும் என்று இந்திய முதலாளிகள் நினைத்தனர்.
அதே நேரத்தில், சுதந்திர இந்திய அரசினை முதலாளி வர்க்கம் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அவர்களின் அரசியல் அந்தஸ்து இருந்தது. சுதந்திர இந்திய அரசை மூலதனச் சேர்க்கைக்கான தளமாகப் பார்த்தது. அரசு-சமூக உறவுகளின் எழுந்து வரும் கட்டமைப்பிற்குள் மூலதன விரிவாக்கத்தை வேகப்படுவதாகவும் அதே நேரத்தில் தனிநபரின் சொத்துரிமை மற்றும் மூலதனத் திரட்டலுக்கு உதவும் சமூக வாழ்முறைகளின் புனிதமும் உறுதி செய்யப்படுகிறது. இதற்கு அப்போதைய இந்தியத் தொழில் வர்த்தகச் சபைகளின் கூட்டமைப்பும் ஆதரவளித்தது.
நேருவின் நவீன சமூகத்தைக் கட்டுவதற்கான பார்வை மற்றும் அதன் வளர்ச்சிக்கான செயல் திட்டம் என்பது அரசு முதலாளித்துவத்தை வளர்ப்பதாக இருந்தது.
இவ்வாறு அரசு தலைமையில் முதலாளித்துவம் என்பது மிக அருமையாக இந்திய தேசிய அரசு உருவானதில் வேர்விட்டிருந்தது. அப்போதிருந்த அரசியல் தலைமையில் மிகப் பெரும்பான்மையினக்கு சுதந்திரம் என்பது வெளிநாட்டு மூலதனம் மற்றும் சரக்குகளின் ஆதிக்கத்திலிருந்து கிடைத்த சுதந்திரமாகத் தெரிந்தது. சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்கான கட்ட மைப்புகளை வளர்த்தெடுப்பது என்பது சுதந்திர இந்திய அரசின் கடமையாக பணிக்கப்பட்டது. உள்நாட்டு கட்டுமான வசதிகளை உருவாக்கிப் பலப்படுத்துவது, பொருளாதாரத்தை பலப்படுத்த அடிப்படைத் தேவையான உற்பத்தித்துறையை பலப்படுத்துவது, புதிய நிதி நிறுவனங்களை உருவாக்குவது, அவற்றின் நிதிச் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவது மற்றும் ஒருங்கிணைப்பது ஆகியவையே அரசின் மிக முக்கியப் பணியாக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய முதலாளி வர்க்கம் வர்த்தகம் மற்றும் தொழில் துறைகளின் மூலம் பெறப்படக்கூடிய லாபம் உத்தரவாதம் செய்யப்பட்டதில் மிகவும் திருப்தியுடனே இருந்தது. ஆனாலும், கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் சோசலிஸ்டுகள் எப்போதுமே முதலாளித்துவ வர்க்கத்தின் சுயநலனை எதிர்ப்பவர்கள் என்பதால், இந்திய முதலாளிகள் – ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கமும் அவர்கள் எந்த இடத்திலும் தலையெடுத்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருந்தனர்.
இதற்கெல்லாம் பொதுநலம் பாதுகாக்கப்படு வது என்ற பெயரில் வர்க்க முரண்பாடுகள் தலையெடுத்துவிடாமல் தடுப்பதற்காக அரசு இயந்திரத்தின் சட்டம் ஒழுங்கு பயன்படுத்தப்பட் டது. அதே போல வறுமையை ஒழிப்பதற்கான எந்த நேரடி நடவடிக்கைகளும் முன்னுரிமை கடமையாக அரசாங்கத்தால் எடுக்கப்பட வில்லை. மாறாக சொட்டுச் சொட்டாக பலன் கள் கீழ் மட்டத்திற்குச் சென்றடையும் என்ற (TRICKLE DOWN THEORY) கோட்பாடு கோலோச்சியது. இதுதான் பொருளாதார நீதி மற்றும் உறுதித்தன்மை என்று சொல்லிக் கொள்ளப்பட்டது. ஆதிக்கம் செலுத்தும் மதிப்புகள் மற்றும் விதிகளை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கு ஏற்ற வகையில் சட்டப்பூர்வமான கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட்டன. இந்தியா சுதந்திரம் அடைந்து 4 மாதங்கள் கழித்து நடைபெற்ற இந்தியத் தொழில் மற்றும் வர்த்தக சபையின் கூட்டத்தில் நேரு பேசும்போது இருக்கிற சொத்துக்களை நியாயமான முறையில் மறுவிநியோகம் செய்யும் முயற்சிகள் மனதில் கொள்ளப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அது உற்பத்தி, முதலீடு மற்றும் வர்த்தகம் ஆகியவற்றில் புதிய தாராளமயவாதத்தின் விரிவான அதிகார வர்க்க கட்டுப்பாட்டினை விளக்கியது. ஏற்றுமதியின் மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணி இறக்குமதிக்கான முதலீடு மற்றும் உற்பத்திக்கான செலவை சரிகட்ட முடியும் என்றும் கணக்கிட்டது.
இந்திய முதலாளித்துவம் கலப்புப் பொருளாதாரம் குறித்து பல்வேறு கருத்துக்களை கொண்டிருந்தது. (கலப்புப் பொருளாதாரம் என்பது மிகச் சுதந்திரமான தனியார் கம்பெனிகளும் நாட்டில் இருக்கும். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறைகளும் இருக்கும். அதாவது அடிப்படையான கனரகத் தொழில்களிலும் இராணுவத் துறையிலும் பொதுத்துறைகளே இருக்கும். அதே போல மிக அதிமான மூலதன முதலீடு தேவைப்படும் பெரிய தொழில் துறைகளிலும் பொதுத்துறைகளே இருக்கும். தேசியமயமாக்கல் என்பது முக்கியத் துறைகளில் மட்டும் இருந்து கொள்ளலாம். அதே நேரம் இந்தத் தேசியமயமாக்கல் என்பது சோஷலிசமாகப் பொருள் கொள்ளப்படக் கூடாது) இந்திய நாட்டில் இருந்த அந்நிய முதலாளிகளையும் இந்திய தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பின் சில குறிப்பிட்ட நபர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் Associated Chambers of Commerce கல்கத்தா அமைப்பு ஒரு பாதுகாப்பின்மை இந்தக் கலப்புப் பொருளாதார அமைப்பு முறையில் இருப்பதாக தெரிவித்தது. நேரு டிசம்பர் 18,1947ல் சுதந்திரத்திற்குப் பிந்தைய முதல் தொழில்துறை மாநாட்டில் தனியார் நிறுவனங்களின் புனிதத்தன்மை பாதுகாக்கப்படும் என்றும், அந்நிய நிறுவனங்கள் வேறுபடுத்திப் பார்க்கப்படாது என்றும் உறுதியளித்தார்.
இதனால் இந்திய தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட முதலாளித்துவ வளர்ச்சிக்கு ஆதரவாக இருந்தனர். இதுவே தேசிய திட்டக்குழுவின் அறிக்கையிலும் பிரதிபலித்தது. இந்தியத் தொழில் முதலாளித்துவ வர்க்கத்திற்கு அரசாங்கத்தின் ஆதரவும் பாதுகாப்பும் – அதன் மூலதனச் சேர்க்கைக்கும் சரி, அதன் நலனை பாதுகாத்துக் கொள்ளவும் சரி, – தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருந்தது. 1954 முதல் 1959 வரை நடைபெற்ற அனைத்திந்திய இந்தியத் தொழில் முதலாளிகளின் அமைப்பின் ஆண்டுப் பேரவைகளிலும், அறிக்கையிலும் அவர்களுடைய நலனில் அக்கறையுள்ள பல விஷயங்கள் இந்தியத் தொழிலாளர்களை ஒழுங்குபடுத்துவது உட்பட உள்ள பல அம்சங்களை அமல்படுத்துவதற்கான வரையறைகளை தீர்மானிக்கும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
திரட்டப்பட்ட மூலதனம் மற்றும் தனியார் வர்த்தக நிறுவனங்களின் நலவிரும்பிகளின் ஊடுருவல் என்பது அரசுத்துறைகளில், அரசமைப்புகளில், அரசுக் குழுக்களில், சபைகளில், கமிஷன்களில், நாடாளுமன்றத்தில், அரசியல் நடவடிக்கைகளில் நேரடியாகத் தலையிடும் அளவிற்கு இருந்தது. இந்திய முதலாளித்துவ வர்க்கம் இந்தியத் தொழிலாளர்களை விட அதிகமாக நேரடியாக இல்லாவிட்டாலும் கட்சி நடவடிக்கைகளிலும், அதிகாரம் செலுத்தும் நாடாளுமன்ற நடவடிக்கைகளிலும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது. இனி மூலதனத் திரட்டலுடன் தொழிலாளருடன் மோதுகின்ற பின்னணியில் மூலதனம் எவ்வாறு அரசியல் ரீதியாக அணிதிரண்டது என்பது பற்றியும் அது எப்படி இந்த கால கட்டத்தில் அரசியலில் ஒரு வர்க்க மாக அணி திரட்டிக் கொண்டது என்பதையும் பார்ப்போம்.
பாகம் 2
அரசும் மூலதனமும் 1947 முதல் 1956 வரை
அரசு முதலாளித்துவத்தை ஊட்டி வளர்த்த அதே நேரத்தில் இந்தியாவில் இருக்கும் சொத்துரிமை அமைப்பு தொடர உத்தரவாதப்படுத்திக் கொண்டே இருந்தது. சுதந்திரச் சந்தை நன்றாக செயல்பட வேண்டுமென்பதும் உத்தரவாதப்படுத்தப்பட்டது. இறக்குமதிக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் ஒட்டுமொத்தமாக இறக்குமதிக்கு மாற்றான ஒரு கொள்கை அல்லது திட்டம் முறையாக அமலாக்கப்படவில்லை. உடைமை வர்க்கத்தின் நலன்கள் பறிக்கப்படாமல் பாதுகாப்பதற்கான பல்வேறு அம்சங்கள் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் புகுத்தப்பட்டன.
1948ம் ஆண்டு தொழிற்கொள்கையின் கீழ் கேந்திரமான துறைகளான இராணுவமும் தகவல் தொடர்பும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. இந்தத் தொழிற்கொள்கையின் கீழ் மூன்று துறைகள் அரசுத் துறைகளாகவும், 6 துறைகள் பொதுத்துறையின் கீழும் வைக்கப்பட்டன. இவற்றைத் தவிர, வேறு எந்த நிறுவனங்களும் தேசியமயமாக்கப்படாது என்று உத்தரவாதமளிக்கப்பட்டது. மேலும் அப்போதிருந்த தனியார் தொழில் நிறுவனங்களை குறைந்தபட்சம் இன்னும் 10 வருடங்களுக்காவது அரசுடைமையாக்காது என்று மிகத் தெளிவாக உத்தரவாதமளித்தது. முதல் 5 ஆண்டுத் திட்டமும் கூட புதிதாகத் துவங்கப்படும் நிறுவனங்களும் 10 வருடங்களுக்கு அரசு கையகப்படுத்தாமல் இருக்கும் என்பதை தெளிவுபடுத்தியது. அப்போது இந்தியாவில் இருந்த அன்னிய நிறுவனங்களுக்கு இந்திய நிறுவனங்களுக்குரிய அத்தனை சலுகைகளுடனும் செயல்படலாம் என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டது. நிறுவன முகவாண்மை அமைப்புகளின் மூலம் வர்த்தக நிறுவனங்களின் மேல் உள்நாட்டு வெளிநாட்டு வணிக நிறுவனங்கள் செலுத்திய ஆதிக்கம் மற்றும் கட்டுப்பாடுகளை உடைக்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, முக்கியமான பிரிட்டிஷ் வர்த்தகக் குழுமங்களுடன் மேலும் இந்தியாவில் முதலீடு செய்யப்பட வேண்டும் என்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
1955 டிசம்பர் 31ம் தேதி வெளியான ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரத்தின் படி, அந்நியக் கம்பெனிகளின் கிளைகளில் 18.1 சதமானம் அந்நிய முதலீடும், அந்நிய மூலதனக் கட்டுப்பாட் டின் கீழ் இருந்த நிறுவனங்களில் 70.8 சதமானமும், இந்தியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த நிறுவனங்களில் 10 சதமானமும் அந்நிய முதலீடு இருந்தது. அப்போதைய மதிப்பீட்டின் படி ரூ. 4112 மில்லியன்கள் அந்நிய முதலீடு என்பது இந்தியாவிற்குள் (1 மில்லியன் என்பது 10 லட்சம்) இருந்தது. 1955ம் ஆண்டு தேசிய கணக்குப் புள்ளி விவரத்தின்படி இந்தத் தொகை அன்றைய இந்தியப் பொருளாதாரத்தில் இருந்த மொத்த மூலதனச் சேர்க்கையில் 38.7 சதமாகும். அந்தக் காலக்கட்டத்தில் நிறுவனங்களின் லாபப் பங்கு விகிதம் என்பது அந்நிய மற்றும் இந்திய முதலீட்டாளர்களிடையே 15.9 : 1 என்ற விகிதாச் சாரத்தில் இருந்தது.
1949ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி நேரு அந்நிய முதலீடு குறித்து வெளியிட்ட அறிக்கையில் அந்நிய முதலீட்டாளர்களுக்கு அவர்களுடைய முதலீடு இந்திய முதலீட்டிற்கு சமானமாகப் பாவிக்கப்படும் என்ற உத்தரவாதத்தினை அளித்திருந்தார். சுதந்திரத்திற்கு முன்பும் சரி பின்பும் சரி சுதேசி பற்றிய பேச்சையே எடுக்காத இந்திய தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பு இதனை பலமாக எதிர்த்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்ததைவிடவும் மிகவும் தாராளமான அணுகுமுறை என்பது அந்நிய முதலாளிகளுக்கும் தனியார்துறைகளும் சுதந்திர இந்தியாவில் நேருவின் தலைமையின் கீழ் வழங்கப்பட்டது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
1948ம் ஆண்டு நடைபெற்ற தெலுங்கானா விவசாயிகளின் போராட்டம், 1946ம் ஆண்டு நடைபெற்ற தேபாகா இயக்கம் போன்ற பல்வேறு அரசியல் ரீதியான தாக்கங்கள் இருந்த பிறகும் முழுமையான நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளை எடுப்பதில் இருந்து அரசாங்கம் பின்வாங்கியது. நிலச் சீர்திருத்தம் என்பதற்கான முழுமையான பலனோ பொருளோ அரசாங்கத்தால் உத்தரவாதப்படுத்தப்படவில்லை. மாறாக 1950 ஆண்டு வரையிலும் முக்கியமான பல்வேறு அரசியலமைப்பு ஏற்பாடுகளின் மூலம் முதலாளித்துவ சொத்துரிமை அதாவது நிலச்சுவான்தார்களின் சொத்துரிமைகள் பாதுகாக்கப்பட்டனவே தவிர விவசாய உற்பத்தி உறவுகளை மாற்றுவதில் அரசுக்குப் போதுமான அக்கறை இல்லை. விருப்பமும் இல்லை. நிலக்குத்தகைக்கான சீர்திருத்த நடவடிக்கைகள் ஒரு சில இடங்களில் அமலாக்கப்பட்டாலும் நில உச்சவரம்பு சட்டங்கள் நீர்த்த வடிவத்திலேயே இயற்றப்பட்டது. அரசிற்கும் பயிரீட்டாளர்களுக்கும் இடையிலான இடைத்தரகர்களை ஒழிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதாவது ஜமீந்தாரி முறையும் ஜாகிர்தாரி முறையும் ஒழிக்கப்பட்டது. ஆனாலும், அவர்களுக்கு நிலத்தின் மீதான உரிமை ஏதேனும் ஒரு வகையில் உத்தரவாதப்படுத்தப்பட்டது. நஷ்ட ஈடும் வழங்கப்பட்டது.
நிலம் என்பது பொருளாக்கப்பட்டது. பயிர்கள் சந்தைமயமாக்கப்பட்டன. சக்தி வாய்ந்த இடைத்தரகர்கள் மற்றும் நிலச்சுவான்தார்கள் அதிக பண பலத்துடன் இந்தியாவின் பல பகுதிகளில் வளர்ந்து வந்தனர். அரசாங்கத்தின் ஆதரவுடன் இவர்களின் வளர்ச்சி உத்தரவாதப்படுத்தப்பட்டது. விவசாய உறவுகளில் சாதி கோலோச்சியது. உதாரணமாக ஒரு நபர் நில உடைமையாளராக இருப்பதோ அல்லது நிலத்தின் மீதான கட்டுப்பாடு இருப்பது என்பதோ அவர் சார்ந்த சாதியைப் பொறுத்து அமைந்தது. சாதியும் வர்க்கமும் மிக நெருக்கமான உறவு கொண்டிருந்தன. ஒன்றையொன்று உத்தரவாதப்படுத்திக் கொண்டன.
முதல் ஐந்தாண்டுத் திட்டம் என்பது நீர்ப் பாசனம் மற்றும் மின்சார விநியோகத்தினை பலப்படுத்த ஏதுவாக போடப்பட்டது. முதல் ஐந்தாண்டுத் திட்டம் என்பது ஹாரட் டோமர் மாதிரியை பின்பற்றி போடப்பட்டது. (ஹாரட் டோமர் மாதிரி என்பது மூலதனச் சேர்க்கைக் கான முதலீடு பற்றியது. உற்பத்திக்கு மூலதனம் அவசியம், மூலதனம் முதலீட்டின் மூலம் கிடைக்கும் அதிகமான மூலதனச் சேர்க்கை அதிக வளர்ச்சியை உத்தரவாதப்படுத்தும்) அரசின் பட்ஜெட் என்பது பிரிவினையின் தாக்கத்தை பிரதிபலித்தது. மேலும் அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியம் கொடுப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் இருந்தது. நாட்டின் பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மையில் இருந்தாலும், மூலதனம் மட்டும் தடையில்லாமல் தன்னுடைய வளர்ச்சியை உறுதிப்படுத்திக் கொண்டே இருந்தது. ஆழப்படுத்திக் கொண்டது. பல துறைகளில் தன்னை வேரூன்றி விரிவுபடுத்திக் கொண்டது.
பழைய துறைகளான சிமெண்ட், ஸ்டீல், பேப்பர் மற்றும் சீனி போன்ற தொழில் துறைகள் ஆழமான வளர்ச்சியை கண்டன. தையல் மிஷின், டீசல் என்ஜின், சைக்கிள் போன்ற புதிய துறைகள் பரவலாக விரிவடைந்தன. முதல் பத்தாண்டுகளில் நுகர்வோருக்கான முக்கியமான தொழில் துறைகள் பலமடைந்தன. அரசின் கொள்கை தொழில்மயமாக்கலை லைசன்ஸ் வழங்கும் கொள்கை மூலமாகவும் ஆதரித்து வளர்த்து வந்தது. இந்தியச் சந்தைக்குள் நுழைவதற்கு என்று சில கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் வாடகை மற்றும் குத்தகைப் பணங்கள் கிடைப்பதை இந்திய முதலாளிகள் உத்தரவாதப்படுத்திக் கொண்டனர். ஐ.டி.ஆர்.ஏ. (தொழில்துறை அபி விருத்தி மற்றும் ஒழுங்கமைப்புச் சட்டம் ((IDRA Act)) என்பது தனியார் துறையில் முதலீட்டினை ஒழுங்குபடுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டது. தனியார் மூலதனப் பொருளாதார நடவடிக்கைகளில் தலையிடுவதற்கு அரசாங்கத்திற்கான சட்ட வடிவம்) பதிவுகளின் படி 1952 முதல் 1955 வரை லைசன்சுகளை பெறுவதற்காக 1440 மனுக்கள் பெறப்பட்டு இதில் 363 புதிய திட்டங்களுக்கும், 657 விரிவாக்கத் திட்டங்களுக்கும், 122 அமைப்பு மாற்றங்களுக்கும் லைசன்சுகள் வழங்கப்பட்டது. லைசன்சின் முக்கியத்துவம் உணரப்படாமல் வெறுமனே வாடகை மற்றும் குத்தகை பெறு வதற்கான கருவியாக லைசன்ஸ் பயன்படுத்தப்பட்டது என்பதை ஹசாரி அறிக்கை வெளிக் கொணர்ந்தது. (ஹசாரி அறிக்கை 1967 என்பது தொழில்துறையில் லைசன்ஸ் வழங்குவது குறித்து சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையின் வாயிலாக தொழில் துறையில் லைசென்ஸ் முறையாக வழங்கப்படவில்லை என்பதும், முதலில் வந்தவர்க்கு முதலில் என்று வழங்கப்பட்டுள்ளது என்பதும், வழங்கப்பட்ட பின்பு சரியான கண்காணிப்பு இல்லை என்பதும், அது அந்நிய நிறுவனங்களுக்கு இந்தியாவில் வணிகம் செய்ய ஒரு பாஸ்போர்ட் மாதிரி பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதும் தெரிய வந்தது)
எனவே, இந்தக் காலக்கட்டத்தில் வளர்ச்சிக்கான திட்டமிடலாக அரசின் செயல்பாடுகள் இருக்கும் என்று கூறப்பட்டாலும், சுதந்திரச் சந்தை என்பது தான் முதலீடுகள் தொடர்பாக பின்பற்றப்பட்டது என்பதனை புள்ளிவிவரங்களும் அறிக்கைகளும் ஊர்ஜிதப்படுத்துகின்றன. உள்நாட்டு மற்றும் அந்நிய மூலதனங்களை பொறுத்த வரையில் அரசு மற்றும் மூலதனத்திற்கிடையேயான உறவு என்பது தாராளவாதத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஆனாலும், பொருளாதாரத்தைப் பொறுத்த வரையில் மூலதனச் சேர்க்கை என்பதில் அப்படி ஒன்றும் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்திவிடவில்லை. மொத்த உள் நாட்டு உற்பத்தியில் மூலதனச் சேர்க்கை என்பது 12 முதல் 17 சதம் மட்டுமே. எனவே, தாராளவாதம் என்பது முதலாளித்துவச் சொத்துரிமையையும் சொத்து உறவுகளையும் பாதுகாப்பதைத்தான் உத்தரவாதப்படுத்தியது. அதே போல வெளிநாட்டு மூலதனம் இந்திய பொருளாதாரத்துடன் கொண்டிருந்த நேரடி தொடர்பினை மற்றும் முயற்சிகள் 1960களின் இடைக்காலம் வரை நடைபெற்றது. இருந்த போதும் குறிப்பிடத்தகுந்த மாற்றம் என்பது 1966க்கும் 1980க்கும் இடையில்தான் இருந்தது.
பாகம் -3
அரசும் மூலதனமும் -1956 முதல் 1966 வரை
1956ம் ஆண்டில், இரண்டாவது தொழிற் கொள்கையை இயற்றி, இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தினை அமலாக்கும்போது பெல்ட் மேன்-மஹாலானோபிஸ் மாதிரியை பின்பற்றியது. (இது சோவியத் பொருளாதார நிபுணர் ஜி.ஏ. பெல்ட்மேன் 1928ல் உருவாக்கியது. இத்துடன் இந்திய புள்ளியியல் நிபுணர் பிரசந்த சந்த்ர மஹாலானோபிஸ் 1953ல் தன்னுடைய கருத்துக்களை இணைத்து உருவாக்கியது. இந்த மாதிரியின் படி தொழில்துறை முதலீடு என்பது உள்நாட்டு நுகர்பொருள் தொழில் துறைகளை உருவாக்குவதை நோக்கி நகர வேண்டும் என்பதுதான் முக்கிய அம்சம். அதாவது நுகர்வினை அதிகப்படுத்தும் வகையிலும், முதன்மைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும். தொழில்மயமாக்கலின் முதலீடு இந்தத் திசை வழியில் இருக்க வேண்டும் என்பது). எனவே, இதற்கு முந்தைய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது பொருளாதாரத்தின் உற்பத்தி அடிப்படையினை வலுப்படுத்துவது, புதிய நிதி நிறுவனங்களை உருவாக்குவது மற்றும் பொருளாதார செயல்பாட்டினை கட்டுப்படுத்தி ஒருங்கிணைப்பது என்பது இக்கொள்கையின் உள்ளடக்கமாக இருந்தது. இது ஒரு மாறுபட்ட தோற்றமாகும்.
அரசு என்பது சேமிப்பினை அதிகப்படுத்து வதற்கான நடவடிக்கைகளை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அப்படி அதிகரிக்கப்படும் சேமிப்புகளை பயன்படுத்தி கனரகத் தொழில்களில் குறிப்பாக இயந்திரங்களின் கருவிகளை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன் காரணமாக சர்வதேச மூலதனச் சந்தையை நம்பி சார்ந்திருப்பது கைவிடப்பட வேண்டும் என்றும், சர்வதேசப் பொருட்களை சார்ந்திருக்கக்கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதுதான் முதலாளித்துவத்தையே கூட வளர்த்தெடுக்க அவசியமானது என்று அனுமானிக்கப்பட்டது. இது தான் நேருவின் கொள்கை திட்டமிடலாகவும் இருந்தது. அதே போல அரசு என்பது செலவினங்களை அதிகரித்து உள்நாட்டுச் சந்தையை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அது அரசின் பொறுப்பு என்றும் முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக காலனியாதிக்கக் காலத்தில் இருந்து நுகர்பொருட்களில் (wage-goods constraint) இருந்த தட்டுப்பாடு என்பது நீக்கப்பட வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தப்பட்டது. எனவே, பல்வறு வகையான முறைகளும் உத்திகளும் விடுதலைக்குப் பின் நாட்டிற்கு பொருத்தமான மூலதனச் சேமிப்பிற்கும் நுகர் பொருட்கள் உற்பத்திக்கான முதலீட்டிற்கும் கையாளப்பட்டன. அதேநேரம் சமூகக் கட்டுப்பாட்டை உத்தரவாதப்படுத்தும் மற்றும் இருக்கின்ற சொத்துரிமை உறவுகளை குறிப்பாக நிலஉரிமை உறவுகளை பாதுகாப்பதும் ஆகிய மிக முக்கியமான அரசின் பங்கு தொடரப்பட்டது. இதற்கு மிக முக்கியமான ஆதாரம் நிலச் சீர்திருத்தத்தை அமலாக்குவதில் அரசிற்கு இருந்த ஆர்வமின்மை. பல மாநிலங்களில் நிலச்சீர்திருத்தச் சட்டங்கள் அமலாக்கப்பட்ட பிறகும் மத்திய அரசாங்கம் இதில் போதிய அக்கறையை காட்டவில்லை, எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லை. இது அரசு தலையிடாதிருக்கும் முக்கிய துறையாகும்.
அரசாங்கம் தொழில் உறவுகளில் பல்வேறு சிக்கல்களை சந்தித்தது. அனைத்திந்திய தொழில்துறை முதலாளிகளின் அமைப்பு தொழில் தகராறு கொள்கை அமலாக்கப்பட்திலும் கம்பெனிகள் சட்டம் அமலாக்கப்பட்டதிலும் மிகவும் வருத்தமடைந்தது. ஆனால், அமைப்பு ரீதியாகத் திரண்ட தொழிலாளர்களையும் உள்ளடக்கி அரசு செயல்பட வேண்டியிருந்ததாலும், வளர்ந்து வந்த தொழிற்சங்க இயக்கங்களாலும் அவர்களால் இந்தச் சட்டத்தின் அமலாக்கத்தில் எதையும் செய்ய முடியவில்லை. எனவே அரசு என்பது ஆதிக்க சக்திகள் மற்றும் வர்க்கப் பிளவுகளுக்கும் இடையில் இருந்த முரண்பாடுகளை களைய வேண்டியதாகவும், அவர்களுடைய பல்வேறு வகைப்பட்ட நலன்களை உத்தரவாதப்படுத்த வேண்டிய நிலையிலும், அவர்கள் ஒரு வருக்கொருவர் உதவக்கூடிய வகையில் அவர்களது உறவு முறையை பராமரிக்க வேண்டிய இடத்திலும் இருந்தது.
இரண்டாவது திட்டத்தில் இரண்டு புதிய தலையீடுகள் இருந்தன. முதலாவதாக ஏற்கனவே குறிப்பிட்ட Indicative Planning மற்றும் லைசென்சிங் முறை என்பது முக்கியமான ஆதாரங்களை அதாவது சேமிப்புகளை மற்றும் அந்நியச் செலாவணிகளை முதலீடு செய்வதில் தலையீடு செய்தது. இரண்டாவதாக, இந்திய மூலதனத்தின் பாதுகாப்பு என்பது சுங்க வரிகளை போடுவது மற்றும் போடாமலிருப்பது போன்ற வரையறைகளின் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்டது. கம்பெனிகள் சட்டம் 1956ன் கீழ் பன்னாட்டு கார்ப்பரேஷன் நிறுவனங்களில் மற்றும் துணை நிறுவனங்களில் உள்ள பன்னாட்டு மூலதனத்தை இந்திய மூலதனத்தில் இருந்து வேறுபடுத்திப் பார்க்காமல் இந்திய மூலதனங்களுக்குள்ள அத்தனை சலுகைகளோடும் பாவிப்பது என்ற முறையின் மூலம் சக்திவாய்ந்த பன்னாட்டு நிதி மூலதனத்தை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது என்ற நடவடிக்கையும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டது.
அதேபோல இறக்குமதிக்குப் பதில் தொழில்மயமாக்கல் Import Substitution Industrialisation (ISI) என்பதில் சுங்கவரியை தீர்மானிப்பதிலும் இறக்கு மதிக்கான கட்டுப்பாடுகளை நிர்ணயிப்பதிலும் கூட பெருமுதலாளிகளின் நலன்கள் பாதுகாப்பது என்பது உத்தரவாதப்படுத்தப்பட்டது. மூலதனத்தின் விரிவாக்கத்தை உத்தரவாதப்படுத்துவதற்காக பொது முதலீடு என்பது போக்குவரத்து, தகவல் தொடர்பு, நீர்ப்பாசனம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான திட்டங்களில் ஊக்கப்படுத்தப்பட்டது.
இவ்வாறாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கம் வளர்ச்சிக்கான முதலாளித் துவப் பாதையை கலப்புப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு அமல்படுத்தியது. (கலப்புப் பொருளாதாரம் என்பது மிகச் சுதந்திரமான தனியார் கம்பெனிகளும் நாட்டில் இருக்கும். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறைகளும் இருக்கும். அதாவது அடிப்படையான கனரகத் தொழில்களிலும் இராணுவத் துறையிலும் பொதுத்துறைகளே இருக்கும். அதேபோல மிக அதிகமான மூலதன முதலீடு தேவைப்படும் பெரிய தொழில் துறைகளிலும் பொதுத் துறைகளே இருக்கும். தேசியமயமாக்கல் என்பது முக்கியத் துறைகளில் மட்டும் இருந்து கொள்ளலாம். அதேநேரம் இந்தத் தேசியமயமாக்கல் என்பது சோஷலிசமாகப் பொருள் கொள்ளப்படக் கூடாது) இந்தப் பாதையில் மூன்று முக்கிய விஷயங்கள் தெளிவாகின. ஒன்று – இது அதிக மாக மூலதனத் திரட்டலை அரசு உத்தர வாதப்படுத்துவதையும் அப்படி திரட்டப்பட்ட மூலதனங்கள் முக்கியத்துவத்தின் அடிப்படை யில் முதலீடு செய்யப்படுவதையும் சார்ந்திருந் தது. இரண்டு இந்தக் கொள்கை என்பது இந்த வளர்ச்சி என்பது யாருக்காக அமலாக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானித்தது. அவர்களது பொருளாதார, சமூக, அரசியல் கலாச்சார மற்றும் தத்துவார்த்த சக்திகளை பலப்படுத்தத் தேவையான சூழல்களை நிர்ப்பந்தங்களை வரையறைகளையும் தீர்மானித்தது. மூன்று வளர்ச்சிக்கான முகவாண்மை நிறுவனங்கள் என்று யாரெல்லாம் பார்க்கப்படுகிறார்களோ அந்த வர்க்கத்தினரை சிறப்பாகக் கவனிப்பது மற்றும் ஊக்கப்படுத்துவது என்ற வகையில் அரசாங்கத்தின் கொள்கைகள் தீர்மானிக்கப்பட்டன.
குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் பெரிய நிறுவனங்கள் உற்பத்தித் துறையில் கவனம் செலுத்தின. பன்னாட்டு நிறுவனங்களுக்கிருந்த சமதள ஆடுகளம் என்பது போட்டியை உருவாக்கியது என்று சொல்ல முடியாது. அரசின் ஆதாரங்கள் அனைத்தும் புதிதாகக் கண்டெடுக்கப்பட்ட துறைகளில் உற்பத்தியை அதிகரிக்கப் பயன்படுத்தப்பட்டது. ஆளும் கட்சிக்குள் முதலாளிகளுக்கு இருந்த அதிகாரத்தின் காரணமாக குறைந்தபட்ச கட்டுப்பாட்டினை கூட முதலாளித்துவ வர்க்கத்தின் மீதோ மூலதனத்தின் மீதோ வைக்க முடியாத நிலை தொடர்ந்தது. அரசுதான் எந்தவொரு இடர்ப்பாட்டினையும் தாங்கிக் கொள்ள வேண்டும் என்ற நிலை இருந்தது.
ஒரே ஒரு குறிப்பிடத்தகுந்த மாற்றம் என்ன வென்றால் பிரிட்டிஷ் முகவாண்மை நிறுவனங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து இந்த அரசாங்கம் தனது புதிய கம்பெனிகள் சட்டம் 1956ன் மூலம் சக்தி இழக்க வைத்தது. இதனால் இந்திய வர்த்தகக் குடும்பங்கள் பலனடைந்தன. இருந்த போதும், நேரு மறுபடியும் தொழிற் கொள்கை 1956-னை அமலாக்கும்போது எந்த விதமான பாகுபாடும் இருக்காது என்று உறுதியளித்தார்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டக் காலங்களில் நிதித் திரட்டல் என்பது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இருந்தது. இதன் மூலம் கிராக்கியினை அதிகரிக்கும் முயற்சி எடுக்கப்பட்டது. கடன் கொடுப்பதற்கான மூலதனம் என்பது உருவாக்கப்பட்டு நிதி நிறுவனங்களின் மூலம் தனியார் முதலீடுகள் ஊக்கப்படுத்தப்பட்டன. விலைக்கட்டுப்பாட்டுக் கொள்கையின் மூலம் அரசாங்கம் தொழில் மற்றும் விவசாயப் பொருட்களுக்கான சந்தையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளும் மற்றும் ஒருங்கிணைப்புப் பணியை செய்து வந்தது. மேலும், மூலதனம் மற்றும் இடைப்பொருட்களை தனியார் உற்பத்தித்துறைகளுக்கு வழங்கும் பணியையும் அரசாங்கம் கவனித்து வந்தது. நிதித் திட்டமிடலுக்கு வெளியிலிருந்து உதவி மற்றும் வரி விதிப்பு முறைகள் முக்கிய ஆதாரங்களாக இருந்தன. நேரடி வரி விதிப்பு குறைவாக இருந்ததன் காரணமாக அதிகமாக மறைமுக வரிகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக 1948-49 காலக்கட்டத்தை விட 1963-64 காலக்கட்டத்தில் மறைமுகவரி என்பது இரண்டு மடங்கானது. இவ்வாறாக தொழில் மயமாக்கலுக்கான செலவினத்தின் ஒரு பகுதி பொதுமக்களின் தலையில் சுமத்தப்பட்டது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொதுத் துறையின் பங்கு தனியார் துறையின் பங்களிப்பை விட அதிகரித்தது. 1960ல் 9 சதமாக இருந்த பங்கு 1965-66ல் 13 சதமாக உயர்ந்தது. அரசு உரங்கள், வேதியியல், ஸ்டீல், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற துறைகளிலும் முதலீடு செய்தது. தனியார் முதலாளிகள் டை, பெயிண்ட், மருந்து போன்றவற்றில் முதலீடு செய்தனர். செங்குத்து ஒருங்கிணைப்பு என்பது தொடர்பு நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் உருவாக்கப்பட்டது. பெருமுதலாளிகள் அரசு பொதுத் துறைகளில் முதலீடு செய்வதை பிரச்சினையாகப் பார்க்கவும் இல்லை. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் துவக்கக் கட்டத்தில் எதிர்க்கவும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் பொதுத்துறைகளும் தனியார் துறைகளும் போட்டி நிறுவனங்களாக பொருளாதாரத்தில் பார்க்கப்படவில்லை. உண்மையைச் சொன்னால் ஒவ்வொரு தேசியப் பொருளாதாரமும் கலப்புப் பொருளாதாரத்தின் பல்வேறு விகிதாச்சாரங்களின் வடிவத்திலேயே உள்ளன.
1959 முதல் பொதுத்துறை நிறுவனங்களில் மூலதனச் சேர்க்கை என்பது கணிசமாக உயர்ந்தது. 1960-61 ல் கார்ப்பரேட் நிறுவனங்களின் மூலதனச் சேர்க்கை என்பது குறைய ஆரம்பித்தது. 1966ல் அரசாங்கம் சார்பாக நடத்தப்பட்ட ஆய்வின்படி தொழில்துறை வளர்ச்சி என்பது மந்தமாகவே இருந்தது. அந்நியச் செலாவணி தட்டுப்பாடு இருந்தது. நாட்டின் ஏற்றுமதி வருமானம் என்பது குறைவாக இருந்தது. இறக்குமதி செய்யப் போதுமானதாக இல்லை. தொழிற்சாலைகளுக்கான தாதுப்பொருட்களின் இறக்குமதிச் செலவு அதிகரித்தது. விவசாயம், மின்சாரம் நீர்ப்பாசனம் என அனைத்திலும் எதிர்பார்த்த வளர்ச்சி என்பது இல்லை. விவசாயத்திற்கு போதுமான முதலீடு செய்யப்படவில்லை. இதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதத்தை அளிக்கும் மூன்றில் இரண்டு பங்கினை விவசாயத் தொழிலாளர்கள் துன்பத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது. இதுதான் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் அமலாக்கப்பட்ட Indicative Planning என்பதை மையமாகக் கொண்டிருந்த அரசின் செயல்பாடுகளின் குறைபாடாக இருந்தது.
தேசிய வருமானம் என்பது 14 சதமாக உயர்ந்தது. உற்பத்தித் துறையில் வளர்ச்சி என்பது இல்லை. மந்தமான நிலவரமே இருந்தது. 1960-களின் மத்தியில் பொருளாதார மந்தநிலை நீடித்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 1964-65-ல் குறைவாகவே இருந்தது. இதற்கு 1962-ல் சைனாவுடன் ஏற்பட்ட முரண்பாடு மற்றும் 1965-ல் பாகிஸ்தானுடன் நடந்த சண்டை மற்றும் மோசமான சீதோஷ்ண நிலை போன்றவைதான் விவசாய உற்பத்தியில் ஏற்பட்ட தேக்க நிலைக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. இவை முக்கியமானவை தான். ஆனாலும் பிற முக்கியமான பொருளாதாரக் கொள்கைகளின் குறைபாடுகளை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் இருந்தது.
இங்கே நாம் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், மிகப்பெரும்பான்மை கிராமப்புற வேலையில்லாதோரும், தகுதி குறைவான வேலையில் இருந்தவர்களும் சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நிலையிலேயே இருந்தனர். அவர்களைப் பொறுத்த வரையில் வளர்ச்சிக்கான எந்தத் திட்டங்களும் திட்டங்களின் பலன்களும் அவர்களைச் சென்றடையவில்லை. சொத்துக்கள் முறையாகப் பகிர்ந்தளிக்கப்படவில்லை. சுதந்திரத்திற்குப் பிந்தைய காலக்கட்டத்தில் வளர்ச்சி என்பது சில இடங்களில் வெளிப்பட்டாலும் வேலையற்றோருக்கும் வேலையில் இருந்தோருக்கும் இடையிலான இடைவெளி என்பதும், அமைப்பு சார்ந்த துறையில் பணியில் இருந்தவர்களுக்கும் அமைப்பு சாராத் துறையில் பணியில் இருந்தவர்களுக்கும் இடையேயான இடைவெளி என்பதும், தொழிலாளர் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கும் இடையிலான இடைவெளி என்பதும், எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாளர்களுக்கும் முதலாளி வர்க்கத்திற்கும் இடையிலான இடைவெளி என்பதும் 1947-க்கும் 1967-க்கும் இடையில் அதிகரித்துவிட்டது. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் புள்ளிவிவரத்துடன் 1964-65 காலக்கட்டத்தில் நுகரப்பட்ட தொழில்பொருட்களை ஒப்பிடும்போதே இந்தப் பள்ளம் வெளிப்படையாகத் தெரிகிறது. மக்களின் நுகர்வு சக்தியில் விழுந்துள்ள பெரிய பள்ளம் வெளிப்படுகிறது.
இந்தக் காலக்கட்டத்தில் விவசாய உற்பத்தி என்பது குறைந்துள்ளது. திட்டமிடலில் நிறைய தவறுகள் இழைக்கப்பட்டுள்ளன. போதுமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. கிராக்கியை உருவாக்கக்கூடிய வகையிலான பொருளாதாரக் கொள்கைகள் பின்பற்றப்படவில்லை. விவசாயத்துறை அபிவிருத்தியில் போதுமான அக்கறை செலுத்தப்படவில்லை. செல்வந்தர்களின் மீது தேவையான அளவு வரி விதிக்கப்பட வில்லை. போதுமான பயிற்சி பெற்ற தொழில் வல்லுநர்கள் உருவாக்கப்படவில்லை. உண்மையில் திட்டமிடல் என்பது இந்திய முதலாளிகளுக்கு முதல் இரு பத்து ஆண்டுகளில் நல்ல பலனை அளித்தது. அதே நேரம் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான போதுமான வாழ்வாதாரங்களை வழங்கவில்லை, போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. பெருமுதலாளிகள் முற்போக்கு வரிக்கொள்கையை அதாவது வசதி படைத்தவர்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் முறையை எதிர்த்ததன் காரணமாக வரி ஏய்ப்பு என்பது இருந்தது.
அதேபோல அரசாங்கத்தின் லைசன்சிங் முறையை டாட்டாக்களும், பிர்லாக்களும், தாப்பர்களும் தங்களுடைய ஏகபோக நிறுவனங்களை உருவாக்க ஏதுவாகப் பயன்படுத்திக் கொண்டனர். அரசின் கொள்கைகளை பயன்படுத்தி ஏற்கனவே ஏராளமான நிதி பலத்துடன் இருந்த தொழில்துறை முதலாளிகள் பெரும் வளர்ச்சியடைந்தனர். அரசு சிறு முதலாளிகளுக்கும் பெருமுதலாளிகளுக்கும் இடையே ஒரு சமநிலையை உருவாக்க முனைந்தாலும் அது சாத்தியமாகவில்ல. நிதிப்பற்றாக்குறை என்பது தொடர்ந்து வளர்ந்து கொண்டே வந்தது. அரசு நிதி நெருக்கடியை சந்தித்துக் கொண்டே இருந்தது. 1965 இறுதியில் அரசு பணவீக்கத்தையும் பரிவர்த்தனை பட்டுவாடா பற்றாக்குறையையும் சந்தித்தது.
வளர்ச்சி என்பதை காட்டுவதற்காக அரசாங்கம் பெரும்பகுதி தொழிலாளர்களை மறைமுக வரியின் மூலமாகவும், விலையேற்றத்தின் மூலமாகவும் உறிஞ்சியது. 1966ம் ஆண்டில் பரிவர்த்தனை பட்டுவாடா பற்றாக்குறை என்பது உச்சத்திற்கு வந்து இந்திய அரசாங்கம் உலக நிதி நிறுவனத்திடம் இருந்து முதல் முறையாகக் கடன் வாங்கியது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் நேருவின் அரசு தலைமையிலான முதலாளித்துவ வளர்ச்சி என்பது சமூக உறவுகளின் கட்ட மைப்புகளில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் இருக்கிற அரை நிலப்பிரபுத்துவ முறையையும் முதலாளித்துவ முறையையும் அப்படியே வைத்துக் கொண்டு உற்பத்தியை மட்டும் அதிகப்படுத்துவதை குறியாகக் கொண்டு செயல்பட்டது. முதலாளித்துவ வர்க்கத்தின் மீது வரி விதித்து அதன் மூலம் வரி வருமானத்திற்கான எந்த வழி வகையும் செய்யப்படவில்லை. விவசாய மற்றும் தொழில் துறை பெருமுதலாளிகளை நிலச்சுவான்தார்களை கட்டுப்படுத்தும் எந்த அதிகாரமும் அரசிடம் இல்லை. அரசிற்கு அந்த தைரியமும் இல்லை. ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் பொதுத்துறையை வளர்த்தெடுக்கவும் முடியவில்லை. எனவே இது ஆதிமூலதனத் திரட்டலுக்கான கனமாக அரசு தாக்குப்பிடிக்க இயலாது எழுந்த நெருக்கடியே தவிர பொருளாதாரத்தின் நெருக்கடியல்ல.
நேருவின் இந்த வளர்ச்சிக்கான மாதிரியை எதிர்த்து கம்யூனிஸ்ட்டுகளும், சோஷலிஸ்டுகளும் மிகக் குறைந்த காலமே இருந்த உடைமை வர்க்க நலனை பிரதிபலித்த சுதந்திரா கட்சியினரும், நிலச்சுவான்தார்களும் உடைமை இழந்த மன்னர்களும் குரல் கொடுத்தனர். கம்யூனிஸ்ட்டுகளைப் பொறுத்தவரையில் அமைப்பிற்குள் ஏற்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த பிளவு என்பது அவர்களை பலவீனப்படுத்தியது. இருந்தபோதும், அவர்கள் மக்கள் எதிர்ப்பு இயக்கங்களை உருவாக்குவதன் மூலமாக, தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு முதலாளிகளை அணிதிரட்டி தொடர்ந்து எதிர்த்துக் கொண்டுதான் இருந்தனர். 1970களில் சோஷலிஸ்டுகள் துண்டு துண்டாக உடைத்தப் பிறகு முழுவதுமாக மறைந்து போயினர். ஜாதியின் அடிப்படையில், இனத்தின் அடிப்படையில் திரண்ட எதிர்க்கட்சியினர் அந்தந்தப் பகுதி சார்ந்தவர்களாக இருந்தனர், அவர்களுடைய எதிர்ப்பும் அந்த மட்டத்திலேயே இருந்தது. இந்து தேசியத்தை முன் வைத்து ராஷ்ட்டிரிய ஸவயம் சேவா சங்கம் (ஆர்எஸ்எஸ்) உருவாக்கப்பட்டது. பாரதீய ஜனசங்கம் என்ற அரசியல் அமைப்பு உருவாகி கலாச்சார தளத்தில் மட்டும் இயங்கிக் கொண்டிருப்பதை முடிவுக்கு கொண்டு வந்தது. அதே போல மாணவர்களை அகில இந்திய அளவில் அணி திரட்டுவதற்கு அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் உருவானது. 1955ல் தொழிலாளர்களை அணி திரட்டவென்று பாரதீய மஸ்தூர் சங்கம் உருவாக்கப்பட்டது.
1950கள் மற்றும் 60களில் காங்கிரசின் பன்முகத்தன்மையையும் தாண்டி அதன் பலம் குறையத் தொடங்கியது. 70 முதல் 80 சதவீத இடங்களைப் பெற்ற காங்கிரஸ் மக்களவை தேர்தலில் 40 முதல் 49 சதமான ஓட்டுக்களையே பெற்றது. 1971ல் எம்ஆர்டிபி சட்டம் இயற்றப்பட் டது. (எம்.ஆர்.டி.பி. சட்டம் 1971 என்பது சந்தை யில் ஏகபோக முதலாளிகளின் வர்த்தக நலன்களை பாதுகாப்பதற்காக அவை செய்யும் தவறான முயற்சிகளை கட்டுப்படுத்தும் சட்டம். ஏகபோக தனியார் நிறுவனங்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்து நுகர்வோர் நலன் காக்கும் சட்டம்.) ஏற்றுமதியுடன் கூடிய வளர்ச்சி மாதிரியை இந்திய பெருமுதலாளிகளோ அல்லது மத்திய வர்த்தக நிறுவனங்களோ விரும்பவில்லை. துணி போன்ற உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ததும், தேயிலை, ரப்பர், மற்றும் வாசனைப் பொருட்களை ஏற்றுமதி செய்ததும் செலவின ரீதியாக பங்கம் விளைவிப்பதாக மாறியது. அதிக இறக்குமதி வரிகள் என்பது வர்த்தகர்களை உற்பத்தியாளர்களாக மாற்றியது. அரசாங்கத்தின் நிர்ப்பந்தத்தின் காரணமாக உற்பத்தியாளர்களாக மாறும்போது தேவையான அரசாங்க உதவிகளோ மானியங்களோ வழங்கி உற்பத்தி என்பது ஊக்கப்படுத்தப்படவில்லை. 1951 முதல் 1976 வரையிலும் டாட்டாக்களும் பிர்லாக்களும் போன்ற பெரு வர்த்தக நிறுவனங்கள் மட்டுமே உயர்மட்ட நிலையில் இருந்தன. அவர்களிடம் மட்டுமே மூலதனச் சேர்க்கை என்பதும் இருந்தது. அதே நேரத்தில் ஏற்கனவே நடுத்தர நிலையில் இருந்த வர்த்தக நிறுவனங்கள் விரிவடைந்து பல துறைகளில் கால் பதித்து நுகர்வோருக்கான பொருட்களை உற்பத்தி செய்யத் தொடங்கியிருந்தது. இவர்கள் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினை சார்ந்து வளர்ந்து வந்தனர்.
எம்ஆர்டிபி சட்டத்தின் கீழ் பல நிறுவனங்கள் வரவில்லை. காரணம் அவர்கள் வெளியிட்ட சொத்து மதிப்பு என்பது அந்தச் சட்டத்தின் வரையறைக்குள் வரவில்லை. இந்த இடத்தில் இன்னொன்றும் கவனிக்கப்பட வேண்டியது. புதிய நிறுவனங்களின் வளர்ச்சி என்பது சரியாக இல்லை. லைசன்சிங் முறையில் இருந்த சில தடைகள் புதிய நிறுவனங்களின் முயற்சியை தடை செய்தது. இரண்டாவது அரசின் ஊக்கத் தொகைகளை பெறுவதற்கான வரையீடுகளில் இருந்த குளறுபடிகள், மூன்றாவது தொழில்நுட்பம் மற்றும் நிதி முதலீட்டினை பெறுவதில் இருந்த பிரச்சினை ஆகியவற்றால் புதிய தொழில்துறை நிறுவனங்கள் வளர முடியவில்லை.
முடிவாக, பெல்ட்மேன் மஹாலானோபிஸ் மாதிரியின் கீழ் இந்திய மூலதன ஆட்சி என்பது பின்வருவனவற்றை அடைந்தது.
- 1959 முதல் 1965 வரை பத்தாண்டுகளுக்கு மூலதனச் சேர்க்கையில் இருந்த தடைகளை இந்திய மூலதனம் உடைத்துவிட்டது. இருந்த போதும் நெருக்கடியை சந்தித்தது.
- பெரு முதலாளிகளின் கைகளில் சொத்துக் குவிப்பு என்பது நிகழ்ந்தது.
இந்தியத் திட்டமிடலின் மிக முக்கியமான பண்பாக தன்மையாக இது அமைந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. திட்டமிடல் அதன் வர்க்கத் தன்மையின் காரணமாக விவசாய நெருக்கடியாக மாறியது. வரி விதிப்பில் அது கடைபிடித்த வர்க்கக் குணாம்சம் ஆழமான நெருக்கடியாக 1965-66ல் முடிந்தது. முன்பும் சரி, தற்போதைய இந்தியாவின் தாராளமயமாக்கல் சூழலிலும் சரி அரசின் கொள்கை உருவாக்கத்தில் பிரதானமாக இருந்த, இருக்கிற அம்சங்கள் யாவை? அவைவட்ட முறையில் மாறி மாறி வரும் மூலதன உருவாக்கம், பெருமுதலாளிகளின் கையில் சொத்து குவிப்பு மற்றும் விவசாயத்திலும் வரிவிதிப்பு முறையிலும் நீடித்திருக்கும் வர்க்க நிர்பந்தம் ஆகியவைதான்.
Leave a Reply