சோசலிசப் பாதையில் பீடு நடைபோடும் வியட்நாம்


வியட்நாம் என்றாலே எல்லோருக்கும் பளிச்சென்று நினைவிற்கு வருவது அம் மண்ணின் வீரம்; அம்மக்களின் தியாகம்; அதற்கு தலைமைப் பாத்திரம் வகித்த வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியும் அதனை நிறுவியவர்களில் முக்கிய பாத்திரம் வகித்தவரும், அதன் தலைமைப் பொறுப் பிலிருந்து இயக்கி வியட்நாம் சுதந்திரத்தி லும், சோசலிச நிர்மாணத்திலும் முக்கிய பங்காற்றியவருமான ஹோசிமின்.

வியட்நாமில் சுதந்திரப் பிரகடனம்

1945 செப்டம்பர் 2ம் தேதி வியட்நாம் சுதந்திர நாடாக ஹோசிமின் தலைமையிலான புரட்சிகர அரசாங்கத்தால் பிரகடனம் செய்யப்பட்டது. ஆனால் பிரெஞ்சு அரசு தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வியட்நாமை தங்கள் காலனியா திக்கத்திற்குள் தக்கவைக்கும் முயற்சியில் ஈடு பட்டு வந்தது. அதற்கெதிராக வியட்நாம் மக்கள் கடுமையான நேரடிப் போரில் ஈடுபட் டனர். சுதந்திர பிரகடனத்திற்குப் பிறகு சுமார் ஒன்பது ஆண்டுகள் நீடித்த இப்போர் 1954ல் வியட்நாம் மக்களின் விடுதலைப் படை வெற்றி பெற்றதன் மூலம் முடிவிற்கு வந்தது.

பிரெஞ்சுப் படையின் தோல்வி

1954 மே மாதம் 5ம் நாள் பிரெஞ்சு படைத் தளபதியும் கூட்டாளிகளும் சிறைபிடிக்கப்பட்டனர். 10000 பிரெஞ்சுப் படையினர் சரணடைந்தனர். 1954 ஜூலை 21 ஜெனிவா ஒப்பந்தம் மூலம் வியட்நாம் சுதந்திரத்தை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன.

வியட்நாமில் பிரிவு

ஆனாலும் பிரச்சனை தொடர்ந்தது. வியட் நாம் நாடு தற்காலிகமாக இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. இரண்டாண்டுகளுக்குள் தேர்தல் நடத்தப்பட்டு அவை ஒன்றிணைக்கப்படும் என்பது ஒப்பந்தத்தின் பகுதியாகும்.ஆனால் வியட்நாம், லாவோஸ், கம்போடியா உள்ளிட்ட இந்தோ – சைனா முழுவதையும் கைப்பற்ற அமெ ரிக்க ஏகாதிபத்தியம் தந்திரமாக திட்டம் தீட்டியது. அப்பகுதியில் உள்ள ஏராளமான கனிமவளங்களை கொள்ளையடிப்பதுடன், சோசலிசம் பரவாமல் தடுப்பதே அமெரிக்க அரசின் நோக்கம்.

அமெரிக்காவின் சண்டித்தனம்

இரண்டாம் உலகப்போர் அநகேமாக முடி விற்கு வந்து விட்ட நிலையில் அமெரிக்க ஏகாதி பத்தியம் ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி  ஆகிய நகரங்களின் மீது அணுகுண்டு வீசி தன்னைப் பற்றிய ஒரு பயத்தை உலக மக்களின் மனதில் தோற்றுவிக்க முற்பட்டது. அன்று முதல் ஜனநாயக பாதுகாவலன் என்ற போர்வையில், கம்யூனிசத்தை அழிக்க அவதாரமெடுத்திருப்பது போல் மிகப்பெரிய சண்டியனாக உலகை வலம் வரத் தொடங்கியது அமெரிக்க ஏகாதிபத்தியம்.

வியட்நாமில் அமெரிக்காவின் தலையீடு

சோவியத் மண்ணில் சோசலிசம் வெற்றி நடைபோட்டு வந்த பின்னணியில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், கிழக்கு ஜெர்மனி யிலும், ஆசிய கண்டத்தில் சீனா, வடகொரியா ஆகிய நாடுகளிலும் சோசலிச அரசுகள் அமையத் தொடங்கின. உலகின் மக்கள் தொகையில் மூன்றில் ஒருபங்கு மக்கள் முதலாளித்துவ தளைகளிலிருந்து விடுபட்டு சோசலிசப் பதாகையை உயர்த்திப் பிடிப்பதன் மூலமாக உழைப்புச் சுரண்டலுக்கு முடிவு கட்டினர். அத்தகைய பாதையில் வியட்நாமும் பயணிப்பதை அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏதாவது ஒரு கார ணத்தை சாக்கிட்டு, வியட்நாமை அடிமைப் படுத்த அனைத்து சாகசங்களிலும் ஈடுபட்டது அமெரிக்க அரசு.

தென்வியட்நாமில் அடக்குமுறை

அதன்படி, சிஐஏவின் கையாளான நிகோதின் தியம் என்பவர் தானே தென்வியட்நாமின் ஜனாதிபதி என்று சுயபிரகடனம் செய்து கொண்டார். நிகோதின் பொம்மை அரசை அமெரிக்கா உடனே அங்கீகரித்தது. அதனைத் தொடர்ந்து பிரிட்டன், பிரான்ஸ் அரசாங்கங்களும் அங்கீ கரித்தன. தெற்கு வியட்நாமில் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. கம்யூனிஸ்ட்டுகள், ஜனநாயகவாதிகள், நடுநிலையாளர்கள், ஜெனிவா உடன்படிக்கையை ஆதரித்தவர்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் சிறையிடப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் விசாரணையின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1960 செப்டம்பர் மாதம் தொழிலாளர் கட்சியின் மூன்றவாது மாநாட்டில் ஹோசிமின் வடக்கு வியட்நாமில் சோசலிச நிர்மாணம் செய்வது வியட்நாம் முழுவதையும் அமைதியாக ஒன்றுபடுத்துவது என்பதுதான் அந்த மாநாட் டின் லட்சியம் என்பதைத் தெளிவுபடுத்தினார்.

வியட்நாம் மக்களின் வீரச் சமர்

அமெரிக்க அரசின் தாக்குதலை எதிர்த்து ஒவ்வொரு வியட்நாம் குடிமகனும், குடிமகளும் போர் வீரராக, வீராங்கனையாக மாறி போரா டினர். வேலைக்கு செல்லும் பெண்கள் விவசாயம் செய்ய ஒரு கையில் கத்தியைப் பிடித்துக் கொண்டே, மறுபுறம் அமெரிக்க துருப்புக்களை சுட்டு வீழ்த்த துப்பாக்கியையும் ஏந்தினர். அமெரிக்கா போர்க்குற்றவாளி
அமெரிக்க அரசு வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளுக்கு எதிராக அத்து மீறலில் ஈடுபட்டுள்ளது. வியட்நாம் மக் களுக்கு எதிராக மோசமான இனப்படு கொலையில் ஈடுபட்ட குற்றத்தைப் புரிந் துள்ளது என்று 1967  மே மாதம் ஸ்டாக் ஹோமில் கூடிய போர்க்குற்ற தீர்ப்பாயம் குற்றம் சாட்டியது. ஆனால் அதற்கு முன்னரே அமெ ரிக்க மக்கள் உட்பட உலகத்தில் உள்ள மக்களுக்கு அமெரிக்க அரசின் நீசத்தனம் அம்பலப்பட்டுவிட்டது.

அமெரிக்க மக்களின் எதிர்ப்பு

எனவேதான் 1965 பிப்ரவரி மாதமே வடவியட் நாமில் அணுகுண்டு போடும் அமெரிக்க அரசின் வன்செயலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். 1965 அக்டோபர் மாதம் ஒவ்வொரு இடத்திலும் லட்சக்கணக்கானவர்களுக்கு மேல் பங்கேற்ற ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்காவின் 60 பெருநகரங்களில் நடைபெற்றன. அமைதியை விரும்பும் பல அமெரிக்க ஆர்வலர்கள் அமெரிக்க அரசின் வியட்நாம் போரை கண்டித்து பொது இடங்களில் தீக்குளித்தனர்.

அமெரிக்க படை விரட்டியடிப்பு

வியட்நாம் மக்களின் தொய்வில்லாத வீரஞ் செறிந்த கொரில்லா யுத்தமும், அதற்கு ஆதரவாக அமெரிக்க மக்கள் உட்பட உலக மக்களின் ஆதரவுமே அமெரிக்க படை இறுதி யில் வியட் நாம் மண்ணை விட்டு ஓட ஓட விரட்டியது. அதற்கு ஹோசிமின் தலைமையில் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ந்து வழிகாட்டி வந்தது. 1969 செப்டம்பர் மாதம் ஹோசிமினின் மரணம் வியட்நாம் மக்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கிலுமுள்ள விடுதலை விரும்பிகளுக்கு, ஜனநாயகத்தை நேசிக்கும் மக்களுக்கு பேரிடியாக அமைந்தது. ஆனாலும் அவர் காட்டிய பாதை யில் வீரநடை போட்ட அம்மக்கள் 1973 மார்ச் மாதம் 29ம் நாள் அமெதிக்க படையை வியட்நாம் மண்ணிலிருந்து முற்றிலுமாக விலக்கிக் கொள் ளும் முடிவை எடுக்க வைத்தனர். 1975 ஏப்ரல் 30ம் நாள் வடவியட்நாம் அரசால் தென்வியட்நாம் கைப்பற்றப்பட்டது.1976 ஜூலை 2-ம் நாள் வட வியட்நாம், தென்வியட்நாம் மீண்டும் ஒன்றி ணைக்கப்பட்டு சுதந்திர வியட்நாம் சோசலிச குடியரசு உருவானது.

போரினால் பின்னடைவு

சுதந்திரம் பிரகனப்படுத்தப்பட்ட 1945ம் ஆண்டிலிருந்தே ஒருபுறம் அந்நிய பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தையும், அமெரிக்க ஏகாதிபத் தியத்தையும் எதிர்த்து போராடிக் கொண்டே, பல வகைகளில் நாட்டு முன்னேற்றத்திற்கு திட்டம் தீட்டி அமல்படுததிக் கொண்டே வந்தது ஹோசிமின் தலைமையிலான வியட்நாம் அரசு. குறிப்பாக அனைத்து மக்களுக்கும் உணவு, குடிநீர், இருப்பிடம் உட்பட அனைத்து அடிப் படை வசதிகளையும் வழங்குவதில் அதிக கவனம் செலுத்தி வந்தது. ஆனாலும் போரினால் ஏற்பட்ட மனித உயிர் இழப்பு, பொருட் சேதத்தினாலும், போர் தயாரிப்பில் ஏற்பட்ட பொருட் செலவாலும் வியட்நாம் கடுமையான பின்ன டைவை சந்திக்க நேர்ந்தது.

இந்தியாவின் நேசக்கரம்

1954ல் பிரெஞ்சு படையை விரட்டி அடித்த பின் வியட்நாமின் சுதந்திரத்தை அங்கீகரித்த முதல் சில நாடுகளில் இந்திய நாடும் ஒன்று என்று பெருமையுடன் இன்றளவும்நினைவு கூறுகின் றனர் வியட்நாமிய ஆட்சியாளர்களும், வியட் நாம் கம்யூனிஸ்ட்கட்சி தலைவர்களும். அன்றைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களும், வியட்நாம் அதிபர் ஹோசிமின் அவர்களும் உருவாக்கிய இந்திய – வியட்நாம் நட்புறவு இன்றளவும் தொடர்வது மட்டுமல்ல, அது மேலும் மேலும் செழுமைப்படுத்தப்பட்டுள்ளது.

1954-ம் வருடமே இந்திய பிரதமர் ஜவஹர் லால் நேரு அவர்கள் வியட்நாம் சென்று வியட் நாமிற்கு இந்திய அரசின் ஆதரவை வெளிப்படுத் தியது வியட்நாம் மக்களுக்கு அளவிடமுடியாத உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளித்தது. 1958ல் வியட்நாம் அதிபர் ஹோசிமின்னின் இந்திய விஜயத்தின் போது அவருக்கு இந்திய மக்கள் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து இந்திய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அவர்கள் வியட்நாம் சென்றார்.

இந்திய-வியட்நாம் கேந்திர உறவு

1972ம் ஆண்டு இந்திய-வியட்நாம் ராஜிய உறவு ஏற்படுத்தப்பட்டது. 2007ம் ஆண்டு இரு நாடுக ளுக்கிடையே கேந்திரிய உறவு உருவாக்கப் பட்டது. சமீப காலங்களில் இந்தியாவிலிருந்தும், வியட்நாமிலிருந்தும் பல உயர்மட்டத் தலைவர் கள் இருநாடுகளுக்கும் விஜயம் செய்து வருகின்றனர்.

2001ல் இந்திய பிரதமர் அடல்பிஹாரி வாஜ் பாயி, 2007ல் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, 2008ல் ஜனாதிபதி பிரதிபா பாடில், 2010ல் பிரதமர் மன்மோகன் சிங், 2011ல் மக்களவை சபாநாயகர் மீராகுமார், 2012ல் துணை ஜனாதி பதி ஹமித் அன்சாரி என்று பல உயர்மட்ட இந்தியத் தலைவர்கள் வியட்நாம் சென்று இந்திய – வியட்நாம் நட்புறவை பலப்படுத்தி வருகின்றனர்.

அதேபோல் 2005ல் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் நாங்டக்மான், 2007ல் பிரதமர் நுகுயென் டான் துங், 2009ல் உதவி ஜனாதிபதி நுகுயென் தி டோன், 2010ல் தேசிய சபையின் தலைவர் நுகுயென் பு ட்ராங், 2011ல் ஜனாதிபதி ட்ருவங் டான் சாங், 2012ல் பிரதமர் நுகுயென் டான் டுங் ஆகியோர் இந்திய விஜயம் செய்தனர். 2013ல் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் நுகுயென் பு ட்ராங், நம் நாட்டிற்கு வருகை தந்தார். மார்க் சிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கும் விஜயம் செய்து பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தார். பொரு ளாதார, கலாச்சார ரீதியாக இந்தியா- வியட்நாம் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி யுள்ளன. குறிப்பாக 2007ல் கேந்திர உறவு உருவாக் கப்பட்டபின் இரு  நாடுகளுக்கிடையிலான நட்புறவும், ஒத்துழைப்பும் பலப்பட்டுள்ளது.

இந்திய – வியட்நாம் ஆறாம் ஆண்டு நட்புறவு விழா

இந்தப் பின்னணியில் தான் இந்திய வியட்நாம் நட்புறவு விழா மூலம் இருநாட்டு மக்களுக் கிடையிலான கலாச்சார பரிவர்த்தனை தொடங் கப்பட்டு அதன் ஆறாம் ஆண்டு விழா 2013 அக்டோபர் 20 முதல் 25 வரை ஆறு நாட்கள் வியட்நாமில் நடைபெற்றது. இந்தியாவிலிருந்து அகில இந்திய அமைதி மற்றும் நல்லுறவு கழகத்தின் (AIPSO) சார்பில் சென்ற 30 நபர் பிரதிநிதிக்குழுவில் இக்கட்டுரையாளரும் ஒருவர். 30 பேரில் 22 பேர் புதுச்சேரியிலிருந்தும் 5 பேர் தமிழகத்திலிருந்தும் 3 பேர் டெல்லியிலிருந்தும் சென்றனர். அவர்களில் 10 பேர் கலைஞர்கள்.

பிரதிநிதிகளின் தலைவர் தேசிய காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தேவி பிரசாத் திரிபாதி ஆவார். உதவித்தலைவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் பல்லவ் சென்குப்தா ஆவார். இந்தக் குழு வியட்நாம் தலைநகர் ஹனாய் அங்கிருந்து சுமார் 1000 கி.மீ தொலைவில் உள்ள மத்திய வியட்நாம் பகுதியின் முக்கிய நகரான டெனாங் மற்றும் அங்கிருந்து சுமார் 1000 கி.மீ தொலைவில் உள்ள தெற்கு வியட்நாம் பகுதியின் முக்கிய நகரான ஹோசிமின் நகரம் (முன்னாளில் சைகோன் என்று பெயர்) ஆகிய முக்கிய நகரங்களுக்கு சென்றது.

உயர்மட்டத் தலைவர்களுடன் சந்திப்பு

இந்திய பிரதிநிதிகள் ஹோசிமின் உடல் வைத் திருக்கும் சதுக்கம், டெனாங் அருகில் 200 ஆண்டு கால பழமைவாய்ந்த கிராமம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நேருக்கு நேர் நின்று போரிட்டு வீழ்த்திய குசி என்ற இடத்தில் உள்ள பதுங்குகுழிகள் உள்ளிட்ட பல்வேறு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை பார்த்து அறியும் வாய்ப்பைப் பெற்றனர். வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப் பினர் லீஹாங் ஆன் உள்ளிட்ட பல உயர்மட்ட தலைவர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இரு நாட்டு கலைநிகழச்சிகளும் கண்ணுக்கும் செவிக்கும் விருந்தாக அமைந்தன.  அத்துடன் சாதாரண மக்களிடம் உரையாடி, அவர்கள் வாழ்க்கை முறையை தெரிந்து கொள் ளும் வாய்ப்பும் இந்தியப் பிரதிநிதிகளுக்கு கிடைத்தது.

வறுமை ஒழிப்பு

போரினால் கடும் பாதிப்பிற்குள்ளான வியட் நாம் கடந்த 30 ஆண்டுகளில் பல துறைகளில் வியத்தகு முன்னேற்றமடைந்துள்ளது. 9 கோடி மக்கள் தொகையுடன் உலகிலேயே மக்கள் தொகையில் 13வது இடத்தில் உள்ள வியட்நாம் கடந்த 30 ஆண்டுகளில் வறுமையினால் வாடும் மக்களின் எண்ணிக்கையை 50 சதவிகிதத்தி லிருந்து 8 சதவிகிதமாக குறைந்துள்ளது. 84 சத விகித மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப் படுகிறது. 2020க்குள் வறுமையை முற்றிலுமாக ஒழிப்பதென்றும், அனைத்து மக்களுக்கும் பாது காப்பான குடிநீர் வழங்குவதென்றும் திட்ட மிடப்பட்டு அவை மக்கள் ஒத்துழைப்புடன் அமலாகி வருகின்றன. கல்வியில் அபரிமிதமான முன்னேற்றத்தை  வியட்நாம் அரசு ஏற்படுத்தி உள்ளது. அடிப்படைக் கல்வியும், முதியோர் கல்வியும் போர்க் கால அடிப்படையில் மேற்கொண்டதன் விளைவாக 98 சதவிகித மக்கள் கல்வியறிவு பெற்றவர்களாக (Literates) உள்ளனர். உயர்நிலைக் கல்வி (Secondary Level) வரை அனைத்து குழந்தைகளுக் கும் இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. பள்ளிக் கூடங்களில் ஆகப் பெரும்பாலானவை அரசுப் பள்ளிகளே. அங்கொன்றுமாக, இங்கொன்று மாக மிகச் சில தனியார் பள்ளிகளே உள்ளன. உயர்மட்டக் கல்வி வரை – மருத்துவம், பொறி யியல், சட்டம் போன்ற அனைத்தும் தாய்மொழி யிலேயே கற்பிக்கப்படுகிறது. விடுதலைப் போராட்ட வரலாறு பள்ளிப்பாடத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. கல்லூரி பாடத்தின் பகுதியாக மார்க்சிசம் லெனினிசம் கற்பிக்கப்படுகிறது.

குழந்தைகளுக்கு இலவச சுகாதார வசதி

சுகாதாரம் என்பது அனைத்து மக்களுமானதாக மாற்றப்பட்டுள்ளது. குழந்தை பிறந்தது முதல் ஆறு வயது வரை சுகாதார மருத்துவ வசதி முற்றிலுமாக இலவசமாக அரசால் வழங்கப் படுகிறது. ஆறு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் அமலில் உள்ளது. அதற்காகும் வருடாந்திர பிரீமியத் தொகையில் 80 சதவிகிதத்தையை அரசே ஏற்கிறது.

9 கோடி மக்களில் 90 சதவிகிதம் மக்கள் சுமார் 8 கோடி பேர் வியட்நாமியர்கள். மீதமுள்ளவர்கள் தாய், டியோ, ஹிமோங் போன்ற 54 பூர்வீக சிறுபான்மை இனத்தவர்கள். பூர்வகுடியினரில் பலர் வடக்கு வியட்நாமில், சீன எல்லைக்கு அருகிலுள்ள மலைப்பிரதேசத்தில் வசிக்கின்றனர்.

மதம் தனிப்பட்ட விஷயம்

புத்த மதமும், கன்பூசியஸ் மதமும் வியட்நாம் மக்கள் பின்பற்றும் மதங்களாக உள்ளன. முக்கிய நகரங்களிலும், சிற்றூர்களிலும் புத்த கோவில்கள் உள்ளன. ஆறுவருடங்களுக்கு முன்னால் டெனாங் அருகில் உள்ள மலைப்பிரதேசத்தில் 200 அடி புத்தர் சிலை வியட்நாம் அரசால் நிறுவப்பட்டுள்ளது. பச்சை பசேலன்ற ரம்மி யமான சூழலில் அந்த இடம் அமைந் துள்ளது. மதத்தைப் பொறுத்தவரை அது முழுக்க முழுக்க குடிமக்களின் தனிப்பட்ட விஷயமாக பார்க்கப் படுகிறது. அரசு நிர்வாகத்திலோ, நிகழ்ச்சி களிலோ எங்கும் மதம் இணைக்கப்படுவதில்லை. ஆகப்பெரும்பாலான மக்கள் விஞ்ஞான சோச லிசத்தில் நம்பிக்கை கொண்டவர்களாக உள் ளனர். வெளிநாட்டு தனியார் நிறுவனம் ஒன்று எடுத்த ஆய்வின் படி 81 சதவிதிகம் மக் களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.

சிறு குடும்பம்

மக்கள் மத்தியில் இரு குழந்தைகள் கொண்ட சிறு குடும்பத்திற்கான விழிப்புணர்வு பெருமளவில் மேற்கொள்ளப்படுகிறது. மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்ப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு பணியில் இருப்பவர்களுக்கு மூன்றாவது குழந்தை பிறந் தால் பதவி உயர்வு தள்ளி போடப்படுகிறது.

தொழிலாளர் நலன்கள்

தொழிலாளர்களின் வேலைநேரம் என்பது நாளொன்றுக்கு 8 மணி நேரம், வாரம் 5 நாட்கள் வேலை, இது அரசுத்துறை, உள்நாட்டு, வெளி நாட்டு, தனியார்துறை ஆகிய எல்லா துறையில் பணி புரியும் தொழிலாளர்களுக்கும் பொருந் தும். பன்னாட்டு கம்பெனிகள் அனைத்தும் வியட்நாம் நாட்டு தொழிலாளர் நலச் சட்டங்கள் படியே இயங்க வேண்டும். அவற்றை ஏற்றுக் கொண்டு தான் அவர்கள் தொழிற்சாலைகளை திறக்கிறார்கள்.

வேலையின்மைக்கு எதிராக

25 வருடம் பணி முடித்த அரசு/பொதுத் துறை ஊழியர்களுக்கு கடைசி சம்பளத்தில் 75 சத விகிதம் பென்சனாக வழங்கப்படுகிறது. தனியார் துறை ஊழியர்களுக்கு இதற்கு சற்று குறைவாக காப்பீட்டுடன் இணைந்த பென்சன் வழங்கப் படுகறிது. வேலையின்மை 4 சதவிகிதத் திற்கும் கீழே குறைக்கப்பட்டுள்ளது. முற்றிலுமாக ஒழிக்க கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த ஒரு வருடத்தில் 32 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப முன்னேற்றம் போன்ற ஏதாவது காரணத்தினால் வேலையிழக்க நேரிடும் தொழிலாளர்களுக்கு ஆறு மாத காலத்திற்குள் மாற்று வேலை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுவரை அவர் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 65 சதவிதிகம் தொகை வழங்கப்படும்.

ஆண் – பெண் சமத்துவம்

வியட்நாம் சுதந்திரப் போரில் பெண்களின் பங்கு மகத்தனாது. ஆண்களுக்கு இணையாக பெண்களும் களத்தில் இறங்கி போராடினர். பிரெஞ்சு, அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். அதன் காரண மாகவும், சோசலிசப் புரட்சியின் வெற்றிக்குப் பின் சோசலிச பண்பாட்டின் தாக்கம் காரண மாகவும் பாலியல் சமத்துவம் பெரிதளவு எட்டப் பட்டுள்ளது.

பெண்களுக்கெதிரான பாலியல் வன் கொடுமை என்பது மிகவும் அரிதான ஒன்று. சாலையில் பார்க்கும் போது இருசக்கர வாகனங் களில் பாதி பெண்கள் ஓட்டுவதாக உள்ளன. பெண்களில் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர் கள் உழைக்கும் பெண்கள். House Wife, Home Maker என்ற பதங்கள் எல்லாம் அவர்களுக்கு பழக்க மில்லாதவை. பெரும்பாலான திருமணங்கள் காதல் திருமணங்களாக பெற்றோர் சம்மதத் துடன் நடைபெறுவதால் நம் நாட்டில் நிலவும் பல பிற்போக்கு அம்சங்கள் அங்கே காணப்படுவதில்லை.

கொள்கை முடிவில் பெண்களின் பங்கு

வியட்நாம் அரசை விமர்சனப்பூர்வமாக பார்க் கும் ஒர் அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படியே தேசிய சபையில் உள்ளவர்களில் 27 சதவிகிதம் பெண்களும், குழுத் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களில் 42 சதவிகிதம் பெண்களும் மந்திரிகளில் 12 சதவிகிதம் பெண் களும் உள்ளனர். ஆசிய கண்டத்தில் உள்ள மற்ற முதலாளித்துவ நாடுகளை ஒப்புநோக்கும் போது வியட்நாமில் சமவேலைக்கு சம ஊதியம் பெரு மளவில் எட்டப்பட்டுள்ளதாக அத்தகவல் தெரிவிக்கின்றது.

ஆயினும் நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தின் மிச்ச சொச்சங்களில் சிறிதளவு அங்கும் நிலவுகிறது. மூடநம்பிக்கை, வீட்டுவேலை பெண்களைச் சார்ந்ததே என்ற மனோபாவம், பெண்களுக்கு எதிராக குடும்ப வன்முறை போன்றவை முற்றி லுமாக ஒழிக்கப்படவில்லை.

சோசலிச பாதையில் பீடு நடை

ஒட்டுமொத்தமாக நாட்டின் தேசிய வருமா னத்தை பெருக்கவும், எல்லோருக்கும் அதை பகிர்வதற்கும், ஏற்றுமதி அதிகரிப்பிற்கும், வறுமையை ஒழிப்பதற்கும் மாசற்ற சுற்றுச் சூழலை உறுதி செய்யவும் திட்டங்கள் தீட்டப்பட்டு அமல் படுத்தப்பட்டு வருகின்றன.

சோசலிச பதாகையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு, ஹோசி மின் வகுத்த பாதையில், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட் டுதலில் பொருளாதாரத்தில், பண்பாட்டில் வெளிநாட்டு உறவுகளை வளர்ப்பதில் பீடு நடைபோட்டு வருகிறது வியட்நாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s