நடாளுமன்ற ஜனநாயகம் நிலவுகிற நாட்டில் இடது வலது என்ற எதிர்முனை அரசியலுக்கு இடமில்லாமல் போய்விட்டது என்று இத்தாலியில் போன நூற்றாண்டில் பாசிஸ்ட் ஆதரவு தத்துவஞானி பாபியோ நொபர்ட்டோ உருவாக்கிய ஒரு கருத்தை அமெரிக்க ஆளும் வட்டாரம் இன்று பரப்பி வருகிறது. இடது சாரிகள் இல்லாமல் போனாலோ அல்லது சுருங்கினாலோ என்ன நடக்கும் என்பதை பார்க்க மைக்ரோஸ்கோப் தேவையில்லை. நடாளு மன்றம் மோடி தர்பாராகவும், சட்டமன்றம் அம்மா தர்பாராகவும் ஆகியிருப்பதை காண்கிறோம். இன்னொரு காட்சியும் காண்கிறோம்
ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி பகவத் கீதையை பாடமாக்க சர்வாதிகாரியாக ஆசைப்படுகிறார். மறுபக்கம் நமக்கு வாய்த்திருக்கும் பிரதமரோ எல்லா அதிகாரத்தையும் கையிலெடுக்கும் ஆசையை வெளிக்காட்டாமல் அவதார புருஷராக காட்சி அளிக்கிறார். அவர் அர்த்த சாஸ்தி ரத்தை விழுந்து விழுந்து படிப்பதாக கூறப்படுகிறது அவரது மேலைநாட்டு ஆலோசகர்கள் அர்த்த சாஸ்திரம் உதவாது அது சாதி அடிப்படையில் பொருளுற்பத்தி பரம்பரை தொழிலாக இருந்த காலத்தியது, பணமைய பொருளாதாரத்தை கொண்டுவந்த சுல்தான்களில் டெல்லியில் அதிகாரத்தை குவிப்பதில் முதலில் சாதனைபடைத்த சுல்தான் அலாவுதின் கில்ஜியை காப்பி அடியுங்கள் என்று சிபாரிசு செய்வதாக கூறப்படுகிறது.. ஆனால் வரலாறு காட்டுவதென்ன?
சுல்தான்கள் மற்றும் மொகலாயர்கள் ஆட்சி காலங்களில் சனாதன தர்மசாதி அடிப்படையிலான உற்பத்தி முறைகள் உதிரநேர்ந்தாலும் மன்னர்களையும். நவாபுக்களையும் மற்றும் வர்த்தக வர்க்கத்தையும் புனித உலோக சேமிப்பு மோகம்பிடித் தாட்டியதால். ஐரோப்பிய வர்த்தகர்கள் நமது முன்னோர்களை கிள்ளுக்கீரையாக ஆக்கினர் அதனால் நமது முன்னோர்கள்பட்ட அவதி எழுதி மாளாது. அதனை எதிர்த்தபோது தோற்க நேர்ந்தது. ஆனால் ஒவ்வொரு தோல்வியும் அரசியல் விழிப்புணர்வை. ஏற்படுத்தியது.
1859ல் வங்க விவசாயிகளும், சாயப்பட்டறை தொழிலாளர்களும் நடத்திய ஆயுதமில்லா ஒத்துழையாமையே அரசியல் விழிப்புணர்வூட்டும் இயக்கமாகவும் ஆகியது என்ற வரலாற்றை நம்மில் எத்தனை பேர் அறிவோம்.
அன்று வங்க கவர்னராக இருந்த லார்டு கிரான்ட் வங்க ஆறுகளையும் அதன் கரைகளின் அழகையும் கண்டுகளிக்க உல்லாச படகிலே ஏறி உல்லாச பயனம் போனான். அவனது படகு, கலிகங்கா ஆற்றிலே தவழ்ந்து போகையிலே ஆயிரக்கணக்கான குத்தகை விவசாயிகளும் வேலைநிறுத்தம் செய்த சாயப்பட்டரைத் தொழிலாளர்களும் கரையிலே நின்று அவுரி விவசாயத்தை தடைசெய் என்று முழக்கமிட்டதை அவனால் சகிக்கமுடியவில்லை கரை இறங்காமலே படகை வேகமாக ஓட்ட உத்தரவிட்டான். கரையிலே இருந்தவர்கள். அஞ்சாமல் ஆற்றிலே குதித்து நீந்திய படியே படகை சுற்றிவளைத்தனர். அதன் பிறகே அவன் பணிந்தான், உரிய நடவடிக்கை எடுப்பதாக அறிவித்த பிறகே விடுவிக்கப்பட்டான். பிரிட்டீஷ் அரசு கம்பேனியின் வர்த்தக ஏகபோகத்தை முடிவிற்கு கொண்டுவர கமிஷனைப் போட்டது. அந்த நிகழ்வு ஆண்டான் அடிமை உறவு போலியானது என்ற ஞானத்தை உழைப்பாளிகளுக்கு போதித்தது. விவசாயி தொழிலாளி கூட்டுணர்வும் ஒத்துழையாமையும் ஒரு அரசியல் ஆயுதம் என்ற ஞானம் பிறந்ததுவும் அந்த இடத்தில்தான். ஒத்துழையாமை இயக்கத்தை யாரோ ஒருத்தர் தென்ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வந்ததாக கூறுவது வரலாறல்ல. அவர் அதை திறமையாக பயன்படுத்தினார் என்பதே வரலாறு. ஆயிரக் கனக்கான அவுரி பட்டறைகளிலே கம்படியும் சவுக்கடியும் கூலியாகப் பெறும் தொழிலாளர்களும், குத்தகை விவசாயிகளும் ஒத்துழையாமையை விடுதலை இயக்கத்தின் அரசியலாயுதமாக ஆக்கினர் என்ற வரலாற்றை அறிவுலகம் புதைத்துவிட்டு வரலாற்றை விதவிதமாக எழுதியதால் இன்று அயோக்கியர்கள் அரசியலை கடத்துவது எளிதாகி விட்டது. அதனை மீட்க முடியாமல் தவிக்கி றோம்.
இன்னொரு வரலாறு காட்டுவதென்ன?: இடது, வலது சித்தாந்தப் போரை தடை செய்தால் என்ன நிகழும் என்பதை பாகிஸ்தான் காட்டுகிறது.
மதவாத அரசியல் பாகிஸ்தான் மக்களை படுத்தும் பாட்டை பாருங்கள். 68 ஆண்டுகளுக்கு முன்னால் அங்கு கம்யூனிஸ்ட்டுகளும் சோசலிச அபிலாஷைகளும் மக்களின் நெஞ்சங்களிலே குடியிருந்த காலமாகும். மேற்கு பாகிஸ்தானில் பகத்சிங் தியாகமும் கிழக்கே முசாபர் அகமதும். புரடச்சிக் கவிஞன் ஃபைஸ் அகமது ஃபைசும் உருவாக்கிய கம்யூனிஸ்ட் இயக்கமும் அரசியலில் முதன்மை இடத்தில் இருந்தகாலம்.
அன்று அமெரிக்காவில் கம்யூனிஸ்ட்டுகளை வேட்டையாடிய மெக்கார்த்தியிச கொலைவெறி கூத்து பாகிஸ்தானையும் விடவில்லை. பாகிஸ்தானின் உச்சமன்ற நீதிபதிகள், மதவாத அரசியல்வாதிகள், ராணுவ தளபதிகள் அமெரிக்க ஆளும் வட்டாரத்திடம் ஞானஸ் நானம் பெற்று குழிபறிச்சான் கூட்டணி வைத்தனர். அன்றைய பிரதமராக இருந்த லியாகத் அலிகானை கொலை செய்ய திட்டமிட்டதாக சோடித்து செல்வாக்குடன் இருந்த கம்யூனிஸ்ட் இயக்கங்களை சதி வழக்குகள் அடக்குமுறைகள் மூலம் ஓரம் கட்டினர். பின்னர் ஆதாரமற்ற வழக்கு என அனைவரும் விடுவிக்கப்பட்டனர். லியாகத் அலிகானும் கொலை செய்யப்பட்டார். இன்றுவரை கொலைசெய்ய திட்டமிட்டது யார் என்பது மர்மமாகவே உள்ளது. ராணுவ தளபதிகள் இஸ்கந்தர் மிர்சாவும் அயூப் காணும் அதன் பிறகே ஜனநாயத்தை கொலை செய்தனர். இஸ்கந்தர் மிர்சாவை துரத்திவிட்டு அயூப்கான் சர்வாதிகாரி ஆனார்
சிறந்த நட்புக்கு வரலாற்றை தோண்டினால் ஏராளமான சான்றுகள் கிடைக்கும். குழிபறிச் சான் நட்புக்கு சான்று கிடைப்பது அரிது. நிலப்பிரபுவான பூட்டோவும் அவரது நம்பிக் கைக்கு பாத்திரமான தளபதி ஜியா-உல்-ஹக் இருவரையும் குழிபறிச்சான் அரசியல் நட்புக்கு குறிப்பிடலாம். அரசியலதிகாரத்தை கையி லெடுக்க பூட்டோ பிரதமரானவுடன், சீனியாரிட்டி கோட்பாட்டை ஓரம் கட்டி ஜியா-உல்-ஹக்கை ராணுவதளபதி ஆக்கினார். ஜியா-உல்-ஹக் ராணுவ சர்வாதிகாரியாக ஆகி பூட்டோவை தூக்கிலே தொங்கவிட்டார். ஜியா-உல்-ஹக் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். இன்றுவரை விபத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் யார் என்பதை துப்புதுலக்க இயலவில்லை., இஸ்லாம் உள்பட எல்லா மதவாத அரசியலும் கொடூரமானது என்பதையே வரலாறு காட்டுகிறது.,.
ஆனால் அந்த மதவாத அரசியலின் கொடூரத்தை இடதுசாரி அரசியலே அம்பலப் படுத்துகிறது என்பதையும் காண்கிறோம். அதுமட்டுமல்ல மதவாத அரசியலின் வர்க்க சார்பு இடதுசாரிகளின் இடைவிடாத தத்துவ தாக்குதலால் மாற்றங்கள் பெறுவதையும் காண்கிறோம். 200 கோடி மக்களின் நெஞ்சங் களிலே இடம்பெற்று இருக்கும் காத்தோலிக்க மதத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் இன்று மதவாத அரசியலின் திசையையே மாற்ற முடியும் என்பதை காட்டுகிறது. சமீபகாலம்வரை சுரண்டும் வர்க்கத்தின் ஆயுதமாக அந்த மதம் இருந்தது. ஆனால் இன்று நிலைமை வேறு 1980ம் ஆண்டு எல்சால்வடார் நாட்டு கத்தோலிக்க மதபாதிரியார் ஆஸ்கார்ரோமிரோ தொழுகையின் போது சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் ஒரு மார்க்சிஸ்ட். எனவே அவரை புனிதர் என்று அறிவிக்கும் சடங்கு நடத்தாமல் தெம்மாடிக் குழியில் புதையுங்கள் என்று அன்றைய போப் கட்டளையிட்டார். அந்த போப் சோசலிசம் சாத்தானின் தத்துவம் என்று முத்திரையும் குத்தினார். 33 ஆண்டுகளாக தெம்மாடிகுழியில் கிடந்த ஆஸ்கார் ரோமிரோ உடலைஎடுத்து புனித சடங்கை ஆற்றி அவரைப் புனிதர் என்று அறிவிக்க இன்றைய போப் கட்டளையிட்டார். அதோடு தன்னிச்சையாக இயங்கும் சந்தையும். நிதிமூலதன சூதாட்டமும் ஏழைகளின் வாழ்வை சீரழிக்கிறது. எனவே சாத்தானின் தத்துவம் என்று கண்டிக்கவும் செய்தார்.
இடது, வலது சித்தாந்தப் போரை அரசியலில் மட்டுமல்ல பொருளாதார தளத்திலும் ஓரம்கட்டிட இயலாது என்பதை ,இன்றைய நிகழ்வுகள் காட்டுகின்றன. தன்னைத்தானே சரிசெய்து கொள்ளும் தாராளமய சந்தை வந்த பிறகு சோசலிசம் பழங்கதையாகிவிட்டது. இடது வலது வேறுபாடு அரசியலில் காணாமல் போனது போல் பொருளாதாரதுறையிலும் காணாமல் போய்விட்டது என்று எழுதினர். என்று சோவியத் காணாமல் போனதோ அன்றே இடது, வலது சித்தாந்த போரும் படுத்து விட்டது என்றும் மகிழ்ந்தனர். சமீபகாலம் வரை தாராளமய சந்தை கோட்பாட்டிற்கு மயங்காத அல்லது குழம்பாத அரசியல்வாதிகளையோ பொருளாதார நிபுணர்களையோ காண்பது அரிதாக இருந்தது. தாராளமய சந்தை அறிவோடு இயங்கும் ஆற்றல் கொண்டது என்பதை நிருபிக்கும், பொருளாதார நிபுணர் களுக்கே நோபிள் பரிசு வழங்கினர்.
2008க்குப் பிறகு நாம் காண்பதென்ன?
தாராளமய சந்தைக்கு பகுத்தறிவு உண்டு என்ற முகாமும். தன்னிச்சையாக இயங்கும் தாராளமய சந்தைக்கு பகுத்தறிவு கிடையாது என்ற முகாமும் மோதுவதை காணலாம்.
2013ம் ஆண்டில் தாராளமய சந்தை பகுத்தறிவோடு நடந்து கொள்வதாக கணக்கு போட்டு கூறிய பொருளாதார நிபுணர்க்கும் தாராளமய சந்தை விதிகள் குருட்டுத் தனமானது பகுத்தறிவோடு நடந்து கொள்ளவில்லை என்று நிருபித்த பொருளாதார நிபுணர்க்கும் நோபிள் பரிசை பிரித்து கொடுத்து வியப்பை ஏற்படுத்தினர்.
21ம் நூற்றாண்டு மூலதனத்தின் தலைவிதியை ஆராயப்புகுந்த பிரெஞ்சு நிபுணர் தாமஸ் பிக்கெட் ஒன்றைக் கூறுகிறார். இன்றைய மூலதன வளர்ச்சிப்போக்கு தொடருமானால் 2050ல் உலகப் பொருளாதாரம் சீனவங்கியின் கட்டுப் பாட்டிலோ அல்லது பெட்ரோலிய உற்பத்தி செய்யும் நாடுகளின் கட்டுப்பாட்டிலோ போய்விடும் என்றும் டாலர், பவுண்டு, ஈரோ, பிராங்க், யென் நாணயங்கள் இறைமையை இழந்துவிடும் என்றும் பயமுறுத்துகிற மேலைநாட்டு நோபிள் பரிகள் பெற்ற பொருளாதார நிபுணர்களுக்கு பதில் கொடுக்கிறார். பயப்பட வேண்டாம். நான் ஆராய்ந்துதான் கூறுகிறேன். 20ம் நூற்றாண்டு மூலதனம் ஜனநாயகத்தை கட்டுப்படுத்தியது. அதனால் சீரழிவைக் காண்டோம் 21ம் நூற்றாண்டில் ஜனநாயகம் மூலதனத்தை கட்டுப்படுத்தும் ஆற்றலை மீட்குமானால் இந்த ஆபத்து நேராது, என்கிறார்.
1864ல் மார்க்ஸ் சர்வதேச தொழிலாளர் சங்க துவக்க விழா உரையில் குறிப்பிட்டதை கண் முன்னே நிறுத்துகிறது.
—அது ஒரு மாபெரும் போட்டியை காட்டுகிறது, குருட்டு சப்பளை டிமாண்டு சந்தை விதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் மத்தியதர வர்க்கத்தின் அரசியல் பொருளாதாரத்திற்கும் சமூக முன்யோசனை யால் ஆற்றுப்படுத்தப்படும் சமூக உற்பத்தி என்ற பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் பொருளாதாரத்திற்கும் இடையே மாபெறும் போட்டி நடக்கிறது என்றார் மார்க்ஸ். பிக்கெட்டின் ஆய்வு மார்க்ஸ் சொன்ன அந்த போட்டி தொடர்வதையே காட்டுகிறது மார்க்ஸ் சொன்னதுவும் பிக்கெட் கூறுவதும் என்ன? மூலதனம் ஜனநாயக கட்டுப்பாட்டிற்குள் வருகிற வரை இந்தப் போர் ஓயாது என்றார் மார்க்ஸ். பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள மார்க்ஸ் சொன்னதை மறுக்க துவங்கிய பிக்கெட் இறுதியில் அவரது கருத்தையே வழிமொழிகிறார். எனவே;
நவீன வாழ்க்கை போராட்டத்தின் அனுபவம் கூறுவதென்ன? சித்தாந்த போராட்டத்தின் மூலமே சரியான வழியை உருவாக்க முடியும் என்பதே. இதற்குப் பெயர் மார்க்சிசம். அதுதான் ஜனநாயக அரசியலின் உயிர்நாடி. இடதுசாரி அரசியலை ஓரம் கட்டினால் ஜனநாயகம் நடைப்பிணமாக ஆகிவிடும். என்பதை அறிவுலகம் அறிய வேண்டும்.