மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


மகத்தான அக்டோபர் புரட்சி: மானுட வரலாற்றில் திருப்புமுனை


1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் போல்ஷவிக் கட்சி சோசலிச புரட்சியை வெற்றிகரமாக சாதித்ததை மஹாகவி பாரதி மிகச்சரியாகவே யுகப்புரட்சி என்று அழைத்தார். 74 ஆண்டுகள் நிலைத்த இப்புரட்சியின் தொடர்ச்சியாக உருவான சோசலிச சோவியத் ஒன்றியம் பல மாபெரும் சாதனைகள் நிகழ்த்திய போதிலும் எதிர்ப்புரட்சி சக்திகளால் பின்னுக்குத் தள்ளப்பட்டு, 1991 இல் சிதைக்கப்பட்டது. அப்பொழுது சோசலிசம் தோற்றுவிட்டது, இனி உலகம் முழுவதும் ஆதிக்கம் முதலாளிகளின் கைவசமே இருக்கும் என்று ஏகாதிபத்தியம் கொக்கரித்தது. ஆனால் முதலாளித்துவம் மானுட சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தீர்க்க உதவாது என்பது மட்டுமல்ல, அவற்றை தீவிரப்படுத்தும் என்பதைத்தான் கடந்த 23 ஆண்டுகளின் அனுபவம் காட்டுகிறது.

2007 ஆம் ஆண்டு துவங்கி இன்று வரை தொடரும் ஆழமான முதலாளித்துவ நெருக்கடி எண்ணற்ற மக்களின் வாழ்க்கை வாய்ப்புகளை மேலை நாடுகளிலும் உலகெங்கிலும் பறித்து வருகிறது. வேலையின்மை, வறுமை, கல்வி மறுப்பு, ஆரோக்கிய உரிமை பறிப்பு என்று துயரம் தொடர்கிறது. வறுமையும் வேலையின்மையும் கல்வி உரிமை மறுப்பும் தவிர்க்க முடியாதவையா? அறிவியலும் தொழில்நுட்பமும் மிக பிரும்மாண்டமாக வளர்ந்துள்ள இன்று 100 கோடிக்கும் அதிகமான மக்கள் பட்டினியில் வாட வேண்டுமா? முதலாளித்துவத்தில் நாம் சந்திக்கும் இன்னல்கள் இயற்கையின் விதியா அல்லது உற்பத்தி அமைப்பின் விதியா?

வீழ்த்தப்பட்ட சோவியத் ஒன்றியத்தின் 70 ஆண்டு வரலாறு வறுமையை ஒழிக்க முடியும், வேலையின்மையை விரட்ட முடியும், அனைவருக்கும் கல்வியும் ஆரோக்கியமும் தர முடியும், பட்டினியற்ற சமூகத்தை நிர்மாணிக்க முடியும் என்பதை நமக்கு எடுத்துரைக்கின்றன. மிகவும் பின்தங்கிய ஜார் கால ரஷ்யாவில் 1917 இல் நிகழ்ந்த சோசலிச புரட்சியை முளையிலேயே கிள்ளி எறிய ஏகாதிபத்திய நாடுகள் ரஷ்யாவுக்குள் புதிய அரசை கவிழ்க்க துருப்புகளை அனுப்பினர். எதிர்ப்புரட்சியாளர்களுக்கு எல்லா உதவிகளையும் அளித்தனர். இவற்றை முறியடித்து சோசலிச புரட்சி முன்னேறியது. 1918-20 எதிர்ப்புரட்சி கலகம், 1924 இல் லெனின் மறைவு, ஏகாதிபத்திய நாடுகளின் வர்த்தகத் தடைகள், தொழில்நுட்பம் தர மறுப்பு, ஏகாதிபத்தியத்தின் ராணுவ முஸ்தீபுகள், முற்றுகைகள் இவற்றையெல்லாம் எதிர்கொண்டு சோசலிச சோவியத் ஒன்றியம் முன்னேறியது. 1914-18 யுத்தம், எதிர்ப்புரட்சி கலகங்கள் உள்ளிட்ட மேலே சொல்லப்பட்டுள்ள சூழலால் 1928 இல் தான் சோவியத் ஒன்றியத்தின் ரஷ்யப் பகுதி 1913 ஆம் ஆண்டு உற்பத்தி நிலையை மீட்க முடிந்தது. ஆனால் அடுத்த 12 ஆண்டுகளில் திட்டமிட்ட சோசலிச பொருளாதார வளர்ச்சி மூலம் உலகின் இரண்டாம் பெரும் தொழில் நாடாக 1940 இல் சோவியத் ஒன்றியம் ஆகியது. வளர்ந்த ஐரோப்பிய நாடுகளை கதிகலங்க வைத்த நாஜி படைகளை சோசலிச சோவியத் ஒன்றியம் வீறுகொண்டு எழுந்து ஓட ஓட விரட்டியது.

அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் ஆரோக்கியம், பட்டினி என்ற கொடுமையை முற்றிலும் சோவியத் மண்ணிலிருந்து விரட்டியது உள்ளிட்ட பெரும் சாதனைகளை சோசலிச திட்டங்கள் சாதித்தன. காலனி ஆதிக்கச் சுரண்டலில் ஈடுபடாமல், உழைப்பாளி மக்களை முதலாளித்துவ பாணியில் சுரண்டாமல், வளர்ந்த நாடுகளால் தொழில்நுட்பம் மறுக்கப்பட்ட சூழலில், ராணுவ தாக்குதலை முறியடிக்க தன்னை தயார்படுத்திக் கொண்டே, இந்த முன்னேற்றங்களை 30 ஆண்டுகளுக்குள் சோவியத் சோசலிசம் சாதித்தது.

சோவியத் ஒன்றியத்தின் இந்த சாதனைகள், மேலை நாடுகளிலும் பிரதிபலித்தது. அங்கு உழைப்பாளி மக்களுக்கு குறைந்த பட்ச உரிமைகளையும் சலுகைகளையும் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடியை ஆளும் வர்க்கங்களுக்கு சோவியத் சாதனைகள் ஏற்படுத்தின. ஓய்வூதியம், வேலை இழப்பு காலங்களில் நட்ட ஈடு ஊதியம், கல்வி மற்றும் மருத்துவ வசதி போன்றவை முதலாளிகளின் கருணை கொடை அல்ல, உழைப்பாளி மக்களின் போராட்டங்கள் மூலமும், சோசலிச சோவியத் ஒன்றியம் இவற்றை செய்து காட்டியதன் விளைவாகவும் கிடைத்தவை. சோசலிச சோவியத் ஒன்றிய சாதனைகள் உலகம் முழுவதிலும் உள்ள உழைப்பாளி மக்களுக்கு உரிமை போராட்டங்கள் நடத்த உத்வேகம் அளித்தது மட்டுமின்றி காலனி ஆதிக்கத்தில் அடிமைகளாக வாழ்ந்து வந்த மக்களின் தேச விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு ஆதர்ச சக்தியாக செயல்பட்டது.

இரண்டாம் உலகப் போரில் 2 கோடி மக்களை நாஜிப் படைகளின் கொடிய தாக்குதலுக்கு இழக்க நேர்ந்தாலும், நாஜிசத்தை வீழ்த்தி உலக மக்கள் அனைவரும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழிகோலியது. சோவியத் வலுவும் மக்கள் சீன புரட்சியின் வெற்றியும் பலவீனமடைந்திருந்த ஏகாதிபத்திய நாடுகளை எதிர்த்த தேச விடுதலை இயக்கங்களுக்கு பெரும் வலுவூட்டின.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வகையில், சோவியத் சோசலிச சாதனைகளுக்கு எடுத்துக்காட்டாக ஒரே ஒரு செய்தியை நாம் பார்ப்போம். 1926 இல் சோவியத் ஒன்றியம் உருவாகிய கட்டத்தில் 9 முதல் 49 வயது வரை உள்ளவர்கள் மத்தியில் எழுத்தறிவு பெற்றவர்கள் சதவிகிதம் 56.6 தான். அடுத்த 13 ஆண்டுகளில் 1939 இல் இந்த விகிதம் 87.4 ஆக உயர்ந்தது. சோவியத் ஒன்றியத்தின் மத்திய ஆசிய குடியரசுகள் 1926 இல் மிகவும் பின் தங்கியிருந்தன. எழுத்தறிவு விகிதம் உஸ்பெகிஸ்தானில் 11.6%, கஜகஸ்தானில் 25.2%. 1939 இல்? இவை முறையே 78.7%, 83.6% என்று அதிகரித்தன.1959 இல் சோவியத் ஒன்றியத்தின் எழுத்தறிவு விகிதம் 98.5% ஆக உயர்ந்திருந்தது. மேலைநாட்டு முதலாளித்துவங்கள் நூற்றாண்டுகளில் சாதிக்காததை 50 ஆண்டுகளுக்குள்ளாக சோசலிச சோவியத் ஒன்றியம் சாதித்தது.

இரண்டாம் உலகப்போரில் பெரும் இழப்புகளை சோவியத் ஒன்றியம் சந்தித்தது. 70 சதம் தொழிற்சாலைகள் போரில் அழிந்தன. 2 கோடி மக்கள் இறந்தனர். பல நகரங்கள் தரைமட்டமாக்கப்பட்டிருந்தன. இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் சோசலிசத்திற்கு எதிராக பனிப்போரை அமெரிக்க ஏகாதிபத்தியம் கட்டவிழ்த்துவிட்டது. இருப்பினும் இவற்றையெல்லாம் எதிர்கொண்டு சோவியத் ஒன்றியம் வேகமாக முன்னேறியது. பின்னர் 1970களில் சோவியத் ஒன்றியம் பல பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்த போதிலும், மந்த நிலை சில ஆண்டுகளில் ஏற்பட்டாலும், 70 ஆண்டு சோவியத் சாதனைகள் மறுக்க முடியாதவை.

சோசலிச வளர்ச்சியில் முன்னுக்கு வந்த சவால்களுக்கு சோசலிச நிலைபாட்டில் நின்று தீர்வு காண சோவியத் தலைமை தவறியதும் ஏகாதிபத்தியத்தின் தொடர் தாக்குதலும் 1991 இல் சோவியத் ஒன்றியமும் அங்கே சோசலிசமும் வீழ்த்தப்படுவதற்கு இட்டுச் சென்றது. எனினும் தனது 70 ஆண்டு வாழ்க்கையில் சோவியத் சோசலிசம்தான் வறுமையை ஒழிக்க முடியும், வேலையின்மை என்ற கொடிய சமூக அவலத்தை விரட்டி அடிக்க முடியும், பட்டினியை ஒழிக்க முடியும், ஆண்-பெண் சமத்துவத்தை நோக்கி மானுடம் செல்ல முடியும், உழைப்பாளி மக்களுக்கு புதிய கம்பீரமானவாழ்வை தர இயலும் என்று சோவியத் புரட்சி உலகுக்கு வழிகாட்டியது. மீண்டும் ஒரு நாள் சோவியத் மண்ணில் சோசலிசம் மலரும். தனது தவறுகளில் இருந்து படிப்பினைகளைப் பெற்று தன்னை சரி செய்து கொண்டு சோசலிசம் வீறு கொண்டு எழும். நாம் வாழும் இன்றைய உலகின் எந்த அடிப்படை பிரச்சனையையும் முதலாளித்துவம் தீர்க்காது என்பதை மானுடம் உணர்ந்துதான் வருகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, நவீன சமூக உற்பத்திக்கு உழைப்பாளி மக்களும் இயற்கை வளங்களும் கருத்தாலும் கரத்தாலும் உழைக்கும் மக்கள் படைத்துள்ள, படைத்து வரும் நவீன அறிவியலும் தொழில்நுட்பமும்தான் தேவை. தனியாக, உடைமை அடிப்படையில், உற்பத்தியை நிர்வகிப்பதாக சொல்லிக் கொண்டு உழைப்பை சுரண்டும் முதலாளி வர்க்கம் அவசியம் இல்லை என்பதை மானுடத்திற்கு உணர்த்திய புரட்சி அக்டோபர் புரட்சி. எனவேதான் உலகளவில் முதலாளி வர்க்கம் அதனை பூண்டோடு அழிக்க முயன்றது, இன்றும் அந்த முயற்சி தொடர்கிறது. அது தோற்கும். அக்டோபர் புரட்சி விதைத்த சோசலிச கனவுகள் நனவாகும்.%d bloggers like this: