நிலையில்லா புகழ் – இந்தியாவும் அதனுடைய முரண்பாடுகளும் (Uncertain Glory: India and its Contradictions) என்ற 433 பக்கங்களைக் கொண்ட ஆங்கில நூல் அமர்த்தியா சென், ஜீன் ட்ரஸ் ஆகிய இருவராலும் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது.
இந்நூலில் இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்தும் மத்திய அரசு கடைபிடித்து வரும் பொருளாதார கொள்கை குறிப்பாக 1991லிருந்து அமலாக்கப்பட்டு வரும் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை குறித்தும் விமர்சனப் பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அமர்த்தியா சென் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கையை பொதுவாக எதிர்ப்பவரல்ல; ஆனால் சமூக மேம்பாட்டில் அக்கறையுள்ளவர்.
கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவை விட பொருளாதார வளர்ச்சி குறைவாக உள்ள பல நாடுகளை இந்திய வளர்ச்சியுடன் ஒப்பிட்டு ஏன் சமூக நல குறியீடுகளில் இந்தியாவில் வளர்ச்சியில்லை என்பதை ஆய்வு செய்திருக்கிறார்கள். பக்கம் 45ல் உள்ள அட்டவணையின் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா |
15 ஏழை நாடுகளின் சராசரி |
16 நாடுகளில் இந்தியாவின் இடம் | |
2011ல் ஜிடிபி தலா உற்பத்தி | 3203 டாலர் | 2112 டாலர் | 1 |
சராசரி வாழ்நாள் ஆண்டு (2011) | 65 | 67 | 9 |
சேய் இறப்பு விகிதம் (உயிருடன் பிறக்கும் 1000 சேய்களில் ஒரு ஆண்டுக்கு இறக்கும் சேய்கள் எண்ணிக்கை) | 47 | 45 | 10 |
5 வயதுக்குள் இறக்கும் குழந்தைகள் | 61 | 56 | 7 |
குழந்தை பிறப்பு விகிதம் (Total Fertility Rate %) | 2.6 | 2.9 | 7 |
சுகாதார வசதி கிடைக்க வாய்ப்புள்ளவர்கள் % (2010) | 34 | 57 | 13 |
கல்வி கற்றோர் % (15-24 வயது) 2010, பெண்கள் | 74 | 79 | 11 |
கல்வி கற்றோர் % (15-24 வயது) 2010, ஆண்கள் | 88 | 85 | 9 |
ஊட்டச்சத்து கிடைக்காத 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் (2006-10) குறைவான எடையுள்ளோர் | 43 | 30 | 15 |
வளர்ச்சி குன்றியவர் | 48 | 41 | 13 |
உலக வங்கி ஆய்வின் படி 2011ல் (சஹாரா பாலைவனத்திற்கு தெற்கேயுள்ள ஆப்பிரிக்க நாடுகள் அல்லாமல்) மொத்த உற்பத்தி – தனிநபர் வருமானத்தில் மேற்கண்ட 15 நாடுகள் மிகக் குறைவாக உள்ளன. ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பர்மா, கம்போடியா, ஹெய்த்தி, கிர்கிஸ்தான், லாவோஸ், மால்டோவா, நேபாளம், பாகிஸ்தான், பாப்புவா – ரியுகினி, கஜகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், வியத்நாம், ஏமன் ஆகிய நாடுகள் எல்லாம் இந்தியாவை விட சராசரி தனிநபர் வருமானத்தில் குறைவாக உள்ள நாடுகள். ஆனால், சராசரியாகப் பார்த்தால் வாழ்க்கைத் தரத்தில் மேலாக உள்ளன. மேற்கண்ட நாடுகளில் ஒரேயொரு அம்சத்தில் தான் – குறிப்பாக ஒட்டு மொத்த வளர்ச்சி, சராசரி தனிநபர் வருமானத்தில் மட்டுமே தான் – இந்தியா முதலிடத்தில் உள்ளது. மற்ற 9 குறியீடுகளில் இந்தியா ஒன்றில் கூட முதலிடத்தில் இல்லை.
இதில் வேதனையான அம்சம் என்னவென்றால் 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா சமூகவள மேம்பாட்டு குறியீடுகளில் ஆசிய நாடுகளில் 2வது இடத்தில் இருந்தது. இந்த 20 ஆண்டுகளில் மொத்த உற்பத்தி வளர்ச்சி ஏணியில் இந்தியா மேலே சென்றிருக்கிறது. ஆனால் சமூகவள மேம்பாட்டு வளர்ச்சியில் கீழே சரிந்துள்ளது.
மேற்கண்ட கல்வி, சுகாதாரம், சேய் இறப்பு விகிதம், சராசரி மனித வாழ்நாள் ஆண்டு உள்ளிட்ட 10 குறியீடுகளில் மற்ற எல்லா குறியீடு களிலும் மற்ற நாடுகளை விட பின்தங்கியே உள்ளது.
இதற்கு காரணம் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட பலனை பெரும்பான்மையான ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட பயன்படுத்தும் அளவிற்கு மத்திய அரசு திட்டமிடவில்லை.
இந்த அவலத்திற்கு விடை காண வேண்டுமென்றால் இந்தியா கடைபிடித்து வந்த பாதையை பரிசீலிக்க வேண்டுமென்று நூல் ஆசிரியர்கள் கூறுகிறார்கள். “வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் இடையில் உள்ள தொடர்பு ஒன்று மற்றொன்றின் வளர்ச்சிக்கு ஆற்றிடும் பங்களிப்பு ஆகிய அம்சங்களே” என்பதுதான் தங்களுடைய நூலின் முக்கியமான சாராம்சம் என்று நூலாசிரியர்கள் கூறுகிறார் கள்.
தொழில், விவசாயம், சேவைத்துறை ஆகிய மூன்றும் சேர்ந்தது ஒட்டுமொத்த வளர்ச்சி (ஜிடிபி). கல்வி, சுகாதாரம், வாழ்நாள் ஆண்டு போன்ற சமூகவளக் குறியீடுகளில் ஏற்படும் முன்னேற்றம் மேம்பாடு என அழைக்கப்படுகிறது. வளர்ச்சி, மேம்பாடு என்ற இரண்டு அம்சங்கள் குறித்து ஏராளமான அம்சங்களை நூலாசிரியர்கள் விளக்கியிருக்கிறார்கள்.
உதாரணமாக கல்வி உள்ளிட்ட பல அம்சங்களில் ஏற்படும் மனிதவள மேம்பாடு பொருளாதார வளர்ச்சிக்கு உந்தும் சக்தியாக இருக்கும். எனவேதான் வளர்ச்சியின் பலன் மேம்பாட்டிற்கு பயன்பட்டுள்ளதா என்ற கேள்வியை நூலாசிரியர்கள் எழுப்புகிறார்கள். வளர்ச்சி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்திட பயன்பட்டுள்ளதா என்பது தேசவருமானம் ஏழை எளிய மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறதா என்பதோடு அரசுக்கு கிடைக்கக் கூடிய வருவாயை மேம்பாட்டிற்காக அரசு பயன்படுத்துகிறதா என்பதையும் பொருத்துள்ளது. உதாரணமாக சீன அரசு அந்நாட்டு ஜிடிபியில் 2.7 சதவிகிதம் சுகாதாரத்திற்காக ஒதுக்கீடு செய்கிறது. ஆனால், இந்தியாவில் மத்திய-மாநில அரசுகள் இணைந்து செய்யும் சுகாதாரச் செலவு ஜிடிபியில் 1.2. தான். இது போன்று பல துறைகளுக்குமான அரசு ஒதுக்கீடுகளையும் செலவாகும் தொகைகளையும் மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது.
கல்வி:
“வறுமை என்ற துயரத்தின் கோபுரம் இந்தியாவின் இருதயத்தை அழுத்திக் கொண்டிருப்பதற்கு அடிப்படைக் காரணம் கல்லாமை என்றே நான் கருதுகிறேன்” என சோவியத் யூனியனுக்கு சென்று வந்த பிறகு மகாகவி தாகூர் கல்வி பற்றி மேற்கண்டவாறு கூறியுள்ளதை நூலாசிரியர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர். தாகூரின் வார்த்தைகள் அக்காலத்தில் இந்தியாவில் நிலவிய கல்லாமையைப் பற்றிய கடுமையான கண்டனமாகும். நாடு விடுதலை பெற்ற பிறகு பள்ளிக் கல்வியிலும் உயர்கல்வியிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பினும் இன்றும் ஏழை எளிய மக்களுக்கு தரமான பள்ளிக் கல்வியும் உயர் கல்வியும் கிடைக்காத அவலம் நீடித்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியும் மனிதவள மேம்பாடும் பெருமளவிற்கு கல்வியில் ஏற்படும் வளர்ச் சியைப் பொருத்தே அமையும்.
12 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் உயர்கல்வியிலும் பள்ளிக் கல்வியிலும் அரசு மற்றும் தனியார் கூட்டுமுயற்சி தேவை என்ற கொள்கையை மத்திய அரசு முன்வைத்துள்ளது. நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கை அமலாக்கம் தொடங்கிய பிறகு உயர்கல்வியில் நாடு முழுவதும் சுயநிதி கல்வி நிலையங்களும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் உருவாகியுள்ளன. இத்தகைய கல்வி நிலையங்களில் நகர்ப்புற, கிராமப்புற ஏழை குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் சேர இயலாது. நடுத்தர மக்கள் பகுதியில் கூட உயர் நடுத்தர பகுதியினரே லட்சக் கணக்கில் செலவு செய்து தங்கள் பிள்ளைகளை சுயநிதி கல்வி நிலையங்களில் சேர்க்க முடியும்.
இந்தியாவில் சாதிய ரீதியிலும், மத ரீதியிலும், பாலின ரீதியிலும் உயர்கல்வி பெறும் வாய்ப்பில் பெரும் ஏற்றத் தாழ்வு நீடிக்கிறது. பழங்குடி மக்களும் பின்தங்கியுள்ளனர், இத்தகைய ஏற்றத்தாழ்வை போக்காத வரையில், ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்கு அவர்கள் படிக்க விரும்புகிற வேலைவாய்ப்புள்ள உயர் கல்வி கிடைக்காது. இதன் விளைவாக சமூகவள மேம்பாட்டில் இந்தியா மற்ற ஏழை நாடுகளை விடவும் பின்தங்கியே இருக்கும்.
கல்வி அளிக்கும் பொறுப்பை (பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வி) அரசு தனியாருக்கு விடுவது கல்வித்துறையில் மேம்பாடு அடைய உதவாது என்பதை நூலாசிரியர்கள் அழுத்தமாக வலியுறுத்துகிறார்கள்.
சுகாதாரம்:
வங்காளதேசம் போன்ற ஏழை நாடுகளை விட இந்தியா இரண்டு மடங்கு பொருளாதார வளர்ச்சியில் முன்னிலையில் இருந்தாலும் சேய் இறப்பு விகித எண்ணிக்கையிலும் மனிதனின் சராசரி வாழ்நாள் ஆண்டிலும் இந்தியா பின்தங்கியே உள்ளது. இதற்கு அடிப்படைக் காரணம் பொதுச் சுகாதாரத்திற்கும் மருத்துவ சிகிச்சைக்கும் மத்திய – மாநில அரசுகள் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாததே.
2011 இல் இந்தியாவில் கழிப்பிட வசதியில்லாமல் திறந்த வெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்தும் குடும்பங்கள் மொத்த மக்கள் தொகையில் 50 சதவிகிதம். ஆனால், வங்காளதேசத்தில் இது 10 சதவிகிதமாகவும் சீன நாட்டில் 1 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. சுகாதார வசதியில் இந்தியா பின்தங்கியுள்ளது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
கடந்த 20 ஆண்டு காலமாக அரசுகள் ஜிடிபியில் 1 சதவிகிதமே சுகாதாரத்திற்கு ஒதுக்கீடு செய்து வருகிறது. தற்பொழுது ஒதுக்கீடு 1.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. சீனத்தில் 2.7 சதவிகிதமும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் 3.8 சதவிகிதமும் ஐரோப்பிய நாடுகளில் 8 சதவிகிதமும் உலக சராசரி ஒதுக்கீடு 6.5 சதவிகிதமாகவும் உள்ளது.
சுகாதார வசதி இந்தியாவில் பெருமளவிற்கு தனியார்மயமாக்கப்பட்டுவிட்டது என நூலாசிரி யர்கள் ஆதாரத்துடன் விளக்குகிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் சுகாதாரத்திற்கு ஆகும் செலவில் அரசின் பங்கு 70-85 சதவிகிதம், அமெரிக்காவில் 50 சதவிகிதம், உலக சராசரி 63 சதவிகிதம். ஆனால் இந்தியாவில் அரசின் பங்கு 29 சதவிகிதம் மட்டுமே. கீழ்க்கண்ட பட்டியலில் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
நாடுகள் | சுகாதாரத்திற்கு அரசின் மொத்த பங்கு |
இந்தியா | 29 |
தெற்காசியா | 30 |
சகாரா பாலைவனத்திற்கு தெற்கே உள்ள நாடுகள் | 45 |
கிழக்காசியா பசிபிக் | 53 |
மத்திய கிழக்கு வட ஆப்பிரிக்கா | 50 |
லத்தீன் அமெரிக்கா கரீபியன் | 50 |
ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா | 65 |
உலக சராசரி | 63 |
ஐரோப்பிய யூனியன் | 77 |
கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி 5-லிருந்து 9 சதவிகிதம் வரையில் உயர்ந்திருந்தாலும் இதனால் அரசிற்கு கிடைக்கும் வருவாயில் சுகாதாரத்திற்கு போதுமான அளவிற்கு ஒதுக்கீடு செய்யாமல் தனியாருக்கு விட்டுவிட்டது. இதனால், மனிதவள மேம்பாட்டில் மற்ற நாடுகளை விட இந்தியா பின்தங்கியுள்ளது.
மத்திய அரசு 12 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் சொல்லப்பட்டுள்ள சுகாதார காப்பீட்டுத் திட்டமும் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கே முக்கியத்துவம் அளித்துள்ளது. அரசுத் துறைக்கு போதுமான முக்கியத்துவம் அளிக்கவில்லை. மருத்துவ காப்பீட்டு முறையும் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யாது.
வறுமை ஒழிப்பு:
அத்தியாயம் 7 வறுமை ஒழிப்பு பற்றி விளக்குகிறது. இந்தியாவில் அமலாக்கப்பட்டு வரும் பொதுவிநியோகமுறைத் திட்டத்தை மேலும் பலப்படுத்திட வேண்டுமென்று நூலாசிரியர்கள் வாதிடுகின்றனர். வறுமைக்கோட்டு எல்லைக்கு கீழே வாழும் மக்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதிலும் சரியான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டுமெனக் குறிப்பிடுகிறார்கள். மத்திய அரசு கொண்டு வந்துள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைப் (நூல் வெளியாகிற போது மசோதா வடிவத்தில் இருந்தது) பற்றியும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவிநியோக முறையில் நேரடி பணப்பட்டுவாடா முறை கூடாது என்றும் இதற்கு மாறாக, ஏற்கனவே அமலில் உள்ள பொது விநியோக முறையை பலப்படுத்திட வேண்டும் என்கிறார்கள்.
ஏற்றத் தாழ்வின் பிடியில் இந்தியா:
நூலில் 8 அவது அத்தியாயத்தில் இந்தியாவில் சாதிய ரீதியிலும் வர்க்க ரீதியிலும் பாலின ரீதியிலும் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது. இந்தியாவிலுள்ள சாதிய அமைப்பு முறை ஏற்றத் தாழ்வை நிலைநிறுத்துவதற்கு பல காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. வர்க்க ஏற்றத்தாழ்வுக்கும் பாலின ஏற்றத்தாழ்வுக்கும் சாதிய அமைப்பு முறையும் காரணமாக உள்ளது என நூலாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். சாதிய ஏற்றத்தாழ்வு அகற்றப்பட வேண்டுமென்று அம்பேத்கரையும் நூலாசிரியர் மேற்கோள் காட்டுகிறார்கள்.
கடந்த 20 ஆண்டுகளில் ஜிடிபியில் முன்னேற்றம் இருப்பினும் இதனால் அரசிற்கு கிடைக்கும் வருவாயை சமூகவள மேம்பாட்டிற்கு அரசு பயன்படுத்தாதது இந்தியா பின்தங்கியிருப்பதற்கு முக்கியமான காரணம் என நூலாசிரியர்கள் கூறுகிறார்கள். கடந்த 2012-13 ஆண்டு நிதிநிலை அறிக்கையை சுட்டிக்காட்டி கார்ப்பரேட் கம் பெனிகளுக்கு 5,29,432 கோடி ரூபாய் சலுகை அளிப்பதன் மூலம் அரசிற்கு வரக்கூடிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. (* இது மதிப்பீடுதான். அநேகமாக இறுதி கணக்கு கூடும். 2010-11 இல் இவ்வாறு அரசால் இழக்கப்பட்ட வரி வருமானம் ரூ. 5, 73, 000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது) கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சலுகை அளிக்கும் மத்திய அரசு சமூகவள மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஊடகங்களைப் பற்றி:
கல்வி, சுகாதாரம் போன்ற சமூகவள மேம்பாடு சம்பந்தப்பட்ட பிரச்சனைப் பற்றி ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை என்பதையும் இந்நூல் சுட்டிக் காட்டுகிறது. மேலும், கல்வியும் சுகாதாரமும் போதுமான அளவிற்கு இந்தியாவில் விவாதப் பொருளாக மாறாததும் கவலைக்குரியது என்பதையும் நூல் எடுத்துக் காட்டுகிறது.
இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூகவள மேம்பாடு ஆகிய இரண்டையும் மற்ற நாடுகளோடு ஒப்பிட்டு ஆழமாக ஆய்வு செய்து இந்தியாவில் ஓரளவுக்கு வளர்ச்சி ஏற்பட்டிருப்பினும் வளர்ச்சியின் பலன் சமூகவள மேம்பாட்டிற்கு பயன்படவில்லை. காரணம் மத்திய அரசு கடைபிடித்த பெரும்பாலான மாநில அரசுகளும் பின்பற்றி வரும் தாராளமயக் கொள்கைகளே.
கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் உள்ள பணக்கார மற்றும் உயர் நடுத்தர மக்களின் (மேல்தட்டில் உள்ள ஒரு சிறு பகுதி) வாழ்க்கைத் தரம் எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளது. ஆனால் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகளின் வருமானம் அதிகரிக்கவில்லை. நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கும் வசதி படைத்தவர்களுக்கும் இடையிலான வருமான ஏற்றத் தாழ்வு அதிகரித்துள்ளது. தேசிய மாதிரி சர்வே (அரசு நிறுவனம்) செய்ததில் 1993லிருந்து 2010 வரையிலான காலத்தில் கிராமப்புறத்தில் தனிநபர் வாங்கும் சக்தி 1 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது. நகர்ப் புறங்களில் 2 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
ஆனால் இதே காலத்தில் சீனாவில் தொழிலாளர்களின் உண்மை ஊதியம் (விலைவாசி உயர்வை கணக்கில் கொண்ட) ஆண்டுக்கு 12 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இக்காலத்தில் இந்தியாவில் 2.5 சதவிகிதம் மட்டுமே அதிகரித் துள்ளது.
நூலாசிரியர்கள் சோசலிச நாடுகளில் ஏற்பட்ட சமூகவள மேம்பாடு பற்றி அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்கள். “சோவியத் யூனியனில் துவங்கி சீனா, வியத்நாம், கியூபா வரையில் அனைவருக்கும் இலவச கல்வியை அமலாக்குவதில் குறியாக இருக்கிறார்கள்”. 1930 இல் நோபல் பரிசு பெற்ற தாகூர் சோவியத் யூனியன் சென்று வந்த போது குறுகிய காலத்தில் சோவியத் நாட்டில் விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் கல்வி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நமது நாட்டில் வசதி படைத்தவர்களுக்குக் கூட அத்தகைய கல்வி கிடைக்கவில்லை என்பது தான் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது என தாகூரை மேற்கோள் காட்டியிருக்கிறார்கள்.
“கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில்” (1848 இல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் வெளியிட்டது) குறிப்பிடப்பட்டுள்ள அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற அம்சத்தை கம்யூனிச நாடுகள் அடிப்படைக் கொள்கையாக கடைபிடித்தன என நூலாசிரியர்கள் கூறுகிறார்கள்.
மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தைப் போல் இந்தியாவில் பொருளாதார ஏற்றத் தாழ்வு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி இத்தகைய ஏற்றத்தாழ்வே, ஏற்றத்தாழ்வு தொடர்ந்து நீடிப்பதற்கு காரணமாகிவிடும் என கீழ்க்கண்ட வாறு சுட்டிக் காட்டுகிறார்கள்.
“நாம் முன்னரே கண்டபடி பல பரிமாணங்களைக் கொண்ட சமத்துவமின்மை தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தேவையான கருவிகளை தானே உருவாக்கிக் கொள்கின்றது. குறிப்பாக பொதுத்தளத்தில் நடக்கும் விவாதங்களையும் ஊடகச் செய்தி வெளியீடுகளையும் உருக்குலைத்து இதனைச் செய்கின்றது. பெரும் சமூகப் பிளவுகள் வெவ்வேறு சமூகப் பிரிவுகளுக்கு இடையே அதிகாரத்திலும் அவர்கள் தரப்பு கருத்து கேட்கப்படுவதிலும் மிகுந்த ஏற்றத்தாழ்வோடு இருக்கின்றன. மேலும் சமூகத்தின் அடித்தட்டு பகுதிகள் குறித்த ஊடக கவனத்தையும் பொதுத்தளத்தில் அவர்களது பிரச்சனைகள் குறித்த விவாதங்களையும் நடக்க விடாது அவர்களது எல்லாம் இழந்த நிலையை குழப்பி மறைக்கின்றது. ஊடக கவனமும் பொதுத்தள விவாதங்களும் எல்லாம் பெற்ற மக்களின் நலன்களுக்காகவே நடக்க வழிவகை செய்கின்றது. இதன் மூலம் எதிர்ப்பைக் கூறும் வலுத்த குரலுக்கு இடமளிக்காமலிருப்பது உட்பட ஜனநாயகத்தின் வழிமுறைகளை மறுத்து சமத்துவமின்மையை எதிர்கொள்ள விடாமல் செய்கின்றது. இதன் மூலம் சமூகத்தின் வசதிகளை அனுபவிப்பவருக்கும் பிறருக்கும் இடையேயுள்ள பெரும் ஏற்றத் தாழ்வை மறைக்கின்றது”.
‘சமூகநல பொருளாதாரம்’ குறித்து நீண்ட காலமாக அமர்த்தியா சென் செய்த ஆய்வுக்காக அவருக்கு நோபல் வழங்கப்பட்டது. வல்லுநர் சென்னுடன் இன்னொரு வல்லுநர் ஜீன் டிரஸ் இணைந்து தயாரித்து வெளியிட்டுள்ள நூல் இது.
இந்தியா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டு உலகம் முழுவதும் உழைக்கும் மக்கள் நலன்களுக்காக அமலாக்கப்பட்டு வந்த பல பல சமூகநலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை வெட்டுவதோடு அத்தகைய திட்டங்களையே கைவிடும் அரசுகளுக்கு எதிராகப் போராட்டம் நடைபெறும் இக்காலத்தில் இந்நூல் வெளியாகியுள்ளது. சமூகநல மேம்பாட்டிற்காக போராடக் கூடியவர்களுக்கு இந்நூல் பேராயுதமாக அமையும்.