மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


தீண்டாமை ஒழிப்புப் போரில் கம்யூனிஸ்டுகள்


உலகின் வேறு எந்தப் பகுதியிலும் காணப்படாத இந்திய உபகண்டத்தின் தனித்தன்மையே இந்த சாதியமைப்பு. இந்திய சமூகத்தில் சாதி உணர்வு மிக ஆழமாக வேரூன்றியுள்ளது. இதன் துவக்கம் ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முந்தையதாகும். இந்தியாவில் வர்க்க சமுதாயம் துவங்கிய போது அது வருண சமுதாயமாகவே அமைந்தது.

இதைத்தான் இந்தியாவின் மிகச் சிறந்த மார்க்சிய சமூக ஆய்வாளர் டி.டி. கோசாம்பி இந்தியாவின் துவக்க கால வர்க்க சமுதாயம் வருண சமுதாயமாகவே இருந்தது எனக் குறிப்பிடுகிறார்.

இதர பல நாடுகளில் இது ஆண்டான் – அடிமைச் சமுதாயமாக இருந்த போது இந்தியாவில் அது ஆரியர்கள் – தாசர்கள் என வருண வடிவம் பெற்றிருந்தது என்கிறார் தோழர் ஈ.எம்.எஸ். பின்னர் இந்த வருண அமைப்பு பார்ப்பனர்கள், சத்திரியர்கள், வைசிகர்கள், சூத்திரர்கள் என்ற நான்கு வருணமாகவும் அதற்கும் பிற்காலத்தில் ஏராளமான உழைப்புப் பிரிவினைகள் ஏற்பட்ட போது வருண அமைப்புக்குள் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டு சாதிக்குள் சாதிகள் உபசாதிகள் என உருவெடுத்து இன்று பல்லாயிரம் சாதிகள் நிலவும் சமுக அமைப்பாக இந்தியச் சமூகம் உள்ளது. எனவே இந்தியாவில் சாதியும், வர்க்கமும் பின்னிப் பிணைந்து உருவானதாகும். இதைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் வர்க்க ஒடுக்குமுறையும், சாதி ஒடுக்குமுறையும் பின்னிப் பிணைந்தது எனக் குறிப்பிடுகிறது. சாதி ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் என்பது வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் பிரிக்க முடியாத பகுதி என்பது மார்க்சிய நிலைபாடு ஆகும்.

தனிக் கவனம் தேவை

சாதி ஒடுக்குமுறையின் கொடூரமான வடிவமே தீண்டாமை மற்றும் வன்கொடுமையாகும். காலம் காலமாக சமூக ரீதியாக கடுமையாக ஒடுக்கப்பட்டு வருபவர்கள் தலித்துகள் மற்றும் பழங்குடியினர். இம்மக்களின் மிகக் கணிசமானவர்கள் உழைப்பாளிகள். எனவே இவர்கள் உழைக்கும் வர்க்கத்தின் பிரிக்கப்பட முடியாத பகுதியினர். இதர உழைப்பாளி மக்கள் பொருளாதார ரீதி யாக ஒடுக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் சாதி ரீதியாகவும் ஒடுக்கப்பட்டு இரட்டை ஒடுக்கு முறைக்கு ஆளாகியுள்ளனர். இவர்களை அணி திரட்டாமல் உழைக்கும்வர்க்கத்தின் ஒற்றுமை சாத்தியமல்ல. இவர்களைத் திரட்ட வேண்டுமெனில் இதர உழைப்பாளி மக்களைத் திரட்டுவதற்கான பொதுவான முயற்சிகள் மட்டும் போதாது. தீண்டாமை மற்றும் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராகவும் குரல் கொடுத்து சிறப்பான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இப்பின்னணியில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலித் மற்றும் பழங்குடி மக்களைத் திரட்ட தனிக் கவனம் தேவை என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

விடுதலைப் போராட்ட காலத்தில்

இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் தீண்டாமை உள்ளிட்ட சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவதில் நீண்ட பாரம்பரியம் கொண்டது. 1928-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவிற்கு விடுதலை என்றால் அது தலித்துகளுக்கும் விடுதலையாக இருக்க வேண்டும் என வலுவாகவும் மிகச்சரியாகவும் குரல் கொடுத்தது. அதாவது இந்திய விடுதலைப் போராட்டம் என்பது சாதிய ஒடுக்குமுறை உள்ளிட்ட சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டமாகவும் இருக்க வேண்டுமென நிலை எடுத்தது.

ஆயினும் 1920-30களில் கம்யூனிஸ்ட் இயக்கம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கடும் அடக்குமுறைகளை எதிர்கொண்டு பெரும் பாலும் தலைமறைவாகச் செயல்பட வேண்டிய காலமாக இருந்ததால் இப்பாதையில் வலுவாகவும் வெளிப்படையாகவும் செயல்படுவதில் பிரச்சனைகள் இருந்தன. அக்காலத்தில் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமையேற்ற காங்கிரஸ் கட்சி ஒரு அரசியல் இயக்கம் என்ற முறையில் இந்திய விடுதலைப் போராட்டத்துடன் தீண்டாமை ஒழிப்பு என்பதை இணைத்து வலுவாக கையில் எடுக்கவில்லை. காந்தி தீண்டாமை ஒழிப்பில் தனிக் கவனம் செலுத்தினாலும் அது அவரது தனிப்பட்ட முயற்சியாக இருந்தது. காந்தி மற்றும் சில தலைவர்களைத் தவிர காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் விடுதலைப் போராட்டத்துடன் சமூகப் பிரச்சனைகளை இணைக்கக் கூடாது என்ற பிற்போக்கான கருத்தினைக் கொண்டிருந்தனர். இத்தகைய தலைவர்களோடு ஒப்பிடும் போது காந்தி இப்பிரச்சனையில் மேம்பட்ட கருத்தைக் கொண்டிருந்தார் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் காந்தியின் அணுகுமுறையும் கூட இப்பிரச்சனை யில் வரையறைக்குட்பட்டதாகவே இருந்தது. தீண்டாமையை இந்து மதத்தில் உள்ள ஒரு அகற்றப்பட வேண்டிய பிரச்சனையாக மட்டுமே காந்தி பார்த்தார். மேலும் தீண்டாமைக்கு மூல காரணமான சாதியமைப்பு அல்லது வருணா சிரமத்தை நியாயமானது என்ற முரண்பட்ட நிலையினைக் கொண்டிருந்தார். காந்தியின் இந்த அணுகுமுறைக்கு எதிராக டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்களால் கணிசமான தலித் மக்களைத் திரட்ட முடிந்தது.

கடும் அடக்குமுறைகளை எதிர்கொண்ட போதிலும் கம்யூனிஸ்ட் இயக்கம் இந்திய விடுதலைப் போராட்டத்துடன் வர்க்க ஒடுக்குமுறை மற்றும் சமுக ஒடுக்குமுறை பிரச்சனைகளை வலுவாக இணைத்தது. விடுதலைப் போராட்டக் காலத்தில் தீவிரமான கவனம் செலுத்திக் கொண்டே நிலப்பிரபுத்துவம் மற்றும் சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் மக்களை அணிதிரட்டியது. தெலுங்கானா போராட்டம், புன்னப்பரா, வயலாறு மற்றும் தேபாகா விவசாயிகள் போராட்டம், வோர்லி ஆதிவாசி மக்கள் போராட்டம் போன்றவை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைமையிலான ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலப்பிரப்புத்துவ எதிர்ப்பு போராட்டங்களாக மட்டுமல்லாமல் சாதிய ஒடுக்குமுறை களுக்கு எதிரான போராட்டங்களாகவும் திகழ்ந் தன என்பது வரலாறு.

விடுதலைக்குப் பிறகும்

ஆயினும் விடுதலைப் போராட்டத்தின் தலைமை, பெருமுதலாளிகளின் கரங்களிலும் அதன் அரசியல் தலைமையான காங்கிரஸ் கட்சியின் கரங்களிலும் இருந்ததால் தேசம் விடுதலையடைந்த பிறகு நிலப்பிரபுத்துவத்துடனும் சாதியமைப்புடனும் சமரசம் செய்து கொண்டனர் என்பதே அனுபவம். கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பொறுத்தவரை இந்தியா விடுதலையடைந்த பிறகும் அதன் மீதான அடக்குமுறை தொடர்ந்தது. எனினும் தங்களது பாதையில் உறுதியாக நடைபோட்டவர்களாக கம்யூனிஸ்டுகள் விளங்கினர்.

மேற்குவங்கம், கேரளா, திரிபுரா போன்ற மாநிலங்களில் விடுதலைக்கு முன்பு மட்டுமல்ல பின்பும் இடதுசாரி இயக்கம் வலுவாக இருந்து வருகிறது. இம்மாநிலங்களில் வர்க்கப் போராட்டங்களுக்கு மத்தியில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களையும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் முன்னெடுத்துச் சென்றனர்.

கேரளாவில் ஏ.கே.ஜி., இ.எம்.எஸ் போன்ற தலைவர்கள் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டங்களுக்குத் தலைமை ஏற்றதைப் போலவே ஆலயப்பிரவேசம் உள்ளிட்ட தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களுக்கும் தலைமை ஏற்று நடத்தினர். மேற்கு வங்கத்தில் ராஜாராம் மோகன் ராய் போன்றவர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட சமூகச் சீர்திருத்த இயக்கத்தை வர்க்கப் போராட்டங்களுக்கு மத்தியில் முன்னெடுத்துச் செல்வதில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் உரிய பங்களிப்பைச் செலுத்தினர். திரிபுராவின் அனுபவமும் இது தான்.

ஆந்திரா, தமிழ்நாடு, மராட்டியம் போன்ற மாநிலங்களிலும் இத்தகைய வர்க்க மற்றும் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஏககாலத்தில் தலைமை ஏற்றனர். தமிழ்நாட்டின் இன்றைய நாகை, திருவாரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய அன்றைய நாகை மாவட்டத்தில் கம்யூனிஸ்டுகள் தலைமை ஏற்று நடத்திய நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு மற்றும் சாதி ஒடுக்குமுறை எதிர்ப்பு போராட்டங்கள் பெருமைக்குரியவையாகும். சாணிப்பால் குடிக்க வைப்பது, சவுக்கால் அடிப்பது போன்ற கொடூரமான சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்து பி. சீனிவாசராவ் தலைமையில் செங்கொடி இயக்கம் நடத்திய போராட்டங்கள் வீர வரலாறு ஆகும்.

விவசாயத் தொழிலாளர்களின் கூலி உயர்வு மற்றும் தலித் மக்கள் மீதான சமூக ஒடுக்குமுறைகளை எதிர்த்து நடத்திய போராட்டத்தால் நிலப்பிரபுக்கள் எவ்வளவு ஆத்திரம் அடைந்தார்கள் என்பதற்கு கீழவெண்மணி படுகொலை ஒரு சாட்சியமாகும். பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் உட்பட 44 பேரை நிலப்பிரபுத்துவக் கும்பல் உயிரோடு கொளுத்திய அந்த நெருப்பு இன்னும் நம் நெஞ்சங்களில் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.

சமீப காலங்களில்

ஆக வர்க்க ஒடுக்குமுறை மற்றும் சாதி ஒடுக்கு முறைக்கு எதிராக சமகாலத்தில் போராடிய சரித்திரம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு மட்டுமே உண்டு. இடைப்பட்ட காலத்தில் இதில் சில தொய்வுகள் ஏற்பட்ட போதிலும் அப்பாதை சமீப காலங்களில் உறுதியாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. 1995ம் ஆண்டு நாலு மூலைக் கிணறில் தலித் மக்கள் மீதான துப்பாக்கிச்சூடு, 1996ல் கொடியங்குளம் தலித் மக்கள் மீதான காவல்துறையினரின் கொடூரத் தாக்குதல் போன்ற அடக்குமுறைகளை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல வெகுஜன அமைப்புகள் வலுவான கண்டன இயக்கங்களை நடத்தின. கொடியங்குளம் தாக்கு தலில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வைத்த தில் சிபிஐ(எம்) பங்கு முக்கியமானது. நாலு மூலைக் கிணறு பிரச்சனையில் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உச்சநீதிமன்றம் வரை சென்று பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ரூ.23 லட்சம் நஷ்டஈடு பெற்றுத் தந்ததோடு தவறிழைத்த பல காவல்துறை அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் தண்டனை பெற்றுத் தந்தது.

1995-96ம் ஆண்டுகளின் போது தென்மாவட்டங்களில் பரவலாக சாதிய மோதல்கள் நிகழ்ந்தன. இதில் பல உயிரிழப்புகள், சேதாரம் ஏற்பட்ட போதிலும் அதில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் தலித்துகளே. உயிர்சேதம் மட்டுமல்ல பல்லாயிரம் தலித் மக்களின் குடிசைகள் எரிந்தன; உடைமைகள் நாசமாயின. அக்காலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், வெகுஜன அமைப்புகளும் விரைந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவின. மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கான போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய காட்டுமிராண்டித்தனமான தடியடி தாக்குதலில் அன்றைய சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர் தோழர் வி. பழனி படுகாயமடைந்து ஆபத்தான கட்டம் வரை சென்று உயிர் மீண்டார்.

பாப்பாபட்டி, கீரிப்பட்டி

பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் ஆகிய நான்கு ஊராட்சிகளில் 10 ஆண்டு காலத்திற்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாத அளவு சாதிய சக்திகள் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட போது இக்கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று தெருத் தெருவாகப் பிரச்சாரம் செய்து மக்கள் மத்தியில் இணக்கம் ஏற்பட முயன்றதோடு அன்றைய சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் தோழர் என். வரதராஜன் தலைமையில் உண்ணா விரதமும் அறிவிக்கப்பட்டது. சட்டமன்றத்திலும் இப்பிரச்சனை வலுவாக எடுத்துச் செல்லப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட வேறு பல தலித் அமைப்புகளும் இப்பிரச்சனையில் உறுதியாகப் போராடின. இதனையொட்டித் தான் அன்றைய தமிழக அரசு இக்கிராமங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தியது. மேலும் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட காரணத்தால் மேலவளவு முருகேசன் படுகொலை செய்யப்பட்ட போது அதற்கு எதிராக தமிழகம் தழுவிய கண்டன இயக்கத்தை நடத்தியது சிபிஐ (எம்).

வாச்சாத்தி கொடுமைகளுக்கு எதிராக

வாச்சாத்தி கிராமத்தில் வனக்காவலர்கள் மற்றும் காவல்துறையினர் பழங்குடி மக்கள் மீது நடத்திய கொடூரமான தாக்குதலையும், பழங்குடி பெண்கள் பலரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதையும் கண்டித்து மலைவாழ் மக்கள் சங்கமும், விவசாயிகள் சங்கமும் வலுவான கண்டன இயக்கங்களை நடத்தின. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய மாநிலச் செயலாளர் தோழர் ஏ. நல்லசிவன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இத்தகைய போராட்டங்கள் மற்றும் வழக்குகள் காரணமாக தவறிழைத்த ஏராளமான வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் கடுமையான தண்டனையைப் பெற்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓரளவு நஷ்ட ஈடு வழங்கப்பட்டது. மேலும் நஷ்ட ஈடு பெற முயற்சிகள் நடைபெறுகின்றன. வாச்சாத்தி பிரச்சனையில் செங்கொடி இயக்க தலையீடு தமிழகத்தில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதர பிரச்சனைகள்

இக்காலங்களில் இரட்டைக்குவளை முறை எதிர்ப்பு, பொதுப்பாதையில் நடக்க வைப்பது, சைக்கிள் ஓட்ட வைப்பது, காலில் செருப்பு போட்டு நடக்க வைப்பது, ஆலய நுழைவு, மயான உரிமை மீட்பு என ஏராளமான தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களுக்கு

தமிழகத்தின் பல பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்ல மாதர் சங்கம், விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், வாலிபர் சங்கம் போன்ற வெகுஜன அமைப்புகளும் தலைமை ஏற்றன.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உதயம்

இவ்வாறு நடைபெற்ற பல தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் இயக்கங்களின் அனுபவ அடிப்படையிலும் பின்னணியிலும் தான் 2007ம் ஆண்டு மே 16ம் நாள் தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி உருவாக்கப்பட்டது. பல்வேறு வர்க்க வெகுஜன அமைப்புகளையும் தலித் அமைப்புகளையும் இணைத்து உருவாக் கப்பட்ட பரந்த மேடையாகும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்புமுன்னணி. இந்த முன்னணி உருவாக்கப்பட்டதானது தமிழகத்தின் வர்க்க மற்றும் சமூக நீதி வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. சாதி ஒடுக்குமுறையை தொழிலாளி வர்க்க கண்ணோட்டத்துடன் அணுகி அதற்கு எதிரான பல போராட்டங்கள் இக்காலத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்டதோடு அவற்றில் பலவும் வெற்றியடையவும் செய்தன.

உத்தப்புரம்

உத்தப்புரம் போராட்டம் இதன் முதல் மற்றும் முக்கியமான போராட்டமாகும். உத்தப்புரத்தின் பல பொதுச் சாலைகளில் தலித்துகள் நுழைய முடியாதபடி ஏறத்தாழ 1 கிலோ மீட்டர் நீளத்திற்கு தீண்டாமைச் சுவர் கட்டப்பட்டிருந்தது. 1989ல் கட்டப்பட்ட இந்தச் சுவரைத் தகர்க்க என்ற முயற்சியும் எடுக்கப்படாத நிலையில் இப்பிரச்சனையை தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையில் எடுத்தது. தமிழகத்தின் ஊட கங்களில் இந்தச் சுவர் பரவலாக வெளிவந்தது என்றால் அதற்கு காரணம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியாகும். இந்தச் சுவரை அப்புறப்படுத்தக் கோரி பலகட்ட இயக்கங்களை தீண் டாமை ஒழிப்பு முன்னணி நடத்தியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு இதில் மகத்தானது. இச்சுவரை பார்வையிட சிபிஐ (எம்), பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ் காரத் வருகிறார் என அறிவிக்கப்பட்டது. அதுவரை செயல்படாத தமிழக அரசு வேகவேகமாகச் செயல்படத் துவங்கியது. அவர் வருவதற்கு முந்தைய நாள் சுவரின் ஒரு பகுதியை அபப்புறப்படுத்தி தலித் மக்கள் அந்த ஊரின் பொதுப்பாதையில் நடந்து செல்லவும், பயன்படுத்தவும் வழிவகுத்தது. அதன் பிறகும் சாதிய சக்திகள் பொதுப் பாதையை பயன்படுத்துவதில் பல இடையூறுகள் செய்தபோதிலும் சிபிஐ(எம்) தீண்டாமை ஒழிப்பு முன்னணி முயற்சிகளால் அவை முறியடிக்கப்பட்டன.

உத்தப்புரத்தில் முத்தாலம்மன் கோவில் நுழைவுப் போராட்டம் பல அடக்குமுறைகளை எதிர்கொண்டு வெற்றிகரமாக நடந்தேறியது. இப்பிரச்சனையில் தோழர் டி.கே.ரெங்கராஜன் எம்.பி., உள்பட பல நூற்றுக்கணக்கானவர்கள் காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தடியடிக்கும், கைதுக்கும் ஆளாயினர் என்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். உத்தப்புரம் மக்களின் நீண்ட காலக் கணவான நிழற்குடை அமைக்கும் பணியும், தடைகளைத் தாண்டி நிறைவேற்றப்பட்டது.

இன்று உத்தப்புரம் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே தீண்டாமை ஒழிப்பின் அடையாளமாய்த் திகழ்கிறது என்பதில் ஐயமில்லை.

இக்காலத்தில் உத்தப்புரம் தலித் மக்கள் காவல்துறையின் அட்டூழியங் களுக்கும், தாக்குதலுக்கும் இரையாகி இவையும் மாதர் சங்கம் மூலம் நீதிமன்ற வழக்குகளாகத் தொடுக்கப்பட்டு ரூ. 15 லட்சம் வரை நிவாரணம் பெற்றுத்தரப்பட்டது.

அருந்ததியர் உள் ஒதுக்கீடு

அடுத்து அருந்ததியர் உள்ஒதுக்கீடு பெற்ற தானது மிகப் பெரிய சாதனையாகும். தலித்துகளிலும் தலித்துகளாக கொடூரமான சாதிய ஒடுக்குமுறைக்கும் இழிதொழிலுக்கும் ஆளாக்கப்பட்டுள்ள அருந்ததியர் மக்களுக்கு உள்ஒதுக்கீடு என்பது கால் நூற்றாண்டுக் கனவாகும். பல அருந்ததியர் அமைப்புகள் 25 ஆண்டுகள் இதற்காக வீரியத்துடன் போராடியுள்ளன.

ஆயினும் தமிழக அரசு இதனை கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்தது, இப்பின்னணியில் தான் அருந்ததியர் மக்களை அணிதிரட்டி கூடவே அருந்ததியர் அமைப்புகளையும் அரவணைத்துக் கொண்டு களத்தில் இறங்கின மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும். 2007-இல் 20 ஆயிரம் பேர் பங்கேற்ற அருந்ததியர் பேரணியை நடத்தின. மாவட்டந் தழுவிய மாநாடுகள், தர்ணா, மறியல் போராட்டங்களும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டன. அருந்ததியர் மக்களிடையே உருவாக்கப்பட்ட எழுச்சி கண்ட பிறகே தமிழக அரசு தீர்வு காண முன்வந்தது.

இதன் விளைவே அருந்ததிய மக்கள் தற்போது அனுபவித்து வரும் 3 சதவிகித உள்ஒதுக்கீட்டு உரிமை, இந்த உரிமைக்கு தடை விதிக்க சில சக்திகள் தற்போது நீதிமன்ற வழக்கு கள் தொடுத்துள்ள நிலையில் அங்கும் அருந் ததியர் மக்களை பாதுகாக்க எதிர் வழக்குகள் போட்டுள்ளன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும்.

கள ஆய்வுகள் – போராட்டங்கள்

தமிழகம் முழுவதும் 1845 கிராமங்களில் கள ஆய்வுகள் நடத்தி 85 வகையான தீண்டாமை வடிவங்களையும், 28 வகையான வன்கொடுமைகளையும் அடையாளம் கண்டு அம்பலப்படுத்தியது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி. இன்று இந்தியா முழுவதும் சமூக ஆய்வாளர்களால் இந்த ஆய்வு விபரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இவை பெறும் கள ஆய்வுகள் மட்டுமல்ல, களப் போராட்டங்களுக்கான கருவியுமாகும். தீண்டாமை நிலவும் பல கிராமங்களைத் தேர்வு செய்து தலித் மக்களை அணிதிரட்டி கூடவே இதர ஜனநாயக சக்திகளையும் அணிதிரட்டி பல தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களை தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தியுள்ளது. தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட தலித் மக்கள் நுழைய முடியாத ஆலயங்களில் வெற்றிகரமான ஆலய நுழைவுப் போராட்டங்கள் நடைபெற் றுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30ம் நாள் தோழர் பி. சீனிவாசராவ் நினைவுதினத்தன்று பல்வேறு கிராமங்களில் தீண்டாமை ஒழிப்பு களப்போராட்டங்களை நடத்தி வருகிறது தீண்டாமை ஒழிப்பு முன்னணி. உத்தப்புரத்தில் மட்டுமல்ல காங்கியனூர், குடியாத்தம் பகுதிகளிலும் தலித் மக்களின் உரிமைகளுக்காகப் போராடி காவல்துறையின் அடக்குமுறையை எதிர்கொண்டு சிறைவாசமும் அனுபவித்தனர் சிபிஎம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் தலைவர் களும் ஊழியர்களும்.

சாதி அரசியலுக்கு எதிராக

நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களின் படுதோல்வியைச் சந்தித்த பாமக தனது வாக்கு வங்கியை பலப்படுத்தும் நோக்கத்தோடு சாதி அரசியலை நடத்தி வருகிறது. பாமகவின் சாதி அரசியல் தலித்மக்களுக்கு எதிராக வன்னியர் பகுதி மக்களையும் இதர சாதி மக்களையும் அணிதிரட்டுவதுதான். வன்னியர்கள் உள்பட இதர பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட மக்களின் கணிசமானவர்கள் உழைப்பாளி களே. தாராளமயக் கொள்கைகள் அமலாகி வரும் சூழலில் வேறு எந்தக் காலத்தையும் விட தலித் மக்களும், பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர பகுதி உழைப்பாளி மக்களும் ஒன்றுபட்டுப் போராட வேண்டிய காலம் இது. ஆனால் சொந்த ஆதாயம் கருதி தலித் மக்களுக்கு எதி ராகவும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராகவும் இதர சாதி அமைப்பின் தலைவர் களை அணி திரட்டி மாவட்டம் தோறும் கூட்டங்களை நடத்தி வருகிறார் ராமதாஸ். மாமல்லபுரத்தில் 2012லும், 2013லும் சித்திரைத் திருவிழா என்ற பெயரில் மாநாடு நடத்தி தலித் மக்களுக்கு எதிரான வன்மப் பிரச்சாரத்தை நடத்தியுள்ளது பாமக. இதன் விளைவாக 2012ல் தர்மபுரி மாவட்டத்தில் 3 கிராமங்களில் தலித் மக்களின் பல நூற்றுக்கணக்கான வீடுகள் சூறை யாடப்பட்டு தீக்கிரையாகின, பல கோடி ரூபாய் பெறுமான உடைமைகளை தலித் மக்கள் இழந் தனர். 2013ல் மரக்காணம் பகுதியில் தலித் மக்கள் வீடுகள் உடைமைகள் மீது கொடூரமானத் தாக்குதல்கள் நடந்தன. இத்தகைய தாக்குதல் நடந்த உடன் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஓடோ டிச் சென்று ஆறுதல் அளித்து துணை நின்ற இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும்.  தருமபுரி தாக்குதலுக்கு எதிராக மாநிலம் தழுவிய கண்டன இயக்கம் நடத்தப்பட்டது. தருமபுரியில் பாதிக் கப்பட்ட தலித் மக்களுக்கு ரூ. 13 லட்சம் அளவி லான பொருட்களை வழங்கி உதவின பல்வேறு இடதுசாரி வெகுஜன அமைப்புகள். தருமபுரி தாக்குதல்களுக்கு சிபிஐ விசாரணை நடத்தவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் உரிய நஷ்ட ஈடு வழங்கவும் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது தீண்டாமை ஒழிப்பு முன்னணி.

ஜனநாயகப் போராட்டம்

தலித் மக்கள் உரிமைகளைப் பாதுகாக்கவும் அவர்கள் பாதிக்கப்பட்டபோதெல்லாம் துணை நிற்கவும் தலித் அல்லாத மக்களையும் அணி திரட்டி போராடும் இயக்கமாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி திகழ்ந்து வருகிறது. உத்தப்புரம், அருந்ததியர், ஆலய நுழைவுப் போராட்டங்கள், வேறு பல தீண்டாமை ஒழிப்பு போராட்டங்கள், தருமபுரி சம்வங்கள் என ஒவ்வொரு பிரச்சனையிலும் தலித் மக்களை மட்டுமல்ல அவர்களுக்கு ஆதரவாக தலித் அல்லாத மக்களையும் அணி திரட்டி இப்போராட்டங்களை ஜனநாயகப் போராட்டங்களாக நடத்தி பல வெற்றிகளைப் பெற்ற இயக்கம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியாகும்.

இத்தகைய போராட் டங்கள் மட்டுமல்ல பஞ்சமி நில மீட்பு, தலித் பழங்குடி மக்கள் உபதிட்ட நிதியை மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்கி செலவிடக் கோருவது, குடிமனைப்பட்டா, சென்னை போன்ற மாநகரங் களில் நீண்டகாலமாக குடியிருக்கும் தலித் மக்கள் அப்புறப்படுத்துவதற்கு எதிராகத் தலையிடுவது என எண்ணற்ற இயக்கங்களை நடத்தியுள்ளது தீண்டாமை ஒழிப்பு முன்னணி.

சாதி ஒடுக்கு முறைகளுக்கு எதிராக மட்டுமல்ல அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காகவும் இயக்கங்களை நடத்தி வரும் இயக்கமாக சிபிஐ (எம்), தீண்டாமை ஒழிப்பு முன்னணி திகழ்ந்து வருகின்றன.

முனனெடுத்துச் செல்வோம்

வேறு எந்த அரசியல் இயக்கத்திலும் காண முடியாதபடி தனது கட்சித் திட்டத்திலேயே தலித் பழங்குடி மக்களின் உரிமைக்கான போராட் டம் உள்ளிட்ட சமூகச் சீர்திருத்த இயக்கத்தை மக்கள் ஜனநாயகப் புரட்சியின் முக்கியமான கடமையாக வரையறுத்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. விடுதலைப் போராட்டத்தில் சமூகப் பிரச்சனைகளை காங்கிரஸ் கட்சி பொருத்தமான முறையில் இணைக்கத் தவறியதைப் போல் அல்லாமல் மக்கள் ஜனநாயகப் புரட்சியில் பிரிக்க முடியாத கடமைகளாக சமூகப் பிரச்சனைகளையும் சமூகச் சீர்திருத்த இயக்கத்தையும் இணைத்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. கம்யூனிஸ்ட் பாரம்பரியத்தை நிலைநாட்டும் வகையில் தீண்டாமை ஒழிப்பு போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்காலத்திலும் உறுதிபட முன் னெடுத்துச் செல்லும்.

தீக்கதிர் பொன்விழா மலர் கட்டுரை



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: