சமீப காலத்தில் சர்வதேச அரங்கில் நடைபெற்ற நிகழ்வுகள் ஏராளமாய் இருந்தபோதிலும் அவற்றில் ஏகாதிபத்தியத்தின் தலையீடு என்ற அம்சம் முக்கியமானது சுதந்திர பாலஸ்தீனம் மீது இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தாக்குதல்கள், ஈராக் மற்றும் சிரியாவை மையமாக வைத்து செயல்பட்டு வரும் உலகின் புதிய பயங்கரவாத சக்தியாக வளர்ந்துள்ள ஐஎஸ் எனும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு ஷியா, குர்து மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினர் மீது தொடுத்து வரும் தாக்குதல்களும் உக்ரைனில் கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே நீடித்து வரும் உள்நாட்டு குழப்பமும், பூதாகரமாக முன்நிற்கிறது. அதனைச் சார்ந்து ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளாக ரஷ்யாவிற்கும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களிடையே நிலவிவந்த முரண்பாடுகள் முன்னுக்கு வந்துள்ளது. மேலும், அவை ஒரு மோதல் போக்கிற்கு இட்டுச் செல்லும் அளவிற்கு தீவிரமடைந்துள்ளதும் முக்கியமானவையாகக் குறிப்பிடலாம்.
மேற்குறிப்பிட்ட மூன்று நிகழ்வுகளில் ஒன்றில் இஸ்ரேலின் ஜியோனிச இனவெறிக் கொள்கையின் மூலம் ஏகாதிபத்தியம் நேரடியாக தனது கோர முகத்தை வெளிக்காட்டுகிறது என்றால், ஐஎஸ்; பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித் தனமான செயல்பாடுகளின் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னை மறைமுகமாக வெளிக்காட்டிக் கொள்கிறது என்பதே உண்மை. ஆனால் உக்ரைன் விவகாரம் இதிலிருந்து மாறுபட்டது. அதாவது உக்ரைனைச் சார்ந்து இன்று கிழக்கு ஐரோப்பாவில் நடக்கும் நிகழ்வுகள் நிதிமூலதன உலகின் வளர்ச்சிப் போக்கில் ஏற்படும் மாற்றங்களையும், அதன் விளைவாக முதலாளித்துவ முகாமிற்கு உள்ளேயே ஏகாதிபத்தியம் தனது பரமவைரியைச் சந்திக்க வேண்டிய நிலையும் இன்று ஏற்பட்டுள்ளது. ஆனால் முன்பு சோசலிச சோவியத் யூனியனாக இருந்த இடத்தில் தற்போது முதலாளித்துவ ரஷ்யாவை அது எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதுதான் அதிலுள்ள அடிப்படையான வேறுபாடாகும்.
உக்ரைன் விவகாரம் குறித்து ஏராளமானக் கட்டுரைகள் சமீபத்தில் வெளிவந்துள்ளன. இரண்டு வகையில் விவாதிக்கின்றனர். ஒன்று இப்பிரச்சனையில் கிரீமியாவை ரஷ்யா பொது வாக்கெடுப்பு நடத்தி தன்னுடன் சேர்த்துக் கொண்டதை மையமாகக் கொண்டது. ரஷ்யாவை விமர்சித்தும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாகவும் அல்லது ரஷ்யா மற்றும் மேற்கத்திய சக்திகளை இணையாக பாவித்தும், கருத்துக்களை முன்வைக்கின்ற ஒரு பிரிவினர், இதில் மற்றொரு பிரிவினர் உக்ரைன் விவகாரத்தை மார்க்சிய – லெனினியக் கண்ணோட்டத்துடன் அணுகுபவர்கள்.
பேரா. அய்ஜாஸ் அகமது உக்ரைன் விவகாரத்தின் மையப்புள்ளி எது என்பதை விளக்கிடும் வகையில் தனது கட்டுரையில் விவரித்துள்ள பகுதி முந்தைய பனிப்போரின் மையப் புள்ளியாக முரண்பாடுகள் கொண்ட இரண்டு சமூக அமைப்புகளின் செயல்பாடுகள் இருந்தன. சோவியத் யூனியன் சிதைந்த பிறகு அது முடிவுக்கு வந்தது. இன்று நாம் காணும் பனிப்போர் நிலைக்கு அப்படி ஒரு அம்சம் இருப்பதாகக் கூற முடியாது. ஏனெனில் ரஷ்யா சோவியத் யூனியன் அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.
அய்ஜாஸ் அகமது இக்கட்டுரையில் இன்றைய முதலாளித்துவ ரஷ்யா ஏகாதிபத்தியங்களோடு முரண்பாடு கொண்டுள்ளதையும், அது ஒரு மோதல் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது என்பதையும் அதற்கான அரசியல் பொருளாதாரம் மற்றும் பூகோள ரீதியான காரணங்களை வரலாற்று ரீதியாக விளக்கியுள்ளார். உக்ரைன் விவகாரம் குறித்து இக்கட்டுரை போதுமான ஒளியைப் பாய்ச்சியுள்ளது என்றே குறிப்பிடலாம்.
அதேபோல் இப்பிரச்சனை குறித்து பிரபாத் பட்நாயக் கூறுவதைக் காண்போம். உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவிற்கும், மேற்கத்திய வல்லரசுகளுக்கும் முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உலகப் பொருளாதாரத்தின் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்.
டாலர் என்ற ரிசர்வ் நாணயம் (உலக பொது நாணயம்) இல்லாமலேயே நாடுகளுக்கு இடையில் பரஸ்பரம் வர்த்தகம் செய்து கொள்வதே அவரது திட்டம். எந்தெந்த நாடுகளெல்லாம் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு ஆளாகி உள்ளனவோ அல்லது அவற்றை எதிர்த்து துணிந்து நிற்கின்றனவோ அவற்றோடு அத்தகைய இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்வதற்கு தயாராகி வருகிறது. அத்தகைய ஒப்பந்தங்களில் பணப்பட்டுவாடா அமெரிக்க டாலரில் இருக்காது. மாறாக இருதரப்பு வர்த்தக நாடுகளின் நாணயங்களிலேயே இருக்கும் எனக் கூறியதோடு, ரஷ்ய அதிபர் புடினின்; அமெரிக்க எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து அவசரப்பட்டு நாம் எந்த முடிவிற்கும் வந்துவிடக் கூடாது. ரஷ்ய செல்வந்தர்கள் மேற்கத்திய வங்கிகளில் அநேகமாக டாலர் வடிவிலேயே சொத்துக்களை வைத்துள்ளனர். டாலரைத் தவிர்க்கும் முயற்சியினை ரஷ்யக் கார்ப்பரேட் முதலாளிகள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அத்தகைய வர்க்க எதிர்ப்பினை புடின் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். என்னதான் அமெரிக்க எதிர்ப்பு கொண்டதாக இருந்தாலும், புடின் ரஷ்யாவும், சோவியத் யூனியனும் ஒன்றல்ல, நாளைக்கே புடின் மேற்கத்திய நாடுகளிடம் சரணடைந்து டாலர் தவிர்ப்பு நடவடிக்கையினைக் கைவிட்டாலும் அதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய ரஷ்யாவின் நடவடிக்கை பற்றிய பிரபாத் பட்நாயக் கருத்துக்களிலும், அய்ஜாஸ் அகமதுவின் கட்டுரையிலும் ஒரே குரலைக் காண்கிறோம்.
எப்படியிருப்பினும் இவ்விரண்டு விளக்கங்களும் இதுவரை வெளிவந்துள்ள கட்டுரைகளிலேயே உக்ரைன் விவகாரம் குறித்த முழுமையான ஒருங்கிணைந்த பார்வையைத் தருகிறது என்றே சொல்ல வேண்டும்.
ஆனாலும் இப்பிரச்சனை குறித்தும் இதன் மூலமாக குறிப்பிட்டுள்ள உயர் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளுக்குள் நிலவும் பகைமை குறித்தும் இன்னும் நாம் தெளிவுபெற வேண்டிய கேள்விகள் எஞ்சி இருக்கவே செய்கின்றன… அவை ரஷ்யாவில் முதலாளித்துவ வளர்ச்சியின் தற்போதைய கட்டமென்ன? முதலாளித்துவ ரஷ்யா ஏன் உயர் வளர்ச்சியடைந்த பிற முதலாளித்துவ நாடுகளோடு ஒத்திசைந்த போக்கை கடைபிடிப்பதற்கு மாறாக மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டும்? ரஷ்யாவிற்கும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாட்டில் உக்ரைன் வகிக்கும் பாத்திரமென்ன? கிரீமியாவை ரஷ்யா சேர்த்துக் கொண்டது ஆக்கிரமிப்பாகுமா? மேலும் புடினின் டாலர் தவிர்ப்பு நடவடிக்கையினை ரஷ்ய கார்ப்பரேட் முதலாளிகள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்றால் புடினின் நடவடிக்கைக்குப் பின்னால் ரஷ்யாவின் எந்த எந்த வர்க்கத்தின் நலன் ஒளிந்துள்ளது? டாலர் தவிர்ப்பு நடவடிக்கை பலதுருவ உலகிற்கு வலுசேர்க்குமா? டாலர் தவிர்ப்பு நடவடிக்கை ரஷ்யாவிற்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையேயான முரண்பாட்டின் மையமான அம்சமாகுமா? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை காண்பதன் மூலமே இந்நிகழ்வுப் போக்கின் ஸ்தூலமான அம்சங்கள் குறித்து நாம் தெளிவு பெற முடியும்.
ரஷ்யாவிற்கும், ஏகாதிபத்திய நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடு உக்ரைன் விவகாரத்தைச் சார்ந்து ரஷ்யாவிற்கும், பிற ஏகாதிபத்திய நாடுகளுக்கும் இன்று ஏற்பட்டுள்ள மோதல் சரியாகச் சொல்வதென்றால் ஜி-8 என்று ஏற்கனவே இருந்த உயர்வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பில் ரஷ்யாவிற்கும் இக்கூட்டமைப்பில் உள்ள இதர உறுப்பு நாடுகளாகிய அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், கனடா, இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடே ஆகும். கடந்த 10 ஆண்டுகளாகவே நிலவி வந்த இம்முரண்பாடு தீவிரமடைந்துள்ளதன் வெளிப்பாடே உக்ரைன் விவகாரமாகும். இப்பிரச்சனையில் ஜி-8 கூட்டமைப்பிலிருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்டு தற்சமயம் ரஷ்யாவிற்கு எதிராக பிற உறுப்பு நாடுகளடங்கிய ஜி-7 கூட் டமைப்பு அணி சேர்த்துள்ளது.
அப்படியானால் ரஷ்யாவைத் தவிர்த்த ஜி-7ல் உள்ள உறுப்பு நாடுகளிடையே முரண்பாடுகளோ, மோதலோ இல்லை என்று அர்த்தமல்ல. மேற்கண்ட நாடுகளுக்கு இடையேயான நலன்களும், பகைமையும் அக்கம், பக்கமாக நிலவவே செய்கின்றன. அவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. மூன்றாம் உலக நாடுகளின் மீது பொருளாதார நிர்பந்தங்களை திணிப்பதில் ஒன்றுபடுவதும், தங்களின் தேச நலன்களை பாதுகாக்க அவைகள் முரண்பட்டு நிற்பதும் உண்டு. ஆனால், மோதல் போக்கை தவிர்த்துவிடுகின்றன.
மூலதனக் குவிப்பும், நிதிமூலதனங்களிடையிலான முரண்பாடும்
இங்கிலாந்திலிருந்து வெளியாகும் பில்லியனர்கள் குறித்த வெல்த் பத்திரிக்கை 2013ம் ஆண்டு உலக பில்லியனர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி உலகில் மொத்தம் 2170 பில்லியனர்கள் வசிக்கிறார்கள் என்றும், இதில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரம் 96 பில்லியனர்களைக் கொண்டு முதலிடத்தை பிடித்துள்ளது எனவும், 75 பில்லியனர்களைக் கொண்டு ஹாங்காங் இரண்டாவது இடத்தையும், 74 பில்லியனர்களைக் கொண்டு மாஸ்கோ மூன்றாவது இடத்தையும், 67 பில்லியனர்களைக் கொண்டு லண்டன் நகரம் நான்காம் இடத்தையும், 30 பில்லியனர்களைக் கொண்டு மும்பை 5வது இடத்தையும் பிடித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பில்லியனர்கள் வசிக்கும் நாடுகள் பட்டியலைப் பார்த்தோமானால் அமெரிக்கா முதலிடத்தைப் பெற்றுள்ளது. அங்கு 515 பில்லியனர்கள் வசிக்கிறார்கள். சீனா 157 பில்லியனர்களைக் கொண்டு 2வது இடத்தையும், ஜெர்மனி 148 பில்லியனர்களைக் கொண்டு 3வது இடத்தையும், இங்கிலாந்து 135 பில்லியனர்களைக் கொண்டு 4வது இடத்தையும், ரஷ்யா 108 பில்லியனர்களைக் கொண்டு 5வது இடத்தையும், இந்தியா 103 பில்லியனர்களைக் கொண்டு 6வது இடத்தையும் பிடித்துள்ளது.
மேற்கண்ட பில்லியனர்கள் பட்டியலில் முதல் ஐந்து நகரங்கள் பட்டியலில் 2011ல் இரண்டாவது மற்றும் ஐந்தாவது இடத்தை வகித்த ஜப்பான் மற்றும் பிரான்சின் நகரங்கள் ஒன்றுகூட இடம் பிடிக்கவில்லை என்பதும், அதேநேரத்தில் முதலாளித்துவ ரஷ்யாவின் மாஸ்கோ 4வது இடத்தைப் பிடித்துள்ளதும், அதேபோல் அதிகளவு பில்லியனர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலிலும் முதல் ஐந்து இடங்களில் ஜப்பான், பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்திய நாடுகள் இடம் பெறாத நிலையில், ரஷ்யா 5வது இடத்தை பிடித்துள்ளது என்பதும் கவனத்திற்கு உரியது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் வரிசையில் ஐரோப்பாவின் வலிமை வாய்ந்த பொருளாதார சக்திகளான ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு ரஷ்யா முன்னணி இடத்திற்கு வந்துள்ளது என்பதும், கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் ரஷ்யாவின் பொருளாதார வலிமை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு சவால்விடும் வகையில் வளர்ந்து வருகிறது என்பதும் சொல்லாமலே விளங்கும்.
உக்ரைன் வகிக்கும் பாத்திரம்…
முந்தைய சோவியத் ஒன்றியத்தின் இரண்டாவது பெரிய குடியரசாக உக்ரைன் திகழ்ந்தது மட்டுமல்லாமல் அதன் பொருளாதார வளர்ச்சிக்கும் மிகப்பெரும் பங்களிப்புச் செய்துள்ளது. குறிப்பாக அன்றைய சோவியத் ரஷ்யாவின் மொத்த வார்ப்பிரும்பு உருக்கு உற்பத்தியில் உக்ரைன் 5ல் 2 பங்கும், இரும்பு தாதுக்களில் 2ல் 1 பங்குக்கு அதிகமாக உலோக இயந்திரங்களும், 3ல் 1 பங்கு ரசாயன இயந்திரங்களும் பங்களிப்பாகத் தந்துள்ளது. டிராக்டர்கள், எஸ்கலேட்டர்கள் ஆகியவற்றிலும் மற்ற இயந்திரக் கட்டுமானப் பொருட்களிலும் கணிசமான பகுதியையும், உணவுப் பொருள்களில் பலவற்றையும், தருவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. உணவுப் பொருள் மையமாக விளங்கியதுடன் லட்சக் கணக்கான டன் தானியங்களும், காய்கறி உற்பத்தியில் 3ல் 1 பங்கும், சூரிய காந்தியில் 5ல் 1 பங்கும், சர்க்கரை வள்ளிக் கிழங்கு தேவையில் பாதியும், கால்நடை வளர்ப்பு தரும் அடிப்படை பொருட்களான வெண்ணெய், நெய், பாலாடைக் கட்டி போன்றவற்றில் 5ல் 1 பங்கும் உக்ரைன் தனது பங்களிப்பாகச் செய்துள்ளது.
இது தவிர இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் ஆக்கிரமிப்பால் ஏராளமான சேதத்தை உக்ரைன் சந்தித்தது. பாசிச ஆக்கிரமிப்புக் காலத்தில் உக்ரைனுக்கு நேர்ந்த நேரடியான பொருள் வகைச் சேதங்கள் சோவியத் யூனியனைத் தவிர மற்ற ஹிட்லர் எதிர்ப்பு நாடுகள் அனைத்தும் அடைந்த சேதங்களில் 4ல் 3 பங்குக்கும் அதிகமாகும்.
இத்தகைய ஏராளமான இயற்கை மற்றும் தாது வளம் கொண்ட உக்ரைன் மூன்று பொருளாதார பிரதேசங்களையும் கொண்டுள்ளது. அதில் டௌன்த்ஸ்க் – தினீப்பர் பொருளாதாரப் பிரதேசம் பிரதான தொழில்துறையாகவும் மற்றும் வளர்ச்சியடைந்த விவசாய பிரதேசமாகவும் உள்ளது. தென்மேற்கு பொருளாதாரப் பிரதேசத்தின் பிரமாண்டமான தொழில் மையமாக தலைநகரம் கீவ் உள்ளது. இது தவிர தீவிரமான விவசாயத்துடன் நவீன தொழில்துறை தெற்கு பிரதேசத்தின் பொருளாதார அடித்தளமாக இருக்கின்றது. மேலும், ரஷ்யாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள கிரீமியா பிற பகுதிகளோடு ஒப்பிடும்போது வளர்ந்துவரும் தொழில்துறை பிரதேசம் எனலாம். அதேபோல் இங்குள்ள செவஸ்டோபோல் துறைமுகம் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. இங்கு நாம் அழுத்தம் கொடுக்க விரும்புவது கிரீமியாவில் ரஷ்ய மொழி பேசும் தேசிய இனத்தவரின் பொருளாதார நலன்கள் அதாவது தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகள் ரஷ்யாவிலிருந்து உக்ரைன் – கிரீமியா – வழியாக எடுத்துச் செல்லப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயு சேமிப்புக் கிடங்குகளைச் சார்ந்து நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன என்பதாகும். எனவேதான் கிரீமியாவை பொதுவாக்கெடுப்பு நடத்தியபோது ரஷ்யாவுடன் இணைந்திட கிரீமியர்கள் விரும்பியது தாங்கள் ரஷ்யர்கள் என்ற தேசியப் பெருமிதத்தினால் மட்டுமல்ல, அவர்களது வாழ்வாதாரத்தை உறுதி செய்திடும் பொருளாதாரக் காரணிகள்தான் அதற்கான அடிப்படைக் காரணமாகும்.
உக்ரைன் விவகாரத்தில் எரிவாயுவின் பரிமாணம்
இன்றைய நிலையில் ரஷ்யாவிற்கும், ஐரோப்பாவுக்கும் இடையேயான எரிசக்தியை எடுத்துச் செல்லும் பிரதான வழித்தடமாக உக்ரைன் விளங்குகிறது. ஐரோப்பா தனக்குத் தேவையான எரிவாயுவில் 30 சதவீதத்தை ரஷ்யாவிடமிருந்தே பெற்றுக் கொள்கிறது. ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவிற்கு எடுத்துச் செல்லப்படும் எரிவாயுவில் பாதிக்கும் மேல் உக்ரைன் வழியாகவே எடுத்துச் செல்லப்பட்டதோடு தொடர்ந்து எரிவாயுவை கொண்டு செல்வதற்கான பைப்லைன் அமைக்கும் பணிகளை ரஷ்யா மேற்கொண்டு வந்தது.
தவிர உக்ரைனும் எரிசக்தியில் இயற்கை எரிவாயுவைச் சார்ந்துள்ள நாடாகும். மொத்த எரிசக்தி தேவையில் 40 சதவீதம் எரிவாயுவின் பங்களிப்பாக உள்ளது. அதில் உள்நாட்டுக்குத் தேவைப்படும் எரிவாயுவின் 60 சதமானத்தை ரஷ்யாவிடமிருந்தே பெற்றுக் கொள்கிறது. இது மட்டுமல்லாமல் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெ யில் பெரும்பகுதியையும் உக்ரைனுக்கு ரஷ்யா அளித்துவந்ததோடு அதனை சர்வதே சந்தை விலையில் பாதி விலைக்கு தொடர்ந்து அளித்து வந்துள்ளது. மேலும் எண்ணெய் வர்த்தகம் நிறுத்தப்பட்ட காலம் வரையில் அதற்கு 400 கோடி டாலர்பெறுமான எரிவாயுவைக் கட னாகத் தந்துள்ளது.
இது தவிர ஐரோப்பாவில் உள்ள வலிமை வாய்ந்த பொருளாதார சக்திகள் கணிசமான அளவுக்கு ரஷ்யாவிடமிருந்து எரிவாயுவைப் பெறுகின்ற அதேநேரத்தில் குறிப்பாக ஸ்லோவிக் குடியரசு மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகள் உக்ரைன் வழியாக ரஷ்யா அளிக்கும் எண்ணெயையே பெரும்பாலும் சார்ந்துள்ளன. மொத்தத்தில் ரஷ்யாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் எரிவாயுவின் 90 சதவீதம் ஐரோப்பிய நாடுகளுக்கே எடுத்துச் செல்லப்படுகின்றன. அதேபோல் ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெயில் 80 சதவீதத்தை ஐரோப்பாவே பெற்றுக் கொள்கின்றது. எரிவாயு மற்றும் எண்ணெய் ஏற்றுமதி மூலமாகக் கிடைக்கும் வருவாய் மட்டும் ரஷ்யாவின் பட்ஜெட்டில் 50 சதவீதத் தைப் பூர்த்தி செய்கிறது.
ஆகவே, மேற்கண்ட எரிசக்தி வர்த்தக நடவடிக்கைக்கு ஏதேனும் ஊறு ஏற்பட்டால் அதன் காரணமாக ஐரோப்பிய பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையான மூலப்பொருள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும். உக்ரைன் தேசமோ மூலப்பொருள் தட்டுப்பாட்டோடு சேர்ந்து வருவாய் இழப்பையும், ரஷ்யாவைப் பொருத்தமட்டிலும் கணிசமான வருவாய் இழப்பையும் சந்திக்க நேரிடும். ஆனாலும்கூட இதுபற்றி இங்குள்ள அரசுகள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அதற்கு மாறாக அவை ஒன்றுக்கொன்று பொருளாதாரத் தடை விதித்து போட்டிபோட்டு பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இதுகுறித்து தீக்கதிரில் வெளிவந்துள்ள சில விபரங்களைப் பார்ப்போம்.
பறிபோகும் மேற்குலகின் நலன்கள்…!
மேற்கண்ட நாடுகளிடையே உருவான மோதல் போக்கின் காரணமாக ரஷ்யா மீது முதலில் ஜி-7 கூட்டமைப்பில் உள்ள கனடாவும், பின்னர் அதனைத் தொடர்ந்து அமெரிக்காவும் தனித்தனியே பொருளாதாரத் தடை விதித்தன. பின்னர் ஜி-7 நாடுகள் கூட்டாக ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடை விதித்தன. உக்ரைனில் புதிதாக அதிபர் பொறுப்பேற்றுள்ள பெட் ரோபுரோஷென்கோ எடுத்த முதல் நடவடிக்கையே ரஷ்யாவுடனான பொருளாதார ஒப்பந்தத்தை தடை செய்ததுதான். இதற்கு பதிலடியாக ரஷ்யாவும் முதலில் உன்ரைனுக்கான எரிவாயு சப்ளையை நிறுத்தி வைத்ததுடன் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு ரஷ்யா தடை விதித்தது. இந்த அறிவிப்பால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அடங்கியுள்ள நாடுகள் உள்ளிட்டவைகள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. ஏனெனில் மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் பெரும்பாலானவை ரஷ்யாவில்தான் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இந்தத் தடையின் காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக பிரான்ஸ் நாடு பெரும் இழப்பை சந்திக்கும் எனக் கருதப்படுகிறது. இது தவிர நெதர்லாந்து, ஜெர்மனி மற்றும் போலந்து உள்ளிட்ட நாடுகள் அதிக வருவாய் இழப்பைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஸ்பெயின் நாடு கடந்த 2012ம் ஆண்டு மட்டும் சுமார் 1 லட்சம் டன் அளவிற்கான பழங்களை ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்திருந்தது. இவற்றை இனி ரஷ்யா இறக்குமதி செய்யாததால் ஏற்கனவே பெரும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கும் ஸ்பெயின் நாடு மேலும் அதிக சுமையை தாங்க வேண்டியது வரும். இதேபோல் கடந்தாண்டு மட்டும் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்களை அமெரிக்க கப்பல்கள் மூலம் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்திருந்தது. இந்த தடையின் மூலம் அமெரிக்கா மேற்குறிப்பிட்ட வருவாயை இழக்க வேண்டிய திருக்கும்.
அதேநேரம் இந்தத் தடையின் மூலம் தங்களது நாட்டில் ஏற்பட உள்ள உணவுப் பொருட்களின் பற்றாக்குறையை சமாளிக்கும் விதத்தில் பிரேசில், ஈக்வெடார், சிலி மற்றும் அர்ஜென்டினா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்திட ரஷ்யா முடிவெடுத்துள்ளதன் மூலம், அந்நாடுகளுடனான ரஷ்யாவின் வர்த்தக பரிமாற்றத்தின் அளவு பெருமளவு அதிகரிக்கக் கூடும் என தெரிகிறது.
இதுமட்டுமின்றி ஏற்கனவே பேராசிரியர் பிரபாத் பட்நாயக் தெரிவித்திருந்த படி டாலரின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் இழப்பைச் சரிகட்டவும் ரஷ்யா எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக செப்டம்பர்-10, 2014 (400 பில்லியன் டாலர் மதிப்பிலான) எரிவாயு விநியோக ஒப்பந்தத்தை சீனாவுடன் மேற்கொண்டுள்ளது. இதன்படி ரஷ்யா மற்றும் சீனா நாடுகளுக்கிடையே நடைபெறும் வர்த்தகப் பரிமாற்றங்களின்போது அந்தந்த நாடுகளின் பணத்தையே இருதரப்பு பரிமாற்ற நாணயமாக பயன்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி அதேநாளில் ஈரானுடனும் தொழில் வர்த்தகத்தை பெருக்கிக் கொள்ள ரஷ்யா புதிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி தங்களது சொந்த நாணயத்தில் வர்த்தகம் செய்து கொள்வதென இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் ஈரானின் அணு செறிவூட்டல் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறி மாஸ்கோ ஆசிய வங்கி டெக்ரானைச் சார்ந்த நிறுவனங்கள், தற்காப்பு கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்புகள், ஏற்றுமதி நிறுவனங்கள், ஆயில் நிறுவனங்கள், விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் 6 வங்கிகளுக்கும், சில தனிநபர்களுக்கும் தடைவிதிப்பதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக மிக சமீபத்திய நிகழ்வாக ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜிலாவ்ரோவ் வெளியிட்டுள்ள அறிக்கை இந்நிகழ்வுப் போக்கின் திசைவழியை உணர்த்துவதாக உள்ளது. அதாவது 20.10.14 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளில் ரஷ்யாவுக்கு எவ்வித நெருக்கடியும் ஏற்படவில்லை. பொருளாதார தடைகளால் ரஷ்யா கொள்கைகளை மாற்ற முடியாது என்பதை அவர்கள் உணர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி அமெரிக்கா தனது கைவசம் உள்ள எரிவாயுவை சந்தைப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால் அது அவ்வளவு சுலபமாக ஈடேறக் கூடிய காரியமல்ல. இதுகுறித்து சிவில்ஸ் பீடியா இதழில் வந்துள்ள கட்டுரை முக்கியச் செய்தியாகும்.
தற்போதைய சூழலில் ரஷ்யாவின் எரிவாயு நிறுத்தத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்பை நிரந்தரமாக சமாளித்திட ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு மாற்று வழி கண்டாக வேண்டும். அதற்குள்ள ஒரே வழி அமெரிக்காவிடமிருந்து எல்.என்.ஜி எனப்படும் நீர்ம எரிவாயுவைப் பெறுவதுதான். ஆனால், அமெரிக்காவிலிருந்து எரிவாயுவை சப்ளை மற்றும் ஏற்றுமதி செய்வதற்கான வசதி வாய்ப்புகள் இல்லை என்பதோடு, இத்தகைய நீர்ம எரிவாயுவை அமெரிக்க அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் பரிவர்த்தனை செய்திட முன்வராது. அதேநேரத்தில் அங்குள்ள தனியார் எண்ணெய் ஏகபோக நிறுவனங்களே ஈடுபடக் கூடும். அவ்வாறு அவை ஈடுபடும்பட்சத்தில் எண்ணெய் விலை சர்வதேச சந்தையை விடக் கூடுதலாகவோ, ஆசிய சந்தைக்கு இணையானதாகவோ அல்லது உச்சபட்ச விலையைக் கொண்டதாகவோ இருக்கும். இது உக்ரைனின் அடிப்படை பிரச்சனையான எண்ணெய் கடன் நெருக்கடியினை தீர்த்திட உதவாது.
இதன் மூலம் ரஷ்யாவிற்கும், ஜி-7 நாடுகளுக்கும் இடையிலான முரண்பாட்டின் தூண்டு விசை மட்டுமே உக்ரைன் விவகாரம் என்பது தெளிவாகிறது.
முரண்பாட்டின் மையமான அம்சம்…
ரஷ்யாவில் இன்று ஏற்பட்டுள்ள நிதி மூலதன வளர்ச்சியானது எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் ஆதிக்கம் செலுத்தும் அரசு ஏகபோகத்துடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இதன் செல்வாக்கை தக்கவைத்துக் கொள்வதோடு, உலக அளவில் ஆதிக்கம் விரிவடைய வேண்டுமானால் ரஷ்யா ஒரு பலமான பொருளாதாரக் கூட்டமைப்பாக தன்னை பலப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதோடுகூட மூலப்பொருள் மண்டிக்கிடக்கும் மத்திய கிழக்கு, மேற்கு ஆசியா, கிழக்கு ஐரோப்பாவை மையமாகக் கொண்ட தனது செல்வாக்கு மண்டலத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை நிலவுவதும் அவசியமாகும்.
ரஷ்ய அதிபர் புடின் யூரேசியன் யூனியன் என்ற பொருளாதாரக் கூட்டமைப்பை உருவாக்கிடவும். அதில் உக்ரைன் முக்கிய உறுப்பு நாடாக அங்கம் வகிக்க வேண்டும் என்பதற்கான திட்டத்தை வகுத்தார். அதன்படி மே-29, 2014 அன்று கஜகஸ்தான் தலைநகரம் அஸ்தானாவில் உடன்படிக்கையும் ஏற்பட்டது. அதன்படி ரஷ்யா, கஜகஸ்தான் மற்றும் பெலாரஸ் ஆகிய மூன்று நாடுகள் யூரேசியன் உறுப்பு நாடுகளாகும். இதில்தான் நான்காவது உறுப்பு நாடாக உக்ரைனை சேர அவர் வலியுறுத்தினார். இந்தப் புதிய பொருளாதாரக் கூட்டமைப்பை பற்றி புடின் வர்ணிக்கும் போது 170 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட பிரம்மாண்டமான, சக்திமிக்க பொருளாதார வளர்ச்சியின் பூகோள ஈர்ப்பு மையம் எனக் குறிப்பிட்டார்.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கையானது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சவால்விடும் பொருளாதாரக் கூட்டமைப்பாக விளங்குவதோடு, வளைகுடா பகுதியில் எண்ணெய் வளத்தை முற்றிலுமாகக் கொள்ளையிடும் கனவோடு கால்பதித்துள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நகக்கண்களில் ஊசியையும் ஏற்றியுள்ளது. எனவேதான் உக்ரைனில் ஜி-7 நாடுகள் தலையிட்டு விக்டர்யானு கோவிச்சை வெளியேற்றிவிட்டு புதிய அதிபராக வலது பிற்போக்குவாதிகளின் ஆதரவுடன் பெட் ரோபுரோஷென்கோவை அதிபராகக் கொண்டு வந்துள்ளனர். அதிபராக பொறுப்பேற்றவுடன் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பொருளாதார ஒப்பந்தம் செய்து கொள்ளச் செய்ததோடு, ஐரோப்பிய யூனியனில் உறுப்பு நாடாக இணைவதற்கான ஒப்பந்தத்தில் ஜுன் 27, 2014 அன்று கையெழுத்திடவும் செய்தார்.
இப்பிரச்சனை அய்ஜாஸ் அகமது கூறியதுபோல் முந்தைய பனிப்போர் காலத்தை நினைவூட்டும் அளவுக்கு இட்டுச் சென்றுள்ளது. ஒருபுறம் ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் நேட்டோ உறுப்பு நாடுகளைச் சார்ந்த 5000 ராணுவ வீரர்களும், பீரங்கி வாகனங்களும் மற்றும் போர் விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளனவென்றால், மறுபுறம் ரஷ்யா அணுஆயுத பரிசோதனையை மேற்கொண்டுள்ளது. இதுதவிர அமெரிக்கா நார்வேயின் மலைக்குகைகளில் பீரங்கி உள்ளிட்ட ராணுவ கவச வாகனங்களை நிறுத்தியுள்ளது. இது ஒருபுறமிருக்க உக்ரைனில் ஏற்கனவே அரசுக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதியில் உள்ளவர்களை உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்திக் கொன்று வருகிறது. இதில் கவனத்தை ஈர்க்கும் முக்கியமான அம்சம் உக்ரைன் ராணுவ வீரர்கள் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களை தாக்குதல் தொடுக்க மறுத்து ரஷ்யாவிற்குள் தஞ்சமடைந்து வருகின்றனர். தற்சமயம் உள்நாட்டில் ஆயுதம் ஏந்தி அரசு தரப்பில் நின்று சண்டையிடுபவர்கள் நியோ பாசிஸ்டுகள் மற்றும் வலதுசாரி பிற்போக்கு மற்றும் ஸ்வபோடா கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் மூலம்தான் விக்டர் யானுகோவிச்சை ஆட்சிக் கவிழ்ப்பு செய்துவிட்டு பெட்ரோபுரோஷென்கோ மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் அதிபரானார். எப்படியிருப்பினும் ராணுவ நிலைமைகளிலும் தற்சமயம் உள்நாட்டிலும், உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ரஷ்ய மொழி பேசுபவர்களிடமும் ரஷ்யாவுக்கான ஆதரவு நிலையே நிலவுகிறது. எனவே மேற்கத்திய நாடுகள் போரை தவிர்ப்பதையே விரும்புகின்றன.
தற்சமயம் இருதரப்பிலும் முழுமையான போரைத் தவிர்ப்பதற்கான எண்ணம் மேலோங்கியிருந்த போதிலும் இது நீண்ட காலத்திற்கு நீடிக்குமா? என்பது சந்தேகமே… ஏனெனில் இன்றைய ரஷ்யா முதலாளித்துவ அரசாக இருந்தாலும் அது ஒரு ஏகாதிபத்தியம் அல்ல… அதேநேரத்தில் ஜி-7 நாடுகள் அனைத்தும் ஏகாதிபத்தியங்களாகத் திகழ்கின்றன. அவற்றின் நிதிமூலதன நலன்கள் எண்ணெய் மற்றும் ராணுவ தொழில்துறையுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. எப்போதெல்லாம் நிதிமூலதனம் நெருக்கடியைச் சந்திக்கிறதோ அதனை இறுதியாக யுத்தத்தின் மூலமாகவே தீர்த்திட முயலும் என்பது ஏகாதிபத்தியங்களின் கடந்தகால வரலாறு.
இன்று ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள நிதிமூலதன வளர்ச்சியானது அதனை ஒரு பலம் வாய்ந்த பொருளாதார சக்தியாக மாறுவதையும், அதன் மூலம் அதன் செல்வாக்கு உலகெங்கும் பரவிட ஏதுவாகவே டாலர் தவிர்ப்பு நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. எனவே, இறுதியாக நாம் தெரிவிக்க விரும்புவது, இன்றைய தினம் அமெரிக்க ஏகாதிபத்தியம் தலைமை தாங்கும் நிதிமூலதன உலகின் நலன்களுக்கு எதிரான மற்றும் சவால்விடும் ஒரு புதிய சக்தியை அதன் முதலாளித்துவ கட்டமைப்பிற்குள்ளேயே சந்திக்க வேண்டிய நிலை அதற்கு ஏற்பட்டுள்ளது. இதன் போக்கு எதிர்காலத்தில் முதலாளித்துவ உலகிற்கு யார் தலைமை தாங்குவது என்ற நிலைக்கும்கூட இட்டுச் செல்லலாம்…!
ஆதார நூல்கள் மற்றும் கட்டுரைகள்
- ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம் உலக நாடுகளில் பொருளாதார அரசியல் பூகோளம் உலகமயமாக்கமும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும்
- பிரண்ட்லைன் (ஜுன்-27,2014), சிவில்ஸ் பீடியா (மே,2014)
- பேங்கிங் சர்வீஸ் குரோனிக்கல் (ஜுன்,2014)
- பீப்பிள்ஸ் டெமாக்ரசி (மே, ஜுன்-2014), மார்க்சிஸ்ட் தமிழ் (மே, 2014)
- தீக்கதிர், ஹிந்து (தமிழ், ஆங்கிலம்), இணையதளக் கட்டுரைகள்