ஆழமடைந்து வரும் முதலாளித்துவ நெருக்கடி, தொழிலாளர்கள் மற்றும் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் தொழிலாளி வர்க்கத்தின் பங்கும், கம்யூனிஸ்ட்டுகளின் கடமையும், ஏகாதிபத்திய மேலாதிக்கம், சர்வதேச சக்திகளின் பலா பலன்களில் மறு அணி சேர்க்கை, தேசிய இனப்பிரச்சனை, வர்க்க விடுதலை மற்றும் சோசலிசத்துக்கான போராட்டம் என்ற முழக்கத்தின் கீழ் நவம்பர் 8-10 தேதிகளில் போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர்கள் கட்சிகளின் 15வது சர்வதேச மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் 61 நாடுகளைச் சேர்ந்த 77 கட்சிகள் பங்கேற்றன. 14 கட்சிகள் வாழ்த்துச் செய்திகளை அனுப்பி இருந்தன.
போர்ச்சுக்கீசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெரோனி மோடி சௌசா இம்மா நாட்டைத் தொடங்கி வைத்தார். தகவல்களையும் அனுபவங்க ளையும் பரிமாறிக்கொள்ள, சிக்கலான சர்வதேச நிலைமைகள் குறித்த நமது மதிப்பீடுகளை மேம்படுத்த, நமது கட்சிகளுக்கு இடையில் காணப்படும் மகத்தான பரஸ்வர புரிதலையும், வலுவான நட்புறவையும், ஒருமைப் பாட்டை யும் ஆகச்சிறந்த முறையில் வளர்த் தெடுத்திட, ஒத்துழைப்புக்கும், ஒன்றுபட்ட செயல்பாட் டுக்குமான திசை வழியையும், முன் முயற்சி களையும், வரையறுத்திட நாம் இங்கு கூடியுள் ளோம் என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
போர்ச்சுக்கீசிய சமூகத்தின் மீதான உலக முதலாளித்துவ நெருக்கடியின் தாக்கம் குறித்தும், போர்ச்சுக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வரும் போராட்டங்கள் பற்றியும் தனது உரையில் ஜெரோனிமோடிசௌசா எடுத்துரைத்தார். தமது நாட்டு நிலமைகள் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு பெரும் பாதகமாகவும், கேடு விளைவிப்பதாக உள்ளதாகவும், அரசாங்கம் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு, மக்களின் நம்பிக்கையை இழந்து வருவ தாகவும் கூறிய அவர், இதற்கு போர்ச்சுக்கீசியக் கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர வேறு மாற்று இல்லை என்றார்.
மாநாட்டில் மூன்று சுற்று விவாதங்கள் நடைபெற்றன. முதல் சுற்றில் சமகால உலக வளர்ச்சிப் போக்குகள் குறித்த தமது பகுப்பாய்வையும், தத்தமது நாடுகளில் ஆளும் வர்க்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்ட அனுபவங்களையும் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் பகிர்ந்து கொண்டனர்.
இலத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து வருகை புரிந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏகாதிபத்தியத் தாக்குதல்களுக்கு எதிரான தங்களது போராட்ட அனுபவங்களையும் இப்பிரதேசத்தில் உள்ள முற்போக்கு அரசாங்கங்களின் பங்கையும் பற்றிக் குறிப்பிட்டனர்.
வெனிசூலா அரசாங்கம் சுகாதாரம், கல்வி, பண்பாடு, விளையாட்டு, வீட்டு வசதி மற்றும் பிற சமூகத் துறைகளுக்காக 550 பில்லியன் டாலருக்கு மேல் செலவு செய்து வருவதாகக் கூறினர்.
உருகுவே, தொழிலாளர்களின் ஊதியத்தை 19 சதவீதம் உயர்த்தியுள்ளது. அர்ஜெண்டி னாவில் ஓய்வூதியமும், சம்பளமும் பெரு மளவில் அதிகரிக்கப்பட் டுள்ளது. பிரேசி லில் 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர்.
இலத்தீன் அமெ ரிக்காவில் ஒட்டுமொத்தத்தில் வறுமை, வேலையின்மை, கல்லாமை குறைந்து, சுகாதாரம் மேம்பட்டு வருவதாக அவர்கள் சுட்டிக் காட்டினர். இன்றைய உலகம் ஆழமும், சிக்கலும் நிறைந்த மாற்றங்களுக்கு உள்ளாகி வருவ தாகக் குறிப்பிட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அது ‘பன்முகத்தன்மையை’ நோக்கி நகருவதாக கூறுகிறது. சர்வதேச வளர்ச்சிப் போக்கில் மேலாதிக்கம், அதிகார வர்க்க அரசியல், புதிய தலையீட்டுக் கொள்கை ஆகியவை அதிகரித்து வரும் சூழலில், அவை சோசலிச வளர்ச்சிக்கான அரிய வாய்ப்புகளையும், சவால்களையும் முன்னுக்கு கொண்டு வந்துள்ளதாக குறிப்பிடுகின்றனர். ‘சர்வதேச நிதி நெருக்கடி முதலாளித்துவத்தைக் கட்டமைப்பு நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்து. புதிய தாராளமயத்தின் வளர்ச்சி நீண்ட காலத்துக்கு நீடித்திருக்க முடியாது எனக் கூறும் அவர்கள் அது மாற்றியமைக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என் கின்றனர். தங்கள் நாட்டு நிலைமையைப் பற்றிக் கூறுகையில் தங்களது கட்சி முன் முயற்சியின்மை, மக்களிடமிருந்து அந்நியப்பட்ட சூழல், ஊழல் போன்ற பேராபத்தை எதிர்கொண்டு வருவதாகவும், கட்சி தன்னை ஒழுங்குபடுத்திக் கொண்டு முன்னேறி வருவதா கவும் குறிப்பிட்டனர்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கம்யூ னிஸ்ட் கட்சிகள், தொழிலாளர் கட்சிகள் மற்றும் பிற முற்போக்கு சக்திகளுடன் கட்சி யையும், நாட்டையும் வழிநடத்துவதிலுள்ள அனுப வங்களைப் பகிர்ந்துகொள்ளவும், உலக சவால்களை எதிர்கொள்ளும் வழிமுறைகளைக் காணவும், உலகில் சோசலிச இலட்சி யத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பரஸ்பர உறவு களை வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளதாகக் கூறி அவர்கள் தமது உரையை நிறைவு செய்தனர்.
எழுபது களின் மத்தியிலிருந்து எகிப்திலும், அப்பிரதேசத்திலும் நிலவிவந்த மதவெறிப் பாசிச வலதுசாரிப்போக்கு பல்லாண்டு காலம் மக்களை ஆட்டிப்படைத்து வந்தது. ஜூன் 30 புரட்சி இதனை முறியடித்து நிறை வடையாத புரட்சியின் வரலாற்றுக் கடமைகளை நிறைவேற்றியது என எகிப்து கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்டது. ஜூன் 30க்குப் பிந்திய நிகழ்வுகள் பற்றிக் கூறுகையில் ‘இது ஒரு ஜனநாயகப் புரட்சி, சுதந்திரம் மற்றும் குடிமக்களின் அரசியல், பொருளாதார சமூக, பண்பாட்டு உரிமைகளைக் காப்பதற்கான அர சியல் சாசனத்தின் அடிப்படையிலான ஒரு ஜனநாயகக் குடிமைஅரசு இதன் மூலம் நிறு வப்பட்டுள்ளது.
வெகுஜனக் கட்டுப்பாட்டை உத்திரவாதப்படுத்துவது, அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மன்றங்கள் அமைத்துக் கொள்வதற்கான சுதந்திரம், அரசியலிலிருந்து மதத்தைப் பரிப்பது மத ரீதியிலான கட்சி களைத் தடை செய்வது ஆகியவற்றின் அடிப் படையில் இது செயல்பட்டு வருகிறது என் றனர். தேசிய ஜனநாயகப்புரட்சியின் கட்டங் களில் இது ஒரு குறிப்பிடத்தக்க கட்டம் எனக் கூறும் அவர்கள், இடைக்கால அரசாங்கத்தின் கொள்கைகள் புரட்சிகர மாற்றத்தின் உணர்வுக்கு ஏற்ப முழுமையாக அமையவில்லை. இந்நிலைமை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும் என்கின்றனர். இந்நிலை தொடர்ந்தால் அது புரட்சியை பலவீனப்படுத்தி எதிரிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும். எனவே, எகிப்திய இடதுசாரி சக்திகளின் தீவிரத் தலையீடும், ஒன்றுபட்ட முன் முயற்சியும் அவசியம் என்று கூறும் அவர்கள், முதல் அத்தியாவசிய மாகவும், நடப்பு சூழலில் அவசர நடவடிக்கையாகவும் சோசலிஸ்ட் கட்சிகளின் ஒன்று பட்ட தலைமையை உருவாக்க முயற்சி மேற் கொண்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். உலகம் முழுவதிலுள்ள தொழிலாளர்கள் மற்றும் மக்களின் போராட்டங் களுக்கு மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள் தமது ஆதரவைத் தெரிவித்தனர். தற்போதைய நிலையில் ஏகபோக எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு திசை வழியிலான மாற்றத்துக்கான, சோசலித்துக்கான உண்மையான வாய்ப்புகள் இருப்பதை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
2008ம் ஆண்டு லேமன் பிரதர்ஸ் வங்கி திவாலானதைத் தொடர்ந்து வெடித்த நெருக்கடியின் ஆழத்தை மாநாடு சுட்டிக்காட்டியது. ‘மீட்சி’ ஏற்பட்டு வருவதாக ஆளும் வர்க்கம் கூறி வருவதை எளிதில் மீளமுடியாத இந்நெருக்கடி பொய்யாக்கி வருகிறது. அதன் இயல்பாகவும், பரிணாமமாகவும் உள்ள மிகை உற்பத்தி மற்றும் மிகை மூலதன ஒன்றுகுவிப் பின் நெருக்கடியை உறுதிப்படுத்துவதாகக் கம்யூனிஸ்டுகள் கூறி வருவதை மெய்பித்து வருகிறது.
முதலாளித்துவ நெருக்கடி, குறிப்பாக சமூகமயமாகி வரும் உற்பத்திக்கும், தனி நபர் அபகரிப்புக்கும் இடையிலான அடிப்படை முரண்பாடு அதிகாரித்து வருவதை இந்நெருக்கடி வெளிப்படுத்துகிறது.
முதலாளித்துவ அமைப்பின் வரலாற்று வரம்பையும், முதலாளித்துவத்துக்கு மாற்றான சோசலித்துக்காக போராடுவதற்கான நேரம் நெருங்கி வருவதையும் இது படம் பிடித்துக் காட்டுகிறது என மாநாடு குறிப்பிட்டது. வளரும் நாடுகளில் வாழும் மக்களின் கடினமான எதார்த்த நிலைமைகளையும் நெருக்கடியின் தாக்கத்தையும் அந்நாடுகளில் முதலாளித்துவத்தாக்குதலையும் பற்றி இம்மாநாடு விவாதித்தது. அம்மக்களின் பொருளாதார சமூக உரிமைகளை கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பின்னணியில் வேளாண்மை மற்றும் உணவுப்பொருட்களின் மீதான முதலாளித்துவ நெருக்கடியின் தாக்கம், நாடு களின் உணவுப் பாதுகாப்பு பெரும் ஆபத்துக்குள்ளாகி வருவது, உலக மக்களில் பெரும் பாலோர் பட்டினிச்சாவுக்கும், சத்துணவுப் பற்றாக்குறைக்கும் உள்ளாகி வருவது போன்ற அம்சங்கள் மீது மாநாடு கவனம் செலுத்தியது. முன்னணி ஏகாதிபத்திய வல்லரசுகள், நேட்டோ ஆகியவை இராணுவ பலத்தை அதிகரிப்பது, மேலும் அவற்றின் போர் வெறி தலையீட்டுக் கொள்கை ஆகியவற்றிலிருந்து எழும் ஆபத்தை இம்மாநாடு சுட்டிக்காட்டியது. ஏகாதிபத்திய தாக்குதலுக்கு எதிராக, சமூக முன்னேற்றம், சுதந்திரம், இறையான்மை, சமாதானம், சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கான உரிமைக்காக, ஏகாதிபத்திய மேலாதிக்கத்துக்கு எதிராக, மாற்று இறையாண்மையையும், முன்னேற்றத்தையும், கட்டமைப்பதற்காக, முதலாளித்துவ காட்டு மிராண்டித்தனத்துக்கு எதிராக, உண்மையான அடிப்படை மாற்றான சோசலித்துக்கு மாநாட்டில் பங்கேற்றவர்கள் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். வேலை அடிப்படை உரிமை, தொழிலாளர் மற்றும் சமூக உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக தொழிலாளி வர்கமும், அதன் கூட்டாளிகளும் பிற ஏகபோக எதிர்ப்புப் பகுதியினருடன் இணைந்து வகிக்க வேண்டிய மையமான பாத்திரத்தை மாநாடு வலியுறுத்தியது. ஏகாதிபத்தியத்தின் தலையீட்டுக் கொள்கையையும், ஆக்கிரமிப்பையும் எதிர்த்து வரும் மக்களுக்கு, குறிப்பாக மத்தியக் கிழக்கு மக்களுக்கு மாநாட்டுப் பிரதிநிதிகள் தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
பாலஸ்தீன மக்களுக்கும், தேசிய உரிமைகளுக்கான அவர்களுடைய போராட்டத்துக்கும், சிரிய மக்களைப் போல அப்பகுதியில் ஆக்கிரமிப்புக்கும், தலையீட்டுக்கும் உள்ளாகி இருக்கும் பிற பகுதி மக்களுக்கும் இம்மநாடு தனது ஆதரவை உறுதிப்படுத்தியது.
கியூபாவுக்கும், அதன் சோசலிசப் புரட்சிக்கும் வெனிசூலா மக்களுக்கும், அவர்களுடைய பொலிவாரிய புரட்சிக்கும் மாநாட்டுப் பிரதிநிதிகள் தமது நல்லாதரவைத் தெரிவித்தனர். ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பல்வேறு அரசாங்கங்களாலும், ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற் றாலும் மேற்கொள்ளப்பட்டு வருகிற கம்யூனிஸ்ட் எதிர்ப்பு பிரச்சாரத்தினால் அரசியல் ரீதியில் பாதிப்புக்குள்ளாகி வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் அனைத்து புரட்சிகர சக்திகளுக்கும் மாநாடு தனது ஆதரவைத் தெரிவித்தது. மக்கள் போராட்டத்தை வலுப்படுத்தவும், சோசலிச மாற்றைக் கட்டமைக்கவும் நடப்பு சர்வதேச சூழலில் அனைத்து முற்போக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளுக்கிடையில், முதன்மையாக உலகம் முழுவதிலுமுள்ள கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர்கள் கட்சிகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மாநாடு வலியுறுத்தியது.
இந்த வகையில் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் சர்வதேச மாநாடுகளின் வளமான அனுபவமும், முன்னேற்றங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும். இரண்டாவது சுற்று விவாதம் போர்ச்சுக்கீசியக் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த கூட்டுப் பிரகடனத்தை மையப்படுத்தியதாக அமைந்திருந்தது. மாநாட்டில் கலந்துக் கொண்ட பெரும்பாலான கட்சிகள் இம்முன்மொழிவை ஒப்புக்கொண்ட போதிலும் சில கட்சிகள் தமது புரிதலையும், சர்வதேச வளர்ச்சிப் போக்குகளையும் இப்பிரகடனம் பிரதிபலிக்கவில்லை எனக் கருதின. பொதுக் கருத்து என்பது மாநாட்டில் முக்கிய வழிகாட்டும் கோட்பாடாகும். இவ்விவகாரத்தில் பொதுக் கருத்து ஏற்படாததால் பிரகடனம் வெளியிடப்படவில்லை. மாறாக, மாநாடு குறித்த செய்தி அறிக்கை வெளியிடப்பட்டது. மூன்றாவது சுற்று விவாதம் மாநாட்டை நடத்துவதற்கான முறையியல் பற்றியதாக அமைந்திருந்தது. மாநாட்டில் அங்கம் வகிக்கும் கட்சிகள், செயல் கமிட்டி ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போது செயல் கமிட்டியில் 11 கட்சிகள் உள்ளன. இது தலைமை அமைப்பாக அல்லாமல் உதவி செய்யக்கூடிய ஒன்றாக உள்ளது. எதிர்காலத்தில் இத்தகையை மாநாடுகளை எவ்வாறு நடத்துவது என்பதற்கான விவாதமாக இது அமைந்திருந்தது. செயல்கமிட்டி இதனை மேலும் முழுமையாக விவாதித்து கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர்கள் கட்சிகளின் 16வது மாநாட்டுக்கு முன்பு முன்மொழிவுகளை அளிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. 16வது மாநாட்டை நடத்துவதற்கான இடம் தேதி, முழக்கம் குறித்த அடுத்து நடைபெறவுள்ள செயல்கமிட்டி இறுதிப் படுத்தும்.
மாநாடு பின்வரும் எதிர்காலக் கடமைகளை வகுத்தது.
- 2014ம் ஆண்டு முதலாம் உலகப்போரின் நூற்றாண்டும், இரண்டாம் உலகப்போரின் 75ம் ஆண்டும் இதையொட்டி கூட்டு இயக் கங்களின் மூலம் புதிய சர்வதேச இராணுவ மோதல்களின் ஆபத்து குறித்து எச்சரிப்பது, சமாதானத்துக்காகவும், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கும், போருக்கும் எதிரான போராட் டத்தை வலுப்படுத்துவது சமாதானத்துக்கான போராட்டத்தை சோசலிசத்துக்கான போராட்டத்துடன் ஒருங்கிணைப்பது ஆகிய பணிகளில் ஈடுபடுவது. (ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி, நெதர்லாந்து புதிய கம்யூனிஸ்ட் கட்சி, பெல்ஜியம் தொழிலாளர் கட்சி, லக்சம்பர்க் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன ஜெர்மனியின் எல்லை நகரமான ஆச்சினில் பிப்ரவரி 15ம் தேதி இதையொட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட முடி வெடுத்து அதற்கான தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகத் தகவல் தெரிவித்தன.
- அடுத்த ஆண்டு யூகோஸ்லேவியா பெடரல் குடியரசுக்கு எதிரான கொலைவெறி பிடித்த ஏகாதிபத்திய நேட்டோ தாக்குதலின் 15ம் ஆண்டாகும். ஏகாதிபத்திய இராணுவ யுக்தியின் புதிய கட்டம் தொடங்கியதை இது குறிக்கிறது. அதேபோல இவ்வாண்டு தெற்கு சைபீரிய மாகாணத்தில் கொசோவாவையும், மெடோ ஹிஜாவையும் ஆக்கிரமிக்கத் தொடங்கிய ஆண்டாகும். இவற்றைக் குறிக் கும் வகையில் எதிர்ப்பு இயக்கம் நடத்துவது.
- ஆசிய, ஆப்பிரிக்க இலத்தீன் அமெரிக்க, கரீபிய நாடுகளின் மீதான முதலாளித்துவ நெருக்கடியின் தாக்கம் குறித்த சர்வதேசகருத் தரங்கம் நடத்துவது. இதில் குறிப்பாக பொரு ளாதார, சமூக முன்னேற்றத் துக்கான உரிமை, இயற்சை வளங்களைப் பாதுகாப்பது, வேளாண்மை, நிலஉரிமை, உணவுப்பாது காப்பு ஆகிய அம்சங்களை வலியுறுத்துவது. சுற்றுச் சூழலை அழிப்பதில் ஏகபோகங்களின் பங்கை அம்பலப்படுத்துவது, அதிகரித்து வரும் சுற்றுச் சூழல் நெருக்கடியை ஏகபோக எதிர்ப்பு ஏகாதிபத்திய எதிர்ப்பு அணுகு முறையில் வலியுறுத்துவது.
- அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்கு எதிராகவும், பொது ஐரோப்பிய ஒன்றிய நிலையை எதிர்த்தும், இலத்தீன் அமெரிக்காவிலும், கரீபியாவிலும் நடை பெற்றுவரும் போராட்டங்களுக்கு ஆதரவாக வும், அமெரிக்க சிறையில் வாடும் கியூபாவின் தேசபக்தர்கள் நாடு திரும்ப வலியுறுத்தியும், சோசலிசக் கியூபாவுக்கு ஆதரவாகவும், பொலிலியா, வெனிசூலா, கொலம்பியா மக்களுக்கு ஆதரவாகவும், சர்வதேச ஒருமைப் பாட்டு இலக்கங்களை நடத்துவது.
- பெருமள விலான கட்சிகள் பங்கேற் கின்ற சர்வதேச நிகழ்வுகளைப் பயன்படுத்தி சித்தாந்தத் தாக்குதல், வெகுஜன ஊடகங் களின் பங்கு ஆகியவை குறித்து விவாதிக்கவும், வெகுஜன தகவல் தொடர்பு அனுபவங் களைப் பகிர்ந்துகொள்ளவும் செயல்கூட்டங் களை நடத்துவது.
- நெருக்கடியின் தாக்கம், உழைக்கும் பெண்கள் மீதான ஏகாதிபத்தியத்தின் பண் முகத் தாக்குதல் ஆகிய அம்சங்களை முன் வைத்து 2014 மார்ச் 8 அன்று சர்வ தேச மகளிர் தினத்தைக் கொண்டாடுவது, அவர்களுடைய போராட்டத்துக்கும், ஏகாதி பத்திய எதிர்ப்பு இயக்கத்துக்கும் ஆதரவளிப்பது.
- தொழிலாளர்கள் மற்றும் மக்களின் பொருளாதார, சமூக உரிமைகளுக்கு ஆதர வாக, வேலை அடிப்படை உரிமைக்காக தொழிலாளர் உரிமைகளுக்காக வர்க்கப் போராட்டத்தின் முக்கியத்து வதை வலி யுறுத்தி, மனிதனை மனிதன் சுண்டும் நிலைக்கு முடிவு கட்டிட ஒவ்வொரு நாட்டிலும் நடை பெற்றுவரும் போராட்டங்களில் பங்கேற் பதன் மூலம் மே தினத்துக்கு பெருமை சேர்ப்பது. இளைஞர்களிடையே காணப்படும் பெருமளவிலான வேலையின்மைக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து வேலையின் மைக்கும் அதன் உண்மையான அடிப்படை களுக்கும் எதிராக தொழிற்சங்க உரிமை களுக்கு ஆதரவாக, அரசியல் தாக்குதலுக்கு எதிராக, கைது செய்யப்பட்டுள்ள தொழிற் சங்கத் தலைவர்களின் விடுதலைக்காகப் போராடுவதற்கான செயல்திட்டத்தை அன் றைய தினம் அறிவிக்கும் பணியில் ஒவ்வொரு நாடும் ஈடுபடுவது.
- இனவெறி, அந்நியர்பால் வெறுப்பு, பாசிசம், ஆகியவற்றுக்கு எதிராக ஒருங் கிணைந்த வகையில் போராடுவது. கம்யூ னிஸ்ட் எதிர்ப்பு, வரலாற்றைத் திரித்து எழுது வது ஆகியவற்றுக்கு எதிரான சித்தாந்தப் போராட்டத்தின் முக்கியத் துவத்தை வலி யுறுத்துவது. கம்யூனிசத்தைப் பாசிசத்துக்கு இணையாக காட்ட முயலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரச்சாரத்தையும், நடவடிக்கை களையும் முறியடிப்பது.
- கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிரான தாக்குதலுக்கும், கம்யூனிஸ்ட் அடையாளங் களைத் தடை செய்துள்ளதற்கும் எதிராக, தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆதரவாக ஒவ்வொரு நாட்டிலும் நடைபெற்று வரும் போராட்டங் களுக்கு ஆதரவாக இயக்கம் நடத்துவது.
- லெனினது 90வது நினைவு ஆண்டை ஒட்டி, கம்யூனிஸ்ட் அகிலம் தொடங்கப்பட்ட தன் 95வது ஆண்டையும், சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் நினைவு கூர்வது.
- அரேபிய நாடுகளிலும், மத்தியக் கிழக்கிலும், உள்ள கட்சிகளின் ஒத்துழைப்புடன் அந்நாடுகளின் சமூக மற்றும் தேசிய விடுதலைப் போராட்டங்கள் குறித்த சர்வதேச கருத்தரங்க அமைப்பை ஊக்குவிப்பது. ஏகாதிபத்திய, யுதவெறிக்குற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன, சிரிய மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவது, ஒடுக்குமுறை, சர்வாதிகார பிற்போக்கு ஆட்சிகளுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து வரும் மக்களுக்கும், அவர்களுடைய சமூக, அரசியல் பொருளாதார உரிமைகளுக் கும் ஆதரவாகக் குரல் கொடுப்பது.
- சிரியாவுக்கும், ஈரானுக்கும் எதிரான ஏகாதிபத்தியத் தலையீட்டைக் கண்டிப்பது, சுதந்திர பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற் கான போராட்டத்தைத் தொடருவது.
- ஏகாதிபத்தியத்துக்கு எதிரான சர்வ தேச முன்னிணியை உருவாக்குவது. ஏகாதிபத்திய எதிர்ப்பு வெகுஜன அமைப்புகளான உலகத் தொழிற்சங்க சம்மேளனம், உலக சமாதானக் கவுன்சில், உலக ஜனநாயக இளைஞர் கழகம், சர்வதேச ஜனநாயக மாதர் சம்மேளனம் ஆகியன அந்தந்த நாட்டின் பிரத்யேக சூழ்நிலைகளுக்கேற்ப செயல்படுவதற்கு ஆதரவளிப்பது. மாநாட்டின் இறுதியில் மகத்தான புரட்சியாளர், பாசிச எதிர்ப்புப் போராளி, போர்ச்சுகல் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் அல்வரோசுனால் பிறந்த நூற்றாண்டு தொடக்கத்தை ஒட்டி பிரம்மாண்ட மான பேரணி நடைபெற்றது. முன்னதாக, மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் தோழர் சுனாலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது நினைவைப் போற்றினர். லிஸ்பன் நகரின் நான்கு முனைகளிலிருந்து புறப்பட்ட பேரணி நகரின் மையப்பகுதியில் அமைக்கப்ப்டடிருந்த மேடையை வந்தடைந்தது. அங்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போர்ச்சுகல் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும், சர்வ தேச மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் சார்பிலும் ஜெரோனிமோ டிசௌசா சிறப்புரை ஆற்றினார்.
(பீப்பிள்ஸ் டெமாக்ரசி, நவம்பர் 11-17 இதழில் வெளிவந்த கட்டுரைகளின் சுருக்கம்: தமிழில் இரா. சிசுபாலன்)
Leave a Reply