1977 செப்டம்பர் 21 மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதிப்புமிக்க தலைவர், தன் வீரதீரச் செயல்களால் இளைஞர்களையும், உழைக்கும் மக்களையும் செங்கொடி இயக்கத்தின்பால் ஈர்க்கும் ஆற்றல் படைத்தவர். ஆதிக்க சக்திகளுக்கு, அதிகார வர்க்கத்திற்கு சிம்ம சொப்பனமாகவும், உழைக்கும் மக்களுக்கு உற்ற துணைவனாகவும் விளங்கிய தோழர்.என்.வெங்கடாசலம் காணாமல் போன நாள். ஆம்! அப்படித்தான் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை வட்டச் செயலாளராக, மாவட்டக்குழு உறுப்பினராக செயல்பட்டவர் தோழர்.என்.வி அவர்கள்.
![]() |
1977 செப்டம்பர் 21 தோழர்.என்.வெங்கடாசலம் காணாமல் போன நாள். |
தியாகமும், வீரமும் நிறைந்த தோழர்.என்.வி போன்ற தோழர்களின் போராட்ட வாழ்க் கையை கற்பதும், கடைபிடிப்பதும் இன்றைய இயக்க வளர்ச்சிக்கு அவசியத் தேவை. 1925ம் ஆண்டு ஜுலை 18ந் தேதி ராயமுண்டான் பட்டியில் பிறந்தவர் என்.வெங்கடாசலம். அவர் பிறந்த ஊர் எப்படிப்பட்டதாய் இருந்தது என்பதை அவரே எழுதி வைத்திருக்கிறார். உலக நிகழ்ச்சி களிலிருந்து முற்றாக துண்டிக்கப்பட்டிருக்கும் ஊர்களில் நான் பிறந்த ஊரும் உண்டு. அது வானம் பார்த்த பூமியாகவும், பல வருடம் வறண்டு போகக்கூடியதாகவும், விவசாயத்தையே அனைத்துமாகக் கொண்ட ஒரு சிற்றூராகும். வெள்ளையன் ஆண்டான் என்றோ அவன் வெளியேறினான் என்றோ கூட பலருக்குத் தெரியாது. விடுதலைக்காக நடந்த போராட்டத்திற்கும் அவர்களுக்கும் தொடர்போ, சம்பந்தமோ கிடையாது இப்படிப்பட்ட வெளித் தொடர்பற்ற கிராமத்தில் பிறந்த தோழர்.என்.வி படித்தது ஆரம்ப கல்விதான். அதுவும் திண்ணைப் பள்ளிக் கூடத்தில். அதிலும் தொடரவில்லை. ஏனென்றால், திண்ணைப் பள்ளிக்கே தினந்தோறும் மூன்று மைல் நடக்க வேண்டும். என்ன செய்வார். ஆனால் அவரே எழுதுகிறார், எனது சொந்த முயற்சியும் படிப்பில் உள்ள அக்கறையும் குறையவில்லை. இடைவிடாது படிப்பில் ஈடுபட்டேன். உயர்வகுப்பு பாடப்புத்தகங்களை வாங்கிப் படித்து மனப்பாடம் செய்தேன். குறிப்புகள் எழுதினேன். பாடம் ஒப்புவித்தேன். ஆங்கில புத்தகங்களையும் வரிசைப்படுத்தி படித்து ஏகலைவன் என்ற பட்டப்பெயரையும் பெற்றேன். முறையாய் படிக்காமல் எனது சொந்த முயற்சியில் தட்டுத் தடுமாறி எட்டாம் வகுப்புத் தகுதியை தொட் டேன். பிற்காலத்தில், அநேகமாக எனது 22வது வயதில் தஞ்சையில் அரசு நடத்திய கிராம வழிகாட்டிப் பள்ளியில் (Rural Guide School) நடந்த பரிட்சையில் தேறினேன். எனக்கு எட்டாம் வகுப்பு தகுதி இருப்பதாகச் சொன்னார்கள்
இப்படிபட்டவர்தான் தனது அரசியல் வாழ்க்கையில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாற்று கட்சி தலைவர்கள் என மெத்தப்படித்தவர்களின் கருத்துக்களை எதிர்வாதம் புரியவும், மக்களின் சார்பாக நின்று வாதாடவும், சரளமாக ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி உரையாடவும், மார்க்சிய தத்துவார்த்த வகுப்புகளை நடத்தவும் தனது திறமையை வளர்த்துக் கொண்டார் என்பது இன்றைய இளைய தலைமுறை கவ னத்தில் கொள்ளவும், கடைபிடிக்கவும் வேண்டிய ஒன்று. அன்று கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்த பலரும் தங்களது சுய கல்வி மூலம் அறிவாற்றல் பெற்றவர்களாகவும், விஷய ஞானமுள்ளவர்க ளாகவும் விளங்கினார்கள். கம்யூனிஸ்ட் இயக்கம் தனது ஊழியர்களுக்கு கல்வி அளிப்பதை முதற் பெரும் கடமையாகக் கருதி செயல்பட்டு வருவதும் இதற்கு மிக முக்கிய காரணமாகும். இன்றைக்கும் தஞ்சை மாவட்டத்தில் தனி நாடு உண்டு, ஒரத்தநாடு, பாப்பாநாடு மாதிரி, ராயமுண்டான்பட்டி கீழத்துவாகுடி நாடு என்றழைக்கப்பட்ட நாட்டுக்கு உட்பட்டது. சாதி ஆதிக்கத்தின் அடிப்படையில் அமைந்தது இது.
கள்ளர் சமூகத்தில் பிறந்த என்.வெங்கடாசலம், அந்த சமூகத்தின் ஆதிக்கத்தை எதிர்த்தும், தாழ்த் தப்பட்ட மக்களின் மீதான ஒடுக்குமுறையை எதிர்த்தும் போராடி வெற்றிகண்ட மாபெரும் வீரர். நாட்டின் பல கிராமங்களில் வாழ்ந்த மக் களைப் போல் தான் ராயமுண்டான் பட்டியில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட சமூக மக்களும் வைக்கப்பட்டிருந்தனர்.
தொடக்கூடாது, தோளிலே துண்டு போடக்கூடாது, டீ கடையில் தனி கிளாஸ், சைக்கிளில் ஏறி போகக்கூடாது, செருப்பணியக் கூடாது, குடைபிடித்து செல்லக் கூடாது, அடிமை வேலை செய்ய வேண்டும். வெட்டி வேலை பார்க்க வேண்டும். இப்படி எல்லா விதமான ஒடுக்குமுறைகளும் கோலோச்சிய கிராமமாக அது இருந்தது.
இந்தக் கொடுமைக்கெதிராக, கொதித்தெழுந்த என்.வியை பாருங்கள் அன்று மதியவேளை. உச்சிவெயில்! வெளியூர் இளைஞர் ஒருவர் விருந்தாளியாக இராயமுண்டான் பட்டிக்கு மிதிவண்டியில் வருகிறார். கள்ளர் தெரு வழியாக செல்கிறார். அவரது காலிலே செருப்பு வேறு. கோயிலில் குந்தியிருந்த மேல்சாதிக்காரர்களில் ஒருவர் சந்தேக மனதுடன் அந்த இளைஞரைப் பார்த்து யார் வீட்டுக்கு விருந்தாளி, என்று கேட்கிறார். மிதிவண்டியில் இருந்து கொண்டே காலை ஊன்றியவாறு இளைஞர் தாம் போகும் வீட்டின் பெயரைச் சொல்கிறார். பதில் சொல்லி முடிவதற்குள் பாய்ந்தான் மேல் சாதிக்காரன் பள்ளப்பயலுக்கு அவ்வளவு திமிரா? செருப்பு போட்டுக்கிட்டு சைக்கிள்ல ஏறிப் போறியா? பளார், பளார் என்று இளைஞரின் கன்னத்தில் அறைகள் விழுந்தன. அடிபட்ட அந்த இளைஞர் வெறுங்காலோடு ஓடி தம் உறவினரிடம் சொன்னார்.
இருவரும் நேரே வெங்கடாசலம் வீட்டுக்கு போய் முறையிட்டார்கள். அவருக்கு கண்கள் சிவந்தன. உதடுகள் துடித்தன. அந்த இளைஞனைப் பார்த்து சத்தமாகச் சொன்னார். இந்தாப்பா என் செருப்பை போட்டுக்கொள். குடையை பிடித்துக்கொள். என்னோடு வா என்று அழைத்துப் போனார். மேல்சாதிக்காரர்கள் அமர்ந்திருந்த இடத்தில் சென்று இதோ பாருங்கள் நடுத்தெருவில் செருப்பு போட்டுக் கொண்டு, குடை பிடித்துக் கொண்டு நிற்கிறான். மானம், ரோஷம் இருந்தால் அவனை இப்போது அடியுங்கள் பார்க்கலாம் என வெங்கடாசலம் கர்ஜித்தார். யாரும் மூச்சுவிடவில்லை. சிறிது நேரத்திற்கெல்லாம் ராயமுண்டான் பட்டியில் செங்கொடியுடன் சாதி இந்து தோழர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் ஒன்றாக ஊர்வலம் தாழ்த்தப்பட்ட வர்கள் காலில் செருப்புடன்!
இது போன்ற மெய்சிலிர்க்க வைக்கும் ஏராளமான போராட்டங்களை தோழர்.என்.வி தலைமை தாங்கி நடத்தியிருக்கிறார். குடிமனைக்காக, நிலத்திற்காக, கூலி உயர்வுக்காக என எண்ணற்ற போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டார். தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளை ஒரு தாழ்த்தப்பட்டவனால் தான் உணரவும், தீர்க்கவும் முடியும் என்று இன்றைக்கும் பலர் வெட்டி வேதாந்தம் பேசிக் கொண்டிருக்கின் றனர். ஆனால், தோழர்.என்.வி போன்ற ஏராள மான கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோழர்கள் மேற்படி வேதாந்தத்தை அடித்து நொறுக்கி அது சாதி சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல, வர்க்க பிரச்சனையும் இணைந்தது தான் என் பதை தங்களது போராட்டத்தின் மூலமாக நிரூபித்துக் காட்டியுள்ளனர்.
தஞ்சை வட்டத்தில் தோழர். என்.விக்கு இணையாக தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய வேறொரு தலைவர் இதுவரை இல்லை என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். அப்படிப்பட்ட தலைவரை ஆதிக்க சக்திகள் கொன்றுவிட்டார்கள் என்று நம்பவே நாட்க ளானது. ஒரு துண்டு எலும்பாவது கிடைக்காதா என மக்கள் ஏங்கித்தவித்தனர். எதிரிகள் சுவடே இல்லாமல் செய்து விட்டதாக கருதிக் கொண்டார்கள்.
ஆனால், அதற்குப் பிறகு தான் மேலும் செங்கொடி வீறு கொண்டெழுந்தது. என்.வியின் தியாகம் வீண்போகவில்லை. வீரியமுடன் இயக்கம் வளர உதவியிருக்கிறது என்பதை பெருமையுடன் குறிப்பிடுகிறோம்.
பிறகு என்.வியின் மேலிருந்த அன்பால் மக்கள் தக்க பதிலடி கொடுத்தார்கள். மக்களின் மனதை வென்ற தலைவராக தோழர் என்.வி விளங்கியதால் தான் இன்றும் மக்கள் அவர் குறித்த பாடல்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் பாடிக் கொண்டுள்ளனர். அவரைப் போல வாழ அணுவளவாவது முயற்சிப்பதே அவருடைய நினைவு நாளில் நாம் ஏற்க வேண்டிய உறுதிமொழி!
உதவிய நூல்கள்:
- வீரவேங்கை வெங்கடாசலம்
- தியாகி என்.வெங்கடாசலம் வீர நினைவுகள்