மோடியின் வளர்ச்சி இந்துத்துவா மற்றும் பெரும் தொழிலகங்களின் இணை வினை


பிரகாஷ் காரத்

தமிழில்: க.சுவாமிநாதன்

(இக்கட்டுரை, 16வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியா வதற்கு முன்னர், தேர்தல் பிரச்சாரம் நடந்தேறுகிற காலத்திலேயே பிரகாஷ் காரத் அவர்களால் எழுதப்பட்டது. எனினும் இக்கட்டுரை தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சூழலுக்கும் பொருந்துகிறது)

மே 1, 2014

2004ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய பின்பு, பத்தாண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிற வாய்ப்புகளை பாரதிய ஜனதாகட்சி தற்போது பெற்றுள்ளது. 16-வது மக்களவைத் தேர்தலில் மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதற்கான திட்டமிட்ட முனைப்போடு பிஜேபி-ஆர்எஸ்எஸ் ஜோடி செயல்படுகின்றன. ஆர்எஸ்எஸ் பிரச்சாரகரான நரேந்திர மேடியைப் பிரதமராக ஆக்குகிற பேரார்வத்தோடு அது உள்ளது.

தேர்தல் முடிவுகள் எப்படியிருப்பினும், அது இந்துத்துவாவின் மறுமீட்சிக்கு வழிவகுப்பதாய் இருக்குமென்பதில் ஐயமில்லை. மேலும் வலது சாரி மதவாதக்கட்சியான பிஜேபியை நோக்கிய இந்திய பெரும் தொழிலகங்களின் சாய்வையும் அது உணர்த்துவதாக இருக்கும்.

அரசியல் சூழலில் இம்மாற்றத்தைக் கொண்டு வந்த காரணிகள் என்ன என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியமாகிறது. மேலும் நாட்டின் அரசியல் பொருளாதாரத்தில் எவ்வகையான எதிர்காலப் போக்குகளை அது உருவாக்கக்கூடும் என்பதையும் நாம் உள்வாங்க வேண்டியுள்ளது.

‘இந்திய அரசியலில் ஓர் வலிமையான வலது சாரிக் கட்சியாக வளர்வதற்கான தனது வேட்கை யின் வெற்றிக்கான திறவுகோல் எது என்பதை பிஜேபி இறுதி செய்து விட்டது. இஸ்லாமிய சிறுபான்மையினரை உள் எதிரியாகச் சித்தரிக்கிற இந்து தேசிய வாதத்தை முன்னிறுத்துவது அதற்கு மதவாதத்தன்மையைத் தருகிறது. அத்தோடு அம்மேடையின் இன்னொரு முனையாக வலது சாரித்தன்மை கொண்ட பொருளாதாரக் கொள்கை உள்ளது. தாராளமய, தனியார்மய வேட்டைக்கு ஆதரவு தருவதாகும் அது. இவ்விரு தன்மைகளின் இணைப்பு அக்கட்சியை முத லாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களிலுள்ள பிற் போக்கான பகுதியினரைப் பிரதிநிதித்துவம் செய்கிற வலதுசாரி மதவாதக்கட்சியாகவும் தேசிய அளவில் குறிப்பிடத்தக்க சக்தியாக மாற்றி யுள்ளது.(காரத் 1992, பக்கம் 19) ‘தி மார்க்சிஸ்ட்(ஆங்கிலம்-1992)’ இதழின் ஒரு கட்டுரையில் நாம் தெரிவித்திருந்தோம்.

இந்துத்துவா கட்சியின் ஏறுமுகம்

1986-89 காலத்தில், பிஜேபி இந்துத்துவா மேடையைத் தீவிரமாக முன்வைத்தது. எல்கே. அத்வானியின் தலைமையில் மதச்சார்பின்மைக்கு எதிராகவும், மரபு வழியிலான முதலாளித்துவ ஜனநாயக தேசிய வாதத்திற்கு எதிராகவும் விவாதங்களை வடிவமைத்தது. ‘போலி மதச் சார்பின்மை (Pseudo Secularism) மற்றும் சிறுபான்மை ஆதரவு வாதம் (Minoritysm) ஆகிய பதங்களை உலவ விட்டு முதலாளித்துவ மதச் சார்பற்ற கட்சிகளையும் அவற்றின் அரசியலையும் சாடியது. இராமர் கோவில் இயக்கத்தையும், கலாச்சார தேசியத்தையும் முன்னிறுத்தி இந்துத் துவாவின் குறியீடுகளாக மாற்றியதும் இந்து பெரும்பான்மை வாத மேடையின் உச்சங்களாக அமைந்தன.’

அத்வானியின் இரத யாத்திரையில் துவங்கி 1992 டிசம்பர் பாபர் மசூதி இடிக்கப்பட்டது வரையிலான காலத்தில் இத்தீவிர மதவாதப் பிரச்சாரம் மதக்கலவரங்களின் அலைக்கு இட்டுச் சென்றது.

வலதுசாரி இந்துத்துவா சக்திகளின் இவ்வளர்ச்சி, இராஜிவ் காந்தி காலத்திய பொரு ளாதாரப் பாதை 1988-89ல் உருவாக்கிய பொரு ளாதார நெருக்கடியோடு சமகாலத்தில் ஒன் றிணைந்தது. அக்கட்டத்தின் தாராளமயம் உரு வாக்கிய நிதி நெருக்கடியும் சேர்ந்து கொண்டது. இந்துத்துவாவின் இவ்வளர்ச்சி மற்றும் பிஜே பியின் வலதுசாரி பொருளாதாரக் கொள்கை மேடையானது, ஆளும் வர்க்கங்கள் ‘நேரு மாடல்’ பொருளாதாரப் பாதையிலிருந்து விலகுவதையும், முதலீடுகளை இடுவதில் ஒப்பீட்டளவில் அரசு பெரும் பங்கு செலுத்துவதிலிருந்து ஒதுங்குவதை யும் குறிப்பதாக இருந்தது.

1990கள் பிஜேபியின் வளர்ச்சிக்கான கட்டமாக அமைந்தது. 1991ல் நடைபெற்ற 10-வது மக்க ளவைத் தேர்தல்களில் பிஜேபி பிரதானமான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. அத்வானியின் இரதயாத்திரை நடந்தேறிய பின்னணியில் இராஜென்ம பூமி இயக்கம் மதக்கலவரங் களுக்கும், மத ரீதியிலான பிரிவினைகளுக்கும் ஏற்கனவே வழி வகுத்திருந்தது. 1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 11-வது மக்களவைத் தேர்தல் 1996ல் நடைபெற்ற போது 161 இடங்க ளோடு பிஜேபி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. 1998ல் நடைபெற்ற 12வது மக்களவைத் தேர்தலில் அக்கட்சி ஏ.பி.வாஜ்பாய் தலைமையி லான முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை அமைக்க முடிந்தது. (அற்ப ஆயுளோடு முடிந்த 1996 முயற்சிக்குப் பின்னர்)

பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 6 ஆண்டு கால ஆட்சி 2004 மக்க ளவைத் தேர்தலில் முடிவுக்கு வந்தது. 2009 தேர்த லிலும் பிஜேபி ஆட்சியைக் கைப்பற்ற இயலாமல் தோல்வியுற்றது.

அண்மைக்காலத்தில் அரசியல் நிலைமைகள் பெருமளவு மாற்றத்தைச் சந்தித்துள்ளன. 16-வது மக்களவைத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்று வதற்கான பெரும் போட்டியாளராக பிஜேபி உருவெடுத்துள்ளது. பிஜேபியின் செல்வாக்கும், தேர்தல் பலமும் மீள்வதற்கான காரணிகள் என்னென்ன?

நவீன தாராளமய நெருக்கடியால் பலவீனமுறும் காங்கிரஸ்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நவீன தாராளமயக் கொள்கைகள் பொருளாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளது. கடன் அடிப் படையிலான நிதியளிப்பும், ஊக குமிழிகளும் உருவாக்கிய அதீத விகிதங்களிலான வளர்ச்சிக் காலத்திற்குப் பின்னரும் 2008 உலக நிதி நெருக் கடியின் விளைவாகவும் வளர்ச்சிகட்டம் முடி வுக்கு வந்தது. பொருளாதார மந்தமும் ஏற்பட்டது. ஆண்டு வளர்ச்சி விகிதம் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில்) 5 சதவிகிதத்திற்கும் கீழே சரிந்தது. மேலும் நவீன தாராளமய காலத்திய வளர்ச்சி வேலையின்மையையும், வேலைவாய்ப்பு வளர்ச் சிக்கு வாய்ப்புகள் குன்றுவதையும் உள்ளடக்கிய தாக இருந்தது. ஏழு ஆண்டுகளில் இதுவரை இல்லாத பண வீக்கத்தையும் காண வேண்டி யிருந்தது. விவசாய நெருக்கடி கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையைச் சீரழித்தது. இருப தாண்டு தாராளயமப் பாதை ஏற்றத்தாழ்வுகளை விரிவாக்குவதிலும், செல்வக்குவிப்பை சிலர் கைகளுக்கு மாற்றுவதிலுமே முடிந்துள்ளது.

நவீன தாராளமயப் பாதையின் குறிப்பான விளைவு எதுவெனில் உயர்மட்ட ஊழல்களின் பெருக்கமேயாகும். இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடித்ததும், ஆளும் அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கங்களும் சோரம் போவதுமான தன்மை இந்திய சமூகத்தைத் தொற்றிக் கொண்டது. தாராள மயத்தால் முன்னர் பலனடைந்த நடுத்தர வர்க்கங்களும் அதிக பணவீக்கம், ஊழல்களால் பாதிப்புக்குள்ளாவது அதிகரித்தது.

1990களில் நகர்ப்புற நடுத்தர வர்க்கங்களின் பெரும்பகுதி பிஜேபிக்கு ஆதரவாக மாறியது. 2004 தேர்தலிலும், சற்று அதிகமாக 2009லிலும் அவர்கள் காங்கிரஸ் பக்கம் திரும்பினர்.

2011ல் இப்பகுதியினர் அதிருப்தியை வெளிப் படுத்தவும், விலைஉயர்வு, ஊழல்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கவும் துவங்கினர். ஆட்சியாளர் களுக்கு எதிரான அதிருப்தி விரைவிலேயே அதிகரித்து கிராமங்களுக்கும் பரவத் துவங்கியது.

காங்கிரசுக்கும், ஐமு கூட்டணி அரசுக்குமான முக்கியமான ஆதரவு பெரும் முதலாளிகளிட மிருந்து கிடைத்ததேயாகும். ஐமு கூட்டணி அரசு ஐ காலத்தில் பெரும்பாலும் பெருமுதலாளிகள் ஆளுங்கட்சியான காங்கிரசின் பக்கமே நின்றனர். ஐமு கூட்டணி அரசுக்கான இடதுசாரிகளின் ஆதரவு குறித்து அவர்களுக்கு தயக்கங்கள் இருந்த போதும் பொருளாதாரக் கொள்கைகளின் திசைவழி குறித்து பெருமளவு திருப்தியடைந்த னர்., இக்காலம் பெரும் தனியார் நிறுவனங்களுக்கு பெரும் புதையலைத் தந்தது. பொருளாதாரக் கொள்கைகளைப் பயன்படுத்தி இயற்கை வளங்களைக் கையகப்படுத்தவும், பொதுச் சொத்துக்களை மலிவாக சொந்தமாக்கவும் அவர்களால் முடிந்தது. பெரும் முதலாளிகளுக் கான வரிச்சலுகைகளும், நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் மூலதனம் பறப்பதற்கான மொரி சியஸ் வழியும் பெரும் கார்ப்பரேட்களுக்கும், நிதி வட்டாரங்களுக்கும் மகிழ்ச்சியைத் தந்தன.

திருப்பு முனை

ஆனால் 2010 திருப்பு முனையாக அமைந்தது. 2010-11ல் பொருளாதார மந்தம் உருப்பெறுவதில் இது துவங்கியது. ஐமு கூட்டணி 2 அரசின் கடைசி இரண்டு ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி தேக்கத்தைக் கண்டது. ரூபாய் மதிப்பு 30 சதவிகிதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியைக் கண்டதால் வெளி நாட்டுக் கடன் சேவைக்கான செலவினம் கடுமை யாக அதிகரித்து கார்ப்பரேட்டுகளின் இலாப விகிதத்தை வெகுவாகப் பாதித்தது.

2010ன் இன்னொரு முக்கிய அம்சம், கார்ப்ப ரேட் நிறுவனங்களின் ஈடுபாட்டோடு நடந்தேறிய பெரும் ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்ததாகும். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்தேறிய தொலைத்தொடர்பு ஊழல், சட்டத்திற்குப் புறம்பான சுரங்க மோசடிகள், நிலக்கரி ஊழல் வழக்கு ஆகியன பெரும் கார்ப்பரேட் நிறுவனங் களைப் பாதித்தன. இவற்றில் அனில் அம்பானி குழுமம், டாடா, பிர்லா, எஸ்ஸார், ஜின்டால் ஆகியோர் அடங்குவர். 2ஜி அலைக்கறை ஊழலில் அனில் அம்பானி விசாரிக்கப்பட்டார். நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு வழக்கில் குமாரமங்கலம் பிர்லாவும், ஹிண்டால்கோ நிறுவனமும் முதல் தகவல் அறிக்கையில் (எப்ஐஆர்) குற்றவாளிகளாக இணைக்கப்பட்டனர். இத்தகைய லஞ்ச ஊழல் வழக்குகளுக்கு எதிராக ஒட்டு மொத்த நிறுவன உலகமும் கோபத்தை வெளிப்படுத்தியது. ஐமு கூட்டணி அரசின் தாரை வார்ப்புகளால் பெரும் பலனடைந்த பெரும தொழிலகங்கள் தற்போது பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும்,. அவரது அரசுக்கும் எதிராக த் தங்களின் சீற்றத்தைத் திருப்பியுள்ளனர். பெரும் தொழிலகங்கள் – ஆட்சி யாளர்கள்- அதிகார வர்க்கம் ஆகியோரின் கூட்டணிக்கு எதிராக மக்களின் கோபம் எழுந்த போது, பெரும் தொழிலகங்கள் அரசாங்கத்தி லிருந்த தங்களின் புரவலர்களுக்கு எதிராகத் திரண்டன.

குஜராத் மாடல் : பெரும் தொழிலகங்களின் ஆதரவு

பொருளாதார நெருக்கடி ஆழமானதால், தொழிலுற்பத்தி செங்குத்தாய்ச் சரிந்தது. அதீத லாபங்களுக்கான வழிகள் சுருங்கின. பெரும் முதலாளிகள் இன்னொரு அரசியல் காவல் தெய்வத்தை தேடத் துவங்கினர். இத்தேடலுக்கு நீண்ட காலம் பிடிக்கவில்லை. கார்ப்பரேட் நாயகர்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் கதவுகளைத் தட்டினார்கள்.

2002 குஜராத் கொடூரம் நிகழ்ந்ததிலிருந்து குஜராத்தில் பெரும் தொழிலகங்கள் முதலீடு செய்வதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து நரேந்திர மோடி மேற்கொண்டார். இரண்டாண்டு களுக்கு ஒருமுறை நடந்தேறிய ‘அதிரும் குஜராத்’ (Vibrant Gujarat) மாநாடுகள் நரேந்திர மோடியின் ‘குஜராத் மாடலை’ சந்தைப் படுத்துவதற்கான மேடைகளாகப் பயன்படுத்தப் பட்டன.

1980களில் முதலாளித்துவ அடிப்படையில் மிக வளர்ச்சியடைந்த இந்திய மாநிலங்களில் ஒன்றாக வளர்ந்தது. நவீன தாராளமய காலத்தில் கட்ட மைப்பு மற்றும் தொழில்களுக்கான தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்கு போட்டி போடுமாறு மாநிலங்கள் ஊக்குவிக்கப்பட்டன. நரேந்திர மோடியின் தலைமையிலான குஜராத் செய்தது என்னவெனில், மலிவான விலையில் நில ஒதுக்கீடு, மானிய மின்சாரம், வரிக்குறைப்புகள் மூலமாக தனியார் நிறுவன முதலீடுகளுக்கு மிகப்பெரும் சலுகைகளைத் தந்ததேயாகும்.

ஜனவரி 2009ல் நான்காவது ‘அதிரும் குஜராத்’ மாநாட்டின் போது கார்ப்பரேட்டுகள் இப்புதிய காவல் தெய்வத்தை, மீட்பரைச் சுற்றி அணி திரண்டனர். இம்மாநாட்டில் தான் அனில் அம்பானி “குஜராத்திற்கு நரேந்திர மோடிஜி நல்லது செய்துள்ளார்; இவரே நாட்டிற்கும் தலைமையேற்றால் எப்படியிருக்கும்! இவரைப் போன்றவரே நாட்டின் அடுத்த தலைமையாக அமைய வேண்டும்” என்றார். பாரதி குழுமத்தின் சீப் எக்ஸ்கியூடிவ் சுனில் மிட்டல், “முதல்வர் மோடி சீப் எக்சிகியூடிவ் ஆக அறியப்படுகிறார். உண்மையில் அவர் நிறுவனத்திற்கோ, துறைக்கோ தலைமை தாங்காததால் சீப் எக்சிகியூடிவ் அல்ல. அவர் மாநிலத்தை நிர்வகிக்கிறார். நாளை நாட்டையே நிர்வகிக்க முடியும்” என்று பிரகடனம் செய்தார்.

அதிலிருந்து 2011, 2013களில் நடைபெற்ற ‘அதிரும் குஜராத்’ மாநாடுகளில் இந்த கோரஸ் சப்தம் அதிகமானது. பலரும் சேர்ந்து பாடத் துவங்கினர், முகேஷ் அம்பானி, இரத்தன் டாட்டா, அதி கோத்ரெஜ், கௌதம் அதானி மற்றும் முன்னணி தொழிலகங்கள் – வங்கிகளின் பல சீப் எக்சிகியூடிவ்கள் நரேந்திர மோடிக்கும், அவரது குஜராத் மாடலுக்குமான தங்களின் மகிழ்ச்சியைப் பதிவு செய்தனர். 2013 மாநாட்டில் அனில் அம்பானி வரவேற்பை கூச்சப்படுகிற அளவிற்கு காந்தி – படேல் மரபுகளிலிருந்து கண்ணியெடுத்ததோடு “இராஜாதி ராஜா” என்றும் புகழாரம் சூட்டினார்.

ஆளும் வர்க்கங்களில் மிக சக்தி வாய்ந்த அடுக்கில் இருப்பவர்கள் நாட்டின் பெருமுதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்கள். இப்பகுதியினர் தாராளமயத்திற்குப் பின்னர் பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளதோடு ஆளும் வர்க்கங்களுக்கான தங்களின் தலைமையையும் மேலும் உறுதிப் படுத்தியுள்ளனர். பெரும் முதலாளிகளின் ‘பெரும் பகுதி காங்கிரசுக்கான தங்கள் ஆதரவை முதன் முதலில் 1991ல் விலக்கிக் கொண்டன. அவற்றின் முக்கியமான அங்கங்கள் பாஜகவை ஆதரித்தன. 1990ல் இரதயாத்திரையை நிறைவு செய்துவிட்டு கொல்கத்தாவிற்கு அத்வானி முதலில் வந்த போது அவருக்கு பிர்லா வரவேற்று மதிய விருந்து அளித்தார். முன்னணித் தொழிலதிபர்கள் பலர் அதில் பங்கேற்றனர். இத்தகைய வெளிப் படையான ஆதரவும், அங்கீகாரமும் 1991 மக்க ளவைத் தேர்தலுக்கும் விரிவடைந்தது. முதன் முறையாக காங்கிரசுக்கு நம்பகமான மாற்றாக பாஜகவை பெருமுதலாளிகளில் குறிப்பிட்ட பகுதியினர் பார்த்தனர். 1991 பொதுத் தேர்தல்களில் நன்கொடை திரட்டலிலும், செலவினத்திலும் பாஜக காங்கிரசையே மிஞ்சியது.

மோடிக்கு ஆதரவாக பெரும் முதலாளிகள்

இது இரண்டாவது முறை, (முதலில் 1990களில்) பாஜகவுக்கு ஆதரவாக பெரும் முதலாளிகள் அணி திரண்டிருப்பதாகும். வித்தியாசம் என்னவெனில், நடப்பு கட்டத்தில் கிட்டத்தட்ட ஏகபோக ஆதரவை பெரும் முதலாளிகள், கார்ப்பரேட்டுகளிடமிருந்து நரேந்திர மோடி பெற்றிருப்பதே.

இந்தியப் பெரு முதலாளிகளின் இசைவு மட்டுமல்ல. 2011, 2013 ‘அதிரும் குஜராத்’ மாநாடுகளில் அமெரிக்க – இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் ரோன் சோமர்ஸ் பங்கேற்றார். அவர் நரேந்திர மோடி தலைமையி லான குஜராத் வளர்ச்சி ‘அதிசயிக்க வைக்கிறது’ என்றார். நரேந்திர மோடியும் அமெரிக்க லாபி மற்றும் பொதுத் தொடர்பு நிறுவனமான ஆப்கோ (APCO) வை அணுகி தனது குஜராத் மாடலுக்கான ஒப்புதலை திரட்டுவதற்கும், அமெரிக்க அரசாங்கம் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் ஆதரவைப் பெறுவதற்குமான லாபிக்கும் சேவையைப் பெற்றார். இஸ்ரேலோடு நெருக்கமான தொடர்புடைய ஆப்கோ நரேந்திர மோடியையும், குஜராத் மாடலையும் சந்தைப் படுத்துவதில் ‘பாராட்டத்தக்க’ பணியை ஆற்றி யுள்ளது.

மோடியை பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. பங்குச் சந்தைப்புள்ளிகளின் உயர் வுக்கு வழிவகுத்துள்ளது. மும்பை பங்குச் சந்தை, டெல்லி தேசியப் பங்குச் சந்தையின் அளவு கோல்களான சென்செக்ஸ், நிஃப்டி ஆகியன செப் 2013லிருந்து ஏப்ரல் 2014 மத்திக்குள்ளாக 18 சதவிகிதம் உயர்ந்தது. மோடியின் நெருங்கிய சகா கௌதம் அதானியின் நிறுவனங்களின் பங்கு விலைகள் 2014 பிப்ரவரியிலிருந்து 114 சதவிகித உயர்வை எட்டியுள்ளது. தங்களின் தலைவர் யார் என்பதை சந்தை திட்டவட்டமான குறிப்புகள் மூலம் உணர்த்தியது.

தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள் வாயிலாக மோடியை வளர்ச்சி மற்றும் திறன்மிக்க நிர்வாகத்திற்கான மேடையாகச் சித்தரிப்பது அவர் பாஜகவின் தேர்தல் பிரச்சாரக்குழுத் தலைவராக அறிவிக்கப்பட்டதிலிருந்தே கார்ப்ப ரேட் ஊடகங்களால் நடத்தப்பட்டது. வெகுஜன ஊடகங்களின் பெரும் பகுதியைக் கைகளில் வைத்துள்ள கார்ப்பரேட்டுகளின் பின்பலத்தோடு இப்பிரச்சாரம் எப்போதுமில்லாத அளவிற்கு நடைபெற்றது. அதே நேரத்தில் பாஜக பிரச்சா ரத்தின் மதவெறி அம்சங்களை, பிரச்சாரத்தில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் பங்களிப்பை கார்ப்ப ரேட் ஊடகங்கள் மக்களின் கவனத்திலிருந்து மறைத்தன. ஜூன் 2013ல் மோடி தனது முதல் பேரணி நடத்தியதில் துவங்கி அவர் பெற்ற உச்சபட்ச விளம்பரத்தை இதுவரை எந்தவொரு தனிப்பட்ட தலைவரும் ஊடகங்கள் வாயிலாகப் பெற்றதில்லை. இப்பிரச்சாரமே ‘மோடி அலையின்’ ஜனனத்தை விளக்குவதாகும். இந்த அலையை உருவாக்கிய கார்ப்பரேட் ஊடகமே அதை மக்கள் மத்தியில் விளம்பரமும் செய்தது. படித்த இளைஞர்கள், நடுத்தர வர்க்க பகுதியினர் மத்தியில் நாட்டின் பல்வேறு மையங்களில் மோடியின் தாக்கமும், செல்வாக்கும் பரவியிருப்ப தற்கு ஊடகங்களின் பிரச்சாரமே காரணம்.

அதிகார வர்க்கத்தின் ஊடுருவல்

வர்க்க கண்ணோட்டத்தில், பாஜக – காங்கிரஸ் இரண்டுமே பெருமுதலாளிகள், நிலப்பிரபுக்க ளின் நலன்கைளப் பிரதிநிதித்துவப்படுத்துகிற கட்சிகளே. நரேந்திர மோடி மற்றும் பாஜக நோக்கிய பெரு முதலாளிகளின் சாய்மானம் காங்கிரசை பலவீனப்படுத்தியுள்ளதோடு அதன் தேர்தல் வெற்றி வாய்ப்புகளையும் கேள்வியாக்கி யுள்ளது. ஆளும் வர்க்கத்தின் ஆதரவு மற்றும் உயர் பதவிகளிலிருந்த அதிகார வர்க்கம், பாதுகாப்பு முகமைகள், இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற உயர் அலுவலர்கள் பாஜகவில் இணைவதில் பிரதிபலிக்கிறது. முதன்முறையாக ஒரு ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி பாஜக வேட்பாள ராகப் போட்டியிடுகிறார். மேலும் முன்னாள் உள்துறைச் செயலாளர், முன்னாள் மும்பை காவல்துறை ஆணையர் (தேர்தலில் நிற்பதற்காக பதவி விலகியவர்) ஆகியோரும் வேட்பாளர் பட்டியலில் உள்ளனர். மத்திய அரசின் ‘ரா’ (RAW) உளவு அமைப்பின் ஓய்வுபெற்ற தலைவர் சஞ்சீப் திரிபாதி பாஜகவில் இணைந்துள்ளார்.

1990-91லிலும் இதேபோன்று அதிகார வர்க்கத் தினர் பாஜகவிற்குள் சங்கமமானதைக் கண்டிருக் கிறோம். பாஜகவின் மதவெறி தேசியம் மற்றும் வலிமையான தேசிய பாதுகாப்பு அரசுக்கான அறைகூவல் போன்றவை மனித உரிமைக்கான அச்சுறுத்தலாகவும், இதுபோன்ற அதிகார வர்க்கத்தினருக்கான ஈர்ப்பாகவும் அமைந் துள்ளது.

குஜராத்: இந்துத்துவாவின் ஆய்வுக்கூடம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அங்கம் என்ற வகையிலேயே நரேந்திர மோடியின் அரசியல், தத்துவார்த்த வாழ்க்கை தீர்மானிக்கப்பட்டுள்ளது. 1986லிருந்து 1989 வரை பாஜகவை ஆர்.எஸ்.எஸ். அமைப்பே செதுக்கி வடிவமைத்தது. ஆர்.எஸ். எஸ்க்கும், பாஜகவிற்கும் இடையிலான தத்து வார்த்த, அமைப்பு ரீதியான இணைப்பை எல்.கே. அத்வானி பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டார். பாஜகவின் பல்வேறு மட்டங்களிலான முக்கிய மானஅமைப்பு ரீதியான பதவிகளில் தனது முன்னணி ஊழியர்களை ஆர்.எஸ்.எஸ் இடம் பெறச் செயத்து. 1975ல் குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரச்சாரகராக (முழுநேர ஊழியர்) ஆன நரேந்திர மோடி 1987ல் பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளராக உயர்ந்தார். இப் பதவியானது ஆர்.எஸ்.எஸ்.க்கும் அதன் அரசியல் பிரிவுக்குமான பாலமாக செயல்படுவதாகும்.

இக்காலத்தில் இந்துத்துவா பரிசோதனைக் கான ஆய்வுக் கூடமாக குஜராத் உருவானது. விஸ்வ இந்து பரிசத் ஓர் வெகுஜன அமைப்பாக வளர்ந்து அதன் கால்கள் மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் படர்ந்தன. 1980கள் அகமதாபாத், வதோதரா, சூரத் மற்றும் இதர நகரங்களின் பெரும் மதக் கலவரங்களைச் சந்தித்தன. நகர நடுத்தர வர்க்கங்களின் பெரும் பகுதியினருக்கு மதவெறி ஊட்டுவதில் ஆர்.எஸ்.எஸ். – வி.ஹெச்.பி. கூட்டணி வெற்றி பெற்றது. இத்தகைய இந்துத்துவ நிறுவனத்திலேயே நரேந்திர மோடி தாலாட்டி, சீராட்டி வளர்க்கப்பட்டார்.

முதல்வரான ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர்

குஜராத் பாஜகவில் நிலவிய கோஷ்டி அரசியல் ஏற்படுத்திய பின்னடைவின் காரணமாக நரேந்திர மோடி குஜராத்திலிருந்து டெல்லிக்கு அனுப்பப் பட்டாலும் அவர் ஆர்.எஸ்.எஸ்.சின் நம்பிக் கையை இழந்துவிடவில்லை. 1998ல் வாஜ்பாய் பிரதமரான பின்னர் நரேந்திர மோடி தேசிய அமைப்புச் செயலாளராக உயர்வு பெற்றார். ஆர்.எஸ்.எஸ்.க்கும், கட்சிக்குமான உறவுகளை தேசிய அளவில் பராமரிப்பதற்கான முக்கியப் பதவி அது. அக்டோபர் 2011ல் மோடி குஜராத் முதல்வரான போது அவரே ஒரு மாநில முதல்வ ராகப் பொறுப்பேற்கிற முதல் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராகத் திகழ்ந்தார். அரசாங்கத்தின் முக்கியப் பதவிகளை வகித்த மற்ற ஆர்.எஸ். எஸ்காரர்கள் எவரும் – வாஜ்பாய், அத்வானி உட்பட – முழுநேர ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர்கள் அல்ல. சுயம் சேவக்குகளாக இருந்தவர்களே!

நரேந்திர மோடியின் 2002-2007க்கு இடையி லான முதற்கட்ட முதல்வர் பதவிக்காலம் முழு வதும் இந்துத்துவ வெறியின் எல்லா தீவிரத் தன்மைகளைக் கொண்டதாகவே இருந்தது. மார்ச் 2002ல் நடந்தேறிய கோத்ரா ரெயில் சம்பவம் இஸ்லாமியர்களுக்கு எதிரான கும்பலான ‘எதிர் வினைக்கு’ பொருத்தமான வாய்ப்பை நரேந்திர மோடிக்கு ஏற்படுத்தித் தந்தது. அக்கொடூரத்திற்கு எதிரான சட்ட ரீதியான, நீதி தொடர்பான நடவடிக்கைகளை மோடி மேற்கொள்ளாதது இந்துத்துவ ஆதரவாளர்களிடம் மோடியின் இமேஜை உயர்த்தியது. அப்போதிலிருந்து இந்துத்துவாவின் அடையாளமாகவும், நாயக னாகவும் முன்னேறுவதற்கான சாலை சீராக்கப் பட்டது. 2002 டிசம்பரில் நடந்தேறிய சட்டப் பேரவைத் தேர்தல்கள், இஸ்லாமியர்களுக்கு எதிரான கொடுரங்களுக்காக கிஞ்சித்தும் வருத் தப்படாத, நெகிழாத மோடியை வெளிப்படுத்தின. அவரின் பேச்சுகளிலெல்லாம் இஸ்லாமிய எதிர்ப்பு இருந்தது. ‘நாங்கள் ஐவர். எங்களுக்கு 25 பேர் எனில் குஜராத் குடும்பக் கட்டுப்பாட்டை அமலாக்க முடியுமா? எந்த மதம் அதற்கு குறுக்கே வருகிறது” என்றார். நிவாரண முகாம்களை மூடுவது பற்றி “என்ன சகோதரா! நாங்கள் நிவாரண முகாம்களை ஏன் நடத்த வேண்டும்! நான் அங்கு குழந்தை உற்பத்தி மையங்களை துவக்க வேண்டுமா!” என்று கேட்டார்.

போலி என்கவுண்டரில் குஜராத் காவல்துறை சொராபுதினையும் அவரது துணைவியாரையும் இரத்த வெள்ளத்தில் வீழ்த்திய பின்னர் கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டன. 2007ல் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசிய மோடி “சொராபுதீன் போன்ற மனிதனை நானோ என்னுடைய ஆட்களோ என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார். கூட்டமே ஆர்ப்பரித்துச் சொன்ன விடை, “அவனைக் கொல்ல வேண்டும்”.

குஜராத் மாடலின் இருள் நிறைந்த பக்கம் எதுவெனில் இந்துத்துவாவின் வெறியாட்டமும், இஸ்லாமியச் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையுமாகும். 2002 குஜராத்தின் கோரமான நிகழ்வுகளின் பின்புலத்தில் பெருமுதலாளிகளின் ஒரு சில பகுதியினர் எதிர் விமர்சனங்களை வெளியிட்டனர். மதக் கலவரங்களுக்கும் மேலாக உயிருக்கும் உடமைகளுக்குமான பாதுகாப் பின்மை அவர்களின் முதலீடுகளை பாதிக்கு மென்ற கவலை அவர்களுக்கு ஏற்பட்டது.

தொழிலதிபர்களின் முக்கிய அமைப்பான இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII) டெல்லியில் பிப்ரவரி 2003ல் ஒரு கூட்டத்தை குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பங்கேற்போடு ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்தில் ஜாம்சைட் கோத்ரெஜ் மற்றும் இராகுல் பஜாஜ் போன்ற சில முன்னணித் தொழிலதிபர்கள் குஜராத்தில் நிலவும் பாதுகாப்பின்மை பற்றியும், அது முதலீடுகளை பாதிக்கும் என்பது குறித்தும் கவலை தெரிவித்தனர். இவ்விமர்சனங்களினால் நரேந்திர மோடிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவர் குஜராத் தொழிலதிபர்களை திரட்டி எதிர்ப்பு தெரிவித்தார். குஜராத்திலுள்ள 100 நிறுவனங்கள் சி.ஐ.ஐ. அமைப்பை விட்டு வெளியேறுவதாக மிரட்டின. இம்மிரட்டலால் சி.ஐ.ஐ. பின் வாங்கியது.அவ்வமைப்பின் பொது இயக்குநர் தவறான புரிதலைத் தரத்தக்க நிகழ்வுக்கான வருத்தம் தெரிவிக்கிற கடிதத்தை வெளியிட்டார். ஜனநாயகம் எண்ணம் கொண்ட (Liberal) உறுப்பினர்களின் ஆதங்கங்களைக் காட்டிலும் பெரு முதலாளிகளின் வர்க்க நலன்களே விஞ்சி நின்றன. இரத்தன் டாட்டாவும், கோத்ரெஜ்ஜூம் ஓர் முழு வட்டமடித்து நரேந்திர மோடியை இந்நாட்டின் சீப் எக்சிகியூட்டிவாக முழுமனதோடு ஏற்கிற இடத்திற்கு வந்து நிற்கின்றனர்.

இந்துத்துவாவுக்கும் – பெரும் தொழிலகங்களுக்கும் திருமணம்

ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர், தனியார் நிறுவனங் களின விருப்பத் தெரிவாக மாறியுள்ள பரி ணாமமே 16வது மக்களவைத் தேர்தலின் மிக குறிப்பிடத்தக்க அம்சமாகும். பாசிசத்தை கடைசி ஆயுதமாகப் பயன்படுத்துவதில் பெரு முதலாளி களின் பாத்திரம் நன்கு அறிந்த ஒன்றே. இதுதான் ஜெர்மனியில் நடந்தது. இந்தியாவில் அத்தகைய நெருக்கடி நிலையை ஆளும் வர்க்கங்கள் இது வரை எட்டவில்லை. ஆனால் இந்துத்துவ மத வெறியும் பெரும் முதலாளிகளின் ஆதரவும் இணைவது அத்தகைய போக்குகளை நோக்கி நகரக்கூடியதும் மிசமோசமானதும் ஆகும். இது மதச்சார்பற்ற ஜனநாயக வடிவமைப்பிற்கு அபாயத்தைக் கொணர்கிற வலதுசாரி சர்வாதி காரத்திற்கு விடுக்கிற அழைப்பாகும். நரேந்திர மோடியின் சர்வாதிகார மனோபாவமே – அவரின் தலைமை மற்றும் ஆளுமையின் பண்பாகத் திகழ்வது – பெரு முதலாளிகளை ஈர்க்கிற அம்சங்களில் ஒன்றாகும்.

நரேந்திர மோடியின் தலைமையே ஏற்காத அரசியல் எதிரிகளை இரக்கமில்லாமல் காலி செய்வதே அவரின் அரசியல் வாழ்க்கையாக பாஜகவிற்குள்ளேயே இருந்துள்ளது. ஹரேன் பாண்டியாவின், அமைச்சர் பதவியும், எம்.எல்.ஏ. பதவியும் பறிக்கப்பட்டதோடு சந்தேகத்திற்கு இடம்தரத்தக்க வகையில் படுகொலை செய்யப் பட்டார். அவரின் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக் சகா சஞ்சய் ஜோஷி கட்சித் பதவியிலிருந்து மோடி யின் நிர்ப்பந்தத்தால் பாஜக – ஆர்.எஸ்.எஸ். தலைமையால் ஒதுக்கப்பட்டார். கேசுபாய் படேல், சுரேஷ் மேத்தா, கோர்தான் ஜடாஃபியா மற்றும் பிறரும் – அண்மைய உதாரணமான ஹரேன் பதக் உட்பட தனிமைப்படுத்தப்பட்டு விரட்டப்பட்டனர்.

மோடியின் வளர்ச்சிக்கான ஆர்.எஸ்.எஸ். திட்டம்

பாஜக பிரதம வேட்பாளருக்கான நரேந்திர மோடியின் வளர்ச்சி, மிகக் கவனமாக போடப் பட்ட திட்டத்தின் விளைவாகும். 2009ல் எல்.கே. அத்வானியை தலைமையிலிருந்து ஒதுக்கி வைப்பதென்ற ஆர்.எஸ்.எஸ்.சின் முடிவு பாஜக மீதான ஆர்.எஸ்.எஸ். பிடியை மேலும் இறுக் கியது. பாஜக அமைப்புச் சட்டத்தில் ஐந்தாறு ஆண்டுகளாகக் கொண்டுவரப்பட்டுள்ள திருத் தங்கள் அமைப்பு ரீதியான கட்டுப்பாட்டை வலுப்படுத்தியுள்ளது. கட்சியின் தலைவர்களாக நிதின் கட்காரியும், இராஜ்நாத் சிங்கும் தெரிவு செய்யப்பட்டதில் ஆர்.எஸ்.எஸ்.சின் பங்கு நேரடியாகவே இருந்தது. தேசிய அமைப்புச் செயலாளர் நேரடியாகவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நியமிக்கப்படுபவர். அவரின் கீழ் பணிபுரியும் இரண்டு தேசிய இணைப்பொதுச் செயலாளர்களும் அப்படியே. பாஜகவின் மண்டல அளவிலான அமைப்புச் செயலாளர் களும் ஆர்.எஸ்.எஸ். ஆட்களாகவே நிரப்பப்பட் டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ்.சின் துணைப் பொதுச் செயலாளர் பாஜகவுடனான சங் உறவை பராமரிப் பார். அப்பதவியில் தற்போது சுரேஷ் சோனி உள்ளார்.

நரேந்திர மோடியை பிரதம வேட்பாளராக பாஜக அதிகாரப் பூர்வமாக அறிவிப்பதற்கு ஓராண்டிற்கு முன்பாக நாக்பூருக்கு சென்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை சந்திப்பதற்கு நரேந்திர மோடி சென்றார். பையாஜி ஜோஷி மற்றும் பாஜகவிற்கான சங் தொடர் பாளர் சுரேஷ் சோனியும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். செப்டம்பர் 2013ல் எது நடந்தேறி யதோ அதற்கான துவக்கத்தை இக்கூட்டமே ஏற்படுத்தியது. செப்டம்பர் 2013ல் பாஜகவின் நாடாளுமன்றக்குழு கூடி நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது.

இம்முடிவுக்கு எல்.கே. அத்வானி வெளிப் படுத்திய எதிர்ப்பை சமாளிப்பதில் ஆர்.எஸ்.எஸ். முக்கியப் பங்கு வகித்தது. ஜூன் 2013ல் கோவாவில் கூடிய பாஜகவின் தேசிய கவுன்சில் அத்வானியின் எதிர்ப்பையும் மீறி தேர்தல் பிரச்சாரக் குழுவின் தலைவராக நரேந்திர மோடியை அறிவித்தது. அது அத்வானியின் அல்பாயுசு இராஜினாமா நாடகத் திற்கும் காரணமாக அமைந்தது. ஆர்.எஸ்.எஸ். இதழான ‘ஆர்கனைசர்’ தனதுதலையங்கத்தில் இம்முடிவுக்கு வரவேற்பு தெரிவித்தது.

“தேசம், குறிப்பாக இளைஞர்கள், தீர்மானகர மான, நம்பகமான, செயலூக்கமுள்ள தலைமை யையே எதிர்பார்க்கின்றனர். வெகுஜனங்களின் மனவோட்டம் மோடி வாழ்வில் கேள்விக்கு அப்பாற்பட்ட மாற்றை வெளிப்படுத்துவதாக உள்ளது” (செப்டம்பர் 29, 2013)

ஆளும் வர்க்கங்களின் அகராதிப்படி, வளர்ச்சி யையும், நல்லதோர் நிர்வாகத்தையும் தருகிற தலைவர் (விகாஷ் புருஷ்) என்று நரேந்திர மோடி யைச் சந்தைப்படுத்த வேண்டும். இப்பிரச்சனைக் கான பின்பலத்தை ஆர்.எஸ்.எஸ். அளித்தது. பாஜக தேர்தல் பிரச்சாரத்தின் மையமாக இந்துத்துவா நிகழ்ச்சி நிரல் திகழ்ந்தது. அதே வேளையில் கார்ப்பரேட்டுகளின் ஊடக பின்புல மானது வளர்ச்சியையும், நல்லதோர் நிர்வாகத் தையும் முன்னிறுத்தியது. மோடித்வா என்பது வளர்ச்சி மற்றும் நல்லதோர் நிர்வாகத்தை அடி நாதமாகக் கொண்ட கார்ப்பரேட் மந்திரத்தால் நளினமாக்கப்பட்ட இந்துத்துவாவின் குறியீட்டு முழக்கமாக உருவானது.

ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்கு சவால் எழும்போதெல்லாம் மதவெறி ஆயுதத்தைப் பயன்படுத்தி எதிர்கொள்வது காலம் காலமாய் பரிசோதிக்கப்பட்டு வருகிற உத்தியேயாகும். இன்று எழுந்துள்ள நெருக்கடிக்கான பிற்போக் கான எதிர்வினையைப் பிரதிநிதித்துவப்படுத்து வதே பாஜக ஆகும். ஆளும் வர்க்கங்களின் ரிசர்வ் படையாக இருக்கிற மதவாதம் தற்போது களத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 2004ல் பாஜக சந்தித்த தோல்வி மதவாத சக்திகளின் பலத்தை அடிப்படையில் குறைத்துவிடவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் 18வது காங்கிரஸ் அரசியல் தீர்மானம் குறிப்பிட் டது போல,

“மதவெறி சக்திகளின் கடந்த 15 ஆண்டு கால வளர்ச்சியும், ஆறு ஆண்டு கால ஆட்சியதிகார மும் மதவெறி தத்துவமும் – அது சார்ந்த அமைப்புகளும் சமூகத்தின் பல்வேறு பகுதியினர் மத்தியில் வேர்விடுவதற்கு வழிவகுத்துள்ளது. அவர்களின் உள்ளார்ந்த பலத்தைக் குறைத்து மதிப்பிட்டால் அது தவறானதாய் இருக்கும்.” (பத்தி 2.73)

மதவெறி விளையாட்டு

தேர்தலுக்கு வெகுகாலம் முன்பே மக்களவைத் தேர்தலுக்கான திட்டங்களை ஆர்.எஸ்.எஸ். தீட்டத் துவங்கிவிட்டது. மதவெறிப் பிரச்சாரத் தின் முனைகளாக உத்திரப்பிரதேசம், அதனைத் தொடர்ந்து பீகாரும் மாற்றப்பட்டது. நரேந்திர மோடியின் நம்பிக்கைக்குரிய தளபதியாக அமித் ஷா உத்திரப்பிரதேசத்தின் (ஜூன் 2013ல் கோவா தேசிய செயற்குழு முடிவுற்று நான்கு நாட் களுக்குப் பிறகு) பொறுப்பு அளிக்கப்பட்டார். அமித் ஷா 2012 பிப்ரவரியிலிருந்தே அதிகாரப் பூர்வமற்ற முறையில் உத்தரப் பிரதேசத்திற்குப் போய் வர ஆரம்பித்தார். அவர் குஜராத்தின் உள்துறை அமைச்சராக இருந்தவர். ஜூலை 2010ல் சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் அமித் ஷா குற்றம் சாட்டப்பட்டு கைதானவர். சொராபுதீன் துணைவியாரும், பின்னர் அவ்வழக் கின் சாட்சியும் கொல்லப்பட்டனர். மோடியின் கையாளான அமித் ஷா உத்திரப்பிரதேசத்தில் மதவெறிப் பிரச்சாரத்திற்கான வரைபடத்தை மேற்பார்வை செய்தார். 2004லிலும் 2010லிலும் 80 இடங்களில் 10 இடங்களுக்கு மேலே பெற முடியாத பாஜக உத்திரப்பிரதேசத்தில் பெரும் வெற்றியைப் பெற வேண்டியிருந்தது. இந்தியா வின் பெரிய மாநிலமான அது 1990களின் முதல் இந்துத்துவா அலையைப் பார்த்த மாநிலமு மாகும்.

திட்டமென்னவெனில், மதங்களின் அடிப் படையில் மக்களைத் துண்டாடுகிற சூழ்நிலையை உருவாக்குவதே. 2012ல் அமைந்த சமாஜ்வாடி அரசாங்கம் எதிர்காலத்தில் அரங்கேற்ற வேண் டிய நிகழ்வுகளுக்கு மேடையமைத்துத் தந்தது. மாநில அரசாங்கமானது இஸ்லாமியர்களுக்கான அரசாங்கமே என்ற பிரச்சாரம் திட்டமிட்டு செய் யப்பட்டது. இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரமும் பசுவதை, இந்துப் பெண்களை இல்லங்களி லிருந்து இஸ்லாமிய இளைஞர்கள் கவர்தல் போன்ற பிரச்சனைகளை முன்வைத்து கட்ட விழ்த்துவிடப்பட்டது. கோசி காலனில் நடந் தேறிய முதல் மதக் கலவரம் துவங்கி முசாபர் நகரில் நடைபெற்ற கடைசி கலவரம் வரை இரண்டே ஆண்டுகளில் 27 பெரும் மதக் கலவரங் கள் மாநிலத்தில் அரங்கேறின. இராமஜென்ம பூமி பிரச்சனையை மீண்டும் முன்னுக்கு கொண்டு வர விஸ்வ இந்து பரிசத் ‘சோபா யாத்திரைகளை’ நடத்தியது. 2012 டிசம்பரில் அலகாபாத்தில் நடைபெற்ற விஸ்வ இந்து சம்மேளனத்தில் நரேந்திர மோடியை ‘இந்துத்துவாவின் குறியீடு’ என்று பிரகடனம் செய்தது. இதே முறையிலான மதவெறிப் பிரச்சாரமும், பிரிவினைகளும் பீகாரிலும் குறிப்பாக ஜனதா தளம் (ஐக்கிய) பாஜகவுடனான உறவை அறுத்துக் கொண்ட பின்னர் முயற்சிக்கப்பட்டன.

பாஜகவை தடுத்து நிறுத்துவோம்

1999-2004 காலத்தில் வாஜ்பாய் தலைமையி லான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எல்லா முனைகளிலும் முழுமையான தோல்வியைத் தழுவியது. அக்காலமானது நாட்டின் உள்நாட்டு மற்றும் அயல் கொள்கைகளுக்கு பின்னடைவு ஏற்பட்ட காலமாக இருந்தது. அதன் பொருளா தாரக் கொள்கை இந்திய மக்களுக்கு பெரும் பாதிப்புகளைக் கொண்டு வந்தது. கிராமங்களைப் பொறுத்தமட்டில், பசுமைப் புரட்சிக்குப் பிந்தைய காலத்தில் உற்பத்தி மற்றும் மனித வள மேம்பாடு குறியீடுகளில் மோசமான நெருக்கடிகளைச் சந்தித்த காலமாக இருந்தது. 2004ல் வாக்காளர்கள் பாஜகவை உறுதியாக நிராகரித்ததென்பது ஆட்சியிலிருந்த அக்கட்சியின் அப்பட்டமான கொள்கை திவாலையே வெளிப்படுத்துவதாகும். அதன் ‘இந்தியா ஒளிர்கிறது’ முழக்கம் பெரும் பாலான இந்திய மக்களின் வாழ்க்கையை கேலி செய்வதாக இருந்தது.

நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் உள்ளார்ந்த தன்மைகள் என்னவாக இருக்கும். தேசியப் பாதுகாப்பு அரசின் மீதான வலுவான அழுத்தத்தோடு சர்வாதிகார அரசாக இருக்கும். அரசின் எல்லா நிறுவனங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவுவ தோடு கல்வி முறையிலும், கலாச்சாரத் துறையி லும் மதவெறியைப் புகுத்துவதையும் அரங்கேற் றும். மக்கள் நலத் திட்டங்கள் மீதும் விரிந்த உழைப்பாளி மக்களின் வாழ்நிலை மீது தாக்குதல் தொடுக்கப்படும். பெரு முதலாளிகளின் நலன் களைப் பாதுகாக்கிற வளர்ச்சி மாடல் மூலமாக ஏழைகளின் நலன் தாக்குதலுக்கு ஆளாகும்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையிலேயே – தேர்தல் நடைமுறைகளின் நடுவிலேயே காங்கிரசும், ஐ.மு. கூட்டணியும் தங்களின் தரையை நழுவவிடுவது உறுதியாகிவிட்டது. இச்சூழலில், பாஜகவை தோற்கடிக்கிற வகையி லும் அது ஆட்சிக்கு வருவதைத் தடுக்கிற முறையிலும் தேர்தல் களத்தில் போராடுவது மிக மிக முக்கியமானது.