பாலஸ்தீனப் பிரச்சனை ஓர் அறிமுகம்


தமிழில்: ரகுநாதன்

பாலஸ்தீன அரேபியர்களுக்கும், ஜியானிஸ்ட் எனப்படும் இஸ்ரேலிய யூதர்களுக்கும் இடையே உள்ள பூசல்கள், 19ம் நூற்றான்டின் பின்பகுதியிலிருந்து உருவானவை. இரன்டு குழுக்களும் பல மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்த போதும், (பாலஸ்தீனர்கள், இஸ்லாம், கிறித்துவ, ட்ரூஸ் மதத்தைச் சார்ந்தவர்கள்) மத வேறுபாடுகள் சண்டைக்குக் காரணமானவை அல்ல. சண் டைக்குக் காரணம் நிலப்பரப்பே. முதல் உலகப் போர் முடிவுற்ற காலத்திலிருந்து, 1948 வரை, இரண்டு குழுக்களும் சொந்தம் கொண்டாடி வந்த அந்நிலப்பரப்பு பாலஸ்தீனம் என்று அனைவராலும் அறியப்பட்டு வந்ததாகும். மூன்று மதங்களாலும் (ஒரே கடவுளை வழிபடும் யூத, கிறித்துவ, இஸ்லாமிய மதங்கள்) அப்பகுதியை புனித நிலமாகக் கருதி வந்தன; இருப்பினும் அப்பகுதியை பாலஸ்தீனம் என்றே அழைத்து வந்தன. 1948-49 சண்டைக்குப் பிறகு, அந்நிலப் பரப்பு மூன்று துண்டுகளாகப் பிரிக்கப்பட்டது.: இஸ்ரேல், மேற்குக் கரை (ஜோர்டான் நதியின் மேற்குக் கரை), மற்றும் காஜா துண்டு என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.

அது சுமார் 26,000 சதுர கி.மீ கொண்ட சிறு பரப்பளவுள்ள நிலமாகும். அந்நிலப்பரப்பினை, ஒரே வகையான அரசியல் கட்டுப்பாட்டிற்குள் வைப்பதன் மூலம்,அதன் மீது சொந்தம் கொன் டாடும் போட்டிகளை தீர்க்க முடியாது. யூதர்கள், தங்கள் உரிமைகளை, விவிலியத்தில் அப்ரஹா முக்கும் அவருடைய சந்ததியினருக்கும் கொடுக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு எழுப்புகின்றனர். மேலும் வரலாற்றில் அப்பகுதி, இஸ்ரேல் மற்றும் ஜுடெயா எனப்படும் ராஜ்ஜியங்கள் இருந்த பகுதியாகும்; மேலும் ஐரோப்பிய செமிட்டிச எதிர்ப்பு உணர்வின் காரணமாகவும், யூதர்களுக்கு புகலிடம் ஒன்று தேவைப்பட்டது. பாலஸ்தீன அரேபியர்கள் பலநூற் றாண்டுகளாக வாழ்ந்து வருவதாலும், 1948 வரை மக்கள் தொகையில் பெரும்பான்மை யினராக இருந்து வந்ததாலும், அந்நிலப்பரப்பின் மீது, தங்கள் உரிமையைக் கோருகின்றனர். விவிலிய யுகத்து வாக்குறுதிகள் உரிமையைக் கோருவதற்கு அடிப்படையாக இருக்க முடியாது என்பது அவர்கள் வாதம். அப்படியே விவிலிய வாக்குறுதி களை ஏற்றுக் கொண்டாலும் அப்ரஹாமின் மகனாகிய இஷ்மேல், அரேபியர்களின் மூதாதையர் ஆனதால், விவிலிய வாக்குறுதிப்படி ஆப்ராஹாமின் சந்ததியினருக்கும் அந் நிலத் திலுரிமை உண்டு என்ற வாதத்தின்படி அரேபியர்களுக்கும் உரிமை உண்டு என்பதே அவர் களின் வாதம்.ஐரோப்பியர்கள் யூதர்களுக்கு இழைத்த தீங்குகளுக்கு,தங்களுக்குள்ள உரிமையை விட்டுக் கொடுத்து தாங்கள் நஷ்டஈடு கொடுக்கவேண்டியதில்லை என அவர்கள் கூறுகின்றனர்.

நிலமும் மக்களும்:

பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஐரோப்பாவில் ஏற்பட்ட போக்குகளின் காரணமாக, மக்கள் தங்களை தேச அடிப்படையில், அடையாளம் கண்டு கொள்ள ஆரம்பித்தனர்; அதன்படி தங்கள் தேசிய அடிப்படையில், நாடுகளுக்கான உரிமைகளைக் கோர ஆரம்பித்தனர்; இதில் முதன்மையாக வைக்கப்பட்ட கோரிக்கை, அவர்களுடைய தேச எல்லைக்குள், சுய நிர்ணய உரிமை மற்றும் சுய சர்வ அதிகாரம் கொண்ட, நாட்டை ஆளும் சுய ஆட்சி உரிமையாகும். யூதர்கள் மற்றும் பாலஸ்தீனர்கள் இருவருமே தங்கள் தேசிய உணர்வை வளர்த்துக் கொள்ள ஆரம்பித்தனர். தங்களுடைய தேசிய இலக்குகளை அடைய ஒன்று திரள ஆரம்பித்தனர். யூதர்கள் உலகெங்கிலும் பல இடங்களில் குடியேறிப் பரவிக் கிடந்தனர். எனவே, யூத தேசிய இயக்கம் அல்லது ஜியானிஸ்ட் போக்கு, யூதர்கள் அனைவரும் ஓரிடத்தில் குடியேறி வாழக்கூடிய ஒரு இடத்தைத் தேட ஆரம்பித்தனர். பாலஸ்தீனம், யூதர்களின் பூர்விக இருப்பிடமாக இருந்ததால், இயல்பான தேர்வாக அமைந்தது.1882ல், ஐரோப்பாவிலிருந்து யூதர்கள் பாலஸ்தீனத்துக்கு முதல் அலையாக குடியேறத்துவங்கியதிலிருந்து ஜியோனிஸ்ட் (யூத இன) இயக்கம் துவங்கியது.

அச்சமயம் பால்ஸ்தீனம் துருக்கிய ஓட்டோ மான் பேரரசின் கைவசம் இருந்தது. ஆனால் அரசியல் ரீதியில் ஒரே நிலப்பரப்பாக இல்லை. வட மாவட்டங்களாகிய ஆக்ரே, நப்லுஸ் ஆகியவை பெய்ருட் பிராந்தியத்தின் பகுதியாக இருந்தது. முஸ்லிம்களின் முக்கிய இறைத் தலங்க ளாக ஜெருசேலமும், பெத்லெஹெமும் இருந்த காரணத்தால், ஜெருசேலம் மாவட்டம், ஓட்டோமான் பேரரசின் தலைநகர் இஸ்தான் புல்லின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்பேரரசின் ஆவணங்களின்படி அப்பகுதி அரேபியர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த பகுதியாகும்.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் வரை, பெரும்பான்மையான அப்பகுதி வாழ் யூதர்கள் ஜெருசேலம், ஹெப்ரான், சேஃபெட், டைபி ரியாஸ் போன்ற தங்களுடைய இறைத்தலங்களைச் சுற்றியே வாழ்ந்து வந்தனர். பாரம்பரியமான, பழமையான, மதவழக்கங்களைக் கடைப் பிடித்து வந்தனர். மத நூல்களைப் படித்துக் கொண்டு, உலக யூத இனத்தின் தர்ம காணிக்கை களை நம்பி வாழ்ந்து வந்தனர். இந்த நிலப்பரப் பின் மீது அவர்களுடைய பிடிப்பு என்பது மத சம்பந்தப்பட்டதாக இருந்ததே தவிர தேச உணர்வை அடிப்படையாகக் கொண்டிருக்க வில்லை. ஐரோப்பாவில் தோன்ரி பாலஸ் தீனத்துக்குக் கொண்டுவரப்பட்ட ஜியானிஸ்ட் இயக்கத்துக்கு ஆதரவாக அவர்கள் இல்லை. ஐரோப்பாவிலிருந்து குடியேறிய யூதர்கள் மதச் சார்பற்ற வாழ்க்கை முறையைப் பின்பற்றி வாழ்ந்தனர்; அவர்களுடைய நோக்கமென்பது நவீன யூத நாடு ஒன்றை உருவாக்கி சுதந்திரமான யூத அரசை நிறுவுவதுதான். முதல் உலகப்போர் துவங்கிய காலத்தில், 1914ல், பாலஸ்தீனத்தில் வாழ்ந்த யூதர்களின் எண்ணிக்கை 36,000 த்திலிருந்த்து 60,000 ஆக உயர்ந்தது. அதே சமயத்தில் அரேபிய மக்கள் தொகை 6,83,000 ஆகும்.

பாலஸ்தீனத்தில் பிரிட்டனுக்கு வழங்கப்பட்ட உரிமையாணைகள்:

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், பாலஸ்தீனப் பகுதி, நிலத்துக்கான உரிமைப் போட்டிகளும், பல்வேறு போட்டி அரசியல் போக்குகளும் நிறைந்த இடமாக இருந்தது. ஓட்டோமான் அரசு பலவீனமடையத் துவங்கி யிருந்தது. ஐரோப்பாவின் வலிமை மிக்க நாடுகள் தங்கள் பிடியை, பாலஸ்தீனம் உள்ளிட்ட கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதியில் நிலை நாட்டிக் கொண்டிருந்தனர். முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்த போது, 1915-16ல், பிரிட்டன் தன்னுடைய எகிப்திய தூதர் மக்மகோன் மூலம் அரேபியத் தலைமையுடன், ரகசிய உடன் படிக்கை ஒன்றை செய்து கொண்டது; அதன்படி அரேபியர்களின் தலைவரான ஹுசைன் இபின் அலியை ஓட்டோமான் பேரரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டியது. ஓட்டோமான் அரசோ, போரில் பிரிட்டன் மற்றும் ஃப்ரான் சுக்கு எதிராக ஜெர்மனியுடன் கைகோர்த்துக் கொண்டிருந்தது. அரேபியர்கள், போரில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்த தால் ஓட்டோமான் அரசுக்குக் கீழிருந்த அரபுப் பகுதிகளில், பாலஸ்தீனம் உள்ளிட்ட பகுதிகளில், ஹசேமைட் குடும்ப ஆட்சியின் கீழ் (ஹுசைன் இபின் அலியின் குடும்பம்) சுதந்திரமான அரேபிய நாடு அமைய உறுதியளிக்கும் என்பதே அந்த ரகசிய உடன்பாடு. ஹுசைனின் மகன் ஃபாய்சலும், லாரன்ஸ் ஆஃப் அரேபியா என்றழைக்கப்பட்ட டி.இ லாரன்சும், அரேபியக் கிளர்ச்சியின் உதவியுடன், ஓட்டோமான் பேரரசை முறியடித்தனர்; முதல் உலகப் போரின் கால கட்டத்தில், பிரிட்டன் அப்பகுதியின் பெரும்பகுதியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

அதேசமயம் பிரிட்டன் ஹுசைன்-மக்மகோன் உடன்படிக்கைக்கு முரணான பல வாக்குறுதி களை மற்றவர்களுக்குத் தந்தது. 1917ல் பிரிட் டனின் வெளியுறவு மந்திரி, ஆர்துர் பால்ஃபோர், 1917ல், பாலஸ்தீனத்தில் யூத தேசிய நாடு அமைப்பதற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். இதற்கு பால்ஃபோர் அறிக்கை என்று பெயர். மூன்றாவதாக், ஃப்ரான்ஸ் நாட்டுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை பிரிட்டன் செய்து கொண் டது; அதற்கு சைகெஸ்-பைகோட் ஒப்பந்தம் என்று பெயர்; அதன்படி, ஓட்டோமான் பேரரசு கைவசமிருந்த பகுதிகளில் அரேபியப் பகுதி களைப் பிரித்தெடுத்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதே பிரிட்டன் மற்றும் ஃப்ரான் சின் நோக்கமாகும்.

போருக்குப்பின் லீக் ஆஃப் நேஷன்ஸ் எனப்படும் உலக நாடுகள் சபையில் தங்கள் ஆதிக்கத் தைப் பயன்படுத்தி, அதன் நம்பிக்கையைப் பெற்று, ஓட்டோமான் பேரரசின் கட்டுப் பாட்டில் இருந்த பகுதிகளின் மேல் தங்களுடைய அரைக் காலனிய அதிகாரத்தை அவர்கள் நிறுவிக் கொண்டனர். அங்கிருந்த பிரிட்டிஷ் மற்றும் ஃப்ரான்ஸின் அதிகாரத்துக்கு மேன் டேட்ஸ் என்று பெயர். ஃப்ரான்ஸ் சிரியா மீது தன் அதிகார உரிமையை பெற்றது; அதிலிருந்து சிறிது கிறித்துவ பெரும்பான்மை கொண்ட லெபனான் பகுதியைப் பிரித்தெடுத்தது. பிரிட்டனுக்கு இராக் பகுதி மீதும் தற்போதைய இஸ்ரேல், மேற்குக் கரை, காஜா துண்டு ஜோர்டான் பகுதிகள் மீது உரிமை கிடைத்தது. 1921ல் பிரிட்டன் இப்பகுதிகளை இரண்டாகப் பிரித்தது; ஜோர்டான் நதிக்குக் கிழக்கே உள்ள பகுதி, ஃபாய்சலின் சகோதரர் அப்துல்லாவால் ஆளப்படும், எமிரேட் ஆஃப் ட்ரான்ஸ் ஜோர்டான் பகுதியாயிற்று. ஜோர்டான் நதியின் மேற்குப் பகுதி பாலஸ்தீன மேன்டேட் ஆயிற்று. நவீன வரலாற்றுக் காலத்தில் முதன் முறையாக பாலஸ்தீனம் ஒன்றுபடுத்தப்பட்ட அரசியல் உருவம் பெற்ற பகுதியாயிற்று. அப்பகுதி முழுவதும் இருந்த அரேபிய மக்கள் பிரிட்டனிடம் கடுங்கோபம் கொண்டனர். வாக்குறுதி தந்தபடி, சுதந்திரமான அரேபிய நாட்டை அங்கு உரு வாக்குவதில் பிரிட்டன் தவறியதே அக்கோபத் துக்குக் காரணம். அவர்களுடைய சுய நிர்ணய உரிமை மீறப்பட்டதால், பிரிட்டிஷ் ஃப்ரெஞ்சு அதிகாரத்தை பலர் எதிர்த்தனர். பாலஸ்தீனத்தில், நிலைமைகள் மேலும் சிக்கலாயின; பிரிட்டன், பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கென்று நாடு அமைக்கும் வாக்குறுதியைக் கொடுத்திருந்தது. அலை அலையாக யூதர்கள் குடியேறத் துவங்கினர்; நிலங்கள் வாங்கப்பட்டு அதிக எண்ணிக்கையில் யூதர்கள் குடியேறத் துவங்கினர். இந்த நடவடிக்கைகள் பாலஸ்தீன விவசாயிகள், பத்திரிகையாளர்கள், மற்றும் அரசியல் பிரமுகர் களால் எதிர்க்கப்பட்டன. யூதர்களின் வருகை எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க பாலஸ் தீனத்தில் யூதர்களின் நாடு அமைக்கப்படும் என்ற அச்சம் எழுந்தது. பாலஸ்தீன அரேபியர்கள் அவர்களுடைய சுய ஆட்சி உரிமை மறுக்கப் பட்டதால் பிரிட்டிஷ் அதிகாரத்தை எதிர்த்தனர். அவர்களுடைய நிலை பாதிக்கப்பட்டதால் யூதர்களின் அதிக எண்ணிக்கையிலான வருகை யையும் எதிர்த்தனர்.

1920-21ல் அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே மோதல்கள் நிகழ்ந்தன; அவற்றில் இரு இனத்தவரும் சம எண்ணிக்கையில் கொல்லப்பட்டனர். 1920ல் நிலங்கள், அங்கு குடியில்லாத நில உடைமையாளர்களிடம் யூதர்களின் தேசிய நிதியத்தால்வாங்கப்பட்டு, குடியிருந்த அரேபியக் குடியானவர்கள் வெளியேற்றப்பட்டனர்; இத்தகைய இடம் பெயர்ப்புகள், பதட்ட நிலைமைகளை அதிகரிக்கச் செய்தன; யூதக் குடியேறிய வர்கள் அரேபிய குத்தகைதாரர்கள் ஆகியோரிடையே வன்முறையுடன் கூடிய மோதல்கள் ஏற்பட்டன.

1928ல், ஜெருசெலத்தில் இருந்த இஸ்லா மியர்களும் யூதர்களும் மேற்கத்திய சுவர் எனப் படும் புலம்பல் சுவர் குறித்து மோதிக் கொண்ட னர். இரண்டாவது யூதக் கோயிலின் மிச்சமாக இருக்கும் அந்தச் சுவர் யூத மத பாரம்பரியத்தின் படி, மிகவும் புனிதமானதொன்றாகும். சுவருக்கு மேலே இருந்த வளாகம் மலைக் கோயிலாகும்; இரண்டு இஸ்ரேலிய கோயில்களின் இருப்பிடமாகும்; (முதல் கோயிலுக்கான தொல்பொருட் சான்று எதுவும் இல்லை). இஸ்லாமியர்களுக்கும் அந்த இடம் புனிதமானதாகும்; அதை அவர்கள் மேன்மை மிகு புகலிடம் என்று அழைக்கின்றனர். அங்குதான் அல்-அக்ஸா பள்ளிவாசலும் பாறை குவிமாட பள்ளிவாசலும் உள்ளன. அங்கிருந்து தான் முஹம்மது நபி (ஸல்) சொர்க்கத்துக்கு பறக்கும் குதிரையேறிச் சென்றதாக இஸ்லாமி யர்கள் நம்புகின்றனர்.

1929ம் ஆண்டு பேடார் யூத இளைஞர் இயக்கம் ஆர்ப்பாட்டம் செய்து, மேற்கத்திய சுவரின் மீது ஜியானியக் கொடியை ஏற்றியது; தங்களின் மேன்மை மிகு புகலிடம் அபாயத்தில் இருப்பதாகக் கருதிய இஸ்லாமியர்கள், ஜெரு செலம் ஹெப்ரோன், சஃபேத் ஆகிய இடங்களில் யூதர்களைத் தாக்கினர்; பலர் கொல்லப்பட்ட னர்; பலர் காயமடைந்தனர்; ஹெப்ரோனில் யூதர்கள் இல்லை என்ற நிலை உருவாயிற்று; இக்கலவரத்தில் பல முஸ்லிம் குடும்பங்கள் அண்டையிலிருந்த பல யூதக் குடும்பங்களைக் காப்பாற்றினர்.

ஐரோப்பிய யூதக் குடியேற்றம், ஜெர்மனியில் 1933ல் ஹிட்லரின் வெற்றிக்குப் பிறகு, வெகுவாக அதிகரித்தது; புதிய நில வாங்கல்களும், குடியேற் றங்களும் ஏற்பட்டன.பிரிட்டிஷ் ஆதிக்கத் துக்கும் யூதக் குடியேற்றத்துக்கும் பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட எதிர்ப்புகள், 1936-39 காலத்தில் அரேபிய கிளர்ச்சிக்கு இட்டுச் சென்றது; அக்கிளர்ச்சியை யூத மதவெறிக் கும்பல்கள் உதவியுடனும், அண்டை அரேபிய ஆட்சிகளின் உதவியுடனும் பிரிட்டன் அடக்கி ஒடுக்கியது. பதட்டம் மிகுந்த அப்பகுதியில் ஒழுங்கைக் கொண்டு வரும் நோக்கத்தில் தன் ஆட்சிக் கொள்கைகளை பிரிட்டன் மறு ஆய்வு செய்தது. 1939ல் கொள்கை அறிக்கை ஒன்றை வெளி யிட்டது; அதன்படி எதிர்கால யூத வருகைகளும் நில வாங்கல்களும் கட்டுப்படுத்தப்படும்; பத்து வருடங்களுக்குள் அமைதி நிலை நாட்டப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அது நடந்திருந்தால், அரேபியர்கள் பெரும்பான்மையாக இருந்திருக்கும் பாலஸ்தீன அரசு உதயமாயிருக்கும். யூத இன வெறியர்கள் இவ்வறிக்கையை, பால்ஃபோர் அறிக்கைக்கு இழைக்கப்பட்ட நம்பிக்கைத் துரோகமாகக் கருதினர்; குறிப்பாக யூதர்கள் ஐரோப்பாவில் அழிவை எதிர்கொன்டிருக்கும் நேரத்தில் அதிர்ச்சியளிக்கும் செயலாக அவ் வறிக்கையைக் கண்டனர். அவ்வறிக்கை பிரிட்டிஷ் யூத இனக் கூட்டணியை முடிவுக்கு கொண்டு வந்தது. அதேசமயத்தில் அரேபியர்களின் கிளர்ச்சி அடக்கி ஒடுக்கப்பட்டதும் பாலஸ்தீனத் தலைவர்கள் அப்பகுதியிலிருந்து நாடு கடத்தப்பட்டிருந்ததும், பாலஸ்தீனத்தின் தலைவிதியை நிர்ணயித்த அப்பத்தாண்டு காலத்தில் பாலஸ்தீனர் களை அரசியல் ரீதியாக சிதறடிக்கச் செய்திருந்தது.

ஐ.நாவின் பிரிவினைத் திட்டம்:

இரன்டாம் உலகப் போரைத் தொடர்ந்து, அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையேயும், யூத தன்னார்வப் படையினருக்கும் பிரிட்டி ஷாரின் ராணுவத்துக்கும் இடையே பகைமைகள் அதிகமாயின. பிரிட்டன் தனக்கு அளிக்கப்பட்டிருந்த ஆட்சி உரிமையை கைவிட முன் வந்தது; அண்மையில் உருவாக்கப்பட்டிருந்த ஐ.நா சபை பாலஸ்தீனத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டுமென்று கூறியது. உண்மையில் பிரிட்ட னின் எதிர்பார்ப்பெல்லாம் ஐ.நா சபையால் செயல்படுத்தக் கூடிய திட்டத்தை உருவாக்க முடியாதென்றும், அப்பகுதியின் ஆட்சியதிகாரத்தை பிரிட்டனுக்கே திரும்பத் தந்துவிடுமென்றும் இருந்தது. ஐ.நா-வால் அமைக்கப்பட்ட கமிட்டி நிலைமையைக் கண்டறிய பாலஸ்தீனத் துக்குச் சென்றது. கமிட்டியின் உறுப்பினர்கள் அரசியல் தீர்வின் வடிவத்தில் கருத்து மாறுபாடு கொண்டிருந்தாலும், அப்பகுதி பிரிவினை செய்யப்பட்டு இரு தரப்பினரின் தேவைகளையும் கோரிக்கைகளையும் பூர்த்தி செய்ய வேண்டு மென்று முடிவு செய்தது. 1946 இறுதியில், 1,269,000 அரேபியர்களும், 608,000 யூதர்களும் பால்ஸ்தீனப் பகுதிக்குள் வாழ்ந்து வந்தனர். யூதர்கள், அப்பகுதியின் 7 சதவீத நிலப் பரப்பை வாங்கியிருந்தனர்; ஆனால் இது பயிரிடப்படக் கூடிய நிலப்பரப்பில் 20 சதவீதமாகும்.

1947, நவம்பர் 29 அன்று ஐ.நா பாலஸ்தீனத்தை, யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் முறையே இரு பகுதிகள் கிடைக்கும் வகையில் பிரிவினை செய்ய முடிவு செய்தது. இரு பக்கமும் மாற்று இனத்தார் இருக்கும் குடியேற்றங்கள் இருந்த போதும் இரு பகுதிகளும் பெரும்பான்மை இன அடிப்படையில் பிரிக்கப்பட்டிருந்தன. யூதர் களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலப் பகுதி, பரப் பளவில், அரேபியர்களின் நிலப்பகுதி பரப்பளவை விட சற்று அதிகமாக (முறையே 56 சதவீதம், 43 சதவீதம் என்ற அளவில் ஜெரு செலத்தை தவிர்த்து) பிரிக்கப்பட்டிருந்தது; யூதர்களின் வருகை இன்னும் அதிகமாகக் கூடும் என்ற அடிப்படையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐ.நாவின் திட்டப்படி, ஜெரு செலமும் பெத்லேஹெமும் சர்வதேசப் பகுதிகளாக ஆக்கப்படும்.

பொது வெளியில் யூத இனத்தவர், இப்பிரி வினைத் திட்டத்தை ஏற்றுக் கொண்டனர்; ஆனால், யூத நாட்டுக்கு வரைமுறை செய்யப் பட்டிருந்த எல்லைகளை எந்த வகையிலாவது விரிவுபடுத்தவே அவர்கள் நம்பிக்கை கொண்டி ருந்தனர். பாலஸ்தீன அரேபியர்களும் சுற்றி யிருந்த அரேபிய நாடுகளும் இத்திட்டத்தை ஏற்க மறுத்தன; அவர்கள், ஐ.நா. பொதுக்குழுவின் வாக்கெடுப்பு முடிவு தங்களுக்கு இழைக்கப்பட்ட சர்வதேச நம்பிக்கைத் துரோகமென்று கருதினர். மேலும், பெரும்பான்மை அரேபியரின் கருத்தைப் புறந்தள்ளிவிட்டு பிரிட்டன் தந்த அனுமதியி னாலேயே, பெருமளவு யூத இனக் குடியேற்றம் செய்யப்பட்டதென்றும், யூதர்களின் நாட்டை உருவாக்கும் சர்வதேச செயல்திட்டம் அதனால் தான் உருவாக்கப்பட்டதென்றும் கருதினர்.

அரேபியர்களுக்கும் குடியேறிய யூத இனத் தவர்களுக்கும் இடையே சண்டைகள் ஐ.நா வில் பிரிவினைத் திட்டம் ஏற்கப்பட்டவுடன் ஆரம்ப மாயின. அரேபிய ராணுவப்படைகள் சீரான முறையில் அமைக்கப்பட்டிருக்கவில்லை; பயிற்சி யும் போதுமான அளவில் இல்லை; ஆயுதங் களும் போதுமான அளவு அவர்களிடமில்லை. இதற்கு மாறாக, யூத ராணுவப் படைகள் எண் ணிக்கையில் குறைவாக இருந்தாலும், சீரான முறையில் இயங்கியதுடன் அவர்கள் சிறந்த பயிற்சி உடையவர்களாகவும், ஆயுதங்கள் கொண்டவர்களாகவும் இருந்தனர். ஏப்ரல் 1948 துவக்கத்தில் ஐ.நா திட்டத்தின்படி ஒதுக்கப்பட்டிருந்த பகுதிகளை யூத இனப் படைகள், கைப் பற்றியிருந்தன; சில பகுதிகளில், பிரிவினை எல்லைகளையும் தாண்டி, இடங்களைப் பிடித் திருந்தனர். 1948, மே 15 அன்று பிரிட்டன் பாலஸ் தீனத்தைக் காலி செய்தது; யூத இனத் தலைவர் கள் யூத நாடாகிய இஸ்ரேல் அமைக்கப்பட்ட தாக அறிவித்தனர். அண்டை அரேபிய நாடு களான, எகிப்து, சிரியா, ஜோர்டான், இராக் ஆகியவை, பால்ஸ்தீனத்தை யூதர்களிடமிருந்து காப்பாற்றுவதாகக் கூறிக் கொன்டு இஸ்ரேலைத் தாக்கின; லெபனான் சண்டையை அறிவித் திருந்த போதும் தாக்குதல் தொடுக்கவில்லை. உண்மையில் அரபு நாடுகளுக்கும் பாலஸ்தீனத் தின் பகுதிகள் மிது கண் வைத்திருந்தன; மேலும் பாலஸ்தீன நாடு உருவாவதை யூத இனத்தவர் போன்றே அவர்களும் விரும்பவில்லை. 1948, மே, ஜூன் மாதங்களில் சண்டை தீவிரமாக இருந்த போது, அப்போரின் முடிவு எப்படி முடியு மென்பது ஐயத்துக்கிடமாகவே இருந்தது. ஆனால், செக்கோஸ்லோவேகிய நாட்டிலிருந்து ராணுவ ஆயுதங்கள் இஸ்ரேலுக்கு கிடைத்தவுடன், அப்படைகள் கை மேலோங்கி, ஐ.நா திட்டத்துக்கும் அதிகமான கூடுதல் பகுதிகளைக் கைப்பற்றின. 1949ல் இஸ்ரேலுக்கும் அரேபிய நாடுகளுக்குமிடையே போர்நிறுத்த ஒப்பந்தங் கள் ஏற்பட்டன. பால்ஸ்தீனம் என்றறியப் பட்டிருந்த நாடு இப்போது மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது; ஒவ்வொன்றும் வெவ்வேறு ஆட்சியதிகாரத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இவற்றுக்கிடையே இருந்த எல்லைகள் 1949 போர் நிறுத்த எல்லைகள் என்று அறியப்பட் டன.இஸ்ரேல் என்னும் நாடு 77 சதவீதப் பகுதியைக் கொண்டிருந்தது; ஜோர்டான் கிழக்கு ஜெருசேலத்தையும் மத்திய பாலஸ்தீனத்தின் குன்றுப் பகுதியான மேற்குக் கரையையும் தன் வசம் வைத்துக் கொண்டது. எகிப்து, கடற்கரைச் சமவெளிப் பகுதியான காஜாப் பகுதியை தன் வசம் எடுத்துக் கொண்டது. எனவே ஐ.நா வகுத்த பிரிவினைத் திட்டத்தின் படி, பாலஸ்தீனம் என்னும் நாடு அமைக்கப்படவேயில்லை.

பாலஸ்தீன அகதிகள்

1947-49 போர்களின் விளைவாக 7,00,000 பாலஸ்தீனிர்கள் அகதிகளானார்கள். சரியான எண்ணிக்கையைக் கணிப்பதில் கருத்து வேறு பாடுகள் இருந்தன; நாட்டை யூதர்கள் அல்லாத மக்கள் கொண்ட நாடாக மாற்றும் யூத இனத் திட்டத்தின்படி தாங்கள் வெளியேற்றப்பட்டதாக பல பாலஸ்தீனர்கள் கூக்குரலிட்டனர். அதிகாரப் பூர்வ இஸ்ரேலிய நிலையோ, அவர்கள், அரேபிய அரசியல் மற்றும் ராணுவ தலைவர்களின் ஆணைக்கிணங்கவே வெளியேறினர் என்ப தாகும். இஸ்ரேலிய ராணுவ உளவறிக்கை ஒன்றின்படி, ஜூன் 1948 வாக்கில், 75 சதவித அகதிகள், யூத ராணுவக் கும்பல்களின் ராணுவ நடவடிக்கைகள் காரணமாகவும், அரேபியர் களை வெளியேறத்தூண்டும் உளவியல் அச் சுறுத்தல்கள் காரணமாகவும், நேரடி (குண்டுக் கட்டாக நடத்தப்பட்ட) வெளியேற்றங்கள் காரணமாகவும், அரேபியர்கள் வெளியேறிய தாகக் கூறுகின்றது. இதில் குண்டுகட்டு வெளி யேற்றங்களில் அதிகமானதாக நடந்தது, ஜூலை 1948ல், லிட்டாவிலும் ராம்லே யுலும்தான்; இங்கு 50,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.எனவே நாடு முழுவதும் வெளியேற்றப்பட்டவர்கள் விகிதம் அதிகமாகவே இருக்கும். 5 சதவீதம் மக்கள் மட்டுமே அரேபிய தலைமையின் ஆணைக் கிணங்க வெளியேறியவர்கள் ஆவர். பல கொலை நிகழ்ச்சிகள் குறித்து நன்கு பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் உள்ளன; அவற்றின் காரணமாக அரேபிய இஸ்ரேலிய சண்டைகள் நிகழ்ந்தன. ஜெருசேலம் அருகெ டேர் யாசின் என்னும் கிராமத்தில் யூத இன வலது சாரி ராணுவக் கும்பலால், சுமார் 125 அரேபியர்கள் கொல்லப் பட்டது மிகவும் இழிந்த அக்கிரமச் செயலாக பதிவாகியுள்ளது.

பாலஸ்தீனியர்கள்

இன்றைய நிலையில் இச்சொல்லாடல், அரேபியர்களை கிறித்துவ இஸ்லாமிய ட்ரூஸ் மதங்களைச் சார்ந்தவர்களைக் குறிக்கின்றது; இப்பகுதியுடன் உள்ள அவர்களுடைய வர லாற்று ரீதியான வேர்களை பிரிட்டன் மேன்டேட் பகுதியின் எல்லைக்கோடுகளை வரையறை செய்யும் ஆவணங்களில் காண முடியும். தற்போது 56 லட்சம் பாலஸ்தீனர்கள் அப்பகுதியில் வாழ்கின்றனர்; அப்பகுதி முன்பு கண்டபடி மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட் டுள்ளது. பின்னாளில் பல பகுதிகள் 1967ல் இஸ்ரேலால் கைப்பற்றப்பட்டவையாகும். இன்று 14 லட்சம் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் குடிமக்கள் ஆவர். அவர்கள் 1949 போர் நிறுத்த எல்லைக்குள் வாழ்பவர்கள் ஆவர். இவர்கள் மொத்த மக்கள் தொகையில் 20 சதவிகிதம் ஆவர். 26 லட்சம் பேர் மேற்குக் கரையிலும் (கிழக்கு ஜெருசேலத்தில் உள்ள 2 லட்சம் பேர்கள் உள்பட), 16 லட்சம் பேர் காஜா பகுதியிலும் உள்ள னர். மீதமிருக்கும் 56 லட்சம் பேர் நாடோடிகளாக தங்களுடைய சொந்த நாடென்று கூறிக் கொள்ளும் நாட்டை விட்டு வெளியே வாழ்ந்து வருகின்றனர்.

இதில் அதிகமாக வெளி நாட்டில் வாழும் பாலஸ்தீனர்கள் ஜோர்டான் நாட்டில் வசிப் பவர்களேயாவர். சுமார் 27 லட்சம் பேர் அங்கு வாழ்கின்றனர். பலர், 1949ல் அமைக்கப் பட்ட அகதிகள் முகாமிலேயே வாழ்ந்து வருகின்றனர். லெபனான், சிரியா நாடுகளிலும் அதிகம் பாலஸ்தீனர்கள் அகதிகள் முகாமில் உள்ளனர். பல பாலஸ்தீனர்கள் சவுதி அரேபியா வுக்கும், வளைகுடா நாடுகளுக்கும் வேலை தேடி இடம் பெயர்ந்துள்ளனர்; சிலர் உலகின் பல நாடுகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளனர். ஜோர்டான் மட்டுமே அங்கு வாழும் பாலஸ்தீனர் களுக்கு குடிஉரிமை வழங்கியுள்ளது. அரேபிய நாடுகளில் வாழும் பாலஸ்தீனர்களுக்கு அவர்கள் வாழும் நாட்டின் குடிமகன்களுக்குள்ள உரிமை கள் கிடைப்பதில்லை; லெபனானில் வாழும் அகதி களின் நிலைமை மோசமானதாகும். லெபனானை சின்னாபின்னப்படுத்திய 1975-1991 காலகட்ட உள்நாட்டுச் சண்டைகளுக்கு பாலஸ் தீனர்களையே லெபனான் நாட்டு மக்கள் பழி சுமத்துகின்றனர்.தங்கள் நாட்டில் அமைதியை ஏற்படுத்த அந்த அகதிகளை வேறெங்காவது குடியமர்த்த வேன்டுமென்ற கோரிக்கையை அவர்கள் எழுப்புகின்றனர். லெபனானின் கிறித்துவ மக்கள், பால்ஸ்தீன இஸ்லாமியர்களை வெளியேற்றி, வேறெங்காவது குடியமர்த்த வேன்டுமென்று விரும்புகின்றனர். காரணம், மதக் குழுக்களிடையே மிகச் சன்னமாக இருக்கும் சம நிலைக்கு அவர்களால் ஆபத்து உண்டாகும் என்று அவர்கள் நினைப்பதே இதற்குக் காரணம். சிரியாவில் இருக்கும் பாலஸ்தீனர்கள், அங்கு 2011 முதல் ஏற்பட்டுள்ள வன்முறை மற்றும் நெருக் கடியில் சிக்கியுள்ளனர். பாலஸ்தீனர்கள் அகதி கள் முகாம்களிலும் சேரிகளிலும் வாழ நேரிட்ட போதும், பலர் பொருளாதார ரீதியாக வெற்றி யடைந்துள்ளனர். அரேபிய உலகத்தில், மிக அதிக எண்ணிக்கையில் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு பெறுபவர்கள் பாலஸ்தீனர்களே. வெளிநாடுகளில் வாழும் அவர்களுடைய சூழ்நிலைகள் அவர்களை பல பகுதிகளிலும் அரசியல் உணர்வு பெற்றவர்களாக ஆக்கியுள்ள தென்ற போதிலும், அப்போக்கு 2000 வாக்கில் சற்றே மங்கத் தொடங்கியுள்ளது; அரசியல் குழு மனப்பானமையும் அதிகரித்துள்ளது. இதனால் பாலஸ்தீனநாட்டின் தோற்றம் கண்ணிலிருந்து மறைந்துள்ளது.

இஸ்ரேல் நாட்டு பாலஸ்தீன குடிமக்கள்

1948-ல் 1,50,000 பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் என்னும் அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் தங்கினர். அவர்களுக்கு இஸ்ரேலிய குடியுரிமை வழங்கப்பட்டது; வாக்குரிமையும் அளிக்கப்பட்டது. ஆனால் பல வகையிலும் அவர்கள் இரண்டாந் தர குடிமகன்களாகவே இருந்தனர். காரணம், இஸ்ரேல் தன்னை யூத மத நாடாகவும் , அது யூத மக்களின் நாடாகவும், பாலஸ்தீனர்களை யூதர்கள் அல்லாதவர்களாகவும் வரையறுத்துக் கொள்வதுதான். 1966 வரை பெரும்பான்மையான பாலஸ்தீனர்கள் ராணுவ அரசாங்கத்தின் கீழ் இருந்தனர். அவர்களுடைய நடமாட்டத்தில் கட்டுப்பாடுகள் இருந்தன. உரிமைகளும் மறுக்கப் பட்டிருந்தன. (வேலை செய்யும் உரிமை, பேச் சுரிமை, கூடும் உரிமை). அரேபியர்கள், 1965 வரை, ஹிஸ்டாட்ரூட் என்னும் இஸ்ரேலிய தொழிற் சங்கத்தின் முழு உரிமை உறுப்பினர்களாக அனுமதி இல்லை; அவர்களுடைய நிலங்களில் 40 சதவீதம் பறிமுதல் செய்யப்பட்டு வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டன; ஆனால் அவற்றின் பயன்களை அடைந்தவர்கள் யூதர் களே. பாலஸ்தீனர்களின் கல்விக்கும் ஆரோக் கியத்துக்கும், பொதுச் சேவைகளுக்கும், நகராட்சி செயல்பாடுகளுக்கும் பொருளாதார வளர்ச் சிக்கும் போதுமான ஆதாரங்களை அனைத்து இஸ்ரேலிய அரசாங்கங்களும் வழங்காமல் அரேபியர்களை வேறுபாட்டுடன் நடத்தி வந்துள்ளன.

இஸ்ரேல் நாட்டின் பாலஸ்தீன அரேபியக் குடிமக்கள், தங்களுடைய பண்பாட்டு மற்றும் அரசியல் அடையாளங்களைத் தக்கவைத்துக் கொள்ள கடுமையாகப் போராட வேண்டியுள் ளது. இஸ்ரேல் பாலஸ்தீன அல்லது அரேபிய தேசிய உணர்வுகளை வெளிப்படுத்துவதே சீர் குலைவு வேலைகளாகக் கருதுவதே இதற்குக் காரணம், .1967 வரை, அவர்கள் முழுவதுமாக அரேபிய உலகத்திலிருந்து தனிமைப்படுத்தப் பட்டிருந்தனர்; பெரும்பாலும் இஸ்ரேலில் வசிப்பதால் மற்ற அரேபிய நாட்டவர்களால் துரோகிகளாகக் கருதப்பட்டனர்; 1967 லிருந்து பலர் தங்களுடைய பாலஸ்தீன அடையாளத்தை உணரத் தலைப்பட்டனர். இதன் முக்கிய வெளிப் பாடாக அமைந்தது 1976, மார்ச் 30 அன்று நடந்த நிலம் பாதுகாப்பு நாள் ஆகும்; தொடர்ந்து நடத்தப்படும் நிலப் பறிமுதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,அன்று பொது வேலை நிறுத்தம் நடந்தது. அன்று இஸ்ரேலிப் படைகள் ஆறு அரேபிய இன குடிமக்களை கொன்றன; அனைத்து பாலஸ்தீனர்களும் அந்நாளை தேசிய நாளாக கடைப்பிடிக்கின்றனர்.

அண்மைக் காலங்களில் நக்பா எனப்படும் நாளை கடைப்பிடிப்பது சட்ட விரோதமாக்கப் பட்டுள்ளது; நக்பா என்பது, 1948ல் பாலஸ்தீன அரேபிய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற் பட்டவர்கள் வெளியேற்றப்பட்ட அல்லது வெளியேறிய நிகழ்ச்சியாகும். அரேபிய இன குடிமக்களை இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதிலிருந்து தடுப்ப தற்கு, அவர்களின் கருத்துக்களில் ஆட்சேபகர மானவை என்ற அரசியல் அளவுகளை அந் நாட்டு தேர்தல் கமிஷன் பல முறை பயன்படுத்தியுள்ளது தடை செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளு படி செய்துள்ளது; எனினும் அந்நடவடிக்கைகள் 2000க்குப் பிறகு யூத இன இஸ்ரேலிய மக்க ளிடையே அரேபிய எதிர்ப்பு ணர்ச்சியையும் ஜன நாயக விரோத உணர்வையும் பயங்கரமான அளவில் வளர்ப்பதற்கு பெருந்துணையாக இருந்து வந்துள்ளன.

ஜூன் 1967 போர்

1949க்குப் பிறகு, அரேபிய நாடுகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் நிறுத்தம் இருந்த போதும், பூசல்கள் தொடர்ந்தன; மற் றொரு போர் எப்போது வேண்டுமானாலும் மூளலாம் என்ற நிலையே தொடர்ந்தது. நெருக் கடியின் தன்மை அப்பகுதியில் ஏற்பட்ட ஆயுதப் போட்டியின் காரணமாக பதட்டம் நிறைந்த தாகவே இருந்து வந்தது. அப்பகுதியின் ராணுவங் கள் தங்களுடைய படைகளை போருக்குத் தயார் நிலையில் வைத்திருப்பதில் முனைப்பாகவே இருந்து வந்தன. 1956ல் இஸ்ரேல், பிரிட்டன், ஃப்ரான்சுடன் கூட்டுசேர்ந்து கொண்டு எகிப்தைத் தாக்கியது. பிரிட்டன், ஃப்ரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்த சூயஸ் கால்வாயை எகிப்து தேசியமயமாக்கியதை இல்லாமல் செய்யவும், பால்ஸ்தீனப் படைவீரர்கள் காஜா பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது தாக்குவதை தடுத்து நிறுத்தவும் இத்தாக்குதல் மேற்கொள் ளப்பட்டது.இஸ்ரேலியப் படைகள், காஜாப் பகுதியையும் சினாய் பாலைவனத்தையும் கைப்பற்றின; ஆனால் அமெரிக்க, சோவியத் ரஷ்யா ஆகிய நாடுகளின் சர்வதேச நெருக்கடிகள் காரணமாக போர்நிறுத்த எல்லைக்கு இஸ்ரேல் வாபஸ் வாங்கியது. ஆனால் 1960 துவக்கத்தில் அப்பகுதி அமெரிக்க, சோவியத் ரஷ்ய பனிப் போரின் தீவிர செயல்பாடுள்ள பகுதியாக ஆயிற்று அவ்விரு நாடுகளும் உலகளாவிய அதி காரத்துக்கும் செல்வாக்குக்கும் போட்டி போட ஆரம்பித்தன..

1967 மார்ச் ஏப்ரலில், சோவியத் யூனியன், இஸ்ரேல், சிரியாவைத் தாக்க வட பகுதியில் படைகளைக் குவித்துள்ளதாக தவறான தகவலை அளித்தது. அத்தகைய படைக்குவிப்பு எதுவும் அங்கு இல்லை. ஆனால் சிரியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மோதல்கள் ஒரு வருடமாக நிகழ்ந்த வண்ணமாக இருந்தது. இஸ்ரேலிய தலைவர்கள், சிரியா நாட்டிலிருந்து பாலஸ்தீன கொரில்லாக்கள் இஸ்ரேலைத் தாக்குவதை தடுத்து நிறுத்தாவிட்டால், சிரியா நாட்டு அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டி வருமென்று வெளிப்படையாக அறிவித்தனர்.

சிரியாவின் உதவிக்கான வேண்டுகோளுக் கிணங்கி, மே 1967ல், எகிப்திய துருப்புகள், இஸ் ரேலுடன் எல்லையைக் கொண்டுள்ள சினாய் பாலைவனத் தீபகற்பத்துக்குள் நுழைந்தன. சில நாட்களுக்குப் பிறகு, எகிப்திய அதிபர், கமால் அப்துல் நாசர், இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐ நா கண்காணிப்புப் படைகளை மாற்றி வைக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். பிறகு சினாய் தீபகற்பத்தின் தென் கோடியில் இருக்கும் ஷார்ம்-எல்- ஷெய்க்கை எகிப்தியர்கள் வசப்படுத்திக் கொண்டனர். மேலும், அகாபா வளைகுடாவில் இருக்கும் இஸ்ரேலியத் துறைமுகமான எலியட்டை முற்றுகையிட்டனர். எலியட்டுக்குச் செல்லும் வழி எகிப்துக்குரிய நீர்ப்பரப்பில் உள்ளதாகக் கூறி அம்முற்றுகையை எகிப்து மேற்கொண்டது. இஸ்ரேல் நாட்டு மக்கள் இந்நடவடிக்கைகளால் அச்சமுற்றனர்;தங்களை அடியோடு ஒழித்துக்கட்டவே இம்முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்று அஞ்சினர்.

இத்தகைய ராணுவ மற்றும் ராஜரீக நெருக் கடிகள் தொடர்ந்து கொன்டிருக்கும் போதே, இஸ்ரேல் முன் கூட்டியே எகிப்தையும் சிரியாவை யும் ஜூன் 5, 1967 அன்று தாக்கியது. சில மணி நேரங்களுக்குள்ளேயே அவற்றின் விமானப் படையை அழித்தொழித்தது. காலந்தாழ்த்தி ஜோர்டான் போரில் சேர்ந்து கொண்டது; அதையும் இஸ்ரேல் தாக்கியது. எகிப்திய சிரிய ஜோர்டானியப் படைகள் தோற்கடிக்கப்பட்டன; இஸ்ரேல், ஜோர்டானிடமிருந்து மேற்குப் பகுதி யையும், எகிப்திடமிருந்து காஜா பகுதி, சினாய் பகுதியையும், சிரியாவிடமிருந்து கோலான் ஹைட்ஸையும் கைப்பற்றியது. 1967 போர், வெறும் ஆறு நாட்களுக்கு மட்டுமே நடந்த போராகும்; இஸ்ரேல் தன் வலிமையை நிரூபித்த போராகும். இஸ்ரேலின் வேகமும், திறமையும் அரேபிய நாடுகளுக்கு இழுக்கைத் தேடி தந்தது. இதற்கு மாறாக, 1967க்குப் பிறகு, பாலஸ்தீன தேசிய இயக்கம் முக்கிய செயலாளியாக உருவெடுத்தது. அரசியல் மற்றும் ராணுவக் குழுக்களைக் கொண்ட பாலஸ்தீன விடுதலை அமைப்பாக அது உருவெடுத்தது.

ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானம் 242

1967 போருக்குப் பின் ஐ.நா பாதுகாப்புக் குழு தீர்மானம் 242 ஐ நிறைவேற்றியது. அத்தீர்மானம், பலவந்தமாக நிலப்பகுதிகளைப் பிடிப்பது ஏற்க முடியாதென்று அறிவித்தது; போரில் பிடிக்கப் பட்ட நிலப்பகுதிகளிலிருந்து இஸ்ரேல் பின் வாங்க வேண்டுமென்று கூறியது; அப்பகுதியி லுள்ள அனைத்து நாடுகளும் பாதுகாப்பான அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுடன் அமைதி யாக இருக்க வேண்டுமென்றும் கூறியது. அத்தீர்மானத்தின் ஃப்ரெஞ்சு மொழி வாசகம் “THE TERRITORIES” என்றும் ஆங்கில மொழி வாசகம் வெறும் TERRITORIES என்றும் இருந்ததே குழப்பத் துக்குக் காரணமாயிற்று. அமெரிக்காவும் இஸ்ரே லும் ஆங்கில வாசகத்தின் துணை கொண்டு தீர்மானத்தை அமல்படுத்த சில பகுதிகளிலிருந்து பின் வாங்கினால் போதுமென்றும், 1967 போரில் பிடித்த அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பின் வாங்க முடியாது, தேவையில்லை என்றும் வாதிட்டன.

பல வருடங்களாக பாலஸ்தீனர்கள் தீர்மானம் 242 ஐ ஏற்க மறுத்தனர். அவர்களுடைய சுய நிர்ணய உரிமையை அத் தீர்மானம் அங்கீகரிக்க வில்லை என்பதே அதற்குக் காரனம். அகதிகள் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டுமென்று கூறுகிறதே ஒழிய அதன் பொருளை அத்தீர்மானம் தெளிவாகக் குறிப்பிடவேயில்லை என்று அவர்கள் வாதிட்டனர். அனைத்து நாடுகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கூறுவதன் மூலம், தீர்மானம் 242, தன்னிச்சையாக, பாலஸ்தீனர்களை இஸ்ரே லுக்கு அங்கீகாரம் வழங்க நிர்ப்பந்திக்கின்றது; அதேசமயம், அதற்குப் பிரதியாக பாலஸ்தீன தேசிய உரிமைகளை அங்கீகரிக்க வழியேதும் அத்தீர்மானத்தில் இல்லை என்றும் வாதிட்டனர்.

பிடிக்கப்பட்ட நிலப்பகுதிகள்

1949 போர் நிறுத்தத்துக்குப் பிறகு மேற்குக் கரையும் காஜா பகுதியும் இரண்டு தனிப்பட்ட அரசியல் பகுதிகளாயின. அப்போர் நிறுத்தம் யூத அரசாங்கப் பகுதியை பாலஸ்தீன மேன்டெட் பகுதியின் இதர அங்கங்களிலிருந்து தனியாகப் பிரித்தது. 1948-1967 காலங்களில், கிழக்கு ஜெரு சேலம் உள்பட மேற்குக் கரை ஜோர்டானின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருந்தது. அதை 1950ல் ஜோர்டான் பிடித்தெடுத்தது. மேலும் அங்கு வாழும் பாலஸ்தீனர்களுக்கு குடியுரிமை வழங் கியது. அதே கால கட்டத்தில், காஜா பகுதி எகிப்திய ராணுவ நிர்வாகத்தின் கீழ் வந்தது; 1967 போரின் போது இஸ்ரேல் இப்பகுதிகளைக் கைப்பற்றியது. கைப்பற்றப்பட்ட மேற்குக் கரை, காஜா பகுதியில் வசிக்கும் பாலஸ்தீன மக்களை ஆட்சி செய்ய ராணுவ நிர்வாக அமைப்பை இஸ்ரேல் அமைத்தது. இதன்படி பாலஸ்தீனர் களுக்கு அடிப்படை அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டன; கருத்துச் சுதந்திரம்,பத்திரிகை மற்றும் அரசியலில் கூட்டாக ஈடுபடும் சுதந்திரம், குடிமைச் சமூக சுதந்திரங்கள் மறுக்கப்பட்டன; இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் அம்சமாக பாலஸ்தீன தேசிய உணர்வு பார்க்கப் பட்டன, அது குற்றமுள்ள செயலாக ஆக்கப் பட்டது; இதனால் பாலஸ்தீன தேசிய வண்ணங் களை வெளிப்படுத்துவது தண்டனைக் குரிய செயலாகும். பாலஸ்தீன வாழ்வின் அனைத்து அமசங்களும் கட்டுப்படுத்தப்பட்டன; எந்தவிதத் தவறுக்கும் ஆட்படாத செய லான பாலஸ்தீன கூட்டாஞ்சோறு உண்பதற்குக் கூடுவது கூட குற்றச்செயல் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டது.

இஸ்ரேல், மேற்குக்கரையிலும் காஜா பகுதியிலும் கடைப்பிடித்த கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் பரந்த அளவில் கூட்டுத் தண்டனை வடிவங்களைக் கொண்டிருந்தன; அவை ஊரடங்குச் சட்டங்கள், வீடுகளை இடித்தல், சாலைகள், பள்ளிக்கூடங்கள், மற்றும் சமூக நிறுவனங்கள் ஆகியவற்றை மூடுதல் போன்ற நடவடிக்கைகள் கையாளப்பட்டன. நூற்றுக்கணக்கான அரசியல் இயக்கத்தவர்கள், ஜோர்டானுக்கும் லெபனானுக்கும் நாடு கடத்தப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன; ஆயிரக் கணக்கான மரங்கள் வேருடன் பிடுங்கி எறியப்பட்டன. ஆக்கிரமிப்புகளை எதிர்க்கும் பாலஸ் தீன தேசியத்தை முறியடிக்கவும், தண்டிக்க வும், மேற்குக் கரையையும் காஜா பகுதியையும் கட்டுப் பாட்டுக்குள் வைக்கவும், சிறைப்படுத்துவதை முக்கிய தந்திரமாகஇஸ்ரேல்பயன்படுத்தி வந் துள்ளது; 1967 லிருந்து இஸ்ரேலால் கைது செய்யப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை பத்து லட்சமாகும். லட்சக்கணக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது; சிலர் விசாரணையின்றியே சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். (நிர்வாக ரீதியிலான சிறைப்பிடிப்பு). பின்னர், இஸ்ரேலிய ராணுவ நீதிமன்றத்தில் அவர்கள் மீது வழக்கு நடத்தப்படும். பாலஸ்தீன மக்களில் 40 சதவிதம் பேர் ஒருமுறையாவது சிறைக்குள் இருந்தவர்களாவர்.

1971லிருந்து பாலஸ்தீனக் கைதிகளை துன் புறுத்துவது சகஜமாகிவிட்ட ஒன்றாகும்.1999ல் இஸ்ரேலின் உயர் நீதி மன்றம் சர்வ சாதாரண மாக இம்முறைகளைக் கடைபிடிப்பதைத் தடை செய்தது. கவனிப்புகள் இல்லாததாலும் தவறான நடைமுறைகளினாலும் டஜன் கனக்கில் சிறைக் கைதிகள் இறந்து போயுள்ளனர்.இஸ்ரேலிய அதிகாரிகள் பயங்கரவாதத்தை முறியடிக்க கடுமையான நடவடிக்கைகளும் அதிக அளவி லான சிறைப்பிடிப்புகளும் தேவை என்றே சாதிக் கின்றனர். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்க்கும் எந்த பாலஸ்தீன போராட்ட வடிவத்தையும் இஸ்ரேலின் பாதுகாப்பை அச்சுறுத்தும் நட வடிக்கைகளாக் கருதுகின்றது. இதில் வன் முறையற்ற முறைகளான, பகிஷ்கரிப்பு, பொரு ளாதாரத் தடைகள் மற்றும் பொருளாதார விலகல்கள் ஆகியவையும் அடங்கும். 2013 துவக் கத்தில், அதிகாரப்பூர்வமாக 145 குடியிருப்பு களையும் அதிகாரப்பூர்வமற்ற 100 குடியிருப்பு களையும் கட்டி, 5,60,000 குடியுரிமை கொன்ட யூத இன குடிமக்களை கிழக்கு ஜெருசேலத்துக்கும் மேற்குக் கரைக்கும் இடம் பெயரச் செய்தது. இவை, அந்நிய நிலப்பகுதியை பிடித்து ராணுவ ஆட்சி நடத்துவது குறித்த நான்காவது ஜெனிவா மாநாட்டின் அம்சங்களையும், இதர சர்வதேசச் சட்டங்களையும் மீறுவதாகும்; பல குடியேற்றங் கள் பிடுங்கப்பட்ட பாலஸ்தீன தனியார் நிலங் களில் அமைந்தவையாகும். மேற்குக் கரையும் காஜா பகுதியும் எந்த நாட்டின் பகுதியாகவும் இல்லாததால் ஆக்கிரமிப்பு என்ற பேச்சே எழவில்லை என்று கூறி, இஸ்ரேல் தன் செயல்களை நியாயப்படுத்திக் கொள்கின்றது. அதன் விளக்கத் தின்படி, இஸ்ரேல் அப்பகுதிகளின் வெறும் நிர்வாகி மட்டுமே; அப்பகுதிகளின் எதிர்காலம் இனிமேல்தான் தீர்மானிக்கப்பட வேண்டும். சர்வதேச நாடுகள் இஸ்ரேலின் இந்த நிலைப hட்டை ஏற்க மறுத்துள்ளன; சர்வதேசச் சட்டங் கள் மேற்குக் கரைக்கும் காஜா பகுதிக்கும் பொருந்துமென கூறுகின்றன. ஆனால் அச் சட்டங்களை அமல்படுத்தவும். 1967 லிருந்து இஸ்ரேல் செய்துவரும் மீறல்களுக்கு அதைப் பொறுப்பேற்கச் செய்யவும் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கப்படவில்ல.

காஜா பகுதியிலிருந்து, காலி செய்வதென்ற இஸ்ரேலிய அரசாங்கத்தின் முடிவின் அடிப் படையில், 2005-ல், 7800 யூத இனக் குடியேறிகள் திரும்ப அனுப்பப்பட்டார்கள். அப்போதிருந்து இஸ்ரெல், காஜா பகுதியில், ஆட்கள் போக்கு வரத்தையும், சரக்குப் போக்குவரத்தையும் கட்டுப்படுத்தி வருகின்றது;வான் வெளியையும் கடற்கரையையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வருகின்றது.

ஜெருசேலம்

ஐ.நாவின் 1947ம் ஆண்டுத் தீர்மானம் ஜெரு சேலத்தை சர்வதேசப் பகுதியாக ஆகவேண்டு மென்று கூறுகின்றது. 1948 ன் அரேபிய – இஸ்ரேல் போரில், ஜெருசேலத்தின் மேற்குப் பகுதியைக் கைப்பற்றியது; ஜோர்டான் கிழக்குப் பகுதியை எடுத்துக் கொன்டது. அதில் யூத இஸ்லாமிய கிறித்துவ மக்களுக்குப் புனிதமான பகுதிகளைக் கொண்ட சுவர் கட்டப்பட்ட பழைய நகரமும் அடங்கும். 1949 போர்நிறுத்தம் நகரத்தை இரண்டாக வெட்டிப் பிரிக்கின்றது.

ஜூன் 1967ல், இஸ்ரேல் கிழக்கு ஜெரு சேலத்தை கைப்பற்றி உடனடியாக சேர்த்துக் கொன்டது. 1981ல் அதன் இணைப்பை மறு உறுதியும் செய்தது.

இஸ்ரெல் ஜெருசேலத்தை நிரந்தர தலைநகர மாகக் கருதுகின்றது. சர்வதேச நாடுகளில் பெரும்பான்மையானவை, கிழக்கு ஜெருசேலத்தை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் பகுதி யாகவே கருதுகின்றன. பாலஸ்தீனர்கள், எதிர் காலத்தில் அமையப் போகும் பாலஸ்தீன நாட்டின் தலைநகரமாக கிழக்கு ஜெரு செலத்தைக் கருதுகின்றனர்.

பாலஸ்தீன விடுதலை அமைப்பு

அரேபிய லீக் 1964ல் பாலஸ்தீன விடுதலை அமைப்பை (பிஎல்ஓ) நிறுவியது; இதன் நோக்கம், பாலஸ்தீன கோரிக்கைக்கு ஆதரவைத் திரட்டும் சமயத்தில், பாலஸ்தீன தேசியத்தை கட்டுக்குள் வைத்திருப்பதேயாகும்.1967ல் அரேபிய நாடுகள் அடைந்த தோல்வியானது, இளைய போர்க் குணம் மிக்க பாலஸ்தீனர்கள் கையில் பிஎல்ஓ செல்வதற்கும், சில அரேபிய நாடுகளின் கைப் பாவையாக இருப்பதிலிருந்து தவிர்க்கவும் உதவியது.

பிஎல்ஓ பலதரப்பட்ட அரசியல் மற்றும் ஆயுதந்தாங்கிய குழுக்களின் சேர்க்கையாகும்; பல தரப்பட்ட தத்துவார்த்தங்களின் சேர்க்கை யாகும். யாசர் அராஃபத் 1968லிருந்து, 2004ல் உயிர் துறக்கும் வரை, பிஎல்ஓ வின் தலைவராக இருந்தார். அவர் ஃப்டாஹ் என்னும் குழுவின் தலைவரும் ஆவார்; அதுவே பிஎல்ஒவில் இருந்த மிகப்பெரிய குழுவாகும். இது தவிர PFLP, DFLP என்ற குழுக்களும் இருந்தன; ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து PPP (முன்னாளில் கம்யூனிஸ்ட் கட்சி) ஆகிய குழுக்களும் பிஎல்ஒவில் உள்ளன. இத்தகைய குழு வேறுபாடுகள் இருந்த போதும், பெரும்பான்மை பாலஸ்தீனர்கள், பிஎல்ஓவை தங்கள் பிரதிநிதியாக கருதினர்; பி.எல்.ஒ தன் முக்கியத்துவத்தை, 1993ல் ஏற்பட்ட ஆஸ்லோ ஒப்பந்தத்துக்குப் பிறகும், பின் 1994ல் பாலஸ்தீன அதிகார அமைப்பு உருவாக்கப்பட்ட இன்னும் இழந்தது. ஹமாஸ் என்னும் அமைப்பு பிஎல்ஓவின் அங்கமாக இல்லாத இஸ்லாமிய அமைப்பாகும்; இது 1980ந் பின்பகுதிகளில் உருவாயிற்று. ஹமாஸின் எழுச்சி குறிப்பாக 2000க்குப் பின் ஏற்பட்ட எழுச்சி பிஎல்ஓ வின் செல்வாக்கை மேலும் குறைத்தது.

1960களில் பிஎல்ஒவின் இயக்கங்கள் ஜோர் டானை அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஜோர்டான் நாட்டின் ராணுவத்துடன் ஏற்பட்ட மோதல், பிஎல்ஓ தலைமையை அந்நாட்டை விட்டு வெளியேறச் செய்தது; பின் அதன் தலைமையகம் லெபனானுக்கு இடம் பெயர்ந்தது. 1975ல் லெபனானில் உள்நாட்டுச் சண்டை துவங்கியவுடன், பிஎல்ஓ அச்சண்டையில் பங்குதாரராக ஆயிற்று. 1982ல் இஸ்ரேலின் லெபனான் ஆக்கிரமிக்குப் பின் அங்கிருந்து பிஎல்ஓ வெளியேற்றப்பட்டது.பின் அது டுனீசியாவுக்கு இடம் பெயர்ந்தது.

1993 வரை இஸ்ரேல், பாலஸ்தீன தேசிய உரிமைகளையோ அல்லது பாலஸ்தீனர் களையோ இச்சச்சரவின் சுயேச்சையான பங் காளியாக அங்கீகரிக்கவில்லை. பிஎல்ஓவுடன் பேச்சு வார்த்தை நடத்த மறுத்து வந்தது; ஜோர்டானுடனோ அல்லது இதர அரேபிய நாடுகளுடன் மட்டுமே பேச்சுக்குத் தயாராக இருந்தது. தனி பாலஸ்தீன நாடு அமைப்பதை நிராகரித்தது; பாலஸ்தீனர்களை மற்ற அரேபிய நாடுகளுக்குள் எடுத்துக்கொள்ள வேண்டு மென்று கோரியது. இத்தகைய முரட்டுப் பிடி வாதம், இஸ்ரேலின் பிஎல்ஓ உடனான ரகசியப் பேச்சு வார்த்தை களின் காரணமாக, 1993ல் ஏற்பட்ட ஆஸ்லோ கொள்கை ஒப்பந்தங்களுடன் முடிவுக்கு வந்தது.

1973 அக்டோபர் போரும் எகிப்தின் பங்கும்

1971ல் எகிப்து அதிபர், அன்வர் அல் சாதாத் ஐ.நா. துதர், குன்னார் ஜார்ரிங்கிடம், 1967ல் எகிப்து இழந்த பகுதிகளை திரும்பத் தர ஒத்துக் கொள்ளும் பட்சத்தில், இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ளத் தயாராக இருப்ப தாக குறிப்பிட்டார். (சினாய் தீபகற்பம்). எகிப்தின் இந்த முன்வரைவை இஸ்ரேலும் அமெரிக்காவும் கண்டுகொள்ளாத போது, எகிப்தும் சிரியாவும் அரசியல் முட்டுக்கட்டையை உடைத்தெறி வதற்கு செயல்படத் தீர்மானித்தனர். சினாய் தீப கற்பத்திலும் கோலன் ஹைட்சிலும் இருந்த இஸ்ரேலியப் படைகளை அக்டோபர் 1973ல், யூதர்களின் புனிதமான நாளொன்றில் தாக்க ஆரம்பித்தனர். இஸ்ரேல் எதிர்பாராத விதமாக தாக்கப்பட்டதால் தடுமாறியது; அரேபியப் படைகளும் ஆரம்பத்தில் சில வெற்றிகளைப் பெற்றன. இத்திருப்பங்கள் அமெரிக்காவின் அரசியல் தலையீட்டையும் இஸ்ரேலுக்கு இன்னும் அதிகமான ராணுவ உதவிக்கும் வழி செய்தது.

போருக்குப் பின், அமெரிக்க வெளியுறவு மந்திரி, ஹென்ரி கிஸ்ஸிங்கெர், வரம்புக்குட்பட்ட இருநாட்டு ஒப்பந்தங்களுக்கு வழி வகுக்கும் வகையில் ராஜீய நடவடிக்கைகளை மேற் கொண்டார்; சினாய் தீபகற்பத்திலிருந்தும், கோலன் ஹைட்ஸிலிருந்தும் இஸ்ரேல் பின் வாங்குவதற்கு ஏற்பாடு செய்தார்; ஆனால் அதிக கடினமான விஷயங்களான, மேற்குக்கரை மற்றும் காஜா குறித்து மூச்சுவிடவில்லை; அது முதல் அமெரிக்கா, இச்சச்சரவில் மத்யஸ்தம் செய்யும் ஒரே தனியாள் என்ற நிலையை நிறுவிக் கொண்டது; மேலும் மிக முக்கியமான வெளி யாள் என்பதையும் நிறுவிக் கொண்டு இன்று வரை அந்நிலையை கடைப்பிடித்து வருகின்றது.

சாதாத், கடைசியில் தன்னிச்சையாக இஸ்ரே லுடன் பேச முன்வந்தார். 1977, நவம்பர் 19 அன்று, இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றி னார். இதே போன்று இதர அரேபிய நாடுகளும் பின்பற்றுமென்று இஸ்ரேல் எதிர்பார்த்தது.

செப்டம்பர் 1978ல், அமெரிக்க அதிபர், ஜிம்மி கார்ட்டர், சாதாத்தையும், இஸ்ரேலிய பிரதமர் மெனாக்கெம் பேகினையும், கேம்ப் டேவிட் எனப்படும் இடத்துக்கு அழைத்தார்.அங்கு அவர்கள் இரண்டு ஒப்பந்தங்களுக்கு வழி வகுத்தனர். எகிப்துக்கும் இஸ்ரேலுக்குமிடையே அமைதி ஏற்பட ஒரு ஏற்பாடும், பாலஸ்தீனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஒரு ஏற்பாடும் செய்தனர். முதல் ஒப்பந்தம், 1979ல் கையெழுத் தானது. எகிப்து – இஸ்ரேல் அமைதி உடன்படிக் கைக்கு அடிப்படையான ஒப்பந்தமாக அது இருந்தது. இரண்டாவது ஒப்பந்தம் மேற்குக் கரையிலும், காஜா பகுதியிலும் ஐந்து ஆண்டு களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கவும், பின் அப்பகுதிகளின் இறுதி அந்தஸ்தை முடிவு செய்து கொள்ளவும் வழிவகை செய்யும் ஒப்பந்த மாக இருந்தது.

கேம்ப் டேவிட் சமரசங்களில் எகிப்து இஸ்ரேல் ஒப்பந்தம் மட்டுமே அமலாகியது. பாலஸ்தீனர்களும் மற்ற அரேபிய நாடுகளும் தன்னாட்சி உரிமை ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன. காரணம், இஸ்ரேல் 1967ல் பிடித்த பகுதிகளிலிருந்து பின் வாங்குவது பற்றியோ அல்லது சுதந்திரமான பாலஸ்தீன நாட்டை அமைப்பது குறித்தோ அதில் எதுவும் கூறப்பட வில்லை. ஆனால், இஸ்ரேல் பேச்சு வார்த்தை களை, பாலஸ்தீன நிலங்களைத் தொடர்ந்து பறிமுதல் செய்வதன் மூலமும்,புதிய குடியிருப்பு களை உருவாக்குவதன் மூலமும் நாசம் செய்தது. மேகின், கார்ட்டரிடம் கொடுத்த வாக்குறுதியை மீறி இஸ்ரேல் செயல்பட்டது.

முதல் கிளர்ச்சி

டிசம்பர் 1987ல், மேற்குக் கரை மற்றும் காஜா பகுதி பாலஸ்தீன மக்கள், இஸ்ரேலிய ஆக்கிர மிப்புக்கு எதிராக பெரும் கிளர்ச்சியை மேற் கொண்டனர். இக்கிளர்ச்சி, அல்லது இன்டிஃ பாடா என்பது (அரேபிய மொழியில் உதறித் தள்ளுதல் என்ற பொருள்) பிஎல்ஒ-வால் ஏற்பாடு செய்யப்பட்டதல்ல; ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி களில் இருந்த அமைப்புகள் மற்றும் நிறுவனங் களின் தன்னெழுச்சியான மக்கள் அணி திரட்டல் ஆகும். இன்டிஃபாடா ஆயிரக்கணக்கில் மக்களை ஈடுபடுத்தியது; அதில் குழந்தைகளும் பதின்பருவத்தினரும் பங்கேற்றனர்; பலருக்கு எதிர்ப்பு இயக்கத்தில் அனுபவமே இல்லாமல் இருந்தது.முதல் சில வருடங்களுக்கு ஒத்துழை யாமை இயக்கத்தின் வடிவங்களைக் கொண்டி ருந்தது; அதில் மக்கள்திரள் ஆர்ப்பாட்டங்கள், பொது வேலை நிறுத்தங்கள், வரி கொடா இயக்கம், இஸ்ரேல் பொருட்களின் பகிஷ்கரிப்பு, அரசியல் சுவரெழுத்து, மற்றும் தலைமறைவாக நடக்கும் சுதந்திரப் பள்ளிக்கூடங்களை நிறுவுதல் ஆகியவை அடங்கியிருந்தன. ராணுவம் முறையான பள்ளிக்கூடங்களை மூடிவிட்டன. இஸ்ரேலியப் படைகளின் நடமாட்டத்துக்கு தடைகளை ஏற்படுத்தும் பணிகளும் இதில் அடங்கும். இன்டிஃபாடா நடவடிக்கைகள் மக்கள் பங்கேற்ற கமிட்டிகளால், எழுச்சிக்கான ஒன்றுபட்ட தேசியத் தலைமை என்னும் அமைப்பின் பேரில் நடத்தப்பட்டது. பரந்துபட்ட இந்த எதிர்ப்பு இயக்கம், மேற்குக் கரையிலும் காஜா பகுதியிலும் உள்ள பாலஸ் தீனர்களின் நிலைமைகளைக் குறித்து இதுவரை காணாத அளவுக்கு சர்வதேச கவனத்தை ஈர்த்தது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு களைக் குறித்து கேள்விகளை எழுப்பியது.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யிஸ்தாக் ராபின் தலைமையில், இன்டிஃபாடாவை வலு வந்தமாகவும் அதிகாரத்தாலும் அடிதடியாலும் சுக்குநூறாக்க இஸ்ரேல் முயற்சி செய்தது. ராணுவத்தினர் ஆர்ப்பாட்டக்காரர்களின் எலும்புகளை அடித்து நொறுக்க பணிக்கப்பட்ட னர். 1987 லிருந்து 1991 வரை, 16 வயதுக்க்குட்பட்ட 200 பாலஸ்தீனர் உட்பட, ஆயிரம் பாலஸ்தீனர் களை இஸ்ரேல் கொன்று குவித்தது. இஸ்ரேல் திரள் திரளாக பாலஸ்தீனர்ளை சிறை வைத்தது; இக்கால கட்டத்தில் உலகத்தி லேயே சிறை வாசத்தில் உள்ள தனிநபர் விகிதம் அதிகமாக இருந்த நாடு இஸ்ரேலாகும். 1990 வாக்கில் அநேகமாக எழுச்சி இயக்கத்தின் அனைத்துத் தலைவர்களும் சிறையில் இருந்தனர்; இன்டிஃ பாடா இழையோட்டமான இயக்க சக்தியை இழந்தது; ஆனாலும் பல வருடங்களுக்கு அது தொடர்ந்தே செயல்பட்டது. முதல் இன்டிஃ பாடாவின் போது,இஸ்ரேல் குறிவைத் துக் கொல்லும் கொள்கையை ஆக்கிரமித்த பகுதிகளில் ரகசியமாக அமல்படுத்தியது. தலை மறைவாக இயங்கிய அமைப்புகளை நிறுவி, அரேபியர்களைப் போல வேடமிட்டு, இலக்கு களை அணுகிக் கொல்வதோ அல்லது சிறிது தூரத்திலிருந்து துப்பாக்கியின் மூலம் குறி வைத்துக் கொல்வதோ நடந்தது. போர்க் குற்றங் கள் என்னும் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க, குறி வைத்துக் கொல்லும் கொள்கை என்பது கிடையாதென்பதை இஸ்ரேல் வலுவாக மறுத்து வந்தது.

அரசியல் வேறுபாடுகளும் வன்முறையும் பாலஸ்தீன சமுதாயத்துக்குள் அதிகமாயின; பிஎல்ஓ அமைப்புகளுக்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்குமிடையே குறிப்பாக போட்டிகள் வளர்ந்தன (ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத்). பாலஸ்தீனப் போராளிகளே, இஸ்ரேலுடன் ஒத்துழைப்பவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 250க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களையும், 100 இஸ்ரேலியர்களையும் கொன்றனர்.

இன்டிஃபாடா இயக்கம் நடைமுறை நிலைமை களை ஏற்க முடியாதென்பதை தெளிவுபடுத்தியது; அரசியல் நடவடிக்கைகளின் மையத்தை, டூனிசிலிருந்த பிஎல்ஓ தலைமையிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாற்றியது. பாலஸ்தீன இயக்க ஊழியர்கள், பிஎல்ஓ-வை, விடுதலைப் போராட்டத்தை வழி நடத்திச் செல்ல, தெளிவான அரசியல் திட்டத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினர். அதற்கிணங்க, 1988 நவம்பர் மாதத்தில், பாலஸ்தீன தேசிய கவுன்சில் (பிஎல்ஓ-வின் தலைமை உறுப்பு) அல்ஜீரியாவில் கூடியது; இஸ்ரேல் நாட்டை அங்கீகரித்தது; மேற்குக் கரையிலும் காஜா பரப்பிலும் உள்ள பகுதியை சுதந்திரமான பாலஸ்தீன தேசமாக அறிவித்தது. பயங்கரவாதத்தைக் கைவிட்டதாக அறிவித்தது. இஸ்ரேல் அரசு இம் முன்நடவடிக்கைகளுக்கு சாதகமான எதிர்வினை எதுவும் புரியவில்லை; எந்த விதமான மாற்றங்களும் ஏற்படவேயில்லை என்றும், பிஎல்ஓ பயங்கரவாத அமைப்பாகத் தொடர்கின்றது என்றும், அதனுடன் இஸ்ரேல் பேச்சுவார்த்தை நடத்தவே செய்யாதென்றும் கூறியது. அமெரிக்க நாடு பிஎல்ஓவின் கொள்கையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை ஏற்றுக் கொண்ட போதும், இஸ்ரேலின் விடாப்பிடிக் கொள்கையைக் கைவிடச் செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

ஆதாரம்: Middle East Information Project

(தொடரும்).