“இரவெல்லாம் பெய்த மஞ்சள் பூ மழை”
இடம் : நோபல் பரிசு அரங்கம், ஸ்டாக்ஹோம், சுவீடன்
நாள் : 8 டிசம்பர் 1982
பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு நமது காலத்தின் மாபெருங் கவிஞர்களில் ஒருவரான பாப்லோ நெருடா இந்த அவையில் திரண்டிருந் தோருக்கு தனது சொற்களின் மூலம் தெளிவூட்டினார். அன்றிலிருந்து சில நல்லெண்ணம் கொண்ட ஐரோப்பியர்களும் அதற்கு மாறான சில ஐரோப்பியர்களும் லத்தீன் அமெரிக்காவின் வீசியடிக்கும் அலைகளால் தாக்குண்டனர். முறுக்கித் திருகப்பட்ட ஆண்களும் வரலாற்றில் உறைந்த பெண்களும் உறுதி குலையாது எதிர்த்து நின்று வீர மானுடராய் மங்கிய படமாகும் எல்லையற்ற தளத்தில் எழும் அலைகளால் தாக்குண்டனர்.
எங்களுக்கு ஒரு கன நேரமும் ஓய்வும் ஒழிச்சலும் இல்லாது போயிற்று. நெருப்பின் மைந்தனாய் விளங்கிய ஒரு ஜனாதிபதி எரிந்து சரியும் தனது மாளிகையில் கையில் துப்பாக்கியோடு நின்று ஒரு பெரும் ராணுவப் படையை தன்னந்தனியனாய் பொருதிச் சரிந்தார். பரந்த நெஞ்சம் கொண்ட ஒரு அதிபரும் தனது மக்களின் சுயமரியாதையை மீட்ட ஜனநாயகப் பற்றுக் கொண்ட ஒரு ராணுவ வீரனும் இன்று வரை விளக்கப்படாத மர்மமான இரண்டு விமான விபத்துகளில் மாண்டனர். அன்றிலிருந்து இன்றுவரை லத்தீன் அமெரிக்காவில் ஐந்து போர்களும் பதினேழு ராணுவச் சதியாட்டங் களும் நடந்தேறியுள்ளன. ஒரு வஞ்சகம் மிகுந்த சர்வாதிகாரி எழுந்து நமது காலத்தின் முதல் லத்தீன் அமெரிக்க இனப் படுகொலையை கடவுள் பெயரால் நடத்திக் கொண்டிருக்கின்றான்.
இந்தக் காலகட்டத்தில் இரண்டு கோடி லத்தீன் அமெரிக்கக் குழந்தைகள் ஒரு வயது நிரம்பு வதற்குள் மரித்துப் போயுள்ளனர். இந்த எண் ணிக்கை ஐரோப்பாவில் 1970 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை பிறந்த குழந்தைகளின் எண்ணிக் கையை விட அதிகம். ஒடுக்குமுறைகளால் அடக்கு முறைகளால் காணாமல் போனவர்களின் எண் ணிக்கை ஒரு லட்சத்து இருபதினாயிரத்தைத் தாண்டும். இது கிட்டத்தட்ட உப்சலா நகரின் மொத்த மக்களும் தடயமே இல்லாமல் மாயமாய்க் காணாமல் போவதற்குச் சமம். வயிற்றுப் பிள்ளைகளுடன் சூலிகளாய் அர்ஜெண் டினாவின் சிறையில் தள்ளப்பட்டு, அங்கேயே பிரசவித்த எண்ணற்ற பெண்களின் குழந்தைகள் எங்கே சென்றன எப்படி இருக்கின்றன என யாருக்கும் தெரியாவண்ணம் ராணுவ ஆட்சி யாளர்களால் யார்யாருக்கோ தத்தளிக்கப்பட்ட னர் அல்லது அனாதை இல்லங்களுக்கு அனுப்பப் பட்டனர். தங்கள் நாட்டின் நிலையை மாற்ற வேண்டும் என விரும்பிய ஒரே காரணத்திற்காக லத்தீன் அமெரிக்கக் கண்டத்தில் இரண்டு லட் சத்திற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் தங்கள் உயிரை இழந்துள்ளனர். சாபக்கேடான மூன்று சிறிய மத்திய அமெரிக்க நாடுகளான நிகரகுவா, எல்-சால்வடார், கவுத்தமலாவில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேலானோர் செத்து மடிந்துள்ளனர். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இதே சதவீதத்தில் நடந்தால் அது பத்து லட்சத் திற்கும் மேலானோர் மிகவும் கொடூரமாகக் கொலையுண்டு போவதற்குச் சமம்.
விருந்தினரைக் கொண்டாடிப் போற்றுவதில் நீண்ட பாரம்பரியம் கொண்ட சிலி நாட்டில் இருந்து பத்து லட்சம் மக்கள் ஏதிலிகளாய் வெளியேறியுள்ளனர். இது அந்த நாட்டின் மக்கட்தொகையில் பத்து சதவீதம். லத்தீன் அமெரிக்காவின் மிக நாகரிகமான, பண்பாடு சிறந்த நாடெனக் கருதப்படும் சின்னஞ்சிறு உருகுவே நாட்டின் மொத்த மக்கட்தொகையே இருபத்தைந்து லட்சம்தான்; இதில் ஐந்தில் ஒருவர் அகதியாய்ப் புகலிடம் தேடி அன்னிய மண்ணில் அலைந்து கொண்டிருக்கின்றனர். லத்தீன் அமெ ரிக்காவிலிருந்து அகதிகளாய் தத்தம் நாட்டிற்கு வெளியே அலைந்து கொண்டிருக்கும் மக்கள் அனைவரையும் ஒரு நாட்டில் திரட்டினால் அவர்களது எண்ணிக்கை நார்வேயின் மொத்த மக்கட்தொகையை விட அதிகம் இருக்கும்.
சுவீடன் இலக்கியக் கழகம் கவனப்படுத்துவது எதார்த்தத்தின் இந்த பிரம்மாண்டம் தானன்றி அதன் வெறும் இலக்கிய வெளிப்பாடு அல்ல என நான் எண்ணத் துணிகின்றேன். வெள்ளைத் தாளிலுள்ள எதார்த்தம் அல்ல எங்கள் மத்தியில் வாழும் எதார்த்தம்தான், நாள்தோறும் நடக்கும் எண்ணிமாளா மரணங்கள்தாம் எங்கள் தீராத படைப்பூக்கத்தை ஊட்டம்தந்து வளர்ப்பது; துயரங்களாலும் அழகுகளாளும் நிரம்பி வழியும் படைப்பூக்கத்தினை உந்தித் தள்ளுவது. அந்தப் படைப்பூக்கத்தால் தனித்துத் தெரியும் நற்பேறு பெற்ற மற்றுமொரு பூஜ்யம்தான், அலைந்து திரிபவனும் நினைவுகளில் தோய்பவனுமாகிய இந்த கொலம்பியன்.
ஆம். அது இலக்கியத்திற்கான 1982 ஆம் ஆண்டின் நோபல் பரிசு பெற்றபோது காபிரியல் கார்சியா மார்க்வெஸ் ஆற்றிய உரையின் ஒரு பகுதிதான். அவரது இலக்கியத்தின் கூறுமுறையும் உத்தியும் மாந்திரீக எதார்த்தவாதமாக இருக்க லாம். ஆனால் அவரது இலக்கியத்தைக் கொண்டு செலுத்தும் ஆற்றலில் மாயமோ மந்திரமோ ஏதுமில்லை. கடும் எதார்த்தம்தான் அடிப்படை. அவரது இலக்கியத்தை அணுகும் சுத்த சுயப்பிர காச இலக்கிய விமர்சகர்களுக்கு வேண்டுமென் றால் இதில் சந்தேகம் இருக்கலாம். ஆனால் காபிரியல் கார்சியா மார்க்வெஸ்ஸுக்கு சந்தேகம் இல்லை.
லத்தீன் அமெரிக்க இலக்கியம் வெகு நீண்ட கால பாரம்பரியம் கொண்டதே. ஸ்பானிய, போர்ச்சுகீசிய காலனிகளாக இருந்த நாட்களி லேயே செறிவான இலக்கியங்கள் வந்துள்ளன. இந்தக் காலகட்டத்தில் எழுந்த கியூபாவின் யோசே மார்த்தி, நிகரகுவாவின் ரூபன் தரியோ போன்றோரின் படைப்புகள் இன்றும்கூட விதந்தோதப்பட்டு கொண்டாடப்படுகின்றன. கியூபாவின் மலைகளையும் சிற்றருவிகளையும் பாடும் யோசே மார்த்தியின் க்வெண்டனமெரா எனும் பாடல், அமெரிக்க மக்கள் கலைஞர் பீத் ஷீகரால் பாடப்பட்டு இன்றும் இடதுசாரிக் கூட்டங்களில் இசைக்கப்படுவதுதான்.
ஸ்பானிய, போர்ச்சுகீசிய காலனி ஆதிக்கங் களை எதிர்த்து லத்தீன் அமெரிக்க நாடுகள் நடத்திய வீரஞ்செறிந்த விடுதலைப் போர்கள் ஒரு புதிய விடியலைக் கொணர்ந்தன. விடுதலைப் போர்கள் நடந்தவிதமும் சமூக நினைவுகளில் ஒரு தனியான தாக்கத்தை ஏற்படுத்தின. லத்தீன் அமெரிக்காவின் மகா மனிதர்களாக இன்றுவரை போற்றப்படும் சைமன் பொலிவார், சான் மார்ட்டின் ஆகியோர் தாங்கள் பிறந்த நாடுகளின் விடுதலைக்கு மாத்திரமில்லாமல் தத்தமது நாடுகளின் எல்லைகளைக் கடந்து பல லத்தீன் அமெரிக்க நாடுகளின் விடுதலைப் போருக்கும் தளகர்த்தர்களாக இருந்தனர். வெனிசுலாவில் பிறந்த சைமன் பொலிவார் (1783-1830) வெனிசுலா, பனாமா, ஈக்வெடார், பெரு, கொலம்பியா, பொலிவியா ஆகிய நாடுகளின் விடுதலைப் போருக்குத் தலைமை தாங்கினார். அர்ஜெண்டி னாவில் பிறந்த சான் மார்ட்டின் (1778-1850) அர்ஜெண்டினா, சிலி, பெரு ஆகிய நாடுகளின் விடுதலைப் போருக்குத் தலைமை தாங்கினார். இந்த வகையில் தோற்றத்திலேயே நாட்டு எல்லைகளைக் கடந்த பரந்துபட்ட லத்தீன் அமெரிக்க உணர்வு கொண்டவர்களாக இந்த நாட்டு மக்கள் அவர்களது புதிய விடியலில் நடக்கத் தொடங்கினர்.
1917 இல் நடந்த ரஷ்யப் புரட்சியும், மெக்ஸி கோவின் புரட்சியும் (1910-1920) புதிய உத்வேகங் களை அளித்தன. புதிய சாளரங்களைத் திறந்தன. 1936 இல் ஸ்பெயின் நாட்டில் நடந்த உள்நாட்டுப் போரில் கம்யூனிஸ்ட்டுகள், சோசலிஸ்ட்டுகள் அரசமறுப்பாளர்கள், ஜனநாயகவாதிகள் என ஸ்பானிய சமூகத்தின் முற்போக்கான பெரும்பகுதி யினர் குடியரசு அணியாகவும், ஆதிக்க சக்திகளும், முடியரசின் விசுவாசிகளும், கத்தோலிக்கத் திருச்சபையின் உள்ளூர் முகவர்களும் ஜெனரல் ஃபிராங்கோ தலைமையிலான ஃபாசிஸ்டு படையாகவும் கடுமையான உள்நாட்டுப் போரில் மோதின. உலகெங்கும் இருந்துவந்த இடதுசாரி கள், அறிவாண்மைகள், கலைஞர்கள், இலக்கிய வாதிகள் குடியரசு அணி சார்பாக ஃபிராங்கோ வையும் அவரைத் தூக்கி நிப்பாட்டி தங்கள் ராணுவ உதவிகள் மூலம் ஆதரித்த ஹிட்லர், முசோலினி வகையறாக்களையும் எதிர்த்து சர்வேதேசப் படைப்பிரிவில் (International Brigade) துப்பாக்கி ஏந்திப் போராடினர்; ஆம்புலன்ஸ் வண்டிகள் ஓட்டினர். கிரிஸ்டோபர் கால்டுவெல் போன்றோர் சாகக்கூடாத வயதில் தங்கள் இன்னுயிர் ஈந்தனர். லத்தீன் அமெரிக்காவிலிருந்து சென்று பணிபுரிந்தவர்களும் அங்கு செல்லாமல் உற்று நோக்கியவர்களும் பல உண்மைகளை அனுபவப் பூர்வமாகக் கற்றனர். ஜனநாயகம் குறித்து வாய்கிழியப் பேசும் பிரிட்டனும் ஃபிரான்ஸும் செய்த நயவஞ்சகங்களையும் அன்றைய சோவியத்யூனியன் அரைகுறை மனதோடு செய்த உதவிகளையும் அவர்கள் சீர்தூக்கி எடைபோட்டு கவனத்தில் கொண்டனர். இந்த உயிரெடுப்பதும் மனதைக் கொள்ளை கொள்வதுமான வரலாற்று நிகழ்வும் லத்தீன் அமெரிக்க இலக்கியத்திலும் இலக்கியப் படைப்பாளிகளின் நெஞ்சங்களிலும் ஆழமான நிரந்தரமான தடயங்களையும் உளப்பாங்குகளை யும் விட்டுச் சென்றது. குறிப்பாக நெருடா உட்பட்ட கவிஞர்கள் மத்தியில் இது உருவாக்கிய தாக்கம் கொஞ்சம் நஞ்சமல்ல. இதற்குப் பிறகு 1960களில் நடந்த கியூபப் புரட்சியும் காஸ்ட்ரோ, சே ஆகியோரின் ஆளுமைகளும் இலக்கியத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதற்குப் பிறகு உருவான லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் பலவற்றிலும் இவர்களது நிழல் ஆடுவதைக் காணலாம்.
கலை இலக்கிய உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்களை முதலில் பதிவு செய்யும் இலக்கிய வடிவம் கவிதைதான் என்பர். பாரதியாரின் கவிதைகள் நிகழ்த்திய உடைப்பும் பாய்ச்சலுமே நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னறிவிப்பு முன்னத்தி ஏர். மிர்ஸா காலிப், முகம்மது இக்பால் கவிதைகளே நவீன உருது இலக்கியத்தின் தொடக்கப் புள்ளிகள். லத்தீன் அமெரிக்க இலக்கியத்திலும் ரூபன் தரியோ, ஹோஸே மார்த்தி, சீசர் வலேஜா, பாப்லோ நெருடா ஆகியோர்தான் தத்தம் காலத்தின் முதற்சேவல்க ளாக கூவியுள்ளனர். ஆனால் கவிதைகள் புதிய உணர்வுகளை முதலில் பதிவு செய்யும் ஊடகமாக விளங்கினாலும் உரைநடை என்பது அரசியலைப் பிரதிபலிப்பதில் கவிதையை விஞ்சுவதாகவும் உடனடித் தாக்கம் உடையதாகவும் இருந்துள்ளது. இரண்டாம் உலகப் போர் முடிவிற்கு வரும்வரை லத்தீன் அமெரிக்கக் கவிஞர்களுக்கு ஈடுகொடுக் கும் அளவிற்கு உரைநடை எழுத்தாளர்கள் உருவாகவில்லை என்றுகூறலாம். வலேஜா, நெருடா, மிஸ்த்திரல், ஆக்டோவியா பாஸ் ஆகியோருக்கு இணையாக உரைநடை எழுத் தாளர்களும் அவர்களது சிறுகதைகளும் நாவல்களும் கொண்டாடப்பட்டன. ஸ்பானிய உள்நாட்டு யுத்தம், ஃபாசிசத்திற்கும் நாஜியிசத் திற்கும் எதிரான இரண்டாம் உலகப்போர், அமெரிக்கக் கண்டங்களை உலுக்கிய கியூபப் புரட்சி ஆகிய அரசியல் பூகம்பங்களுக்கு முகங் கொடுத்த லத்தீன் அமெரிக்க நாவல்களும் சிறு கதைகளும் உருவாக்கிய லத்தீன் அமெரிக்க இலக்கிய வெடிப்பு (Boom) மார்க்வெஸ் உட்பட்ட உரைநடை ஆசிரியர்களுக்கு அதுவரை யில் கவிஞர்களுக்கு மட்டுமே இருந்த இடத்தைத் தந்தது.
1960 ஆம் ஆண்டுகளில் லத்தீன் அமெரிக்க இலக்கியம் உலகம் முழுவதும் வாசிக்கப்பட்டது. குறிப்பாக அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் ஐரோப்பாவிலும் பெரும்புகழ் பெற்றது. ஜோ லூயி போர்ஹே, ஜூலியோ கொத்தசார், அலெஜோ கார்பிந்தர், சீசர் வலேஜா, கார்லோஸ் ஃப்யுண்டஸ், பாப்லொ நெருடா, ஆக்டோவியோ பாஸ், மரியோ பர்கா யோசோ ஆகியோரோடு காபிரியல் கார்சியா மார்க்வெஸ் அவர்களும் மிகப் பரவலாக வாசிக்கப்பட்டார். வரிசையாக மிகேல் அஞ்சல் அஸ்துரியாஸ், நெருடா, மார்க்வெஸ், ஆக்டோவியா பாஸ் ஆகியோர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றனர். சமீபத்தில் (2010) மரியோ பர்கா யோசோவுக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. தன்னுடைய நோபல் பரிசு ஏற்புரையில் நெருடாவைத் தனியே குறிப்பிட்டு நினைவூட்டி மார்க்வெஸ் பேசியதின் உள்ளுறை அரசியல் மிகவும் முக்கியமானது ஆகும். லத்தீன் அமெரிக்க மக்கள் மத்தியில் நெருடாவுக்கு தன்னிகரற்ற செல்வாக்கு வந்தபின் வேறு வழியில்லாமல்தான் நோபல் குழு அவருக்கு நோபல் பரிசை வழங்கியது. இனிமேலும் வழங்கா விட்டால் நோபல் குழு தன் நம்பகத்தன்மையை இழந்துவிடும் எனும் நிலை ஏற்பட்டது. தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை மறுதலித்தபோது ஜான்பால் சார்த்தர் கூறிய காரணங்களில் ஒன்று, நெருடாவுக்கு வழங்கப்படாத பரிசு தனக்கு வேண்டாம் என்பதாகும்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகம் என்பதே தனது நலனுக்கான பந்து எனக் கருதுவதுதான். ஆனால் அதன் முதலீட்டில் பெரும்பகுதி இருக்கக்கூடியதும் அதன் கச்சாப் பொருட்களுக் கான அடிமாட்டுச் சந்தையாகவும், உற்பத்திப் பொருட்களைக் கொண்டுபோய் கொட்டி கொள்ளை லாபம் காணும் வேட்டைக் காடாக வும் திகழக்கூடிய லத்தீன் அமெரிக்காவைத் தனது கொல்லைப் புறமாகவும் வீட்டுத்தோட்டமாகவும் கருதக்கூடியதுதான். ஒரு நாட்டு மக்கள் பொறுப் பில்லாமல் ஒரு கம்யூனிஸ்ட்டை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தால், நாம் ஏன் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்? என்பது சிலியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் சால்வடார் அலெண்டே அவர்களைக் கொன்று ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு நடந்த கூட்டத்தில் கிஸ்ஸிஞ்சர் கூறியது. இந்த அணுகுமுறையைத்தான் லத்தீன் அமெரிக்காவின் நாடுகள் குறித்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் இன்றுவரை கொண்டிருக் கின்றது.
ஸ்பானிய காலனியாதிக்கம் தென்னமெரிக் காவின் பெரும் பகுதியை தனது குடையின் கீழ்க் கொண்டிருந்தபோது இந்த வேறுபட்ட வரலாறு, நிலவியல், மானுடவியல் சூழலுக்கு மூன்று ஒன்றிணைக்கும் நரம்புகளைக் கொணர்ந்து கொடுத்தது. அவை ஸ்பானிய மொழி, கத்தோ லிக்கக் கிருத்துவம், ஐபீரிய சட்ட நடைமுறைகள். லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடான பிரேசில் போர்ச்சுகல் முடியரசின் காலனியாகத் திகழ்ந்தது. ஆனாலும் வேறுபாடு மொழி மட்டுமே. ஸ்பானிய மொழியும் போர்ச்சுகீசிய மொழியும் கூட தமிழும் மலையாளமும் போல நெருக்கமானவையே. இருந்தாலும் பிரேசிலின் இலக்கியம் மட்டுமே தனியே ஒரு கண்டத்தின் இலக்கியம்போல அணுகி விவாதிக்க வேண்டிய ஒன்றே. எனவேதான் காலனியாதிக்கம் முடிவுக்கு வந்தபின் 19 ஸ்பானிய மொழிபேசும் நாடுகளாக ஆனபின்னும் நாடு கடந்த லத்தீன் அமெரிக்கப் பண்பாட்டுப் பாரம்பரியம் காரணமாக அவர்கள் மத்தியில் நிகழ்ந்துவந்த கலை, இலக்கிய, அறிவாண்மைப் பகிர்வுகள் நின்றுவிடாமல் தொடர்ந்தன.
ஒரேமாதிரியான கலாச்சாரம் மொழி காரணமாக கண்டத்தின் பெரும் நாடுகளின் விளிம்பில் உள்ள சிறுநாடுகள், ஒதுங்கிய பிரதேசங்களில் பிறந்து வளர்ந்து எழுதும் எழுத்தாளர்களும் கண்டம் தழுவிய பெயரும் புகழும் பெறுபவர்களாக இருக்கின்றனர். அந்த வகையில்தான் கியூபாவின் ஹோசே மார்த்தியும், நிகரகுவாவின் ரூபன் தரியோவும் லத்தீன் அமெரிக்க கண்டம் முழுமையும் நன்கறிந்த கவிஞர்களாக இன்றைக்கும் திகழ்கின்றனர். எழுதுபவர்களும் பரந்துபட்ட லத்தீன் அமெ ரிக்கக் கண்டம் முழுமைக்கும் எழுதுகிறோம் எனும் உணர்வுடன்தான் எழுதுகின்றனர். இவை யெல்லாம் மார்க்வெஸ்ஸுக்கும் பொருந்தும்.
லத்தீன் அமெரிக்காவின் அளவற்ற இயற்கை வளம், ஊடறுக்கும் ஜீவநதிகள், தென்றல் தவழும் மலைகள், காய் கனிகளைச் சொரியும் கானகங்கள், பனி உறைந்த சிகரங்கள், பெருமீன்கள் துள்ளும் கடற்கரைகள், எடுக்க எடுக்க வற்றாத ஈயம், செப்புச் சுரங்கங்கள், வளமனைத்தயும் சுரண்டிக் கொழுக்கும் யாங்கி, கிரிங்கோ பெரு முதலாளி கள், வீரஞ் செறிந்த வரலாறு, அதனை மாற்றிய, தடுத்த, மடைமாற்றிய மஹா ஆளுமைகள், உள்நாட்டுப் போர்கள் அயல்நாட்டுப் படை யெடுப்புகள் கொலை பாதகங்கள், நயவஞ்சகத் தின் தசை பொசுங்கும் நாற்றம், தியாகத்தின் தூய சுகந்தம், அறுந்து தொங்கும் நரம்புகள், உடைந்து நொறுங்கிச் சிதறும் எலும்புகள், தெருக்களில் சிந்தி உறையும் ரத்தம், கொக்கைன் கடத்தி உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவனாக மாறிய கடத்தல்காரன், ஒரு நாட்டின் புரட்சியில் தளகர்த்தராய்ப் பணிபுரிந்து சோசலிசக் கட்டு மானத்தில் அமைச்சராகப் பங்குபெற்று பின் மீண்டும் தனது கெரில்லாச் சாக்குப்பையுடன் ஆப்பிரிக்கக் காடுகளிலும் பொலிவியாவின் மலைகளிலும் அலைந்த மருத்துவர், நாடறிய 13 வயது சிறுமியோடு வாழ்ந்த ஒரு ஜனாதிபதி, கேள்வி கேட்டபோது தனக்கு 13 குறித்த மூட நம்பிக்கை இல்லை என பதிலளித்த அவரது குரூர நகைச்சுவை என வரலாற்றின் பரப்பு முழுவதும் உள்ள வண்ணமயமான பாத்திரங்கள் இவைதாம் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸின் நாவல்கள், சிறுகதைகளின் கச்சாப்பொருள். அவருக்கு மட்டுமல்லாது ஏனைய லத்தீன் அமெரிக்க கவிஞர்கள், எழுத்தாளர்களுக்கும் இவைதான் கச்சாப்பொருள். போர்ஹே, ஆக்டோவியா பாஸ், மரியோ பர்கா யோசோ ஆகியோரும் தங்கள் இலக்கிய ஆக்கங்களில் இந்த எதார்த்தத்தைப் பிரதிபலிப்பவர்களாக வாழ்க்கைக்கு உண்மை யானவர்களாகத்தான் இருந்தனர். ஆனால் இலக்கியத்திற்கு வெளியே அவர்களது கருத்துகள், நிலைபாடுகள், செயல்பாடுகள் வலதுசாரிப் பழமைவாதமாக இருந்தது. இதில் வியப்பேது மில்லை. லியோ டால்ஸ்டாயில் இருந்து நம் உள்ளூர் அசோகமித்திரன், ஜோடி குரூஸ் வரை கண்டதுதான். தனது காலத்தின் நிலத்தின் கண்ணாடி என லெனினால் புகழ்ந்துரைக்கப் பட்ட டால்ஸ்டாய் ஆச்சார ரஷியன் கிருத்துவக் கருத்துகளைக் கொண்டவராக இருந்தார். மிக மெல்லிய மனித உணர்வுகளை நுட்பமாக மனம் இளகுமாறு தனது கதைகளில் படைக்கும் அசோகமித்திரனின் அரைப்பாசிச கருத்துகளைக் கேட்டால் இந்த மெல்லிய உடம்பிற்குள் இப்படி ஒரு மோடியா என்று அதிர்ந்து நிற்போம். ஜோடி குரூஸ் மோடி குருஸ் ஆன கதை தெரிந்ததுதான். ஆனால் காபிரியல் கார்சியா மார்க்வெஸ் இலக்கியமும் அரசியலும் பிரித்துக் காண முடியாத ஒருமையாய்க் கொண்டிருந்த சில லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களான வலேஜா, நெருடா, கார்பிண்டியர் வழி வந்தவராக அதன் உச்சம் கண்டவர்.
தினசரி வாழ்க்கையைப் புரட்டும் எண்ணற்ற நெம்புகோல்களையும் மக்களின் மனப்போக்கு களையும் அவற்றைத் தீர்மானிக்கும் வரலாற்றுப் பொருளாதாரத் தாக்கங்கள் அனைத்தையும் ஒரு சில பக்கங்களில் கொணர்ந்து அதன் பல பரிமாணங்கள் கொண்ட எதார்த்த இருப்பை முழுமையை வாசகருக்கு உணர்த்தும் வடிவமாக காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸுக்கு கை வந்ததே அவரது புகழ்பெற்ற மாந்திரீக எதார்த்த வாதப் புனைவு முறை. அது மார்க்வெஸ் கண்டு பிடித்த முறை அல்ல. அவரே பல இடங்களில் குறிப்பிட்டிருப்பதுபோல அவரது முன்னோடிக ளான ஜோ லூயி போர்ஹே, ஜூலியோ கொத்த சார், கார்லோஸ் ஃபியுண்டஸ் ஆகியோர் உருவாக்கி வளர்த்ததுதான். இந்த லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களைத் தாண்டி வில்லியம் ஃபாக்னர், காஃப்கா, ஹெமிங்வே ஆகியோரின் செல்வாக்கு குறித்தும் மார்க்வெஸ் அவர்களே பதிவு செய்துள்ளார். மார்க்வெஸ் தனது ஆழமான தும் துல்லியமானதுமான வரலாற்று அரசியல் புரிதல் தனது லாவகமானதும் கவித்துவமானது மான மொழி ஆகியவை மூலம் மாந்திரீக எதார்த்த வாதம் அதன் உச்சத்தை அடையச் செய்தார்.
எல்லா மகத்தான இலக்கியப் படைப்பாளர் களும் தத்தமது மண்ணையும் காலத்தையும் தாண்டியவர்கள்தாம். ஆர்டிக் கடுங்குளிர் பின் புலத்தில் எழுதப்பட்ட ஜாக் லண்டன் கதைகளும் ஆப்பிரிக்கப் பச்சையும் தொன்மங்களும் பூச்சி களும் பறக்கும் சினுவா அச்சுபியின் கதைகளும், 19ஆம் நூற்றாண்டின் ரஷ்ய மேட்டுக்குடிகள் மத்தியிலான மனக்குழப்பங்கள் வழிந்தோடும் தாஸ்தாவஸ்கியின் நாவல்களும் அவர்கள் நிலத்தையும் காலத்தையும் கடந்து வாசித்து விதந்தோதப்படுபவைதான். நிலமும் காலமும் உருவாக்கும் வரம்புகளைத் தாண்டி அவை மானுட எத்தனத்தை சித்தரிப்பவையாக இருக் கின்றன. காற்றில் பறக்கும் உதிர்ந்த இலைகளாக இல்லாமல் தன்னுடைய துயரத்தை தனது சமூகத்தின் பெருந்துயரத்தின் பகுதியாகக் கண்டு, அந்தத்துயரங்களையும் அதன் பொருளாதார வரலாற்று பண்பாட்டு காரணிகளையும் மாற்றத் துடிக்கும் செயலூக்கங்களாக, பொருதிச் சரிபவர் களாக, சமரசம் செய்து பின் குற்ற உணர்வு கொள் பவர்களாக, கரையில் நின்று கால அலையால் அடித்துப் புரட்டி எடுத்துச் செல்லப்படும் வாழ்க்கையில் ஓரிரு கை மொண்டு குடிப்பவராக இருப்பவர் அனைவரும் வந்து போவதால் நாம் எல்லோருமே நம்மையும் நம் ஆதர்சங்களையும் காண முடிகின்றது.
காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் அவர்களின் நாவல்கள் குறிப்பாக அவரது ஒரு நூற்றாண்டுத் தனிமை உலகமெங்கும் சில நல்ல வழித்தோன்றல் களையும் பல மோசமான போலிகளையும் உரு வாக்கியது. தமிழ் உட்பட எல்லா மொழிகளிலும் உள்ள போலிகளுக்கு உதாரணம் சொல்ல வேண்டியதில்லை. நல்ல வழித்தோன்றலுக்கு எடுத்துக்காட்டு சல்மான் ருஸ்டி எழுதிய நள்ளிர வின் குழந்தைகள். காபிரியல் கார்சியா மார்க் வெஸ்ஸுக்கு இருந்த ஆழமான அரசியல் புரிதல் அக்கறை கரிசனம் ஈடுபாடு இல்லாமல் அவரது இலக்கியக் கூறுமுறையை மட்டும் எடுத்துக் கொண்டு போலச் செய்வது ஒரு கலைப்படைப் பாக இல்லாமல் அவர் போன்றோரின் படைப்பின் கேலிச்சித்திரமாக ஆகிப்போவதைக் காண்கிறோம்.
தமது எதார்த்தத்தில் காலூன்றி தமது வர லாற்றுக்கும் சூழலுக்கும் பொருத்தமானதாக இலக்கியத்தை வளர்த்தெடுத்த லத்தீன் அமெ ரிக்கா அதைப்போல் தனது அரசியலையும் வளர்த்தெடுத்துள்ளது. நீண்ட போராட்ட வரலாற்றின் அனுபவங்களால் பண்பட்டு சிறிதும் வறட்டுவாதமில்லாத ஒரு பாதையைத் தேர்ந் தெடுத்து இன்று உலகம் முழுமைக்குமே ஒரு முக்கியமான எடுத்துக் காட்டாக பயணத்தை தொடர்கின்றது. அரசியல் சமூக மாற்றத்திற்கு இலக்கியம் எந்த அளவு நிலத்தைப் பண்படுத்தும் என்பதற்கு லத்தீன் அமெரிக்க இலக்கியம் ஏற் படுத்திய தாக்கமும் அங்கு தொடரும் முன்னுதா ரணம் இல்லாத அரசியல் மாற்றங்களும் நல்ல எடுத்துக்காட்டு.
லத்தீன் அமெரிக்கா எனும் பதம் முதலில் ஃபிரெஞ்சு ஏகாதிபத்தியத்தால் பயன்படுத்தப் பட்டதே. ஃபிரெஞ்சு மொழியும் ஸ்பானிய போர்ச்சுகீசிய மொழிகள்போல லத்தீனிலிருந்து உருவானதென்பதால் இப்படி அழைப்பது அவர்களை ஆங்கிலோ அமெரிக்க செல்வாக்கு வளையத்திலிருந்து வெளிக்கொணர்ந்து தமக்கு நெருக்கமாக்கும் என்ற வழக்கமான ஃபிரெஞ்சு நுண்ணரசியல்தான் இதன் பின்னணி எனக் கூறப்படுகின்றது. லத்தீன் அமெரிக்க மக்கள் ஃபிரான்சிடமிருந்து உற்றது கொண்டு அற்றது தள்ளினர். அவர்கள் தள்ளியதில் இந்த அதீத பாசமும் அடங்கும். லத்தீன் அமெரிக்க மக்களது இலக்கியமும் அரசியலும் வட அமெரிக்க செல் வாக்கிலோ அல்லது ஃபிரெஞ்சு செல்வாக்கிலோ முழுமையாக அமிழ்ந்து முழுகிவிடாமல் தனக்கு கந்த தனித்துவமான பாதையைத் தேர்ந்தெடுத்தது. மீண்டும் மீண்டும் எடுத்தாளப்படும் சைமன் பொலிவார் சொற்கள் லத்தீன் அமெரிக்காவின் தனித்துவத்தை வரலாற்று ரீதியாகவும் புவியியல் ரீதியாகவும் வேறு இயற்கை அம்சங்களிலும் உள்ள தனித்துவத்தின் மீது கவனத்தை குவிக்கச் சொல்கின்றன. அரசியலோ இலக்கியமோ பொதுவானதைக் கற்றுத் தேர்ந்தவர்களாகவும் தமது தனித்துவத்தை உணர்ந்தவர்களாக அதற் கேற்ப தங்கள் ஆக்கங்களைப் கொணர்பவர்கள் வெற்றி பெற்றவர்களாக இருக்கின்றனர். எளிய உண்மைதான். ஆனால் நமது பாட்டன் வள்ளுவன் கூறிச்சென்றுள்ளது நமக்குத் தெரியும்.
“சொல்வது யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்
அரிதிலும் அரிதான மனிதன்.
காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்
ஏராளமான இறகுகள் கொண்ட மனிதன்”