“பத்தொன்பதாவது மற்றும் இருபதாவது நூற்றாண்டு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் நூற்றாண்டுகளாக இருந்தன. ஆனால், இந்த நூற்றாண்டு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவுக்கு சொந்தமானதாக இருக்கும். நாம் ஒன்றுபட்டால், பொருளாதாரம் மட்டுமின்றி அனைத்து தளங்களிலும், உலகிலேயே வலிமை மிகுந்தவர்களாக ஆகிவிடுவோம்”………………
(ஹியூகோ சாவேஸ், 2005)
டிசம்பர் 6, 1998 லத்தின் அமெரிக்காவின் வரலாற்றில் மட்டுமின்றி, உலக வரலாற்றிலும் மிகவும் முக்கியமான நாளாகும். அன்றுதான் வெனிசுலாவின் அதிபராக சாவேஸ் பதவி ஏற்றார். இலத்தீன் அமெரிக்காவின் வரலாற்றை மாற்றிய பொலிவார், ஸ்பெயினின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து மரணம் வரையில் போர் என வீர முழக்கமிட்டு, விடுதலைத் தீயை மூட்டியவர். சைமன் பொலிவாரின் வீரப் போரை பாராட்டும் வகையில், சாவேஸ் பதவி ஏற்றதும், கொண்டு வந்த அரசியல் சீர்திருத்தங்களுக்கு பொலிவாரியப் புரட்சி என்று பெயர் சூட்டினார். அரசியல் புரட்சியாக துவங்கியதென்ற போதிலும், புதிய அரசியல் சாசனத்தின் மூலமாக நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் அமைப்பையும் சாவேஸ் மாற்றினார். வெனிசுலாவின் பொருளாதாரத்தை மாற்ற அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது நிலச்சீர்திருத்தம் ஆகும்.
ஹியூகோ சாவேஸ் வெனிசுலாவின் அதிபராக பதவியேற்றதற்கு பின்பு இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரிகள் அதிபர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். சாவேஸ் பதவியேற்றது நவீன தாராளமயக் கொள்கைக்கு கிடைத்த சவுக்கடி எனக் கருதப்பட்டது. தொடர்ந்து நவீன தாராளமயத்தை எதிர்த்ததுடன் வெனிசுலாவில் ஒரு சோசலிச மாற்றத்தை கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை சாவேஸ் முழுமூச்சுடன் செயல்படுத்தத் துவங்கினார். 1978 முதல் 1996 வரையிலான காலகட்டத்தில் வறுமை 17 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக உயர்ந்தது. தலா உண்மை வருமானம் 27 சதவீதம் வரை குறைந்தது. இதே காலகட்டத்தில் எண்ணெய் விற்பனை மூலம் கிட்டும் வருவாய் கணிசமாக குறைந்ததன் விளைவாக பாரம்பரியமாக செயல்பட்ட கிறிஸ்தவ ஜனநாயக கட்சியும், சமூக ஜனநாயக கட்சியும் செயலிழந்துவிட்டன. ஐ.நா வளர்ச்சி திட்டத்தின் கூற்றின் படி 1990-களில் மிக உயர்ந்த வருமான சமமின்மை நிலவிய நாடாக இருந்த வெனிசுலா 2011 இல் மிகக்குறைந்த சமமின்மை நிலவும் நாடாக மாறிவிட்டது என்பது கவனிக்கத்தக்கதாகும்.
சாவேஸ் பதவி ஏற்றதிலிருந்து 2013 இல் மறையும் வரை வெனிசுலா நாட்டின் ஒவ்வொரு தளத்திலும் – அரசியல், சமூகம், பொருளாதாரம், வெளிநாட்டுக் கொள்கை என அனைத்திலும் தனது அடையாளத்தை பதித்துள்ளார். 1999 இல் புதிய அரசியல் சாசனத்தில் அவர் முன்வைத்த ஷரத்துக்கள் மக்கள் பங்கு பெறும் ஜனநாயக அமைப்புக்கு அடிகோலின எனலாம். ஆயிரக் கணக்கான கவுன்சில்கள், பகுதிவாரியான கம்யூன்கள் அமைக்கப்பட்டு, அதிகாரம் பரவலாக்கப்பட்டது. சோவியத் யூனியனில் பின்பற்றப்பட்ட சோசலிச அமைப்பிலிருந்து வேறுபட்ட சோசலிச கட்டுமானத்தை அமைத்த சாவேஸ் அதை “பொலிவாரிய சோசலிசம்” எனப் பெயரிட்டார். “இருபத்தோராம் நூற்றாண்டு சோசலிசம்” என்றும் அதைக் குறிப்பிட்டார். வெனிசுலாவின் பொருளாதார கட்டமைப்பிலும் கணிசமான மாற்றத்தைக் கொண்டு வந்தார். குறிப்பாக, மின்சாரம், தொலைத் தொடர்பு, சிமெண்ட், இரும்பு, எண்ணெய் போன்ற தொழில்களை தேசியமயமாக்கினார். அத்துடன், உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துதல், நாணய மதிப்பு கட்டுப்பாடு போன்றவற்றை மேற்கொண்டதை, வெனிசுலாவின் பூர்ஷ்வாக்கள் கடுமையாக எதிர்த்தனர். சாவேஸ் தனது பதவிக்காலத்தில் வறுமையை 50 சதவீதம் வரை குறைத்தார். கல்வி, ஓய்வூதியம் போன்றவற்றில் கொண்டுவந்த மாற்றங்கள் வறுமை ஒழிப்பிலும், கல்வி, மருத்து சேவை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதிலுரம் குறிப்பித்தக்க மாற்றங்களை கொண்டு வந்தார். 2011-13 வரையிலான காலகட்டத்தில் ஐந்தரை லட்சம் வீடுகளை அரசு ஏழைகளுக்கு கட்டித் தந்துள்ளது. மக்களின் உணவு நுகர்வு அதிகரித்து தினசரி கலோரி சத்து அளவு 50 சதவீதம் வரை உயர்ந்தது. மக்களின் அடிப்படை வசதிகளை உயர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
வெனிசுலா நாட்டு மக்களின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு, சாவேஸ் மேற்கொண்ட நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமானதென்று சுட்டிக்காட்டப்பட வேண்டியது நிலச்சீர்திருத்தங்கள் என்றால் மிகையாகாது. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 5.7 லட்சம் ஹெக்டேர் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலாவின் மொத்த மக்கள் தொகையான மூன்று கோடியில் இது குறைவுதான் என்று தோன்றலாம். ஆனால், வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், சமத்துவத்தை ஏற்படுத்தவும் நிலச்சீர்திருத்தங்கள் அடித்தளம் அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வெனிசுலாவில் நிலவுடைமை
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெனிசுலா பிரதானமாக ஒரு விவசாய நாடாகவே இருந்தது. மற்ற லத்தீன் அமெரிக்கா நாடுகளுடன் ஒப்பிடுகையில் வெனிசுலாவில் நில உடைமையை தீர்மானிக்கும் சக்தியாக அரசு விளங்கியது எனலாம். அதற்கு பிரதான காரணம் 1908-1935 வரை அங்கு பதவியிலிருந்து சர்வாதிகாரி யுவான் விசென்ட் கோமஸ் பல்லாயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டான். அந்நாட்டின் மொத்த நிரப்பரப்பான 9,16,000 சதுர கி.மீ பத்து சதவீதம் அவன் வசமிருந்தது. உலகிலேயே மிக அதிக அளவு நிலத்திற்கு உரிமை பெற்ற சிலரில் அவனும் ஒருவன். கோமஸ் அதிபராக இருந்த காலத்தில் தான் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. எண்ணெய் வளத்தை சுரண்டி கொள்ளை லாபம் ஈட்டத் துவங்கினான். 1935 இல் கோமஸ் மரணமடைந்ததும் பெருமளவு நிலம் அரசின் கட்டுப்பாட்டிற்குள்ளாக வந்தது. கோமஸின் ஆட்சிக் காலத்தில் விவசாயம் ஒரு முக்கியமான தொழிலாக கருதப்படவில்லை. அந்நாட்டின் மொத்த உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு 70 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகக் குறைந்தது. எண்ணெய் பிரதான தொழிலாக மாறி, கோமஸின் சர்வாதிகார ஆட்சியின் கீழ், வெனிசுலா உலகின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக மாறியது. நிலம் ஒரு சிலரின் கைகளில் குவிந்தது. 4.8 சதவீத மக்களிடம் 88 சதவீத நிலம் இருந்தது. 57.7 சதவீத விவசாயிகள் வசம் வெறும் 0.7 சதவீத நிலம் மட்டுமே இருந்தது. நிலக்குவியலின் தாக்கம் எவ்வாறு இருந்திருக்குமென்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
ஒருபுறம் நிலக்குவியல். விவசாயத்திற்கு முக்கியத்துவம் இல்லை. மறுபுறம் எண்ணெய் மூலம் கொள்ளை லாபம் ஈட்ட முடிந்தது. இதன் விளைவாக, 1990 இல் வெனிசுலா இலத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய நிகர உணவு இறக்குமதி செய்யும் நாடாக மாறிவிட்டது. 2005 இல் வெனிசுலாவின் 94 சதவீத மக்கள் நகர்ப்புற வாசிகளாக மாறிவிட்டனர். 1960 களில், ரொமுலோ பெட்டன்கோர்ட் வெனிசுலா அதிபராக இருந்த போது, முதல் நிலச்சீர்திருத்தச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் அரசுக்கு சொந்தமான நிலம் இரண்டு லட்சம் குடும்பங்களுக்கு தரப்பட்டது. ஆனால், பயனாளிகளுக்கு முறையான பட்டா வழங்கப்படாததாலும், அரசு விவசாயத்தை மேற்கொள்ள எந்த ஆதரவும் தராத சூழலில், இத்திட்டத்திலிருந்து விலகினர். 1997 இல், நிலச்சீர்திருத்தச் சட்டம் வரும் முன்பு நிலவிய சமத்துவமற்ற நில உடமையாளர்களிடம் 75 சதவீத நிலம் இருந்தது.
ஹியூகோ சாவேஸ் பதவியேற்கும் முன்பே விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் வண்ணம் சில அடிப்படை மாற்றங்களை செய்வதாக வாக்குறுதி அளித்தார். சாவேஸ் ராணுவத்தில் பணிபுரிந்த போதும், கிராமப்புற சூழலில் வளர்ந்ததால், விவசாயிகளுடன் ஒரு நெருக்கம் உண்டு. பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிலக்குவியலை, அதிகாரக் குவிப்பை எதிர்த்து போராடிய தலைவன் ஐமோரா தனது வாழ்க்கையை நிலச்சீர்திருத்ததங்களுக்கான போராட்டத்திற்கென அர்ப்பணித்தவர். ஜமோரா, சாவேஸ் மிகவும் விரும்பிய, முன்மாதிரியாக கருதிய தலைவர். எனவே தான், சாவேஸ் 1999 இல் அமுலாக்கிய அரசியல் சாசனத்தின் 307 ஆவது அம்சம், நிலச்சீர்திருத்தத்தை வலியுறுத்துகிறது. ஏராளமான நிலப்பரப்பு, எஸ்டேட்டுகள் சிலர் கைகளில் குவிந்திருப்பது சமுதாய நலனுக்கு நல்லதல்ல. பொருத்தமான சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு நிலம் நிரந்தரமாக கிடைக்க கிடைக்க வழிகோலுவது அவசியம் என்றும் கூறப்பட்டது.

2001 இல் சாவேஸ் தற்காலிக சட்டம் மூலம் நிலச்சீர்திருத்தத்தை அமுல்படுத்த விழைந்தார். நிலம் மற்றும் விவசாய வளர்ச்சி சட்டம் நிலச்சட்டம் என்ற பெயரில் நிலச்சீர்திருத்தத்திற்கான முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாக இருந்தது. ஆனால், இதற்கு பணக்காரர்களிடமிருந்து எதிர்ப்பு எழுந்தது. சாவேசின் ஆட்சியை கவிழ்க்க திட்டமிடப்பட்டது. 2002 ஏப்ரலில் ஆட்சி கவிழ்ப்பு திட்டம் தோல்வியை தழுவுயது. இரண்டாவது முறையாக எண்ணெய் உற்பத்தி முடக்கத்தின் மூலம் மீண்டும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடந்தது. அதுவும் தோல்வியை தழுவியது. சாவேஸ் சுதந்திரமாக நிலச்சீர்திருத்தச் சட்டத்தை 2003 இல் அமுல்படுத்தினார். சட்டத்தின் இரு பிரிவுகள் (89,90) சர்க்சைக்கு காரணாக இருந்தன. உச்சநீதிமன்றத்தில் பெரும் எண்ணிக்கையில் இருந்த சாவேஸ் எதிர்ப்பாளர்கள் நிலச்சட்டம் அமுலாவதற்கு நிறைய இடையூறு செய்தனர். 89 ஆவது பிரிவின் படி, தரிசு நிலங்களை அரசின் பட்டா இன்றி கூட சாகுபடி செய்ய இயலும். இதை எதிர்த்து நில உடமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். 90 ஆவது பிரிவின் படி, அடிப்படை கட்டுமான வசதி, சாலை, நீர்நிலை அமைப்புக்கு நிலம் பயன்படுத்தப்பட்டால் அதற்கென நில உடமையாளர்களுக்கு ஈட்டுத் தொகை தர வேண்டிய அவசியமில்லை. இதை நில உடமையாளர்கள் எதிர்த்தார்கள். இதனால் சட்ட அமுலாக்கம் வேகமாக நடைபெற இயலாத நிலை ஏற்பட்டது. 2003-05 வரை நடைபெற்ற நில மறுவிநியோம் பெரும்பாலும் அரசுக்குச் சொந்தமான நிலங்களாக இருந்தன.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுககள் பல தடைகளை தாண்டி, இறுதியில் 2005 ஆம் ஆண்டு நிலச்சட்டம் முழுமையாக அமுலாகியது. “மிஷன் ஜமோரா” எனப் பெயரிடப்பட்ட திட்டத்தின்கீழ், தனியார் வசமிருந்த நிலமும் கையகப்படுத்தப்பட்டு, மறுவிநியோகம் செய்யப்பட்டது. பல அந்நிய முதலாளிகள் வசமிருந்த நிலமும் கையகப்படுத்தப்பட்டது.
இச்சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
- 2005 இல் மாற்றி அமைக்கப்பட்ட நிலச்சட்டம் தனிநபருக்கு பட்டா வழங்குவது மட்டுமின்றி கூட்டுறவு விவசாயத்திற்கும் முக்கியத்துவம் அளித்தது. விவசாயிகளுக்கு வேளாண் உற்பத்தியை அதிகரிக்க பயிற்சி அளிக்கப்படுவதுடன், கூட்டுறவு நிர்வாகத்திலும் பயிற்சி தரப்படுகிறது. இதனால், கூட்டாக செயல்படும் திறமையை வளர்த்துக் கொள்கின்றனர்.
- நிலச்சீர்திருத்தம் மூலமாக நில மறுவிநியோகம் செய்யப்படுவதுடன், குத்தகைக்கு எடுக்கப்படும் நிலங்களை முறைப்படுத்துதல், நில உரிமையாளர்கள் யார் என்பதை உறுதிப்படுத்துதல் போன்றவற்றிற்கு அழுத்தம் தரப்பட்டது. இதன் விளைவாக, 2003-11 வரையிலான காலகட்டத்தில் கிட்டத்தட்ட 60 லட்சம் ஹெக்டேர் நிலம் முறைப்படுத்தப்பட்டது.
- விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் கடன் வழங்குதல், வேளாண் தொழில்நுட்பம், இயந்திர பயன்பாடு கட்டுமானம், சந்தை நிலவரம் தொடர்பான உதவிகளை செய்தல்.
- சுற்றுச்சூழல் மாசுபடா வண்ணம், வேளாண் பணிகளை மேற்கொள்ளுதல்.
- வேளாண் கடன் வழங்கும் பொறுப்பு வெனிசுலா வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுபோலவே இதர பணிகளும் பல்வேறு நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டதன் விளைவாக, நிலச்சீர்திருத்தம் நல்ல பலன்களை ஏற்படுத்தியது. அனைத்திற்கும் மேலாக அரசின் முழு ஈடுபாடும், ஆதரவும் இச்சட்டத்தை வெற்றிகரமாக அமுலாக்க உதவின. இச்சட்டத்தின் பிரதான நோக்கம் நீடித்த வேளாண் வளர்ச்சி மற்றும் சொத்து பகிர்வு ஆகும்.
அனைவருக்கும் நியாயமாக கிடைக்க வேண்டியதை அரசு தலையிட்டு செய்ததன் மூலம் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் வெகுவாக குறைந்தது. நிலச்சீர்திருத்தங்களை எதிர்த்தவர்கள்/கடுமையாக விமர்சித்தவர்கள் கூட பத்து லட்சம் கிராமப்புற மக்கள் (மொத்த கிராமப்புற மக்கள் 17 லட்சம்) வாழ்க்கை மேன்மை அடைந்ததை ஏற்க வேண்டி வந்தது. வெறும் நில விநியோகம் என்பதல்ல. மாறாக நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் கிட்டியதுடன், வாழ்க்கைத்தரம் கணிசமாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்டேட் முதலாளிகளையும், மிகப்பெரிய நிலச்சுவான்தார்களையும் எதிர்த்து, போராடி, சமூக நீதியை நிலைநாட்ட ஒரு ஆயுதமாக இச்சட்டம் பயன்பட்டது என்பது முதன்மையாக குறிப்பிடப்பட வேண்டியதாகும். அனைத்திற்கும் மேலாக, ஏழை விவசாயிகளின் ஆளுமையை அதிகரித்து, நிலக்குவியலை தகர்க்கும் கருவியாக இது அமைந்தது எனலாம்.
நிலச்சீர்திருத்தத்தின் விளைவாக, வெனிசுலாவில் உணவு உற்பத்தி அதிகரித்தது. 1999-2009 கணக்கின்படி, உணவு உற்பத்தி 22 சதவீதம் உயர்ந்தது மக்களின் நுகர்வு அதிகரித்தது. 1998 இல் தலா நபர் கலோரி சத்து நுகர்வு 2,202 என்பதிலிருந்து 2011 இல் 3,182 கலோரி என அகதிகரித்தது. தானிய உற்பத்தி உயர்வில் சோளம் பிரதான பயிராகும். பல்வேறு நன்மைகள் நிலச்சீர்திருத்தங்களின் விளைவாக கிட்டிய போதிலும், சாவேஸ் அரசு ஏராளமான சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தது. அரசு அதிகாரிகள் மத்தியில் திட்ட அமுலாக்கம் பற்றிய குழப்பம், ஊழல், நிலச்சுவான்தார்கள் நடத்திய வன்முறைத் தாக்குதல்கள், பெரிய பிரச்சனைகளாக மாறின. நிலப்பிரப்புக்கள் விவசாயிகளின் தலைவர்களை கொலை செய்தது மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்தன. 2002 முதல் 2012 வரை 120 விவசாயிகள் தலைவர்கள் கொல்லப்பட்டனர். வெனிசுலாவிலுள்ள பிரபல விவசாயிகளின் தலைவர் பிராலியோ அல்வரெஸ் நிலச்சீர்திருத்த போராளிகளில் 260 பேர் கொல்லப்பட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார். கொலையாளிகள் சிலர் பிடிக்கப்பட்ட போதிலும், வாடகை கொலையாளிகளை அமர்த்திய பெரும் நிலப்பிரபுக்கள் கிராமப்புற காவல்துறையினரின் உதவியுடள் பிடிபடாமல் தப்பித்துள்ளனர்.
விவசாயிகள் அமைப்புகளும், அரசு அதிகாரிகளும் இணைந்து, ராணுவத்தின் உதவியுடன், கிராமங்களில் வன்முறை/கொலைகளை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டனர். வன்முறை/கொலை சம்பவங்களுக்கு அண்டை நாடான கொலப்பியாவில் நிலவிய சூழலும் ஒரு முக்கிய காரணமாகும்.
சாவேசுக்கு பின்பும், நிலச்சீர்திருத்தங்களை தொடர பொலிவாரிய அரசின் அதிபர் மதுரோ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அரசின் ஆதரவும், விவசாயிகளின் ஒருங்கிணைந்த ஸ்தாபனமும், நிலப்பிரபுக்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள அவசியம். விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்பட அரசு போதிய நிதியை ஒதுக்கியுள்ளது. நிறுவன அமைப்புகளையும், அந்நோக்கத்துடன் அரசு முடுக்கிவிட்டுள்ளது. மிகவும் சிறிய அளவில் வேளாண்துறை செயல்படும் ஒரு நாட்டில், கிராமப்புறங்களில், நிலஉடமையில் இத்தகைய மாற்றங்களை கொண்டு வருவது எளிதல்ல. நிலச்சீர்திருத்தங்களை முழுமையாக அமுலாக்குவதும், அதன் பலன்களை தக்க வைப்பதும் கடினமாக பணியாகும். நிலப்பிரபுக்கள் தங்கள் நிலங்களை அவ்வளவு எதிதாக விட்டுக் கொடுக்க மாட்டார்கள். நிலக்குவியலை உடைப்பதும் மிகப்பெரிய சவால்தான். இருப்பினும், வெனிசுலா அனுபவம், நில பகிர்வு, மறு விநியோகம் மூலம் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் சமூக நீதியை நிலைநாட்டி, சோசலிசத்தை நிர்மாணிக்க இயலுமென்பதற்கு சிறந்த உதாரணமாகும்.
எனவேதான், பிரச்சனைகள்/சவால்கள் இருப்பினும், “ஏழைகள் அரசாங்கத்தில் தங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்று உணர்ந்த, மிகவும் மாறிய ஒரு சமூகத்தை சாவேஸ் விட்டுச் சென்றுள்ளார். அவரது புகழுக்கு வேறு விளக்கம் தேவையில்லை” என மார்க்சிய அறிஞர் தாரிக் அலி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆதாரங்கள்:
1. வெனிசுலாவில் நிலச்சீர்திருத்தம் பற்றி கிரிகரி வில்பர்ட் எழுதிய கட்டுரை.
2. வி.கே.ராமச்சந்திரனின் வெனிசுலா நிலச்சீர்திருத்தம் பற்றிய கட்டுரை.
Leave a Reply