மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


மதவாதத்திற்கு எதிராக மக்கள் திரட்டல்:


தமிழகத்தில் மதவாத அலை வேகமாக வீசுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங் பரிவாரத்தின் செயல்பாடுகள் தீவிரமாகியுள்ளன. மதவாதத்தை எதிர்த்து மக்களை அணிதிரட்டும் கடமை முதன்மையான முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இதையொட்டி வகுப்புவாதத்தை வீழ்த்துவதற்கு ஏற்ற நடைமுறைகள் தேவைப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டு நகல் அரசியல் தீர்மானத்தில் வகுப்புவாதத்தை எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றி விவரிக்கிறபோது “வகுப்புவாதத்தை எதிர்த்து மிக விரிவான ஒன்றுபட்ட இயக்கம் கட்டுவதற்கு கூட்டு மேடைகள் அவசியமானது” (2.34) எனக் குறிப்பிடப்படுகிறது. இந்தப் பின்னணியில் உரிய நடைமுறைகளை உருவாக்க வேண்டும்.

அரசியல் தளம் மட்டும் போதுமானதா?

கடந்த முறை வாஜ்பாய் அரசாங்கம் இருந்தபோதும் சங் பரிவார நடவடிக்கைளை எதிர்த்து மதச்சார்பற்ற சக்திகள் ஆவேசமாக திரண்டெழுந்தனர். அது வரவேற்கத்தக்கதாக, வரலாற்றில் போற்றத் தகுந்த நிகழ்வாக அமைந்தது. ஆனால் சமுகத்தை மதச்சார்பற்ற உணர்வுகள் தழைத்து, அந்த உணர்வுகள் வேரூன்றிய சமுகமாக இந்திய சமுகத்தை மாற்ற வேண்டுமென்ற இலட்சியம் ஈடேறவில்லை. அதனால்தான், மீண்டும் சங்பரிவாரங்கள் சமூக உணர்வை கைப்பற்றுவதில் முன்னேறி வருகின்றனர். உதாரணமாக, மாதொரு பாகன் நாவல் பிரச்னையில் அந்தப் பகுதி மக்கள் சிலரிடம் கருத்து கேட்டு ஒரு தின இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. எழுத்தாளர் பெருமாள் முருகன் தங்களது சமுக வரலாற்றுப் பாரம்பரியத்தை இழிவுபடுத்திவிட்டதாக அவர்களை பேட்டி கண்ட சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். பாரம்பரியம் பற்றி பிற்போக்கான கருத்துக்கள், சாதிப் பெருமை என்ற வகையில் நீடிக்கிற இந்த மனப்பாங்கு சங் பரிவாரங்களுக்கு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. அவர்கள் கருத்துரிமையை பறிப்பதில் வெற்றி கண்டது மட்டுமல்லாது ஒரு பகுதியினரை தங்களுக்கு ஆதரவாகத் திரட்டிடவும் அவர்களால் முடிந்துள்ளது.

மதச்சார்பற்ற சமூக நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடத்துவதில் மதச்சார்பற்ற சக்திகளின் தோல்வியையும் இது காட்டுகிறது. உள்ளூர் மட்டத்தில் முற்போக்கான, மதச்சார்பற்ற உணர்வை வலுப்படுத்திட தொடர்ந்து செயல்படும் உள்ளூர் சமூகங்களை உருவாக்க வேண்டுமென வரலாற்றுப் பேராசிரியர் கே.என்.பணிக்கர் வலியுறுத்தி வந்தார். இரவு பள்ளிகள், படிப்பகங்கள் என பல வடிவங்களை மேற்கொண்டு உள்ளூர் மட்டத்தில் உணர்வு மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ள வலியுறுத்தினார்.

தற்போது வடிவங்களை மேலிருந்து வழி காட்டுவதற்கு பதிலாக கிராமம், நகர வார்டு மட்டத்தில் உள்ள மதச்சார்பற்ற சக்திகள் ஒன்று கூடி விவாதித்து வடிவங்களை உள்ளூர் நிலை மைகளுக்கு ஏற்ப முடிவு செய்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதில் குறிப்பாக இடதுசாரி சக்திகள் முன்முயற்சி எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

ஆனால் இன்னமும் உள்ளூர் அளவில் மக்கள் உணர்வை மாற்றிட உள்ளூர் மட்டத்தில் வினையாற்றிட வேண்டும் என்ற சிந்தனை வரவில்லை. அடையாளப்பூர்வமான எதிர்ப்புக்கள் ஆர்பாட்டங்கள் அறிக்கைகள் எழுத்துக்கள் என்கிற எண்ணவோட்டத்தை மாற்ற இயலாத நிலை உள்ளது. ஒரு சிலர் கூடி ஒரு அடையாளப்பூர்வமாக எதிர்ப்பு அல்லது மக்களோடு ஒட்டாத சிறப்பு கருத்தரங்கங்கள், மாநாடுகள், பேரணிகள் நடத்தி ஊடகங்களின் தலைப்புக்களில் இடம் பெற்றுவிட்டால் வகுப்புவாதத்தை முறியடித்துவிடலாம் என்ற கருத்து நீடித்து வருகிறது. இதனால்தான், மார்க்சிஸ்ட் கட்சியின் நகல் அரசியல் தீர்மானம் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. கூட்டினை அரசியல் தளத்தில் மட்டுமல்லாது “சமூக, கலாச்சார, கல்வித் துறைகளில் எதிர்த்திட சரியான உத்திகளை உருவாக்கிட வலியுறுத்தியுள்ளது.”

கூட்டு மேடையும் கம்யூனிஸ்ட்டுகளும்

வகுப்புவாத கூட்டு மேடை உருவாக்குவதும் அதில் கம்யூனிஸ்டுகள் தீவிரமாக செயல்படுவதும் அவசியமானது. ஆனால் மத நம்பிக்கை, இதர முதலாளித்துவ சித்தாந்தங்கள் பற்றிய சரியான பார்வை இல்லையெனில் இம்முயற்சி தனது இலக்கை எட்டுவது சிரமம்.

“மதம் குறித்த தொழிலாளி வர்க்கக் கட்சியின் பார்வை” என்ற கட்டுரையில் கம்யூனிஸ்ட் அணுகுமுறை குறித்து லெனின் விளக்குகிறார். “விஞ்ஞான சோசலிசம் அமைப்பதை அடிப்படையாகக் கொண்ட மார்க்சிய உலகக் கண்ணோட்டம் கொண்டது… கம்யூனிஸ்ட் கட்சி” என்று துவங்குகிறார் லெனின்.

சோஷலிச சமூகம் அமைகிறபோது மதத்தை தடைசெய்ய வேண்டும் என்று டூரிங் கருத்து தெரிவித்தபோது அதனை ஏங்கெல்ஸ் கடுமையாக எதிர்த்தார். அதைக் குறிப்பிட்ட லெனின் இதுபோன்ற கோரிக்கைகள் எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று எழுதுகிறார். நேரடியாக மதத்திற்கு எதிரான கோரிக்கைகள் அரசியல் ரீதியான வித்தியாசங்களை மறைத்துவிட்டு மதரீதியான வித்தியாசங்களை முக்கியமானதாக மாற்றுகின்றன: “தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதியினரின் கவனத்தை திசை திருப்புகிறது. இது, தொழிலாளி வர்க்கக் கடமையிலிருந்தும் புரட்சிகர போராட்டத்திலிருந்து தடம்புரள வைக்கிறது……”

அதேநேரத்தில் மதம் என்பது தனிநபரின் நம்பிக்கை அதில் தலையிடக்கூடாது என்ற கருத்தைப் பற்றியும் சரியான புரிதல் வேண்டும் என்கிறார் லெனின். கம்யூனிஸ்ட் இதனை கூறும்போது ஆளுகிற அரசு மதத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கிடக் கூடாது; அந்த அரசு மதத்தை தனிநபரிடம் விட்டுவிட வேண்டும் என்று அரசை வலியுறுத்துகின்றனர். ஆனால் இதன் அர்த்தம் மதத்தின் பெயரால் எது நடந்தாலும் மூட, பிற்போக்கு நம்பிக்கை அடிப்படையில் எது நடந்தாலும் பொறுத்துக் கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டுமென்பதில்லை. கட்சிக்குள் மார்க்சிய தத்துவார்த்தக் கண்ணோட்டமான இயக்கவியல் பொருள்முதல்வாதம் ஆழமாக வேரூன்ற வேண்டும். மக்களிடமும், உழைக்கும் மக்களிடமும் அறிவியல் கண்ணோட்டம் வலுப்பட கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பாடுபட வேண்டும். அத்துடன் வலுவான வர்க்கப் போராட்டம் உள்ளூர் மட்டத்தில் தீவிரமாக வேண்டும்.

மத எதிர்ப்புப் பிரச்சாரம் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கருத்தினைப் பற்றி எழுதுகிறபோது லெனின் அழுத்தமாக குறிப்பிடும் கருத்துக்கள் இன்றும் பொருந்துகின்றன. ஆயிரக்கணக்கான புத்தகங்கள் எழுதினாலும் மக்கள் மனங்களிலிருந்து மதம் அகன்றுவிடாது என்கிறார் லெனின். ஏனென்றால், அந்த மக்கள் முதலாளித்துவ உழைப்புச் சுரண்டலால் பாதிக்கப்பட்டவர்கள்: அவர்கள் கண்மூடித்தனமான முதலாளித்துவ அழிவுச் சக்திகளின் பிடியில் இருக்கிறார்கள்.

மூலதனத்தின் அதிகாரத்திற்கு எதிராக அனைத்து வடிவங்களிலும், உணர்வுப்பூர்வமாக, திட்டமிட்டவாறு, அமைப்பு ரீதியாக ஒன்றுபட்டுப் போராடும் மக்கள்தான் மதத்தின் அடிப்படைக்கு எதிராகவும் போராடக் கற்றுக் கொள்வார்கள்.

மத விமர்சனம் செய்யலாமா?

அதேநேரத்தில் மற்றொன்றையும் லெனின் குறிப்பிடுகிறார்.

மதத்தை விமர்சிக்கும் புத்தகங்கள் தேவையற்றது அல்லது தீமையானது என்ற முடிவுக்கு வரலாமா? பெரியார், அம்பேத்கர் உள்ளிட்டு பலரது மத விமர்சன நூல்களை புறக்கணிக்க வேண்டுமா? இதனை வலுவாக மறுக்கிறார் லெனின்… இல்லை, நிச்சயமாக இல்லை. (கம்யூனிஸ்ட் கட்சியின்) அடிப்படையான கடமை, சுரண்டல்காரர்களை எதிர்த்து சுரண்டலுக்கு ஆளான மக்களின் வர்க்கப் போராட்டத்தை வலுப்படுத்துவது. ‘இந்தக் கடமைக்கு உட்பட்டுத்தான் அதன் பகுத்தறிவுப் பிரச்சாரம் அமைய வேண்டும்.’ என்று விளக்குகிறார் லெனின்.

சுரண்டலுக்கு எதிரான போராட்டம் இல்லையெனில் மத அடிப்படையில் எழும் பிற்போக்குத்தனத்தையும் வகுப்புவாதத்தையும் முறியடிக்க முடியாது. பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளில் உள்ள மத விமர்சனங்கள் மிகுந்த சக்தி வாய்ந்த வாதங்கள். கம்யூனிஸ்ட்கள் அவற்றை தங்கள் வயமாக்கிக் கொண்டு வர்க்கத் திரட்டலுக்கு பொருத்தமாக மக்களை வெறும் நம்பிக்கை என்கிற இருட்டிலிருந்து வெளிக் கொணர்ந்து வர்க்கப் போராட்டத்திற்கு பயன்படுத்த முடியும். ஆனால் சில நேரங்களில் அவை மட்டுமே பிரதானமாக முனவைத்து வர்க்கப் போராட்ட நடைமுறையை பின்னுக்குத் தள்ளுவது தவறானது.

ஒரு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தொழிலாளர்கள் திரண்டு இருக்கின்ற அந்த கூட்டத்தில் ஒரு கம்யூனிஸ்ட் கோரிக்கைகளை விளக்கிப் பேசுகின்றார். கம்யூனிஸ்ட் என்பதால் சில தொழிலாளர்கள், குறிப்பாக கடவுள் நம்பிக்கையில் தீவிரமாக இருக்கும் தொழிலாளர்கள், இவரது கருத்துக்களில் ஒன்றிணைவதில் தயக்கம் காட்டலாம் என்று அவருக்குத் தோன்றுகிறது. அந்த சமயத்தில் உங்களுக்கு உங்கள் மதத்தின் மீது நம்பிக்கை இருப்பது போன்று நான் சோஷலிச மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவன் என்று பேச்சைத் துவங்குகிறார். இவ்வாறு பேசிய அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமா? கூடாது என்கிறார் லெனின். மக்களை கிளர்ந்தெழச் செய்வதற்கும் அவர்களுக்கு முதலாளித்துவ சுரண்டல் பற்றிய போதனை செய்வதற்கும் இதுபோன்று மத நம்பிக்கையை மதிக்கிற வகையில் கருத்துக்கள் கூறுவது தவறாகாது என்கிறார் லெனின். அதேசமயத்தில் கட்சியின் நிலைப்பாடாக சோசலிசமும் ஒரு மதம்தான் என்கிற முடிவிற்கு செல்வது தவறானது; கண்டனத்திற்குரியது என்கிறார், லெனின்.

இந்த லெனினிய வழிகாட்டுதலை இன்றைய நிலைக்குப் பொருத்திப் பார்த்து, வகுப்புவாத எதிர்ப்பிற்கும், வர்க்கங்களைத் திரட்டுவதற்கும் சில நடைமுறைகளை உருவாக்கி அவற்றைப் பின்பற்றிடலாம்.

மத நம்பிக்கையாளர்களும், நாத்திகர்களும் ஓரணியில்…

அனைத்து மதங்களும் மனித நேயத்தை வெளிப்படுத்துகிற உணர்வுகளையும் சிந்தனைகளையும் கொண்டுள்ளது. அந்த மனிதநேய கருத்துக்களை வகுப்புவாதத்தை மத நம்பிக்கையாளர்களிடமிருந்து பிரித்து, தனிமைப்படுத்திட பயன்படுத்தலாம். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் போன்று செயல்படுகிற காஞ்சி சங்கராச்சாரியார் பேசுகிற கருத்துக்கள் அனைத்தும் இந்து மதத்தின் கருத்துக்கள் அல்ல. இதனை ஆதாரப்பூர்வமாக, ஆணித்தரமாக வாதிட்டு இந்து மத நம்பிக்கை கொண்டோரை அணிதிரட்டலாம். காந்தியும் இந்துதான் அவருடைய கருத்துக்களும் காஞ்சி சங்கராச்சாரியாரின் கருத்துக்களும் ஒன்றல்ல என்று நிச்சயமாக வாதிட முடியும்.

பல பிரிவுகள் கொண்ட பௌத்த மதத்தில், அதன் கருத்துக்களை எல்லாரும் ஒரே மாதிரி பேசுவதில்லை. அஹிம்சை போதிக்கும் மதம் என்று அறியப்படுகிற பௌத்தம் இலங்கையிலும், இதர தென்கிழக்கு நாடுகளிலும் பெரும் வன்முறை கட்டவிழ்க்கப் பயன்படுத்தப்பட்டது. அதேபோன்று, இன்று இந்தியாவில் சங் பரிவாரம் பேசும் பல இந்துத்துவக் கருத்துக்கள் இந்து மதக் கருத்துக்கள் என்று எடுத்துக் கொள்ள இயலாது. எனவே ஆளுகிற கூட்டங்கள் தங்களது அரசியல் அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கும், உழைப்புச் சுரண்டலை தடையின்றி தொடரவும் பயன்படும் கருவியாக மதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆக இரண்டு நிலைகளில் மதம் செயல்படுகிறது. ஒருபுறம் சுரண்டல் கருவியாக அது பயன்படுகிறது மற்றொரு வகையில், மார்க்ஸ் கூறியவாறு, அடக்கி ஒடுக்கப்பட்டவர்களின் பெருமூச்சாகவும் இயங்குகிறது. அனைத்து மதங்களும் மனிதநேயக் கருத்துக்களையும் கொண்டிருக்கின்றன. அதே ஆளும் வர்க்கங்களின் தேவைக்கேற்ப உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு ஏற்றவாறு மதக் கருத்துக் கள் ஏராளமான இடைச் செருகல்கள் கொண்ட கலவையாகவும் உருமாற்றம் பெற்று வருகின்றன.

முரண்பாடாகத் தெரிந்தாலும், வகுப்புவாத எதிர்ப்பு திரட்டலில் மத நம்பிக்கையாளர்களும், பகுத்தறிவாளர்கள் என்று அறியப்படுகிற நாத்திகர்களும் அங்கம் வகிக்க வேண்டும். ஏனெனில் மதவாதம் அறிவுபூர்வமான சிந்தனைக்கும் உண்மையான மனிதநேய, மத சிந்தனைக்கும் எதிரானது. இவர்களோடு, வகுப்புவாதத்தை எதிர்க்கும் தனிநபர்களின், மதச்சார்பற்ற அமைப்புகள் கொண்ட விரிவான மேடை எழுவது அவசியம். இது அனைத்திந்திய, மாநில மட்டத்தில் மட்டுமல்லாது பகுதி சார்ந்தும் அத்தகைய மக்களின் மேடைகள் எழ வேண்டும். உள்ளூர் அளவில் மிக மிக விரிவான உள்ளூர் மதச்சார்பற்ற சமூகங்கள் பணியாற்றும் சங்கம மாக இந்த மேடைகள் உருவாக வேண்டும்.

அறிவியல் ஒரு கருவியாக…

மார்க்சிஸ்ட் கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டு நகல் அரசியல் தீர்மானத்தில் வகுப்பு வாதத்தை எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு வழிகாட்டுதல் வருமாறு:

“தொழிலாளி வர்க்கத்தினரிடம் மதச்சார்பற்ற, அறிவியல்பூர்வமான உணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். இதற்கான சமூக பண்பாட்டு நடவடிக்கைகளை நடத்துவதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். கட்சியும், தொழிற்சங்கங்களும் குடியிருப்புப் பகுதிகளில் இவற்றை மேற்கொள்ள வேண்டும்.(2.35)”

மார்க்சிஸ்ட் கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டு நகல் அரசியல் தீர்மானத்தில் வகுப்பு வாதத்தை எதிர்கொள்ளும் வழிமுறைகளில் ஒரு வழிகாட்டுதல் குறிப்பிடப்படுகிறது.

“தீமைகளை விளைவிக்கும் சாதிய, மூட நம்பிக்கைகள் சார்ந்த விழுமியங்களை முறியடிக்கும் விதத்தில் பண்பாட்டு சமூக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நோக்கத்துடன் மக்கள் அறிவியல் இயக்க செயல்பாடுகளை ஒருங்கிணைக்க வேண்டும் (2.35).”

மதவாத உணர்வுகளை அகற்றுவதற்கு அறிவியல் மனப்பான்மை வளர வேண்டும். இது மதச்சார்பற்ற சக்திகள் செய்திட வேண்டிய முக்கிய கடமை. இயற்கையின் இயக்கத்திற்கு பின்னால் ஆட்டுவிக்கும் சக்தியாக இருப்பது சர்வ வல்லமை கொண்ட கடவுள் என்ற கருத்தியல் நீடிக்கும் வரை மத அடிப்படையில் மக்களைத் திரட்டும் வாய்ப்பும், வகுப்புவாதம் வளரும் வாய்ப்பும் நீடிக்கும். இயற்கையின் இயக்கம், பிரபஞ்ச இயக்கம் குறித்து இதுவரை அறிவியல் வந்தடைந்திருக்கிற முடிவுகளை சாதாரண மனிதர்களும் புரிந்து உள்வாங்கிடும் நிலை ஏற்பட வேண்டும்.

கம்யூனிஸ்ட்கள் எப்போதுமே இதில் அக்கறை காட்டி வந்தனர். சிங்காரவேலர் வாழ்நாள் முழுவதும் அறிவியலை பரப்புவதையே அன்றாடப் பணியாகக் கொண்டிருந்தார். பிரபஞ்சம் பற்றி அன்று வரை கண்டறியப்பட்ட அறிவியல் விவரங்களை அவர் தொடர்ந்து எழுதி வந்தார். தமிழ்நாட்டில் எழுந்த பகுத்தறிவுவாதம் அறிவியலை கருவியாகக் கொண்டு மத மற்றும் மூட நம்பிக்கைகளை அகற்றும் உத்தியைக் கையாளவில்லை. பெரியார் அவ்வப்போது அறிவியலை பேசினாலும் பகுத்தறிவு இயக்கம் பொதுவாக கடவுள் நம்பிக்கை மீதான நேரடித் தாக்குதலாகவே இருந்தது. நம்பிக்கை உணர்வுக்கு மாற்றாக அறிவியல் உணர்வை ஏற்படுத்தும் கடமையில் ஓரளவிற்கு மட்டுமே அவர்கள் பயணித்தார்கள். இது அந்த இயக்கத்தின் முக்கிய குறைபாடாக அமைந்தது. இந்த வரலாற்று படிப்பினையை உணர்ந்து செயல்பட வேண்டும். இன்றைய வகுப்புவாதம் இறுகிப்போன மதப் பிடிமானத்தின் அடித்தளத்தில் கட்டப்படுகிறது. அதன் வேர்களை அறுத்தெறிய அறிவியல் என்ற போர்வாள் பொருத்தமானது. சமூகத்தை மதத்தின் பிடியிலிருந்து விடுபடச் செய்து மத நம்பிக்கை என்பது தனிநபர் உலகத்தில் மட்டும் இருக்கும் நிலை அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. சமூகம் என்று வருகிறபோது அது மதச்சார்பின்மை வழி இயங்கிட வேண்டும். ஒவ்வொருவர் சிந்தனையிலும் அறிவியல் ஞானம் வேரூன்ற செய்திட்டால் இத்தகு மதச்சார்பின்மை சூழல் உருவாகும். உள்ளூர் அளவில் மக்களோடு நெருங்கி அறிவியலைப் பரப்பும் பணியை மதச்சார்பற்ற இயக்கங்கள் மேற்கொள்ள வேண்டும்.

வாழ்வாதாரத் தாக்குதலை எதர்த்து உள்ளூர் சமூகங்கள்

நரேந்திர மோடியின் ஆட்சி இயற்கை வளங்களை அந்நிய மற்றும் இந்திய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கும் கொள்கைகளை கடைப்பிடித்து வருகின்றது. இதனை எதிர்த்து பொதுவான போராட்டங்கள் நடத்துவது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் அந்த வளங்களை சார்ந்து வாழும் உள்ளூர் சமூகங்களை அந்த வளங்களை பாதுகாக்கும் மனிதக் கோட்டைகளாகவே மாற்றுவது அவசியம். உதாரணமாக, தற்போது கடலோர மேலாண்மை சட்டத்தின் மூலம் மீனவ சமுதாயங்களை அவர்களது மீன்பிடி வாழ்வாதாரத்திலிருந்து விரட்டியடித்து கடலோரப் பகுதிகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் பெற வாய்ப்பு வசதிகளை மோடி அரசு ஏற்படுத்தி வருகிறது. இதற்கு மீனவர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்தாலும் வீச்சாக, அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் வகையில் இன்னும் எழவில்லை. எனவே, மீனவர்கள் ஒன்றிணைந்த மக்கள் இயக்கத்தை உள்ளூர் மீனவர் சார்ந்து எழுப்ப முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்ட ஆபத்தை உணரச் செய்வதோடு அறிவியல் சார்ந்து மீன்பிடி தொழில், மீன் வளத்தை மேம்படுத்துதல் போன்ற பரிமாணங்களிலும் அந்த உள்ளூர் சமூக செயல்பாடு அமையும் வகையில் முயற்சிக்க வேண்டும். உழைக்கும் மீனவ மக்கள், அறிவியலாளர்கள், மக்கள் இயக்க ஊழியர்கள் என்ற பன்முனை கூட்டு நடவடிக்கைகள் அரசாங்க நடவடிக்ககைளை தடுத்து நிறுத்திடும். அது மட்டுமல்லாது மதச்சார்பற்ற அறிவியல் சிந்தனை சார்ந்த சமூகங்கள் உருவாகவும், வகுப்புவாதத்தைத் தடுக்கும் நிலையும் ஏற்படும்.

இதுபோன்று நீர், நிலம், கனிம வளங்கள் போன்றவற்றை அபகரிக்கும் முயற்சிகளிலும்   இதுபோன்ற உள்ளூர் மதச்சார்பற்ற சமூகங்களை கட்டியமைக்கும் நோக்கோடு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பகுதி வாரியாக மக்கள் திரட்டல், தொடர்ச்சியான உள்ளூர் சார்ந்த, வாழ்வாதாரப் பாதுகாப்பினையொட்டிய அறிவியல், மதச்சார்பற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவையெல்லாம் வகுப்புவாதத்தை முறியடிக்க உறுதியான பாதையாக அமையும்.

பாசிச, கார்ப்பரேட் முதலாளித்துவத்தை நோக்கி…

இந்திய கார்ப்பரேட் முதலாளித்துவம், மோடி தலைமையில் அதிகாரத்திற்கு வந்துள்ள சங் பரிவாரங்களை மிகுந்த நேசத்துடன் அரவணைத்துக் கொண்டுள்ளது. சில அமைச்சர்களின் வகுப்புவாதப் பேச்சுக்கள் கார்ப்பரேட் வட்டாரத்தில் முணுமுணுப்பை ஏற்படுத்தினாலும் மோடி அதிகாரத்தில் இருப்பதை தங்களது மூலதன வளர்ச்சிக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாகவே பார்க்கின்றனர். கடந்த காலத்தில் மூலதன வளர்ச்சிக்காக காங்கிரஸ் கூட்டணி அரசு செயல்பட்டபோது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. ஆனால் தற்போது அந்த அதிருப்தியை மத, சாதிப் பிளவுகளாக திருப்பிவிடும் பணியை சங் பரிவாரங்கள் செய்து வருகின்றன. இதனால் உலகமய பொருளாதாரக் கொள்கைகள் வெகு வேகமாக அமலாகி, மக்கள் வாழ்வாதாரம் இழக்கும் நிலை வருகிறபோது, முதலாளித்துவ எதிர்ப்பு போராட்டப் பாதையை மக்கள் தேர்ந்தெடுத்துவிடாமல் தடுக்க சங் பரிவாரத்திற்கு இருக்கும் ஆயுதம் இந்துத்துவா. இந்துமத பிடிமானத்தையும், வெறியையும் ஏற்படுத்தி இந்து ராஷ்டிரம் (இந்து ராஜ்யம்) என்ற சமூக மாற்றை முன்வைத்து திசை திருப்புகின்றனர். இதற்கு மதவாதத்தை மட்டுமல்லாது சாதியத்தையும் பயன்படுத்துகின்றனர். இது கார்ப்பரேட் சக்திகளுக்கு பேருதவியாக உள்ளது. எனவே ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவாரம் முன்வைக்கும் இந்துராஷ்டிரம் என்ற அவர்களது இலட்சிய சமுதாயம் உண்மையில் உழைக்கும் மக்கள் குரூரமாக சுரண்டப்படும் ஏகபோக கார்ப்பரேட் முதலாளித்துவம்தான். இதில் புதிய அம்சம் என்னவென்றால், மக்கள் தங்களது அதிருப்தியை வெளிக்காட்டவும் கூட வழியில்லாமல், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்ட பாசிசத் தன்மை கொண்ட ஆட்சியாக அது செயல்படும்.

இன்றே அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஜனநாயக ரீதியில் பாராளுமன்றத்தில் விவாதம் செய்யாமல் அவசரச் சட்டங்களை கொண்டுவந்து தாங்கள் நினைத்ததை சாதிப்பது, மாதொருபாகன் நாவல் பிரச்சனையில் கொடூரமாக கருத்துரிமை எழுத்துரிமையை பறித்தது போன்ற பல நிகழ்வுகள் தொடர்கின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ‘மதச்சார்பற்ற’, ‘சோசலிச’ சொற்றொடரை நீக்க விவாதம் நடத்திட வலியுறுத்தி, ஊடக மேடைகளில் விவாதமும் நடத்துகிறார்கள். இது ஜனநாயக வேடம் தரித்து, மதவெறி முகாமிற்கு ஆள் சேர்க்கும் உத்தி. இந்திய விடுதலையின்போது இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டுமென்பது மக்கள் முடிவுக்கு விடப்பட்டு, முடிவுக்கு வந்த ஒரு பிரச்சனை. மீண்டும் விவாதம் மூலமாக மக்களை இரு கூறாகப் பிரிக்க முயல்கின்றனர். ஊசலாட்டம் கொண்டோரை மனமாற்றம் செய்யும் உத்தியாக ‘விவாதம்’ என்பதை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

எனவே இந்துராஷ்டிரம் என்று அவர்கள் சொல்லும் இலட்சிய சமுதாயம் பழைய இந்து சநாதன நால் வருண சமூகத்திற்கு மீண்டும் திரும்புவதாக அமையாது. ஆனால், அதைவிட கொடுமையான முறையில் தலித், ஆதிவாசிகள், பெண்கள் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கங்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குகிற – கார்ப்பரேட் மூலதன அதிகாரம் கொடி கட்டிப் பறக்கிற – நவீன சமூக கொடூரம் அது. எனவே சரியான உத்தியோடு செயல்படுவது அவசரக் கடமை.

சமூக ஒடுக்குமுறை, தீண்டாமை, பெண் சமத்துவம் உள்ளிட்ட பல அம்சங்களில் வலுவான முற்போக்குக் கருத்தாக்கங்கள் கொண்ட உள்ளூர் மதச்சார்பற்ற சமூகங்கள், இன்றைய தேவை. நீண்டகால, தொடர்ச்சியான உள்ளூர் மட்ட செயல்பாடுகள், அந்த செயல்பாடுகளில் ஒவ்வொரு தனிநபர் பங்கேற்பும் உறுதிப்படுகிற சூழல் ஆகியவற்றின் மூலமாகவே அவை உருவாகும். அத்துடன், நீண்டகால நோக்கில் தொழிலாளி வர்க்கம், விவசாய வர்க்கங்கள், நடுத்தர வர்க்கங்கள், அறிவுஜீவிகள் உள்ளிட்ட அணி சேர்க்கை பலமாக உருவாவதும், அது இடது ஜனநாயக அணி யாக பரிணமிக்கவும் அது வழிவகுக்கும்.%d bloggers like this: