மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


நகர்மயமாதலின் அரசியல்!


தமிழகம் தான் இந்தியாவிலேயே வேகமாக நகர்மயமாகி வரும் மாநிலமாகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சற்றேறக்குறைய சரிபாதி தமிழக மக்கள் நகர்ப்புறங்களில் வசிப்ப தாக தெரிவிக்கிறது. அதாவது 48.45 சதவிதம் (சுமார் 3.49 கோடி) பேர் தமிழகத்தில் நகரத்தில் வாழ்கின்றனர். ஒரு சதுர கிலோமீட்டரில் 2400 பேருக்குமேல் வசித்து வந்தாலோ, விவசாயமற்ற வேலைகளில் 75 சதவிதத்திற்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டாலோ அது நகரம் என்கிற வரையறைக்குள் வந்துவிடுகிறது. சென்னையில் ஒரு சதுர கிலோமீட்டருக்குள் 26,553 பேர் வசிப்பதாகவும், சுமார் ஒரு கோடி பேர் சென்னை பெருநகரில் இருப்பதாகவும் கணக்கெடுப்பு கூறுகிறது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சுமார் 59 லட்சம் (தமிழக அரசின் கணக்கின் படி 86.44 லட்சம்) பேர் தமிழகத்தில் குடிசைப் பகுதி களில் வசிக்கின்றனர். இவர்களையும் உள்ளடக் கியதுதான் நகரம். வெறும் கண்ணாடி பதித்த கட்டிடங்களும், மால்களும், மல்டி பிளக்ஸ் திரையரங்குகளும் மட்டுமே நகரங்களின் அடை யாளமாக காட்சிப்படுத்தப்படுகிறது.

சமுக பொருளாதார வளர்ச்சிக்கு நகர்மய மாவது அவசியம் என்கிற வாதத்தை முற்றாக நிரா கரிக்க வேண்டியதில்லை. ஆனால், இந்த வளர்ச்சி யாருக்கானது? எதற்கானது? என்ற கேள்வி நம்முன் நிற்கிறது. உண்மையான வளர்ச்சி என்பது அனைத்து பகுதி மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். நகர்மயமாதல் அப்படிப் பட்டது தானா?

“நூற்றாண்டு கால நகர்மயமாதல் நடவடிக்கை பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது, ஆனால் இந்த மாற்றங்கள் ஏன்? எதற்கு? யாருக்காக? என்ற எவ்வித அறிதலும் இல்லாமல் நிகழ்கிறது” என்கிறார் டேவிட் ஹார்வே. அரசுகளின் தவறான பொருளாதார கொள்கைகளால் விவசாய இடு பொருட்களின் விலை உயர்கிறது. வேறு வழி யின்றி கடன்பட்டேனும் விவசாயம் பார்த்தும் வருமானம் அற்ற நிலையில், பிழைப்புக்காக நகரத்தை நோக்கி பலர் விரட்டப்படுகின்றனர். நகரத்தின் “வளர்ச்சியின்” தேவை கருதி இவர் களை நகர்மயமாதல் உட்கொள்கிறது. நகரங்கள் விதவிதமான கட்டிடங்களை தன்னுள் நிறைத்து கொள்வதுபோலவே, இந்த இடம் பெயர்ந்த தொழிலாளியையும் தன்னுள் சுவீகரித்துக் கொள் கிறது. இது தானாகவே பல குடிசை பகுதி உருவாக வழிவகை செய்கிறது.

அன்றாடம் வாழ்க்கைப்பாட்டை பார்க்கவே வழி இல்லாத போது, வருமானம் இல்லாதபோது சொந்த வீட்டை பற்றியோ, வசதியான வாடகை வீட்டைப்பற்றியோ கிஞ்சிற்றும் யோசிக்க முடியாது. இதுவே குடிசை பகுதியின் தேவையை தீர்மானிக்கிறது. நகர்ப்புற ஏழை மக்கள் குறித்து இரண்டு தளங்களில் பேசவேண்டியுள்ளது. ஒன்று நகப்புற குடிசைபகுதி மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள், இரண்டு வளர்ச்சியை காரணம் காட்டி நகரத்திலிருந்து, புறநகருக்கும், ஏன் புறநகரையும் தாண்டி வெளியே துரத்தும் கொடுமை குறித்தும், மறுகுடியமர்த்தப்பட்ட இடத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்துமானதாகும்.

நகரத்தில் வசதியானவர்களுக்கு ஒருபுறம் தரமான பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள், அகலமான சாலைகள், சுகாதாரமான வாழ்க்கை முறை, பாதுகாப்புடனான பிரம்மாண்டமான கட்டிடங்கள் உள்ளது. மறுபுறமோ, ஏழைகளின் சுகாதாரமற்ற குடியிருப்பு பகுதி, குறுகலான சாலை, பாதுகாப்பற்ற குடிநீர், கழிப்பறை இல்லாமை என்ற கொடுமையும் உள்ளது. இதுபோன்ற மோசமான சூழலில் வாழ்பவர்களில் பெரும்பகுதியினர் வாழ்க்கை தேடி கிராமத்தி லிருந்து நகரத்திற்கு வந்தவர்களே ஆவர். இவர் களில் பெரும்பாலோர் முறைசாரா தொழிலிலே ஈடுபடுகின்றனர். இதை நம்பித்தான் அவர்கள் வாழ்க்கை நகர்கிறது. உழைப்புக்கேற்ற கூலி இவர்களுக்கு கிடைப்பதில்லை. நகர்ப்புறத்தில் உள்ள 57 சத முறைசாரா தொழிலாளிகளுக்கு ஒரு நாளைக்கு ரூ 70/- விட குறைவாகத்தான் கூலி கிடைப்பதாக முறைசாரா தொழிலுக்கான தேசிய ஆணையத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது. பெரும்பாலும் இவர்களுக்கு குறைந்த கூலியே வழங்கப்படுகிறது. நகர்ப்புறத்தின் வளர்ச்சியின் பின்னால் இத்தொழிலாளர்களின் மீதான உழைப்பு சுரண்டல் உள்ளது என்பதற்கான சிறு உதாரணம் இது. வன்முறையின் மூலம்தான் நக்ர்மயத்தின் புதிய உலகம் கட்டியமைக்கப் படுகிறது. நகர்களை புதுப்பிக்கிறோம் என்கிற பெயரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் நகரங்களை விட்டு துரத்தப் படுகின்றனர். “இந்த முதலாளித்துவ உற்பத்தி முறையானது தனது தொழிலாளர்களை சுகாதார மற்ற, நோய் பரவும் நிலையில், நெருக்கடியான, இடங்களுக்குள் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்த இன்னல்களை சந்திக்கும் தொழிலாளர்களின் நிலையை ஒழிப்பதற்கான முயற்சிகளை முதலாளித்துவ உற்பத்தி முறை எடுக்காது. மாறாக அதே நிலையில் அவர்களை வேறு இடங்களுக்கு மாற்றிவிடும். அவர்களை நகரங்களின் மைய பகுதியில் குடியிருக்க வைத்த பொருளாதார தேவைதான் தற்போது அவர்களை வேறு இடங்களுக்கு குடியமர்த்துகிறது” இது சமீபத்திய நிகழ்வுகளை வைத்து தற்போதைய ஆய்வாளர் முன்வைத்த கருத்தல்ல. இது ஏங்கல்ஸ் 1872லேயே தனது “குடியிருப்பு பிரச்சனைகள்” என்கிற நூலில் எழுதி உள்ளதாகும். உழைப்பாளி மக்கள் மற்றும் ஏழை மக்களின் குடியிருப்புகள் கட்டாயமாக அகற்றப்படுகிறது. 2010 ஆம் ஆண்டு சுமார் 16,000 வீடுகள் சென்னையில் மட்டும் அகற்றப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் இது தொடர்ந்து நிகழ்கிறது. சென்னையை குடிசை களற்ற சென்னையாக மாற்றப்போவதாக கூறி நகரத்தின் விளிம்பில் நூறு சதுர அடி கூட இல்லாத வீடுகளில் குடிசை பகுதி மக்களை அடைக்கிறது. அங்கும் குடிநீர், சாலை, போக்குவரத்து உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்கிறது.

சென்னை தொழில் நகரமாக உருவாகிய போது அதற்கு தேவையான குறைந்த கூலி உழைப்பாளி களை இந்த இடம்பெயர்ந்த தொழிலாளர்களே வழங்கினர். இவர்களின் தேவை முடிந்த பிறகு இவர்களின் குடியிருப்பிலிருந்தே வெளியேற்றப் படுகின்றனர். எந்த லாப நோக்கத்தோடு இவர்கள் நகருக்குள் குடியமர அனுமதிக்கபட்டார்களோ, அந்த லாப நோக்கம் இவர்களை அகற்றவும் எத்தனிக்கிறது. எதை அரசு செய்ய நினைக்கிறதோ அதை வளர்ச்சி, திட்டமிடல் என்கிற ஒரு தோற்றத்தை உருவாக்கியே செய்கிறது. அரசுதான் குழுக்களை அமைக்கிறது, முதலாளிகளுக்கு என்ன தேவையோ அதை செய்வதற்கு ஏற்ற அறிக்கையை உருவாக்கும் வகையிலேயே குழுவின் உறுப்பினர்களையும் நியமிக்கிறது. ரங்கராஜன் தலைமயிலான குழு, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானிக்கலாம் என்று பரிந்துரைக்கிறது, சர்க்கரை ஆலைகள், உற்பத்தி செய்யும் சர்க்கரை யில் பத்து சதவீத சர்க்கரையை அரசுக்கு, அரசு நிர்ணயம் செய்யும் விலையில் வழங்குவதை நிறுத்தலாம் என்கிறது. அரசு மேற்படி ஆலோ சனைகளை அப்படியே அமல்படுத்துகிறது. கேட்டால் நாங்களாக அமல்படுத்தவில்லை. குழுவின் பரிந்துகைளைத்தான் நாங்கள் அமல் படுத்தினோமே தவிர, அரசின் தனிப்பட்ட விருப்பமல்ல என்று ஒதுங்கிக்கொள்கிறது. இது போலத்தான் நகரங்கள் பலவற்றிலும் சில “வளர்ச்சி குழுமம்” என்கிற குழுவை அமைக்கிறது. நகரின் வளர்ச்சிக்கு இக்குழு கொடுத்த பரிந்துரை யின் பெயரில் இந்த மாற்றங்களும், “ஆக்கிரமிப்பு” அகற்றப்படுவதாகவும் சொல்லிக்கொள்கிறது. அரசின் கட்டுப்பாட்டில் குழு உள்ளதா? அல்லது குழுவின் கட்டுபாட்டில் அரசு உள்ளதா? ஆண் டாண்டு காலமாக ஏழை உழைப்பாளி மக்கள் வசித்து வந்த இடம், இக்குழுக்களால் ஆக்கிர மிப்பு என்றும், பாதுகாப்பற்ற பகுதி என்றும், அங்கீகரிக்கபடாத குடியிருப்பு என்றும் வகைப் படுத்தப்படுகிறது, நகரத்தின் அழகை இவை குலைப்பதாகவும் பதிவுசெய்கிறது. இதையே வேதவாக்காக ஏற்று அரசும் இவர்களை அப்புற படுத்தும் பணிகளை சிரமேற்கொண்டு செய்கிறது. நவீன தாரளமயமாக்கலுக்கு பிறகு நகரங்கள் லாப நோக்கோடு மாற்றியமைக்கப்பட்டு, மீண்டும், மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது.

1971ல் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய சட்டம் (1971) குடிசை பகுதிகளை கண்டறிந்து, அங்கீ கரித்து மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தாக சட்டம் சொல்கிறது. இச்சட்டம் நிறைவேறிய போது 1202 குடிசை பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கீகரிக்கபட்டன, மீண்டும் 1985ல் மேலும் 17 குடிசை பகுதிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 1219 என்ற எண்ணிக்கையோடு கணக்கு நின்று விட்டது. 2002 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மேற்கொண்ட கணக்கெடுப்பின் படி புதிதாக 444 குடிசை பகுதிகள் உருவாகி உள்ளதாக கூறுகிறது. புதிய பொருளாதார கொள்கை அமல்படுத்தப்பட்டபிறகு, விவசாயம் நகர்மயமாதல் அதிகரித்துள்ளது. உற்பத்தி குறைந்து, லாபமற்ற தொழிலாக மாறி விவசாயம் செய்யும் நிலத்தின் அளவு குறைந் துள்ளது. இது அதிகப்படியான கிராமப்புற மக்களை நகரத்தை நோக்கி விரட்டி உள்ளது. இவர்களின் வறுமை தானாகவே, நகரத்தில் பல புதிய குடிசைபகுதிகளை உருவாக்கியுள்ளது. உண்மையில் சென்னையில் மட்டும் சுமார் 1800 குடிசை பகுதிகள் உள்ளன. இவற்றில் பெரும் பான்மையான பகுதிகள் குடிசை மாற்று வாரியத்தால்அங்கீகரிக்கபடாமல் உள்ளன. தமிழ் நாடு குடிசை மாற்று வாரிய சட்டத்தின்படி அங்கீகரிக்க பட்ட பகுதிகளில் மட்டுமே தலையீடு செய்யமுடியும். அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளி லேயே சுகாதார சீர்கேடு குவிந்து கிடக்கும் போது அங்கீகரிக்கப்படாத இடத்தின் நிலை எப்படியிருக்கும்..?

முன்பு குடிசை மாற்று வாரியம் எந்த பகுதியில் குடிசை பகுதி இருந்ததோ அங்கேயே புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிக்கொடுத்து வந்தது. ஆனால் தற்போது புறநகரையும் தாண்டி வெளியே எடுத்துச்செல்லப்படுகின்றனர். நகரத்தின் மையபகுதியில் பெரும்பான்மையான குடிசை பகுதிகள் இருப்பதை அகற்றி அதை தனியாரிடம் கொடுக்கவே இந்த ஏற்பாடுகள் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. குடிசை பகுதி மக்கள் வசிக்குமிடத்திலேயே, இரண்டு மூன்று கிலோ மீட்டருக்குள் வீடுகட்டி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை சாதாரணமாக புறம்தள்ளு கிறது. இத்திட்டங்களை நிறைவேற்ற பெரும்பாலும் அரசு சாரா தொண்டு நிறுவ னங்களே பயன்படுத்தப்படுகின்றனர், இந்நிறு வனங்களுக்கான நிதி ஆதாரம் எல்லாம் வெளி நாடுகளில் இருந்து தான் வருகிறது. ஜவஹர்லால் நேரு நகர்புற மேம்பாடு திட்டத்தின் மூலம்தான் தற்போது நகரை விட்டு வெளியே கட்டப்பட்டு வரும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன, மேலும் கட்டபட்டு வருகின்றன. இத்திட்டத்திற்க்கான நிதியும் உலக வங்கியின் மூலம் தான் பெறப் படுகிறது. குடிநீர் இணைப்பை உலக வங்கி கடனில் கொடுத்தவுடன், கடனை திருப்பி செலுத்த குடிநீருக்கு வரி வசூலித்து கடனை கட்டு என்று சொன்னதோ, அதே போல் கடன் வாங்கி கட்டிடம் கட்டிவரும் நிலையில், நகரத்தின் மையபகுதியில் உள்ள இடத்தை விற்று கடனை திருப்பி செலுத்த வழி சொல்லும், அதையும் இந்த அரசு சிரமேற் கொண்டு செய்யும்..!

எவ்வித திட்டமிடலும் இல்லாமல் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குவிக்கப்படுவது சமுக பதட்டத்தையே கூட ஏற்படுத்திவிடுகிறது. ஏதோ ஒரு மூலையில் இவர்களை தள்ளினாலும் அவர்கள் படிப்பிற்காக வும், வேலைக்காகவும் பல சிரமங்களோடு, பொருட்செலவோடு நகரதிற்குதான் மீண்டும் வந்து செல்ல வேண்டியுள்ளது.

குவியல், குவியலாக முதலாளிகளின் லாப நோக்கம் நிறைவேற ஏழை உழைப்பாளி மக்கள் தேங்கிக்கிடக்கும் இடமாக குடிசை பகுதிகள் அமைந்துள்ளன. இம்மக்கள் வசிக்கும் இடமும் லாபம் தரும் என்றவுடன் இவர்களுக்கு லாபத்தை உருவாக்கித்தந்த குறைந்த சம்பள தொழிலாளி களே நகரத்தின் அசிங்கமாக கருதப்பட்டு நகரத்தை விட்டே வெளியேற்றப்படுகின்றனர்.

“பெரிய நகரங்களின் வளர்ச்சியின் காரணமாக, நகரங்களின் மைய பகுதியில் இடம் அளிக்கப்படு கிறது. இது, செயற்கையாக அந்த நிலங்களுக்கான விலையை அபரிமிதமாக உயர்த்திவிடுகிறது. இந்த நிலங்களில் கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்களோ அதை சுற்றியுள்ள பகுதிகள் மாறுவதற்கு ஏற்றாற் போல் மாறுவதில்லை. எனவே, அந்த கட்டிடங் கள் செயற்கையாக உயர்த்தப்பட்ட விலையை மேலும் உயர்த்துவதற்கு பதிலாக, குறைத்து விடுகிறது. அந்த பழைய கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு, புதிய கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இது போன்ற நெருக்கடி மிகுந்த மைய பகுதிகளில் தொழிலாளர்களின் வீடுகள் அமைந்திருந்தாலும், அவற்றின் வாடகை எவ்வளவு தான் சிறுக சிறுக உயர்ந்தாலும், ஒரு குறிப்பிட்ட அதிகபட்ச அளவை விட உயரவே உயராது. எனவே அந்த வீடுகள் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் கடைகள், பண்டக சாலைகள், பொது கட்டிடங்கள் கட்டப்படும்” என்று குறிப்பிடுகிறார் ஏங்கல்ஸ்.

நகரங்கள் உருவாக்கவும், மறு உருவாக்கமும் செய்யப்படுகின்றன.ஆனால் இந்நிகழ்வு போக்கில் மனித உரிமை பாதிக்கபடுவது குறித்து யாருக்கும் எவ்வித அக்கறையும் இல்லை.

“நகரங்கள் பூகோள மற்றும் சமுக ஒருங்கிணைப்பை உருவாக்கி, உபரியை உருவாக்குகிறது. நகரமயமாதல் எப்போதுமே ஒரு வர்க்க அடிப்படடையிலேயே உருவாகிறது. உபரி உருவாகி, அதன் பகிர்ந்தளிப்பின் பெரும்பான்மை ஒரு சிலரிடமே தங்கிவிடுகிறது என்பதே எதார்த்தம். நகர்மயமாதல் பொருள் உற்பத்தியை பெருக்குவதோடு சம்பந்தப்பட்டது, ஒரு உள் ளுறவு நகர்மயமாதலுக்கும், முதலாளித்துவ வளர்ச்சிக்கும் இடையே நிலவுகிறது” என்கிறார் டேவிட் ஹார்வே. இதுதான் நகர்மயமாதலின் முக்கியமான அடிப்படையாகும். புதிய தொழில் நுட்பம், தகவல் தொடர்பு வளர்ச்சி, பிரம்மாண்ட மான கட்டிடம், சாலை, வாகனம், என அனைத் தின் பின்னும் ஒரு சிலருக்கான லாபத்தை மையப் படுத்தியே நகரத்தின் வளர்ச்சிகள் எல்லாம் சுற்றி வருகிறது என்பது புரியும்.%d bloggers like this: