மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


நிலச்சீர்திருத்தத்தை வடிவமைத்த சிற்பி-தோழர் ஹரி கிருஷ்ண கோனார்


தோழர். ஹரி கிருஷ்ண கோனாரின் 40வது நினைவு நாள் ஜுலை 23. 1915 ஆகட் 5ந் தேதி மேற்குவங்க மாநிலம், பர்துவான் மாவட்டம் கமர்காரியா எனும் கிராமத்தில் சரத் சந்திர கோனார் – சத்யபால் தேவி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். 1974ம் ஆண்டு கேன்சர் நோய்க்கு பலியாகிவிட்டார். 59 ஆண்டுகள் மட்டுமே இம்மண்ணில் வாழ்ந்த தோழர்.ஹரி கிருஷ்ண கோனார் இந்திய இடதுசாரி இயக்க சரித்திரத்திலும் புரட்சிகரமான விவசாயிகள் இயக்க சரித்திரத்திலும் நீங்கா இடத்தைப் பெற்றுள்ளார். கிராமப்புற ஏழை மக்கள் மீது தீராப்பற்று கொண்டு தன் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் செலவிட்ட அந்த மாமனிதனின் இழப்பு எவராலும் ஈடு செய்ய முடியாத ஒன்று என்பதை அவருடைய பணியை அறிந்தவர்களால் உணர முடியும்.

9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே தேச விடுதலைப் போராட்டத்தில் எழுச்சிமிக்க இயக்கங்களில் ஒன்றான ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்ட குற்றத்திற்காக ஆறு மாதம் சிறை தண்டனை பெற்றவர். இவருடைய அரசியல் பணி எவ்வளவு சிறு வயதில் துவங்கியிருக்கிறது என்பதற்கு வேறு சான்று தேவையில்லை. விடுதலையாகி தொடர்ந்து நாட்டு விடுதலைப் போராட்டத்திலும், இவருடைய புரட்சிகரமான அரசியல் பணி காரணமாகவும் பிரிட்டிஷ் அரசால் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த கொடுஞ் சிறையிலிருந்து 1938ம் ஆண்டு விடுதலையாகி வந்த தோழர்.ஹரி கிருஷ்ண கோனார் இந்திய கம்யூனிட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு குறிப்பாக பர்துவான் மாவட்டத்தில் விவசாயிகளை அணிதிரட்டுவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மேற்கு வங்க மாநிலத்தில் 1967ல் முதல் ஐக்கிய முன்னணி அரசு பதவியேற்றது. இதில் நிலம் மற்றும் நிலவருவாய்த்துறை அமைச்சராக ஹரி கிருஷ்ண கோனார் பொறுப்பேற்றார். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநாடு 1969ம் ஆண்டு மதுரையில் நடைபெற்றபோது அகில இந்திய பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு மரணம் வரை அப்பொறுப்பில் திறம்பட பணியாற்றினார். தனது வாழ்நாள் முழுவதும் சுதந்திரம், ஜனநாயகம், சோசலிஷம் என்ற லட்சியத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தீரர். இவருடைய வாழ்வின் குறிப்பிடத்தக்க பணி என்பது மேற்கு வங்க மாநிலத்தில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு, கிராமப்புற மக்களுக்கு தீவிரமாக நிலத்தை சொந்தமாக்கியது என்று சொல்லலாம்.

தெலுங்கானாவில் நடைபெற்ற விவசாயிகளின் ஆயுத போராட்டம் நிலப்பிரச்சனையை இந்தியாவின் மையமான பிரச்சனையாக மாற்றியது. விவசாயிகளின் புரட்சிகரமான போராட்டத்தை ஒடுக்க காவல்துறை, ராணுவம் போன்றவற்றை பயன்படுத்தி காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல், சித்ரவதைகள், பாலியல் வன்கொடுமைகள், துப்பாக்கியால் சுட்டுப்படுகொலை என காங்கிரஸ் அரசாங்கம் கொடூரத்தின் கோரத்தாண்டவத்தை அரங்கேற்றின. இந்தப் போராட்ட வீச்சின் காரணமாக காங்கிரஸ் கமிட்டிகளிலும், திட்டக்கமிஷனிலும் நிலப்பிரச்சனை குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டு நிலஉச்சவரம்பு, சட்டம் நிறைவேற்றவும், அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்களை நிலமற்றவர்களுக்கு வழங்கவும் சட்டம் இயற்றுமாறு மாநில அரசாங்கங்களை கேட்டுக் கொண்டது. அத்துடன், பூமிதான இயக்கம் என்ற பெயரில் வினோபாஜி போன்ற காந்தியவாதியை நாடு முழுவதும் சுற்றவிட்டு பொங்கி வரும் விவசாயிகள் எழுச்சியினை தணிய வைக்கப்பயன்படுத்தியது. தெலுங்கானா போராட்டத்தின் வீச்சு மேற்குவங்கம், மகாராஷ்ட்டிரா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் விவசாயிகளை நிலப்போராட்டத்தில் ஈடுபட உந்துசக்தியாக விளங்கியது. நிலப்பிரபுக்களின் கொடுமைகளுக்கெதிரகாவும், நிலவெளியேற்றத்தை எதிர்த்தும் குத்தகைதாரர்களைப் பாதுகாக்கவும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன.

மேற்கு வங்கத்தில் 1955ம் ஆண்டு காங்கிரஸ் அரசாங்கம் நிலச்சீர்திருத்த சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. 25 ஏக்கர் என்று உச்சவரம்பு தீர்மானித்து அந்த சட்டம் இயற்றப்பட்டது. 25 ஏக்கர் என்பது குடும்பத்திற்கா அல்லது தனிநபருக்கா என்பதை சட்டம் விளக்கவில்லை. அது மட்டுமல்லாமல் ஏராளமான விதிவிலக்குகளும் வழங்கப்பட்டிருந்தன. இதனால் சொற்ப அளவே நிலம் கிடைக்கும் என்ற நிலைதான். இருப்பினும் இந்த சட்டத்தையும் சட்டத்தை இயற்றிய காங்கிரஸ் அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை. 1967ம் ஆண்டு ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு மிக மிக மோசமான, ஓட்டைகள் நிறைந்த இந்த சட்டத்தை பயன்படுத்தி ஏழைகளுக்கு நிலம் வழங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டது. விவசாயிகள் சங்கம் 25 ஏக்கர் உச்சவரம்பு என்பது குடும்பத்திற்குத்தான். தனி நபருக்கல்ல என்று பிரச்சாரம் செய்து மிச்சநிலத்தை கைப்பற்றக் கோரியது. தோழர்.ஹரி கிருஷ்ண கோனார் அமைச்சராக இருந்த காலத்தில்

  1. அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்களை நிலமற்றோருக்கு விநியோகிப்பது.
  2. உபரி நிலங்களை கைப்பற்றி விநியோகித்தது.
  3. பினாமி நிலங்களை கண்டறிந்து நிலமற்றோருக்கு உரிமையாக்கியது
  4. குத்தகை விவசாயிகளின் சாகுபடி உரிமையைப் பாதுகாத்தது
  5. சொந்தமாக வீட்டுமனை இல்லாத குடும்பங்களுக்கு வீட்டுமனை வழங்கியது.

இந்த ஐந்து அம்சங்களிலும் பல லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு நில உரிமை வழங்கி புதிய சாதனைகளை ஏற்படுத்தியவர். இந்த நில விநியோகத்தின் அச்சாணியாக விவசாயிகள் இயக்கம் இருந்தது முக்கிய அம்சமாகும். உபரி நிலங்களை கைப்பற்று – பினாமி நிலங்களை கண்டுபிடி என்ற முழக்கத்தை ஐக்கிய முன்னணி அரசாங்கம் விழிப்புணர்வை பெற்றிருந்த விவசாயிகளுக்கு கொடுத்தது நல்ல பலனை அளித்தது. எழுச்சிக்கு ஒரு உதாரணம், சைதன்யபூர் என்ற இடத்தில் பினாமி நிலத்தை கைப்பற்றி விவசாயிகள் பயிர் செய்திருந்தனர். அறுவடைக்கு சென்ற போது பினாமி நபர் விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு விவசாயிகள் கொல்லப்பட்டதுடன் 70 முதல் 80 பேர் வரை காயமுற்றனர். படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்த சுமார் 20 ஆயிரம் விவசாயிகள் திரண்டு ஒன்னரை நாட்கள் பிணத்தை சுற்றி அமர்ந்திருக்கின்றனர். இதையொட்டி 1969 ஜுலை 22ந் தேதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களால் ஒத்தி வைப்பு தீர்மானம் சட்டமன்றத்தில் கொண்டு வரப்படுகிறது. அதன் மீது பேசும் போது தோழர்.ஹரி கிருஷ்ண கோனார், மாவட்ட நீதிபதி நடு இரவில் எனக்கு போன் செய்தார். முதலில் அவர் ஜோதிபாசுவுக்கு போன் செய்திருக்கிறார். நான்: என்ன விஷயம் என்று கேட்டேன்

அவர்: 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ஒன்று கூடியிருக்கிறார்கள்

நான்: அதனாலென்ன?

அவர்: அவர்கள் நிலப்பிரபுவின் வீட்டிற்குள் நுழைந்து சோதனை போடப் போகிறார்கள்.

அவருடைய அச்சத்தை அவர் வெளிப்படுத்தினார். அதற்கான வாய்ப்பிருந்தது. அது இயற்கையானதும் கூட. ஏனென்றால் இரண்டு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஒரே கட்டிடத்திலிருந்து 5 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. 70-80 பேர் காயமுற்றிருக்கிறார்கள். எங்களுடைய முன்னணி தோழர் தனது கண்ணை பறிகொடுத்திருக்கிறார். நினைத்துப் பாருங்கள்! என்ன செய்ய முடியும். இந்தப் பிரச்சனையில் நிலப்பிரபுக்கள் தலைமை தாங்கியிருந்தால் ஒட்டுமொத்த கட்டிடமே தீக்கிரையாகி இருக்கும். நான் அவரைக் கேட்டேன்.

அவர்களுடன் யார் இருக்கிறார்கள். சில பெயர்களை குறிப்பிட்டார். யார் பேசப் போகிறார்கள். இவர் இவர்கள் பேசப் போகிறார்கள் என பதில் கூறினார். பிறகுநான், நீங்கள் நிம்மதியாக போய் தூங்குங்கள் என்று சொன்னேன். ஏதாவது செய்ய வேண்டுமா? என்று கேட்டார். இல்லை! நான் உறுதி கூறுகிறேன். அவர்களால் எந்தப் பிரச்சனையும் வராது. ஏனென்றால் அவர்கள் அணி திரட்டப்பட்ட விவசாயிகள்!

அமைச்சர் கோனார் மேலும் பேசுகிறார். நாங்கள் லட்சக்கணக்கான மக்களின் சுயமரியாதையை உயர்த்த முயற்சிக்கிறோம். நீண்ட காலத்திற்கு அவர்கள் பணக்காரர்களின் முன்னால் தலை குனிந்து இருந்து வந்திருக்கிறார்கள். ஆனால், நாங்கள் அவர்களின் தலையை உயர்த்தியிருக்கிறோம். நீங்கள் அதை விரும்பமாட்டீர்கள். ஆனால் நான் அதை மிகவும் விரும்புகிறேன். எனவே, அவர்களுடைய போராட்டத்திற்கு எதிராக காவல்துறையை பயன்படுத்தமாட்டேன். நிலவிநியோகத்தில் அரசும், விவசாயிகளும் உறுதியுடனிருந்தால் எந்த சக்தியாலும் அதை தடுக்க முடியாது. இந்த உறுதிமிக்க அணுகுமுறை கம்யூனிஸ்ட்டுகளிடம் மட்டுமே காண முடியும். அதனால்தான் இந்தியாவிலேயே நிலவிநியோகத்தில் முதன்மையான மாநிலமாக மேற்கு வங்கம் இடதுசாரிகளின் ஆட்சி காலத்தில் விளங்கியது. இதற்கு அடித்தளமிட்டு நடைமுறைப்படுத்திக் காட்டிய தோழர்.ஹரிகிருஷ்ண கோனாரை கற்போம் – கடைபிடிப்போம்!



%d bloggers like this: