மார்க்சிஸ்ட் கட்சியின் பொன்விழா ஆண்டு 1964 – 2014
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 1964-ஆம் ஆண்டு உதயமாகி அரை நூற்றாண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த அரை நூற்றாண்டு வெற்றிப் பயணம், மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் பெருமிதத்துடன் கொண்டாட வேண்டிய நிகழ்வு. அவர்கள் மட்டுமல்லாது, சாமான்யர்களான கோடானுகோடி உழைக்கும் மக்கள் கொண்டாட வேண்டிய நிகழ்வும் கூட. ஏனென்றால் மார்க்சிஸ்ட் கட்சியின் இதயத்துடிப்பு, சுவாசம் அனைத்தும் உழைக்கும் வர்க்கங்கள் தான். அந்த வர்க்கங்களின் நலன் காக்கும் தியாகப் பயணம்தான், இந்த அரைநூற்றாண்டுப் பயணம். ஆசியாவில் நீண்ட வரலாற்றுப் பாரம்பர்யம் கொண்ட மூத்த இயக்கம் இந்தியக் கம்யுனிஸ்ட் இயக்கம். வீரஞ்செறிந்த, தியாக வரலாறு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு உண்டு. நாட்டு விடுதலைக்காக, எவ்வித சுயநல எதிர்பார்ப்பும் இல்லாமல் போராடி, சிறைவாசம், தூக்குமேடை என பல இன்னல்களை எதிர்கொண்ட இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம். விடுதலைக்குப் பிறகும் கூட சுரண்டலற்ற சோசலிச சமூகம் இந்தியாவில் அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தியாகப் போராட்டத்தை தொடர்ந்த இயக்கம். இது சந்தித்தது போன்று இந்தியாவில் வேறு எந்த இயக்கமும் கடும் அடக்குமுறைகளை சந்தித்ததில்லை. 1964 ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முக்கிய பிளவு நிகழ்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகிய இரு முக்கிய கட்சிகளாக கம்யூனிஸ்ட் இயக்கம் செயல்பட்டு வருகின்றது. அதன் பிறகு 1967 ஆம் ஆண்டில்,மேலும் ஒரு பிளவு நிகழ்ந்து, நக்ஸலைட்டு இயக்கம் எனப்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) தோன்றியது. நக்ஸலைட்டு இயக்கத்தில் மேலும் பல பிளவுகள் ஏற்பட்டன.
இந்த வரலாறு நெடியது. மார்க்சிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை பதிவு செய்திட தனியாக மூத்த தலைவர்களை உள்ளடக்கிய ஒரு குழு அமைத்து, ஆழமான ஆய்வினை மேற் கொண்டு, அவற்றை நூல்களாக ஆவணப்படுத்தி தொகுத்துள்ளது.
கம்யூனிஸ்ட் இயக்கம் பிளவுபட்டது குறித்து நீண்டகாலமாக பல தவறான கருத்துக்கள் பரவலாக உள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒரு புறம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மற்றொரு புறம் என கம்யூனிஸ்ட் இயக்கத்தை உடைத்துவிட்டனர் என்று ஒரு கருத்து நிலவுகிறது.
சில ஆழமான தத்துவார்த்தப் பிரச்சனைகள் குறித்து நீண்ட காலம் நீடித்து வந்த கருத்து வேறுபாடுகள்தான் பிளவுக்கு அடிப்படை. இந்திய சமுக நிலைமைகள் குறித்த ஆய்வு,அந்த ஆய்வின் அடிப்படையில் புரட்சிகரமான மாற் றத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகள், முதலாளித்துவம் அகன்று அமையவிருக்கும் புதிய உழைக்கும் வர்க்க அரசு போன்றவைதான் அந்த தத்துவார்த்தப் பிரச்னைகள். இவை குறித்து நீண்ட கருத்துப் போராட்டம் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நிகழ்ந்தது. சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நிலவிய பல கருத்தோட்டங்கள் குறித்தும் கடும் விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதங்கள் கட்சி அறிவுஜீவிகளால் அறிவுத்தளத்தில் மட்டும் நடைபெற்றவை அல்ல. தீவிரமான களப் போராட்டம் நடக்கும்போதே இந்த தத்துவார்த்தப் பிரச்னைகள் பற்றிய விவாதமும் கட்சி அணிகளிடையேயும் நடந்தது. இந்தக் காலம் முழுவதும் காங்கிரஸ் அரசின் பொருளியல் கொள்கைகள், அடக்குமுறைகள், தொழிலாளர், விவசாயிகளின் உரிமைகளுக்கான வலுவான போராட்டங்கள் ஆகியவற்றில் கம்யூனிஸ்ட் இயக்கம் அயராது பணியாற்றியது.
உண்மையில், தத்துவார்த்த வேறுபாடுகள்தான், கம்யூனிஸ்ட் இயக்கத்தில் உருவான பிளவு களுக்கு அடிப்படை. இந்த உட்கட்சிப் போராட்டங்கள் ஆழமான அறிவார்ந்த தளத்தில், தரத்தோடும், புரட்சிகர கடைமைகள் மீதான பற்றுடன் நிகழ்த்தப்பட்டவை. இதர கட்சிகளில் பதவி, அதிகார, சுயநலன்களுக்காக நடக்கும் பிளவுகள் போன்றதல்ல கம்யூனிஸ்ட் இயக்கங்களில் ஏற்பட்ட பிளவுகள். இவ்வாறு வித்தியாசப்படுத்தி கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை இளைய தலைமுறை அறிந்துணர வழிவகை செய்திடல் வேண்டும். உண்மை வரலாற்றை அறிய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நடைபெற்ற கருத்து மோதல்களின் அடிப்படைகளை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
கட்சியை இயக்கிடும் ஆவணம்
கம்யூனிஸ்ட் இயக்கங்களின் செயல்பாடுகள் அனைத்தையும் இயக்கிக்கொண்டிருக்கும், முழு முதல் ஆவணமாகத் திகழ்வது கட்சித் திட்டம். அது உருவான வரலாறு முக்கியமானது. இந்திய நிலைமை பற்றிய மதிப்பீடு உள்ளிட்ட பலப் பிரச்னைகளில் கருத்து வேறுபாடு இருந்தததால் கட்சி ஒரு திட்டத்தை உருவாக்க முடியவில்லை. 1964-ஆம் ஆண்டு நடைபெற்ற இரு கட்சிகளின் ஏழாவது மாநாட்டில் தனித்தனி திட்டம் விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அக்டோபர் 31 முதல் நவம்பர் 7 வரை கொல்கத்தாவில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் ஏழாவது அகில இந்திய மாநாட்டில் கட்சியின் திட்டம் உருவெடுத்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த மேதையாகத் திகழ்ந்த தோழர் பசவபுன்னையா இந்த மாநாட்டில் கட்சி திட்ட நகலை சமர்ப்பித்து நீண்ட உரை ஆற்றியுள்ளார் .(மார்க்சிஸ்ட் இதழில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது) அவர் ஒரு கட்சி திட்டம் கொண்டிருக்க வேண்டிய அம்சங்கள் எவை என்பதைக் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசு, அதன் அரசாங்கம், ஆகியவற்றின் வர்க்க குணங்கள், புரட்சியின் கட்டம், அதன் தன்மை, தொலைநோக்கு உத்தி, புரட்சியில் தொழிலாளி வர்க்கம் வகிக்கும் பங்கு, தொழிலாளி வர்க்கக் கட்சியின் பாத்திரம் போன்ற பல மிக அடிப்படையான அம்சங்களை கொண்டதாக கட்சித் திட்டம் அமைய வேண்டும் இந்த இலக்கணங்களைக் கொண்டதாக மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் உள்ளது.
சோசலிசத்திற்கு முன் மக்கள் ஜனநாயகம் இந்திய நாட்டில் சுரண்டலற்ற சமூகம் அமைய வேண்டுமென்ற இலட்சியத்தில் இரு கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லை. விடுதலைப் போராட்ட காலத்திலிருந்தே சோசலிச இலட்சியம் பலரது சிந்தனையை ஈர்த்தது. நிலம், தொழில் உள்ளிட்ட உற்பத்திக்கான ஆதாரங்கள் அனைத்தும் தனியுடைமையாக இருக்கும் இன்றைய நிலை, ஒரு சிறு கூட்டத்திற்கு சொத்து, மூலதனக் குவியலுக்கு உதவியாக உள்ளது. இந்த நிலையை மாற்றிட வேண்டும்; உற்பத்தி ஆதாரங்கள் அனைத்திலும், உழைக்கும் வர்க்கக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து சமூகம் முழுமைக்கும் அவற்றை பொது உடைமையாக்கிட வேண்டுமென்ற சோசலிச சிந்தனை அன்றைய இந்தியாவில் வேகமாக பரவி வந்தது. இந்திய நாடு சோசலிச பூமியாக மலர வேண்டுமென்பது விடுதலைக்கான போராட்டத்தில் ஈடுபட்ட முற்போக்காளர்களின் கனவாக இருந்தது. இவர்களில் பலர் மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் குழுக்களில் செயல்படத் துவங்கினர். இந்தக் குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவானது.
சோசலிசம் நோக்கிய பயணம் வெகு நீண்ட பயணமாகும்.அந்த இலக்கை அடைய பல கட்டங்களை இந்தியச் சமூகம் கடந்திட வேண்டியுள்ளது. தற்போதைய சூழலில், முதலாளித்துவ வர்க்கங்களின் அரசு அதிகார பலம், தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட ஒற்றுமை பலம் உள்ளிட்ட பல அம்சங்களை ஆராய்ந்து எதிர்வரும் புரட்சிகர மாற்றத்துக்கான கட்டம் தீர்மானிக்கப்படும். அதனை கட்சி திட்டம் வரையறை செய்திட வேண்டும். மார்க்சியத்தில் அரசு என்கிற அதிகாரம் செலுத்தும் அமைப்பு பற்றிய தனியான பார்வை உண்டு. எல்லாருக்கும் பொதுவான அரசு என்ற பழமையான பார்வை தவறானது. அரசு ஆளுகிற வர்க்கத்தின் கருவியாக செயல்பட்டு வர்க்க ஒடுக்குமுறை நிகழ்த்துகிறது. முதலாளித்துவ அமைப்பில் ஆளுகிற வர்க்கங்கள் பெரும்பான்மை மக்களின் உழைப்பைச் சுரண்டுவதற்கும், தனது இலாபம், மூலதனக் குவியலுக்கும் அரசு பயன்படுகிறது. முதலாளித்துவ அதிகாரத்தை எதிர்ப்போரை ஒடுக்குவதற்கான வன்முறைக் கருவியாகவும் அரசு பயன்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் தேசத்தின் அரசு பற்றிய நிர்ணயிப்பு மிக முக்கியமானது. அரசின் செயல்பாடுகளில் எந்த வர்க்கங்களின் அதிகார கட்டுப்பாடு நிலவுகிறது என்பதில் தெளிவு இருக்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய அரசு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசு என்று அழுத்தமாக குறிப்பிடுகிறது. அத்துடன் மேலும் துல்லியமாக, இதற்கு பெருமுதலாளித்துவ வர்க்கங்களின் தலைமை உள்ளது என்பதையும் அந்நிய நிதி மூலதனக்கூட்டு இதில் உள்ளது என்பதையும் அழுத்தந்திருத்தமாக குறிப்பிடுகிறது. இன்றைய இந்திய அரசு என்பது பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்படுகிற முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்க ஆட்சியின் கருவியாகும். இந்த அரசு முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை பின்பற்றும் பொருட்டு, அன்னிய நிதி மூலதனத்துடனான தனது ஒத்துழைப்பை அதிகரித்துக் கொண்டு வருகிறது. நாட்டு மக்களின் வாழ்க்கையில் அரசின் பங்கையும், செயல்பாட்டையும் வர்க்கத் தன்மைதான் முக்கியமாகத் தீர்மானிக்கிறது
(கட்சித் திட்டம் பாரா: 5.1)
இந்த நிர்ணயிப்பு பெரும் கருத்துப் போராட்டத்தினால் உருவானது. சோசலிசத்தை நோக்கிச் செல்வதற்கான முந்தைய கட்டம் என்ற வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் ஜனநாயக அரசு அமைப்பதை தனது நோக்கமாக கட்சித் திட்டத்தில் பிரகடனப்படுத்தியது. இது இந்திய சோசலிசத்திற்கான தொலைநோக்கு உத்தி என அழைக்கப்படுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது தொலைநோக்கு உத்தியாக தேசிய ஜனநாயக அரசு அமைப்பது என்று கட்சித் திட்டத்தில் பிரகடனப்படுத்தியது.
வெறும் சமத்துவ சமுதாயம் அமைப்பது, பொதுவுடைமைப் பூங்காவாக மாற்றுவோம் என்று வெற்று கோஷம் எழுப்பி வார்த்தை ஜாலம் செய்பவர்கள் அல்ல கம்யூனிஸ்ட்கள் என்பதற்கு இந்த இரு கருத்துக்களுமே சான்றாகும். சோசலிசம் என்ற அறைகூவல் மட்டும் போதாது, அதனை அடைவதற்கான பாதையை அறிவியல் ரீதியாக, நாட்டின் நிலைமைகளை துல்லியமாக கணக்கிட்டு இலட்சிய திட்டம் உருவாக்க வேண்டுமென்ற அக்கறையுடன் இந்த இரண்டு மாறான கருத்துக்களும் இரண்டு கட்சிகளின் கட்சித் திட்டம் கொண்டுள்ளது.
தேசிய ஜனநாயக அரசு என்ற கருத்தாக்கத்தில் மாற்று அரசு என்பது ஏகபோக முதலாளிகள் தவிர்த்த அனைத்து வர்க்கங்களால் நடத்தப்படுவது என்ற கருத்தை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. மாறாக தொழிலாளி வர்க்கத் தலைமையில் தொழிலாளி-விவசாயி வர்க்கக் கூட்டினை அச்சாணியாகக் கொண்டு கொண்டு மக்கள் ஜனநாயக அரசு அமைக்கப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் கூறுகிறது. அதேபோன்று, 1967 இல் பிரிந்துபோன நக்சலைட்டுகள் இந்திய அரசை தரகு முதலாளித்துவ அரசு என்று நிர்ணயித்து, தனிநபர் அழித்தொழிப்பு போன்ற மக்களிடமிருந்து அந்நியப்படும் கருத்துக்களையும் மார்க்சிஸ்ட்கள் ஏற்கவில்லை. புரட்சியை நோக்கிய மக்களைத் திரட்டும் பயணத்தை இது தடுத்திடும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வாதிட்டது.
சக்திமிக்க சொற்றொடர்: மக்கள் ஜனநாயக அணி
அன்றைய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கடும் சித்தாந்த விவாதத்திற்கு அடிப்படையாக இருந்த முக்கிய கேள்வி, இந்திய புரட்சியை முன்னெடுத்துச் செல்கிற வர்க்க அணி எத்தகையது? சிபிஐ தேசிய ஜனநாயக அணி என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தனர். தேசிய என்ற கருத்தில் அனைத்து வர்க்கங்களும், (தேசிய முதலாளித்துவ வர்க்கங்கள் உட்பட) உள்ளடக்கியதாக இருந்ததால் மார்க்சிஸ்ட்கள் எதிர்த்தனர். இந்த கருத்து மோதல்தான் சரியான கருத்திற்கு இட்டுச் சென்றது. மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் ஜனநாயக அணிஅமைக்க உறுதிபூண்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சியின் அனைத்து வகை செயல்பாடுகளுக்கும் அஸ்திவாரமாக அமைவது எது? ஒரே சொற்றொடரில் இதனை அடக்கிடலாம். மக்கள் ஜனநாயக அணி. கட்சியின் அன்றாட அசைவுகள் அனைத்தும் இந்த அணி உருவாக்க வேண்டுமென்ற இலட்சியத்தை நோக்கியே அமைந்துள்ளது.
இந்திய சமூகத்தை பகுப்பாய்வு செய்து, மக்கள் ஜனநாயக அணியில் அங்கம் வகிக்கும் வர்க்கங்களை விளக்குகிறது மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம்.
தொழிலாளி வர்க்கம், நிலமற்ற, ஏழை விவசாயிகள், நடுத்தர விவசயிகள், பணக்கார விவசாயிகள், நடுத்தர வர்க்கங்கள், அறிவுஜீவிகள் உள்ளிட்ட வர்க்கப் பிரிவினரைக் கொண்டதாக இந்த அணி அமையும். இந்தப் பகுதி மக்களை அன்றாட இயக்கங்கள் மூலம், அவர்களின் உணர்வினை புரட்சியை நோக்கிய உணர்வு மட்டமாக உயர்த்திட கட்சி அரும்பாடுபட்டு வருகிறது. மக்கள் ஜனநாயக அணி மார்க்சிஸ்ட் கட்சி உயிர்நாடியாக இலட்சிய நடைமுறையாக விளங்குகிறது.
இந்த அணியில் திரண்டு வரவேண்டிய வர்க்கங்கள் இன்றுள்ள நிலையில் முதலாளித்துவ சிந்தனைச் செல்வாக்கிலும், பல்வேறுபட்ட அமைப்புக்களின் செல்வாக்கிலும் இருந்து வருகின்றனர். இந்த சேர்மானத்தை கலைத்து, அவர்களை மக்கள் ஜனநாயக அணிக்கு கொண்டுவர வேண்டிய முக்கியமான கடமை மார்க்சிஸ்ட்டுகளுக்கு உள்ளது. இதற்கு நீடித்த, தொடர்ச்சியான, சோர்வற்ற, பல்வேறு வடிவம் கொண்ட பல முன்முயற்சிகள் தேவைப்படுகின்றன. இக்கடமையை நிறைவேற்றிட இரண்டு முக்கிய வழிமுறைகள் உள்ளன. இந்த இரண்டு வகையிலும் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர். ஒன்று, பாரம்பரியமான உத்தியான ஐக்கிய முன்னணி கட்டுவது, மற்றொன்று, கட்சி உறுப்பினர்கள் வெகுஜன அமைப்புகளில் செயல்படுவது. இந்த இரண்டு நடைமுறைகளிலும் நீண்ட அனுபவம், கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு உண்டு. அவ்வப்போது தவறுகள் நேர்ந்தாலும் அவை விவாதிக்கப்பட்டு சரிசெய்யப்பட்டுள்ளன. அந்நிய ஆட்சியின் போது, விடுதலை எனும் பொது குறிக்கோளுக்காக கம்யூனிஸ்ட்கள் காங்கிரசுடன் சேர்ந்து போராடினர். ஐக்கிய முன்னணியின் உத்தி அடிப்படையில் இந்த ஒற்றுமை பல்வேறு முரண்பாடுகள் இருந்தபோதும் நீடித்தது. இதனால், விடுதலை இலட்சியம் வெற்றிபெறும் நிலை ஏற்பட்டது. ஆனால், காங்கிரஸுடன் ஒத்துழைப்பு நீட்டித்து, நேரு அரசாங்கத்தை ஆதரிக்க அன்றைய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒரு பிரிவினர் முனைப்பு காட்டினர். இது கடும் விவாதத்தை எழுப்பியது. விவாதம் பல சித்தாந்த பிரச்சனைகளை உள்ளடக்கியதாக இருந்தது. மக்கள் ஜனநாயக அணி கட்டுகிற புதியதேவை அடிப்படையில் ஐக்கிய முன்னணி உத்தி கடைபிடிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட்கள் கருதினர். இதற் கான அடிப்படை காங்கிரஸ் எதிர்ப்பு நிலைபாட்டிலிருந்து துவங்க வேண்டு மென அவர்கள் வலியுறுத்தினர். பின்னாளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்நிலை பாட்டினை எடுத்தது.
ஐக்கிய முன்னணி காண……
பல்வேறு வகைகளில் சிதறுண்டுள்ள உழைக்கும் வர்க்கங்களை மக்கள் ஜனநாயக அணியை நோக்கித் திரட்டுவதற்கு சிறந்த செயல்பாட்டுக் கருவியாக ஐக்கிய முன்னணி உத்தி அமைந்துள்ளது. ஆனால் இதர பெரிய கட்சிகளுடன் கோட்பாடற்ற அதிக நெருக்கம் அல்லது பிற சக்திகளிடமிருந்து தனிமைப்பட்டு நிற்பது ஆகிய தவறான அணுகுமுறைகள் இதில் இருந்தால், அதில் பலன்கள் கிடைக்காதது மட்டுமல்லாதது, இயக்க வளர்ச்சியிலும் தேக்கம் ஏற்படும். எதிர்வரும் காலங்களில் ஐக்கிய முன்னணி கலையில் கட்சி தேர்ச்சி பெற வேண்டும் என்பது 50 வது பொன்விழா ஆண்டின் உறுதிப்பாடாக அமையும். பல்வேறு தரப்பட்ட மக்களின் இயக்கங்களை உருவாக்குவதற்கான விரிந்த தளங்களாக, தொழிற்சங்கம், விவசாய சங்கம் உள்ளிட்ட வெகுஜன அமைப்புகள் உள்ளன. முதலாளித்துவ அமைப்புகளின் செல்வாக்கில் உள்ள மக்களை முதலாளித்துவ சமூக அமைப்புக்கு எதிராக செயல்படவைக்கும் வாய்ப்பாக வெகுஜன அமைப்புகள் இருப்பதால் இதில் கட்சி உறுப்பினர்கள் செயல்பட வேண்டுமென்பது மார்க்சிஸ்ட் கட்சி நிலை. துவக்க காலங்களில் இந்தக் கோட்பாட்டிலும் பெரும் கருத்து மாறுபாடுகள் நிலவின. இதர முதலாளித்துவ கட்சிகளுக்கு உள்ளது போன்று கட்சியின் பிரிவுகளாக வெகுஜன அமைப்புகளை நடத்த வேண்டுமென்ற தவறான கருத்து நிலவியது. இக்கருத்துக்கு எதிராக கட்சிக்குள் விவாதம் நீடித்து வந்தது.
1978 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியின் சால்க்கியா சிறப்பு ஸ்தாபன மாநாட்டில் வெகுஜன அமைப்புகள் பற்றிய மார்க்சிய லெனினியக் கோட்பாடுகளை கட்சி வரை யறுத்தது. பிறகு அடுத்தடுத்துக் கிடைத்த அனுபவங்கள் அடிப்படையில் வெகுஜன அரங்கங்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான ஆவணங்களை கட்சி உருவாக்கியது.
வெகுமக்களை வென்றெடுக்கும் வகையில் முன்முயற்சிகளை மேற்கொள்வது, அமைப்புகளை ஜனநாயக ரீதியாக செயல்படுத்துவது என்ற புரிதல் உருவாக்கப்பட்டு வெகுஜன அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
எனினும் செல்வாக்கு தளத்தை வீச்சாக விரிவு படுத்துவது, முற்போக்கு, இடதுசாரி அரசியல் கருத்துக்களுக்கு ஆதரவாக வெகுஜன உறுப்பினர்களின் சிந்தனையை மேம்படுத்துவது போன்றவற்றில் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது.
அரசியல், தத்துவார்த்த, ஸ்தாபனத் துறைகளில் பல்வேறு பிரச்சனைகளில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. இந்த சித்தாந்த மோதல்கள் மேலும் மேலும் உண்மையான, சரியான கருத்துக்களுக்கு வந்தடைவதற்கும் வாய்ப்பாக அமைந்தன.. கடும் கருத்து விவாதங்கள், மோதல்கள் இருந்த வரலாற்றினை கம்யூனிஸ்டுகள் மறைத்திட விரும்பவில்லை. ஏனென்றால் அவை மார்க்சிய லெனினிய தத்துவத்தை இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப அமலாக்குவதில் ஏற்பட்ட சர்ச்சைகள். தனிப்பட்ட குரோத, விரோதங்களால் ஏற்பட்டவை அல்ல. அவை இந்திய வர்க்க சமூகத்தை புரிந்து கொண்டு புரட்சியை முன்னெடுத்துச் செல்ல நடத்தப்பட்ட விவாதங்கள்.
இதனால்தான், கருத்து மோதல்கள் கொண்ட வரலாற்றுப் பின்னணி இருந்தபோதிலும், சிபிஐ, சிபிஐ(எம்) கட்சிகளின் இணைந்த செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவிற்கு மாற்று இடதுசாரிகளே என்பதை எடுத்துரைக்கும் விதத்தில் இந்த ஒன்றுபட்ட போராட்டங்கள் அமைந்துள்ளன.
கம்யூனிஸ்ட்களுக்கு விரிந்த பரந்த அரசியல் ஆதரவுத் தளம் உருவாக வேண்டியுள்ளது. லெனின் குறிப்பிட்டார்: அதிகாரத்திற்கான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்திற்கு ஸ்தாபனம்என்ற ஆயுதத்தை தவிர வேறு ஆயுதம் ஏதுமில்லை.. இதனை உணர்ந்து நாடு தழுவிய ஸ்தாபனத்தை கம்யூனிஸ்ட்கள் வளர்த்தெடுக்க வேண்டியது,அவசர,அவசியக் கடைமையாக உள்ளது.
வலது, இடது விலகல் இல்லாத மார்க்சியப் பாதை 1964 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் சிலவற்றை உள்ளடக்கி தற்காலப்படுத்திய திட்டம் 2000-ல் உருவானது. சோவியத் நாடு சிதைந்துபோன நிலை உலக முதலாளித்துவத்தில் மாற்றங்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் சேர்க்கப்பட்டாலும், அடிப்படை நிர்ணயிப்புக்கள் மாற்றப்படவில்லை. மக்கள் ஜனநாயகப் புரட்சிக் கட்டம் வரை நீடிக்கும் திட்டமாக இது அமைந்துள்ளது.
ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கியமான ஆவணம், கட்சித் திட்டம்.லெனின் ரஷியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவுகிறபோதே, ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு திட்டம் அவசியம் என்பதை வலியுறுத்தினார். கட்சியில் சேரும் உறுப்பினர் கட்சித் திட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற நிபந்தனை கட்சியின் அமைப்பு சட்டத்தில் இடம் பெற வேண்டுமென்பதற்காகவும் ஒரு பெரும் கருத்துப் போராட்டத்தை கட்சிக்குள் லெனின் நடத்தினார்.
தோழர் பசவபுன்னையா கட்சியின் 1964 ஏழாவது மாநாட்டில் கட்சி திட்டத்தை சமர்ப்பித்து ஒரு பேருரை நிகழ்த்தினார். அதில் அவர் குறிப்பிடுகிறார்.
ஒரு முக்கியமான ஆவணமான கட்சித் திட்டத்தை விவாதித்து, இறுதி செய்யவிருக்கும் இந்த தருணத்தில், ஒரு அறிவியல்பூர்வமான ஆவணத்திற்கு தேவையான குறைந்தபட்ச தகுதிகள் உடையதாக இந்த ஆவணத்தை நாம் மேம் படுத்தவேண்டும். ஏனென்றால், புரட்சி எட்டும் காலம் வரை இது நீடிக்கக்கூடியது. அதாவது, புரட்சியின் ஜனநாயகக் கட்டம் எனப்படும் காலம் நிறைவேறும் வரை இந்த திட்டம் நீடிக்கும். ஆழமான பொருள் பொதிந்த அழுத்த மான சொற்கள் இழையோடும் ஆவணம் இது. கருத்துச்செறிவு என்பதற்கான இலக்கணமாகத் திகழும் சிறு நூல் இது.இதனை ஒருமுறை வாசித்தால் போதுமானதல்ல. பன்முறை வாசிப்பது அவசியம். ஏனென்றால், மார்க்சியத்தில் தேர்ச்சி பெற்ற மாமேதைகளின் கனல் தெறித்த விவாதங்களில் வந்தடைந்த நிர்ணயிப்புக்கள் அடங்கிய நூல் இது. அத்துடன் பல மணி நேரங்கள் இந்நூலோடு இணைந்திருப்பது புரட்சி இலட்சியத்தின் மீதான நமது உள்ள உறுதியை வலுப்படுத்தும்.
துவக்க காலத்திலிருந்தே கம்யூனிஸ்ட் இயக்கத் தலைமை சரியான சித்தாந்தம் அடிப்படையில், அடிபிறழாமல் செல்ல வேண்டும் என்பதில் மிக விழிப்பாக இருந்தது. இரண்டு வகையில் தடம் புரள வாய்ப்பு உண்டு. ஒன்று, வலது முனையில் வெகுவாக சாய்ந்து புரட்சி இலக்கிலிருந்து விலகி சமரசம் செய்து கொள்கிறது. இது, வலது திருத்தல்வாதம் என்று அழைக்கப்படுகிறது.
மற்றொன்று, இடது திருத்தல்வாதம் எனப்படுவது. புரட்சி இலக்கிற்கு செல்ல, மக்களை புரட்சிகர உணர்வு கொள்ளச் செய்து, புரட்சிப் பயணம் மேற்கொள்ள வேண்டும். தீவிர வர்க்கப் போராட்டங்கள் மூலம் வெகுதூரம் கடக்க வேண்டிய இந்தக் கடமையை இடது தீவிரவாதம் செய்யத் தவறுகிறது. மக்களின் பங்கை புறக்கணித்து, சாதகமான எதார்த்த நிலைமைகள் உருவாவதற்கு முன்பாக புரட்சியை அவசரப்படுத்தும் வேலையை இது செய்கிறது. லெனின் கீழ்க் கண்டவாறு விளக்குகிறார்.
மார்க்சியத்தை விளக்கும் ஆசிரியர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒன்று மார்க்சின் கருத்தோட்டத்தை பெருமளவில் பற்றி நிற்பவர்கள்; இரண்டு மார்க்சியத்தை வெறுத்து எழுதும் முதலாளித்துவ எழுத்தாளர்கள்: அடுத்து, திருத்தல்வாதிகள்; இவர்கள் மார்க்சியத்தின் அடிப்படைகளை ஏற்றுக் கொள்வது போன்ற தோற்றத்தில் இருந்தாலும், உண்மையில், முதலாளித்துவ கருத்துக்களைக் கொண்டு அதனை மாற்றக்கூடியவர்கள்; …
இன்று, காங்கிரசும், பாஜகவும் இந்திய பெருமுதலாளித்துவ வர்க்க நலனை காக்கும் பிரதி நிதிகளாக செயல்பட்டு வந்துள்ளன. காங்கிரசும், பாஜக இதர கட்சிகளைச் சேர்த்து அதிகாரத்தில் இருந்து வந்துள்ளன. கட்சிகள் மாறினாலும், வர்க்க அதிகாரம், முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவக் கொள்கைகள் மாறவில்லை. இந்நிலையில் மாற்றம் காண, அதிகாரத்தினை உழைக்கும் வர்க்கம் கைப்பற்ற வேண்டும். இந்திய பிரச்சனைக்கான ஒரே தீர்வு மக்கள் ஜனநாயகப் புரட்சி. அத்தகு புரட்சி, உழைக்கும் மக்களால் நிகழ்த்தப்படும் சரித்திர மாற்றம். தொடர்ச்சியான உழைக்கும் வர்க்கங்களின் போராட்டங்கள், புரட்சிகர சிந்தனை உணர்வை வளர்த்தெடுத்து புரட்சிக்கு வழிவகுக்கும். எனவே, இந்தப் போராட்ட இயக்கங்களை மார்க்சிஸ்ட் கட்சி எத்தகு தடைகளை எதிர்ப்பட்டாலும் அவைகளை தகர்த்து முன்னேறிடும். இதுவே கட்சியின் பொன்விழா ஆண்டில் ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் மேற்கொள்ள வேண்டிய உறுதிப்பாடாகும்.
கட்சிக்குள் நடைபெற்ற சித்தாந்தப் பிரச்னைகள் மீதான விவாதங்கள் எல்லாம் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றுப் பொக்கிஷங்கள். அவை, இந்திய நாடு சோசலிச பூமியாக மலர, உழைக்கும் வர்க்கங்களின் படைப்பாக்க முயற்சிகளை விளக்குபவை.
இரண்டு கட்சிகளுக்குள் நடந்த சித்தாந்த கருத்து மோதலை மீண்டும் சிந்திப்பது, தற்போது வளர்ந்து வரும் ஒற்றுமையை பாதிக்கும் என சிலர் நினைக்கக் கூடும். இது தவறு.
இந்திய அரசு இயக்கத்தை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? இந்திய சமூக இயக்கம் எவ்வாறு நிகழ்கிறது??இத்தகைய புரிதலோடு எவ்வாறு புரட்சிகர மாற்றத்திற்கான நடைமுறையை வகுத்துக் கொள்ள வேண்டும்?….. உள்ளிட்ட அடிப்படைப் பிரச்னைகளில் அழுத்தமான புரிதல் இருந்தால்தான் சோசலிசம் எனும் விண்ணை வளைக்கும் மாபெரும் வரலாற்றுக் கடைமையை நிறைவேற்ற முடியும்.