மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


மோடி அரசின் சர்ச்சைகள் நிறைந்த ஏழு மாத ஆட்சி!


“பாசிசம் என்பது மிகவும் பிற்போக்குத்தனமான, நிதி மூலதனத்தின் ஏகாதிபத்திய, முக்கிய கூறுகளை உள்ளடக்கிய வெளிப்படையான, பயங்கரவாத சர்வாதிகாரம் ஆகும்” (ஜியர்ஜி டிமிட்ரோவ், ஏழாவது கம்யூனிஸ் அகிலம், 1935)

பாசிசம் என்பது பிற்போக்குத் தனமானது மட்டுமல்ல. ஜனநாயகத்திற்கு எதிரானதும் கூட. மக்களை பற்றி கவலைப்படாமல், வலுவான தலைவர் வேண்டும் என்பதை வலியுறுத்தும் அமைப்பாகும். அதிதீவிர தேசியவாதம் மற்றும் ராணுவமயத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் முறையாகும். அதுமட்டுமின்றி, கொள்கையற்ற சந்தர்ப்பவாதமும், அந்த சந்தர்ப்பவாதத்திற்கேற்ப பேசுவதும், செயல்படுவதும் பாசிசவாதிகளுக்கு வரித்தானது. பாசிசம் சமூக வாழ்வை டார்வினிய அடிப்படையில் அணுகும் அமைப்பாகும். அதாவது வலுவானவன் சொல்தான் எடுபடும். அதேபோல் வலுவான தேசங்கள், பல வீனமானவற்றை மறையச் செய்துவிடும்.

பாசிசம் பற்றிய விவாதம் மார்க்சிஸ்டுகளைப் பொறுத்தவரை புதிதல்ல. ஆனால் மோடி பிரதமராக அறிவிக்கப்பட்டதிலிருந்து, பாசிசம் பற்றிய விவாதம் அதிகரித்திருப்பதை சமூக ஊடகங்கள், பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகள் (உ.ம்; எக்கனாமிக் அண்ட் பொலி டிக்கல் வீக்லி) மூலம் காண முடிகிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘இந்து தேசியவாதம்’ என்பதை மறைத்துக் கொண்டு, தன்னை ஒரு சிறந்த நிர்வாகியாக மோடி முன்னிறுத்திக் கொண்டார். இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ள சூழலில், தன்னால் மட்டுமே பொருளாதார வளர்ச்சியை கொண்டுவர முடியும் என்றும், ‘அனைவருக்குமான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, (சப்கே சாத், சப்கா விகாஸ்), ‘நல்ல நாள் வர உள்ளது”, ‘காங்கிரஸ் இல்லா பாரதம்’ என்பது போன்ற கோஷங்களை முன்வைத்து பிரதமராக வந்தார்.

பொருளாதார தளத்தில்:

மோடி ஒரு ஆர்எஸ்எஸ் சேவகர் மட்டுமல்ல. நவீன தாராளமயவாதியும் கூட என்பதை நாம் நினைவில் கொள்வது அவசியம். அப்பொழுதுதான் மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளை மார்க்சீய பார்வையில் ஆராய முடியும். பாசிச பொருளாதாரக் கொள்கை என்பது என்ன? தனியார் லாபம் ஊக்குவிக்கப்பட வேண்டும். பெருமுதலாளிகளுக்கும், கார்பரேட் நிறுவனங்களுக்கும் நலம் தரும் வகையில் பணக் கொள்கை, வரி, வணிகக் கொள்கைகள் இருக்க வேண்டும். “பாசிஸ்டுகள் கார்பரேட்டிசத்தை ஆதரிப்பவர்கள். வர்க்க வேறுபாடுகள் இருப்பதையும், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதையும், பல வர்க்கங்கள் இருப்பது சமூகத்திற்கு நல்லது என்று கூறுவதுடன், வர்க்கங்கள் ஒன்றோடொன்று இணைந்து செயல்பட வேண்டுமென்பதில் நம்பிக்கை உள்ளவர்கள் ‘லாபம் தனியாருடையது, தனிநபருடையது. நஷ்டம் பொதுவானது, சமூகத்தை சார்ந்தது” (GAETANO SALVEMINI) பாசிசம் பற்றி மார்க்சியம் கூறுவது என்ன? பாசிச ஆட்சி தொழிற்சங்கம் மற்றும் இதர உழைக்கும் வர்க்க அமைப்புகளை ஒடுக்கி, நசுக்கும். உழைக்கும் மக்களின் உரிமைகள் பறிக்கப்படும். பணக்கார வர்க்கம் ஆட்சியை தனது பிடியில் வைத்திருக்கும் என்பதாகும்.

‘குஜராத் மாடல்’ போன்ற வளர்ச்சியை நாடு முழுவதும் சாத்தியமாக்குவோம் என்று அறிவித்த பாஜக முந்தைய ஐமுகூ அரசை காட்டிலும், வெகு வேகமாக பொருளாதார சீர்திருத்தங்களை அமுலாக்கி வருகிறது. பொதுத்துறையை தனியார்மயமாக்குதல், சரக்கு மற்றும் சேவை வரியை செயலாக்குதல், காப்பீட்டுத்துறையில் நேரடி அன்னிய முதலீட்டை அதிகரித்தல்… என ஒன்றன்பின் ஒன்றாக பல அறிவிப்புகளை செய்ததுடன், திட்டக் கமிஷனே தேவையில்லை என்று சுதந்திர தின உரையில் மோடி குறிப்பிட்டு பேசியது என்பது கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு அளித்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இந்தியா விடுதலைப் பெற்றதிலிருந்து பொதுத்துறை பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது. பொதுத்துறை இல்லாதிருந்தால், தனியார்துறை இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாது. ‘சுதேசி’ இயக்கம் என்ற பெயரில், வெளிநாட்டு முதலாளிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறது. வாஜ்பாய் பிரதமராக இருந்த பொழுது, பொதுத்துறையை முடக்க ஒரு அமைச்சரே நியமிக்கப்பட்டார் என்ற அவலத்தை (அருண் சௌரி) எப்படி மறக்க இயலும்? கோடிக்கணக்கான இந்தியர்களின் சொத்தான பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு தனியாரிடம் விற்பதற்கு மோடி அரசு துடிக்கிறது. இந்தியாவில் எண்ணை தோண்டுதல், பெட்ரோலியம் உற்பத்தி செய்தல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியுள்ள ஓ.என்.ஜி.சி, ஐ.ஓ.சி.எல் ஆகியவை செயலிழந்து, நட்டத்தில் செயல்படுபவை அல்ல. மாறாக, எண்ணை, எரிவாயுத் துறையில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் நிறுவனங்களாகும். ஓ.என்.ஜி.சி. யின் பங்குகளை 5 சதவிகிதம் விற்றால், 19 ஆயிரம் கோடி ரூபாய் கிட்டுமென கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல், நீர்மின் உற்பத்தி நிறுவனமான என்.ஹெச்.பி.சியின் 11.3 சதவிகிதம் பங்குகளை விற்பதன் மூலம் 3100 கோடி ரூபாய் கிடைக்குமாம் அரசின் செலவினங்களை ஈடுகட்ட, பொதுத்துறை பங்குகளை விற்க வேண்டியுள்ளது. நிதிபற்றாக்குறையை சமாளிக்க இத்தகைய கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது என்கிறது அரசு. நவீன தாராளமயக் கொள்கையின் ஒரு முக்கிய அம்சம்தான் இப்படி பொதுத்துறையை நாசப்படுத்துவதென் பதில் ஐயமில்லை.

நிதிப்பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காக பொதுத்துறை பங்கு விற்கப்படுகிறதென்று ஒருபுறம் கூறப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் சரியாக செயல்படுவதில்லை என்றும், தனியார் துறையைப்போல திறமையுடன் செயல்படாததாலும், பொதுத்துறை வேண்டாம் என காலம் காலமாக துஷ்பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. பொதுத்துறை நஷ்டத்தில் செயல்பட அரசுதான் காரணம். எத்தனையோ பொதுத்துறை நிறுவனங்கள் மிகச்சிறப்பாக செயல்படுகின்றன.

விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் ஒரு நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்த ஒரு நிறுவனம். ஆனால் பாதுகாப்பு அமைச்சரகம் தலையிட்ட பின்பு, தனியார் துறைக்கு கொடுக்கப்பட்ட கப்பல்கட்டும் ஆர்டர்கள் ஹெச்.எஸ்.எல்லிடம் தரப்பட்டன. அந்த நிறுவனமும் லாபம் ஈட்டத் துவங்கியது. இது மட்டுமல்ல. வேறு சில சிறந்த எடுத்துக்காட்டுகளும் உண்டு. இடதுசாரிகளின் ஆட்சிக் காலத்தில் கேரளாவில் நஷ்டத்தில், செயல்பட்ட ‘நோய் வாய்ப்பட்ட’ 15 பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாறின. அரசின் சரியான தலையீடு/ அணுகுமுறை அதற்கும் மேலாக பொதுத்துறையை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் லாபம் ஈட்டும் நிறுவனங்களாக செயல்பட இயலும்.

என்.ஹெச். பி.சியின் பங்குகள் விற்கப்படுவதென்பது இயற்கை வளங்களை (அதில் ஆறுகளும் அடங்கும்) தனியாருக்கு தாரை வார்ப்பதாகும். தனியார் நிறுவனங்கள் லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதால், சுற்றுச்சூழல் பாதிப்புகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஓ.என்.ஜி.சி, செயில் (SAIL) ஆகியவற்றின் லாபம் குறைந்து கொண்டே வருகிறதாம். அது உண்மைதான். 2010ல், ராஜஸ்தானில் செயல்பட்டு வந்த கெய்ர்ன் இந்தியா-வேதாந்தா ஊழல் சர்ச்சையில் மாட்டிக் கொண்டபோது, அதை ஓஎன்ஜிசியிடம் ஒப்படைப்பதற்குப் பதில் அரசு வேதாந்தா நிறுவனம் அதை வாங்கும்படியான சூழலை உருவாக்கியது. நிலக்கரியைப் பொறுத்த வரை நடைபெற்ற ஊழல் நாடு அறிந்ததே. நிலக்கரி சுரங்கங்கள் தேசியமயமாக்கப்பட்டதால், ஏராளமான நன்மைகள் கிட்டின. குறிப்பாக, கண்மூடித்தனமாக, லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு, தனியார்துறை செயல்பட்டதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. நிலக்கரியை (சி.ஐ.எல்) தொழிலில் பங்குகளை விற்பதென்பது நியாயமே இல்லை.

கப்பல்கட்டும் துறை, நிலக்கரி, நீர்மின் உற்பத்தி மட்டுமின்றி, வேறு சில கேந்திரமான இயற்கை வளம் சார்ந்த நிறுவனங்களின் பங்குளையும் விற்க அரசு தீர்மானித்துள்ளது.

பல்வேறு தொழிற்சங்கங்கள் பொதுத்துறை பங்கு விற்பனையை (குறிப்பாக நிலக்கரி-சி.ஐ.எல்) கடுமையாக எதிர்க்கின்றன. இதில் பா.ஜ.கவின் தொழிலாளர் அமைப்பான பாரதீய மஸ்தூர் சங்கமும் அடங்கும் என்பது குறிப்பிட்டத்தக்கது. இயற்கை வளங்கள் படிப்படியாக தனியார்வசம் ஒப்படைக்கப்படுவதை கட்சிகளுக்கு அப்பாற் பட்டு அனைத்து சங்கங்களும் எதிர்க்கின்றன. இத்தகைய நடவடிக்கை, நிலக்கரி தொழில் தேசியமயமாக்கப்பட்டு, போராடி, தொழிலாளர் பெற்ற அனைத்து நன்மைகளையும் இழக்கச் செய்யும். தேசியமயமாக்கப்பட்ட பின்னர் சுரங்கத் தொழிலாளர்களின் வேலை நிலை, சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் கூலி போன்றவற்றில் பெருத்த முன்னேற்றத்தை காண முடிந்தது. ஜார்கண்டு, ஓடிஷா, சத்தீஸ்கர் மாநிலங்களில் ரயில் இணைப்பை வலுப்படுத்தி நிலக்கரியை பாதுகாப்பாக பல இடங்களுக்கு எடுத்துச் செல்ல முயல வேண்டும் என தொழிற்சங்கங்கள் கருதுகின்றன. தனியார் நிறுவனங்களைப் போல் இல்லாமல், பொதுத்துறை நிறுவனங்கள் லாபத்தில் குறிப்பிட்ட பங்கை அரசுக்கு செலுத்துகிறது. வரி கட்டுகிறது. சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்கின்றன. 1990ல் புதிய பொருளாதார கொள்கை கொண்டு வரப்பட்டதிலிருந்து பொதுத்துறை நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. மோடி அரசு தனது நடவடிக்கைகள் மூலம், பொதுத்துறை மீதான தாக்குதலை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

உழைக்கும் வர்க்கம் மோடி பார்வையில்:

அக்டோபர் 16, 2014 அன்று மோடி தொழிலாளர் பற்றிய சீர்திருத்தங்களை அறிவித்தார். உழைப்பை சிலாகிக்கும் வண்ணம் ‘ஷ்ரமேவ ஜயதே’ திட்டம் துவக்கப்பட்டது. உழைப்பாளி கள் ‘யோகிகளாம்’!! என்னே கரிசனம்!! கிட்டத்தட்ட 40 மத்திய தொழிலாளர் சட்டங்களும், 150 மாநில தொழிலாளர் சட்டங்களும் பயனற்றவை என ஒதுக்கப்பட்டுள்ளன. சிறுதொழில்களைப் பொறுத்த வரை 40 தொழிலாளர்கள் வரை வேலையின் அமர்த்தும் கம்பெனிகள், தொழிற்சாலை சட்டம், தொழில் தகராறு சட்டம், ஈஎஸ்ஐ சட்டம், பிரசவ கால விடுப்புச் சட்டம் ஆகியவை உள்ளிட்ட 14 தொழிலாளர் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவை என குறிப்பிட்டுள்ளது.

அப்படியெனில் ஏராளமான தொழிலாளர்கள் இந்த சட்டங்களுக்குள் வரமாட்டார்கள். தொழிலாளர் சட்டங்களை எளிமைப்படுத்துவதாகக் கூறும் மோடி, ஐ.எல்ஓ கன்லென்ஷனின் ஷரத்துக்கள் 87,88ன் கீழ், தொழிலாளர்களுக்கு சங்கம் அமைத்து செயல்பட உரிமை உண்டு என்பது தொடர்பாக ஏன் சட்டம் கொண்டுவரவில்லை?

ஏற்கனவே தொழிற்சாலைகள் சட்டத்தில் கொண்டுவர வேண்டிய மாற்றங்கள் தொடர்பானவை பற்றி தொழிற்சங்கங்கள் அதிருப்தி அடைந்துள்ளன. உண்மையிலேயே மோடி, தொழிலாளர்கள் பற்றி கவலைப்படுபவராக இருந்தால் ஒப்பந்த தொழிலாளர் சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வந்திருப்பார் ஒப்பந்த தொழிலாளாகப் பணிபுரிவோர்க்கு குறைந்தபட்ச கூலி கூட கொடுக்கப்படுவதில்லை.

மோடியின் “மேக் இன் இந்தியா” அன்னிய மூலதனத்தை ஈர்க்க வழிவகை செய்யும். அன்னிய மூலதனம்/ முதலாளிகள் இந்திய தொழிலாளர்களை எப்படி நடத்துவார்கள்? 2009-10ல் நடத்தப்பட்ட ஆய்வின் படி, 5000 தொழிலாளர்களுக்கும் கூடுதலான எண்ணிக்கையில் பணிபுரிவோர் உள்ள தொழிற்சாலைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆவர். 2011-12 தேசிய மாதிரி ஆய்வு புள்ளிவிபரத்தின் படி தொழிற்சாலையில் பணிபுரிவோரில் (100-5000 பேர் உள்ள) நான்கில் ஒருவர் ஒப்பந்த தொழிலாளி ஆவார்.

அமைப்புசார் தொழிற்சாலைகளில் கூட 80 சதவிகிதம் தொழிலாளர்கள் எந்த ஒப்பந்தமுமின்றி/ஓராண்டுக்கும் குறைவான கால ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றனர். 1990 முதல் காசுவல்/ ஒப்பந்த தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. நிரந்தர தொழிலாளர்களுக்கு உள்ள எந்த உரிமையும் இவர்களுக்கு கிடையாது. பேரம் பேசும் சக்தி கிடையாது அமைப்புசார் தொழில்களில் முதலாளிகளின் லாபம் அதிகரிக்கிறதே தவிர, தொழிலாளர்களின் கூலி உயரவில்லை என்பது தெரியவருகிறது. கூலி உயர்வு கேட்டால் வேலை இழப்பு அல்லது ‘அவுட்சோர்சிங்’ முறை கடைபிடிக்கப்படுகிறது. நிரந்தர ஊழியர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைகிறது. எடுத்துக்காட்டாக பாரத் எலக்ட்ரானிக்ஸில் இருபது ஆண்டுகளுக்கு முன் 13 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளிகள் வேலை செய்தனர். தற்போது 2000க்கும் குறைவான தொழிலாளிகள் உள்ளனர்.

அரசின் கொள்கைகளால் பணி பாதுகாப் பின்மை, குறைந்த கூலி, மோசமான வாழ்க்கைத் தரம் ஒருபுறம். மறுபுறம், தொழிற்சாலைகள் மூடப்படுவதால் ஆயிரக்கணக்கில் வேலை இழப்போர் நிலை படுமோசமாகி வருகிறது. சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா நிறுவனம், ‘பாக்ஸ்கான்’ என மூடப்படுகையில் பல்லாயிரக் கணக்கானோர் வேலை இழந்து தவிக்கின்றனர். இவர்களில் கணிச மானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நெய்வேலி லிக்னைட் பொதுத்துறை நிறுவனம் ‘நவரத்தினம் ’என கருதப்படும் இந்த என்.எல்.சி.யில் 10-13 ஆயிரம் தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோர் தங்களை நிரந்தர மாக்கும்படி போராடி வருகின்றனர். இதுபோல் நாட்டின் பல பகுதிகளில் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். நிரந்தரமாக ஊழியர்களை பணியமர்த்தும் வாய்ப்பு இருந்த போதிலும், அரசு அதைச் செய்ய மறுக்கிறது.

மோடி அரசு தொழிலாளர் சட்டங்களை எளிமைப்படுத்துவதாக கூறுவதுடன், பெண்களைப் பற்றி மிகவும் கவலைப்படுவதாகவும் கூறுகிறது. ஆனால், இன்று அமைப்புசாராத் துறையில் பணிபுரியும் கோடிக்கணக்கான பெண்கள் தொழிலாளர் நலசட்டங்களுக்குள் வரவில்லை. வேளாண் தொழிலில் உள்ள பெண்களுக்கு எந்த பாதுகாப்பு சட்டமும் இல்லை. பெண்கள் ‘விவசாயிகளாக’ கருதப்படாத சூழலில், அரசின் ஒரு சில நடவடிக்கைகளால் பெண்கள் பயன்பெற இயலவில்லை. அங்கன்வாடி பணியாளர்கள், ஐ.சி.டி.எஸ் மற்றும் இதர பல அரசு திட்டங்களை அடிமட்டத்தில் செயல்படுத்தி வரும்/ அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக அமைந்து பணியாற்றும் கோடிக் கணக்கான பெண் ஊழியர்கள் பணி பாதுகாப்பு / நல சட்டங்களுக்கு அப்பாற்பட்ட வர்களாகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பணி ஓய்வு பயன்கள் கூட அவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை என்பது துயரமான விஷயமாகும். இவர்களைத் தவிர, கட்டுமானத்துறை, ஆடை தயாரிப்பு துறை, தகவல் தொழில் நுட்பத்துறை போன்றவற்றில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் நிலை மோசமாக உள்ளது. வீட்டுசார் தொழில்களில் பணிபுரியும் பெண்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. தொழிலாளர் சட்டத்தின் கீழ் இவர்கள் வருவதில்லை எனவே, இவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது.

“உழைப்பு மலிவு, உழைப்பாளிகளின் வாழ்வு அதைவிட மலிவானது” என்பதுதான் யதார்த்தம். மோடி அரசு தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களை கொண்டு வருவதில், முதலாளிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஃபிக்கி (FICCI),, அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்பதுடன், அதன் மூலம் இந்தியாவிற்குள் வரும் மூலதனம் அதிகரிக்கு மென்றும் கூறியுள்ளது. தொழிலாளர் அடையாள எண், அப்ரென்டிஸ் சட்ட திருத்தங்களை வரவேற்பதுடன், மோடி அரசு சரியான பாதையில் செல்கிறது என நற்சான்றிதழ் வழங்கியுள்ளது. பாசிசம் தொழிலாளர் நலன் பற்றி கவலைப்படுவதில்லை. லாபம் ஒன்று மட்டுமே குறிக்கோள். எனவே, மோடி அரசு தொழில் தொழிலாளர் துறை தொடர்பாக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் வலது சாரிகளின் அணுகுமுறைக்கு ஏற்பவே இருக்கும்.

மோடி அரசு தொழில் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கெதிரான சீர்திருத்தங்களை மட்டும் அறிவிக்கவில்லை. ஐ.மு.கூ.ஆட்சியில் வேளாண் நெருக்கடியால், கிராம மக்கள் குடிபெயர்தலை நிறுத்த, இடதுசாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி கிடைக்கப்பெற்ற “ரேகா” வை நீர்த்து போகச் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ‘ரேகா’ அமுலாக்கத்தில் குறைபாடுகள் இருக்கலாம் ஆனால், ஏழை மக்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தை இது ஏற்படுத்தியுள்ளதை மறுக்க இயலாது. குடிபெயர்தலை குறைத்துள்ளது ‘ரேகா’வை மிக சிறப்பாக அமுல்படுத்திய திரிபுரா போன்ற ஒரு சில மாநிலங்களில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ‘ரேகா’ அமுலாக்கம் செய்யப்படும் மாவட்டங்கள் குறைக்கப்பட்டு, அதற்கான ஓதுக்கீடும் வெட்டப்பட்டுள்ளது என்பது பலத்த அடியாகும். இதன் கீழ் பணி ஏற்போர் பெரும்பாலும் பெண்களே. திரிபுரா முதல்வர் இது தொடர்பாக, மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் மத்திய அரசு நிதி ஓதுக்கீட்டை குறைத்து திட்ட அமுலாக்கத்தை முடக்குகிறது. இந்திய கிராமப்புறத்தில் ஒரு சலனத்தை ஏற்படுத்திய இத்திட்டம் முடக்கப்படுவதால், அந்த ஏழை விவசாயத் தொழிலாளர்கள், மலைவாழ் மக்களின் வேலை வாய்ப்பு முடக்கப்பட்டு, வருவாய் இழப்பு ஏற்படும். இந்தியாவிலேயே இடதுசாரி ஆட்சி செய்யும், திரிபுராவில்தான் ‘ரேகா’ மிகச்சிறப்புடன், அதன் நோக்கங்களை நிறைவேற்றும் வண்ணம் செயல்படுத்தியுள்ளது. ஏழை மக்கள் உள்ளிட்ட அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி (சப்கா விகாஸ்) என்பது வாக்குகளைப் பெறுவதற்கேயன்றி, யதார்த்தத்தில் செயல்படுத்துவதற்கல்ல என மோடி நிரூபித்துவிட்டார்.

சட்டங்கள் மட்டுமின்றி, சாதாரண ஏழை, எளிய மக்களுடைய வயிற்றில் அடிக்கும் வண்ணம் பல நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்துள்ளது. ரயில் கட்டணம் உயர்ந்துள்ளது. டீசல் விலை நிர்ணயத் தொடர்பான கட்டுப்பாடுகளை ஐ.மு.கூ அரசு, ஓரளவு நீக்கியது. மோடி அரசும் அதேபோன்று கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது. சர்வதேச சந்தையில் எண்ணை விலை குறையும் பொழுது கூட பெட்ரோல், டீசல் விலை அந்த அளவுக்கு குறைவதில்லை.

அதுமட்டுமல்ல, 100 சதவிகிதம் மின் வசதி உள்ள மாநிலங்களுக்கு பொது விநியோகத்திற்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு கிடையாது என்றும், மாநில அரசுகள் மின் இணைப்பு உள்ள வீடுகளில் வசிப்போருக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் தரக்கூடாது எனவும் நிதி அமைச்சர் கூறியுள்ளார். தவிர விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுக்கும் முறையை கைவிடும் அபாயம் உள்ளது. இதற்கும் இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நமது நாட்டின் விவசாயம்/ விவசாயிகளை பாதிக்கும் எத்தகைய ஒப்பந்தத்திலும் அரசு கையொப்பமிடக் கூடாதென வலியுறுத்தி வருகிறோம்.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சமையல் எரிவாயுக்கான மானியத்தை வங்கியில் வாங்கிக் கொள்ளுங்கள் என்றும், ஆதார் அட்டை இல்லையெனில் வங்கி கணக்கு தகவல்களை அளிக்கும்படியும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அட்டை இல்லையெனில் தர மறுக்கின்றனர். வங்கிகளில் புதிதாக கணக்கு துவக்க ஏகப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நமது நாட்டின் சமையல் காஸ் தேவையில் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் உள்நாட்டிலேயே கிடைக்கும்போது இறக்குமதி விலையில், விலை நிர்ணயம் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன? காஸ் இணைப்பு பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 11.50 கோடி. எனவே ஒரு சிலிண்டருக்கான மானியம் ரூ. 23 என்றால் கூட, மொத்தம் அரசுக்கு ஏற்படும் செலவு ரூபாய் ஆயிரம் கோடிக்கு சற்று கூடுதலாகும். நிலைமை இப்படி இருக்கும்போது காஸ் சிலிண்டருக்கு மானியம் அளிப்பதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் என்று பொய்யான தகவல்கள் தரப்படுகின்றன. ஆனால் பெரு முதலாளிகளுக்கு, கார்பரேட் நிறுவனங்களக்கு தரப்படும் வரிச்சலுகைகள் எத்தனை கோடி என்பது பற்றி மூச்சு விடுவதில்லை.

கொல்லைப்புற வழியில் அவசரச் சட்டம்:

நமது நாட்டின் வளர்ச்சிக்கு காப்பீட்டுத்துறை கணிசமாகப் பங்காற்றியுள்ளது. நாட்டில் உள்ள 52 காப்பீட்டு நிறுவனங்களில் 24 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் ஆகும். 28 பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள், இந்திய ரயில்வே, மின்துறை ஆகியவற்றில் காப்பீட்டு நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய்களை முதலீடு செய்து, தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்தியுள்ளது. ஆயுள் காப்பீட்டுக் கழகமே 11வது மற்றும் 12வது ஐந்தாண்டு திட்டத்திற்கு சராசரியாக ஆண்டுடொன்றுக்கு ஒன்று முதல் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இந்தத் துறை இத்தகைய பிரமிக்கத்தக்க வளர்ச்சி பெற்ற நிலையில் அன்னிய முதலீட்டை எதற்காக அனுமதிக்க வேண்டும்?

ஐ.மு.கூ அரசு காலத்திலேயே அன்னிய முதலீட்டை காப்பீட்டுத்துறையில் கொண்டு வரவேண்டும் என்று நிர்பந்தித்த பொழுது, பா.ஜ.க அதை எதிர்த்தது தற்போது, தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, காப்பீட்டுத் துறையில் 49 சதவிகிதமாக அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறது. மழைக்கால கூட்டத் தொடரில் எப்படியாவது இதை நிறைவேற்ற வேண்டும் என்ற வேகத்துடன் செயல்படுகிறது. 2009லிருந்து இது கிடப்பில் உள்ளது. எனவே யார் எதிர்த்தாலும் இதை நிறைவேற்றுவோம் என அருண்ஜெட்லி கூறுகிறார். இதை எதிர்த்த பாராளுமன்ற உறுப்பினர் “இது இச்சபையின் சொத்து” எனக் கூறியபோது, பா.ஜ.க அமைச்சர் ‘இது மக்களின் சொத்து’ என்று கூறியுள்ளார். மக்களின் சொத்து எனில் மக்களின் அனுமதியின்றி அதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாமா?

மாநிலங்களவையில் பா.ஜ.கவுக்கு பலம் இல்லை. மக்களவையில் பெரும்பான்மை இருப்பதை பயன்படுத்தி பல மாற்றங்களை கொண்டு வர முயலுகிறது. காப்பீட்டுத்துறை, நிலக்கரி சுரங்கம் தொடர்பான மசோதாக்களை ஒரு மனதாக நிறைவேற்ற இயலாத சூழலில், அவசரச் சட்டம் மூலம் கொண்டு வர முயலுகிறது. முன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்தர் சச்சார், “இரண்டு மசோதாக்களையும் அவசர சட்டம் மூலம் செயல்படுத்துவது சட்டவிரோதமானது. அவை கூட இயலாத சூழலில் அவசர சட்டத்தை உருவாக்கும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் 1987ல் அளித்துள்ளது. ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள பயன்படுத்தலாமே தவிர, அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.

மேலும், “மத்திய அரசின் அவசரம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் செய்து கொண்ட ரகசிய உடன்படிக்கையை காப்பாற்றவா எனத் தெரிய வேண்டும். நிலக்கரி குறித்த அவசர சட்டம், நிலக்கரி சரங்கங்கள் தேசியமயமாக்கல் “சட்டத்தை மீறுவதாகும்” அவசர சட்டம் என்பது நியாயமான முறையில் சட்டம் இயற்ற இயலா சூழலில், கொல்லைப்புற வழியாக நுழைந்து கொள்ளையடிப்பதற்கு சமமாகும் என்றால் மிகையாகாது.

இவை தவிர, சுகாதாரம், (20 சதவிகிதம்) கல்வி போன்ற மக்களின் அடிப்படை வாழ்வுக்கு இன்றி யமையாதவற்றிற்கான ஒதுக்கீட்டை வெட்டியுள்ளது. இவற்றையெல்லாம் வெட்டிவிட்டு, மக்களுக்கு நல்ல நாள் எப்படி வரும்? கிராமப்புற கூலி தேக்கமடைந்துள்ளது. ரேகா திட்ட ஒதுக்கீடு வெட்டு. மக்களின் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது. அரசு, பணவீக்கத்தை குறைத்துவிட் டோம் என்று கூறுவது எப்படி பொருந்தும்?

மோடியும், முதலாளிகளும்!

மானிய வெட்டு என்பதெல்லாம் சாதாரண மக்களுக்குத்தான். முதலாளிகளுக்கு அல்ல. இந்திய பிரதமர்களிலேயே, பதவியேற்ற 6 மாதங் களில் ஏகப்பட்ட நாடுகளை ‘விசிட்’ செய்த பிரதமர் மோடிதான்! அவருடைய ஆறு வெளி நாட்டு பயணத்தில் ஐந்து தடவை பெருமுதலாளி அதானியை உடன் அழைத்துச் சென்றார். பாரத ஸ்டேட் வங்கி சமீபத்தில் அதானிக்கு 6500 கோடி ரூபாய் கடன் வழங்கிய விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது. அதானிக்கு ஏற்கனவே 60ஆயிரம் கோடிரூ கடன் பாக்கி உள்ளது. அதானியின் சொத்தை யார் முடக்குவது? இதே பாரத ஸ்டேட் வங்கி ‘டிராக்டர் வாங்க பெற்ற கடனை திரும்பத் தராவிடில், டிராக்டரை பறிமுதல் செய்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை மீட்போம் என்றனர். ஆனால், ஆட்சிக்கு வந்ததும், ஏழைகள் வயிற்றிலடிக்கும் நடவடிக்கைகளை வெகுவேகமாக செயல்படுத்தி வருகிறது மோடி அரசு. தாங்கள் பெரும்பான்மை பெற்றுவிட்ட மிதப்பில் மத்திய திட்ட கமிஷனை கலைக்க முடிவெடுத்துள்ளது. ஆனால், மாநில முதல்வர்கள் மாநாட்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், திட்டக் கமிஷன் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும், ஜனநாயகப்படுத்தப்பட வேண்டுமென்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

மதவாதம் எனும் மாபெரும் அபாயம்:

மோடியின் பெயர் பிரதமர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட உடனேயே மத அடிப்படையில் மக்கள் பிளவுபடும் அபாயம் சுட்டிக்காட்டப்பட்டது. குஜராத் இனப்படுகொலையை மக்கள் மறக்கவில்லை என்பது முன்வைக்கப்பட்டது. ஆனால், பா.ஜ.கவின் திட்டமிட்ட பிரச்சாரம் சமூக ஊடகங்கள், பெருமுதலாளிகளின் ஆதரவு, ஐ.மு.கூ IIன் ஊழல், அதற்கு மௌனத்துடன் தலைமை வகித்த மன்மோகன் சிங்… என காங்கிரசின் செயல்பாடு ஏற்படுத்திய அதிருப்தி, மோடியை பிரதமராக ஆக்கியது தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது, உ.பி போன்ற மாநிலங்களில் மத உணர்வுகள் தூண்டப்பட்டன. அமித்ஷாவை தேர்தல் கமிஷன் கண்டித்தது. இருப்பினும் 31 சதவிகிதம் வாக்குகள் மற்றும் 283 இடங்களை வென்று பா.ஜ.க ஆட்சிக்கு வந்துவிட்டது.

மோடி மட்டுமல்ல, பல எம்.பிக்கள், அமைச்சர்கள், இதுவரை இல்லாத அளவுக்கு தாங்கள் ஆர்.எஸ்.எஸ் சேவகர்களாக இருந்ததை முன்னிறுத்திக் கொள்ளும் தைரியம் பெற்றுள்ளனர். ஆர்.எஸ்.எஸ்.சேவகர்களில் பலர் பா.ஜ.க கட்சி பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். (மாதவ் குறிப்பிடத்தக்கவர்) ஆர்.எஸ்.எஸ் ஐரோப்பிய பாசிச இயக்கத்தைப் போன்று துவக்கப்பட்டதுதான். முப்பதுகளில் செயல்பட்ட பாசிச இயக்கங்கள் போல் இன்றும் தினமும் காக்கி உடை அணிந்து ‘டிரில்’ செய்வது ராணுவ ‘சல்யூட்’ அடிப்பது தொடர்கிறது. தேர்தலின் பொழுதும் அதன் பின்பும் ‘இந்துத்துவா’, ‘அகண்ட பாரதம்’ என தங்கள் நோக்கத்தை வெளிப்படையாகவே பா.ஜ.க பிரச்சாரம் செய்யத் துவங்கிவிட்டது. இந்தியா இந்துக்களுக்கே, இதர மதத்தினர் இந்து கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும் என பா.ஜ.க வலியுறுத்துகிறது. யார் அமைச்சர், யாருக்கு எந்தத் துறை என்பது உட்பட ஆர்.எஸ்.எஸ்.ஸின் கருத்தை கேட்டு அதன்படிதான் பா.ஜ.க செயல்படுகிறது. எந்த ஒளிவுமறைவுமில்லை. பெரும்பான்மை என்பதால், அசுர பலத்துடன் தனது அஜெண்டாவை செயல்படுத்த முனைகிறது.

இந்தியாவின் மக்கட்தொகையில் இந்துக்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். உலக மக்கட் தொகையை மதரீதியாக பார்க்கும் பொழுது, 0.1 ‘பஹாய்’, 1.28 சதவிகிதம் பௌத்தர், 32.8 சதவிகிதம் கிறித்துவர், 13.8 சதவிகிதம் இந்துக்கள் 22.5 சதவிகிதம் முஸ்லீம்கள், 0.3 சதவிகிதம் சீக்கியர்கள், 0.1சதவிகிதம் ஜைனர்கள் 9.8 சதவிகிதம் எந்த மதத்தையும் சாராதவர், 6.54 சதவிகிதம் மத நம்பிக்கையற்றவர்கள் என்று தெரிய வருகிறது. (ஆதாரம்: WORLD RELIGIOUE BELIEFS 2010, Compiled by Boston University) உலக இந்துக்களில் 90 சதவிகிதம் இந்தியாவில் வசிக்கின்றனர். இந்தியாவில் 13 சதவிகிதம் முஸ்லீம்கள் இருந்தபோதும், பா.ஜ.கவின் 449 வேட்பாளர்களில் (2014 பாராளுமன்ற தேர்தல்) 8 பேர் தவிர அனைவரும் இந்துக்களே. ‘முஸ்லீம் வேட்பாளர்களை நிராகரியுங்கள்’ என அமீத்ஷா வெளிப்படையாகவே அறைகூவல் விடுத்தார். ஆனால் ‘அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’ என்ற பொய்யான கோஷத்தை முன்வைக்கின்றனர். பா.ஜ.க மத்தியில் ஆட்சி அமைத்தபின் ஆர்.எஸ்.எஸ் தனது அமைப்பை மேலும் வலுப்படுத்திக் கொண்டு வருகிறது.

மதசார்பின்மைக்கு பலத்தஅடி:

மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம்; அது பொது வாழ்க்கையுடன் கலக்கக் கூடாது என்பது முக்கியம். ஆனால், பா.ஜ.க எம்.பிக்கள், அமைச்சர்கள் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம்/ வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டும் ‘இந்துத்துவா’ பற்றியும் பேசத் தவறுவதில்லை. பா.ஜ.க எம்.பி. யோகி ஆதித்யநாத் மத விஷம் கக்கும் வார்த்தைகளை பேசுகிறார். பாஜகவுடன் இணைந்து ‘சங்’ பரிவார அமைப்புகள் உ.பி மாநிலத்தில் மட்டும் தேர்தலையொட்டி, சிறிதும், பெரிதுமாக 50 மதக்கலவரங்களுக்கு காரணமாக இருந்தன. அதிலும் குறிப்பாக மேற்கு உ.பியில் ஜாட்-முஸ்லீம் அரசியல் கூட்டணியை குறிவைத்து மத அடிப்படையில் உடைத்தது.

சங் பரிவாரம் மும்முனை தாக்குதலை தொடுத் தது. ஒன்று ‘லவ் ஜிகாத்’. சங் பரிவாரம் வீடு, வீடாகச் சென்று, உங்கள் மகள்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள், இல்லையெனில் முஸ்லீம் ஆண்கள் அவர்களை திருமணம் செய்து கொண்டு, இஸ்லாத்திற்கு மாற்றிவிடுவார்கள் என்ற பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டது. கல்வியறிவு குறைந்த, மூடநம்பிக்கை, பழமையில் ஊறிப்போன உ.பி மக்களிடம் இது எடுபட்டது. விஸ்வ இந்து பரீஷத், தலைமையில், பல புதிய அமைப்புகள் துவக்கப்பட்டன. ‘இந்து கன்னி பாதுகாப்பு சமிதி’ ‘மகளை காப்பாற்று’ ‘மருமகளை காப்பாற்று’ போன்ற அமைப்புகள் ‘லவ் ஜிகாதுக்கு எதிரான பிரச்சாரம் செய்து, மனதில் அச்சத்தை தோற்றுவித்தன. உ.பியின் கிராமப்புறங்களில் இத்தகைய பிரச்சாரம் பா.ஜ.கவின் நோக்கங்கள் நிறைவேற உதவியது.

மத மாற்றம்:

சங் பரிவாரத்தின் இரண்டாவது அஸ்திரம் மதமாற்றம் ஆகம். மத மாற்றம் சரியா? தவறா என தற்போது நாடு முழுவதும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளது. ஒருவர் தானாக விரும்பி வேற்று மதத்தை தழுவலாம். ஆனால் கட்டாய மதமாற்றம் கூடாது என்றும்; அதற்கு தடைவிதிக்க வேண்டுமென்றும், மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவர வேண்டுமென்றும் கூறப்படுகிறது. பா.ஜ.க ஆட்சியில் இல்லாத பொழுதும், மத மாற்றம் செய்தது. பல கிறிஸ்துவ அமைப்புகளுடன் இதனால் மோதல்கள் ஏற்பட்டன. வன்முறை சம்பவங்கள் நடந்தன. (கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் படுகொலை, நபுவா கன்னியா ஸ்திரீகள் பாலியல் பலாத்காரம் மறக்க இயலாதவை).

கட்டாய மதமாற்றம் கூடாது என்றும் கூறும் பா.ஜ.க கடந்த சில மாதங்களில் அதே கட்டாய மத மாற்றத்தை செய்துள்ளது. சிறுபான்மையினரை ‘சுத்திகரண்’ (சுத்தம் செய்தல்) என்ற சடங்கின் கீழ் இந்துக்களாக மாற்றியுள்ளனர். ‘கர் வாபசி’ (வீடு திரும்புதல்) மீண்டும் இந்துவாகிவிடு என்று கூறி கட்டாய மதமாற்றம் செய்துள்ளனர். மோடி ஆட்சிக்கு வந்த பின் துவக்கப்பட்ட ‘தரம் ஜாக்ரண் விவத்’ தர்ம விழிப்பு அமைப்பு) என்ற அமைப்பு உ.பி.யிலுள்ள அலிகரில் அஸ்ரோய் என்ற கிராமத்தில் 72 கிறித்துவ வால்மீகி (தலித்) குடும்பங்களை இந்துக்களாக மாற்றியுள்ளது. அந்த அமைப்பு, ‘சர்ச்’ இருந்த இடத்தில் சிவன் கோவில் இருந்ததெனக் கூறி, மீண்டும் சிவன் சிலையை வைத்துவிட்டது. பல ஆண்டுகளாக வால்மீகி சாதியினர் கிறிஸ்துவர்களாக இருந்தனர். கடந்த 4 மாதங்களில் சர்ச்சுகள் தாக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பூசை தடுக்கப்பட்டுள்ளது. “இவர்கள் கிறித்துவ மதத்திற்கு மாற்றப்பட்டதால், மீண்டும் இந்துக்களாக்குகிறோம்” என தங்கள் நடவடிக்கைகளை இந்த அமைப்பு நியாயப்படுத்துகிறது. இப்படி மதமாற்றம் செய்த அனைத்து கிராமங்களிலும், கோவில்கள் கட்ட உள்ளனர்.

‘இந்து மகாசங்’ என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மதமாற்றம் செய்வதுடன் நிற்பதில்லை. இந்துக்கள் அல்லாதவர்கள் ஓரம் கட்டப்படுகின்றது. இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. பா.ஜ.க ஆட்சி செய்யும் சத்தீஸ்கர் மாநிலத்தில், சிர்சிகுடா கிராமத்தில், இந்துக்கள் அல்லாதோர் நுழைய தடை விதிக்கும் வண்ணம் ‘சத்தீஸ்கர் பஞ்சாயத்’ ராஜ் சட்டம் (1994) திருத்தி அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த கிராமத்தில் வேற்று மதத்தினர் கட்டிடங்கள் எழுப்பக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானங்கள் 50 கிராம சபைகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, சிர்சிகுடா கிராமத்தில் உள்ள 50 கிறித்துவ குடும்பங்களுக்கு ரேஷன் தரப்படுவதில்லை. சிவில் சப்ளை அதிகாரிகளிடம் புகார் கொடுத்து, அவர்கள் விசாரணைக்கு வந்தால், வி.எச்.பி அமைப்பினர் கிறித்துவர்களை அடித்து நொறுக்கினர். எப்.ஐ.ஆர். போடப்பட்டு 4 மாதங்களாகியும் யாரும் கைது செய்யப்படவில்லை. மோடி பிரதமரான பின்னர் தாக்குதல் அதிகமாகியுள்ளது என்கின்றனர் கிறித்துவர்கள். 100-125 வருடங்களாக கிறித்துவர்கள் வசிக்கும் பகுதியில் இப்படி தாக்குதல் நடத்துவது சரியல்ல என்கின்றனர்.

சத்தீஸ்கர் கிறித்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவது போல், பா.ஜ.க ஆட்சி செய்யும் மத்திய பிரதேச முஸ்லீம்களை குறிவைக்கிறது. அம்மாநிலத்தில் 8 சதவிகிதம் முஸ்லீம்கள். அவர்களில் பெரும்பாலோர் இந்தோரில் வசிக்கின்றனர். நவராத்திரி விழாவின்போது, முஸ்லீம்கள் அங்கு வர தடை விதிக்கப்பட்டது. கொடுமை என்ன வென்றால், விழாவுக்கு வரும் அனைவரும் அடையாள அட்டை எடுத்து வர வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களில் சட்டத்திற்கு புறம்பாக வங்கதேச மக்கள் குறிப்பாக, முஸ்லீம்கள் குடிபெயர்வதாகவும், அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. கசிரங்கா தேசிய பூங்காவுக்குள் வந்து வேட்டையாடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மே.வங்க மாநிலத்தில் முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு அம்மாநில அரசு அடைக்கலம் தருவதாக குற்றம்சாட்டி, பா.ஜ.க அங்கு தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயலுகிறது. இடதுசாரிகள் ஆட்சியில் இருந்த வரை எந்தவிதமான மதக்கலவரமும் இல்லை. மும்பை கலவரம், பாபர் மசூதி இடிப்புக்கு பின்பு கூட, மே.வங்கத்தில் அமைதி நிலவியது. மதரீதியான வன்முறைகள் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது. திரிணாமுல் ஆட்சிக்கு வந்தவுடனேயே அங்கும் இங்குமாய், பல மாவட்டங்களில் உரசல்கள் தொடங்கின. கர்நாடக மாநிலத்திலும், வடக்கு கன்னட பகுதிகளில் இந்துத்துவா பரி வாரங்கள் மாடுகளை கொண்டு செல்வோர் தாக்கப்படுகின்றனர். சமீபத்தில் மாட்டு இறைச்சிக்கென மாடுகளை கொண்டு சென்ற மூன்று முஸ்லீம் இளைஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இத்தகைய அமைப்புகள் மோடி பிரதமரான பின் கூடுதல் துணிவை பெற்றுள்ளன. தமிழகத்தையும் சங்பரிவாரம் விட்டுவைக்கவில்லை. ‘சர்ச்சுகளை’ தாக்குவது நடக்கிறது. ராமநாதபுரம் போன்ற முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் திட்டமிட்டு இந்து – முஸ்லீம் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தலைநகர் புதுதில்லியில் திரிலோக்புரியில் சங்பரிவாரம் நடத்திய தாக்குதல் திட்டமிடப்பட்ட செயலாகும் திரிலோக்புரி காலனியில் உள்ளவர்கள் தலித்துகள் (வால்மீகி) முஸ்லீம்கள் மற்றும் பீஹார் கிழக்கு உ.பியிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் ஆவர். தீபாவளியன்று அங்கு முஸ்லீம்களை வால்மீகிகள் கற்கள் கொண்டு தாக்க, முஸ்லீம்கள் திரும்பித் தாக்க கலவரம் வெடித்தது. பா.ஜ.க எம்.எல்.ஏ தலையீட்டால் கைது செய்யப்பட்டவர்களில் 80 சதவிகிதம் பேர் முஸ்லீம்கள். புதுதில்லியில் தேர்தல் வர இருக்கும் சூழலில், இதுபோன்ற பிளவுகளை திட்டமிட்டே பா.ஜ.க செயல்படுத்தி வருகிறது. இந்த கலவரம் வால்மீகிகளை பா.ஜ.க பக்கம் இணைய உதவியுள்ளது.

‘பாசிசம் என்பது பாசஸ் (FASCES) என்ற புராதன ரோமபுரி அரசில் செயல்பட்ட குழுவைக் குறிப்பதாகும் `பாசஸ்’ என்பதன் அர்த்தம் பல குச்சிகளை ஒன்றிணைத்து கட்டுவதாகும். ஒரு தனி குச்சியாக இருப்பின் அதை இரண்டாக முறிப்பது எளிது. ஆனால், அனைத்து குச்சிகளையும் இணைத்துக் கட்டிவிட்டால் உடைக்க முடியாது. எனவே, ஒரு தலைவரை பின்பற்றுங்கள். அப்பொழுதுதான் அந்த தேசத்தை வலுவாக்க முடியும். பாசிச அரசு வேலை, கல்வி, குடும்ப வாழ்க்கை என மக்களின் வாழ்க்கை தொடர்பான அனைத்தையும் கட்டுப்படுத்தும்.

கல்வியை காவிமயமாக்கும் முயற்சிகள்:

கல்வியறிவு மக்களை சிந்திக்க வைக்க வேண்டும். சங்பரிவாரமோ, அறிவியலுக்கு புறம்பாக, மூடநம்பிக்கைகளை வளர்க்கும்/ தக்கவைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இது புதிதல்ல. வாஜ்பாயி ஆட்சி காலத்தில் பல்கலைகழகங்களில் ஜோதிடத்தை பாடமாக வைக்கவும், தனித்துறை அமைக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நாம் மறக்கவில்லை. மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். “கல்வி பாதுகாப்பு அமைப்பின்” (சிக்ஷா பச்சாவோ அந்தோலன் தலைவர் தீனாநாக் பத்ரா 2005ல் வெளியிடப்பட்ட பாடப் புத்தகங்களை அகற்ற வேண்டும். ஏனெனில் அவை இடதுசாரி கருத்துக்களை பிரதிபலிக்கின்றன என்றும், மார்க்சும், மெக்காலேயும் குறிக்கோளற்ற கல்வியை அளிக்கிறதென்றும் கூறியுள்ளார். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் உள்ள நான்கு உறுப்பினர்கள் மாற்றப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளார். “பாரதீய சிக்ஷாநிதி ஆயோக்” என்ற அமைப்பை ஆர்.எஸ்.எஸ்.ஸின் இணைப்பான ‘சிக்ஷா சன்ஸ்க்ருதி உத்தன் நியாஸ்’ எற்படுத்தியுள்ளது. இந்த அமைப்பு இந்தியாவில் கல்வியை “பாரத்-சென்ட்ரிக்” (பாரதத்தை மையப்படுத்திய) என மாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பத்ரா எழுதியுள்ள நூல்கள் அறிவியலுக்கு புறம்பானவை.

2014ம் ஆண்டு ஆசிரியர் தின “குரு உத்சவ்” தினம் என அறிவிக்கப்பட்டது. பிரதமர் அன்று உரையாற்றுவார் என்றும், மாணவர்களுடன் கலந்துரையாடல் இருக்குமென்றும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கான நேரம் பொருத்தமானதாக இல்லையென்று பள்ளி நிர்வாகங்கள் முறையிட்டும், அது நடைபெற்றது இளம் மனங்களில் இந்துத்துவா விதையை ஊன்ற, ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் மோடி அரசு பயன்படுத்திக் கொள்கிறது. 1952ல் ஆர்.எஸ்.எஸ் ‘சரஸ்வதி சிஷு மந்திர்’ என்ற நர்சரி பள்ளிகளை உ.பியில் துவக்கியது. அதன் நோக்கம் என்ன? தாய்மொழிப் பற்று (நமக்கும் அதில் மாற்று கருத்து இல்லை -மொழி வெறியாக மாறாத வரை) “இந்து” கோட்பாடுகள் அடிப்படையில் ஒழுக்க போதனை, கட்டுப்பாடு, தேசப்பற்று என அனைத்தையும் உள்ளடக்கிய கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பதாகும். இந்த சிசு மந்திர் ‘வித்யா பாரதி’ என இன்று வளர்ந்து, நர்சரி முதல், முது நிலைப்பட்டம் வரை கல்வி அளிக்கும், நாடெங்கிலும் ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங்களை உள்ளடக்கியதாக உள்ளது. கிறித்துவ மிஷினர்களுக்கு மாற்றாக 1980களில் பாரதீய வனவாசி கல்யாண் என்ற அமைப்பு 21 மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் செயல்படுகிறது. இதன் மூலம் மதமாற்றம் தடை செய்யப்பட்டு, மீண்டும் அவர்கள் இந்து மதத்திற்கு மாற்றப்படுகிறார்கள்.

திருத்தி எழுதப்படும் வரலாறு:

2006ம் ஆண்டே, முந்தைய ஆட்சிக் காலத்திலேயே வரலாற்றை திருத்தி எழுதும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதை என்.சி.இ.ஆர்.டி சுட்டிக்காட்டியுள்ளது. பாட நூல்களில் மதவாத அம்சங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, குஜராத் மாநிலத்தில் பாடநூல்கள் மத அடிப்படையில் பிளவுகளை தூண்டும் வண்ணம் உள்ளன என்றும் கூறப்பட்டது. பையன்கள் மத்தியில் ஆண்மை என்பது வலியுறுத்தப்படுவதுபோல் பெண்கள் பாரம்பரியம், குடும்பம் கலாச்சாரத்தை காப்பாற்றும் பாதுகாவலர்களாக இருக்க வேண்டுமென்று பாடநூல்கள் மூலம் கருத்துக்கள் புகுத்தப்படுகின்றன. பெண்கள்/ சிறுமிகளுக்கு மதத்தின் முக்கயத்துவத்தை வலியுறுத்தி, ஒழுக்கம் போதிக்கப்படுகிறது. இத்தகைய பாடநூல்கள் குஜராத்தில் மட்டுமல்ல. கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப் என பல மாநிலங்களில் கல்வி காவிமயமாகியுள்ளது என தனியார் பள்ளி பாடநூல்கள் பற்றி ஆராயும் மத்திய கல்வி ஆலோசனை வாரியத் தலைவர் பேராசிரியர் சோயா ஹாசன் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, சமூகவியல், வரலாறு பாட நூல்கள் காவிமயமாகி உள்ளன என்பது தொளிவாகியுள்ளது.

மோடி அரசு டிசம்பர் 25, கிறிஸ்துமஸ் தினத்தை நிர்வாக தினம் என அனுஷ்டித்து, அனைவரையும் பணிக்கு வரச் செய்துள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மையினரின் உணர்வுகளை மோடி மதிக்கவில்லை, வாஜ்பாய்க்கும், மாளவியாவுக்கும், ‘பாரத ரத்னா’ விருது அளிக்கப்படும் என்பதும் பெரிய சர்ச்சையை/ விவாதத்தை தூண்டியுள்ளது. மோடி அரசு சர்ச்சையை ஏற்படுத்தும் அரசாகவே உள்ளது.

கல்வி காவிமயமாவதை தடுக்கும் அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. கர்நாடகாவில், “பாடநூல்கள் காவிமயமாதலை தடுக்கும் குழு” என்பது பாடநூல்களை ஆய்வு செய்து, முஸ்லீம்கள்/ இந்துக்கள்/ கிறித்துவர்கள் பற்றிய கருத்துருவாக்கம் செய்யப்படுகிறதென சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோல, தலித்துகள், பெண்கள், வேத பாரம்பரியம் இல்லாதவர்களின் குரல் ஒடுக்கப்பட்டுள்ளது. பாடநூல்கள் ‘வலதுசாரி தத்துவத்திற்கு’ அழுத்தம் அளிப்பது பற்றி, இக்குழு கவலை தெரிவித்துள்ளது. ஆங்கிலேயரின் ஒடுக்குமுறை விளக்கப்படுகிறது. ஆனால் உயர் சாதியினர் தலித்துகளை ஒடுக்குவது பற்றி ஏதுமில்லை என இக்குழு குறிப்பிட்டுள்ளது. இந்த பாட நூல்கள் 6 விதமான பயங்கரவாத தாக்குதல்களைப் பற்றி விளக்குகிறது. ஆனால் “காவி பயங்கரவாதம்” பற்றி எதுவுமில்லை. சாதிய கட்டமைப்பு, தீண்டாமை போன்ற விஷயங்கள் குறிப்பிடப்படவில்லை. தவிர, வரலாற்று நூல்களும், அறிவியல் நூல்களும் காவிமயமாதலை எதிர்த்து, கர்நாடகாவின் முன்னாள் கவர்னரிடம் 2012ல் மனு கொடுக்கப்பட்டது. 5ம் வகுப்பு சமூகவியல், 8ம் வகுப்பு அறிவியல் மற்றும் இந்திப் பாடநூல்கள் மனுவில் எடுத்துக்காட்டாக தரப்பட்டுள்ளன. மோடி மும்பையில் மருத்துவமனை திறக்கும் பொழுது, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்றும், பிள்ளையாருக்கு யானை முகம் அதையே குறிக்கிறது என்று அறிவியலுக்கு முற்றிலும் புறம்பாக பேசியுள்ளார். அதேபோல் ஏவுகணை விடப்பட்ட பொழுது ‘புஷ்பக விமானம்’ இருந்ததெனக் கூறுகிறார்.

மேலே கூறப்பட்டவை தவிர, உணவு பற்றிய நச்சுக் கருத்துக்கள் பிஞ்சு மனங்களில் விதைக்கப்படுகின்றன. மாமிச உணவு கூடாது, பசுவதை சட்டம், கோஷாலா (பசு பராமரிப்பு கூடங்கள்) அமைப்பு பற்றி தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்படுகிறது. ‘வெஜிடேரியன்’ உணவு ஒரு மனிதனை அமைதியாக இருக்க வைக்கும் (தமஸ்); ஆனால் மாமிசம் அப்படிப்பட்டதல்ல என்கின்றனர். உணவு என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. அது சாதி, மத அடிப்படையில் வேறுபடுகிறது. மாமிசம் சாப்பிடும் பிராமணர்கள் உள்ளனர். அதுபோல், மருத்துவ காரணங்களுக்காக மாமிச உணவைத் தொடாத முஸ்லீம்கள், கிறித்துவர்கள் இந்துக்களில் பல பிரிவினர் உள்ளனர். எந்த உணவை உட்கொள்கின்றனர் என்பதற்கு பழக்கம்தான் காரணம். மோடி வெளிநாடு சென்றபொழுது, அவருக்கு வெறும் பழங்கள், காய்கறிகள் மட்டும் உணவாக உண்பார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இன்று மேலை நாடுகளில் கூட சைவ உணவுக்கு பலர் மாறியுள்ளனர். பால், பால் சார் உணவைக் கூட ஏற்காதவர்கள் (வேகன்) உள்ளனர். சைவம், அசைவம், வேகன் என்பது சொந்த விஷயம். இதைக்கூட, மதத்துடன் இணைப்பது என்பது தனிமனித உரிமையில் தலையிடுவது மட்டுமல்ல, அசைவ உணவு பற்றி தவறான பிரச்சாரம் செய்வது கண்டிக்கதக்கதாகும். இவ்வாறு ஒவ்வொரு விஷயத்திலும், காவி பிரச்சாரம் தொடர்கிறது.

மோடி பிரதமரான பின் துணிச்சலுடன் இந்து, இந்தி, இந்துத்துவா பேசப்படுகிறது. ஜெர்மன் மொழிக்கு பதில் சமஸ்கிருதம் என்ற மொழி கற்பிக்கப்பட்ட வேண்டும் என்று சுற்றறிக்கை விடப்பட்டு சர்ச்சை எழுந்தது. பா.ஜ.க வின் முஸ்லீம் அமைச்சர் நஜ்மா, `எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ‘இந்து’ என அழைக்கப்படுவதில் தவறில்லை’ என்றார். சர்ச்சை வெடித்தது, அராபிய மொழியில் இந்தியா என்றால் `இந்த்’ என்று அர்த்தமென்றும், இந்தியர் அனைவரும் `இந்தி’ என்பதில் தவறில்லை என ஊடகங்களுக்கு விளக்கம் அளித்தார். பாராளுமன்ற உறுப்பினர் அனைவரும் “ராமரின் பிள்ளைகள், அப்படி இல்லாதவர்கள்…..” என துணிச்சலுடன் பேசுகிறார். அவர் அதிகம் படிக்காதவர், அனுபவம் இல்லாதவர் அப்படிப் பேசிவிட்டார் என வக்காலத்து வாங்குகிறது சங்பரி வாரம். பாராளுமன்ற செயல்பாடுகள் முடக்கப்பட்டன. பின்பு அவர் மன்னிப்பு கேட்டார். மோடி அரசு எதையுமே கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டு, எம்.பிக்கள் பேசும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் என்று மட்டும் கூறினார். சிறந்த பேச்சாளராக வர்ணிக்கப்படும் மோடி பாராளுமன்றத்திற்கு வருவதுமில்லை. பேசுவதும் இல்லை. சங் பரிவாரம் தனது பணிகளை தொடர்கிறது.

அரசியல், பொருளாதார விஷயங்களில் மக்கள், எதிர்க்கட்சிகள் கவனம் போகாத வண்ணம் தொடர்ந்து, மதம் சார்ந்த சர்ச்சை கிளப்பப்பட்டு, அவை விவாதிக்கப்படுகின்றன. கொலைகாரர்களுக்கு விருது அளிக்கப்படுகிறது. ‘இந்து ராஷ்டிர சேனா’ என்ற அமைப்பு ஆறு மாதங்களுக்கு முன்பு மோசின் ஷேக் என்ற முஸ்லீம் இளைஞனை சுட்டுக் கொன்ற தனஞ்சய் தேசாய்க்கு “இந்துத்துவா ஷெளரி புரஸ்கார்” (வீரத்திற்கான விருது) அளிக்கிறது. மோசமான பிற்போக்குவாதி பிரமோத் முத்தலிக்குக்கு, “வீர் ஜீவ மஹலே” என்ற விருது வழங்கப்படுகிறது. இந்த விருது சத்ரபதி சிவாஜி அதில்ஷாவின் ஜெனரலான அப்சலை கொன்ற தினம் என்று கருதப்படும் “சிவ பிரதாப் தின் உத்சவ் ” அன்று வழங்கப்படுகிறது. மிகப் பெரிய விவாதத்தை இது கிளப்பியுள்ளது. அதேபோல் காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேக்கு தேசபற்றுள்ளவன் என்றும், சிலை வைக்க வேண்டும் எனவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதை எழுதி, அச்சுக்கு வருவதற்குள் இன்னும் பல சர்ச்சைகள் எழலாம்.

மோடி ஒன்றும் அறியாதவர் அல்ல, மதம் தொடர்பான சர்ச்சைகள் எழும்போது, ஊடகங் களின் கவனமும் அவற்றின் பக்கம் திரும்புகிறது. மத்திய அரசு பொருளாதார சீர்திருத்தங்களை நவீன தாராளமயக் கொள்கைகளை, மக்களின் நலன்களை கொடுக்கப்படும் மோடி சைவ உணவு மட்டுமே என்பது பற்றி சிறிதும் கவலைப்படாமல், ஜனநாயக முறைகளை கடைபிடிக்காமல் (அவசர சட்டம்..) அமுலாக்கும் பணியை தீவிரமாக செய்துவருகிறது. மாநிலங்ளின் உரிமைகளை பறிப்பது, மாநில கட்சிகளை ஓரங்கட்டும் பணிகளில் ஈடுபடுவது, தேர்தல் நடைபெற உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும், ஒரு பிரச்னையை பிரதானப்படுத்தி (கர்நாடகா-குழந்தை பலாத்காரம், மே.வங்கம் எல்லை தாண்டும் தீவிர வாதம்; தமிழகம் அரசு செயலிழப்பு…. சில உ-ம்) பா.ஜ.க தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயலுகிறது. சமூக ஊடகங்களிலும் இதே அணுகுமுறையை கடைபிடிக்கிறது.

அனைத்திற்கும் மேலாக, ஊடகங்கள் மூலம், மோடியின் ‘பிம்ப மேலாண்மை’ (image management) கவனமாக செய்யப்படுகிறது. திட்டமிட்டு புளுகு மூட்டைகள் திரும்பத் திரும்ப வெளியிடப்படுகின்றன. பாசிசம் வலுவான தலைவரை உருவாக்கும் அமைப்பு. அதைத்தான் பா.ஜ.க செய்கிறது. மோடியின் ஏழுமாத கால ஆட்சி, நல்ல காலமாக இல்லை. அனைவரையும் (அனைத்து மதத்தினர், ஏழைகள் தலித்துகள்…) உள்ளடக்கிய எந்த வளர்ச்சியையும் காண முடியவில்லை. இத்தகைய சூழலில், ஜனநாயக, மதசார்பற்ற, இடதுசாரி அமைப்புகள், விழிப்புடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். 2015ல் பண்பாட்டுத் தளங்களில் நாம் நிறைய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. திட்டமிட்டு பா.ஜ.கவின் மக்களை பிளவுபடுத்தும், மக்கள் நலன்களை புறக்கணிக்கும் கொள்கைகளை எதிர்த்து, நமது பிரச்சாரம் மற்றும் போராட்டங்கள் அமைய வேண்டும்!

ஆதாரம்:

  1. ஃப்ரண்ட் லைன்: இதழ்கள்
  2. டைம்ஸ் ஆஃப் இந்தியா- கட்டுரைகள் Towards Soft FASCISM
  3. The Election of Modi and the Rise of Fascism in India”- by
  4. Alexandra Valiant.
  5. LECTURES ON FASCISM – PALMIRO TOGLIATTI
  6. INDIAN SEMI FASCISM – BERNARD D’MELLO EPW Oct.11.2014


%d bloggers like this: