கடந்த பல மாதங்களாக அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய நாணயமான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. அண்மையில் இந்த வீழ்ச்சி, வேகம் அடைந்துள்ளது. ஜனவரி 2012 இல் ஒரு அமெரிக்க டாலருக்கு 44 ரூபாய் என்று இருந்த நிலை மாறி 2013 செப்டம்பர் துவக்கத்தில் 68 என்று அதிகரித்தது. அதாவது 50 சதவிகிதத்துக்கும் அதிகமான சரிவு. அதிலும் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி 15 நாட்களில் மட்டும் 25% சரிவு. இது ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. மத்திய அரசு தினம் ஒரு குழப்பமான அறிக்கைவிட்ட வண்ணம் உள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள புதிய ரிசர்வ் வங்கி கவர்னர் பொறுப்பு ஏற்றவுடன், நம்பிக்கை அடிப்படையில் ரூபாய் மதிப்பு சிறிது அளவு மீட்சி அடைந்துள்ளது. மீட்சி தொடருமா? என்ன நடக்கிறது? ஏன் நடக்கிறது? செய்ய வேண்டியது என்ன? நாம் காணும் நிகழ்வுகள் மக்களை எப்படி பாதிக்கும்? ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ள தற்கும் இந்திய பொருளாதார கட்டமைப்பு மற்றும் அரசின் கொள்கைகள் ஆகியவற்றிற்கும் என்ன தொடர்பு? பிரச்சினைக்குக் காரணம் பன்னாட்டு நிகழ்வுகள்தானா? இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன.
இக்கேள்விகளுக்குள் போகும் முன், ஒரு விசயத்தை தெளிவுபடுத்துவோம். அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதற்கும் கடந்த இருபது ஆண்டு களுக்கும் மேலாக அரசுகள் பின்பற்றி வரும் தாராளமய, தனியார்மய, உலகமயக் கொள்கைகளுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. சில அண்மைக்கால பன்னாட்டு நிகழ்வுகள் இந்த வீழ்ச்சியை வேகப்படுத்தியுள்ளன என்றாலும், இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கும் தாராளமய கொள்கைகளுக்கும் மிக நெருக்கமான தொடர் புள்ளது என்பது அழுத்தமாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.
திவால் கொள்கைகள்
1991 இல் தாராளமயக் கொள்கைகள் சிறுபான்மை காங்கிரஸ் அரசால் தீவிரமாக அமல் செய்யப்பட்ட பொழுது அன்று சந்தித்துக் கொண்டிருந்த அன்னியச் செலாவணி பற்றாக் குறையையும் அரசின் வரவு செலவு பற்றாக்குறையையும் சரி செய்ய தாராளமய, தனியார்மய, உலகமயக் கொள்கைகளே வழி என்றார்கள் ஆட்சியாளர்கள். ஆனால், இக்கொள்கைகள் 22 ஆண்டுகள் தீவிரமாக அமல் செய்யப்பட்ட பின்பு இன்று அதே இரண்டு பிரச்சினைகள் மிகவும் கடுமையாகிவிட்டன என்று ஆளும் அரசின் கனவான்கள் தினம் கூறுவதை நாம் காண்கிறோம். இக்கொள்கைகள் திவாலாகிவிட்டன என்பதற்கான இத்தகைய ஒப்புதல் வாக்கு மூலத்தைக் கொடுத்துக் கொண்டே, இதே கொள்கைகளை மேலும் தீவிரமாக கடைப்பிடிப்பதே பிரச்சினைக்கு தீர்வு என்றும் மத்திய அரசு கூறுகிறது.
நடப்பு நெருக்கடி
2012-13 நிதி ஆண்டில் நமது சரக்கு (பொருள்) ஏற்றுமதி மதிப்பை விட இறக்குமதி மதிப்பு மிகவும் அதிகமாக இருந்தது. கடந்த 22 ஆண்டுகளில் பெரும்பாலான ஆண்டுகளில் சரக்கு வர்த்தக கணக்கில் பற்றாக்குறைதான் ஏற்பட்டு உள்ளது. இது பாரதிய ஜனதா ஆதரவாளர்கள் கூற்றுக்கு மாறாக, அவர்கள் ஆட்சியில் இருந்த காலத்தையும் உள்ளடக்கியது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். (1998 முதலான விவரங்கள் அட்டவணை 1 இல் தரப்பட்டுள்ளன.) ஆனால், 2012-13 இல் இந்த இடைவெளி மிகவும் அதிகமாக, நமது தேச உற்பத்தி மதிப்பில் – ஜி.டி.பி.யில் – 10.8 சதவிகிதமாகி விட்டது. வெளிநாடுகளில் இருந்து நமது உழைப் பாளி மக்கள் தமது குடும்பங்களுக்கு அனுப்பும் பணத்தினாலும் மென்பொருள் உள்ளிட்ட சேவைத்துறை ஏற்றுமதி மூலமும் இந்த இடைவெளி ஓரளவு குறைக்கப்பட்டு தேச உற்பத்தியில் 4.8 சதவிகிதம் என்ற அளவில் அன்னிய செலாவணி நடப்பு கணக்கு பற்றாக்குறை 2012-13 ஆண்டில் உள்ளது. இதை ஈடுகட்ட வெளிநாட்டு மூலதனம் இந்தியாவிற்கு வருவதுதான் ஒரே வழி என்று கருதும் அரசு, அன்னிய நிறுவன முதலீட்டாளர்களுக்கும் பொதுவாக அன்னிய மூலதனத்திற்கும் சலுகை மேல் சலுகை வழங்கி வருகிறது. அண்மையில் மத்திய அரசு பாதுகாப்புத்துறை உள்ளிட்டு 12 துறைகளில் அந்நிய மூலதனப் பங்கு வரம்பை உயர்த்தியுள்ளது. சிறுவணிகத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை உயர்த்தியது மட்டுமின்றி அதன் மீது போடப்பட்டிருந்த சில நிபந்தனைகளையும் மத்திய அரசு விலக்கிக் கொண்டுள்ளது. வங்கி, இன்சூரன்ஸ், பென்ஷன் துறைகளிலும் தனியார்மயம், அந்நிய மூலதனங்களுக்கு அதிகப்பங்கு போன்றவற்றை உறுதி செய்ய சட்டங்கள் இயற்றத் துடிக்கிறது. பா.ஜ.க. உதவியுடன், இம்முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது.
சரிந்துவரும் ரூபாய் மதிப்பு
ஆனால் நிலைமை சரியாகவில்லை. தொடர்ந்து அன்னிய மூலதனம் இங்கு வர தயங்குகிறது. ஏற்கெனவே உள்ள மூலதனமும் வெளியேறும் நிகழ்வுகள் வலுப்பெற்றுள்ளன. இதற்கிடையில் அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி தலைவர் பெர்னாங்கே அமெரிக்கா பணப் புழக்கத்தை விரைவில் கட்டுப்படுத்தும் என்று கூறியுள்ளது அன்னிய நிதி முதலீட்டாளர்களை அமெரிக்கா நோக்கி இழுக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. (இது ஏனெனில், அமெரிக்காவில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவது அங்கே வட்டி விகிதங்களை உயரச் செய்யும். ஆகவே உலக செல்வந்தர்கள் தங்கள் நிதிகளை அங்கே கொண்டு செல்வார்கள் என்ற அடிப்படையிலாகும்.) எனவே இந்தியா உள்ளிட்ட பல வளரும் நாடுகளில் இருந்து அன்னிய நிதி மூலதனம் வெளியேறும் என்ற நிலை உருவாகியுள்ளது. ஏற்கெனவே இந்தியாவின் நடப்பு பற்றாக்குறை அதிகரித்து வருவது இந்திய ரூபாய் மதிப்பு சரியும் என்ற அனுமானிப்பை நிதி முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ரூபாய் மதிப்பு சரிந்தால் இந்தியாவிற்குள் தாங்கள் கொண்டுவந்த பணத்தை மீண்டும் அந்நியச் செலாவணியாக மாற்றும் பொழுது இழப்பு ஏற்படும் என்று அந்நிய நிதி மூலதனம் அஞ்சுகிறது. அதனால் அன்னிய நிதி மூலதனம் இந்தியாவை விட்டு வெளியேறி வருகிறது, மீண்டும் வரத் தயங்குகிறது. பெர்னாங்கே அறிவிப்புக்குப் பிறகு மூலதனம் வெளியேறுவது கூடியுள்ளது.
இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. 2013 ஏப்ரல் முதல் ஜூன் முடியும் வரையிலான மூன்று மாத காலத்தில் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 4.4 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த பத்து ஆண்டுகளில் மிகக் குறைவானது. மேலை நாடுகளில் தொடரும் பொருளாதார மந்த நிலையாலும் வேறு காரணங்களாலும் நமது சரக்கு ஏற்றுமதியும் சரிந்துள்ளது. மறுபுறம் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் தாராளமயக் கொள்கைகளால் இறக்குமதி அவ்வாறு சரியவில்லை. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி இறக்குமதி சுமையை அதிகப்படுத்தியுள்ளது. உதாரணத்திற்கு, ஒரு டாலர் 45 ரூபாய் என்ற நிலையில் இருந்து 70 ரூபாய் என்று உயர்ந்தால், இறக்குமதி செலவு கணிசமாகக் கூடும் அல்லவா? அன்னிய மூலதனம் வெளியேறுவதால் அன்னிய செலாவணி பற்றாக்குறை மேலும்கூடும் என்பதால் ரூபாய் தொடர்ந்து சரியும் என்ற அச்சமும் உள்ளது.
மேலும், இந்திய அரசின் வரவு-செலவு பற்றாக்குறையும் கூடியுள்ளது. இதற்குப் பிரதான காரணம் உற்பத்தி வளர்ச்சி விகிதம் சரிந்து வருவதும் இந்திய மற்றும் பன்னாட்டுப் பெரு முதலாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகபட்சமான வரிச்சலுகைகள் தான். இதுவும் அந்நிய மூலதனங்கள் விரும்பாத ஒன்று. இவ்வாறு அரசு நிதிப்பற்றாக்குறை கூடினால், பணவீக்கம் கூடும் என்ற கருத்து அயல்நாட்டு நிதி மூலதனத்திற்கு உண்டு. அரசு பற்றாக்குறையை ஏழை மக்களுக்கான திட்டங்களை வெட்டிச் சுருக்கி குறைக்க வேண்டும் என்பது அந்நிய, இந்தியப் பெருமுத லாளிகளின் விருப்பம். அடுத்த ஆண்டு தேர்தல் வர இருப்பதால், ஆளும் கூட்டணி இது தனக்கு சிரமங்களை ஏற்படுத்தும் என்று கருதுகிறது. எனவேதான் பெருமுதலாளிகளின் முணு முணுப்புகளுக்கு இடையே ஒரு நீர்த்துப்போன உணவுப் பாதுகாப்பு மசோதாவை அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது. இதனால் ஏற்பட உள்ள ஆண்டுக்கு1.25 லட்சம் கோடி ரூபாய் செலவால் அரசின் வரவு செலவு நிலைமை மோசமடையும் என்றும் அதனால் அந்நிய மூலதனம் இந்தியாவை விட்டு மேலும் வெளியேறும் என்பதும் பெருமுதலாளிகளின் ஓலம். இதையே, அவர்கள் பிடியில் உள்ள ஊடகங்கள் எஜமான விசுவாசத்துடன் பிரதி பலிக்கின்றன. பாரதீய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். அறிவுஜீவிகளும் இதையே கூறுகின்றனர். (சில ஆர்.எஸ்.எஸ். அறிவு ஜீவிகள், பாஜக ஆட்சி நடத்திய 1998-2004 காலம் பொற்காலம் என்பதுபோல் எழுதுகின்றனர். உண்மையில் 1998 முதல் 2004 வரையிலான காலத்தில் பொருளாதார வளர்ச்சி மிக மந்தமாக இருந்தது. இதனால் இறக்குமதி வளர்ச்சி சற்று மட்டுப்பட்டு இருந்தது. ஆனால் இறக்குமதியை தாராளமயமாக்குவது, அந்நிய மூலதனத்திற்கு பட்டுக்கம்பளம் விரிப்பது, பொதுத்துறையை அழிப்பது, அடிமாட்டு விலையில் அதன் பங்குகளை தனியாருக்கு விற்பது ஆகிய திருப்பணிகளை பாஜக தலைமையிலான தேசீய ஜனநாயக கூட்டணியும் முந்தைய நரசிம்மராவ் ஆட்சி, பின் வந்த யு.பி.ஏ. ஆட்சி ஆகியவற்றைப் போலவே மிகுந்த ஆர்வத்துடனும் விதேசி பக்தியுடனும் அமலாக்கியது என்பது பதிவு செய்யப்பட வேண்டும்)
கடும் விளைவுகள்
நிகழ்ந்துவரும் பொருளாதார வளர்ச்சிப் போக்குகள் மக்களை கடுமையாக பாதிக்கின்றன. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி இறக்குமதியாகும் பொருட்களின் விலைகளை ரூபாய்கணக்கில் கடுமையாக உயர்த்துகிறது. பெட்ரோலியம் கச்சா எண்ணெய் விலை உயரும்பொழுது எல்லா விலைகளும் ஏறுகின்றன. தாராளமயக் கொள்கைகளின் பகுதியாக மைய அரசு மானியங்களை குறைத்து வருவதால் விலைவாசி உயர்வு மேலும் கடுமையாகிறது. இதுவே ரசாயன உரம், டீசல், பெட்ரோல் உள்ளிட்ட வேறுபல பொருட்களுக்கும் பொருந்தும். அன்னியச் செலாவணி பிரச்சினையை எதிர்கொள்ள எப்படியாவது அன்னிய நிதி மூலதனத்தை பலவகையான ஊக்குவிப்புகள் அளித்து, கெஞ்சிக் கூத்தாடி இந்தியாவிற்கு ஈர்க்க வேண்டும் என்ற அரசு கொள்கையால் பிரச்சினை மேலும் தீவிரம் ஆகிறது. ஒரு அரசியல் தேவைக்காக உணவுப் பாதுகாப்பு மசோதாவை கொண்டுவந்த ஆட்சியாளர்களும், அரசின் வரவு செலவு பற்றாக்குறை அதிகரிப்பது அந்நிய நிதிமூலதன வரவைத் தடுத்துவிடும் என்று ஓலமிடுகிறார்கள். வெளிநாட்டு நிதிமூலதனம் வெளியே சென்றுவிடாமல் பார்த்துக் கொள்ள அரசு நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்த வேண்டும் என்கிறார்கள். அதை செல்வந்தர்கள், கொள்ளை லாபம் ஈட்டும் பெரும் பகாசுரக் கம்பனிகள் மீது வரி போட்டோ, அவர்கள் தர வேண்டிய வரியைக் கறாறாக வசூல் செய்தோ சாதிப்பதற்குப் பதிலாக மக்களுக்கு அவசியமான மானியங்களை வெட்டுவதன் மூலமே செய்ய முயற்சிக்கிறது அரசு. இது விலைவாசிகள் மேலும் உயர வழி செய்கிறது. ஏற்கெனவே கடுமையான உணவுப்பொருள் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் தவித்து வரும் மக்களுக்கு இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது.
அந்நிய மூலதன வரவு பிரச்சினையை தீர்க்குமா?
ஒரு நாட்டிற்கு அந்நியச் செலாவணி ஏன் தேவைப்படுகிறது? வெளிநாடுகளில் இருந்து பொருட்களை வாங்க விரும்பினால், அங்கெல்லாம் நமது நாணயம் செல்லாது என்பதால், நமக்கு அந்நியச் செலாவணி அவசியமாகிறது. வெளிநாடுகளில் கடன் வாங்கப்பட்டிருந்தால் அதை திருப்ப அந்நியச் செலாவணி தேவை.
அந்நியச்செலாவணியைப் பெறுவது எப்படி?
- நாம் பொருட்களையோ சேவைகளையோ ஏற்றுமதி செய்து பெறலாம்.
- வெளிநாட்டில் உள்ளவர்கள் நமது நாட்டில் உள்ள குடும்பங்களுக்கோ அரசுக்கோ தனியாருக்கோ கடனாக அல்லாமல் திருப்பித் தர வேண்டாததாக, வருமானமாக பணம் அளித்தால் நமக்கு அந்நியச் செலாவணி கிடைக்கும். வெளிநாடுகளில் வாழும் இந்திய உழைப்பாளி மக்கள் இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பும் பணம் மூலம்தான் இது பெருமளவு கிடைக்கிறது. இந்த உழைப்பாளி மக்கள் பட்டியலில் வெல்டர், பிட்டர், தச்சர், வீட்டுவேலை, நர்சு வேலை செய்வோரும் உண்டு. மென்பொருள் விற்பன்னர்கள், பொறியியல் மற்றும் மருத்துவ வல்லுநர்களும் உண்டு. நமது அந்நியச் செலாவணி வரத்தில் இவர்கள் பெரும் பங்கு ஆற்றி வருகிறார்கள்.
- வெளிநாடுகளில் நிரந்தரமாக வாழ்ந்து வரும் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.) இந்திய வங்கிகளில் கணக்கு வைத்துக் கொண்டு பணம் போடலாம். இது பணம் போடப்படும் பொழுது வரவு. எடுக்கப்படும் பொழுது அந்நியச் செலாவணி இழப்பு என்பது கவனிக்கத்தக்கது.
- அந்நிய நிறுவனங்கள், செல்வந்தர்கள் இந்திய அரசுக்கோ, கம்பனிகளுக்கோ கடன் கொடுக்கலாம். இதுவும் வரும்பொழுது வரவு, அசலும் வட்டியுமாக திருப்பப்படும் பொழுது அந்நியச் செலாவணி இழப்பு.
- அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய நிதிச்சந்தைகளில் ஊகவணிக அடிப்படையில் பணம் போடும் பொழுது அந்நியச் செலாவணி வரவு, அவர்கள் ஊக லாபம் ஈட்டி, தங்கள் கூடுதல் பணத்தை வெளியே கொண்டு செல்லும் பொழுது அந்நியச் செலாவணி இழப்பு. இவர்களால் எந்த உற்பத்தி சார்ந்த பங்களிப்பும் இல்லை. இவர்கள் செயல்பாடு வெறும் ஊக வணிகமே. இவர்கள் இவ்வாறு தம் விருப்பப்படி பணம் கொண்டு வருவதும் வெளியே எடுத்துச் செல்வதும் நம் நாட்டின் அந்நியச் செலாவணி நிலையிலும் பங்குச்சந்தை செயல்பாட்டிலும் உறுதியற்றத் தன்மையை உருவாக்குகின்றது.
- அந்நிய நேரடி மூலதனம் (எப்.டி.ஐ.) நம் நாட்டில் முதலீடு செய்தால், அது கடன் அல்ல என்பது உண்மை. ஆனால் அதன் முதலீட்டால் காலப்போக்கில் அது பெரும் லாபங்களில் பெரும்பகுதி வெளிநாடுகளில் வாழும் அதன் பங்குதாரர்களுக்கு அனுப்பப்படும். பிறநாடுகளில் செயல்படும் அந்த மூலதனக்காரர்களின் கம்பனிகளுக்கு முதலீட்டிற்காக அது அனுப்பப்படலாம். மேலும் அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் தங்கள் உற்பத்திக்காக வெளிநாடுகளில் இருந்து உற்பத்தி சாதனங்களை இறக்குமதி செய்து கொள்வார்கள். அதே சமயம், அவர்கள் ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணி ஈட்டித் தர வேண்டும் என்று அரசு அவர்களை நிர்ப்பந்திக்கவில்லை. எனவே, இன்று அந்நிய நேரடி மூலதனம் வரவு போல் தோன்றினாலும், காலப் போக்கில் அதன் செயல்பாடுகள் பெரும் அந்நியச் செலாவணி வெளியேற்றத்திற்கும் இட்டுச் செல்லலாம். அவ்வாறு இட்டுச்சென் றுள்ளது என்பது தான் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் அனுபவம். தங்களது வளர்ந்த தொழில்நுட்பம் சார்ந்த சாதனங்களை இறக்குமதி செய்துகொண்டு, இந்திய உழைப்பாளி மக்களுக்குக் குறைந்த கூலி கொடுத்து சுரண்டி, மலிவாக உற்பத்தி செய்து, உள்நாட்டு சந்தையில் அதை நல்ல லாபத்திற்கு விற்று, லாபத்தில் பெரும்பகுதியை வெளியே அனுப்புவது என்பதே அவர்கள் நடைமுறை. இருப்பினும், இன்றைய உலகில் தொழில்நுட்பமும் நிதியும் பன்னாட்டு சந்தைகளும் பன்னாட்டு ஏகபோகங்கள் கையில் இருப்பதால், சில துறைகளில் நாம் அவர்களை இங்கே அனுமதித்துத்தான் உற்பத்தி செய்தாக வேண்டும் என்ற நிலை உள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும், நீண்டகாலக் கண்ணோட்டத்தில் பார்த்தால், அந்நிய நேரடி மூலதனமும் அந்நியச் செலாவணி நிலைமையை உறுதியாக மேம்படுத்தும் என்று சொல்ல முடியாது.
எனவே, அந்நிய மூலதனத்தின் கால்களில் விழுந்து, ஆதிமூலமே காப்பாற்று என்று கெஞ்சுவது பேதமை தவிர வேறு அல்ல. எப்படியாவது, அன்னிய நிதிமூலதனத்தின் காலில் விழுந்தாவது அவற்றை இந்தியாவிற்குள் ஈர்க்க வேண்டும் என்ற அரசின் கொள்கை பயன் அளிக்காது. பிரச்சினை தீவிரம் அடைந்துள்ளதற்கு முக்கிய காரணம் தாராளமய தனியார்மய உலகமயக் கொள்கைகள் தான். தீர்வு என்ன?
- கடந்த இருபது ஆண்டுகளாக இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, சுங்க வரிகள் குறைக் கப்பட்டு, இறக்குமதி தாறுமாறாக அதிகரித் துள்ளது.
- தனியார்மயம் என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்கள் சீரழிக்கப்பட்டு, பொதுத்துறை முதலீடுகள் வெட்டப்பட்டு, உரம், பெட்ரோலி யம் எண்ணெய் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களின் நுகர்வில் பெரும் பகுதி இறக்கு மதி மூலம் பெறப்படும் நிலை உருவாகியுள்ளது. பன்னாட்டுச்சந்தையில் நாம் இறக்குமதி செய்யும் பொருட்களின் விலைகள் தாறுமாறாக ஏறு கின்றன.
- நிதித்துறை உலகமயமாக்கல் கொள்கைகள் நமது தனியார் கம்பனிகளை வெளிநாடுகளில் சகட்டு மேனிக்கு கடன் வாங்க அனுமதித்துள் ளதும் அன்னியச்செலாவணிபிரச்சினையை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் இந்தியப் பெரு முதலாளிகள் தங்கள் லாபங்களை கணிசமாக வெளிநாடுகளில் முதலீடு செய்கின்றன. இதனால் அவர்கள் பெரும் அளவிற்கு அந்நியச்செலா வணி ஈட்டியிருக்கிறார்களா என்ற கேள்வி ஒருபுறம்இருக்க, அவர்கள் மூலமாக நாட்டிற்கு கணிசமாகஅந்நியச்செலாவணி கிடைக்க வில்லை என்பதே நிலை. இந்திய முதலாளிகள் தங்கள் லாபங்களை வெளிநாட்டில் முதலீடு செய்வதற்கு வரம்புகள் விதிக்கப்படவேண்டும். அதேபோல், அவர்கள் சகட்டுமேனிக்கு வெளி நாடுகளில்கடன் வாங்குவதும் அனுமதிக்கப்படக் கூடாது. அவர்கள் ஈட்டித்தரும் அந்நியச் செலா வணி அளவு சார்ந்த வகையில் கடன் வரம்புகள் போடப்படவேண்டும்.
- இந்தியாவில் வாழும் இந்தியர்கள் தங்கள் ரூபாய் பணத்தை அந்நியச்செலாவணியாக மாற்றி ஆண்டுக்கு 200,000 அமெரிக்க டாலரை வெளியே கொண்டு செல்லலாம் என்று இருந்த மோசமான சரத்து தற்சமயம் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குப்பின் தான் 75,000 டாலர் வரை மாற்றிக் கொண்டுபோகலாம் என்று மாற்றப்பட் டுள்ளது. இதுவும் தேவையற்றது. மிகச்சில செல்வந்தர்களுக்குமட்டுமேபயன் தரும். வரம்பை மேலும்குறைக்கலாம்.
- ஏற்றுமதி கொள்கைகள் நமது சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்களை பாதுகாக்க வில்லை. போதுமான தொழில் நுட்ப முன்னேற் றத்திற்கான உதவிகள் செய்யப்படவில்லை. நமது அண்டை நாடான மக்கள் சீனம் ஏற்றுமதி அதி கரிப்பில் மகத்தான சாதனைகளை செய்துள்ளது. நிதித் துறை தாராளமயமாக்கல் நடவடிக்கைகள் பெரிதும் கட்டுப்படுத்தியுள்ளது. இன்று சீன நாணயம் டாலருக்கு எதிராக வீழ்ச்சி அடைய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- அன்னிய நிதி மூலதனங்கள் நாட்டை விட்டு வெளியேறினால் பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும் என்ற நிலை, கட்டுப்பாடுகள்இன்றி அன்னிய நிதி மூலதனம் நாட்டுக்குள்ளேவரலாம், வெளியேற லாம் என்பதில் இருந்து வருகிறது. அன்னியச் செலாவணி மூலதன கணக்கில் வலுவான கட்டுப் பாடுகள் தேவை. அப்பொழுது தான் அன்னிய மூலதனங்கள் வெளியேறி விடுமோ என்ற அச் சத்தில் கொள்கைகள் உருவாக்கப்படுவதை தவிர்க்க முடியும்.
- ஏற்றுமதியை அதிகரிப்பதும், இறகுமதியை குறைத்து, இறக்குமதி மாற்று யுக்தியை கடைப்பிடிப்பதும் தான் சரியான வழி. அதாவது, நாம் இன்று இறக்குமதி செய்யும் பல பொருட் களை (எடுத்துக்காட்டாக, உரம்) உள்நாட்டில் கூடுதலாக உற்பத்தி செய்ய வேண்டும். பெட்ரோ லியம், இயற்கை எரிவாயு போன்றவளங்களை தேடும் பணிக்கு கூடுதல் பொது முதலீடு மேற் கொள்ளப்படவேண்டும். தேவையற்ற -தங்கம் உள்ளிட்ட -பண்டங்கள் இறக்குமதியை கட்டுப் படுத்த வேண்டும். இறக்குமதி கட்டுப்பாடுகளை கொண்டுவரு வதும் மூலதனம் வெளியேறாமல்இருக்க உரிய கட்டுப்பாடுகளை விதிப்பதும் உடனடி நடவ டிக்கைகள். அடிப்படையான கொள்கை மாற்றங் கள் மிக அவசியம். பெரும் கம்பனிகள் மற்றும் செல்வந்தர்களிடம் இருந்து கூடுதலான வளங்களை வரிகள் மூலம் திரட்டி, பொது முதலீட்டை பெரிதும் அதிகரிக்க வேண்டும். குறிப்பாக, ஆற்றல், போக்குவரத்து, தகவல் தொடர்பு, கல்வி, ஆரோக்கியம், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் பொது முதலீட்டை பன்மடங்கு உயர்த்த வேண்டும். கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, கனிமவளங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, பன்னாட்டுஇந்நாட்டு பெரும் கம்பனிகளின் லாப வேட்டைக்குப் பதிலாக, மக்கள் நலனுக்காக பயன்படுத்தப்படவேண்டும். இறக்குமதிக்கு மாற்றாக உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க வேண்டும். சரிந்துவரும் தொழில் வளர்ச்சியை தூக்கி நிறுத்த அரசு பெருமளவில் முதலீடுகள் செய்வதும், பகாசுர தனியார் கம்பனிகளுக்கு ஊக்குவிப்பு என்ற பெயரில் வரம்பற்ற வரிச் சலுகைகள் அளிப்பதற்குப் பதில் அந்நியச்செலா வணி ஈட்டுதல்,வேலை வாய்ப்புகளை உரு வாக்குதல் சார்ந்த ஊக்குவிப்பை சிறு நடுத்தர முதலாளிகளுக்குத் தரலாம்.
சுருங்கச் சொன்னால்,
- உள்நாட்டு உற்பத்தி சக்திகளை வளர்ப்பதும்
- உள்நாட்டு சந்தையை மையப்படுத்திய வளர்ச்சிப்பாதையில் செல்வதும், * ஏற்றுமதியை இயன்ற அளவிற்கு அதிகரப் பதும்,
- இறக்குமதியை கட்டுப்படுத்துவதும், அன்னிய நிதி மூலதனத்தை தீவிர நெறிமுறை களுக்கு உள்ளாக்குவதும்,
- வலுவான அந்நியச்செலாவணி கட்டுப்பாடு களைக்கொண்டுவருவதும்
- தற்சார்பை ஊக்குவிப்பதும் தான் சரியான பாதை.
தாராளமய, தனியார்மய உலகமயக் கொள்கைகளை கைவிடாமல் மேற்கூறிய நடவடிக்கைகள் சாத்தியம் அல்ல. 1991 இல் நெருக்கடி என்று உரக்கக் கூச்சல் போட்டு, இக்கொள்கைகள் கொண்டுவரப்பட்டன. இவை நெருக்கடியை தீர்ப்பதற்குப் பதிலாக தீவிரப்படுத்தி உள்ளன. அன்று 1991 இல் நமது ஏற்றுமதியையும் இறக்கு மதியையும்கூட்டி தேச உற்பத்தியால் வகுத்தால் 14 சதவிகிதம்தான், அதாவது ஏழில் ஒரு பங்கு. இன்று நமது சரக்கு ஏற்றுமதியையும் இறக்குமதியையும் கூட்டி தேச உற்பத்தியால் வகுத்தால் கிட்டத்தட்ட சரி பாதிப்பங்கு என உயர்ந்துள்ளது. சரக்கு வர்த்தக பரிமாற்றம் மட்டும் இன்றி மூலதனவருகை செல்கையையும் கணக்கில் கொண்டால், இது 1991 இல் 30 சதவிகிதமாக இருந்தது, 2011-12 இல் 108 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. பன்னாட்டுப் பொருளாதார சூறாவளிகள் நம்மை கடுமையாகத் தாக்கும். லேசாக வேகமடையும் அல்லது மந்தமான காற்று கூட தாக்கும். தற்காப்பு நடவடிக்கைகள் மிக அவசர அவசியம். அத்தகைய நடவடிக்கைகளின் முதல் படி நம் நாட்டு ஆளும் வர்க்கங்கள் பின்பற்றி வந்துள்ள பாதையை, கொள்கைகளை கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்குவது, மறுபரிசீலனைக்கு உள்ளாக்குவது. இதற்கான பொதுக்கருத்து உருவாக்கப்பட வேண்டும், மக்கள் ஆதரவு திரட்டப்பட வேண்டும். 1991 இல் இருந்த பன்னாட்டுச் சூழல் இன்று மாறியுள்ளது. ஒரு துருவநிலை கேள்விக்கு உட்படுத்தப்பட்டு பன்னாட்டு அரங்கில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உலக முதலாளித்துவ நெருக்கடி ஏகாதிபத்தியத்தின் பிடியை பலவீனப்படுத்தும் வகையில் கையாளப்பட வேண்டும். பன்னாட்டு அரங்கில் புதிய அணிச் சேர்க்கைகள் சாத்தியம். உலக வர்த்தக அமைப்பில், உலக வங்கியில், இதர பன்னாட்டு அமைப்புகளில் வளரும் நாடுகளுக்கு தங்கள் கொள்கைகளை வகுத்துக் கொள்ள கூடுதல் வெளி தேவை என்பது வலியுறுத்தப்பட வேண்டும். ஆனால் தற்சமயம், இதற்கான சாத்தியப்பாடுகள் வரம்புக்கு உட்பட்டவை என்ற புரிதலும் தேவை. இத்தகைய நமது தொலை நோக்குக் கண்ணோட்டத்தை நாம் மக்களிடையே எடுத்து செல்ல வேண்டும்.
அட்டவணை 1:
இந்தியாவின் அந்நியச்செலா வணி சமநிலை கணக்கு, மொத்த தேச உற்பத்தி மதிப்பின் (ஜி.டி.பி..) சதவிகிதமாக (%)
ஆண்டு | சரக்கு வர்த்தகப் பற்றக்குறை | சரக்கு அல்லாத நடப்பு கணக்கு வரவுகள் | நடப்பு கணக்கு நிலை |
1998-99 | 3.2 | 2.2 | -1.0 |
1999-00 | -4.0 | 2.9 | -1.0 |
2000-01 | -2..7 | -2.1 | -0.6 |
2001-02 | -2.4 | 3.1 | 0.7 |
2002-03 | -2.1 | 3.4 | 1.3 |
2003-04 | -2.3 | 4.6 | 2.3 |
2004-05 | -2.8 | 4.5 | -0.4 |
2005-06 | -6.4 | 5.2 | -1.2 |
2006-07 | -6.9 | 5.8 | -1.1 |
2007-08 | -7.4 | 6.1 | -1.3 |
2008-0 | 9-9. | 87.5 | -2.3 |
2009-10 | -8.7 | 5.9 | -2.8 |
2010-11 | -7.4 | 4.6 | -2.8 |
2011-12 | -10..2 | 6.0 | -4.2 |
2012-13 | -10.8 | 6.0 | -4.8 |
குறிப்புகள்:
- சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை என்பது நாட்டின்மொத்த பொருள் ஏற்றுமதி மதிப்பிற்கும் பொருள் இறக்குமதி மதிப்பிற்கும் உள்ள இடைவெளி.
- சரக்கு அல்லாத நடப்பு வரவுகளில் சேவை ஏற்றுமதி மதிப்பும் வெளிநாடுகளில்வாழும் இந்திய உழைப்பாளி மக்கள் அங்கிருந்து இந்தியாவில் வாழும் தமது குடும்பங்களுக்கு அனுப்பும் பணமும் முக்கிய இடம் பெருகுகின்றன.
- சரக்கு வர்த்தகப்பற்றாக்குறையினால் ஏற்படும் அந்நியச் செலாவணி இழப்பை சரக்கு அல்லாத நடப்பு வரவுகள் ஓரளவிற்கு ஈடு செய்கின்றன. இதன் பிறகு மிஞ்சும் அந்நியச் செலாவணி இடைவெளி தான் நடப்பு கணக்கு பற்றாக்குறை.