1964 ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று அன்றைய கல்கத்தா நகரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 7 ஆவது அகில இந்திய மாநாட்டில் கட்சித் திட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் நீண்ட காலமாக நடைபெற்று வந்த அரசியல் மற்றும் தத்துவார்த்தப் போராட்டத்திற்கு ஒரு முடிவு காணப்பட்டது. அந்தப் போராட்டம், இந்திய அரசின் வர்க்க குணாம்சம் குறித்தும் அத்துடன் இந்தியாவில் ஒரு சோசலிஸ்ட் அமைப்பை உருவாக்குவதற்கான புரட்சிகரப் போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் பங்களிப்பு குறித்ததுமாகும். மேலும் இது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என்று புதியதொரு கட்சி உதயமானதையும் அறிவித்தது. சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் வெளிவருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னதாகவே, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் கருத்து வேறுபாடுகள் உருவாகத் துவங்கியிருந்தன.
இந்திய அரசு அமைப்பில் இந்திய முதலாளிகளின் பங்கு குறித்து, கட்சித் திட்டத்தில் தீர்மானகரமாகக் கூறப்பட்டது. கட்சித் திட்டத்தின்படி, இந்திய அரசு, “பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்பட்ட முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் வர்க்க ஆட்சியாகவும், அது முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றுவதற்காக மேலும் மேலும் அந்நிய நிதி மூலதனத்துடன் நெருக்கமாக உறவை அதிகரித்துக் கொண்டும், செயல்பட்டு வருகிறது,’’ என்று இறுதிப்படுத்தப்பட்டது.
இந்தக் கட்சித் திட்டம், தொழிலாளர் வர்க்கத்தால் தலைமை தாங்கப்படும் மக்கள் ஜனநாயக அரசை நிறுவுவதுதான் கட்சியின் லட்சியம் என்றும், அதற்கான மக்கள் ஜனநாயகப் புரட்சியின் தலைமைப் பாத்திரம் தொழிலாளி வர்க்கத் தினுடையதுதான் என்றும் பறைசாற்றியது.
தொழிலாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரம் குறித்த இத்தகைய தெளிவான புரிதல்தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இதரர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதில் பிரதான அம்சமாக உள்ளது.
வேறெந்த வர்க்கமும் தலைமை தாங்க முடியாது
கட்சித் திட்டம், தொழிலாளர் வர்க்கத்தின் முக்கியத்துவத்தை இவ்வாறு அடிக்கோடிட்டுக் காட்டியிருப்பதுடன், இந்தியாவில் தொழிலாளர் வர்க்கம் மற்றும் அதன் அரசியல் கட்சியின் கீழன்றி மக்கள் ஜனநாயக முன்னணியை வெற்றிகரமாகக் கட்டவோ, புரட்சியை வெற்றி பெறச் செய்யவோ முடியாது என்று அறுதியிட்டுக் கூறியது. வரலாற்று ரீதியில், “நவீன சமுதாயத்தில் தொழிலாளி வர்க்கத்தைத் தவிர வேறு எந்த ஒரு வர்க்கமும் இந்தப் பணியை ஆற்றக்கூடியதாக இல்லை என்ற உண்மையை நமது காலத்தின் மொத்த அனுபவமும் தெளிவாக உணர்த்துகின்றது,’’ என்றும் கட்சித் திட்டம் தெளிவுபடுத்தியது.
தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின் கீழ் கட்டப்பட வேண்டிய கூட்டணி குறித்து கட்சித் திட்டத்தில் கூறப்பட்டிருப்பதாவது: “தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் வலுவான கூட்டணிதான் மக்கள் ஜனநாயக முன்னணிக்கு மையமானதும், அடித்தளமானதும் ஆகும். நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், நீண்ட கால விளைவுகளைத் தரக்கூடிய ஜனநாயக மாற்றத்தைக் கொணரவும், ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தை உறுதிப்படுத்தவும் இந்தக் கூட்டணி மிக முக்கியமான சக்தியாக இருக்கும். புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் இதர வர்க்கங்கள் வகிக்கும் பாத்திரம் தொழிலாளர் – விவசாயிகள் கூட்டணியின் வலிமை, ஸ்திரத்தன்மை ஆகியவற்றையே முக்கியமாக சார்ந்துள்ளது.’’
அதேசமயத்தில், கட்சியின் 7 ஆவது அகில இந்திய மாநாடு, தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்குத் தலைமை ஏற்க வேண்டிய, தொழிற்சங்கங்கள் மற்றும் இதர வெகுஜன ஸ்தாபனங்களில் பெருமளவுக்கு இருந்த பலவீனங்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டது.
கட்சியின் அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம், “கட்சி உறுப்பினர்கள், மக்களுக்கான நிவாரணங்களைப் பெற்றெடுக்கவும் அவர்களது வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவுமான திட்டமிட்டப் போராட்டங்களுக்கு உறுதியாகத் தலைமையேற்று செயல்பட வேண்டும்’’ எனவும் வலியுறுத்தியது. தீர்மானத்தில் மேலும், “வெகுஜன ஸ்தாபனங்களில், அதிலும் குறிப்பாக தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களில் நிலவும் பலவீனங்களினால் எழும் ஆழமான ஆபத்துக்களிலிருந்து முழுமையாக விடுபட்டு, எழாவிட்டால், இந்தப் பணியை வெற்றிகரமாக ஆற்றிட முடியாது’’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த சமயத்தில் தொழிற்சங்க இயக்கத்தின் நிலைமை என்னவாக இருந்தது? அரசாங்கமும், ஆளும் வர்க்கங்களும் தாக்குதலைத் தொடுத்துக் கொண்டும், அதன் விளைவாக உழைக்கும் மக்களின் மீதான சுமைகள் அதிகரித்துக் கொண்டும் இருந்த அதேசமயத்தில், சீர்திருத்தத் தலைமையின் கீழிருந்த தொழிலாளர்கள்கூட போராட்டக் களத்தில் முன்னேறிக் கொண்டிருந்தனர்.
அணிதிரள அறைகூவல்
கட்சி உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் கீழ்வரும் வழிகாட்டுதல்களை மாநாடு வழங்கியது. “சரியான மற்றும் நடைமுறை சாத்தியமான கோரிக்கைகளை வடித்தெடுத்து, தொழிலாளர்களை அவற்றின் கீழ் அணிதிரட்டிட வேண்டும். அதேசமயத்தில் இதர தொழிற்சங்கங்களின் கீழ் உள்ள தொழிலாளர்களையும் சகோதரப்பூர்வமான முறையில் அணுகிட வேண்டும். அவற்றின் தலைமைகளுடனும் ஒரு முறையான அணுகுமுறையை ஏற்படுத்திக் கொண்டு ஒன்றுபட்ட போராட்டங்களைக் கட்டவிழ்த்து விட வேண்டும்.’’
அதேசமயத்தில், தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக ஏற்படும் போராட்டங்களைச் சார்ந்திருக்க முடியாது என்பதையும் தெளிவுபடுத்தி இருந்தது. ஸ்தாபனத்தை வலுப்படுத்துதல், தொழிற்சங்க அமைப்புகளுக்குள் வராது வெளியே இருக்கும் பெருவாரியான தொழிலாளர்களை ஸ்தாபனப்படுத்துதல், அவர்களின் அரசியல் உணர்வினை மேம்படுத்துதல் ஆகிய பணிகளின் முக்கியத்துவம் அடிக்கோடிட்டுக் கூறப்பட்டிருந்தது. அதேசமயத்தில், தொழிற்சங்க இயக்கத்தில் முன்பு நிலவிய இக்கட்டான நிலைமையினை அடிக்கோடிட்டுக் காட்டிட, கட்சியின் அகில இந்திய மாநாடு, தவறவில்லை. அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “தொழிற்சங்க இயக்கம் மிகவும் ஆழமான முறையில் பொருளாதாரவாதத்திற்குள் மூழ்கி இருக்கிறது. தொழிலாளர்களின் அரசியல் உணர்வினை வளர்த்தெடுக்கவும், மக்களின் இதர பகுதியினருக்கு, குறிப்பாக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்று அவர்களை அணிதிரட்டிடவும் நாம் தவறிவிட்டோம்,’’ என்றும் குறிப்பிட்டிருந்தது. `இந்த பலவீனத்தை மிகவும் விரைவில் சரி செய்திட வேண்டும் என்றும், அனைத்து வழிகளிலும் அரசியல் உணர்வினை மிகவும் விரைந்து, புகுத்திட வேண்டும்’ என்றும் கட்சியால் அறைகூவல் விடுக்கப்பட்டது.
கட்சி, தொழிலாளர் வர்க்க ஒற்றுமையைப் பாதுகாத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளத் தீர்மானித்திருந்தது. எனவே, ஏஐ டியுசி-இன் ஒற்றுமையை நிலைநிறுத்திடவும் அதனை வலுப்படுத்திடவும் அறைகூவல் விடுத்திருந்தது. ஏஐடியுசி-இன் ஒற்றுமையை சீர்குலைப் பதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் தொழிலாளர்களை அணிதிரட்டி முறியடித்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தது. தொழிற்சங்க ஜனநாயகம் மிகவும் பலவீனமாக இருப்பதையும், அது இயக்கத்தை எந்த அளவிற்கு மிகவும் ஆழமான முறையில் இடருக்குள்ளாக்குகிறது என்பதையும், அது எவ்வாறெல்லாம் தலைமையில் அதிகார வர்க்க செயல்பாட்டிற்கு இட்டுச் செல்கிறது என்பதையும் சுட்டிக் காட்டியதுடன், அவை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கட்சி அறைகூவல் விடுத்தது.
இவ்வாறு, ஏழாவது அகில இந்திய மாநாடு நிறைவேற்றிய தீர்மானத்திலேயே, தொழிற்சங்க அரங்கில் கட்சி ஆற்ற வேண்டிய பணிகள் சுருக்கமாகப் பட்டியலிடப்பட்டிருந்தன. தொழிற்சங்க இயக்கத்தின் திசைவழி மிகவும் தெளிவானதாகும். ஒற்றுமையை நிலைநாட்டுங்கள், ஸ்தாபனத்தை பலப்படுத்துங்கள், அதன் ஜனநாயக செயல்பாட்டை உத்தரவாதப்படுத்துங்கள், அரசியல் உணர்வை அதிகரித்திடுங்கள், வீரஞ்செறிந்த வெகுஜனப் போராட்டங்களை உருவாக்குங்கள் என்று மிகவும் தெளிவான முறையில் திசைவழி காட்டப்பட்டிருந்தது..
கடமைகள் குறித்த ஆவணம்
1967 இல் மத்தியக்குழுவால் நிறைவேற்றப்பட்ட `தொழிற்சங்க அரங்கில் ஆற்ற வேண்டிய கடமைகள்’ என்னும் ஆவணத்தில் இதற்கான கட்டளைகள் மேலும் விரிவான முறையில் கூறப்பட்டு, வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்மானம், தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் செயல்படும்போது ஆற்ற வேண்டிய அனைத்து அரசியல் கடமைகள், ஸ்தாபனக் கடமைகள் மற்றும் தத்துவார்த்தக் கடமைகள் குறித்தும் தொட்டுக்காட்டி இருக்கிறது.
பொருளாதாரப் போராட்டங்களில் கூட வர்க்க ஒற்றுமை மிகவும் பலவீனமாக இருந்ததைக் கவனத்தில் கொண்டு வர்க்க ஒற்றுமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. `கடமைகள்’ குறித்த ஆவணம், தொழிற்சங்கங்கள் தங்கள் பங்களிப்பினை வலுவான முறையில் ஆற்றிட வேண்டுமாயின், `அவை தொழிலாளர் வர்க்கத்தின் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதில் ஒரு வலுவான கருவியாக மாறிட வேண்டும், இப்போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தை முழுமையாக ஒன்றுபடுத்திடும் வல்லமையைப் பெற்றிருக்க வேண்டும்’. இத்தகு ஒற்றுமையின் முக்கியத்துவம் மற்றும் வர்க்க உணர்வினை மேம்படுத்தக்கூடிய விதத்தில் வர்க்கப் போராட்டத்தை உக்கிரப்படுத்துதலுக்கும் அழுத்தம் தரப்பட்டிருந்தது.
முதலாளிகள் மற்றும் அரசாங்கத்தின் தாக்குதலைத் தடுத்து, முறியடித்திட ஐக்கிய முன்னணி அமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அதேசமயத்தில், `கடமைகள்’ குறித்த ஆவணம் இவ்வாறு `தாக்குதலைத் தடுத்து நிறுத்தும் பணியில் ஒரு வர்க்கமாக செயல்பட’ வேண்டியது தொழிலாளர் வர்க்கத்திற்கு அவசியமான ஒன்று என்பது குறித்தும் அழுத்தம் தந்திருந்தது. ஒன்றுபட்ட நடவடிக்கைகளை வளர்த்தெடுப்பது தொடர்பாக, 1967 ஆவணம் காட்டிய திசைவழி, இன்றைக்கும் பொருத்தம் உடையதாக இருப்பது, மிகவும் சிறப்புக்குரிய ஒன்றாகும்.
“மிகவும் உறுதியான முறையிலும், தீர்மானகரமான விதத்திலும் கீழிருந்து ஐக்கிய முன்னணியைக் கட்டும் உத்திகள் மக்களைத் திரட்டுவதில் உண்மையான போல்ஷ்விக் முறையை நிறுவுகிறது. ஐக்கிய முன்னணி குறித்து தலைமை மட்டத்திலிருந்தான முயற்சிகள் மூலம் இது வலுப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் கீழிருந்து கட்டப்படும் ஐக்கிய முன்னணி முயற்சிகளுக்கு இது ஒரு முன் நிபந்தனையாகும். ஒரு பரந்துபட்ட ஐக்கிய முன்னணியால் மட்டுமே, முதலாளித்துவத்தின் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் மத்தியில் தன்னெழுச்சியான முறையில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். இவ்வாறான முறையில் ஸ்தாபன ரீதியாகத் திரட்டப்பட்ட தொழிலாளர்களோடு, திரட்டப்படாத தொழிலாளர்களையும், முன்னேறிய தொழிலாளர்களோடு, பின்தங்கிய தொழிலாளர்களையும், அனைத்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் கீழ் உள்ள அனைத்துத் தொழிலாளர்களையும் தங்கள் நலன்களைப் பாதுகாப்பதற்காக வெற்றிகரமான முறையில் அணிதிரட்டிட முடியும்.’’
இந்த ஆவணமானது கடந்தகால நடைமுறைகளிலிருந்து முழுமையாக முறிவினை ஏற்படுத்திக் கொண்டு, வர்க்க ஒற்றுமை மற்றும் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டிய அவசியத்தைப் பறைசாற்றியது. இத்தகைய புரிதலின் அடிப்படையில்தான் கட்சி, தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் தன் பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறது.
ஆனாலும், ஏஐடியுசி-இன் பதாகையின் கீழ் வீரஞ்செறிந்த போராட்டங்களை வளர்த்தெடுப்பதோ, ஜனநாயக முறையில் செயல்படுவதை உத்தரவாதப்படுத்துவதோ, ஒற்றுமையைக் கட்டும் பணியை முன்னெடுத்துச் செல்வதோ சாத்தியமில்லாமல் இருந்தது. ஏஐடியுசி-க்குள்ளேயே ஒற்றுமையை நிலைநிறுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை மேற்கொண்ட முயற்சிகள் பலனளித்திடவில்லை. 1962 இலிருந்து ஏஐடியுசி-க்குள்ளேயே நடத்தி வந்த போராட்டம் 1969 வரை தொடர்ந்தது.
ஏஐடியுசி-இன் அப்போதைய முன்னணித் தலைமை, அதன் அரசியல் மற்றும் தத்துவார்த்த நிலைமைகள் காரணமாக, போராட்ட நடவடிக்கைகளுக்குத் திட்டமிடுவதிலும், தலைமை தாங்குவதிலும் முன்முயற்சி எடுக்கத் தயாராக இருக்கவில்லை. ஏதாவது காரணத்தைச் சொல்லி எவ்விதமான போராட்டத்திற்கும் தலைமையேற்கக் கூடிய விதத்தில் தயாரிப்புப் பணிகளைச் செய்யாதவிதத்தில் அமைந்திருந்தன. ஊதியங்கள், அகவிலைப்படி, போனஸ் போன்று நாட்டிலிருந்த உழைக்கும் மக்கள் எதிர்கொண்ட பல்வேறு முக்கியமான பிரச்சனைகளாக இருந்தாலும் சரி, அரசாங்கத்துடன் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக தத்துவார்த்த மற்றும் அரசியல் பிரச்சனையாக இருந்தாலும் சரி, ஏராளமான வித்தியாசங்கள் தோன்றிக் கொண்டே இருந்தன. இவை அனைத்தையும் ஜனநாயக முறையில் தீர்த்திட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் சீர்குலைக்கப்பட்டன. இவை அனைத்தும் இப்போது தொழிலாளர் வர்க்க இயக்க வரலாற்றின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.
`தொழிலாளர் வர்க்கம் முதலாளிகளிடமிருந்தும், அரசாங்கத்திடமிருந்தும் மூர்க்கத்தனமான முறையில் தாக்குதல்களைத் தொடர்ந்து எதிர்கொண்டு வந்த’ சமயத்தில்தான் இவை அனைத்தும் நடந்து கொண்டிருந்தன. 1967 தேர்தல்களுக்குப் பின்னரும், நாட்டில் எட்டு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோற்ற பின்னரும், மக்கள் மத்தியில் இருந்த கோபம் பல்வேறு வடிவங்களில் வெடித்தது. நாட்டில் பல்வேறு பிரிவினரின் தீவிரமான போராட்டங்களும் நடைபெற்று வந்தன. மத்தியிலிருந்த அரசாங்கம் உழைக்கும் வர்க்கத்தின் போராட் டங்களுக்கு எதிராகக் கடும் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் இருந்த மாநில அரசாங்கங்கள், தொழிலாளர்களின் பக்கம் நின்று, மத்திய அரசின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிய மறுத்தன. இந்தக் காலகட்டத்தில்தான் இம்மாநில அரசாங்கங்கள் ஆளும் வர்க்கங்களால் துவக்கப்பட்ட சதிகளின் மூலமாகக் கவிழ்க்கப்பட்டன.
புதிய ஸ்தாபனம் உதயம்
ஏஐடியுசி தலைமை, போராடும் தொழிலாளர்களின் விருப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறியதும், பல்வேறு மட்டங்களில் ஜனநாயக விரோத முறையில் செயல்பட்டதும், ஏஐடியுசி-க்குள் செயல்பட்டு வந்த கட்சியின் முன்னணி ஊழியர்களை, 1970 இல் இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) என்னும் புதியதொரு தொழிற்சங்கத்தை அமைத்திட, நிர்ப்பந்தித்தது.
சிஐடியு-வின் அமைப்பு மாநாடு, தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், `ஒன்றுபடு – போராடு’ — போராட்டங்களை வலுப்படுத்துவதற்காக ஒன்றுபடு, ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காகப் போராடு — என்னும் முழக்கத்தை உருவாக்கிக் கொடுத்தது. சிஐடியு-வின் நாடு தழுவிய அளவிலான பிரச்சாரங்கள் ஒற்றுமை வாரம் அனுசரிப்பதுடன் தொடங்கின.
சிஐடியு-வின் அமைப்பு மாநாட்டில் நிறைவுரையாற்றியபோது, நிறுவனத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் பி.டி. ரணதிவே, ஒற்றுமை மற்றும் ஒன்றுபட்ட போராட்டங்களின் முக்கியத்துவம் குறித்து மிகவும் விரிவாகக் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது: “உழைக்கும் வர்க்கம் ஒன்றுபட வேண்டிய தருணமிது. தாங்கள் ஒன்றுபடாவிட்டால், தங்கள் மீது ஏவப்பட்டுள்ள தாக்குதலைச் சந்திக்க முடியாது என்பதை, உழைக்கும் வர்க்கம் சொந்தமாகவே சிந்திக்கும் தருணமிது. நம்முடைய ஸ்தாபனமும் இந்தக் களத்தில் இறங்கி ஒவ்வொருவரிடமும், `ஒற்றுமைப் பதாகையை உயர்த்திப் பிடிப்போம், பொது செயல்பாடுகளிலும், கூட்டு செயல்பாடுகளிலும், ஒற்றுமைப் பதாகையை உயர்த்திப் பிடிப்போம்,’ என்று கூற வேண்டிய தருணமிது’’ என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும், முன்னணி ஊழியர்களும் இத்தகைய புரிதலுடன், “ஒன்றுபடுவோம் – போராடுவோம்’’ என்னும் முழக்கத்துடன் கடந்த ஐம்பதாண்டு காலமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.
தொடர்ந்து வந்த அரசாங்கங்களின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டங்களை வளர்த்தெடுப்பதற்கான இடைவிடா முயற்சிகள் மூலமாக, தொழிற்சங்கங்களின் ஐக்கிய கவுன்சில் (UCTU), தேசியப் பிரச்சாரக் குழு (NCC), இந்தியத் தொழிற் சங்கங்களின் நடவடிக்கைக் குழு (Sponsoring Committee), தற்போதைய பதினொன்று மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் சுயேச்சையான தேசிய சம்மேளனங்களின் கூட்டுமேடை போன்ற பல்வேறு மேடைகள் படிப்படியாய்த் தோற்றுவிக்கப்பட்டன. கட்சி இந்நடவடிக்கைகள் அனைத்தையும் முழுமையாக ஆதரித்தது. அதன் செயல்வீரர்கள், இக்காலகட்டம் முழுவதும், பல்வேறு துறைகளிலும் மற்றும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பல்வேறு வேலை நிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின்போதும், தொழிலாளர் களின் ஒற்றுமையை உருவாக்குவதில் முன்னணிப் பாத்திரம் வகித்தனர்.
புதிய சவால்கள்
நாட்டில் கடந்த இருபத்தைந்து ஆண்டு காலமாக நடைபெற்று வரும் நவீன தாராளமய ஆட்சியின் கீழ், உழைக்கும் மக்களுக்கு எதிராக மிகவும் கடுமையான முறையில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன. கட்சியின் 20 ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தத்துவார்த்தப் பிரச்சனைகள் மீதான தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது: “நவீன தாராளமய சீர்திருத்தக் கொள்கையானது தொழிலாளர் படைப்பிரிவினரில் பெரும்பகுதியினரை மிகவும் மோசமான விதத்தில் முறைசாராப் பிரிவினராக மாற்றி அமைப்பது அதிகரித்திடும். அவ்வாறான `வளர்ச்சி’ என்றென்றும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். மூலதனம் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக, நிரந்தர வேலைவாய்ப்புகளை கேசுவல் மற்றும் ஒப்பந்தத் தொழில்களாக மாற்றுவதுடன், தொழிலாளர்களின் ஒற்றுமையை சிதைக்கும் மற்றும் சீர்குலைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன. கேசுவல், தற்காலிக மற்றும் சுயவேலைவாய்ப்புத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.’’
நன்கு வளர்ந்த பெரிய நிறுவனங்களில்கூட, தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக இப்போது இருந்து வருகிறார்கள். இது, முறைசாரா மற்றும் அணிதிரட்டப்படாத ஊழியர்களையும் சேர்ந்து சுமார் 95 சதவீதம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தத்துவார்த்தப் பிரச்சனைகள் மீதான தீர்மானம் வலியுறுத்துவதாவது: “இத்தகைய சவால்களை விஞ்சி வெற்றிபெற, பொருத்தமான உத்திகளை உருவாக்க, அணிதிரட்டப்படாத தொழிலாளர்களையும் புரட்சிகர நடவடிக்கைக்குள் ஈர்ப்பதன் மூலம் தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்திடுவோம்.’’
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசாங்கம், இந்திய மற்றும் அயல்நாட்டுக் கார்ப்பரேட்டுகளின் முழு ஆதரவுடனும் ஆட்சியில் அமர்ந்ததைத் தொடர்ந்து, தொழிலாளர் வர்க்கம் கடுமையாகப் போராடிப் பெற்ற பல உரிமைகள் மீது புதிதாகத் தாக்குதல்கள் தொடுக்கப்படுவது தொடங்கி இருக்கிறது. ஆட்சிக்கு வந்த நூறு நாட்களுக்குள்ளேயே, தொழிலாளர் நலச்சட்டங்களில் பல முக்கியமான ஷரத்துக்கள் அரக்கத்தனமான முறையில் திருத்தப்பட்டு வருகின்றன. அதன்மூலம் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெரும்பான்மை தொழிலாளர்களை, தொழிலாளர் நலச்சட்டங்கள் மற்றும் தொழிற்சாலை ஆய்வாளர்களின் வரையறைக்குள் வராது விலக்கி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இத்தகைய சவால்கள் வலுவாக எதிர்கொள்ளப்பட வேண்டியவைகளாகும். மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் கூட்டுமேடை ஏற்கனவே இதனைக் கையில் எடுத்துக் கொண்டு, இது தொடர்பாக பிரச்சாரங்களையும், போராட்டங்களையும் தொடங்கிவிட்டது. இந்த முக்கியமான போராட்டம் குறித்து கட்சி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தொழிலாளர் வர்க்க இயக்கம் இன்றைய தினம் மிகவும் ஓர் இக்கட்டான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. தொழிற்சங்க அரங்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கியமான கடமைகள் எனக் கட்சியால் அளிக்கப்பட்ட கடமைகளில் பல இன்னமும் நிறைவேற்றப்படாத நிலையிலேயே இருக்கின்றன. தொழிற்சங்க இயக்கத்தில் மேல்மட்டத்தில் கட்டப்பட்டுள்ள ஒற்றுமை, கீழ்மட்ட அளவில் இன்னமும் முழுமையாகப் போய்ச் சேர வேண்டிய நிலை இருக்கிறது. தொழிற்சங்க அரங்கில் ஆற்ற வேண்டிய `கடமைகள்’ குறித்து 1967 மற்றும் 1983 ஆவணங்களிலும் மற்றும் கட்சி அமைப்புகள் மற்றும் மாநாடுகள் பலவற்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலும் பட்டியலிடப்பட்ட பலவீனங்கள் பல இன்னமும் களையப்படாமலேயே இருக்கின்றன. தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் உணர்வுமட்டத்தை உயர்த்துவதிலும், இக்கடமையை வலுவான முறையில் நிறைவேற்றக் கூடிய விதத்தில் முன்னணி ஊழியர்களைத் தயார் செய்வதிலும் நாம் இன்னும் பின்தங்கியே இருக்கிறோம்.
தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில் மக்கள் ஜனநாயக முன்னணியை அமைத்திடுவதற்கான முயற்சிக்கு ஏற்றவகையில், தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் முன்னணிப் பிரிவினரை ஈர்த்திட, இன்னும் ஏராளமான பணிகளைச் செய்ய வேண்டியது இருக்கிறது. இதற்கு, வர்க்கப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவதும், தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் உணர்வை மேம்படுத்துவதும் தேவை. இதற்கு, தொழிற்சங்க அரங்கில் ஆற்ற வேண்டிய `கடமைகள்’ ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பலவீனங்கள் களையப்பட வேண்டியதும் அவசியம்.
கட்சியின் 20 ஆவது அகில இந்திய மாநாட்டில் வெளியிடப்பட்ட `சில தத்துவார்த்தப் பிரச்சனைகளின் மீதான தீர்மானத்தில்’ குறிப்பிடப்பட்டிருப்பதைப்போல, “தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின்கீழ், இந்திய மக்கள், விடுதலையை எய்திட உறுதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கட்சி என்ற முறையில், இந்தியாவில் மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக, அதனால் சுரண்டப்படும் மக்கள் அனைவருக்கும் தலைமையேற்று முன்னேறிச் செல்லக்கூடிய விதத்தில், தொழிலாளர் வர்க்கத்தின் வர்க்க ஒற்றுமையையும், புரட்சிகர உணர்வையும், தொழிலாளர் வர்க்கத்தின் வலிமையையும் உயர்த்த வேண்டியது அவசியம்.”