மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


மலபார் முஸ்லீம்களும் இடதுசாரிகளும்


பினராயி விஜயன்

தமிழில்: வீ.பா. கணேசன்

நீண்ட நெடுங்காலம் நடத்தி வந்த காலனி ஆதிக்கத்தை எதிர்த்து போராட்டம், பாரம்பரிய மான மறுமலர்ச்சி ஆகியவற்றின் பின்னணியில் மலபார் பகுதியில் உள்ள முஸ்லீம் மக்களை முன்னுக்கு எடுத்துச் செல்வதில் இடதுசாரி களின் பங்களிப்பு மற்றும் அவர்கள் மேற்கொண்ட நிலைபாடு ஆகியவற்றை விளக்குவதற்கான ஒரு முயற்சியே இந்தக் கட்டுரை. முஸ்லீம் மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை தீர்த்து வைப் பதில் இடதுசாரிகள் எப்போதுமே தலையிடு வதில்லை என்றதொரு பிரச்சாரத்தை திட்டமிட்டதொரு முயற்சி சில பிரிவினரால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பின்னணியில்தான் முஸ்லீம் மக்களின் வளர்ச்சியிலும், முன்னேற்றத் திலும் இடதுசாரிகள் மேற்கொண்ட நடவடிக் கைகள் பற்றிய ஒரு விசாரணை பொருத்தமான தாகிறது. அதன் துவக்க காலத்திலிருந்தே இஸ்லாம் மதத்தின் பிரத்யேகமான அம்சங்கள், வரலாற்றில் அது செலுத்திய பங்கு ஆகிய அனைத்தையும் முறையானதொரு கண்ணோட்டத்தில் காண கம்யூனிஸ்ட் கட்சி தயாராகவே உள்ளது. அரேபிய மக்கள் உலக முழுவதற்கும் வழங்கிய பங்களிப்பை எடுத்துக் கூறுவதில் கம்யூனிஸ்ட் கடசியின் நிறுவனங்கள் எப்போதும் தயங்கியதே இல்லை. கேரளாவிலும், கம்யூனிஸ்ட் இயக்கம் அது தோன்றிய காலத்திலிருந்தே அதே பாரம்பரியத்தை பின்பற்றி வருகிறது. வர விருக்கும் நாட்களிலும் கூட அதே நிலை பாட்டையே அது தொடர்ந்து கடைப்பிடிக்கும்.

அரேபியர்களின் பங்களிப்பு

அதற்கேயுரிய பிரத்யேகமான பூகோள நிலைமைகளின் விளைவாக அரேபியாவில் விவசாயம் செய்வது இயலாத ஒன்று என்ற நிலையில் இதர பகுதிகளிலிருந்து உணவுப் பொருட்களை கொண்டு வர அரேபியர்கள் முயற்சித்தது மட்டுமன்றி வணிகத்தின் மூலம் பொருளீட்டவும் அவர்கள் முயற்சி செய்தனர். உலகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று வரும் போது கிடைத்த அறிவை உலக முழுவதிலும் பரவச் செயவ்திலும் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ள அறிவோடு இந்த அறிவை இணைப்பதிலும் அரேபியர்கள் வகித்த பங்கை மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகிய இருவருமே விரிவாக எடுத்துக் காட்டியுள்ளனர்.

“இயற்கையின் இயங்கியல்” என்ற அவரது நூலுக்கு எழுதிய முன்னுரையில் எங்கெல்ஸ் உலகத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சி குறித்து விரிவாக விளக்குகிறார். ஐரோப்பாவில் புதிதாக உருவாக்கப்பட்ட பொருட்கள், புதிய கண்டு பிடிப்புகள் ஆகிய அனைத்திற்கும் பின்னால் உலகின் பல பகுதிகளிலிருந்தும் தாங்கள் பெற்ற அறிவுச்செல்வத்தை அரேபியர்கள் பகிர்ந்து கொண்டதுதான் அடிப்படையாக அமைந் திருந்தது என்ற உண்மையை தனது முன்னுரையில் அவர் ஒப்புக்கொள்கிறார். கேரளாவிலிருந்து கூட அவர்கள் பெற்ற இத்தகைய அறிவை உலகத்தின் இதர பகுதிகளில் உள்ளவர்களோடு பகிர்ந்து கொண்டார்கள் என்பதும் சமீபத்திய ஆய்வுகளிலிருந்து தெரிய வந்துள்ளது. அரேபிய மக்களின் இத்தகைய பங்களிப்புகளுக்கு கம்யூ னிஸ்டுகள் எப்போதுமே மரியாதை செய் வார்கள்.

இஸ்லாம் உருவாக்கமும் மார்க்சிய அணுகுமுறையும்

மார்க்சும் எங்கெல்சும் உலகத்தில் தோற்றுவிக்கப்பட்ட மதங்களைப் பற்றியும், அந்தக் காலத்தில் அவைகளின் பொதுவான செயல்பாடுகள் பற்றியும் மிகவும் விரிவான ஆய்வை மேற்கொண் டனர். இஸ்லாம் தோன்றியது பற்றியும் சமூகத்தில் அது ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றியும் அவர்கள் ஆராய்ந்தனர். அவர்களது கருத்துப்படி இஸ்லாம் மதம் என்பது ஒருபுறத்தில் வர்த்தகம்- தொழில் ஆகியவற்றில் ஈடுபட்ட நகர்ப்புற மக்களுக்கும், மறுபுறத்தில் ஓரிடத்தில் நிலைத்து நிற்காது இடம் மாறிக் கொண்டேயிருக்கும் பெடோயின் எனப்படும் நாடோடி இனத் தவருக்கும் மிகவும் பொருத்தமான விதத்தில் உருவாக்கப்பட்ட ஒரு மதமாகும். செல்வச் செழிப்புமிக்க நகர்ப்புற மக்களுக்கும், பரம ஏழைகளான பெடோயின்களுக்கும் இடையே நிலவும் முரண்பாட்டில் இருந்துதான் இஸ்லாம் மதம் உருவாக்கப்பட்டது என்ற கருத்தை எங்கெல்ஸ் முன்வைக்கிறார். அரேபிய தேசிய உணர்வு என்ற தேவைகளுக்கும் அங்கிருந்த அடிப்படை வர்த்தகத்தைச் சேர்ந்த மக்களுக்கும் இடையேயான தலையீடுகளின் அடிப்படையிலேயே இஸ்லாம் மதம் உருவாக்கப்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார். அபிசீனியாவின் ஆதிக்கத்திலிருந்து அரேபிய வளைகுடாவை விடுவிக்கவும், வணிகத்திற்கான கடல் வழிகளை மீண்டும் மீட்டெடுக்கவும் இந்த அரேபிய தேசிய உணர்வு என்ற விழிப்பு உணர்ச்சி உதவியது என்பதும் கூட சுட்டிக்காட்டப்பட்டது.

கேரளாவிற்குள் இஸ்லாம் வந்த வழி

அரேபியப் பெருங்கடலின் கடற்கரையோரப் பகுதியாக கேரள மாநிலம் இருப்பதானது ஆரம்ப காலத்திலேயே அரேபியாவுடன் அது உறவுகளை உருவாக்கிக் கொள்ள வழி வகுத்தது. இஸ்லாம் மதம் தோன்றுவதற்கு முன்பாகவே கேரளா அரேபியர்களுடன் வர்த்தக உறவுகளை கொண்டிருந்தது. எனவே, அரேபியாவில் இஸ்லாம் மதம் உருவான போது அரேபிய வர்த்தகர்கள் மூலமாக இச்செய்தி நம் நாட்டை வந்தடைந்தது.

கேரளாவில் நிலவிய குறிப்பிட்டதொரு சமூகப்பின்னணியில் குறிப்பாக துறைமுகங்க ளோடு நேரடியாகத் தொடர்புடைய பகுதிகளில் இத்தத்துவம் இங்கே பரப்பப்பட்டது. இன்று கொடுங்காளூர் என்று அழைக்கப்படும் அந்நாளைய முசிறிதான் கேரளாவில் முக்கியமான வர்த்தக மையமாக விளங்கியது. இங்கேதான் முதல் மசூதி நிறுவப்பட்டது.

வர்த்தகத்துறையைப் பொறுத்தவரையிலும் குறிப்பாக மலபாரில், அரேபியர்கள் தான் மேலாதிக்கம் பெற்றவர்களாக இருந்தனர். இந்தப் போர்வையில் வர்த்தகத்தை மேலும் விரிவாக் கவோ அல்லது நாட்டில் தங்களது அதிகாரத்தை நிலை நாட்டவோ அரேபியர்கள் முயற்சிக்க வில்லை. அதேநேரத்தில் கேரளாவிற்கு வருகை தந்தவர்களின் எழுத்துக்களிலிருந்து இந்த உண்மை தெளிவாகிறது.

1498-ம் ஆண்டில் போர்த்துக்கீசியர்கள் கேரளாவில் வந்திறங்கிய பிறகே வெளிநாட்டு வர்த்தகத்துறையில் மேலாதிக்கம், குறித்த போட்டி அவர்களிடையே துவங்கியது. வர்த்தக ஏகபோகத்திலிருந்து அரேபியர்களை கழற்றி விட வேண்டும் என்ற போர்த்துக்கீசியர்களின் கோரிக்கையை அப்போதைய ஜாமோரின் ஒப்புக் கொள்ளவில்லை. அப்போது இங்கிருந்த இளவரசர்களுக்கு இடையே நிலவிய மோதல் களை பயன்படுத்தி தங்கள் அதிகாரத்தை நிறுவ போர்த்துக்கீசியர்கள் முயற்சிகளை மேற்கொண் டார்கள். இது கேரளாவின் கடற்கரை பகுதி களில் மோதல்களை உருவாக்கியது. இது போர்த்துக்கீசியர்களுக்கும், அரேபியர்களுக்கும் இடையேயான மோதல்கள் தீவிரமடையவும், முஸ்லீம் மக்களின் நலன்களுக்கு எதிராக அவர் கள் தலையிடவும் வழிவகுத்தது. போர்த்துக் கீசியர்களின் பலம் கப்பல்களை இயக்கும் நட வடிக்கைகளில்தான் இருந்தது. அந்த நாட்களில் கடலில் போர் புரிவதென்பது நாயர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒவ்வாத ஒரு செயல் என்ற கருத்து இருந்த நிலையில், சமூகத்தின் இதர பிரிவினரையே ஜாமோரின் நம்பியிருக்க வேண்டியிருந்தது. கடல் மற்றும் வணிகம் ஆகிய இரண்டிலும் போர்த்துக்கீசியர்களுக்கு எதிராக இருந்த முஸ்லீம் பிரிவினரை அவர் அணி திரட்டினார்.அந்நிய சக்திகளுக்கு எதிரான போராடடத்தின் ஒரு பகுதியாக இஸ்லாமிய மதத்தை ஊக்குவிப்பது என்றதொரு சூழ்நிலை மலபார் பகுதியில் உருவானது.

நாயர் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் நிலப்பகுதி யில் போர் புரிவதற்கான பொறுப்பை ஏற்ற அதே நேரத்தில் குஞ்ஞாலி மரைக்காயர் தலைமையில் கடலில் போரிடும் கடமையை முஸ்லீம்கள் மேற் கொண்டனர். இந்த இரு பிரிவினரையும் இணைப்பதின் மூலம் தான் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இயக்கம் மலபார் பகுதியில் வடிவம் பெற்றது. இந்த அம்சங்களின் விளைவாகவே அரக்கல் பரம்பரையினரால் வலுவானதொரு கடற்படை உருவாகியது.

கடற்கரை பகுதிகளில் வசித்து வந்த மக்களை மதம் மாற்றுவதற்கு போர்த்துக்கீசியர்கள் முயற் சித்த போது, முஸ்லீம்கள் அதற்கு எதிராகப் போராடினார்கள். இத்தகைய எதிர்ப்புதான் கேரளாவில் போர்த்துக்கீசியர்கள் தங்களது மேலாதிக்கத்தை நிலை நாட்டாமல் தடுத்தது. அப்போது மேலாதிக்கத்தின் முக்கிய மையமாக விளங்கிய கண்ணூரில் இருந்த உள்ளூர் மக்கள் போர்த்துக்கீசியர்களின் தவறான கொள்கை களை எதிர்த்துப் போராடினர். கண்ணூரில் இந்த போர்த்துக்கீசியர்களின் கோட்டையைச் சுற்றி லும் முஸ்லீம்களே பெரும்பகுதியயாக வசித்து வந்த நிலையில் கண்ணூரில் அவர்களுக்கிடையே தொடர்ந்து மோதல்கள் நடந்தே வந்தது. போர்த்துக்கீசியர்களுக்குப் பிறகு இப்பகுதியில் தங்களது மேலாதிக்கத்தை நிலை நாட்டிய பிரிட்டிஷார் அப்போது நிலவி வந்த நிலப் பிரபுத்துவ முறையை வலுப்படுத்தவே செய் தார்கள். சாதிய அடுக்குமுறை என்பதிலிருந்து விடுபட்டதாக இஸ்லாம் இருந்த நிலையில் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட பிரிவு களைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமிய மதத்தைத் தழுவினார்கள்.

முஸ்லீம் மக்களும் விவசாயப் போராட்டங்களும்

அந்த நாட்களில் இஸ்லாமிய சமூகமானது சமூகத்தின் கீழ்த்தட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களைக் கொண்டதாக அமைந்திருந்தது. அப்போது நிலவிய நிலப்பிரபுத்துவ அமைப்பின் காலடியில்தான் அவர்கள் வசித்து வந்தார்கள். நிலப்பிரபுத்துவ அடக்குமுறைக்கு எதிரான எதிர்ப்புக்குரல் என்பது இந்தப்பிரிவினரிட மிருந்துதான் எழுந்தது. இந்தப் போராட்டங் களையே பிரிட்டிஷார் மாப்ளா கலகங்கள் என்று வர்ணித்தனர்.

1921ம் ஆண்டில் நடந்த மலபார் விவசாயி களின் கலகத்திற்கு முன்பாகவே வேறு பல போராட்டங்களும் இங்கே நடந்தன. இது போன்ற எழுச்சிகளுக்குத் தலைமை தாங்கியதற்காக மாம்பரம்ஃபாலஸ் ஙுபூக்கோயா தங்கல் அவர்கள் பிரிட்டிஷாரால் நாட்டைவிட்டே வெளியேற்றப்பட்டார் என்ற வரலாறும் மலபார் பகுதிக்கு உண்டு. மலபார் பகுதியில் நிலவும் பிரச்சனைகளை ஆராய்வதற்காக பிரிட்டிஷாரால் அனுப்பப்பட்ட வில்லியம் லோஹன் என்பவர் இந்தப் போராட்டங்கள் அனைத் திற்கும் பின்னால் நிலவிய பிரச்சனைகள் அனைத்துமே அடிப்படையில் விவசாயத்தின் மீதானவையே என்று தெளிவாகக்குறிப்பிட்டி ருக்கிறார்.

முகமது அப்துர் ரஹ்மானும் கம்யூனிஸ்டுகளும்

மாப்பிளா கலகம் என்று பெயரிட்டு பிரிட்டிஷார் அவதூறு செய்த கலகம் என்பது அதற்கு முன்பு நடைபெற்ற கலகங்களின் தொடர்ச்சியே ஆகும். இந்தக் கலகத்தை பிரிட்டிஷார் மிகக் கொடூரமான முறையில் அடக்கி ஒடுக்கினர். அலி முசலியார் போன்ற தலைவர்கள் தூக்கிலிடப் பட்டு கொல்லப்பட்டனர். வரியம்குன்னத் குன்னகமது ஹாஜி, செம்பசேரி தங்கல் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தக் கலகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். சுமார் 14000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தத் தொடர் சம்பவத்தில் மிகவும் தீவிரமான சம்பவமாக இருந்தது. 1921 நவம்பர் 17ம் தேதியன்று நிகழ்ந்த சரக்கு ரயில் பெட்டி வண்டி துயர சம்பவமாகும். வகுப்புவாத அடிப்படையில் மாப்பிளாக்களின் வெறியாட்டத்தை நசுக்குவது என்ற பெயரில் பிரிட்டிஷார் மேற்கொண்ட முயற்சிக்கு எதிரான உறுதியான நிலைபாட்டை மேற்கொண்டவர் முகமது அப்துர்ரஹ்மான் ஆவார். இக்கலகத்தின் தன்மையில் அடங்கியிருந்த தேசியவாதப் போக்கை உணர்ந்து கொண்ட நிலையில் இப்போராட்டத்திற்கு ‘’மலபார் கலகம் என்று பெயர் சூட்டியவர் அவரே ஆவார். அந்த நேரத்தில் முஸ்லிம் லீகும் பின்னர் காங்கிரஸ் கட்சியும் இந்தக்கலகத்தை அவதூறு செய்தன. அதன் பிறகே முகமது அப்துர்ரஹ்மான் களத்தில் இறங்கி கலகம் செய்து கொண்டிருந்தோருக்கு ஆதரவு தெரிவித்தார். முஸ்லிம்களின் பணக் காரர்கள் இந்தக் கலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அதேநேரத்தில், ஏழைகளே இந்தக் கலகத்தின் பின்னே அணி திரண்டனர். பணக்காரர்களின் நலனை மட்டுமே பாதுகாத்துக் கொண்டிருந்த லீக், அவர்களுக்கு ஆதரவாக நின்று கலகத்தின் மீத அவதூறு பொழிந்தது. முகமது அப்துர் ரஹ்மான் மேற்கொண்ட நிலைபாட்டை ஆதரிப்பது என்ற போக்கை இடதுசாரிகள் கடைப் பிடித்தனர். இந்தப் பின்னணியில்தான் காங்கிரசில் இந்த வலதுசாரி சக்திகளுக்கு எதிராகப் போராடும் நோக்கத்துடன் கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி ஒன்று முகமது அப்துர் ரஹ்மானை தலைவராகவும், இஎம்எஸ்-ஐ செயலாளராகவும் கொண்டு உருவாக்கப்பட்டது.

மலபார் கலகம்

மலபார் கலகத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு 1946 ஆகஸ்ட் 18,19 தேதிகளில் கோழிக்கோட்டில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாங்கூர், கொச்சி, மலபார் கமிட்டிகளின் கூட்டுக் கூட்டமானது “1921 : அறைகூவலும் எச்சரிக்கையும்” என்ற தலைப்பில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த விஷயத்தை மேலும் விளக்கும் வகையில் தோழர் இஎம்எஸ் அதே தலைப்பில் ஒரு பிரசுரத்தையும் எழுதினார். இந்தப் பிரசுரத்தை தேசாபிமானியில் வெளியிட்டதற்காக அதை தடை செய்வதென பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது. மலபார் கலகத்தை அதன் உண்மை யான பொருளில் ஆய்வு செய்ததற்காக தேசாபி மானி தடை செய்யப்பட்டது. முஸ்லிம் லீகும் காங்கிரஸ் கட்சியும் மலபார் கலகத்தை அவதூறு செய்த அதேநேரத்தில் அதன் உண்மையான தன்மை கம்யூனிஸ்டுகளால் முன்வைக்கப்பட்டது. பிரிட்டிஷார் செய்ததைப் போன்றே சில வகுப்புவாத சக்திகளும் இந்தக் கலகத்தை மாப்பிளாக்களின் வெறித்தனம் என சித்தரித்தன. எனினும் இந்தச் சம்பவம் நிகழ்ந்த போது அது ஒரு வகுப்புவாதத்தன்மை கொண்டதாக மாறக் கூடாது என்பதற்காகவே கலகத்தின் தலைவர்களின் அணுகுமுறையானது அமைந்திருந்தது. வரியம் குன்னம் குன்னகமது ஹாஜி அவர்களின் அணுகுமுறை இதையே வெளிப்படுத்துகிறது. இது ஒரு முஸ்லிம்களின் கலகம் என்ற கருத்தை குன்னகமது ஹாஜி நிராகரித்தார். 1946 ஆகஸ்ட் 25 அன்று தேசாபிமானியில் சர்தார் சந்த்ரோத் எழுதிய கட்டுரையில் குன்னகமது ஹாஜியின் உரை கீழ்க்கண்ட வகையில் மேற்கோள் காட்டப் பட்டிருந்தது. ————“நேற்று எனக்கு ஒரு தகவல் கிடைத்தது. தற்போது நடைபெற்று வரும் கிளர்ச்சி இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையேயான ஒரு போர் என்பதாக மற்ற நாடுகளில் கூறப்படுவதாகத் தெரியவந்தது.” இந்துக்களின் மீது எங்களுக்கு எவ்வித வெறுப் பும் கிடையாது. ஆனால் அரசாங்கத்திற்கு உதவி செய்பவர்களும் எங்களை அரசாங்கத்திடம் காட்டிக் கொடுப்பவர்களும், எவ்வித கருணையு மின்றி தண்டிக்கப்படுவார்கள். தேவையில்லாமல் இந்துக்களுக்கு யாராவது ஊறு செய்கிறார்கள் என்று தெரிய வந்தால், நானே அவர்களை தண்டிப்பேன். இந்துக்கள் நம்மோடு ஒரே நாட்டில் சகோதரர்களாக வாழ்பவர்கள். இந்த நாட்டை ஒரு முஸ்லிம் நாடாக மாற்ற வேண்டும் என்ற ஆசை எதுவும் எங்களுக்கு இல்லை.

மலபார் கலகத்தின் சாரம் என்பது மதரீதியான மோதல் என்ற கருத்தோட்டம் முற்றிலும் தவறானது என்பதையே இவை அனைத்தும் தெளிவாக்குகின்றன. கலகத்தை (அரசிற்கு) காட்டிக் கொடுத்து துரோகமிழைக்க முயன்றவர்கள் மட்டுமே கொல்லப்படவில்லை, போலீஸ் உடனும் ராணுவத்துடனும் சேர்ந்து கொண்டு இந்தக் கலகத்தை ஒடுக்க முயற்சி செய்த முஸ்லீம் அதிகாரிகளும் கூட படுகொலை செய்யப்பட்டனர். ஆமு சாஹிப், மொய்தீன் இன்ஸ்பெக்டர் போன்ற போலீஸ் அதிகாரிகளை கிளர்ச்சியாளர்கள் கொன்றனர். கிளர்ச்சியாளர்களை பிரிட்டி ஷாருக்கு காட்டிக் கொடுத்ததற்காக அனக்காயம் சேக்குட்டி அதிகாரி என்பவரும் அவர்களால் கொல்லப்பட்டார். கலகத்தின் பொதுவான நடைமுறை என்பது மதரீதியானதாக அமைந் திருக்கவில்லை என்பதையே இவை நிரூபிக் கின்றன. ஒரு சில இடங்களில் இந்தக் கலகத்தை வகுப்புவாத வழியில் திசை திருப்பி விடுவதற் கான முயற்சிகளும் நடைபெற்றன என்பதை சுட்டிக்காட்டவும் கம்யூனிஸ்ட் கட்சி தவற வில்லை.

இந்தப் பின்னணியில் தான் இந்த அறை கூவலையும் அதே நேரத்தில் ‘எச்சரிக்கை’யையும் கட்சி கணக்கில் எடுத்துக் கொண்டது. இது போன்ற சில அம்சங்களும் நிலவி வந்தது என்ற உண்மையை சுட்டிக் காட்டிய கட்சி இது ஒரு அறைகூவல் மட்டுமல்ல; ஓர் எச்சரிக்கையும் கூட என்ற முடிவுக்கு வந்தது.

சர்வதேச அளவிலும் கூட மலபார் கலகத்தை ஆய்வு செய்து, அதனடிப்படையில் கொள்கை களை உருவாக்குவதிலும் கம்யூனிஸ்டுகள் தலையீடு செய்தனர். இந்தக் கலகமானது லெனினின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த கால கட்டத்தில் உருவான இந்து – முஸ்லீம் ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் லெனின் தனது எழுத்துக் களில் பதிவு செய்திருந்தார். மலபார் கலகத்தின் பின்னணியில் இந்தியாவில் விவசாயப் பிரச்சனை, விவசாயிகளின் போராட்டங்கள் ஆகியவை பற்றி கிடைக்கின்ற உண்மைகள் அனைத் தையும் ஒன்று திரட்டி, ஒரு பிரசுரம் ஒன்றை உருவாக்குமாறு அன்றைய இந்திய கம்யூனிஸ்டு களில் ஒருவரான அபானி முகர்ஜிக்கு லெனின் ஆலோசனை வழங்கினார். ஒரு பொருளாதார நிபுணருமான அபானி முகர்ஜி அவ்வாறே ஒரு பிரசுரத்தை எழுதி ருஷ்ய மொழியிலும், ஆங்கில மொழியிலும் மாஸ்கோவிலிருந்து வெளியிட் டார். குடோவ்ஸ்கி என்ற ருஷ்ய நாட்டவர்தான் மலபார் கலகம் பற்றி முதன்முதலாக ஆய்வு செய்து டாக்டர் பட்டம் bப்றறவர். அதே போன்று பிரிட்டனைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் ஆன கான்ராட் வுட்ஸ் என்பவரும் மலபார் கலகம் பற்றி ஆய்வு செய்தார். சுருக்கமாக கூறுவதெனில் காங்கிரஸ் கட்சியும், முஸ்லீம் லீக்கும் மலபார் கலகத்தை தூற்றிக் கொண்டிருந்த நேரத்தில், சர்வதேச அளவில் அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தவர்கள் கம்யூ னிஸ்டுகள் தான்.

1800களின் துவக்க காலத்தில் நிகழ்ந்த பழஸி கலகம், (திருவாங்கூரைச் சேர்ந்த) வேலுத்தம் பிய்ன தலைமையிலான போராட்டங்கள் ஆகிய அனைத்துமே பிரிட்டிஷ் எதிர்ப்புத் தன்மை கொண்டவையாகவே இருந்தன. இந்தப் போராட்டங்களில் உள்ளடங்கி இருந்த தேசபக்தி உணர்வுதான் அனைத்துக் காலங்களிலும் நமது போராட்டங்களுக்கு வலிமை ஊட்டுகிறது. இங்கு அடுத்த கட்டமாக நிகழ்ந்த போராட்டங்கள் நிலப்பிரபுக்களுக்கு எதிரான தன்மை கொண்டதாக இருந்ததையும் நம்மால் காண முடிந்தது. அத்தகைய போராட்டங்களில் மலபார் கலகம் மிக முக்கியமானதொரு இடத்தை வகிக்கிறது.

19ஆம் நற்றாண்டின் துவக்கத்தில் இதுபோன்ற கலகங்கள் நடைபெற்ற போது இயக்கவியல் பொருள்வாதக் கருத்துக்களோ அல்லது இடது சாரி அரசியல் இயக்கங்களோ கேரளாவில் இருக்கவில்லை. எனவே அவற்றில் சில பல வீனங்கள் தோன்றுவதென்பது இயற்கையான ஒன்று தான். சீனாவில் நடைபெற்ற விவசாயப் போராட்டங்கள் குறித்து ஆழ்ந்த அறிவு கொண்ட செஸ்னூ அரசியல் கருத்துக்களும் இயக்கமும் தெளிவான இலக்கும் தலைமையும் கொண்டதாக இல்லாத போது மத ரீதியான கருத்துக்களும் சிந்தனையும் விவசாயப் போராட் டங்களுக்கான உந்து சக்தியை வழங்கும் என்று தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். இதுபோன்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு கலகங்களின் பாரம்பரியத்தை அதையடுத்து வந்த நாட்களில் கம்யூனிஸ்டுகள் மேற்கொண்டு முன்னெடுத்துச் சென்றார்கள் என்பதே உண்மை யாகும். தூக்கு மேடையை நோக்கிச் சென்ற கையூர் போராளிகள் ஏகாதிபத்தியற்கு எதிராக வும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும் கோஷங் களை எழுப்பிய படியே தான் உயிர் நீத்தனர் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று தான். கம்யூனிஸ்டுகள் செய்ததெல்லாம் மலபார் விவசாயிகளின் கலகத்தில் வெளிப்பட்ட சில பலவீனங்களை சரி செய்து, அதன் சாதகமாமன அம்சங்களை முன்னெடுத்துச் சென்றதன் மூலம் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட் டத்தை மேலும் முன்னேற்றி இருக்கிறார்கள் என்பதேயாகும்.

மலபார் கலகமும் நினைவிடங்களும்

இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சிக் காலத்தில்தான் மலபார் கலகத்தின் போற்று தலுக்குரிய தலைவர்களான அலி முசலியார், மாதவன் நாயர் ஆகியோருக்கு நினைவிடங்கள் எழுப்பப்பட்டன. அலி முசலியார் நினைவிடத் திற்கு டி. சிவதாசமேனன் அடிக்கல் நாட்ட, மாதவன் நாயர் நினைவிடத்திற்கு பலோலி முகமது குட்டி அடிக்கல் நாட்டினார். திரூர் நகராட்சியில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகே ரயில் பெட்டி துயர சம்பவத்திற்கான நினைவிடம் உருவாக்கப்பட்டது. வல்லம்புரத்தில் ஹிட்ச்காக்கின் நினைவாக எழுப்பப்பட்டிருந்த நினைவிடத்தை அகற்றியதும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசுதான். மலபார் கலகத்தின தொடர் விளைவாக மலபார் சிறப்பு போலீஸ் படையில் முஸ்லீம்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 1957 இல் ஆட்சிக்கு வந்த (இ.எம்.எஸ். தலைமையிலான) இடதுசாரி அரசு தான் அந்த உத்தரவை மாறியமைத்து தடையையும் நீக்கியது. இதர பகுதி மக்கள் கோயில்களை கட்டிக் கொள்வதில் எவ்விதக் கட்டுப்பாடும் கிடையாது, தடையெல்லாம் முஸ்லீம்களுக்கு மட்டும் தான். இத்தகைய தடைகளையும் அரசு அகற்றியது.

சமூக சீர்திருத்த இயக்கங்கள்

சமூகத்தில் நவீன கருத்துக்கள் வலுப்பெற்று வரும் நிலையில் சமூகத்தின் இதர பிரிவினரைப் போன்றே முஸ்லீம்கள் மத்தியிலும் பாரம்பரியமான வழிமுறைகளில் மாற்றம் வேண்டுமென்ற சிந்தனை அதிகரித்தது. முஸ்லீம் பிரிவில் மறுமலர்ச்சி இயக்கங்கள் எழுந்தன. சையத் சானுல்லா மக்தி தங்கள் இத்தகைய மறுமலர்ச்சி போக்கு முன்னேறிச் செல்வதற்காகப் பாடுபட்ட தலைவர்களில் தலைசிறந்தவர் ஆவார். மலையாளம், அரபி, ஆங்கிலம், உருது, பாரசீக மொழிகளை அவர் நன்கறிந்தவர் ஆவார். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அவருக்கு வேலை கிடைத்த போதிலும், இந்த மத மறுலர்ச்சிக்கான இயக்கங் களில் பங்கேற்க வேண்டுமென்று அவர் வேலையை ராஜினாமா செய்தார். மூட நம்பிக்கை, தீய நோக்கங் கொண்ட சடங்குகள் ஆகியவற்றுக்கு எதிராக அவர் போரிட்டார். நவீன கல்வியைப் பெற்ற, சீர்திருத்தப் பாதையை மேற்கொள்ளுமாறு அவர் முஸ்லீம்களை கேட்டுக் கொண்டார். கல்வி நிறுவனங்களையும் அவர் நடத்தினார். அரபி, மலையாளம் ஆகிய மொழிகளில் அவர் நூல்களையும், பிரசுரங்களையும் வெளியிட்டார். பழமைகளின் எதிர்ப் பிறகு அவர் இரையாகவில்லை. சாலியத் குன்னேஹமத் ஹாஜி அவர்களின் பெயர் இங்கே குறிப்பாகச் சுட்டிக்காட்டப்பட வேண்டும். ஓர் ஆசிரியர் என்ற முறையில் இஸ்லாமிய மதக் கல்வி, பொதுக் கல்வி ஆகியவற்றை பாரம்பரிய மான முறையிலிருந்து அவர் விடுவித்தார். நவீன காலத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல அவர் முயற்சித்தார். பெண்களின் கல்வியிலும் அவர் சிறப்பான ஆர்வம் கொண்டிருந்தார். ஷேக் முகமத் ஹமதானி தங்கள் கல்வித்துறையில் சிறப்பாகச் செயல்பட்ட மற்றொரு முக்கிய நபர் ஆவார். இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்த வைக்கம் மௌலவி உலகின் புதிய வளர்ச்சிப் போக்குகளை முஸ்லீம் இனத் தவரிடையே கொண்டு செல்லும் நோக்கத் துடன் ஐக்கிய முஸ்லீம் சங்கத்தை உருவாக்கி னார். அவரது நவீனப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில் அரசியல் நடவடிக்கைகளில் தலையிடவும் அவர் முயற்சித்தார். வைக்கம் மௌலவிக்கு சொந்த மான நாளிதழில் ஸ்வதேசாபிமானி ராம கிருஷ்ண பிள்ளையின் கட்டுரைகள் வெளிவந்தன.

எரநாட்டிலும், வள்ளுவ நாட்டிலும் குத்தகை விவசாயிகளை அணிதிரட்டுவதில் கட்டிளசேரி முகமத் முசலியார் முக்கிய பங்கு வகித்தார். நவீன கால வாழ்க்கை, நவீன முறையிலான கல்வி ஆகியவற்றை இஸ்லாமிய நம்பிக்கையாளர் களிடம்b காண்டு சேர்க்க இதுபோன்ற பல தனி நபர்களும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கி றார்கள். அரக்கல் அரச குடும்பத்தினருக்கு கல்வி பயிற்றுவித்து வந்த ஆசிரியரான கோயாக்குஞ்சு சாஹிப் இத்தகையோரில் ஒருவராவார். குரானை மலையாளத்தில் மொழி பெயர்த்த சி.ஐ.அஹமத் மௌலவி குறிப்பிடத்தக்க ஒருவராவார். குரானை மலையாளத்தில் மொழி பெயர்ப்பது தவறானது என்ற கருத்தும் அப்போது எழுந்தது. இந்தக் கருத்தை மறுதலித்தே அவர் இந்தப் பணியை முடித்தார். குரானை மொழி பெயர்க்க அஹமத் மௌலவிக்கு ஊக்கமளித்தவர் முகமத் அப்துர்ரஹ்மான் ஆவார். அரசியலில் தீவிரமாக அவர் இறங்கியிருந்த போதிலும் மறுமலர்ச்சி தொடர்பான நபர்களோடு தொடர்ந்து உறவை நீடித்து வருவதிலும் கவனம் செலுத்தினார். செக்கணூர் மௌலவியின் சிந்தனைகளும் இந்தப் பிரிவினரை ஒத்ததே ஆகும்.

முஸ்லீம்களிடையே இயக்கங்கள்

உலகில் முஸ்லீம் இனத்தவரிடையே நிலவும் வலுவான பிரிவினை என்பது ஷியா, சன்னி ஆகிய இரு பிரிவகளாக உள்ளன. இதில் கேரளாவில் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள் கிட்டத்தட்ட இல்லை என்றே கூறிவிடலாம். இங்கே சன்னி பிரிவு மிகவும் முக்கியமான பிரிவாகும். மதச்சார் பற்ற ஓர் அரசின் கீழ் செயல்படுவது இஸ்லாமியக் கொள்கைக்குத் தடையான ஒன்றல்ல; ஏனெனில் மதநம்பிக்கை களையும் சடங்குகளையும் பின்பற்ற அது அனுமதிக்கிறது என்ற வகையில் மதச்சார் பற்ற நிலைபாட்டை பொதுவாக ஏற்றுக் கொள் ளும் போக்கே சன்னி பிரிவினரிடம் நிலவுகிறது. மத சீர்திருத்தம் என்ற பெயரில் முஜாஹித் இயக்கமும் உருவானது. மசூதிக்குள் பெண்களை அனுமதிப்பது போன்ற சாதகமான கண்ணோட் டங்கள் சிலவற்றை அவர்கள் முன்வைத்தனர். இஸ்லாமிய மதத்திற்குள் முற்போக்கான கண் ணோட்டங்களையும் அவர்கள் எழுப்பினார்கள். புதிய காலத்தில் இதுபோன்ற கண்ணோட் டங்களை முன்வைக்க முடியுமா? என்பதும் பரிசீலனைக்கு உரிய ஒன்று தான். ஜமாத் ஏ இஸ்லாமி அமைப்பானது மதத்திற்கும் அரசிற் கும் இடையே எவ்வித வேறுபாட்டையும் காணாது, ஓர் இஸ்லாமிய அரசை நிறுவ வேண்டும் என்று விழைகின்ற, மதச்சார்பின்மை கருத்தை எதிர்க்கின்ற, இத்தகைய நோக்கங்களுக்காகப் பாடுபடுகின்ற ஓர் அமைப்பாகும். ஓர் இஸ்லாமிய அரசிற்குள் மட்டுமே இஸ்லாமிய நம்பிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்ற நிலைபாட்டையே அவர்கள் மேற்கொண் டிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இந்து நாடு என்பதைப் போலவே இஸ்லாமிய நாடு என்ற கருத்தோட்டத்தை முன்வைக்கின்ற ஜமாத் ஏ இஸ்லாமி அமைப்பின் வகுப்புவாதத் திட்டம் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். நலக்கட்சி என்ற முக மூடியை அணிந்தபடி தங்களது திட்டத்தை அமல்படுத்த அவர்கள் இப்போது முயற்சித்து வருகிறார்கள். தேசிய ஜனநாயக முன்னணியானது இப்போது இந்திய சமூக ஜனநாயகக் கட்சி என்ற பெயரில் செயல் பட்டு வருகிறது. தீவிரவாதக் கருத்துக்களை கடுமையாகப் பிரச்சாரம் செய்வது; முஸ்லீம் சமூகத்திற்கு வகுப்புவாத வெறியூட்டுவது என் பதே அவர்களின் வழியாக இருந்து வருகிறது. முஸ்லீம் வகுப்பைச் சேர்ந்தவர்கள் இதர மத நம்பிக்கையை கொண்டவர்களுடன் எவ்வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் குறிப்பிட்டதொரு வகையில் தான் அவர்கள் வாழ வேண்டுமென்றும் குறிப்பிட்ட வகையில் தான் உடை அணிய வேண்டுமென்றும் அவர்கள் வற்புறுத்துகிறார்கள். இவ்வகை யானது முஸ்லீம் சிறுபான்மை மக்களை பொதுச் சமூகத்திலிருந்து விலக்கி வைப்பதற்கான ஒரு முறையே ஆகும்.

இன்றைய உலக அரசியலும் முஸ்லீம் மக்களும்

உலக அரசியலில் மேலாதிக்க முறைகளை கையாண்டு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செயல்கள் மற்ற இடங்களைப் போலவே கேரளாவிலும் ஆழ்ந்த கவலையை முஸ்லீம் பிரிவினரிடையே ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வளைகுடா பகுதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் வேலை செய்து வரும் நிலையில் இது கவலைக்குரிய ஒன்றேயாகும். உண்மை என்னவெனில் கேரள மாநிலத்தில் வீடுகளில் அடுப்பெரிய வேண்டுமெனில் வளை குடா பகுதியில் வேலை செய்வேர் அனுப்பும் பணம் தேவைப்படுகிறது. அங்குள்ள எண்ணெய் சுரங்கங்களை கைப்பற்ற வேண்டும் என்ற நோக் கத்துடன் வளைகுடா பகுதியில் தன் அதி காரத்தை நிலைநிறத்திக் கொள்ள அமெரிக்கா முயற்சித்து வருகிறது. ஈராக்கிலும் ஆப்கானிஸ் தானிலும் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டிய பிறகு ஈரானிலும் சிரியாவிலும் பிளவுகளை ஏற்படுத்த அது முயற்சித்து வருகிறது. அரேபிய பகுதியில் இப்போது மீதம் இருக்கும் ஒரேயொரு மதச்சார்பற்ற நாடான சிரியாவை சீர்குலைக்க பயங்கரவாதிகளுக்கு ஊக்கமளிக்கப்படுகிறது. அமெரிக்காவின் இத்தகைய தலையீடுகள் முஸ்லீம் மக்களிடையே கடுமையான எதிர்ப்பை எற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இத்தகைய ஜனநாயகமற்ற செயல்களை எதிர்ப்பதற்கு இந்தியாவைப் போன்ற நாடுகள் தயாராக இல்லை என்பது மிகவும் மோசமானதொரு விஷயம் ஆகும். அரேபியப் பகுதிகளில் இருக்கும் நாடுகளின் மிக நெருங்கிய நண்பனாக சோவியத் யூனியன் திகழ்ந்து வந்தது. இப்போது போலவே அப்போது கூட அமெரிக்கா இப்பகுதிகளில் தலையிட முயற்சி செய்தது. சோவியத் யூனியன் தான் அதைத் தடுத்து வந்தது. எகிப்தில் நேரடி யாகத் தலையிட அமெரிக்கர் முயற்சித்த நேரத்தில், அதற்கு எதிராக சோவியத் யூனியன் நேரடியாகக் களத்தில் இறங்கியவுடன் அமெரிக் காவினால் எதையும் செய்ய முடியவில்லை. அந்த நாட்களில் ஈராக் உள்ளிட்ட பல்வேறு அரேபிய நாடுகளும் சோவியத் யூனியனுடன் நல்ல உறவு களை வைத்திருந்தன. சோவியத் யூனியன் சரிவு தான் அமெரிக்காதனது நலன்களை மற்றவர் களின் மீது திணிப்பதற்கான ஒரு சூழ்நிலையை உருவாக்கியது.

தேசிய அரசும் முஸ்லீம் மக்களும்

சங் பரிவார் படைகள் இந்தியாவில் இந்துத்துவா வகைப்பட்ட செயல்திட்டத்தை அமல் படுத்த முயற்சி செய்து வருகின்றன. பாப்ரி மஸ்ஜித் தரைமட்டாக்கியதன் மூலம் மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகியவற்றை அவர்கள் வேரோடு வெட்டிச் சாய்த்தார்கள். மதச்சார்பற்ற தொரு கட்சி என்று கூறிக் கொள்கின்ற காங் கிரஸால் சங்பரிவாரின் இத்தகைய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியவில்லை. எந்தவிதமான நடவடிகையையும் எடுக்க தங்களது ஆதுரவு உண்டு என்று இடதுசாரிகள் அறிவித்திருந்த போதிலும் சங்பரிவாரை தடுத்து நிறுத்த காங்கிரஸ் தயாராக இல்லை. வகுப்புவாதத் தாக்குதல்களுக்கு தலைமை தாங்குவோரை சட்டத்தின் முன்னால் கொண்டு வந்து நிறுத்துவதிலும் அரசு பெரும்பாலும் தவறுகிறது. இத் தகைய போக்குகளும் கூட சிறுபான்மையினரில் சிறியதொரு பகுதியினர் பயங்கரவாதத்தை நோக்கி நடைபோட்டுச் செல்வதற்கானதொரு பின்னணியை உருவாக்குகிறது. பயங்கரவாதம் என்பது குறிப்பிட்டதொரு மதத்திலிருந்து மட்டுமே வெளிப்படுகின்ற ஓர் அம்சம் அல்ல. சங்பரிவாரின் தலைமையின் கீழ் மலேகான், கோவா, மெக்கா மஸ்ஜித் போன்ற இடங்களில் நிகழ்ந்த வெடிகுண்டுச் சம்பவங்கள் இந்த யதார்த்தத்தை சுட்டிக் காட்டுகின்றன. தற்போதைய தேசிய சூழ்நிலையில் காங்கிரசிற்கும் பாஜகவிற்கும் மாற்றான ஓர் அரசியல் சக்தியை முன்னுக்குக் கொண்டு வருவது மிகவும் முக்கிய மானது என்பதை இதிலிருந்தே உணர்ந்து கொள்ள இயலும். வெளிநாட்டு உறவுக் கொள்கை பொருளாதாரக் கொளகைகள் உள்ளிட்டு அவர்கள் முன்னிறுத்தும் கொள்கைகளில் அமெரிக்க ஆதரவுப் போக்கையே காங் கிரசும், பாஜகவும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இன்றைய சூழ்நிலை

கேரளாவில் வசிக்கும் முஸ்லீம்கள் நாட்டின் இதர பகுதிகளில் வசிக்கும் முஸ்லீம்களை விட நெடுந்தூரத்தில் முன்னேற்றமாக இருக்க முடிந்துள்ளது. கேரளாவில் உள்ள சிறுபான்மை இனத்தவரின் மொத்த எண்ணிக்கையானது மாநில மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதியளவிற்கு உள்ளது. மதரீதியான பாரபட்சம் அல்லது ஒடுக்குமுறை என்பது மற்ற மாநிலங்களைப் போல் இங்கு உணரப்படுவதில்லை. முஸ்லீம் இனத்தவரில் கணிசமான பகுதியினர் பணம் படைத்தவர்களாக மாறியுள்ளனர். இந்த இனத்தின் தலைமைப் பொறுப்பும் அவர்களிடமே உள்ளது. சிறுபான்மையினரின் உரிமைகள் என்ற பெயரால் காப்பாற்றப்படுவதெல்லாம் இந்த இனத்தின் மேல்தட்டு மக்களின் நலன்கள்தான். அரசியல் அதிகாரத்தில் தலையிட இனத்தவரின் ஆதரவை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான பாஜகவுடன் கூட சேர்ந்து கொள்வதில் இந்த இனத்தின் மேல்தட்டு மக்களுக்கு எவ்விதத் தயக்கமும் இருப்பதில்லை. முஸ்லீம்களின் உரிமைகளுக்காகவே நிற்கிறோம் என்று கூறிக் கொள்கின்ற முஸ்லீம் லீக் மேற்கொள்ளும் அணுகுமுறையானது இத்தகைய பணம் படைத்த பிரிவினரின் நலன்களே முக்கியம் என்பதையே எடுத்துக் காட்டுவதாக உள்ளது. வசதிபடைத்த இந்தப் பிரிவினரை சுட்டிக் காட்டியும் அவர்களின் நலன்களையே லீக் பாதுகாக்கிறது என்று கூறியும் வகுப்புவாத செயல்திட்டம் ஒன்றிற்கு பிரச்சாரம் மேற் கொள்ள ஆர்.எஸ்.எஸ். முயற்சித்து வருகிறது. இவ்வாறு முஸ்லீம் மக்களுக்கு எதிரான உணர்வு களைத் தூண்டிவிட அவர்கள் முயற்சிக்கி றார்கள்.

வகுப்புவாதங்களுடன் சமரசம்

வலதுசாரிகளின் அரசியல் கொள்கைகள் என்பது வகுப்புவாத அடிப்படையில் மக்கள் பிளவுபடுவதை நோக்கி அழைத்துச் செல் வதையே நோக்கமாகக் கொண்டவையாகும். கம்யூனிஸ்ட் இயக்கத்தை எதிர்கொள்வதற்காக சாதிய, மதரீதியான சக்திகளுடன் இணைந்து நிற்கவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள். வலதுசாரிகளின் ஆதரவு நிழலில்தான் இத் தகைய சக்திகள் வளரத் துவங்குகின்றன. பாஜகவுடன் கூட அவர்களால் உறவு கொள்ள முடியும் என்பதை இதற்கு முந்தைய தேர்தல்களில் பேபூர் வடகரா கூட்டணிகள் நிரூபணம் செய்தன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணி தேசிய ஜனநாயக முன்னணியுடன் ஏற்படுத்திக் கொண்ட உறவு இத்தகைய போக்கைச் சேர்ந்த ஒன்றுதான். இடதுசாரிகள் மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போது வகுப்புவாதக் கலவரங்கள் எதுவும் தலைதூக்குவதில்லை. ஆனால் ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி செய்யும் போது நிலைமை அப்படி இருப்பதில்லை. அரசியல் நோக்கங்களுக்காக மதத்தைப் பயன்படுத்திக் கொள்வதன் விளைவே இது. இத்தகைய போக்கில் மாற்றம் அவசியமாகிறது.

அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டுவது என்ற செயல்திட்டம் எதையும் மலபாரில் உள்ள முஸ்லீம்களின் வரலாற்றிலிருந்து எவராலும் காண முடியாது. அனைத்துப் பகுதி மக்களுடன் இணைந்து வாழ்வது என்ற பாதையையே அவர்கள் பொதுவாக மேற்கொண்டு வருகின்றனர். முஸ்லீம் மக்களுக்கு இடையே செயல்பட்டு வரும் வகுப்புவாத சக்திகள் இதை உடைத்து நொறுக்குவது என்ற அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் முன்னேறி வருகின்றன. இத்தகைய செயல்கள் பொதுவான வாழ்க்கைப் போக்கிலிருந்து முஸ்லீம்களை தனிமைப்படுத்துவது மட்டுமின்றி பெரும்பான்மை வகுப்பைச் சேர்ந்த வகுப்புவாத சக்திகள் வளர்வதற்கான அடித்தளத்தை உருவாக்குவதாகவும் அமைகிறது. வகுப்புவாத சக்திகள் அனைத்துமே தொழிலாளி வர்க்க இயக்கங்களை குறிவைத்துத் தாக்குவதிலிருந்து இதை உணர முடியும். மக்களின் அடிப்படைப் பிரிவுகளின் நலன்களை உடைத்து நொறுக்கு வதாகவே பெரும்பான்மை, சிறுபான்மை பிரிவு வகுப்புவாதங்களின் செயல்கள் அமைகின்றன.

சமூக வாழ்விற்கு மேலும் ஒத்திசைவு தேவை

மக்களை ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போராடச் செய்வது என்ற வகுப்புவாத சக்தி களின் செயல்திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனில், பொதுவெளியை மேலும் வலுப்படுத்துவதில் நமது தலையீடு அவசிய மாகிறது. இந்தப் பின்னணியில் தான் பொதுக் கல்வியை வலுப்படுத்துவது என்பது முக்கியமான ஒன்றாக ஆகிறது. மத நம்பிக்கை உள்ள, மத நம்பிக்கை இல்லாதவர்களின் குழந்தைகள் ஒன்றாகக் கலந்து செயல்படும் இது போன்ற நிறுவனங்களே மதச்சார்பின்மையின் வலுவான அடித்தளங்களாகக் செயல்படும். சாதிய அடிப்படையிலான, மத அடிப்படையிலான சக்திகளால் நடத்தப்படும் அரசு உதவிபெறாத கல்வி நிறுவனங்கள பலவற்றிலும் குறிப்பிட்ட வகையான கல்வியை மட்டுமே பிள்ளைகள் பெறுகினறனர். இத்தகைய நிறுவனங்கள் மாண வர்களின் மனதில் மதச்சார்பற்ற அடித்தளத்தை வளர்த்தெடுப்பதற்கு தடைக்கற்களாக மாறி யுள்ளன என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

மதச்சார்பின்மையும் ஜனநாயகமும் நிலவு கின்ற ஒரு சமூகத்தில் தான் நவீன காலத்திற்குப் பொருத்தமான, அவற்றோடு ஒத்திசைவாக உள்ள கண்ணோட்டம் ஒன்றை வளர்த்தெடுக்க இயலும். அதிகமான அளவில் பிற்போக்குத்தன மான நிலைபாடுகளை மேற்கொள்ளும் இனத் தலைவர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் முடியும். திருமணம் செய்து கொள்வதற்கான வயது பற்றிய விஷயத்தில் மேற்கொள்ளப்பட் டுள்ள பிற்போக்குத் தனமான கொள்கை அணுகுமுறைகள் பெண்களின் வாழ்க்கையை மேலும் பின்னுக்குத் தள்ளவே வழிவகுக்கும். இதுபோன்ற முயற்சிகளுக்கு எதிராக நிற்கவும் முடியும்.

விழாக் காலங்களின்போது பல்வேறுபட்ட மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றாகக் கூடுவது என்ற முறையை விரிவுபடுத்துவது அவசியம் என்பதோடு அவற்றை வாழ்க்கையின் முக்கிய தருணங்களாக மாற்றுவதும் அவசியமாகும். திருமணம், இறப்பு போன்ற தருணங்களுக்கு குறிப்பான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு மதத்திலும் வகுப்புவாதத்தையும் தீவிரவாதத்தையும் பிரச்சாரம் செய்கின்றவர் களை தனிப்படுத்த மதநம்பிக்கை கொண்ட அனைவரும் முன்முயற்சி எடுக்க வேண்டும். காந்திஜி, மௌலான அபுல்கலாம் ஆசாத் உள்ளிட்ட விடுதலைப் போராட்டத் தியாகி களின் முன்மாதிரியை முன்வைத்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும். மதத்திற்குள் மறுமலர்ச்சியின் முன்னேற்றத்தை வலுப்படுத்துவதில் முற்போக்கு எண்ணங்கொண்டவர்களின் தலையீடு அவசியமாகும்.

ஒருவர் எந்தவொரு மதத்தை நம்புபவராக இருந்தாலும் சரி, வாழ்க்கையின் பிரச்சனைகள் என்பது அனைவருக்கும் பொதுவானதே. அவற் றைக் கையிலெடுத்து, முன்னே அடிவைத்துச் செல்லும் போது தான் பொதுப் பிரச்சனைகளில் ஒற்றுமையை உறுதிப்படுத்த முடியும். இத்தகைய ஒன்றுபட்ட நிலைபாடு மதச்சார்பற்றதொரு சமூகத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும். மார்க்சிஸ்ட் கட்சியானது மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு அவர்களை அணிதிரட்டும் பணியில் ஈடுபட் டுள்ள ஒரு கட்சியாகும். சமூக பிற்போக்கு நிலையை போக்கத் தலையிடும் அதே நேரத்தில் வர்க்க ஒற்றுமையின் அடிப்படையில் மக்களை முன்னெடுத்துச் செல்லவே கம்யூனிஸ்டுகள் பாடுபட்டு வருகிறார்கள். இவ்வழியில் தோழர் இ.எம்.எஸ். முன்வைத்த பாதையையே கட்சி பின்பற்றி வருகிறது. துயரத்தில் ஆழ்ந்துள்ள மக்கள் பிரிவினரின் பிரச்சனைகளில் சிறப்பான கவனம் செலுத்துவதில் கட்சி உறுதியாக உள்ளது. கேரளாவில் தாழ்த்தப்பட்ட – பழங்குடி மக்கள், பெண்கள், சிறுபான்மையினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் முன்னேறிய இனத் தவரில் பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட பிரினிர் போன்ற அனைவருமே பல்வேறு வகையான பிரச்சனைகளை எதிர்கொண்டே வருகின்றனர். அவற்றை சிறப்பான முறையில் காணவும் இயலும். இவ்வகையில் முஸ்லீம் பிரிவினரின் பிரச்சனைகளை கையாள கட்சி எப்போதுமே போதிய கவனம் செலுத்தி வந் துள்ளது.

சிறுபான்மையினரின் நலனுக்கான தலையீடுகள்

சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த மக்கள் எதிர் கொள்ளும் இடையூறுகளை கையிலெடுத்து தொடர்ந்து தலையிட்டு வந்த ஒரே இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம் மட்டுமே ஆகும். இந்தி யாவிலேயே முதன் முறையாக, 1957இல் முஸ்லீம் களுக்கு ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது கம்யூனிஸ்டுகளின் தலைமையில் கேரளத்தில் அமைந்த அரசு தான். அது அறிமுகப்படுத்திய நிலச்சீர்திருத்தங்களின் விளைவாக முஸ்லீம் குத்தகைதாரர்களுக்கு நிலத்திற்கான உரிமை கிடைத்தது. இடதுசாரி அரசின் தலையீட்டின் விளைவாகவே அவர்கள் நிதி நிலைமை பெரு மளவிற்கு முன்னேற்றம் கண்டது. 1967இல் அமைந்த இடதுசாரி அரசு தான் முஸ்லீம் சிறுபான்மையினர் தங்களது பிற்பட்ட நிலை யிலிருந்து மீள உதவும் வகையில் மலப்புரம் மாவட்டத்தை உருவாக்கியது. மலப்புரத்திலேயே ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்குவதிலும் தலைமை தாங்கியது. முஸ்லீம் மக்களைப் பொறுத்த வரையில் இடதுசாரி அரசுகளின் தலையீடுகளின் விளைவாக பொதுக் கல்வி, பொது சுகாதாரம் போன்றவற்றில் சாதகமான விளைவுகள் ஏற்பட்டன. இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரிடையே நிலவும் பொதுவான பிற்பட்ட தன்மையை பற்றியும், சிறுபான்மை யினரின் பிரச்சனைகள் குறித்தும் ஆய்வு செய்ய சச்சார் கமிட்டி நியமிக்கப்பட்டது. அதனடிப் படையில் மாநிலத்திலுள்ள பிரச்சனைகளை ஆராய்ந்து, அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக் கைகளை மேற்கொண்டது இடது ஜனநாயக முன்னணி அரசு தான்.

அவர்கள் எந்த சாதியை, மதத்தை சேர்ந்தவர்க ளாக இருந்தாலும் அல்லது எந்தப் பிரிவிலும் சேராதவர்களாக இருந்தாலும் மக்களின் பிரச் சனைகளை கையிலெடுத்துச் செயல்பட்டு வரும் மார்க்சிஸ்ட் கட்சி, சாதி அல்லது மதத்தின் பெய ரால் மோதல்களைத் தூண்டி விட முயற்சிக்கும் பிற்போக்குவாதிகளின் தலையீடுகளை அகற்ற முனைகிறது. கட்சியின் செயல்பாடு என்பதே மதச்சார்பின்மையின் முக்கிய தூணாக மாறி யுள்ளது. மதச்சார்பற்றதொரு சமூகத்தை உறுதிப் படுத்த வேண்டுமெனில் இடதுசாரி இயக்கம் வலுப்படுத்தப்பட வேண்டும். சிறுபான்மை பிரிவுகளை பாதுகாக்க இடதுசாரிகளின் வளர்ச்சி அத்தியாவசியமான ஒன்று என்பதும் உணரப்பட வேண்டும்.

சிறுபான்மை மக்களைப் பொறுத்தவரையில் மதச்சார்பற்றதொரு சமூகம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இதுபோன்ற ஒரு சமூகத்தை வலுப்படுத்துவதற்கு பதிலாக முஸ்லீம் மக்களை பொது நடவடிக்கைகளிலிருந்து அகற்றவே வகுப்பவாத, தீவிரவாத அமைப்புகள் முயற்சித்து வருகின்றன. அவர்களின் இத்தகைய செயல்திட்டத்தை எதிர்த்துப் போராட முடியும். முஸ்லீம் லீக்கின் நிலைபாடு என்பது இத்தகைய சக்திகளுடன் சமரசம் செய்து கொள்வதாகவே அமைந்துள்ளது. இந்த பிரிவினரில் வசதிபடைத்தோரின் நலன்களை பாதுகாக்க அவர்கள் மேற்கொள்ளும் தலையீடுகளை இதே பிரிவைச் சேர்ந்த ஏழைகளின் நலன்களுக்கு எதிரானது என்ற உண்மையை வேறுபடுத்திப் பார்ப்பதும் அவசியமாகும்.

ஆங்கில மார்க்சிஸ்ட் இதழ் 30 (ஜனவரி – மார்ச் 2014)ல் வெளியானது.%d bloggers like this: