மேற்குவங்க அரசியல் சூழலில் இடது முன்னணி அன்றும் இன்றும்!


மேற்குவங்க இடது முன்னணியின் மீது திருணாமுல் காங்கிரஸ் நடத்தும் தாக்குதல்கள் தொடர்கதையாக இருக்கின்றன. 2009 துவங்கி இப்போது வரை 600க்கும் மேற்பட்ட தோழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பர்துவான் மாவட்டத்தில் மட்டும் 8000 பேர் மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதை நமது தோழர்களும், ஆதரவாளர்களும் தீரத்துடன் எதிர்கொண்டு வருகின்றனர். இன்று நடக்கும் தேர்தல் மோசடிகளும், தாக்குதல்களும் கம்யூனிஸ்ட் கட்சிக்குப் புதியதல்ல. இதைவிட மோசமான அரை பாசிஸ தாக்குதல்களை சந்தித்துத்தான் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தனர். மேலும் இடது முன்னணி என்ற அணி சேர்க்கை, ஓரிரு நாட்களில் தேர்தலுக்காக மட்டும் உருவாக்கப்பட்டது அல்ல. மாறாக ஜனநாயகத்துக்காக, மக்கள் முன்னேற்றத்துக்காக, வர்க்க நலனுக்காக இடையறாது நடந்த சமரசமற்ற போராட்டங்களின் விளைபொருளே இடது முன்னணி. அது தேர்தல்களிலும் வெற்றியை ஈட்டியது.

ஒற்றுமையும் போராட்டமும்

1947ல் அரசியல் அதிகாரம் பிரிட்டிஷாரிடமிருந்து காங்கிரசுக்கு மாறினாலும், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் காங்கிரசிடமிருந்தும் தொடர்ந்தது. ஏழை எளிய மக்கள் மீதான சுமைகளும் தொடர்ந்தன.

1948ல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது, மேற்கு வங்கமும் அந்நிலையைச் சந்தித்தது. 1950ல் கல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தடை விலக்கப்பட்டது. அந்த நேரம் தொட்டு, ஜனநாயக உரிமைகளுக்கான தொடர் போராட்டத்தில் மேற்கு வங்கக் கம்யூனிஸ்ட் கட்சி மிகுந்த கவனம் செலுத்தியது.

பல்வேறு முயற்சிகளை எடுத்தது. 1952ல் நடந்த முதல் பொது தேர்தலின் போது, கம்யூனிஸ்ட் கட்சிக்கும், 4 கட்சிகளைக் கொண்ட ஐக்கிய சோஷலிச அமைப்புக்கும் (United Socialist Organisation) உடன்பாடு ஏற்பட்டது. ஆனால், இதில் இடம் பெற வேண்டிய சில இடதுசாரி கட்சிகள் வெளியே நின்றன.

நாடாளுமன்ற தேர்தலில் 9ல் போட்டியிட்டு 5ல் கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்றனர். சட்டமன்றத் தேர்தலில் 28 தொகுதிகளில் வெற்றி பெற்று கம்யூனிஸ்ட் கட்சி பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றது.

தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளில் இடதுசாரி சக்திகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையைக் கட்ட முடிந்தது. அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்கான போராட்டம், வீரம் செறிந்த ஆசிரியர் போராட்டம், உணவுக்கான இயக்கம், கல்கத்தா டிராம்வே நாட்டுடமையாக்கப்பட வேண்டும் என்ற போராட்டம், பெங்கால் பீகார் இணைப்பை எதிர்த்த இயக்கம், கோவா விடுதலை போராட்டத்துக்கு ஆதரவு (போர்ச்சுகீசிய ஆதிக்கத்திலிருந்து) என்று ஒரு பட்டியலே போட முடியும்.

திட்டத்தின் அடிப்படையில் கூட்டணி

இப்பின்னணியில் 1956ல் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு, அனைத்து சோஷலிச, ஜனநாயக, தேச பக்த, முற்போக்கு சக்திகள் ஓரணியில் திரள வேண்டுமென அறைகூவல் விட்டது. மேற்குவங்கக் கமிட்டி, இடதுசாரிகளின் ஒற்றுமையைக் கட்டுவதிலும், ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்துவதிலும் கூடுதல் கவனம் செலுத்தியது. அடுத்து 1957ல் சட்டமன்றத் தேர்தல் வந்த போது, கம்யூனிஸ்ட் கட்சி, 37 அம்ச திட்டத்தை (ஜனநாயக ஒற்றுமைக்கான திட்டம்) உருவாக்கி, அதன் அடிப்படையில் 4 இடதுசாரி கட்சிகளுடன் தேர்தலுக்கான அணியை உருவாக்கியது. 253 தொகுதிகளில் இந்த அணிக்கு 81 கிட்டியது.

கம்யூனிஸ்ட் கட்சி 46 பெற்று, இந்த அணியின் வலுமிக்க பங்குதாரராக உயர்ந்தது. கூட்டு போராட்டங்களும், கம்யூனிஸ்டுகளின் போராட்டங்களும் தொடர்ந்தன. இடைப்பட்ட காலத்தில், அணியிலிருந்து சிலர் விலகி, சிலர் சேர்ந்தனர். 1962-67 காலகட்டம் இடதுசாரிகளுக்கும், ஜனநாயகத்துக்கும் ஒரு சோதனை காலமாக இருந்தது.

காங்கிரசின் பொதுவான அடக்குமுறையும், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த சூழலில் இந்திய சீன எல்லை பிரச்னையைப் பயன்படுத்தி கம்யூனிஸ்டுகளை ஓரம் கட்டுதலும் நடந்தேறின. ஏராளமான தோழர்கள் கைது செய்யப்பட்டனர். கட்சிக்குள் இருந்த திருத்தல்வாத கோஷ்டிகளும் தம் பங்குக்குப் பிரச்சனைகளை உருவாக்கியதோடு, ஆளும் கட்சிக்கு ஆதரவு நிலை எடுத்தன. சில இடதுசாரி கட்சிகளும் 2 கம்யூனிஸ்ட் எதிர்ப்பு நிலையை எடுத்தன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயம்

1964ல் திருத்தல்வாதத்திலிருந்து விடுபட்டு மார்க்சிஸ்ட் கட்சி உதயமான பிறகு, மேற்குவங்கத்தில் ஜனநாயக சக்திகளை ஒன்றுபடுத்துவதிலும், மக்கள் பிரச்னைகளுக்கான போராட்டங்களை நடத்துவதிலும் வேகம் பிறந்தது. ஆனால் 1967 தேர்தல் வந்தபோது, காங்கிரஸ் எதிர்ப்பு நிலை எடுக்கும் அனைத்துக் கட்சிகளையும் ஓரணியில் கொண்டுவர முடியவில்லை. சிபிஐயின் அணுகுமுறை தொடர்ந்து உதவிகரமாக இருக்கவில்லை என்பதே உண்மை. மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட 7 கட்சிகள் கொண்ட ஐக்கிய இடது முன்னணியும், சிபிஐ, பார்வர்டு பிளாக், பங்களா காங்கிரஸ் சேர்ந்த முற்போக்கு ஐக்கிய இடது முன்னணியும் என்று இரண்டு அணிகள் உருவாயின. தேர்தலுக்கு சற்று முன்னதாகக் காங்கிரசிலிருந்து விலகி உருவான பங்களா காங்கிரசை, சிபிஐ சேர்த்துக் கொண்டது. 1967 தேர்தல்தான், 8 மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத அரசை உருவாக்கியது. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் சிறுபான்மையானது. சிபிஎம் இருந்த அணிக்கு 68 தொகுதிகளும், சிபிஐ இருந்த அணிக்கு 65 தொகுதிகளும் கிடைத்தன. ஆனால் அணிகளில் இருந்த கட்சிகள் என்று பார்க்கும் போது, சிபிஎம்-முக்குத்தான் அதிக தொகுதிகள் கிடைத்தன. மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத்தான் இடதுசாரிகளை வழி நடத்தும் சக்தியாகப் பார்த்தனர்.

கிடைக்கும் அதிகாரம் மக்கள் நலனுக்கே:

காங்கிரஸ் எதிர்ப்பு உணர்வைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டின என்பதால், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்முயற்சியில் இரு அணிகளும் இணைந்து, முதன் முறையாக காங்கிரஸ் அல்லாத அரசை அமைத்தன. 32 அம்ச திட்டத்தின் அடிப்படையில் அந்த ஐக்கிய முன்னணி அரசாங்கம் உருவானது.

மக்கள் நலனுக்காக சிபிஎம் விட்டுக் கொடுத்த அடிப்படையில், பங்களா காங்கிரசின் தலைவர் அஜாய் முகர்ஜி முதல்வரானார். தோழர் ஜோதிபாசு துணை பிரதமர் பொறுப்புடன் நிதி, போக்குவரத்து துறைகள் பொறுப்பை ஏற்றார். மேலும் இரு சிபிஎம் தோழர்கள் நில சீர்திருத்தத் துறையையும், அகதிகள் மறுவாழ்வு துறையையும் பெற்றனர்.

மத்திய அரசின் எவ்வித ஒத்துழைப்பும் இல்லாத பின்னணி உருவானது. நிதி ஒதுக்கீட்டில் பிரச்னை, பஞ்ச நிவாரணத்தில் தடை, வறட்சி மாவட்டங்களுக்கு உணவு தானிய ஒதுக்கீடு மறுப்பு என்று பழிவாங்கல் தொடந்தது. இதற்கிடையே, குறுகிய அதிகாரங்கள் மட்டுமே இருந்த போதிலும் ஜனநாயகத்தை வலுப்படுத்த இந்த அரசு சில சிறப்பான முடிவுகளை எடுத்ததற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்த அணியில் இருந்ததும், வலுவான சக்தியாக இருந்து பங்களிப்பு செய்ததும்தான் காரணம். உதாரணத்திற்கு ஒன்றாக முதலாளி தொழிலாளி பிரச்சனையில் முதலாளிக்கு ஆதரவாகக் காவல்துறை தலையிடாது என்ற முடிவைக் குறிப்பிடலாம். அதேபோல் முன்னெச்சரிக்கை கைது (Preventive Arrest) தடை செய்யப்பட்டது, பழிவாங்கப்பட்ட தொழிற்சங்க தலைவர்கள் மீண்டும் வேலைக்கு எடுக்கப்பட்டனர், ஒரு லட்சம் தற்காலிக அரசு ஊழியர்கள் நிரந்தரம் செய்யப்பட்டனர். உபரி நிலம், ஆக்கிரமிப்பு நிலம் பிரித்துக் கொடுப்பதற்கான ஏற்பாடு என்று அடுத்தடுத்து மின்னல் வேகத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்தச் சூழல், உரிமைகளுக்கான ஏராளமான போராட்டங்களை உருவாக்கியது. நிலத்துக்கான போராட்டம் வலுவாக நடந்தது. ஒரு சில மாதங்களில் 2.34 லட்சம் ஏக்கர் நிலம் நிலமற்றவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது. இது மேலாதிக்க சக்திகளுக்கு பீதியை ஏற்படுத்தியது. இந்நிலை நீண்ட காலம் நீடிக்காது என்பதைக் கட்சி புரிந்து வைத்திருந்தது. ஒரு புறம் மத்திய காங்கிரஸ் அரசின் ஒத்துழையாமையும், மறுபுறம் இடதுசாரி எதிர்ப்பு சக்திகள் மற்றும் வர்க்க எதிரிகளின் குறுக்கீடுகளும், சதிகளும் ஐக்கிய முன்னணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கிடையே கருத்து வேற்றுமையை உருவாக்கின. காங்கிரஸை ஆட்சியில் அமர்த்த பிரித்தாளும் சூழ்ச்சியும் நடந்தது. இச்சூழலில் ஆளுநர் தலையிட்டு சட்ட விரோதமாக 9 மாதங்களில் அரசைக் கலைத்தார்.

மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் காங்கிரசின் ஆட்சிக் கனவு நொறுங்கி, இடைக்கால தேர்தல் (1969) 3 அறிவிக்கும் நிலை ஏற்பட்டது. ஐக்கிய முன்னணியில் மிச்சமிருந்த கட்சிகள் தம் வலுவை உறுதிப்படுத்தி, திருப்திகரமாக தொகுதிப் பங்கீடும் நடத்தி, தேர்தலை சந்தித்தன. 214 தொகுதிகளில் ஐக்கிய முன்னணி வெற்றி பெற்றது. இம்முறை மார்க்சிஸ்ட் கட்சிக்கு போட்டியிட்ட 101 தொகுதிகளில் 83 கிடைத்தன. இருப்பினும், மீண்டும் முதல்வர் பொறுப்பை விட்டுக்கொடுத்து, இரண்டாவது ஐக்கிய முன்னணி அரசு பிப்ரவரி 1969ல் அமைக்கப்பட்டது. அஜாய் முகர்ஜி முதல்வர், தோழர் ஜோதிபாசு, உள்துறை இலாகாவையும் சேர்த்து துணை முதல்வர் என்று முடிவு செய்யப்பட்டது. உரிமைகளுக்கான மக்கள் போராட்டங்களுக்கு அரசு உறுதுணையாக இருந்தது. முதல் ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட நிலத்துக்கான போராட்டங்கள் தீவிரமடைந்தன. ஆக்கிரமிப்பிலும், பினாமி பெயரிலும் இருந்த சுமார் 6 லட்சம் ஏக்கர் நிலங்களை விவசாயிகள் கைப்பற்றினர். விவசாயிகளை வெளியேற்றும் நிலை தடுக்கப்பட்டது. நிலச்சீர்திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இரண்டரை லட்சம் மில் தொழிலாளிகள், 2 லட்சத்துக்கு மேற்பட்ட தோட்ட தொழிலாளிகள், 50000 சணல் ஆலை தொழிலாளிகள் கணிசமாக சம்பள உயர்வு பெற்றனர். 8ம் வகுப்பு வரை இலவசக் கல்வி அறிவிக்கப்பட்டது. 6000 ஆரம்பப் பள்ளிகள் துவங்கப்பட்டன. குடிசைப் பகுதிகளில் வீட்டு வாடகை குறைக்கப்பட்டது. ஐக்கிய முன்னணியில் இடம் பெற்றிருந்த சில ஜனநாயகக் கட்சிகளால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள், முன்னணியை உடைத்தனர். ஒரு போலீஸ்காரரை யாரோ கொலை செய்ய, அது சட்டம் ஒழுங்கு பிரச்னையாக திட்டமிட்டு மாற்றப்பட்டது. சட்டமன்றத்துக்குள்ளேயே ஒரு கூட்டம் புகுந்து, ஜோதிபாசுவைத் தூக்கில் போடு, அரசாங்கத்தை டிஸ்மிஸ் செய் என்று கலவரம் செய்தது.

முதல்வர் அஜாய் முகர்ஜி பகிரங்கமாக உண்ணாவிரதம் அமர்ந்து, இந்த அரசு (தனது தலைமையிலான அரசையே!) காட்டுமிராண்டித்தனமானது என்று அறிவித்தார். சிபிஎம் இல்லாமல் அரசு அமைக்க பங்களா காங்கிரஸ், சிபிஐ, பார்வர்டு பிளாக் முயற்சி எடுத்து, அதன் ஒரு பகுதியாக அஜாய் கோஷ் முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. தன் கட்சிக்கு ஒரு வாய்ப்பு வேண்டும் என்று தோழர் ஜோதிபாசு, ஆளுநரை சந்தித்துப் பேசினார். ஆனால் பங்களா காங்கிரஸ், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் மார்க்சிஸ்டுகளுக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்ற நிலை எடுத்தனர். இச்சூழலில் 13 மாதங்களில் இரண்டாவது ஐக்கிய முன்னணி அரசு கலைக்கப்பட்டு, மார்ச் 1970ல் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. உண்மையில் அது கடுமையான போலீஸ் ராஜ்யமாக செயல்பட்டது.

காங்கிரசின் காட்டு தர்பார்:

குடியரசுத் தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட்ட இரண்டாவது தினம், ஜோதிபாசுவைக் கொல்ல ஒரு முயற்சி நடந்தது. குண்டு தவறி, அருகிலிருந்த ஒரு தோழர் மீது பாய்ந்து அவர் இறந்து போனார். அன்று மாலையே, அதைக் கண்டித்து 20,000 பேர் கலந்து கொண்ட கண்டன ஊர்வலம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி நிலயங்களைப் புறக்கணித்துத் தெருவுக்கு வந்தனர். ஆலைகள் மூடப்பட்டன. பொது வேலை நிறுத்தம் நடந்தது.

மக்கள் போராடிப் பெற்ற உரிமைகளைப் பறிக்க மத்திய காங்கிரஸ் ஆட்சியால் அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. ராணுவமும், சிஆர்பிஎஃப்-ம் பயன்படுத்தப்பட்டன. கண்மூடித்தனமான தாக்குதல், வரைமுறையற்ற கைது, ஒழித்துக்கட்டுவது, உரிமைகளை நசுக்குவது போன்ற நடவடிக்கைகள் ஜனநாயக சக்திகள் மீது, குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் மீது ஏவப்பட்டன. சமூகவிரோதிகள், நக்சலைட்டுகள், சில இடங்களில் சிபிஐயும் சேர்ந்து இக்கொடுஞ்செயல்களில் ஈடுபட்டன. இந்தக் கொலை வெறித் தாண்டவத்தை எதிர்த்து, மக்களைத் திரட்டி மார்க்சிஸ்ட் கட்சி போராடியது. 20,000 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர். ஒரு லட்சம் பேர் மீது பொய் வழக்கு போடப்பட்டது. 250 பேர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே பார்வர்டு பிளாக் தலைவர் ஹேமந்த பாசு பட்டப்பகலில் படுகொலையானார். அந்தக் கொலை பழி சிபிஎம் மீது சுமத்தப்பட்டு, அந்த அவதூறையும் கட்சி சந்திக்க வேண்டியிருந்தது. இதற்கு நடுவே 5வது பொதுத் தேர்தலும், மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலும் 1971ல் நடந்தன.

சிபிஎம் தலைமையில் 6 கட்சிகள் சேர்ந்து இடதுசாரி ஐக்கிய முன்னணியை உருவாக்கித் தேர்தலை சந்தித்தன. பல இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த கெடுபிடி, மீண்டும் ஜோதிபாசுவைக் கொல்ல முயற்சி, அவரது தொகுதியான பாராநகருக்குள் அவர் செல்ல தடை என்று பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. இருப்பினும். சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரி ஐக்கிய முன்னணிக்கு 123 தொகுதிகள், இதில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு மட்டும் 111 கிடைத்தன. ஆனால், ஜனநாயக மரபுகளைக் காலில் போட்டு மிதித்து, மத்திய காங்கிரஸ் ஆட்சியின் தூண்டுதலில், ஆளுநர், தனிப் பெரும் கட்சியான சிபிஎம்-ஐ ஆட்சி அமைக்க அழைக்காமல், காங்கிரஸ், பங்களா காங்கிரஸ், முஸ்லீம் லீக், கோர்க்கா லீக், பிரஜா சோஷலிஸ்ட் கட்சி போன்ற உதிரிகள் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க வழி கோலினார். சிபிஐ மற்றும் ஃபார்வர்டு பிளாக் கட்சிகள், இந்த அவியலுக்கு ஆதரவு கொடுத்தன. மார்க்சிஸ்ட் கட்சியைத் தனிமைப்படுத்த வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது.

இந்த உதிரிகளின் ஆட்சி அமைந்தவுடன், மீண்டும் கொலை வெறித் தாக்குதல் துவங்கியது. ராணுவம், சிஆர்பிஎஃப், உள்ளூர் போலீஸ் இவர்களுடன் சமூக விரோதிகள், முதலாளிகள், நில உடமையாளர்கள் இணைந்து தாக்குதல் தொடுத்தனர். நிலங்களிலிருந்து விவசாயிகள் வெளியேற்றப்பட்டனர்.

தொழிற்சாலைகள் மூடப்பட்டு, தொழிலாளிகள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். இடது ஜனநாயக சக்திகளின் சார்பில் இருந்த அரசு சாத்தியமாக்கிய அனைத்தும் தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டது. தொடர்ச்சியான 144 தடை உத்தரவு அமலாக்கத்தில் கூட்டங்கள் கூடப் போட முடியவில்லை. 3 மாதங்களில் அரசு பெரும்பான்மையை இழந்தது. அப்போதும் ஆளுநர் மார்க்சிஸ்ட் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. ஜனநாயக மாண்புகள் தூக்கி வீசப்பட்டன. மத்திய காங்கிரஸ் அரசு அடாவடியாக, அரசைக் கலைத்துவிட்டு, குடியரசு தலைவர் ஆட்சியைப் பிரகடனப்படுத்தியது.

ஆளுநருக்கும் மேலாக, மத்திய அமைச்சர் சித்தார்த்த சங்கர் ரே என்பவரைப் பொறுப்பாக்கியது. சுதந்திர இந்தியாவில் இந்நிலை வேறு எந்த மாநிலத்துக்கும் ஏற்படவில்லை. மேற்கு வங்கத்தை இப்படியே விட்டால், இடதுசாரி ஜனநாயக சக்திகள் வலுப்பெற்று, இந்தியாவின் இதர பகுதிகளையும் உசுப்பேற்றும், இது முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு வேட்டு வைக்கும் என்ற ஆளும் வர்க்கத்தின் பீதி, இவ்வளவு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வைத்தது. 1969-71 காலகட்டத்தில் 543 தோழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1967-71 காலத்தில் 3 முறை குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.

பாராளுமன்ற ஜனநாயகத்துக்குக் கம்யூனிஸ்டுகளால் பாதிப்பு வராது. இருப்பதைப் பாதுகாத்து, மேம்படுத்தி மக்கள் ஜனநாயக மாண்புகளை உருவாக்குவதுதான் அவர்கள் நோக்கம். ஆபத்து, ஆளும் வர்க்கத்தால்தான் வரும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் சுட்டிக்காட்டுவது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டது.

மோசடி தேர்தல்:

தேர்தல் நடத்த சிபிஎம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தது. அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி மறுத்து வந்தார். இறுதியில் 1972ல் நடந்த வேண்டி வந்தது. அந்த சட்டமன்றத் தேர்தலை, சிபிஐ தவிர மற்ற அனைத்து இடதுசாரி கட்சிகளும் ஓரணியில் நின்று சந்திக்க முடிவெடுத்தன. இந்த விரிவான ஒற்றுமை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக எடுத்த முயற்சிகளின் பலன், மக்களின் நிர்ப்பந்தம் என்று பார்க்க வேண்டும்.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கடுமையான, அப்பட்டமான மோசடிகளை நடத்தியது. காவல்துறை, சமூக விரோதிகள், நக்சலைட்டுகளின் உதவியுடன் வாக்குச்சாவடிகளைக் கத்தி முனையில் கைப்பற்றுதல், வன்முறை, மார்க்சிஸ்ட் ஊழியர்களைக் கொலை செய்வது, கள்ள ஓட்டு போடுவது போன்றவை நாம் நினைக்க முடியாத அளவு நடந்தது. 20000 தோழர்களும், ஆதரவாளர்களும் குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேற்றப் பட்டனர். தோழர் ஜோதிபாசு கூட, தேர்தலிலிருந்து விலகுவதாக அறிவிக்க நேர்ந்தது. அவரால் தொகுதிக்குள் நுழையவே முடியவில்லை. மோசடி செய்ய முடியாத இடங்களில் இடது முன்னணி வேட்பாளர்கள் அபார வாக்குகளை அள்ளினர். அந்த வாக்கு சீட்டுகள் காங்கிரசுக்கு விழுந்த வாக்குகளுடன்

இணைக்கப்பட்டு, காங்கிஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார் என்று பல இடங்களில் அறிவிக்கப்பட்டது. 51 தொகுதிகளில் தேர்தலே நடக்கவில்லை. சுமார் 200ல் மேற்கூறிய ரவுடித்தனம் நடந்தது. இப்படியாக காங்கிரஸ் ஆட்சியை அமைத்து, சித்தார்த்த சங்கர் ரே முதல்வரானார்.

‘சட்ட ரீதியாகவே’ அரை பாசிஸ அடக்குமுறையைக் காங்கிரஸ் அரசு தொடர்ந்தது. படுகொலைகள் தொடர்ந்தன. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்றே, நமது தோழர்கள் கடும் தாக்குதலை சந்தித்தனர். நமது தோழர்களும், அவர்களின் குடும்பங்களும் சேர்ந்து சுமார் 50,000 பேர் கட்சியின் மாநில அலுவலகத்திற்கு வந்து அடைக்கலம் கேட்டனர். மாநில மையம் விரைந்து செயல்பட்டு, சத்திரங்கள் பிடித்து அவர்களைத் தங்க வைத்து, உணவுக்கான ஏற்பாட்டை செய்தது. பாதுகாப்புக்காக இரவு பகலாக செந்தொண்டர்கள் அங்கே நிறுத்தப்பட்டனர். இந்த ஏற்பாடு பல மாதங்களுக்குத் தொடர்ந்தது. சுமார் 5,000 தோழர்கள் பொய் வழக்கில் சிறையில் தள்ளப்பட்டனர். நீதிமன்றம் ஜாமீன் வழங்குவது போலத் தெரிந்தால், உடனே அவர்கள் மிஸா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். சிஐடியு அலுவலகங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, நிதி களவாடப்பட்டது. கல்லூரி தேர்தல்களில் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வேட்பாளர்களை நிறுத்துவது தடுக்கப்பட்டது. கட்சியும், இடதுசாரிகளும் வலுவாக இருந்த இடங்களில் கூட அரசியல் பணி செய்ய முடியவில்லை. திரிணாமுல், அடாவடித்தனத்தையும், அக்கிரமங்களையும் எங்கிருந்து கற்றுக் கொண்டது என்பது புரிகிறதா? அன்றைக்கும் நாம்தான் குறி, இன்றைக்கும் நம்மைத்தான் ரவுண்டு கட்டுகின்றனர். இன்னும் சொல்லப்போனால், 1970ல் தான் மம்தா பானர்ஜி காங்கிரசில் சேர்ந்து அவரது அரசியல் பிரவேசம் துவங்குகிறது. 1976ல் மாநில மகிளா காங்கிரசின் பொது செயலாளராக நியமிக்கப்படுகிறார். 1970களில் நடந்த இந்த அடக்குமுறையில் அவர் வகித்த பங்கும் இதற்கு ஒரு காரணம்.

ஒரு தொழிற்சாலையில் 20% உறுப்பினர் இருந்தால்தான் தொழிற்சங்க அங்கீகாரம் என்பது அவசர சட்டமாகக் கொண்டுவரப்பட்டது. 5 ஆண்டுகளுக்குக் கீழ் பணி செய்த தொழிலாளிகளை எந்த அனுமதியும் இல்லாம வெளியேற்றலாம் என்பதும் அவசரச் சட்டத்தின் ஒரு பகுதி. ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு வேலை நிறுத்தமே கூடாது என்று தடுக்கும் யோசனை மத்திய அரசுக்கு தோன்றிக் கொண்டிருந்த காலம் இது.

பல்வேறு தொழிற்சங்கங்கள் இதையெல்லாம் கடுமையாக எதிர்த்தன. செய்தித்தாள்கள் இந்த அராஜகங்களை மூடி மறைத்தன. இந்தியாவின் இதர பகுதிகளில் உள்ள மக்களுக்கு இந்த உண்மைகளே தெரியவில்லை. ருசி கண்ட பூனையைப் போல, ஒரு மாநிலத்தில் ருசி கண்டுவிட்டால், சர்வாதிகாரப் போக்கை, காங்கிரஸ் இதர இடங்களுக்கும் விஸ்தரிக்கும் என்று கட்சி எச்சரிக்கை செய்ததோடு, இதை எதிர்த்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுசேர வேண்டும் என்று அறைகூவல் விட்டது. 1972ன் மத்தியில் கட்சி கொடுத்த எச்சரிக்கை, அடுத்த 3 ஆண்டுகளில் நடந்தேவிட்டது. ஆம், இந்திரா காந்தியால் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது.

அவசர கால நிலை பிரச்னைகளை இங்குக் குறிப்பிடவில்லை. சிபிஐ காங்கிரசுக்கான தன் ஆதரவைத் தொடர்ந்தது. திரும்பத் திரும்ப மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில், சிபிஐக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இடதுசாரிகள் ஒற்றுமை வேண்டும், ஆனால் அது சர்வாதிகார எதிர்ப்புடன் இணைந்ததாக இருக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.

1976ல் பொது தேர்தல் நடைபெற வேண்டும் என்றாலும், இந்திரா காந்தி ஒரு வருடம் வரை தள்ளிப்போட்டார். 1977 தேர்தலில் மக்கள், தீர்மானகரமாக வாக்களித்தனர். 30 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது. மேற்கு வங்கத்தில் காங்கிரசும், சிபிஐயும் சேர்ந்து தேர்தலில் நின்றனர். 42 தொகுதிகளில் 3ல் தான் காங்கிரஸ் வெற்றி பெற முடிந்தது. சிபிஐக்கு ஒன்று கூட கிடைக்கவில்லை. ஜனதா கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்தித்த மார்க்சிஸ்ட் கட்சி, தான் போட்டியிட்ட 20ல் 17ஐக் கைப்பற்றியது.

அந்த நேரத்தில் தோழர் ஜோதிபாசுவும், பிரமோத் தாஸ் குப்தாவும் வெளியிட்ட செய்தியில், அமைதி காக்க வேண்டும், நமது தோழர்கள் மீது கொலை வெறித்தாக்குதல்கள் நடத்தியவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது கை வைக்கக் கூடாது என்று அறைகூவல் விடுக்கப்பட்டது. 1972 துவங்கி குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்ட தோழர்களும், ஆதரவாளர்களும் வீடு திரும்பினர். 1972-76 காலகட்டத்தில் சுமார் 1200 தோழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையே முக்கியம்:

மத்தியில் ஆட்சிக்கு வந்த ஜனதா அரசு, ஜனநாயக உரிமைகள் பலவற்றை மீட்டது. மேற்கு வங்கம் உட்பட 9 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதாவுடன் ஏற்பட்ட உடன்பாடு, தேச நலனின் அடிப்படையில் சட்டமன்றத் தேர்தலிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கட்சி முடிவு செய்தது. ஒரு குறைந்தபட்ச பொதுத் திட்டத்தின் கீழ் தேர்தலை சந்திக்கலாம், தொகுதி பங்கீட்டை செய்யலாம் என்ற ஆலோசனையை மார்க்சிஸ்ட் கட்சி முன்வைத்தது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 52 தொகுதிகளை அதாவது 153 தொகுதிகளை ஜனதாவுக்கு விட்டுக் கொடுக்கவும் தயாராக இருந்தது. இத்தனைக்கும் இடதுசாரிகள் வலுவாக இருந்த சூழல் அது; ஜனதாவுக்குப் பெரிதாக தளம் எதுவும் இல்லை. ஆனால், மாநில ஜனதா கட்சி, கூட்டணி ஆட்சிக்கும் தயாராக இல்லை, நேர்மையான தொகுதிப் பங்கீட்டுக்கும் தயாராக இல்லை. 204 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுப் பிரச்னை செய்தது. தேர்தல் தேதியும் நெருங்கவே வேறு வழியில்லாமல், இடது முன்னணி சார்பில் 294 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்தலில் காங்கிரஸ் வன்முறை, மோசடிகளை முயற்சித்தது. அவை எதிர்கொள்ளப்பட்டன.

தேர்தல் முடிவுகள் வெளிவந்தன. இடது முன்னணி மகத்தான வெற்றி பெற்று 230 தொகுதிகளைக் கைப்பற்றியது. அதாவது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை! காங்கிரசுக்கு 20 இடங்களும், ஜனதாவுக்கு 29 இடங்களும் கிடைத்தன. முன்னணியில் இடம் பெற மறுத்த சிபிஐ 2 இடங்களிலும், எஸ்.யு.சி. 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. கடந்த 2 முறை ஐக்கிய முன்னணி ஆட்சி அமைந்தாலும், அணியில் உள்ள கட்சிகள் ஒற்றுமையை சீர்குலைத்ததால் என்ன நடந்தது என்று மக்கள் பார்த்தார்கள்.

எனவே, இம்முறை மார்க்சிஸ்ட் கட்சிக்கு மட்டும் தனிப்பெரும்பான்மையை, 190 தொகுதிகளை மக்கள் அளித்தார்கள். தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்பிருந்தாலும், இடதுசாரி ஒற்றுமையைக் காக்க, கட்சி, கூட்டணி ஆட்சியையே அமைத்தது. அமைச்சரவையிலும் தாராளமாக இதர கட்சிகளுக்கு இடம் அளிக்கப்பட்டது. முதலமைச்சர் தோழர் ஜோதிபாசு, ஆரவாரத்துக்கிடையே அறிவித்தார் இடது முன்னணி ரைட்டர்ஸ் பில்டிங்கிலிருந்து ஆட்சி நடத்தாது. மக்களுடன் நின்று அவர்களது ஒத்துழைப்புடன் ஆட்சி நடத்தும்!

ஆட்சிக்கு வந்தவுடன் எடுக்கப்பட்ட முதல் முடிவு….

விசாரணையின்றி சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை, நக்சலைட்டுகள் உட்பட, விடுதலை செய்வது என்பதுதான். மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை கொண்டுவரப்பட்டது. முதன்முறையாக பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. நிலச்சீர்திருத்தம் முன்னுரிமை பெற்றது. காங்கிரஸ் காலத்தில் சீரழிக்கப்பட்ட கல்வித்துறை சீரமைக்கப்பட்டது. வேலைக்கு உணவுத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான சிறு, குறு தொழில்கள் துவங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பக்ரேஷ்வர் மின் திட்டம், ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள் போன்றவை, தோழர் ஜோதிபாசு முதல்வர் பொறுப்பில் இருந்தபோது உருவாக்கப்பட்டவை. மத்திய மாநில அரசு உறவுகளை சீரமைக்க தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டது. ஏகாதிபத்திய எதிர்ப்பில் முன்னணியில் மேற்கு வங்கம் நின்றது.

செங்கொடி குடும்பங்கள்

34 ஆண்டு ஆட்சியில் மகத்தான முன்னேற்றங்கள், சாதனைகள். நிலச்சீர்திருத்தம் உட்பட இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக பல நடவடிக்கைகள். இங்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். 2014 தேர்தலில் மிரட்டலுக்கு அஞ்சாமல் இடது முன்னணிக்கு வாக்களித்ததற்காக திருணாமுல் குண்டர்களால் வெட்டப்பட்ட சந்தனா மண்டல், கட்சி உறுப்பினர் கூடக் கிடையாது. நிலச்சீர்திருத்தம் காரணமாக நிலம் கிடைத்து தலைநிமிர்ந்த தலித் குடும்பங்களில் சந்தனாவின் குடும்பமும் ஒன்று. இந்தக் குடும்பங்கள் தம்மை செங்கொடி குடும்பம் என்று அழைத்துக் கொள்கின்றன. அந்த விசுவாசத்தில் உயிரைப் பணயம் வைத்து செங்கொடி தாழாமல் காக்க வேண்டும் என்று செயல்பட்டிருக்கிறார்கள். தேர்தலின் போது கொல்லப்பட்ட 10 பேரும் அடிப்படை வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள். பலர் கட்சி உறுப்பினர் கிடையாது. ஆனாலும், செங்கொடி காக்க, வாக்குரிமை என்ற ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க உயிரைப் பறிகொடுத்திருக்கிறார்கள்.

காலச் சக்கரம் ஒரு முறை முழுதாகச் சுற்றி மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. 34 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்ததற்கான அரசியல், ஸ்தாபன, நிர்வாகக் காரணங்களைக் கட்சி பரிசீலித்து, சரி செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. நிலைமை சரியாகி, கட்சியிடமிருந்து அந்நியப் பட்ட மக்கள் பகுதியினர் மீண்டும் திரும்ப வர சற்று காலம் பிடிக்கலாம். 2014 தேர்தலில் இவ்வளவு வன்முறைக்கு மத்தியில் 30 வாக்குகள் கிடைத்திருக்கிறது. கணிசமான பகுதி மக்கள் இப்போதும் இடது முன்னணி மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது எவ்வளவு முக்கியமான விஷயம்! தொகுதிகள் கிடைக்கவில்லை என்பது உண்மை, ஆனாலும் எல்லாம் போய் விட்டது என்று எண்ணத் தேவையில்லை.

1947 முதல் 1977 வரை 30 ஆண்டுகள் கம்யூனிஸ்டுகள் சந்திக்காத பிரச்னைகளோ அடக்குமுறைகளோ இல்லை. அதற்கு இடையில்தான் கட்சிக்கு வெகுஜன தளம் உருவானது. தற்போது 2008 தேர்தல் துவங்கி 6 வருடங்களாக கட்சி தன் வாக்கு பலத்தில், வெகுஜன தளத்தில் சரிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

கணிசமான தோழர்கள், கட்சி ஆட்சி நடத்திய 34 ஆண்டுகளில் வந்தவர்கள். அவர்களை வைத்துத்தான் நிலைமை எதிர்கொள்ளப்படுகிறது. அவர்களது அரசியல், தத்துவார்த்த தரத்தை உயர்த்துவதிலும் கவனம் செலுத்தப்படுகிறது. இந்தியாவின் இதர பகுதிகளில் உள்ள கட்சியின் செயல்வீரர்கள் செய்யக் கூடியதெல்லாம், இந்தப் பின்னணியை மக்களுக்கு சென்று சேர்ப்பதுதான். இது விவாதப் பொருளாக மாற்றப்பட வேண்டும்.

இது ஏதோ மார்க்சிஸ்ட் கட்சி பதவி இழந்த பிரச்னை அல்ல. இடதுசாரிகளின் வலு குறைந்தால் சமூக விரோத போக்குகள் தலைதூக்கும். 34 ஆண்டு ஆட்சியில், சாதிக் கலவரமும், மத மோதல்களும் நடக்கவில்லை என்பது இயல்பாக நடந்தேறியது அல்ல. இடதுசாரி கண்ணோட்டமும், அரசியலும் பலமாக இருக்கும் போது இத்தகைய போக்குகள் ஒதுக்கப்படும், ஓரங்கட்டப்படும். வலு குறைந்த இன்றைய பின்னணியில் பாலியல் வல்லுறவு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது, மதச்சார்பின்மை பின்னுக்குப் போய் மதவாதக் கண்ணோட்டம் வலுவாகிறது. சாதி பஞ்சாயத்துக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நாட்டாமை செய்ய ஆரம்பித்துள்ளன. ஜனநாயக உரிமைகள் அனைத்து மட்டங்களிலும் பறிக்கப்படுகின்றன. எனவே, இடதுசாரி இயக்கம் வலுவடைவது இந்தியாவுக்கும், அதன் மக்களுக்கும் பாதுகாப்பு வழங்கும், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி பாதுகாக்கப்படும் என்பதாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். எனவேதான் தேர்தலில் தற்காலிகமாகப் பின்னடைவை சந்தித்திருந்தாலும், இந்திய அரசியலில் இடதுசாரிகளின் தேவை முன்னெப்போதையும் விட அதிகரித்திருக்கிறது என்பதே உண்மை. அத்தகைய இடதுசாரி இயக்கத்துக்குப் பெருமை சேர்த்த, தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்த, நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளின் இருப்பை உறுதி செய்த, இடது ஜனநாயக மேடையின் அஸ்திவாரமாக விளங்கிய மேற்குவங்கக் கட்சியைப் பாதுகாக்க வேண்டிய தருணம் இது. அதை உறுதியாய் செய்வோம்!

ஆதாரம்:

  1. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆவணங்கள்
  2. மேற்கு வங்க சிபிஎம் இணைய தளக் கட்டுரைகள்
  3. The Founders of the CPI(M) – என்.ராமகிருஷ்ணன்