மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


நவம்பர் புரட்சியின் விழுமியங்களும் நமது கடமைகளும்!


சோவியத்தின் சாதனைகளைக் கூறி சோவியத் நாட்டிற்கு சென்றுவந்தவர்களின் வாக்கு மூலத் தைக்காட்டி  பேசுவதைக் காட்டிலும் நவம்பர் புரட்சி விதைத்த விழுமியங்களை நினைவில் இருத்தி நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது. அந்த விழுமியங்கள் இன்று உலகெங்கிலும் அளவு கோலாக ஒவ்வொரு நாட்டிலும் வெவ் வேறு பெயர்களில் இருப்பதை நாம்அறிவோம். மானுட வளர்ச்சி குறியீட்டென் (Human Developement Index) அடிப்படையாகக் கொண்டே ஒரு நாட்டின் வலிமையை அளக்கும்  நடை முறைக்கு வந்ததே நவம்பர் புரட்சியின் கதிர்வீச்சு செய்த மாயம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மானுட வரலாற்றிலே பல புரட்சிகள் நிகழ்ந்த தாகக் கூறப்படுகிறது. புரட்சிகளின் புரட்சியாக, நாடுகளை விடுதலை செய்த புரட் சியாக உலகையே மாற்றி அமைத்த புரட்சியாக எழுந்த மகத்தான நவம்பர் புரட்சியின் விழுமியங்களை இருட்டில் தள்ள இவைகளை இன்று காட்டுகி றார்கள்.  நவம்பர் புரட்சியை ரஷ்யாவில் நடந்த விபத்து என்று சித்தரிக்கிறார்கள்.  அமெரிக்க  சுதந்திரப் போரை (1775-1783) தனிநபர் உரி மையை நிலை நாட்டிய புரட்சி என்பர். அடுத்த பிரெஞ்சு புரட்சியை (1789-1799) சமத்துவ உணர்வை ஊட்டிய புரட்சி என்பர். இங்கிலாந்து தொழில் புரட்சியை (1820-1840) நவீன எந்திர சக்தியை புகுத்திய புதுமை என்பர். மன்னர் களைப்போல் சண்டை போடாமல், கொள்ளை அடிக்காமல், அபகரிக்காமல் பிரபுக் களைப் போல் யாரையும் அடிமை ஆக்காமல் வர்த்தகத் தின் மூலம் யார் வேண்டுமானாலும் செல்வம் சேர்க்கும் உரிமையை தந்த புரட்சி என்பர். ஆனால் வரலாற்றையும் இன்றைய நடப்புக் களையும் ஒப்பு நோக்கிளால் அதனதன் இலக்கு களை அந்த புரட்சிகள் எட்டவில்லை என்பது தெரியும். அந்தப் புரட்சிகள் தனி நபர் உரிமையை நடைமுறையில் மறுத்தன, சமத்துவம் இயற் கைக்கு விரோதம் என்று விளக்கம் கொடுத் தன. யுத்தம் வாழ்வின் அம்சம் என்றன.

இன்றும் அமெரிக்காவில் அடிமைத்தனத்தின் சாயல்கள் நீடிப்பதை காண முடியும். இன்று அமெரிக்காவில் தனிநபர் வாழ்வுரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, பத்திரிகை சுதந்திரம் படுகிற பாட்டை ரஷ்யாவில் தஞ்சம் புகுந்திருக்கும் ஸ்நோடனிடம் கேட்க வேண்டும்.

பிரெஞ்சு புரட்சி மன்னர் ஆட்சியை ஒழித்ததே தவிற ஏற்றத் தாழ்வையோ பிரபுத்துவ ஆடம் பரத்தையோ ஒழித்தாக கூற முடியாது. பிரெஞ்சு மொழியும், பிரெஞ்சு பூர்சுவாவும் உசத்தி மற்றது தாழ்வு என்ற அசமத்துவ பார் வையே அங்கு நிலவுவதைக் காணலாம். இங்கிலாந்து தொழில் புரட்சியோ நாடுகளை அடிமைப்படுத்தியது, ஆயுதப் போட்டியை உருவாக்கியது. இரண்டு உலக யுத்தங்களை கொண்டு வந்தது. மனிதனை மனிதன் அடக்காமல், மனிதனை மனிதன் கொல்லாமல், நாடுகளை அடிமைப் படுத்தி சுரண்டாமல் வாழ முடியாது என்று இருக்கும் புவிச்சூழலை இந்த மூன்று புரட்சி களாலும் மாற்ற இயலவில்லை. மாற்றத்தை நோக்கி திருப்பவுமில்லை. ஆதிகாலத்தில் மனிதன் இனங்களாக பிரிந்து சண்டை போட்டுக் கொண்டிருந்தான். இப்பொழுது இந்த புரட்சிகள் நாடுகளாக பிரிந்து சண்டை போட வைத்துவிட்டன. சண்டை போடாமல் தனது இனத்தின் தனித்துவத்தை காப்பாற்ற முடியாது என இந்த புரட்சிகள் கருதவைத்துவிட்டன. சுற்றிலும் நடப்பதென்ன?

சம மதிப்புள்ள சரக்குகளே பரிவர்த்தனை ஆகுமிடமாக சந்தையை ஆக்குவதை இலக்காகக் கொண்ட உலக வர்த்தக அமைப்பால் அதை உத்தரவாதம் செய்ய இயலவில்லை. இந்தப் புரட்சிகளால் ஏற்பட்ட  ஒரே புதுமை(!) சமூக உழைப்பை வேலை இல்லாத் திண்டாட்ட மெனும் பூதத்திடம் தின்னக் கொடுத்து விட்டது தான். இன்று உலகமயமாகி இருப்பது இரண்டு தான். ஒன்று டாலர். மற்றது வேலை யில்லா திண்டாட்டம்.  இந்த புரட்சிகளின் விளைவுகளை ஆய்வு செய்த 19 ஆம் நூற்றாண்டின் இரண்டு நாடோடி இளைஞர்கள் இந்த புரட்சிகளினால் உருவான ஒரு கருவின் மகத்துவத்தை உலகறியச் செய்தனர் அவர்கள் வேறுயாருமில்லை. 35 வயதே ஆன மார்க்சும் 33 வயதே ஆன எங்கெல்சும் ஆவர்.

இந்த மூன்று புரட்சிகளும், முன்வைத்த முழக் கங்களின் சுதந்திரம், ஜனநாயகம், சகோதரத் துவம். இலக்கை எட்டத் தவறினாலும் அந்த இலக்கை நனவாக்கும் ஆற்றல் படைத்த பாட் டாளிவர்க்கம் எனும் சமூக சக்தியை எதிர் வினை யாக உருவாக்கிவிட்டன என்பதை சுட்டிக்காட்டி னர். அவர்களால் வழிநடத்தப்பட்ட அமெரிக்க ஐரோப்பிய பாட்டாளிவர்க்கத்தின் அமைப்பும் இயக்கமும் காட்டிய வழியில் ரஷ்யாவில் நவம்பர் புரட்சி எழுந்தது. பாரிஸ், லண்டன், நியுயார்க் இந்த மூன்று நகரங்களின் விழிப் புணர்வு பெற்ற பாட்டாளி வர்க்க பகுதிக்கு நவம்பர் புரட்சி கடமைபட்டிருக்கிறது. அந்த நவம்பர் புரட்சி உருவாக்கிய சில விழுமியங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நவம்பர் புரட்சிதான் லெனினையும், செயலுக்கு வழிகாட்டியான அவரது சித்தாந்தத்தை யும் உலகறியச் செய்தது. முதல் உலக யுத்தம் நடக் கிறபொழுது ரஷ்யாவும் ஜெர்மனியும் கடுமை யாக சண்டை போட்டு கொண்டிருந்த தருவாயில் ரஷ்யாவில் கலவரம் வெடித்தது. மன்னர் சிரச் சேதம் செய்யப்பட்டு கெரன்ஸ்க்கி தலைமையில் அரசு உருவாகியது. அன்று கெரன்ஸ்க்கி அரசு பிரிட்டனின் கட்டளையை ஏற்று  யுத்தத்தை தொடர்ந்தது. வெளிநாட்டில் தலைமறைவாக வாழ்ந்த லெனின் ரஷ்யாவிற்குள்ளே பல நாட்டு நண்பர்கள் உதவ உள்ளே போனார். அன்று ஒற்றர்கள் மூலம் செய்தி அறிந்த இங்கிலாந்து நாட்டு யுத்த மந்திரி சர்ச்சில் ஜெர்மன் அரசு ரஷ்யாவை கைப்பற்ற உள்நாட்டு கலவ ரத்தை விரிவாக்கும் நோக்குடன் காலரா, டைபாயிடு கிரிமிகளை டப்பாவில் அடைத்து குடிநீரில் கொட்டுவது போல் லெனின் என்ற பத்திரிகையாளரை குட்ஸ் வண்டியில் அடைத்து அனுப்பியுள்ளது என்று அறிவித்தார். யுத்தத்தை தொடர திட்டமிட்ட ரஷ்ய அரசு லெனினை ஜெர்மன் ஒற்றன் என்று அறிவித்தது அவர் படத்தை வெளியிட்டு காட்டிகொடுப்பவர் களுக்கு பரிசும் அறிவித்தது. லெனின் எழுத்துக் களை ரகசியமாக படித்தவர்களைத் தவிர மற்ற வர்களுக்கு லெனின் யார் என்றே தெறியாது. அவர் எழுத்தை படித்தவர்களுக்கும் அவரது முகம் பரிட்சயமில்லை. கெரன்சிக்கி அரசின் கெடுபிடியாலும் சர்ச்சிலின் அவதூறு களாலும்  லெனின் உலகளவில் பிரபலம் ஆகிறார் ரஷ்ய மக்கள் நேசிக்கும் தலைவராக,  ஆசானாக (தூர இருந்து போதிப்பவர்) வாத்தி யாராக (நெருக்கமாக இருந்து கற்றுக் கொடுப்பவர்) ஆகிறார்.  பிராவ்தா என்ற பத்திரிகையில் அரசியல் பொரு ளாதாரம் பற்றியும். சுரண்டல் பற்றியும், யுத்த எதிர்ப்பு பற்றியும் கருத்துக்களை எழுதியவர் இவர்தான் என்பதை மக்கள் அறிந்தவுடன் அவர் மீது வறளாத நேசம் கொள்கின்றனர். லெனின் இல்லையென்றால் புரட்சியே ஏற்பட்டிருக்காது என்ற நம்பிக்கை பரவுகிறது. லெனின் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு மாபெரும் சமூக மாற்றத்திற்கு என்ஜினாக இருந்த கட்சியையும் அதனைக்காத்த மற்ற முன்னோ டிகளையும் அங்கிகரிக்க மறுக்கிற போக்கு ஆபத்து என்று லெனின் கருதுகிறார். யாரோ ஒரு ஞானி வழிகாட்ட நவம்பர் புரட்சி எழவில்லை. நவீன பாட்டாளிவர்க்க போராட்டத்தால் புரட்சியாளர்கள் உருவாக்கப்படுகிறார்கள். ரஷ்ய உழைப்பாளிகளின் கட்சியின் 50 ஆண்டுகால போராட்டங்களின் தோல்விகளால் கற்றதைக் காட்டி ரஷ்ய புரட்சி தனி நபர் தலைமை தாங்கி நடக்கவில்லை, பொதுமக்களின் ஆதரவு பெற்ற ஒரு புரட்சிகர கட்சியின் ஆக்கமே நவம்பர் புரட்சி என்பதை காட்டுகிறார். அந்த புரட்சிக்கு வழிகாட்டியாக ஐரோப்பிய அமெரிக்க பாட் டாளி வர்க்க போராட்டக் களத்தில் தயாரிக்கப் பட்ட மார்க்சிசம் இருந்தது என்றார். ரகசிய பத்திரிகை விநியோகித்த பாபுஷ்க்கின் என்ற தோழரை சார் அரசு உயிரோடு புதைத்த நிகழ்வை காட்டி ஒரு புரட்சிகர கட்சியின் உயிர்மூச்சு அதன் ஊழியர்களே என்பதை அறிவுறுத்தினார். ஒரு புரட்சிகர கட்சிக்கு தலைமைக்கு பஞ்ச மிருக்காது. ஊழியர்கள் பஞ்சமே அதன் பல கீனம் என்றார்.

பலவகை ஆற்றல் கொண்ட முன்னோடிகளின் கூட்டமைப்பாக அந்த கட்சி இருந்தது. இதில் ஒவ்வொருவரின் ஆற்றலைப் பொறுத்தே புரட்சியின் தலைவிதி நிர்ணயிக்கப்பட்டது. கட்சி ஊழியனின் உற்சாகம் உறுதி, அரசியல் ஞானம், மக்களோடு நெருக்கம். தூங்கும் மக்க ளையும், திசை மாறி போனவர்களையும் நவம்பர் புரட்சி யின் இலக்கை நோக்கி இழுக்கும் ஆற்றல் இவைகளே வெற்றிக்கு உத்தரவாதமளித்தது. ஏகாதிபத்தியவாதிகளோ சோவியத்தை ஒழித் துக்கட்ட திட்டமிட்டனர். இதனால் சோவியத் பட்ட சிரமம் சொல்லில் வடிக்க இயலாது 3 ஆண்டுகள் உள்நாட்டு யுத்தத்தை அது சந்தித் தது 12 நாடுகளின் படைகள் உள்ளே நுழைந்தன. 1871இல் பாரீஸ் கம்யூனை ஓடிப் போன பிரெஞ்சு அரசு வேண்ட, ஜெர்மன் படைகள் புகுந்து அழித்ததுபோல பிரிட்டனும் அதனுடைய கூட்டாளி நாடுகளும் படைகளை அனுப்பி இதையும் ஒழிக்க முயற்சித்தனர். எதிரி களிடம் இல்லாத யுக்தியை சோவியத் ராணுவ வீரர்கள் கையாள சோவியத்கூடி முடிவு செய்தது. முதல் சர்வதேச தொழிலாளர் சங்கம் ஐரோப்பா முழுவதும் விதைத்திருந்த சோசலிச கருத்துக்க ளால் ஈர்க்கப்பட்டவர்களை தங்கள் பக்கம் இழுப்பது, நான்காண்டு ஆண்டுகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய மக்க ளின் ஆதர வைப் பெறுவது. இந்த முயற்சிகளில் ஈடுபட்ட தால் பிரிட்டீஷ் படை ரஷ்யாவிற்குள் இறங்கி யதை கண்டித்து பிரிட்டனில் தொழிலா ளர்கள் குரல் கொடுத்தனர். இது சோவியத் யுக்தியின் எடுபடும் தன்மைக்கு எடுத்துக்காட் டானது. அதேபோல் சோவியத் ராணுவ வீரர் களின் அரசியல் ஞானமும், சோசலிச லட்சிய உறுதியும் ஆங்காங்கு கள அளவில் இருந்ததைப் பொறுத்து இந்த களமட்ட சமரச முயற்சியின் பலன் இருந்தது என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இந்த முயற்சிகள் ஓரளவுதான் வெற்றி பெற்றது. இருந்தாலும் உள்நாட்டு சுரண்டும் கூட்டம் (பிரபுக்கள், முதலாளிகள்)வெண்படை அமைத்து. மாடுகளைக் கொன்று பால் தட்டுப் பாட்டை உருவாக்கினர், தானிய கிடங்குகளை எரித்தனர். நிராயுத பாணிகளான மக்களை கொன்று குவித்தனர். 70 லட்சம் குழந்தைகள் அனாதைகளாயின. சுருக்கமாக 3 ஆண்டு உள் நாட்டு யுத்தம் மக்களை விரக்தியின் விளிம்பிற்கு துரத்தியது. போல்ஷிவிக் கட்சி ஊழியர்களின் விவேகமும், மார்க்சிச ஞானமும், மக்களின் அன்றாட தேவைகளான உணவு, பால், இவை களை பகிர்ந்து கொடுக்க அவர்களது விருப்பு வெறுப்பற்ற முயற்சியும் சோவியத் ஆட்சி முறைக்கு, மக்களின் ஆதரவை உள்நாட்டு யுத்த காலத்தில் திரட்டிக் கொடுத்தது. பெரும்பாலான கட்சி ஊழியர்கள் மேல் இருந்து கீழ் வரை அதி காரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் மக்களின் சேவகர்களாக நடந்து கொண்டனர். எல்லா மட்டங்களிலும் உள்ள குறைகளை சுட்டிக் காட்டும் சுதந்திரம் மக்களுக்கு இருந்தது (பின் நாளில் இந்த சுதந்திரம் தேய்ந்தது என்பது தனி வரலாறு) பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் அதிகாரம் சோவியத் அமைப்பில் இருந்ததால் மக்களின் நம்பிக்கை உறுதிப்பட்டது..

கடந்தகாலப் புரட்சிகளின் சமத்துவம், சகோ தரத்துவம், தனிநபர் உரிமை (லிபர்ட்டி) இவை களை நடைமுறையில் ஒவ்வொருவரும் அனுப விக்க தேவையான அமைப்பை உருவாக்க கடந்த கால புரட்சியாளர்கள் தவறினர். சோவியத் அமைப்பு மக்களின் எதிர்பார்ப்பாக இருந்த அந்த முழக்கங்களை உத்தரவாதம் செய் யும் அமைப்புக்களை உருவாக்கியது. அதில் குறிப் பிடத்தக்க அமைப்பு இளைஞர்கள் அமைப்பு (காம்சோமால்).

கடந்த காலப் புரட்சிகளின் இலக்குகளை அடைய வேண்டுமானால் முதலில் ஒவ்வொரு மனிதனும் உழைப்பை நேசிப்பவனாக மாற வேண்டும். அடுத்து யுத்தமில்லா உலகு வேண்டும், அதைவிட நாடுகளிடையே ஒத்துழைப்பு வேண்டும். அதையும்விட விஞ்ஞானத்தின் இலக்கு மாற வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக தனிநபர் உரிமை, பெண்விடுதலை, குடும்பம், கல்வி, ஆரோக்கியம் இவைகளில் முற்றிலும் புதிய அணுகுமுறை வேண்டும். விடாமுயற்சியும் உலக நாடுகளின் அனுபவங்களை பகிர்வும் செய்யாமல் இந்த மாற்றங்களை கொண்டுவர இயலாது என்பதை போல்ஷிவிக் கட்சி உறுப்பினர்கள் உணர்ந்தனர், இதற்கு கட்சி மட்டும் போதாது. மக்களின் பங்களிப்பை உத்த ரவாதம் செய்ய வேண்டும். சோவியத் மக்கள் மட்டும் போதாது. உலக மக்களோடு நல்லுறவு வேண்டும்.  சோவியத்தை இந்த இலக்குகளை நோக்கி செயல்பட வைக்க வேண்டும் என்பதையும் உணர்ந்தனர்.

சோவியத் என்பது ஒரு நாடல்ல, உலக நாடு களின் பாட்டாளி வர்க்கமும், அறிவு ஜீவிகளும் ஆதரவு தந்து ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தின் விழிப்புணர்வு பெற்ற முன்னோடிகள் உரு வாக்கிய முன்மாதிரி சமூகம். எனவே உலக விஞ்ஞானிகளே. உழைக்கும் வர்க்கமே உங்களது ஒத்துழைப்பு தேவை என்று ஆதரவு திரட்டதிக் கெட்டும் தூதுவர்களை சோவியத் அரசு அனுப்பியது. மக்களின் அடிப்படை தேவை களுக்கான பொருளுற்பத்தியை பெருக்க ஆய்வு களை மேற்கொள்ள விஞ்ஞானிகளை வேண்டியது. அதற்காக நிதி ஒதுக்கியது. கஜானா வில் நிரம்பிக் கிடந்த தங்கத்தை அள்ளி கொடுத்து விஞ்ஞானிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி தகவல்களை  சேகரித்தது. ஐந்தாண்டு திட்டத்தை அறிவித்தது. அனைவருக்கும் கல்வி போதிக்கும் முறையை புகுத்தியது. ஒருவர் ஒருவருக்கு கற்றுக் கொடுக்கும் முறை (Each one teach one) மூலம் முதியோர் கல்வியை முதன் முதலாக அறிமுகப் படுத்தியது. ஒவ்வொரு மனி தனையும் உழைப் பாளியாகவும் படைப்பாளி யாகவும் ஆக்குவதே இந்த கல்வியின் இலக்காக இருந்தது. உற்பத்தித் திறனை உயர்த்தும் புதிய தொழில் நுட்பங்களை கண்டுபிடிக்கும் ஆற்றலை உருவாக்க உழைப்பாளர்கள் பங்கேற்கும் இயக்க மாக ஆக்கியது. அன்று ஸ்டாக்னோவிச் இயக்கம் உலக நாடு களின் கவனத்தை ஈர்த்தது. கர உழைப்பு கருத் துழைப்பு இரண்டையும் பிரித்து முரன்பட வைப்பதின் மூலமே முதலாளித்துவம் தொழிற் புரட்சியை கண்டது. ஒரு பகுதி உழைக் கும் மக்களை எந்திரத்தை ஓட்டும் எந்திரமாக் கியது. ஸ்டாக்னோவிச் இயக்கமோ உழைப்பாளிகளின் விஞ்ஞான அறிவை உயர்த்தி படைப்பாளி யாகவும் ஆக்கியது அதற்கேற்றவாறு வேலை நேரத்தை குறைத்தது. கடின உடலுழைப்பு தேவைப்படும் வேலை நேரத்தை குறைத்தது. ஸ்டாக்னோவிச் இயக்கம் கண்ட தொழில் நுட்ப மேன்மைகள் உலகளவில் பாராட்டபட்டன. இன்று பல தனியார் நிறுவனங்கள் தொழிலா ளர்களின் படைப்புத் திறனை பயன்படுத்தும் நிர்வாக முறையை பின்பற்றுவதைக் காணலாம்.

மக்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை சொல்லும் வகையில் வரலாறு எழுத வரலாற்று ஆய்வாளர்களுக்கு சோவியத் வேண்டுகோள் விடுத்தது. சமூக இயல் என்ற புதிய வரலாற்று ஆய்வை பல்கலைக்கழகங்கள் துவக்கின.. உலக நாடுகளின் சமூக இயலை இந்த ஆய்வாளர்கள் துவக்கினர். இந்த வகையில் இந்திய சமூக இயலுக்கு சோவியத் ஆய்வாளர்களின் பங்கு அளப்பரியது. இந்திய பாடப் புத்தகங்களிலே சிப்பாய்க் கலகம் என்று இருந்ததை முதல் சுதந்திரப் போர் என்று திருத்த மார்க்ஸ் ஏங்கெல்ஸ் எழுத்துக்களை அறிமுகப்படுத்தியது சோவியத் ஆய்வாளர்களே. வர்ணாஸ்ரம தர்மம் நிலவிய காலத்திலிருந்து கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி வரை வர்ணாஸ்ரம அதர்ம பகிர்வும், நிலவரிக் கொடுமைகளும் விவசாயிகளை கலவர நிலைக்குத் தள்ளி ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தது என்ற வரலாற்று உண்மையை வெளிக் கொண்டுவர சோவியத் ஆய்வாளர்களின் பங்களிப்பே துவக்கமாக இருந்தது.

சோவியத் குடும்ப உறவில் பாசம் அடிப்படை யாவதற்கான சூழலை உருவாக்கியது. திருமண மாகாமல் குழந்தை பெற்றெடுக்க நேர்ந்தால் அந்த தாயை இழிவுபடுத்தாமல் இருக்க சோவியத் அரசு சட்டமியற்றியது. குழந்தை வளர்க்க மான்யம் கொடுத்தது. தாய் சொந்த வருவாயில் வாழ வேலை கொடுத்தது. முன் னேறத் தேவையான கல்விகற்க வேலை நேரத்தை குறைத்தது. மதவாதிகள், சனாதன வாதிகள் இது குடும்பத்தை அழித்துவிடும் என்று அவதூறு செய்தனர். ஆனால்  நடந்ததுவேறு. பாசத்தை அடிப்படையாகக் கொண்ட குடும்பங்கள் நிலைத்தன. பணப்பட்டுவடா குடும்பங்கள் சிதறின. கடந்த காலத்திலும் இப்படி நிகழ்வது வாடிக்கை. அதில் பெண்கள் அனா தையாவது நடைமுறையாக இருந்தது. சோவியத் அந்த நிலைமையை மாற்றி உலகிற்கு வழி காட்டியது.

உள்நாட்டு கலவரத்தால் 70 லட்சம் குழந்தை கள் அனாதைகளாயினர். சோவியத் அரசு தங்கு மிட பள்ளிகள் அமைத்து அவர்களுக்கென பாடத்திட்டங்கள் உருவாக்கி சமூக விரோதி களை உருவாக்கும் சூழலை வெகுவாக குறைத்தது. இன்று அமெரிக்காவை திக்குமுக்காடச் செய்யும் துப்பாக்கி கலாச்சாரம். போதை பழக்கம் இவை களை நாம் அறிவோம். சோவியத் அன்று உரு வாக்கிய தங்கி படிக்கும் பள்ளிகளும். இளைஞர் அமைப்பும் (காம்சோமால்) இல்லை என்றால். முதல் உலக யுத்தம் முடிந்த தருவாயிலேயே ரஷ்யா இன்னொரு அமெரிக்காவாக ஆகியி ருக்கும். அதனுடைய கல்வி முறை உலகையே கவனிக்க வைத்தது. பல மேலை நாடுகளில் சிறார் களை திருத்தும் பள்ளிகள் சோவியத் கல்வி யாளர் மெக்கரங்கோவின் வழியை பின்பற்றத் தொடங்கின. சோவியத் கல்வியின் இன்னொரு சிறப்பு நர்சரி பள்ளியிலிருந்து உயர் கல்வி வரை தாய் மொழி கல்வியானது. குழந்தைப் பருவமே எதிர் கால ஆளுமைக்கு அடிப்படை. மதபோதனை குழந்தைப் பருவத்திலேயே ஊட்டப்படுவதால் ஒருவன் அல்லது ஒருத்தியின் எதார்த்தங்களை புரியும் ஆற்றலை வெகுவாக குறைத்துவிடுவதை காண்கிறோம். எனவே மதமாற்றப் பார்வை யோடு குழந்தைகளுக்கு போதிக்கிற பாடத்திட் டங்கள் உருவாக்கப்பட்டன. கார்ட்டூன்கள், கதைகள். புராணங்கள் எல்லாமே நல்லதை சொல்லுகிற முறையில் பயன்படுத்தப்பட்டன.  பழிக்குப்பழி வாங்குவது சுயநலமாய் இருப்பது நிறைந்த மனதை தராது என்பதையும். பிறருக்கு உதவுவது. இயற்கையின் சாவல்களை சந்தித்து உயிர்களைகாப்பது சண்டையை தவிர்பது. தற்காப்பு முறைகளால் தப்புவது மனநிறைவை தரும் என்று  உணரவைக்கும் கதைகளாகவும் அவைகள் இருந்தன.

பள்ளிப் பருவத்திலேயே சிக்கல்களை சந்திக்கும் மனோதிடத்தை உரு வாக்க குழந்தைகளால் நடத்தப்படும் ரயில்வே அமைப்பு உலக நாடுகளை பின்பற்ற வைத்தது. போலந்தில் சோசலிச ஆட்சி முறை இன்று இல்லை ஆனால் அக்காலத்தில் உருவான குழந்தைகள் நடத்தும் ரயிலமைப்பு இன்றும் உள்ளது. சோவியத் மருத்துவம் நோய் தடுப்பு. தகுதி பெற்ற மருத்துவர்கள் மூலம் உயர்ந்த சிகிச்சை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல் ஆகிய இரண்டு அடிப்படைகளை கொண்டிருந்தது. அரசே இதற்கான செலவை செய்தது. படுக்கை வசதியுடன் மருத்துவமனைகள் கட்டப்பட்டன. உழைப்பாளிகளின் ஆரோக்கியத்தை முதன்மை படுத்தியது. இலவச மருத்துவத்தின் மூலம் கொடுக்கிற காசுக்கேற்ற வைத்தியம் என்ற ஏற்றத் தாழ்வை ஒழித்துக் கட்டியது. விமானங்கள், ஹெலிகாப்படர்கள் ஆம்புலன்சாக பயன்படுத்தப்பட்டன. (அன்றைய தேதிகளில் உலகிலேயே மலிவான உள்நாட்டு விமானப் போக்குவரத்தை சோவியத் நடத்தியது. ஆடம்பர கார்கள் உற்பத் திக்கு கவனம் செலுத்தாமல் டிராக்டர், பஸ், லாரிகள், விமானங்கள் இவைகளே பெறுமளவில் உற்பத்திக்கு அதிக கவனம் செலுத்தியது) பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் இதன் பிறகு மருத்துவத்தை இலவசமாக்கியது. இப்பொழுது சுரண்டல் முறைக்கு வேட்டு வைக்கும் என்று பயந்து மருத்துவத்திலும் பணமாக்கும் முறையை புகுத்துகின்றன. சோவியத் உருவாக்கிய விழுமியங்களில் மானுடம் இருக்கிற வரை மறக்க முடியாத ஓன்றுண்டு. அது விஞ்ஞான தொழில்நுட்பங் களை பொது சொத்தாக்கி உலகமயமாக் கிடும் இயக்கத்திற்கு வித்திட்டது. தொழில்நுட்ப ஞானத்தை பகிர்வதை கொள்கையாக ஆக்கியது. பிறநாட்டு விஞ்ஞானிகளோடு கூட்டாக ஆய்வு செய்வதை ஊக்குவித்தது. அதற்கு அடையாள மாக இன்றும் மிர் என்ற செயற்கை விண்கலம் ஆய்வகமாக சுழன்று வருவதை காணலாம்.

இன்று 12 நாடுகள் அதனை ஆய்வாகமாக பயன்படுத்துவதை காணலாம். இன்று அறிவு சொத்து பற்றி குழப்பமான கருத்துக்களே நிலவுகிறது. அறிவு சொத்து வர்த்தக ரகசியமா கவும் பிறர் உழைப்பை சுரண்டும் கருவியாகவும் இருக்கிற வரை தேயுமே தவிர வளராது என்பது அனுபவம். இதை விஞ்ஞானிகள் அறிவர். யுத்த காலத்தில் கூட பகைமை நாட்டு விஞ்ஞானிகள் கலந்துறையாடுவதை கண்டிருக்கிறோம். சில விஞ்ஞானிகள் தங்களது கண்டுபிடிப்புகளை காப்புரிமை பெற மறுப்பதை காண்கிறோம். உதாரணமாக போலியோ தடுப்பு மருந்தை கண்டு பிடித்த அமெரிக்க விஞ்ஞானி ஜோனாஸ் சால்க் தனது கண்டுபிடிப்பை காப்புரிமை பெற மறுத்து விட்டார். அவர் காப்புரிமை பெற்று இருந்தால் பில்கேட்டை விட அதிக பணத்தை குவித்திருப் பார். பல கோடி இளம்பிள்ளைவாத நோய்கண்ட ஏழை நாட்டு ஏழை வீட்டுக் குழந்தைகள் அவரது பண மலையைப் பார்த்து. இது போலியோ தடுப்பு மருந்து உருவாக்கிய பணமலையல்ல. தடுப்பு மருந்தை கிடைக்காமல் செய்து வளர்ந்த பணமலை என்று கண்ணீர் விட்டிருப்பர். சமீபத்தில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் கிரகங்களை ஆய்வு செய்யும் தொழில்நுட்ப முன்னேற்றம் பற்றி கருத்தரங்கம் நடத்திட்டமிட்டது. அமெரிக்க அரசு காப்புரி மையை ஏற்காத சீன நாட்டு விஞ்ஞானிகளை இதற்கு அழைக்க கூடாது என்று தடை உத்திரவு பிறப்பித்தது. ஆனால் விஞ்ஞானிகளில் அறிவு சொத்து பற்றிய பார்வையில் தெளிவு உள்ளவர்கள் இந்த அரசியல் முடிவை கண்டித்தனர். அவர்களை தடுத்தால் தாங்களும் கலந்து கொள்ள மாட்டோம் என்றும் அறிவித்தனர். அமெரிக்க அரசு பின் வாங்கியதாக தகவல். அறிவு சொத்தை பொது சொத்தாக கருதினால்தான் தொழில்நுட்ப அறிவு வளரும் அது சரக்குற்பத்திக்கான அவசிய நேரத்தை குறைக் கும். அது விலைகளை குறைக்கும் போக்கை உருவாக்கும் என்பது நவம்பர் புரட்சி உருவாக்கிய கோட்பாடு. நவம்பர் புரட்சி விதைத்த அறிவுச் சொத்து கோட்பாடு எனும் விழுமியத்தை முதலாளித்துவ அரசியல்வாதிகளும் பணவாத பொருளாதார நிபுணர்களும் மறுத்து வருவதால் இன்று நாம் காண்பதென்ன? விலைகளை உயர்த்தும் சந்தை பொருளாதார நெருக்கடி எனும் படியில்லா கிணற்றிலே மக்களை தள்ளி விடுவதை காண்கிறோம்.

ஒவ்வொரு மனுசனையும் மனுசியையும் உழைப்பாளியாகவும். படைப்பாளியாகவும் ஆக்குவது, குடும்ப உறவில் பாசத்தை அடிப்படை யாக்குவது. அறிவு சொத்தை சுதந்திரமாக வளரவிடுவது. ஆதிகால புரட்சிகளின் முழக்க மான சமத்துவம், சகோதரத்துவம், தனிநபர் சுதந்தரம் இவைகளை நடைமுறைப்படுத்துவது ஆகிய நவம்பர் புரட்சி விதைத்த விழுமியங்களை நாம் என்ன செய்யப் போகிறோம்? போய் விட்டதே என்று புலம்ப போகிறோமா? பட்டை தீட்டாத அந்த வைரங்களை பட்டை தீட்டி மானுடம் பயனுறச் செய்யப் போகிறோமா?

உலகை மாற்றுதல் புரட்சி என்பது உண்மைதான், ஆனால் – அதற்கு முதலில் உன்னை மாற்றுதல் வேண்டுமென்பதை உணர்வாயா? –  கவிஞர் துரை.சண்முகம்Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: