1848ல் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்ற முழக்கத்தோடு கம்யூனிஸ்ட் இயக்கம் லன்டனில் பிறந்தது. அன்றிலிருந்து அதன் இயக்கமும் பரவலும் நித்திய கண்டம் பூர்ண ஆயுசு என்றே இருந்து வருகிறது. உண்மையில் அது சர்ச்சைகளால், சர்ச்சைகளுக்கிடையே, சர்ச்சைகளின் வழியே, சர்ச்சைகளைத் தேடி வளர்கிற சமூக விஞ்ஞானம் ஆகும். அது திண்ணை வேதாந்தமல்ல. யாரோ ஒருவர் தவமிருந்து கண்டதல்ல. அது உழைப்பாளி மக்களின் நடைமுறைகளையும் கருத்தோட்டங்களையும் கூட்டு செயல்பாட்டையும் கொண்ட அனுபவ விஞ்ஞானமாகும். அது நடைமுறையால் வளர்கிற விஞ்ஞானமாகும்.
இந்த சமூக விஞ்ஞானத்திற்கு அடிப்படை போட்டவர்களை பாராட்டவே மார்க்சிசம்-லெனின்னிசம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ஆசான்கள் எழுத்துக்கள் அனைத்துமே அவர்கள் காலம் வரை திரண்ட அறிவுச் செல்வத்தையும் எதார்த்த வாழ்க்கையையும் ஒப்பிட்டு எங்கு பொருந்துகிறது. எங்கு பொருந்தாமல் போகிறது என்பதில் தொடங்கி அடுத்தகட்ட மாற்றம் எதுவாக இருக்க வேண்டுமெனத் தேடுவதில் முடிவன.
எனவே, மார்க்சிசம்-லெனினிசம் என்பது அவர்கள் சொல்லியது, செய்தது மட்டுமல்ல. ஒவ்வொரு நாட்டின் மார்க்சிசம்-லெனினிச அணுகுமுறையில் செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அனுபவங்களும் மார்க்சிசம்-லெனினிசம் என்ற சமூக விஞ்ஞானத்தின் பகுதியாகும். தவறுகளிலிருந்து பாடம் பெறுவதின் மூலமே மார்க்சிசம்-லெனினிசம் வளர்கிறது என்பதையே வரலாறு காட்டுகிறது. மார்க்சிசம்-லெனினிசத்தைத் தாக்குகிற எதிரிகள் கூட கம்யூனிஸ்ட்டுகளின் தவறுகளை காட்டி கத்துவார்களே தவிர அதன் சாரத்தில் கை வைப்பதில்லை. அதனுடைய 167 ஆண்டு வரலாறு ஒன்றைக் காட்டுகிறது. மார்க்சிசம் – லெனினிசம் என்ற சமூக விஞ்ஞானம் போல் வேகமாக வளர்ந்த விஞ்ஞானம் வேறு எதுவுமில்லை. அதுமட்டுமல்ல அந்த வரலாறு கம்யூனிச இயக்கத்தின் தவறுகளால் விழுந்து அதனை திருத்தி எழும் ஆற்றலை பறைசாற்றுகிறது.
அதன் வரலாறும் உழைப்பாளி மக்களின் போராட்ட வரலாறும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். இருவருமே அடக்குமுறைகளையும் ஏமாற்றுக்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. இருவருமே தவறுகளை திருத்தியே முன்னேற வேண்டியிருக்கிறது. தவறுகளை சரியாக கணிக்கவில்லையானால் அதுவே இயக்கத்தை முடக்கி விடுகிறது. உழைப்பாளி மக்களின் அணுகுமுறையில் குறைகள் இருந்தாலும் மார்க்சிச இயக்கம் தளர்வுறும், மார்க்சிசத்தை ஏற்றுக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் தவறு செய்தாலும் உழைப்பாளி மக்களின் போராட்டம் வலுவிழக்கும்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் தனது தவறுகளால் வீழ்ந்தாலும் அதனை திருத்தி எவ்வாறு எழுகிறது என்பதை சுருக்கமாகக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அடக்குமுறைக்கும் அவதூறுக்கும் ஆட்படுவதால் ஏற்படும் பின்னடைவோடு அந்தந்த காலத்தில் கம்யூனிஸ்ட்டு கட்சிகளின் பல ரகமான தவறுகளால் வலு இழக்க நேரிடுகிறது.
அத்தகைய தருணங்களில் தவறுகளை கண்டுபிடிப்பதிலும் சரியான கோட்பாட்டை உருவாக்குகிற முயற்சியிலும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஈடுபடுவதை மார்க்ஸ் காலத்திலிருந்து தொடர்வதை காணலாம். 1942ல் மாசேதுங் கட்சி உறுப்பினர்களிடையே பேசுகிற பொழுது குறிப்பிட்டதைக் கவனியுங்கள்: “இன்றும் நம்மில் சில பேர் மார்க்சிசம்-லெனினிசம் ஒரு ரெடிமேடு மருந்து. அதுமட்டும் கிடைத்துவிட்டால் சிரமப்படாமல் எல்லா நோய்களையும் குணப்படுத்திவிடலாம் என்று கருதுகின்றனர். மார்க்சிசம்-லெனினிசத்தை ஒரு வேதம்போல் கருதுகின்றவர்களின் இத்தகைய குழந்தைத்தனமான குருட்டு நம்பிக்கையுள்ளவர்களிடம் உனது வேதத்தால் எந்த பலனும் இல்லை என்று வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். கண்ணியமற்ற மொழியிலே சொல்லவதென்றால் உனது வேதம் மனித மலத்தைவிட கேவலமானது. அதுவாவது நாயிக்கு உணவாகும். நாயின் விட்டையோ வயலுக்கு உரமாகும். உனது வேதம் நாயிக்கும் உணவாகாது. வயலுக்கும் உரமாகாது, எதுக்கும் பயன்படாது” என்றார் (Mao Tse-tung, Feb., 1, 1942 in Stuart Schram, The Political Thought of Mao Tse-tung)
மார்க்சிசத்தை ஒரு மதமார்க்கமாக ஆக்குவதை தவறான போக்கு என்பதை மாவோ மட்டுமல்ல. இதேபோல் லெனினும் மார்க்சிசத்தை வேதாந்தமாக ஆக்குவோரை கடுமையாகத் தாக்கி எழுதியுள்ளார். லெனின் தான் தவறுகளை வகைப்படுத்தி அதன் அடிப்படைகளையும் அதை எதிர்த்த போரை எப்படி நடத்துவது என்பதை முன்மொழிந்தார். சரியான கருத்திற்கான போராட்டம் தத்துவார்த்தப் போராட்டத்தோடு நின்றுவிடுவதில்லை. தப்பைக் கண்டுபிடிக்க அது முதன்மையாகவுமில்லை. தெளிவினைப் பெறவும் நடைமுறையோடு பொறுத்தவும் அது அவசியமாகிறது. நடைமுறையில் ஒரு கருத்தை அன்றாடப் பிரச்சனைகளை தீர்க்க ஈடுபடுத்தும் பொழுதுதான் அது சரியா தவறா என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.
தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதின் மூலமே மார்க்சிசம்-லெனிசம் கற்கப்படுகிறது. எனவே, தவறாகிவிடுமோ என்று தயங்காதீர். ஒரே தவறை திரும்பத் திரும்பச் செய்யாதீர் என்பதுதான் மார்க்சிசம்-லெனினிசம் கற்க ஒரே வழி.
மார்க்சிசம்-லெனினிசம் எவ்வாறு உருவாகிறது? சரியான கருத்து எப்படி உருவாகிறது? மாவோ மேலும் சொல்கிறார்.
“எங்கிருந்து சரியான கருத்து வருகிறது. வானத்திலிருந்து விழுமா? தீடீரென மனதிலே உதிக்குமா?
இல்லை. அது சமூக நடைமுறையால் பெறப்படுகிறது. பொருளுற்பத்திக்கான போராட்டம், வர்க்கப் போராட்டம், விஞ்ஞான சோதனை, இவைகளினால் பெறப்படுகிறது.
முன்னேறிய வர்க்கத்தின் இந்த சரியான கருத்து ஒரு முறை மக்களை ஈர்க்குமானால் இந்தக் கருத்து பௌதீக சக்தியாகி சமூகத்தை மாற்றும் உலகையே மாற்றிவிடும்” என்கிறார்.
மாவோ, மேலும் கூறுகிறார்;
“கட்சி உறுப்பினர்களுக்கு ஞானத்தைப் பெறுதல் பற்றிய இயக்கவியல் பொருள் முதல்வாதக் கோட்பாட்டைக் கற்றுக் கொடுப்பது அவசியம். அந்தக் கோட்பாடு அவர்களது சிந்தனை முறையை சரியானதாக ஆக்க உதவிடும்.
தேடுதல் திறமையை வளர்க்கும். அனுபவங்களைத் தொகுக்கும் ஆற்றல் மேன்மைப்படும். கஷ்டங்களை வெல்ல கற்றுக் கொடுக்கும். பணிகளை திறமையாக செய்ய பயிற்சியளிக்கும்” என்கிறார்.
ஞானம் பற்றிய மார்க்சிய கோட்பாடு
அது என்ன? ஞானம் பற்றிய மார்க்சிய கோட்பாடு 1330 குறளையும் ஒப்புவிப்பதோ பொருள் கூறுவதோ ஞானமாகிவிடாது. வள்ளுவர் காலத்திய சமூக வாழ்வு, குடும்ப உறவு, அரசியல், பொருள் உற்பத்திகள் அவைகளை உருவாக்கும் சமூக உறவு சொற்களின் உள்ளடக்கம். சொல் நயம் (வள்ளுவர் காலத்தில் காமம் என்ற சொல்லின் பொருள் வேறு. இன்று அதன் பொருள் வேறு இந்த மாற்றம் எதனால் ஏற்பட்டது) தத்துவ ஞானம். அவைகளில் நீடித்து எவைகள் உள்ளன. அவைகளில் பேணவேண்டியது எவைகள். களைய வேண்டியவைகள் எவைகள். இவைகளைத் தேடினால் அது மார்க்சிய-லெனினிய ஞான கோட்பாட்டை குறளுக்கு பொறுத்துவதாகும். அதாவது ஒரு தகவலை அதற்கும் மற்றதிற்கும் உள்ள தொடர்பு அதன் வரலாறு இவைகளை தேடுவதே மார்க்சிசம்-லெனினிய ஞான கோட்படாகும்.
தவறுகளும் பாடங்களும்
இந்த ஞானம் இருந்தாலும் நடைமுறையில் தவறுகள் நேராமல் சரியான கோட்பாடு உருவாவதில்லை. அதைப் பெறுவதே ஒரு போராட்டமாகிவிடுகிறது. அவ்வாறு கோட்பாட்டுத் தவறுகளை சரிசெய்யும் போராட்டக் காலங்களில் என்ன நடக்கிறது?
பல ரகமான தவறான கருத்துக்களுக்கெதிராக போராட்டம் உருவாகிறது. அந்த தவறான கருத்திற்கும் மார்க்சிசத்திற்கும் உள்ள உறவினையும் வரையறை செய்ய நேரிடுகிறது. இந்தப் போராட்டம் வனாந்திரத்திலோ, நடுக்கடலிலோ நடைபெறவில்லை. எதார்த்த அரசியல் சமூக நிலவரங்களை பரிசீலிப்பதிலும், வளர்ச்சிப் போக்கை எப்படி மாற்றுவது என்பதிலும் கருத்து மோதல் உருவாகி போராட்டமாகிவிடுகிறது. மார்க்சிசத்தை ஏற்றுக் கொள்பவர்களே பல கோஷ்டிகளாகப் பிரிந்து தங்களது கருத்துதான் சரி என்று நிலைநாட்ட முயற்சிக்கின்றனர். சித்தாந்தப் போர் மூள்கிறது. இதனால் தெளிவு பெறலாமே தங்களது கருத்து சரியா? தவறா? என்பதைக் கண்டுகொள்ள இயலாது. அந்த கருத்தின் அடிப்படையில் செயல்படும் பொழுதும் பிரச்சனைகளுக்கு அதனடிப்படையில் தீர்க்க முயற்சிக்கிற பொழுதும் தவறு எது? சரி எது? என்பது துலங்குகிறது. இவ்வாறு தவறான கருத்துக்களை நீக்கி முழுமையை நோக்கி மார்க்சிசம்-லெனினிசம் நடைபோடுகிறது.
உதாரணமாக 1960களில் சோவியத் படை செக்கோஸ்லோவிக்கியாவில் புகுந்தவுடன் கம்யூனிஸ்டுகள் கருத்து வேறுபட்டனர். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி, சீன கம்யூனிஸ்ட் கட்சி, ஐரோப்பிய கம்யூனிஸ்டு கட்சிகள் அவரவர் கருத்துக்களை முன்நிறுத்தினர். மூன்று விதமான கருத்துக்கள் மோதின. சோவியத் புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்களில் ஒன்று வறட்டு தத்துவக் கோட்பாட்டுத் தவறுகள் அறவே ஒழியாவிட்டாலும் குறைந்துபோனது.
உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தை பின்னுக்கு தள்ளிய தவறு எது? என்று உடனடியாகக் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் சோவியத் கட்சியின் தலைமை முன்மொழிந்த முதலாளித்துவமற்ற பாதை என்ற கோட்பாடுதான் வலது திரிபுகளுக்கு அடிப்படையாக அமைந்தது. உலக நிலைமைகளின் வளர்ச்சிப்போக்கு காட்டிவிட்டது.
லெனின் காலத்தில் இரண்டு விதமான தவறுகளும் நேர்ந்து இயக்கத்தை ஸ்தம்பிக்க வைத்தன. வறட்டு தத்துவ அடிப்படை கொண்டவைகள் மற்றது வர்க்க சமரசப்போக்கு. இப்பொழுது மேலை நாடுகளில் கம்யூனிஸ்ட்டுகள் வறட்டு தத்துவ தவறுகள் செய்வது குறைந்துவிட்டது. வர்க்க சமரசக் கோட்பாட்டால் எழும் தவறுகள் அதிகமாகிவிட்டன. பின்தங்கிய நாடுகளில் இந்த இரண்டு வகையான தவறுகளும் நேருகிற சூழ்நிலை உள்ளது.
சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கம்
20 நூற்றாண்டின் மத்தியில் வர்க்க சமரசக் கோட்பாடால் தவறு செய்வதை எதிர்த்து கொள்கைப் போரை துவக்கியது. இந்த கொள்கைப் போரை எதிரிகள் மார்க்சிசத்தின் அழிவை உறுதி செய்யும் போராட்டமாக சித்தரித்தனர். இந்த கருத்து மோதலினால் சில தவறான கருத்துக்கள் எடுபட்டனவே தவிர மார்க்சிசம்-லெனினிசம் அழியவில்லை. வர்க்க சமரசக் கோட்பாட்டை முன்நிறுத்திய யூரோ கம்யூனிசம் காணாமல் போய்விட்டது. கடுகு சிறுத்தாலும் காரம் போகவில்லை என்பது போல மார்க்சிசம்-லெனினிசம் அதன் சக்தியை இழக்கவில்லை. எதை வைத்து இது கூறப்படுகிறது என கேட்கலாம்.
முதலாளித்துவப் பிரச்சாரக் கருவிகள் இன்றும் மார்க்சிசத்தை தாக்கிக் கொண்டே இருப்பதையும் கம்யூனிஸ்ட்டுகளின் தவறுகளை காட்டி அதுதான் மார்க்சிசம் என்றும் ஊளையிடுவதும் எதைக் காட்டுகிறது. அதன் உயிர்த்தெழும் ஆற்றலைக் காட்டவில்லையா. உழைப்பு கோட்பாட்டையும், வர்க்கப் பிரிவினைகளையும் முன் மொழிந்த ஆடம்ஸ்மித்தையும், டேவிட் ரிக்கார்டோவையும் மறந்துபோனது போல் ஏன் இவர்களால் மார்க்சை மறக்க முடியவில்லை?
முதலாளி வர்க்க அரசியல்வாதிகளால் வர்க்கப் போராட்டங்களை முடிவிற்கு ஏன் கொண்டுவர முடியவில்லை?
பாட்டாளி வர்க்கத்தை அரசியலிலிருந்து ஒதுக்குகிற முயற்சி தற்காலிகமானது என்பதை உணரப்போய்த்தானே பாட்டாளி மக்களை மார்க்சிசமும் பக்கம் போகாமல் தடுக்க கம்யூனிஸ்டுகள் மீது அவதூறுகளைப் பொழிகின்றனர். வரலாற்றையே புளுகுமூட்டைகளாக ஆக்குகின்றனர்.
சீனாவில் மார்க்சிசம் வழிகாட்டவில்லை முதலாளித்துவமே வழிகாட்டுவதாக கூறுகிறவர்கள் அந்த முதலாளித்துவம் ஏன் இந்தியாவில் பொருளாதாரத்தை வளர்க்கவில்லை? ஏன் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் நெருக்கடியைக் கொண்டு வருகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சி கூறுவதென்ன. எங்களுக்கு வழிகாட்டி மார்க்சிசம்-லெனினிசமும் எங்களது அனுபவமாகும். அதனால் எங்களது தவறுகளிலிருந்து பாடம் கற்கும் ஆற்றலை நாங்கள் இழக்கவில்லை என்று கூறுவதைப் பார்க்கலாம்.
இந்திய கம்யூனிஸ்ட்டுகளும் திரிபுகளும்
இன்று இந்தியாவில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு கம்யூனிஸ்ட் அல்லாத நல்லெண்ணம் கொண்டோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. சொத்துடைமை கோட்பாட்டில் மாறுபட்டு கருதுவோரும்கூட அரசியலை சொத்துகுவிக்கப் பயன்படுத்துவதை ஏற்பதில்லை. அவர்களும் இந்த பின்னடைவு அரசியலதிகாரத்தைச் சொத்துகுவிக்கப் பயன்படுத்தும் திருடர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் என்று அஞ்சுகின்றனர். சொத்துகுவிக்கும் ஆசையில் பொருளாதார நெருக்கடியைக் கொண்டுவருவதை விரும்பாதவர்களும் அரசியலில் நேர்மையை விரும்புவோர்களும் இந்த பின்னடைவு ஆபத்து என்றே கருதுகின்றனர். அதையும்விட உலக கம்யூனிஸ்ட் இயக்கமே கவலை கொள்கிறது. இந்த கவலைக்கு அடிப்படை உண்டு.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தலைதூக்கிய வலதுசாரி திருத்தல்வாதத்தையும், மக்கள் ஈடுபடாத ஆயுதக்குழு மனப்பான்மை கோட்பாடான இடது திருத்தல்வாதத்தையும் எதிர்த்து திறமையாக போராடுவதில் மார்க்சிஸ்ட் கட்சி முத்திரை பதித்தது. பூர்சுவா கைக்கூலிகள் இந்த இரண்டு தவறுகளையும் காட்டி மார்க்சிசத்தை இழிவுபடுத்த எடுத்த முயற்சிகளை மார்க்சிஸ்ட் கட்சி செயல்களால் முறியடித்தது. வெகுஜன அமைப்புகளின் இயக்கத்தின் மூலமே அரசியலில் சமூக வாழ்வில் சோசலிச லட்சியத்தை அடைய முடியும். சுரண்டலற்ற பொருளாதார உறவை உருவாக்க முடியும் என்ற மார்க்சிச-லெனினிச கோட்பாட்டை மார்க்சிஸ்ட் கட்சி உயர்த்திப் பிடித்தது. இப்பொழுதும் இனியும் வெகுஜன அமைப்புகளின் இயக்கத்தையே உயிர்நாடியாக கருதுகிறது.
வலது திரிபு நாடு விடுதலையான பிறகு நேரு தலைமையில் உருவான அரசு முழங்கிய ஆவடி சோசலிசம் மக்களை மயக்கிய காலம். அரசு பொதுத்துறையை வளர்த்தது. அதேவேளையில் பெருமுதலாளிகளை கொழுக்க வைக்க பல சலுகைகள், மான்யங்கள் வழங்கியது. தெலங்கானா பகுதியில் கம்யூனிஸ்டுகள் உதவியுடன் விவசாய சங்கம் நிலப்பிரபுக்களின் நிலத்தை விவசாயிகளுக்கு பிரித்து கொடுத்த விதம் நாடு முழுவதும் உழுபவனுக்கு நிலம் என்ற போராட்டம் வெடிக்க வைத்தது. குத்தகை விவசாயிகள் வீறுகொண்டு எழுந்தனர். அதனை அடக்குமுறையால் நேரு அரசு ஒடுக்கியது. நிலப்பிரபுக்களின் உரிமையை பாதுகாக்கும் முறையில் நிலஉடைமை சட்டத்தை கொண்டு வந்தது.
அன்று நேரு அரசிற்கு ஆதரவாக இருப்பது சோசலிசத்திற்கு அடிப்படை போட தேவையான தொழில் வளர்ச்சிக்கு அவசியம் என்ற கருத்து தலைதூக்கியது. நேரு அரசிற்கு ஆதரவு என்ற பெயரில் வர்க்க சமரசம் கூடாது, மக்களின் இயக்கத்தின் மூலம் மொழிவழி மாநிலம் அமைந்ததுபோல் வர்க்கப் போராட்டத்தின் (அதாவது வெகுஜன அமைப்புகளின் இயக்கத்தின்) மூலம் இந்த அரசை பணிய வைக்க முடியும் என்ற கருத்து வர்க்க சமரசக் கருத்தோடு மோதியது. அன்று உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் வலது திரிபு அணுகுமுறையை ஆபத்து என்று ஏற்றுக் கொண்ட சோவியத் கட்சியே நடைமுறையில் அந்த திரிபிற்கு வக்காலத்து வாங்கி புதிதாக விடுதலை அடைந்த நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் இயக்கங்களை நிலைகுலையச் செய்தது.
அன்று அரபு நாடுகளிலும். ஆசியாவிலும் சோவியத் புரட்சிக்குப் பிறகு பிறந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் சொந்த அனுபவத்தின் மூலம் பாடம் கற்க இயலாமல் போனதற்கு சோவியத் கட்சியின் நடைமுறை பெரிதும் காரணமாக இருந்தது. ஆசியாவில் வியட்நாம் கம்யூனிஸ்ட் இயக்கமும், இந்தியாவில் மார்க்சிஸ்ட் இயக்கமும் வலது திருத்தல்வாதத்திற்கு பலியாகாமல் சொந்த அனுபவங்களால் பாடம் கற்கும் ஆற்றலோடு மிஞ்சின. பல நாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்கம் சுருங்கின. இன்று நிலைமை வேறு.
முதலாளித்துவம் உருவாக்கும் நெருக்கடிகள் இன்று உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தை மார்க்சிச-லெனினிச வழியில் சரியான கோட்பாட்டை தேட வைத்துள்ளது. இந்தியாவிலும் இதே நெருக்கடி இருப்பதைக் காண்கிறோம். தொழில் வளர்ச்சிக்கு இடிமுழக்கம் செய்யும் அந்நிய முதலீட்டின் போலித்தனத்தை ஸ்ரீபெரும்புதூர் தொழில் வளாகம் காட்டிக் கொண்டே இருக்கிறது. பால் விலை உயர்வு விவசாயியின் வாழ்க்கை தரத்தை ஒரு மில்லி மீட்டர் கூட உயர்த்தப் போவதில்லை என்பது தெரிவிக்கிறது. மாட்டுத் தீவன விலையாகவும், மாடு வாங்க வாங்கிய கடனுக்கு வட்டியாகவும் அந்த உயர்வு போய்விடும்.
முன்நாட்களில் அன்ஸ்கில்டு லேபர்தான் காசுவலாக இருந்தது. இன்று நிர்வாகிகளைத் தவிர பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், என்ஜினியர்கள் எல்லாமே காண்ட்ராக்ட் காசுவுல் லேபர் ஆக்கப்படுகின்றனர். உழைக்கும் விவசாயிகளின் வறுமையும், அறிவாற்றலையும், உடல் உழைப்பையும் சார்ந்து நிற்கும் பெரும் திரள் மக்களின் உத்தரவாதமற்ற வேலை வாய்ப்புக்களும், இவைகளெல்லாம் சமூக கொந்தளிப்பின் காரணிகளாக ஆகிவருகின்றன. இத்தகைய சூழலில் பூர்சுவா கருத்தோட்டங்கள் பாட்டாளி வர்க்கத்தை பிளவுபடுத்தியிருப்பதை காண்கிறோம். வர்க்கப் பார்வையற்ற அரசியலின் ஆபத்தை உணர்த்த வேண்டியிருக்கிறது. மார்க்சிசம் கற்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. மார்க்சிச-லெனினிச அணுகுமுறையை பாட்டாளி வர்க்கத்தின் போராட்ட இயக்கத்தோடு அனுபவப் படிப்பிணையாக இணைக்க வேண்டியிருக்கிறது.
வலது, இடது திரிபுகளை கடந்து வந்த மார்க்சிஸ்ட் இயக்கம் இந்தப் பணியை செய்ய உறுதி பூண்டுள்ளது. ஏற்பட்ட பின்னடைவையும் சரி செய்யும். நம் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நல்ல உள்ளங்களுக்கு சொல்வோம்.
எங்களது வழிகாட்டி மார்க்சிசம்-லெனினிசமும் எங்களது அனுபவமாகும். எங்களுக்கு தவறுகளை திருத்தி முன்னேறும் ஆற்றலுண்டு. இந்திய பாட்டாளி வர்க்கத்தின் துணையோடு விவசாயி, பாட்டாளி ஒற்றுமையைக் கட்டி அரசியலில் நேர்மையையும் ஆட்சியில் ஜனநாயகத்தையும் பொருளாதாரத்தில் மக்கள் வாழ்வையும் பாதுகாக்கும் படையாக திகழ்வோம்.