சட்டமன்றமா? ஜனநாயக நியதிகளின் கொலைக்களமா?


இன்று மாநில அரசாங்க அலுவல்களை தாங்கள் உருவாக்கிய சட்டமன்றத்தால் பரிசீலிக்க முடிகிறதா அல்லது சட்டமன்றத்தை தர்பாராக மாற்றிய அ.திமுக தலைவர் வீட்டிலிருந்து வழிகாட்ட முதலமைச்சர் செயல்படுகிறாரா என்ற ஐயம் தமிழக மக்களை வாட்டுகிறது.

இது ஒரு அரசியல் கட்சியின் குடும்ப விவகாரம் பிறர் தலையிட முடியாது என்று சொல்லிவிட முடியாது. அதிகாரத்தை பயன்படுத்தி சொத்துகுவித்த வழக்கை அதே அதிகாரத்தை பயன்படுத்தி 18 ஆண்டுகள் நிலுவையில் வைக்க முடிந்த ஒருவர் தண்டனை பெற்று மேல்முறையீடு காலத்தில் விசுவாசிகள் மூலம் அதே அதிகாரத்தை செலுத்த முடியுமா? என்ற கேள்விக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

ஜனநாயகம் இருந்தால்தான் ஜீவிக்க முடியும் என்ற நிலையிலிருக்கும் கட்சிகளில் ஒன்றான அதிமுகவிற்கு அரசியல் நிர்ணய சட்டம் வகுக்கும் நெறிகளையோ, சட்டமன்ற விதிகளையோ, ஜனநாயக பண்பாடுகளையோ கோட்பாடுகளையோ மதிக்காத போக்கு எப்படி வந்தது என்பதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் மையமாக இருப்பது ஆளும் கட்சி என்ற வகையில் சட்டமன்றத்தை செயல்படுத்தும் முறை ஆகும். அதனை வரலாற்று நிகழ்வியக்க அடிப்படையில் பரிசீலிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

1952 முதல் தமிழ்நாட்டு சட்டமன்றம் எப்படி செயல்பட்டுவருகிறது என்பதை கவனித்தால் மக்களாட்சி மன்றமாக மேன்மையடையாமல் பல அம்சங்களில் பிரிட்டீஷ் ஆட்சிக்கு கப்பம் கட்டிய நவாபுகள் அல்லது மகாராஜாக்கள் காலத்து தர்பாரின் பல அம்சங்களை கொண்டதாக ஆக உருமாறிவருவதைக்காண முடியும். நமது நாட்டு நாடாளுமன்றம், சட்டமன்றம் இவ்விரண்டையும் அரசியல் நிர்ணய சட்டம் வகுத்த சட்ட விதிகளின்படி செயல்பட வைப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கடமையாகும். அரசியல் நிர்ணய சட்டத்தின் ஜீவனை மீறாமல் பாகுபாடற்ற அரசாங்க நிர்வாகத்திற்காக

  1. சட்ட விதிகளை திருத்தல் அல்லது உருவாக்கல்,
  2. நிதிநிர்வாகம்.
  3. அரசாங்க அமைப்பின் மந்தம் மற்றும் ஊழல் மலிந்த செயல்பாட்டை விமர்சனம் செய்து பரிசீலித்து உரிய மாற்றங்களை கொண்டு வருதல்

ஆகிய மூன்றும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் இவைகளின் கடமைகள் என அரசியல் நிபுணர்கள் காட்டுகின்றனர். நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற நிகழ்ச்சி நிரல் மற்றும் நடவடிக்கை ஆய்வு ஆண்டறிக்கைகளும் இவைகளையே குறிப்பிடுகின்றன.

இந்த மூன்று கடமைகளையும் நிறைவேற்றுவது அனைத்து உறுப்பினர்களின் பொறுப்பாகும். எனவே கட்சிகளின் விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் குழுக்கள் உருவாக்க விதிகள் உள்ளன. மூன்று விதமான குழுக்களை உருவாக்கிட விதிகள் கூறுகின்றன.

  1. நிதி குழுக்கள்
  2. ஆய்வுக்குழுக்கள்
  3. நிரந்தரகுழுக்கள்

இந்த குழுக்கள் ஆழமாக பரிசீலித்து தயாரித்த அறிக்கைகள் அவையிலே வைக்கப்பட வேண்டும். அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையும் இந்த குழுக்களின் சிபாரிசுகளை அடிப்படையாக கொண்டு அவையிலே வைக்கப்பட வேண்டும். அங்கே விவாதத்திற்குப் பின் வாக்கெடுப்பு மூலம் சட்டமாகவோ அரசிற்கு வழிகாட்டியாகவோ அவைகள் உருப்பெறும்.

சட்டமன்ற நடவடிக்கைகளில் மிக முக்கியமானவைகள் கேள்வி நேரம், அவசர தீர்மானம். கவன ஈர்ப்பு தீர்மானம், கண்டன தீர்மானம், நம்பிக்கை இல்லா தீர்மானம், நம்பிக்கை தீர்மானம், ஒத்திவைப்பு தீர்மானம் இவைகளின் மீது நடக்கும் விவாதங்கள், சட்டமன்ற குழுக்களின் பரிசீலனை அறிக்கைகள், அரசின் கொள்கை அறிக்கைகள், இவைகளின் மீது விவாதங்கள்.

அவைகளை விட முக்கியமானது உள்ளே என்ன நடக்கிறது என்பதை மக்கள் அறிந்திட பிரஸ் கேலரி என்ற (பத்திரிகை டி.வி. நிருபர்களின் இருப்பிடம்) அமைப்பு. இதற்கென இடம் ஒதுக்கி வசதிகள் செய்து கொடுப்பது சபாநாயகரின் பொறுப்புகளில் ஒன்று என விதிகள் கூறுகின்றன. ஏன்?

உறுப்பினர்கள் சபை நடவடிக்கைகளில் எவ்வாறு பங்கு அளிக்கின்றனர் என்ற தகவல் அறிவது மக்களின் அடிப்படை உரிமையாகும். அவர் தூங்குகிறாரா. கைபேசி தகட்டில் ஆபாசபடம் பார்க்கிறாரா உறுப்பினர்கள் ஆத்திர மூட்டும் அசிங்க அசைவுகளைக் காட்டுகிறார்களா, எதிர்வரிசையினர் எதற்கு வெளி நடப்பு முதல் முழக்கமிட்டு சபை முடக்கம் வரை ஈடுபடுகிறார்கள், முதலமைச்சரை புகழ நேரத்தை செலவளித்துவிட்டு தொகுதி மக்களை ஏமாற்ற அவர்கள் பிரச்சினைகளை பேசியதாக அவை குறிப்பில் எழுத சபாநாயகர் அனுமதிக்கிறாரா, என்பவைகள் மட்டுமல்ல பொதுவாக உறுப்பினர்களின் பங்களிப்பை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது பிரஸ் கேலரியின் கடமையாகும். சட்டமன்ற உறுப்பினர்களின் ஆக்க ஆற்றலையும் ஆளுமையையும் வெளிக்கொண்டு வர இதை விட சிறந்த ஏற்பாடு இருக்க முடியாது.

மேலே கண்டவைகளை அளவுகோலாக்கி தமிழக சட்டமன்ற நடவடிக்கைகளை பரிசீலித்தால் அதிர்ச்சி கிடைக்கும். நடைமுறையில் நாம் காண்பது வேறு.

சபாநாயகரும் அதிகாரமும்

முதலில் சபையை நடத்தும் சபாநாயகரின் நிலமை என்ன? வானவளாவிய அதிகாரம் சபாநாயகருக்கு இருப்பதாக கூறப்படுகிறதே! அது நிசம்தானா? வானளாவிய அதிகாரம் சபாநயகருக்கு இருப்பதாக கூறப்படுவது ஒரு தோற்றப்பிழை ஆகும். பிரிட்டீஷ் காலத்து சம்பிரதாயங்கள், சடங்குகள் அவரை உயர்ந்த அதிகாரம் படைத்தவர் என்ற தோற்றத்தை உருவாக்குகிறது. சட்டமன்ற விதிகளின் 87 வது விதியில் உள்ள பிரிவின்படி சட்டமன்ற உறுப் பினர்கள் சபாநாயரிடம் குனிந்து நின்றே வெளியே செல்ல அனுமதி கேட்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் அல்லாத முக்கியமானவர்கள் வர நேர்ந்தால் அவர் அனுமதியின்றி கைத்தட்டக் கூடாது. அந்த விதிகளின் படி சட்டாம்பிள்ளை என்ற அந்தஸ்து தவிர இன்றைய சபாநாயகருக்கு வேறு அதிகாரம் இருப்பதாக நடைமுறையில் தெறியவில்லை. சட்டமன்றவிதிகள் அவரை நடுநிலை வகிக்க சொல்கிறது. ஆனால் இன்றைய சபாநாயகர்களுக்கு அந்த விதிகளின் படி நடக்கும் உறுதி எதுவுமிருப்பதாக கண்ணில் படவில்லை.

முதலமைச்சரின் கண் அசைவுக்கேற்ப சபாநாயகர் ஆடுகிற நிலைமைதான் தமிழக சட்டமன்றத்திலே இன்று நிலவுகிறது.

வரலாறு கூறுவது என்ன?

1971ம் ஆண்டு உருவான சட்டமன்றத்தில் திமுகவில் ஏற்பட்ட பிளவால் சபாநாயகராக இருந்த கே.ஏ.மதியழகன் ஆளும் பிரிவிற்கு சாதகமாக செயல்பட மறுத்ததால் அவரை சபாநாயகராக தேர்வு செய்த கட்சியே அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியது. அதனால் பதவி விலகினார். பின்னர் உதவி சபாநாயகர் சீனிவாசன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதால் அவரும் வாக்கெடுப்பிற்கு முன்னரே பதவியை ராஜினாமா செய்தார். அதில் வேடிக்கை என்னவெனில் முதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த கே.டி.கே.தங்கமனி இவர் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. பின்னர் திமுகவை சார்ந்த கந்தப்பன் கொண்டுவந்த தீர்மானம் விவாதிக்கும் பொழுதே சீனிவாசன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

இதன் மூலம் தமிழக சட்டமன்றம் ஒரு புதிய சம்பிரதாயத்தை உருவாக்கிவிட்டது. ஆளும் கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களே சபாநாயகராக முடியும் என்ற நிலை வந்தது. என்ன காரணத்தினாலோ சபாநாயகரின் நடுநிலையை உறுதிப்படுத்த சட்டமன்றம் தவறி வருகிறது. இந்த நிலையால் அதிகாரிகள் அமைச்சர்கள் செயல்பாட்டு குறைகளை விதிகளின்படி விவாதப்பொருளாக்க சபாநாயகரின் தலையீடு இல்லாமல் போனது மட்டுமல்ல விவாதங்களை மறுக்கும் நிலைவந்தது. சட்டமன்ற விவாதத்தின் மூலம் சரிசெய்ய கூடிய பல பிரச்சினைகள் நீதிமன்ற தலையீட்டை ஈர்க்க நேர்ந்துவருகிறது. மக்களால் உருவாக்கப்பட்ட சட்டமன்றம் மக்களின் உரிமைகளை பறிக்கும் இன்னொரு கருவியாக ஆனது.

2011ம் ஆண்டு அதிமுக மூன்றாம் முறையாக அமர்ந்தவுடன் சபாநாயகர் பதவி மீண்டும் முதலமைச்சரின் விருப்பு வெறுப்பிற்கு பலியாகும் ஜீவராசியானது. 2011 மே மாதம் சபாநாயகராக அமர்ந்த திரு.ஜெயகுமார் 2012ல் பதவியைதுறந்தார். ஏன் பதவியைதுறந்தார்? அவரா பதவியை துறந்தார? பதவியை துறக்க மிரட்டப்பட்டாரா? பதவியை துறக்க அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முடிவு எடுத்தனரா, என்பதெல்லாம் ஒரு மர்ம முடிச்சு. நடுநிலை எடுத்து செயல்பட வேண்டிய சபாநாயகர் பதவியிலிருப்பவர் மீது நம்பிக்கை இல்லாதீர்மானம் விவாதிக்கப்படாமலே பறிக்கப்பட்டது சட்டமன்றத்தை அவமதிப்பதாகும். அதைவிட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் வாக்குகளால் உருவான சட்டமன்றத்தை அம்மா தர்பாராக சுருக்கி விட்டனர் என்பதையே காட்டுகிறது.

முதலமைச்சரின் கண் அசைவிற்கேற்ப செயல் பட மறுத்தால் பதவி பறிபோவது நிச்சயம் என்பதால் சபாநாயகரை பதட்டத்தோடு செயல்பட வைத்து விடுகிறது. சட்டமன்றம் விவாதித்து முடிவு செய்யவேண்டிய நலத்திட்டங்களை விவாதத்திற்கு உட்படுத்தாமல் பொது முக்கியத் துவம் வாய்ந்தவைகளை அறிவிப்பு செய்ய அனுமதிக்கும் 110 விதியின் கீழ் அறிவிக்கிற சம்பிரதாயத்தை சபாநாயகர் அனுமதியுடன் இந்த அரசு பின்பற்றி வருகிறது. சட்டமன்ற விதிப்படி சபாநாயகரின் அனுமதி இல்லாமல் முதலமைச்சரே அறிவிப்பு செய்ய இயலாது. அவர் கருதினால் நலத்திட்டங்கள் எல்லாம் சட்டமன்ற விவாதித்து முடிவு செய்வது நல்லது. அதிகாரிகள் கரிசனத்தோடு செயல்பட சட்டமன்ற விவாதம் அவசியம் என முதலமைச்சருக்கு அறிவுறுத்த அதிகாரம் படைத்தவர். ஆனால் பதவியில் தொடர அம்மா தயவு தேவை இருப்பதால் சபாநாயகர் தனக்கு இருக்கும் அதிகாரத்தை சுருட்டிவைத்து விடுகிறார். ஒன்டென் தர்பாராக்கி விட்டனர். அதோடு ஜெயலலிதா அம்மையாரை தெய்வப்பிறவி என்ற தோற்றத்தை பதிவு செய்ய அதிமுகவினரின் துதிகளும் பலகை தட்டலும் சட்டமன்றத்தின் மேன்மையை சிறுமைப்படுத்துகிறது. இந்த சட்டமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களின் சபை என்பதை மறக்கடித்து விடுகிறது.

வேதனை என்னவெனில் பெரியார், அண்ணா சம்பாதித்து கொடுத்ததன் மானம் என்ற சொத்தை அம்மா காலடியில் கிடத்த ஒரு கட்சி தயாராகும் பொழுது எதிர் வரிசையிலிருக்கும் திராவிட இனவாத கட்சிகளும் தங்கள் தலைவரே தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம் என நிறுவிட ஒரு போட்டி உருவாக்குகின்ற காட்சியை காண்கிறோம். விளைவு அரசியல் நிர்ணய சட்டம் கூறுகிற கடமைகளை சட்டமன்றம் புறக்கணிக்க தள்ளப்படுகிறது. முதலமைச்சரின் கண் அசைவிற்கேற்ப சபாநாயகர் செயல்படும் நிலமை இருப்பதால் ஆளும் அதிமுகவினர் சட்டமன்றத்தை அம்மா புகழ்பாடும் பஜனை மடமாக ஆக்கி விட்டனர். சபாநாயகர் அதிகாரத்தால் பிரஸ் கேலரியை தணிக்கை செய்யாமல் இருந்தால் உறுப்பினர்கள் ஒழுங்காக நடக்க முன் வருவர். எங்குமில்லாத தடைகளை இங்கே ஊடகங்கள் சந்திப்பதால் சட்டமன்றம் அம்மா தர்பாராக சுருங்கியிருப்பதை மக்கள் அறியவாய்ப்பில்லை. ஒரு சட்டமன்ற உறுப்பினர் செல்போனில் படம் எடுத்தற்காக தண்டிக்கப்பட்டார். ஊடகங்கள் தங்களை கவனிக்கிறது என்ற நிலை இருந்திருந்தால் அசிங்கமான அங்க அசைவுகளுக்காக ஒரு திமுக சட்டமன்ற உறுப்பினரை தண்டிக்க நேர்ந்து இருக்காது,

சபை முடக்கம்

சபை கூடுகிற நாட்கள் குறைந்து கொண்டே வருவதை காண்கிறோம். குறைந்தது வருடத்தில் 100 நாட்களாவது கூடினால்தான் மக்கள் பிரச்சினைகளை நிர்வாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்ல முடியும். சம்மந்தப்பட்ட அமைச்சர் அதிகாரிகளை நிர்வகிக்க இயலும். மேலும் அதிகாரிகள் அமைச்சர்களை ஆட்டு விக்கமுடியாது. இன்றையசட்டமன்றம் 60 நாட்கள் கூடுவது கிடையாது. அடிக்கடி அமைச்சர்கள் மாறுவதால் அதிகாரிகளும் முதலமைச்சரும் சட்டமன்றத்தை இருட்டிலே தள்ளுகிற நிலமை வந்துவிட்டது. அம்மா தயவில்தான் அமைச்சராக முடியும் என்ற நிலை திறமைகளை விரட்டி அடித்துவிடுவதை காண்கிறோம். திறமைகளை வெளிக்காட்டினால் பதவிபறிபோகும் என்ற பீதியே அம்மா, அம்மா என்று வரிக்கு வரி அமைச்சர்கள் சொல்வதை காண்கிறோம்.

விதி 74 (1) சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மக்களை பாதிக்கிற நிகழ்வுகள் அரசாங்க நிர்வாக கோளாறுகளை விவாதிக்க அவசர தீர்மானம் கொண்டுவரும் உரிமை உண்டு. சபா நாயகர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை நிராகரித்துவிடுகிற நிலமை இருப்பதால் எதிர்கட்சிகள்சட்டசபையை முடக்க முழக்கமிட நேருகிறது. அமைச்சர்கள் அதிகாரிகள் நடவடிக்கைகளில் உள்ளகுறைகள் சரி செய்யப்படாமல் போகிறது. பால் பண்ணை ஊழல் முதல். கனிமவள கொள்ளை வரை சட்ட மன்றத்தில் விரிவாக விவாதிக்க இயலாமல் போகிறது.

ஒரு சட்ட நிபுணர்கள் குழு சபாநாயகரால் நிராகரிக்கப்பட்ட அவசர தீர்மானங்களை பரிசீலிக்க சட்டமன்றம் அனுமதித்தால் சபாநாயகர் நடுநிலமை தவறி அளித்த தடைகள் அம்பலத்திற்கு வரும். சபாநாயகர் முதலமைச்சரை திருப்திபடுத்த விதிகளை வளைக்கிறார் என்பது வெளிவரும்.

சட்டமன்றத்திலே அமைச்சர்களின் அறிவிப்புகள் உறுதிமொழிகள் இவைகளை நிறைவேற்ற அரசாங்க எந்திரம் எந்த அளவிற்கு கரிசனம் காட்டுகிறது என்பதை சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய உறுதிமொழிக்குழு வருடா வருடம் அறிக்கை தயாரிக்கிறது. இந்த அறிக்கை முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் கொடுக்கும் உறுதிமொழிகளின் தலைவிதியை தேடிக் கண்டுபிடித்து நிலவரத்தை சபைக்கு தெரிவிக்கிறது..

பல ஆண்டுகள் நிதி இல்லை என்று கூறி ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்துவது முதல் பள்ளிக்கூடக் கூரை வேய்தல் வரை கிடப்பில் போடப்படுவதை காணலாம். 2004 அப்பொழுதைய நல்வாழ்வு துறை அமைச்சர் சதரங்கபட்டினத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மேம்பாட்டிற்கு கொடுத்த வாக்குறுதி 2013ல் நிறைவேற்றப்பட்டதாக உறுதிமொழிக் குழு அறிக்கை கூறுகிறது. 26 லட்சம் செலவு செய்து கட்டியதாக கூறுகிறது, மக்கள் நல திட்டங்களுக்கு நிதி இல்லை என்று பத்தாண்டு கணக்கில் தள்ளிவைக்கப்படுவதை காணலாம். உறுதிமொழி என்பது வாக்கு வங்கியை காக்க பிரயோகிக்கப்படும் ஒரு ஏமாற்று என்பதை நிதிக் குழுக்களின் அறிக்கை உறுதிமொழி அறிக்கை இவைகளை இனைத்து பார்க்கும் பொழுதுதான் ஒருவர் உணரமுடியும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற உழைப்பாளிகளை ஏழைகளாக வைப்பதற்கு அரசு எந்திரம் எவ்வாறு அதிமுக அம்மாவின் ஆட்சி செயல்படுகிறது என்பதை இந்த அறிக்கைகளை ஆய்வுசெய்தால் காணலாம்

உறுப்பினர் கேள்விகளும் பதில்களும்

சட்டமன்றத்தில் கேள்விநேரம் முக்கியமானது. உறுப்பினர் கேள்விகளுக்கு சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் சொல்ல வேண்டும். அதை ஒட்டி உறுப்பினர்கள் சபாநாயகர் அனுமதித்தால் துணைக் கேள்வி கேட்கலாம். இந்த கேள்வி நேரத்தை பல ஜனநாயக நாடுகளில் இல்லாத ஒரு சிறப்பு அம்சம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த கேள்வி நேரம் அதிமுக ஆட்சியில் கேலிக்கூத்தாக ஆக்கப்படுவதை காணலாம். கேள்விகளை முதலில் அதிகாரிகள் வடிகட்டுகின்றனர். பின்னர் சபாநாயகர் அதையும் வடிகட்டி பட்டியலாக்குகிறார். கேள்விகொடுத்து 42 நாட்கள் கடந்த பிறகே கேள்விகேட்ட உறுப்பினருக்கு கேள்வி ஏற்றுக் கொள்ளப்பட்டதா இல்லையா என்பதை சபாநாயகர் தெறிவிக்கிறார். அமைச்சர் பதில் கூற கால எல்லை விதிகளில் இல்லாததால் பல மாதங்கள் கழித்தே பதில் பெற முடிகிறது. குறைபாடுகளையோ. ஊழல் நடவடிக்கைகளையோ, மந்த நடவடிக்கைகளையோ வெளிக் கொண்டு வருகிற கேள்விகளாக இருந்தால் சபாநாயகர் நிராகரிக்கிற போக்கு இருப்பதை காணலாம். அரசின் குறைகளை பாதுகாக்கும் முறையில் சபாநாயகர் செயல்பட அம்மாவின் அதட்டலே காரணம் என்பதை உணரமுடியும்.

விதி 56ன் படி ஒத்திவைப்பு தீர்மாணம் முன்மொழிய உறுப்பினருக்கு உரிமை உண்டு. ஆனால் விதிகள் 57, 58, 59 அந்த உரிமையைப் பறிக்க சபாநாயகருக்கு அதிகாரம் கொடுத்துவிட்டது. இன்றைய சட்டமன்றத்தில் சபாநாயகர் எதிர்கட்சிகளின் வாய்களை அடைக்கும் சட்டாம் பிள்ளையாக அதிகாரத்தை செலுத்த முடிகிறதே தவிர முதலமைச்சரின் தர்பாராக ஆவதை தடுக்க இயலவில்லை.

முன்னைவிட மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு வளர வளர சட்டமன்ற நடவடிக்கைகள் சுருங்கி தனிநபரின் தர்பாராக ஆவதை உணரமுடியும். இந்த முரன்பாடு எப்படி இயங்குகிறது என்பதை புரிவது சற்று கடினம்.

சட்டமன்ற உறுப்பினரின் கடமை

ஒரு சட்டமன்ற உறுப்பினரின் கடமைகள் மூன்று என்பதை முன்னரே குறிப்பிட்டோம், சட்டம் வடித்தல் .நிதி நிர்வாகத்தை கண்காணித்தல் அரசு எந்திரத்தை விமர்சித்து சரிசெய்தல் ஆகியவைகளே என்று குறிப்பிட்டோம்

ஆனால் நடைமுறையில் எம்.எல்.ஏ என்றால் தொகுதி பராமரிப்பு நிர்வாகத்தை மேற்பார்வை இடுபவர் என்ற தோற்றத்தை உருவாக்கி விட்டனர். எல்லா தொகுதி பிரச்சினைகளுக்கும் சட்டமன்ற உறுப்பினரின் தலையே உருளும் நிலையே உள்ளது. இதன் விளைவாக அமைச்சர்கள் அதிகாரிகள் தயவில்லாமல் தொகுதி மேம்பாட்டை காணவே முடியாது. அரசியல் நிர்ணய சட்டம் வகுத்த கடமைகளை நிறைவேற்ற கயிற்றில் நடக்கும் கழைக்கூத்தாடியின் நிலைமைக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தள்ளப்படுகின்றனர். சபையில் அம்மா புகழை பாடமறுத்தால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி பக்கமே போகமுடியாத நிலையை அதிகாரிகள் உருவாக்கிவிடுவர். இதனால் நடைமுறையில் சட்டமன்றம் முதலமைச்சரின் தர்பராக சுருங்கிவிடுகிறது. இதன் விளைவாக சட்டமன்றத்திலே பல பிரச்சினைகள் பேசப் படாமல் போவதை காண்கிறோம். அரசின் கொள்கை அறிக்கைகள் எதார்த்த நிலவரங்களை கணக்கில் கொள்ளாமல் சாதனைகளை சொல்லும் ஆவணங்களாக ஆகிவிட்டதை காண்கி றோம். கல்விசம்மந்தமான கொள்கை அறிக்கையில் கழிப்பிட வசதி இல்லாத, நூலகம் இல்லாத பள்ளிகளைப் பற்றிய விவரத்தை தேடினால் கிடைக்காது.

ரீயல் எஸ்டேட் பிசினசால் விவசாயமும் ஏரி குளம் மற்றும் நீர்பாசன வசதிகள் எவ்வளவு பாதிக்கபட்டிருக்கிறது என்பதை விவசாய கொள்கை அறிக்கையில் இடம்பெறாது. கிரானைட் கொள்யைர்கள் விவசாய நிலத்தை கெடுத்த விவரம் இடம் பெறாது.

தனியார்மய கொள்கையால் பொருளாதார கட்டமைப்பு வளர்ச்சியில் ஏற்படும் மந்தத்தை சட்டமன்றம் விவாதிக்க தேவையான தகவல்களை இந்த ஆவணங்களில் கிடைக்காது. உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் சொல்ல கால எல்லை விதிகளில் இல்லாததால் பதில்கள் எப்போது வரும்? எப்படிவரும்? என்கிற தவிப்பு நிரந்தரமாக ஆகிவிட்டதை காணலாம்.

சுரண்டும் வர்க்கங்களின் அரசியல் அதிகாரம் மக்களால் மக்களுக்காக மக்களின் பிரதிநிதிகளால் இயக்கப்பட வேண்டிய சட்டமன்றம் தனிநபர் தர்பாராக ஆக்கப்படும் முரண்பாட்டை எப்படி விளக்குவது? மக்களாட்சி முறைக்கு ஆபத்து எங்கிருந்து யாரால் வரும்? இதனை மார்க்சிஸ்ட் கட்சி திட்டத்தின் 5வது பகுதி தெளிவாக்குகிது.

5.14 ஐம்பதாண்டு கால முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆட்சியில் அரசு அதிகாரத்தின் அனைத்து அமைப்புகளும் சிதிலமடைந்துவிட்டன. முதலாளித்துவ வளர்ச்சிப்பாதையின் பிரதிபலிப்பான அதிகபட்சமாக மத்தியத்துவப்படுத்தப்பட்ட அதிகாரவர்க்க முறையின் அடிப் படையிலேயே நிர்வாகமுறை உள்ளது. சுரண்டல் வர்க்கத்தின் நலனைப் பாதுகாக்க பணிவுடன் சேவை செய்கிற, மக்களிடமிருந்து துண்டிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் கையிலேயே அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள்ளன. அதிகாரவர்க்கத்தின் அபரிமிதமான வளர்ச்சி, ஆளும் வர்க்கத்துடன் அதற்குள்ள வலுவான கூட்டு, அதிகாரிகள் மத்தியில் பரவலாக இருந்து வரும் லஞ்சம் போன்றவற்றால் சமூகத்தின் ஜனநாயகக் கட்டமைப்பு பலவீனமடைந்துள்ளது

5.23 நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கோ, ஜனநாயகத்திற்கோ உழைக்கும் மக்களிடமிருந்தோ, அவர்களது நலனை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடமிருந்தோ ஆபத்துவரவில்லை. சுரண்டும் வர்க்கங்களிடமிருந்து தான் ஆபத்து வருகிறது. தங்களது குறுகிய நலனைப் பாதுகாத்துக்கொள்வதற்காக நாடாளுமன்ற அமைப்பின் உள்ளிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ இதை பலவீனப்படுத்தி தங்கள் கருவியாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர்..

மேலேகண்ட வாசகம் அரசியலில் சுரண்டும் வர்க்க ஆதிக்கமும் பழமைவாத செல்வாக்கும் மக்களாட்சி முறையை பலகீனப்படுத்துவதை சுட்டிக்காட்டுகிறது. அரசியலில் தனிநபர் துதி சுரண்டும் வர்க்க ஆதிக்கத்தை பலப்படுத்துகிறது.

அரசியலும் தனிநபர் துதியும்

தனிநபர் துதி என்பது பண்பாட்டு சமாசாரம் கரிசனம் காட்ட வேண்டியதில்லை என்று கருதுபவர்கள் ஒரு உண்மையை பார்க்க தவறுகிறார்கள். அவரின்றி ஒரு அணுவும் அசையாது என்ற மூடநம்பிக்கையை மக்கள் மனதிலே பதியவைக்க எடுக்கிற முயற்சிகள் அரசியலில் சர்வாதிகாரிகளை தயாரிக்கவே உதவுகிறது. இந்த எதார்த்தத்தை பார்க்க மறுப்பவர்களால் இந்த நிலமை உருவான காரணங்களை அறிய இயலாது. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் தோற்றம் வளர்ச்சி இயல்பு இவைகளை ஆய்வுசெய்தால் ஒரு உண்மை புலப்படும். சாதி அடிப்படையில் உருவான கட்சியானாலும் இனமான அடிப்படையில் உருவான கட்சியானாலும் ஒரு அமைப்பை உருவாக்கி அதன் வழிகாட்டலில் இயங்குகிற கட்சிகளாக அவைகள் இல்லை தனிநபர் முயற்சியால் ஒரு சில முதலாளிகளின் பின்பலத்தோடு உருவாவதை காண்கிறோம்.

விநோதம் என்னவெனில் மூடநம்பிக்கைகளை எதிர்த்தறிவு இயக்கம் அரசியலில் தனிமனிதனை தெய்வமாகவோ தனிப்பிறவியாகவோ போற்றுகிற காட்சியை காண்கிறோம். அரசியலில் தனிநபர் துதி ஜனநாயகத்திற்கு ஆபத்து என்பதை விளக்க வேண்டியதில்லை.

வரலாற்றை ஒழுங்காக படித்தால் இன்னொரு உண்மை புலப்படும். கம்யூனிஸ்ட் இயக்கம் புரட்சியாளர்களை தயாரித்ததே தவிர ஒப்பற்ற தனிநபரால் கம்யூனிஸ்ட் கட்சிகள் தோற்றுவிக்கப்படுவதில்லை என்பது தெறியும். இந்த உண்மையை உணரவைப்பது எப்படி? தனி நபர் துதி அரசியலை மக்களை புறக்கணிக்கச் செய்ய வழி என்ன? தனிநபர் துதி அரசியலை மக்கள் ஒதுக்கினால் தான்.

தமிழக சட்டமன்றம் மக்களின் மன்றமாக உயரும். இது பல வருடங்கள் சிரமப்பட வேண்டிய பணியாகும். வெகுஜன அமைப்புக்கள் குறுகிய கட்சி நலனைத் தாண்டி பார்க்கும் நிலமை வரவேண்டும். கூட்டாக அரசியல் இயக்கமாக அது தொடங்கிட வேண்டும். மக்களின் வாழ்வு மேன்மையுற உருவாகும் வெகுஜன அமைப்புக்களின் ஒற்றுமையை நாடும் இடது சாரி கட்சிகளுக்கு இது ஒரு சவால்.