மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


உக்ரைன் – அரங்கேறும் ஏகாதிபத்திய நாடகம்


பாலசுப்பிரமணியன்

முந்தைய பனிப்போர் அரசியலுக்குப் பிறகு கிழக்கு – மேற்கு நாடுகளிடையே மிகப்பெரும் நெருக்கடி உருவாகி வருவதாக வரலாறு ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

உக்ரைனில் தற்போது ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியிருப்போருக்கும் எதிர்த்து நிற்கும் ரஷ்ய ஆதரவாளர்களுக்குமிடையே கடும் மோதல் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன; உக்ரைனின் தென்பகுதியில் உள்ள நகரமான ஒடிச்சாவில் ஒரு தொழிற்சங்க கட்டிடத்திற்குள் அரசுக்கு எதிர்ப்பாளர்களாக இருந்த 42 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். சென்ற பிப்ரவரி மாதம் ரஷ்ய ஆதரவாளர் என கருதப்பட்ட உக்ரைனின் ஆட்சித் தலைவர் விக்டர் யானுகோவிச் அப்பொறுப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு மிகவும் மோசமான அரசியல் சூழல் உருவாகியுள்ளது. உள்நாட்டுப் போர் விரிவாக நடத்தப்படுமென்றும் உக்ரைன் பல துண்டுகளாக சிதைந்து போகுமென்றும் அரசியல் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவை திடீரென்று வெடித்த நிகழ்வுகள் அல்ல. நீண்ட காலமாக தீட்டப்பட்ட ஏகாதிபத்திய சதித் திட்டத்தின் விளைவுகளை உக்ரைன் சந்திக்கிறது.

ஒரு பின்னோக்கி பயணம்

சோவியத் யூனியனின் ஒரு குடியரசாக உக்ரைன் இருந்தது. 360 ஆண்டுகளுக்கு முன் ரஷ்யப் பகுதியாக அது இணைக்கப்பட்டது. வரலாற்று ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் ரஷ்யாவுடன் உக்ரைன் பலமான இணைப்பை பெற்றிருந்தது. சோவியத் ஆட்சிக் காலத்தில் ரஷ்யப் பகுதிக்கு அடுத்தாற்போல் மிகப் பெருமளவில் பொருளாதார வளர்ச்சியினை பெற்ற குடியரசாக இருந்தது. சோவியத் யூனியன் சிதைவுக்குப் பிறகு நிலைமை பெருமளவு மாறிவிட்டது. ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளைக் காட்டிலும் பொருளாதார மேன்மை பெற்றிருந்த உக்ரைன் அந்த நிலையிலிருந்து கீழிறங்கத் தொடங்கியது; பொருள் உற்பத்தி, விவசாய உற்பத்தி என்ற அனைத்து அம்சங்களிலும் நெருக்கடியினை சந்தித்தது. சோசலிச அமைப்பை கைவிட்டு முதலாளித்துவ – புதிய தாராளமயக் கொள்கைகளை உக்ரைன் ஏற்றுக் கொண்டதன் விளைவுகளை அந்த குடியரசு சந்தித்தது.

மக்களுக்கெதிரான சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டிய நிர்பந்தம் அரசுக்கு வந்தது. ஊழல், விபச்சாரம், போதை, மருந்து விற்பனை போன்ற சமூக கேடுகள் பரவத் தொடங்கின. மக்களின் உடல்நலன், வீட்டுவசதி போன்ற சமூகத் தேவைகளுக்கான சேவைப்பிரிவுகள் குறைக்கப்பட்டன. அதிகார வர்க்கத்தோடு இணைந்து சிலர், சில குழுக்கள் செல்வச் செழிப்பில் வளர்ந்தனர். இவர்கள் தான் யானுகோவிச்சின் பிரதேசங்களின் கட்சிக்கு (Party of Regions) ஆதரவாளர்கள், அதன் எதிர்ப்பாளர்களையும் அவர்கள் சரியாகவே கவனித்துக் கொண்டார்கள். உக்ரைனை மேற்கு நோக்கி நகர்த்தி ஐரோப்பிய யூனியனோடு சேர்த்துவிட வேண்டுமென்று இவர்கள் அழுத்தம் கொடுத்தார்கள்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள குறைந்தபட்சம் 15 பில்லியன் டாலர் தேவைப்படும் என மேலை நாடுகளின் பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்தனர். சர்வதேச நிதி நிறுவனத்தை அணுகிய போது, எரிவாயு பயன்பாட்டிற்காக மக்களுக்காக கொடுக்கப்படும் மானியத்தை நீக்க வேண்டும் என அது நிபந்தனை விதித்தது; அதை செயல்படுத்தினால் அதன் விலை 40 சதவிகிதம் உயரும். உக்ரைனின் அன்னிய செலாவணி கையிருப்பு 12 பில்லியன் டாலராக குறைந்தது; உக்ரைனின் நாணயமான ரைவ்னியா (Hryvnia) கடுமையாக வீழ்ச்சியடைந்தது. ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியம் கொடுக்கக் கூட போதுமான நிதி அரசு கருவூலத்தில் இல்லை. சொல்லொணா துயரத்திற்கு உட்பட்ட மக்கள் கிளர்ச்சியில், போராட்டங்களில் ஈடுபட்டனர். பல நகரங்கள் போராட்ட களங்களாக மாறின. தலைநகர் கீவில் இளைஞர்கள் நவம்பர் 30, 2013ல் நடத்திய அமைதியான ஆர்ப்பாட்டத்தில் காவல்துறை நடத்திய வன்முறை தாக்குதல் நிலைமையினை மேலும் மோசமாக்கியது. யானு கோவிச் ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்தன.

ஆனால் இந்த போராட்டங்களை நாஜி பாரம்பரியத்தில் வளர்ந்த கட்சிகள் பயன்படுத்திக் கொண்டன. வலதுசாரி கட்சியான ஸ்வோபோடா கட்சி அதில் முக்கிய பங்கு வகுத்தது. இதற்கிடையில் யானுகோவிட்ச் இந்த நிதிநெருக்கடியிலிருந்து மீள ஒரு பக்கம் ஐரோப்ப யூனியனுடனும் மறுபக்கம் ரஷ்யாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஐரோப்பிய யூனியன் விதித்த சிக்கன நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்வதில் யானு கோவிட்சுக்கு தயக்கம் இருந்தது; முடிவில் ஐரோப்பிய யூனியன் ஆலோசனைக்குட்படாது, ரஷ்யாவோடு ஒப்பந்தம் செய்து கொண்டார். போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ரஷ்ய அதிபர் புதின் முயற்சியால் பிப்ரவரி 21, 2014 ஒரு அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி உக்ரைன் அரசு (யானுகோவிட்ச்) தனது படைகளை திரும்ப அழைத்துக் கொண்டது. ஆனால் எதிர்ப்பு சக்திகள் அதை மீறி அரசு அலுவலகங்களை கைப்பற்றின. யானுகோவிட்ச் கீவ் நகரை விட்டு வெளியேற நேர்ந்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் முழு அங்கீகரிப்போடு அது நடந்து முடிந்தது. மே 25ல் அதிபருக்கான தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்போடு இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டது. ரஷ்ய மொழியினை அரசாங்க மொழி அந்தஸ்திலிருந்து நீக்கியது தான் இடைக்கால அரசாங்கம் எடுத்த முதல் நடவடிக்கை 46 மில்லியன் மக்களில் 17 சதம் மக்கள் ரஷ்ய மொழி பேசுபவர்கள் அண்மையில் அங்கே நடத்தப்பட்ட ழுயடடரயீ ஞடிடட, என்கிற பொது வாக்கெடுப்பில் 83 சதம் மக்கள் ரஷ்ய மொழியினை தாங்கள் பேசும் மொழியாக கருத்து தெரிவித்தார்கள். இடைக்கால அரசில் உள்ள 4 அமைச்சர்கள் நாஜி சித்தாந்தம் கொண்ட அமைப்பை சேர்ந்தவர்கள். அவர்கள் நடத்திய கலவரத்தில் கீவ் நகரில் லெனின் சிலையினை கீழே தள்ளி சுகம் கண்டவர்கள்.

அமெரிக்காவின் தலையீடு

2004-05ல் உக்ரைனில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் ஆரஞ்சு புரட்சி என்று வருணிக்கப்பட்டது. அப்போது மேலை நாடுகளின் ஆதரவாளரான யூலியா டிமொஷெங்கோ அரசு பொறுப்பில் இருந்தார் (பின்பு அவர் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு அனுப்பப்பட்டார். யானு கோவிட்ச் தற்போது வெளியேறியவுடன் ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்க்கல் ஆசியுடன் விடுதலை பெற்று அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்). அந்த மாற்றத்தை அமெரிக்கா எப்படி பார்த்தது? உக்ரைனின் எதிர்காலமும் அமெரிக்க நலன்களும் என்பதைப் பற்றி 2004ல் அமெரிக்க காங்கிரஸ் விவாதித்து அறிக்கை வெளியிட்டது. உக்ரைனில் ஒரு நிலையான ஜனநாயக மற்றும் வளமான குடியரசை உருவாக்கி, வலுப்படுத்தி அதனை ஐரோப்பா மற்றம் ஐரோப்பா – அட்லாண்டிக் கூட்டணியில் இணைப்பதற்கான அமெரிக்க கொள்கையில் கவனம் செலுத்த வேண்டும்….கீவ் (உக்ரைன்) “வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள்” (North Atlantic Treaty Organisation – NATO) அமைப்பில் உறுப்பினராக சேர்வதற்கு அதற்கு உதவி செய்வதற்கான வழிமுறைகளை நாம் தேட வேண்டும் ஏன் அமெரிக்காவுக்கு இவ்வளவு அக்கறை? அதையும் தெளிவுபடுத்துகிறது அந்த காங்கிரஸ் அறிக்கை அந்த உக்ரைன் ஐரோப்பாவின் நிலைத்த பாதுகாப்பிற்கு உதவிகரமாக இருக்கும். பல்கிப் பெருகும் பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் நடத்தும் போர் போன்ற புதிய சவால்களை சந்திப்பதில் அது நமது கூட்டாளியாக இருக்கும்; பொருளாதாரம், வணிகம் மற்றும் முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் பரஸ்பரம் பலனடையும் மாற்றங்களை கொண்டு வர அதற்கு நிறைய வாய்ப்புண்டு நினைவில் கொள்ள வேண்டிய தகவல் உண்டு. ஈராக்கின் மீது அமெரிக்கா படையெடுத்த போது உக்ரைன் அதற்கு துணையாக 1600 ராணுவ வீரர்களைஅனுப்பியது; அங்கு போன மிகப்பெரிய படைப் பிரிவினரில் இதுவும் ஒன்று. ஆப்கன் யுத்தத்தில் உக்ரைன் கொடுத்த மதிப்பு மிக்க உதவிக்கு அந்த காங்கிரஸ் நன்றி தெரிவித்தது.

யானுகோவிட்ச் வெளியேறியவுடன் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினபோது அமெரிக்காவின் துணைச் செயலர் திருமதி விக்டோரியா நுலண்ட் உக்ரைனில் உள்ள அமெரிக்க தூதர் ஜாஃப்ரி ப்யாட்டுடன் பேசிய உரையாடல்களில் உக்ரைன் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தொடர்ந்து தலையிட்டுக் கொண்டிருந்ததை வெளிப்படுத்தியது. யானுகோவிட்ச் இடத்திற்கு யார் வர வேண்டுமென்பதைப் பற்றி இருவரும் பேசியது வெளிவந்திருக்கிறது. திருமதி நுலண்ட் டிசம்பர் (2013) மாதத்தில் அமெரிக்கா வளமான ஜனநயாக உக்ரைனை பாதுகாக்க 5 பில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறது என அறிவித்தார். உக்ரைன் அரசுக்கு எதிராக கீவ் நகரின் மைதானத்தில் இருந்த கிளர்ச்சியாளர்களை குறிப்பாக நாஜி கட்சியான ஸ்வோபோடா கட்சியின் உறுப்பினர்களை இந்த இரு அதிகாரிகளும் சந்தித்து ரொட்டி வழங்கினர் என்பதும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உக்ரைனை எப்படியாவது நேடோ அமைப்புக்குள் கொண்டு வந்து விட வேண்டுமென்ற ஏகாதிபத்தியத்தின் ஆசை தெளிவாக வெளிப்படுகிறது. அண்மையில் கிடைத்த செய்தி. அமெரிக்காவின் உளவுத்துறை அமைப்புகளான குக்ஷஐ மற்றும் ஊஐஹ உக்ரைன் இடைக்கால அரசுக்கு ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருக்கிறது என்ற செய்தி தான் அது. அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் உக்ரைனில் உள்ள வலதுசாரி – நாஜி சக்திகளுக்கு ஆதரவு கொடுப்பதுமல்லாது அவர்களின்தலைமையில் மே 25 தேர்தலை நடத்தி முடித்து விட வேண்டுமென துடிக்கின்றன.

ரஷ்யாவின் அணுகுமுறை

உக்ரைன் ரஷ்யாவுடன் நீண்ட கால இணைப்பை பெற்றிருந்தது என முன்பே குறிப்பிடப்பட்டுள்ளது – உக்ரைனில் வாழும் ரஷ்யர்களைப் பற்றிய கவலை ரஷ்யாவுக்கு உள்ளது. அங்கே நிகழ்ந்து வரும் அரசியல் மாற்றங்களுக்கு தலைமை வகிக்கும் யூலியா டிமொஷெங்கோ ரஷ்யர்கள் அழிக்கப்பட வேண்டும் என்ற ரஷ்ய மொழியில் வெளியிட்ட அறிவிப்பை கேட்ட பிறகு ரஷ்யாவின் கவலை அதிகரித்திருக்கும். ஹிட்லரின் நாஜி படைகளின் கொலை வெறித் தாண்டவமாடிய பிரதேசம் உக்ரைன். அதன் தலைநகரான கீவில் பாபியார் என்பது ஒரு பகுதி. அங்கே தான் இரண்டாம் உலகப் போர் காலத்தில் செப்டம்பர் 29-30, 1941ல் நாஜி படைகள் ஒரே ராணுவ நடவடிக்கையில் 33771 யூதர்களை படுகெலை செய்தனர். யூதர்களை அழித்தொழிக்கும் களப் பலியில் இதுதான் மிகப் பெரிய அழிப்புச் செயல் என்று வரலாறு கூறுகிறது. நாஜி படைகளும் அதற்கு துணை நின்றவர்களும் சோவியத் யூனியனை அழித்து விட வேண்டும் என்ற நோக்கோடு எடுக்கப்பட்ட போர் நடவடிக்கையின் ஒரு பகுதி அது. ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் உக்ரைன் இருந்த பொழுது சுமார் 150,000 பேர் பாபியாரில் கொல்லப்பட்டிருக்கின்றனர்; கம்யூனிஸ்டுகள், ஜிப்சி என்று அழைக்கப்படும் நாடோடி மக்கள் உக்ரேனிய தேசியவாதிகள் பிணையக் கைதிகளாக வைக்கப்பட்ட பொதுமக்கள் யாவரும் அதில் அடங்குவர். 2 கோடி மக்களை அந்த போரில் இழந்த சோவியத் யூனியன் நாஜிக்களின் அரசியல் ராணுவ வழிமுயினை அனுபவத்தில் கண்டது. சோவியத் யூனியன் இன்று இல்லை; ஆனால் அந்த கொடுமையினை சந்தித்த ரஷ்யாவும் உக்ரைனும் இருக்கின்றன. எந்த மனிதர்கள், குழுக்கள், அமைப்புகள் ஜெர்மன் உக்ரைனை ஆக்கிரமித்ததற்கு ஆதரவு தெரிவித்தார்களோ அவர்கள் இன்று இடைக்கால அரசில் முக்கிய பொறுப்பாளர்களாக உள்ளனர் என்பதை ரஷ்யா கவலையோடு பார்ப்பதில் ஆச்சரியமேதுமில்லை.

பனிப்போரில் தாங்கள் வெற்றி பெற்று விட்டோம் என்ற களிப்பில் (சோசலிச உலக பின்னடைவை சந்தித்ததால்) ரஷ்யாவை வீழ்ந்து விட்ட எதிரியாக அமெரிக்காவும் மேலை நாடுகளும் பார்க்கத் துவங்கின. கொடுத்த வாக்குறுதிகள் சிதைக்கப்பட்டன. பெர்லின் சுவரை உடைப்பதற்கும் கிழக்கு மேற்கு ஜெர்மனி இணைப்பதற்கும் ஒப்புக் கொண்டால் நேடோ கலைக்கப்படும் என்ற வாக்குறுதி கோர்ப்பசேவுக்கு கொடுக்கப்பட்டது; யெல்ட்சினுக்கும் அந்த வாக்குறுதி கொடுக்கப்பட்டது. ஆனால் நேடோ போலந்து, பல்கேரியா, ருமேனியா, பால்டிக் நாடுகள் ஆகியவற்றைத் தாண்டி உக்ரைனை தட்டிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது புடினும் ஏமாற்றப்பட்டிருக்கிறார். முன்பே நாம் பார்த்த பிப்ரவரி 21 அமைதி ஒப்பந்தத்திற்கு புடினின் உதவியை நாடிய ஐரோப்பிய யூனியன் அதை அப்பட்டமாக மீறுவதற்கு எதிர்ப்பாளர்களை அனுமதித்தன; சட்ட ரீதியான யானுகோவிட்ச் அரசு கவிழ்க்கப்பட்டது. இப்படி ஒன்றன் பின் ஒன்றாக வாக்குறுதிகள், ஒப்பந்தங்கள் மீறப்படுவதைப் பார்த்த பிறகு புடின் உக்ரைனில் அமெரிக்க – ஐரோப்பிய யூனியன் தலையீடு ரஷ்யாவை தங்களின் கட்டுக்குள் வைக்கும் முயற்சியின் ஒரு நடவடிக்கை என்று பார்த்தார்.

மிகவும் துரிதமாக செயல்பட்டு கருங்கடலில் உள்ள 1954ல் குருஷ்சேவால் உக்ரைனோடு இணைக்கப்பட்ட கிரிமீயா தீபகற்ப பகுதியினை ரஷ்ய பாராளுமன்ற ஒப்புதலோடு ரஷ்யா எடுத்துக் கொண்டது. ஏற்கனவே அதை உக்ரைன் ஒரு விசேஷ ஒப்பந்தத்தில் ரஷ்யப் படைகள் அங்கு வைக்கப்படுவதற்கு அனுமதி அளித்திருந்தது. கருங்கடல் பகுதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செவஸ்டபோல் துறைமுகம் கிரிமீயாவில் தான் உள்ளது, அது ரஷ்யாவின் கடற்படை தளமாக 2042 வரை செயல்பட ஒப்பந்தம் உள்ளது. இடைக்கால அரசு அதை நிராகரிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். உக்ரைனை நேடோவிற்குள் இழுப்பதில் நேடோ வெற்றி பெற்றால் அந்த இடத்தில் அமர்ந்து 425 கி.மீ. தூரத்தில்உ ள்ள மாஸ்கோவை குறி வைக்கும், கருங்கடல் பகுதியிலிருந்து ரஷ்யாவை வெளியேற்றும். ஆகவே தான் ரஷ்யா அந்தப் பகுதியை அதன் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வந்தது.

அந்த பகுதியில் மீண்டும் சோவியத்தை உருவாக்கும் முயற்சி என்று ஹிலாரி கிளிண்டன் பதறினார். நாம் எந்த தவறினையும் செய்ய முடியாது. அவர்களின் இலக்கு என்ன என்பது நமக்குத் தெரியும். அதன் வேகத்தைக் குறைத்து தடுத்து நிறுத்துவதற்கான ஆற்றல் வாய்ந்த வழிமுறைகளை நாம் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார். ஆற்றல் வாய்ந்த என்றால் என்ன பொருள்? முந்தைய சோவியத் யூனியனின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார கட்டமைப்பைக் கொண்டிருக்கும், பெருமளவில் ரஷ்யாவை சார்ந்திருக்கும் உக்ரைனை (ரஷ்ய எரிவாயு பாதி விலைக்கு உக்ரைனுக்கு வழங்கப்படுகிறது) கட்டி இழுத்து ரஷ்யாவின் தாக்கத்திலிருந்து வெளியே கொண்டுவருவது மட்டுமல்ல, நெருக்கடியில் உள்ள ஐரோப்பிய யூனியன் நாடுகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உக்ரைனை ஒரு புதிய சந்தையாக இணைத்துக் கொள்வது என்பது தான் அதன் பொருள். கிரிமீயா நாடாளுமன்றம் மக்களிடையே நடத்திய வாக்கெடுப்பில் 90 சதவிகிதத்திற்கும் மேலாக மக்கள் கிரிமீயா ரஷ்யாவுடன் இணைவதை உறுதிப்படுத்தினர். உக்ரைனின் கிழக்கு, தென்கிழக்கு பகுதிகளில் உள்ள நகரங்களில் இடைக்கால அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறுகின்றன; சில நகரங்கள சுயாட்சி பகுதிகாளக அறிவித்துக் கொண்டன. உக்ரைன் பல்வேறு பகுதிகளாக பிளவுப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உக்ரைனில் எழுந்துள்ள நிலைமைகளை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யா மூன்று ஆலோசனைகளை முன்வைக்கிறது. முதலாவதாக உக்ரைன் மக்கள் தொகை பல்வேறு வேற்றுமைகளை உள்ளடக்கியது. மொழி, இனம், கலாச்சார வேற்றுமைகள் இருந்தாலும் ஸ்லாவிக் இன மக்கள் என்ற அடிப்படையில் ரஷ்ய மொழி பேசுவோரும் உக்ரேனிய மொழி பேசுவோரும் கலந்து வாழும் வாழ்க்கை முறையும் உண்டு. ஆகவே ஒரு கூட்டாட்சி அமைப்பினை உருவாக்கி அதற்கான அரசியல் சட்டத்திருத்தங்களை மேற்கொண்டு, சுயாட்சி உரிமையினை அளித்து அதன் ஒற்றுமையினை பாதுகாக்கலாம்.

இரண்டாவதாக, நேடோ படைகள் கிழக்கு நோக்கி நகர்வதற்கான எந்த அடிப்படை நியாயமும் இல்லை. அப்படி நகருமேயானால் நாடுகளுக்கிடையே (ரஷ்யா உட்பட) உறவுகள் கடுமையாக பாதிக்கும் என ரஷ்யா எச்சரிக்க விரும்புகிறது.

மூன்றாவதாக, சோவியத் யூனியன் சிதைவுக்குப் பிறகு ரஷ்ய மொழி பேசும் மக்கள் அந்தந்த நாடுகளில், குறிப்பாக உக்ரைன், லாட்வியா வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நலன்களை பாதுகாக்கும் உரிமை, கடமை தங்களுக்கு இருப்பதாக ரஷ்யா அறிவிக்கிறது.

இந்த ஆலோசனைகளில் உள்ள அம்சங்களை விவாதித்து முடிவு காண வேண்டும் என்ற கருத்து அரசியல் அரங்கில் முன்வைக்கப்படுகிறது.

உள்ளடக்கிய அரசியல் அம்சங்கள்

அண்மையில் அமெரிக்க அதிபர் ஆசிய திருகுமுனை மையம் (Asian Pivot) உருவாக்கப்படுவது பற்றி பேசினார்; அதன் நோக்கம் சீனாவை சுற்றி வளைத்து அதன் கழுத்தை நெரிப்பது என்பது தான். இப்பொழுது அமெரிக்காவின் ஐரோப்பிய திருகுமுனை மையம் (European Pivot) உருவாக்கிறது. இதன் நோக்கம் ரஷ்யாவை சுற்றி வளைப்பது – அதாவது ரஷ்யாவுக்கும் விரிவாக ரஷ்யாவை நோக்கி முன்னேறியிருக்கும் நேடோ அமைப்புக்கும் இடையே உள்ள முக்கிய பகுதியினை (உக்ரைனை) வசப்படுத்தினால் சுற்றி வளைக்கும் திட்டம் முழுமை பெறும் என்பது தான்.

உக்ரைன் தற்பொழுது பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதுவரை ரஷ்யாவின் தாராளமான உதவி அதை நிமிர்ந்து நிக்க செய்திருந்தது; கடந்த 20 ஆண்டுகளில் ரஷ்யா அதன் எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகத்தில் 200 பில்லியன் டாலர் அளவுக்கு மானியமும், விலை குறைப்பும் அளித்து உதவியிருக்கிறது. சிக்கன நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற நிபந்தனையோடு ஐ.எம்.எப். உதவக் கூடும். ரஷ்ய உதவி நிறுத்தப்படுமேயானால் மிகப் பெரிய பேரழிவை உக்ரைன் சந்திக்கும். இந்நிலையில் ஐ.எம்.எப்.பும் நுழைந்து. நேடோ ராணுவமயமாக்கலும் நடைபெறுமானால் உக்ரைன் ஒரு உள்நாட்டுப் போரை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் அண்மையில் நடந்த வாக்கெடுப்பில் 70 சதம் மக்கள் உக்ரைன் நேடோவில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 56 சதம் மக்கள் சோவியத் சிதைவு மிகப்பெரிய அழிவு என்றும் வாக்களித்துள்ளனர்.

ஐரோப்பாவில் ஒரு புதிய மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நாஜி என்றும் பாசிஸ்ட் என்று அழைக்கப்பட்டவர்களெல்லாம் தங்களை தேசியவாதிகள் என்று குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். ஊடகங்கள் கூட அவர்களை வலதுசாரி தேசியவாதிகள் என்று குறிப்பிடுகின்றன. பெயர் மாற்றம் உள்ளுரைந்து கிடக்கும் பாசிச வெறித் தன்மையினை மாற்றி விடுவதில்லை. ஹங்கேரி, குரோஷியா, ஸ்லோவேனியா போன்ற நாடுகளில் (முன்பு சோசலிச கட்டமைப்புக்குள் இருந்தவை) பாசிசத்தின் வாரிசுதாரர்கள் அரசாங்க பொறுப்புக்கு வர முடிந்தது; பிரான்ஸ், ஆஸ்ட்ரியா, டென்மார்க் போன்ற நாடுகளில் பாசிச ஆதரவாளர்கள்அரசியல் அரங்கில் முக்கிய பங்கினை பெற்றார்கள். ஆனால் உக்ரைனில் தான் மூன்று முக்கிய பாசிஸ்ட் அரசியல் குழுக்கள் ஆட்சியில் அமர்ந்திருப்பது மட்டுமல்லாமல், நாட்டின் பாதுகாப்பு அமைப்பையும் தங்கள் வசம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் – அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் அங்கீகாரத்தோடு, ஒத்துழைப்போடு வலதுசாரி மற்றும் பாசிச சக்திகளின் துணையோடு ரஷ்யாவை சுற்றி வளைப்பது என்பது அமெரிக்காவின் ஜனநாயக ஊக்குவிப்பு பணியில் புதிய கட்டம். ஆப்கனில் சோவியத் எதிர்ப்புக்கு நல்ல ஜெகாதிகள் கிடைத்தார்கள்; எல்சால்வடார், நிகரகுவா மற்றும் லத்தீன் அமெரிக்க இடதுசாரிகளை எதிர்க்க போதை மருந்து கடத்தும் நல்ல பயங்கரவாதிகள் துணை கிடைத்தது: சிரியாவில் நல்ல அல்கொய்தா கட்டவிழ்த்தப்பட்டிருக்கிறது; இப்பொழுது ஐரோப்பிய மண்ணில் நல்ல பாசிஸ்டுகள் அமெரிக்காவுக்கு கிடைத்திருக்கிறது. இடைக்கால அரசு 60000 பேர் கொண்ட துணை ராணுவ பிரிவு ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் எடுபட்டுள்ளது. இது நாஜிக்களின் படையாகவே உருவாகும் என்பதில் ஐயமில்லை. 1941-ல் நாஜிக்கள் நடத்திய இனப்படுகொலையில் பலியானவர்களின் நினைவாக ஒடிஸ்ஸா நகரில் எழுப்பப்பட்ட கட்டிடத்தை சிதைத்து அவர்களின் ஸ்வந்திக் அடையாளத்தை பதித்து விட்டுப் போனார்கள். ஐரோப்பிய- அமெரிக்க ஊடகங்கள் இதை கண்டுகொள்ளவே இல்லை.

அமெரிக்க அரசாங்கமும் ஊடகங்களும் இரண்டு பொய்களை திரும்பத் திரும்ப பதிவு செய்து கொண்டிருக்கின்றன. இன்று, உக்ரைனில் பதவியில் இருக்கும் ஆட்சி முற்றிலும் அரசியல் சட்ட விதிகளின் படியே ஆட்சியில் உள்ளது; இரண்டு ரஷ்யா கிரீமியா மீது படையெடுத்து அதை கைப்பற்றியது; அது அரசியல் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட யானுகோவிட்ச் வெளியேற்றப்பட்டது தான் உண்மையில் சட்ட விரோதமான செயல்; கிரிமீயா அரசியல் சட்ட உரிமைகளின் படியே விலகியது – எப்படி உக்ரைன் சோவியத் யூனியனிலிருந்து விலகியதோ அதைப்போல. அந்த பொய்களின்அடிப்படையில் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்படுகின்றன. தடைகள் தொடருமேயானால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று புடின் எச்சரிப்பதால் மீண்டும் பனிப்போர் சூழல் எழுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. ரஷ்ய பொருளாதாரத்தின் மீது தாக்குதல் நடந்தால் அது மேற்கு நாடுகளின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்; ஏனெனில் அந்த பொருளாதாரங்களின் (ரஷ்ய மற்றும் ஐரோப்பிய நாடுகள்) பரஸ்பரம் தாக்குதலின் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். 600 ஜெர்மன் கம்பெனிகள் ரஷ்ய வணிகத்தில் ஈடுபட்டுள்ளன; பல பில்லியன் டாலர்கள் அங்கே முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. ரஷ்ய எண்ணெய், எரிவாயு உக்ரைனில் பதிக்கப்பட்ட குழாய்கள் மூலம் ஐரோப்பாவுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. எரிசக்திக்கான ஜெர்மனியின் தேவையில் 30 சதம் ரஷ்யா அளிக்கிறது. ரஷ்யாவின் வெளிநாட்டு வணிகத்தில் 50 சதம் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் தான். வளர்ந்து வரும் ரஷ்ய பொருளாதாரத்தில் 75 சதம் ஐரோப்பிய யூனியன் நாடுகள் முதலீடு செய்திருக்கின்றன. பிரான்ஸ் 1.7 பில்லியன் டாலருக்கு ஹெலிகாப்டர்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை ரஷ்யாவிற்கு விற்பதற்கான ஒப்பந்தம் போட்டிருக்கிறது. பொருளாதார தேக்கத்தை சந்திக்கும் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க ஏகாதிபத்திய கனவுகளுக்கு இரையாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்காவின் பொய்களை பரப்பும் திட்டத்திற்கு மற்றொரு நோக்கமும் உண்டு. கிரிமீயாவை கைப்பற்றியதின் மூலம் ரஷ்யா தன்னுடைய நாடுகளுக்கு ராணுவ ரீதியான அச்சுறுத்தலை கொடுக்கும் நிலையில் உள்ளதாக பிரச்சாரம் செய்ய முடியும்; முன்பு சோவியத் யூனியனின் பகுதியாக இருந்த கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற (சீனாவுக்கு அருகில் உள்ள) நாடுகளுக்கு இந்த பிரச்சாரத்தை கொண்டு சென்று நேடோவின் ராணுவத்தை அங்கு கொண்டு வைப்பது என்ற நோக்கமும் அதில் உள்ளடங்கியுள்ளது.

ரஷ்ய நாடாளுமன்றத்தில் பேசும்பொழுது புடின் வரலாற்று, அரசியல் புரிதலோடு இந்தியாவும் சீனாவும் உக்ரைன் பிரச்சனையை அணுகிய முறை குறித்து பாராட்டுகளை தெரிவித்தார். ப்ரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சினா, தென்ஆப்பிரிக்கா) நாடுகள் ஏகாதிபத்திய நிலையினை சாராமல் முடிவு மேற்கொண்டதையும் பாராட்டினார். உக்ரைன் நிகழ்வுகள் ரஷ்யாவும், சீனாவும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு கேந்திரமான கூட்டணி அமைத்துக் கொள்ள வாய்ப்பு எழலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ஆனால் நடைமுறையில் ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் உலக முழுமையும் உள்ள பொருளாதார உறவுகளை கணக்கில் கொண்டால் அது உடனடியாக நிறைவேறுவதற்கு வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது.

உக்ரைன் பிரச்சனையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரட்டை வேடம் வெளிப்பட்டது. 2008ம் ஆண்டு செர்பியாவிலிருந்து கொ சோவா பிரிந்ததை சட்டப்பூர்வமானதாக அங்கீகரித்த அமெரிக்கா கிரீமியா பிரிவதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. நேடோ படையெடுப்பில் உருவானது கொசோவா; கிரீமியா சட்டப்பூர்வமான பொதுவாக்கெடுப்பில் உருவானது. 1991ல் க்ரோஷியாவும் ஸ்லோவேனியாவும் பொது வாக்கெடுப்பு நடத்தி யூகோஸ்லாவியாவிலிருந்து பிரிந்து சென்றன. அமெரிக்கா அதை அங்கீகரித்தது – ஆனால் கிரீமிய வாக்கெடுப்பை அங்கீகரிக்க மறுக்கிறது ஏன்? 15 ஆண்டுகளுக்கு முன்பு யூகோஸ்லோவியா 78 நாட்கள் நேடோ நடத்திய போருக்குப் பிறகு துண்டு துண்டானது. உடைக்கப்பட்ட துண்டு செல்பியாவிலிருந்து தான் கொசோவா பிரிந்தது. இந்த நிகழ்வுகளெல்லாம் பால்கன் பகுதியில் நேடோவின் செல்வாக்கினை விரிவுபடுத்தியது. ரஷ்யாவின் செல்வாக்கு விரிவடைவது அமெரிக்காவுக்கு உகந்ததல்ல. புடின் இந்த மாற்றங்களெல்லாம் சட்டத்தின் அடிப்படையில் நடைபெறவில்லை, துப்பாக்கியின் பலத்தில் நடந்தது என்கிறார். ஏகாதிபத்தியத்தின் தேவைகளுக்கு அனைத்து வழிகளும் சரியானவையே! இந்த நாடகம் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த அரசியல் சதுரங்கத்தில் ரஷ்யா சற்று வலுவான நிலையில் உள்ளது போல் தெரிகிறது. ஈரானுடன் அணு ஆயுத பிரச்சனைகளில் அமெரிக்காவுக்கு உதவிட ரஷ்யா தேவைப்படுகிறது; சிரியாவை சமாளிக்க ரஷ்யா தேவைப்படுகிறது. ஆப்கனிலிருந்து அமெரிக்க துருப்புகள் திரும்பப் பெறுகிற போது அங்கு நிகழும் ரத்தக் களரியை எதிர்கொள்ள ரஷ்யாவின் உதவி தேவைப்படலாம். இப்பொழுது கண்ணில் காணும் பனிப்போர் தோற்றம் இல்லாது போகக் கூடும். முந்தைய பனிப்போரின் மையப் புள்ளியாக முரண்பாடுகள் கொண்ட இரண்டு சமூக அமைப்புகளின் செயல்பாடுகள் இருந்தன. சோவியத் யூனியன் சிதைந்த பிறகு அது முடிவுக்கு வந்தது. இன்று நாம் காணும் பனிப்போர் நிலைக்கு அப்படி ஒரு அம்சம் இருப்பதாகக் கூற முடியாது. ஏனெனில் ரஷ்யா சோவியத் யூனியன் அல்ல.

(ஃப்ரண்ட்லைன் ஏப்ரல் 18, மே 2 ஆகிய இதழ்களில் அய்சாஜ் அகமது எழுதிய கட்டுரைகளை தழுவியது)



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: