1949 அக்டோபர் 1 அன்று மக்கள் சீனக் குடியரசு மலர்ந்தது. அந்த நாள் உலக வரலாற்றில் மிக முக்கியமான நாட்களில் ஒன்று. 1921இல் சீன கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது. 1927 இல் அதன் மீது கொடிய தாக்குதலை சியங்க் கய் ஷேக் தலைமையிலான எதிர்புரட்சி கோமின்டாங்க் கட்சி நடத்தியது. எதிர்பாராத இந்த தாக்குதலை எதிர்கொண்டது மட்டுமின்றி சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தனது வீரமும் விவேகமும் நிறைந்த நீண்ட பயணத்தில், மாவோ, சூ என் லாய், சூடே போன்ற மகத்தான தலைவர்களின் தலைமையில் மக்களை திரட்டி, 20ஆண்டுகளுக்கும் மேலாக பல்முனை போராட்டங்கள் மூலம் எதிர் புரட்சி சக்திகளையும் ஏகாதிபத்திய சதிகளையும் முறியடித்து 1949 இல் சீனாவில் சோசலிச மக்கள் குடியரசை ஸ்தாபித்தது. இதில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும் ஸ்டாலின் தலைமையிலான சோசலிசசோவியத் ஒன்றி யமும் சீன புரட்சிக்கு உறுதுணையாக இருந்தன. 1949 இல் மக்கள் சீனம் மலர்ந்த பொழுது அதன் சமூக பொருளாதார நிலமை மிகவும் பின்தங்கியிருந்தது. பல துறைகளில் இந்தியாவை விடவும் சீனம் பின் தங்கிய நாடாக இருந்தது. ஏகாதிபத்தியங்களால் சூறையாடப்பட்டும் நிலப்பிரபுக்களால் கடுமையாக சுரண்டப்பட்டும்
அடிமைப்படுத்தப்பட்டும் இருந்த சீன உழைப் பாளி மக்கள் பல கோடிவிவசாயிகள், தொழிலாளிகள் – கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் தங்கள் விடுதலையைப் பெற்றவுடன் அதே தலைமையின் கீழ் புதிய சீனத்தை நிர்மாணிக்கும் பணியில் களம் இறங்கினர். இன்று மக்கள் சீனம் மாபெரும் முன்னேற் றங்களை அனைத்துத் துறைகளிலும் சாதித்துள்ளது. குடியரசு அமைக்கப்பட்ட மூன்றே ஆண்டுகளில் நாடு முழுவதும் மகத்தான புரட்சிகர நிலச்சீர்திருத்தம் அமலாக்கப்பட்டது. நிலபிரபுக்கள், பெரும் பணக்கார விவசாயிகளிடம் இருந்து, நாட்டின் மொத்த சாகுபடிக்கு லாயக்கான நிலத்தில் 45 சதம் மீட்கப்பட்டு, விவசாயிகளில் 70 சதமாக இருந்த ஏழை விவசாயிகள் நிலமற்ற விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. அடுத்த பத்து ஆண்டுகளில் விவசாயிகள் கூட்டுறவுப் பண்ணைகளிலும் பிறகு கம்யூன்களிலும் திரட்டப்பட்டு விவசாயத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. 1949 முதல் 1978 வரையிலான காலத்தில் நிலச்சீர்திருத்தம், ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் பிரம் மாண்டமான அளவில் அரசு மேற்கொண்ட முதலீடுகள், சீன உழைப்பாளி மக்களின் கடும் உழைப்பு ஆகியவை மூலம் மக்கள் சீனம் விரைவாக அனைத்துத்துறைகளிலும் முன்னேறி யது. இந்தக்காலத்தில் சீனா, ஏகாதிபத்தியங்கள் கொடுத்த நிர்ப்பந்தங்கள், சோவியத்ஒன்றியத் துடனான உறவு முறிந்தது, சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏற்பட்ட திரிபுகளும் குழப்பங்களும் என பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
1978 இல் மவோவின் மறைவுக்குப் பிறகு, முந்தைய 20 ஆண்டு அனுபவங்களைப் பரிசீலித்த சீன கம்யூனிஸ்ட் கட்சி, மாறிவந்த பன்னாட்டு நிலமைகளையும் கணக்கில் கொண்டு, தனது சுயசார்பின் அடிப்படையில் பன்னாட்டுப் பொருளாதார உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது என்று முடிவு செய்தது. கடந்த 36 ஆண்டுகளாக மக்கள்சீனம் பாய்ச்சல் வேகத்தில் பொருளாதார முன்னேற்றம் கண்டுள்ளது. தொழில் துறை, சேவை துறை, வேளாண் துறை ஆகியவற்றில் மட்டுமல்ல, கல்வி, மக்கள் நல்வாழ்வு, அறிவியல் தொழில் நுட்பம், பண்பாட்டு துறை உள்ளிட்டு பல துறைகளிலும் சீனம் தடம்பதித்துள்ளது. வறுமை கிட்டத்தட்ட இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. 35 ஆண்டுகளாக ஆண்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் கிட்டத்தட்ட 9 முதல் 10 சதமாக இருந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சீன மற்றும் அன்னிய தனியார் கம்பனிகள் செயல்பட வாய்ப்புகள் தரப்பட்டுள்ள போதிலும், சீனப் பொருளாதாரத்தின் கடிவாளம் வலுவாக சீன அரசிடம்தான் உள்ளது. உற்பத்தி கருவிகளில் பெரும்பகுதி மக்கள் சொத்தாகவே உள்ளது. உலக அரங்கில், அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிராக, மேலை நாடுகளின் மேலாதிக்க முயற்சிகளுக்கு எதிராக, இதர வளரும் நாடுகளுடன் இணைந்து, மக்கள் சீனம் குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றி வருகிறது.
பெரும் சவால்கள் இன்றும் சீனம் முன் உள்ளது. சீன சமூகத்தில் உருவாகியுள்ள ஏற்றத்தாழ்வுகள், சோசலிச விழுமியங்களுக்கு எதிரான போக்குகள், ஜனநாயகத்தில் ஊனங்கள், லஞ்சம் உள்ளிட்டு பல பிரச்சினைகளை சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து கவனத்தில் கொண்டு, ஆராய்ந்து, சரிசெய்ய நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது. சோசலிச மக்கள் சீனத்தின் மகத்தான சாதனைகளை வாழ்த்தும் இந்த நேரத்தில், எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகரமாக சந்தித்து சோசலிச சீனத்தை வலுப்படுத்த முனையும் சீனவின் சோசலிச ஆதரவு சக்திகளுக்கு உலக முற்போக்கு சக்திகள் அனைத்தும் நிச்சயம் துணை நிற்கும் என்பதையும் மார்க்சிஸ்ட் மாத ஏடு பதிவு செய்கிறது. மக்கள் சீனக் குடியரசின் 65 ஆண்டு சாதனைகள்.