விடுதலை போராட்டம்: 25 கம்யூனிஸ்டுகளின் நினைவுகள்!


இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளனர். ஆனால், பள்ளி, கல்லூரி வரலாற்று புத்தகங்களில் அது இடம்பெறவில்லை. மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளம், தமிழகம், உத்திரபிரதேசம், ஒடிசா என நாட்டின் பல பாகங்களில் இந்திய விடுதலைக்காக தமது வாழ்வை அர்ப்பணித்த கம்யூனிஸ்டுகளின் அளப்பரிய தியாகத்தை சுருக்கமாக இந்த நூல் விளக்குகிறது. இந்த நூலுக்கு தோழர். சீத்தாராம் யெச்சூரி முன்னுரை எழுதியுள்ளார். விடுதலைப் போரில் கம்யூனிஸ்டுகள் ஆற்றிய பங்கை பற்றி அவதூறு பரப்பப்படுவதை குறிப்பிட்டுள்ளார்.

இன்றைக்கு கோட்சேக்கு கோவில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தும் இந்துத்வா கும்பல்தான் அந்த வேலையை செய்து வருகிறது. தங்களை விடுதலை போராட்ட வீரர்கள் என்று கதைவிடும் இந்துத்வா கும்பல் பிரிட்டிஷாரை எதிர்ப்பதற்கு பதிலாக, அவர்களிடம் சரணாகதி அடைய தயாராக இருந்தனர் என்பதற்கு வீர்சவர்க்கார் அந்தமான் சிறையில் இருந்தபோது எழுதிய கடிதம் ஒன்றே போதுமே? சவர்க்கார் பிரிட்டிஷாருக்கு எழுதிய கடிதத்தில், எனக்கு என்ன வேலையிட்டாலும் செய்யத் தயாராக இருக்கிறேன் என்று எழுதியதை தோழர் யெச்சூரி சுட்டிகாட்டியுள்ளார். நூலின் முதல் அத்தியாயம் ஜோதிபாசுவின் கட்டுரையாகும்.

இந்திய விடுதலைப் போர் என்பது தொழிலாளர், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்களுடன் இணைந்தது என்பது மட்டுமின்றி, கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறும் விடுதலை போருடன் இணைந்தது என்பது தெளிவாக வெளிப்படுகிறது.

காந்திஜி பின்பற்றிய சில போராட்ட முறைகள் சாதாரண மக்களை ஈர்த்தது என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். அதேசமயம், காந்தி வர்க்க போராட்டத்தை ஏற்கவில்லை என்ற விமர்சனத்தையும் வைக்கத் தவறவில்லை. குறிப்பாக, இந்திய விடுதலைப் போரில் காந்திய தேசியம்தான் அடிப்படை குணாதிசயமாக விளங்கியது என்பது தவறு என சுட்டிக்காட்டுகிறார். பல பகுதி மக்களின் போராட்டங்களும் விடுதலை போருக்கு வலு சேர்த்தன என்பதுதான் முக்கியம்.

கம்யூனிஸ்டுகளின் செயல்பாடுகள் பிரிட்டிஷ் அரசுக்கு பயத்தை ஏற்படுத்தியது என்பதும், அவர்களின் செயல்பாட்டை ஒடுக்கும் வகையில் பிரிட்டிஷ் அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்தது என்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவிர, உழைக்கும் மக்கள் போராட்டங்களை காங்கிரஸ் கட்சியினரால் ஜீரணிக்க முடியவில்லை என்பது அன்றும் இன்றும் உண்மையே. மீரட் சதி வழக்கின் பின்னணியும், மாபெரும் அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் அவ்வழக்கை கண்டித்தார் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில், வெகுஜன இயக்கங்கள் வளரத் தொடங்கியதையும் ஜோதிபாசு சுட்டிக் காட்டியுள்ளார். இரண்டாம் உலகப் போர் காலத்தில் கம்யூனிச இயக்கம் ஏகாதிபத்திய எதிர்ப்பை கொண்ட இயக்கமாக திகழ்ந்தது. நாஜிக்களையும், பாசிஸ்டுகளையும் எதிர்ப்பது தங்கள் சர்வதேச கடமை என்று கம்யூனிஸ்டுகள் கருதினர். நாற்பதுகளின் துவக்கத்தில், அறிவு ஜீவிகள் இடதுசாரி இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டனர். இந்திய தேசியத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையேயான முரண்பாடுகள் முற்ற துவங்கின. பல வேலை நிறுத்தங்கள், பம்பாய் கப்பற்படை எழுச்சி போன்றவை, விடுதலைப் போருக்கு ஊக்கம் அளித்தன. அது மட்டுமின்றி, கம்யுனிஸ்டுகள் மதநல்லிணக்கத்தை ஆதரித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். விடுதலை போர் நடைபெற்ற காலத்தின் நிகழ்வுகளை, கோர்வையாக தொகுத்து கொடுத்துள்ள தோழர். ஜோதிபாசு நாம் மக்கள் பக்கம் நிற்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டி நிறைவு செய்துள்ளார்.

முசாபர் அகமது பற்றி தோழர். பி.டி.ரணதிவே மார்க்சிஸ்ட் பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் சில பகுதிகள் அவரின் கட்சி செயல்பாடு, அவர் செய்த தியாகம் பற்றிய புரிதலை கொடுக்கிறது. முசாபர் அகமது கட்சியின் துவக்கத்திற்கு முன்முயற்சி எடுத்தவர். 1922 கயா காங்கிரஸ் நடந்தபோது தயாரிக்கப்பட்ட திட்டம் கட்சியின் முதல் திட்டம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கான்பூர் சதி வழக்கு கம்யூனிசத்தின் மீது ஏகாதிபத்தியம் தொடுத்த தாக்குதல் ஆகும் என்கிறார் பி.டி.ஆர். இந்த சதி வழக்கில் குற்றவாளிகளை நடத்திய விதம் கொடுமையானது. இதனால், முசாபர் அகமது உடல் நலம் பாதிக்கப்பட்டார். நீதிமன்றத்தில் அவர் பேசுகையில், என்னிடம் எவ்வளவோ குறைகள் இருப்பினும் இந்நாட்டின் கம்யூனிச இயக்கத்தின் ஆரம்பக்கால தொண்டர்களில் ஒருவன் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். மிகவும் அதிகபட்ச தண்டனையை அவருக்கு அளித்த பிரிட்டிஷ் அரசு முசாபர் அகமதுவை இந்திய கம்யூனிச இயக்கத்தின் முன்னோடி, மூத்த தலைவர் என்று கூறியது. சிறைவாசம் முடிந்த பின்னர் அவர், முழுமூச்சுடன் கம்யூனிஸ்ட் கட்சி பணிகளை தன் இறுதி மூச்சு வரை செய்தார்.

இந்த நூலின் சிறப்பு அம்சம் என்னவெனில், கட்சி ஊழியர்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத தோழர்களின் வாழ்க்கை வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதாகும். கணேஷ் கோஷ் என்ற வங்காளத் தோழர் பற்றி தோழர் அனில் பிஸ்வாஸ் எழுதியுள்ளார். படிப்பில் அதிக நாட்டம் இல்லாத கணேஷ், முசாபர் அகமதுவுடன் சேர்ந்து நிறைய கற்றுக் கொண்டார். ஒரு தொழிலாளி வெடிகுண்டைக் காட்டிலும் வலிமையானவன் என்பதை முசாபர் அகமது கணேசுக்கு சொல்லித் தந்தார். கணேஷ் கோஷ் தீவிர செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டவர். அயர்லாந்து விடுதலை என்ற நூலை படித்த அவருக்கு ஐரிஷ் புரட்சியாளர்களை போல வீரம் மிகுந்த செயல்களை புரிய ஆவல் எழுந்தது. இவர்களின் சிட்டகாங் புரட்சிப்படை பிரிட்டிஷ் அரசை கலக்கியது. வேறு சில தோழர்களை போல கணேஷ் கோஷுக்கும் அந்தமான் சிறைவாசம் மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தை போதித்தது. கணேஷ் கோஷ் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டதுடன், எங்கு போராட்டம் நடந்தாலும் அதில் பங்கேற்க தவறியதில்லை திருத்தல்வாதத்திற்கெதிரான சித்தாந்த போராட்டத்தில் கணேஷ் கோஷ் குறிப்பிடத்தக்க பங்காற்றினார். திருமணம் செய்து கொள்ளாமல் எளிமையாக கட்சி கட்டுப்பாடு மிகுந்த வாழ்க்கையை வாழ்ந்தார். கணேஷ் கோஷைப் போலவே ஹேமந்த் கோஷல் அதிகம் அறியப்படாத தோழர் எனலாம்.

தனது பதினாறாவது வயதிலேயே, தோழர் ப்ரோவாஸ்தாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டு, விடுதலை போரில் பங்கேற்றார். நம் நாடு எப்படி முன்னேறும் என்பது அவரை ஓயாமல் சிந்திக்க வைத்தது. மார்க்சியம் பற்றி நன்கு அறியும் முன்பே கைது செய்யப்பட்டு செல்லூலர் சிறையில் அடைபட்டார். அவர் மேல் 55 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பிரிட்டிஷ் அரசால் ஆபத்தான மனிதன் என்று முத்திரை குத்தப்பட்டார். சிறை கம்பிகளுக்கு பின்னால் இருந்து விடுதலை ஊர்வலத்தை கண்டதாக அவர் எழுதியுள்ளது மனதை தொடுகிறது.

மாலினி பட்டாச்சார்யா தோழர் ஏ.கே.ஜி. பற்றிய நீண்டதொரு கட்டுரையை எழுதியுள்ளார். இந்திய நாட்டின் விடுதலைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் மட்டுமல்ல. நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று உழைக்கும் மக்களை ஒன்று திரட்டிய அற்புதமான மனிதர், இவரை பற்றி ஏற்கனவே நிறைய நூல்களில் நாம் வாசித்த விஷயங்கள் இதிலும் வெளிப்படுகின்றன. குடும்பத்தை விட்டு விலக வேண்டிய சூழலிலும், நான் அன்னை இந்தியாவின் விடுதலைக்காக போராடிய அவருடைய மகன் என்ற பெருமிதம் எனக்கு ஏற்படும் என்று கூறியுள்ளார். கையில் பணம் இல்லாமல் முப்பது மைல்கள் கூட நடந்தே சென்று கூட்டம் நடத்துவதும், உடை மாற்றிக் கொள்ளக்கூட இயலாமல் இந்த பயலுகள் அசுத்தமானவர்கள் என்றும் அருகே வந்தால் நாற்றம் எடுக்கிறது என்றும் விமர்சிக்கப்பட்ட பொழுது கூட துர்நாற்றம் எங்கள் குற்றமல்ல. நம் நாட்டின் பரிதாப நிலையிலிருந்து பிறந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் நடத்திய ஏராளமான போராட்டங்கள் பெருமைப்படத்தக்கவை.

குருவாயூர் கோவில் நுழைவு போராட்டம், குறிப்பிடத்தக்கது. பல முறை கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அனுபவித்த கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. அதிலும் மனநிலை சரியில்லாதவர்களுடன் சிறையில் அடைக்கப்பட்ட அவர், அதிர்ந்து போனார். அந்த இடத்தை பார்த்தவுடன் என் கண்கள் கலங்கிவிட்டன. அதிகார வர்க்கத்தை பொறுத்தவரை நான் ஒரு பைத்தியக்காரன்தான். பைத்தியத்தில் பல விதம் உண்டு. நான் அரசியல் பைத்தியம் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். உலகத்தில் அடக்குமுறை இருக்கும் வரை, இந்த பைத்தியக்காரத்தனம் மறையாமல் இருக்கவேண்டுமென்று விரும்புகிறேன் என்ற அவரது வார்த்தைகள் பக்கம் 52 அவரை புரிந்து கொள்ள உதவும். உழைக்கும் மக்களை ஒன்று திரட்டி போராடிய ஏ.கே.ஜி. இந்தியா விடுதலை பெற்றபோது சிறையில்தான் இருந்தார். கொடி ஏற்றி அவர் உரையாற்றினார்.

மக்களுக்காகவே வாழ்ந்து மடிந்த மாமனிதர் ஏ.கே.ஜி. நரேஷ் நிதம், கல்பதரு சென் குப்தா ஆகியோர் க்வாஜி நஸ்ரூல் இஸ்லாம் பற்றி எழுதியுள்ள கட்டுரை, ஒரு மகத்தான கவிஞர் விடுதலை போரில் பங்கேற்ற விதம் பற்றி புரிந்து கொள்ள உதவுகிறது. பித்ரோஹி என்ற அவரது கவிதை மிகவும் பிரபலம் .ஆங்கிலத்திலிருந்து அதை அழகாக தோழர் ஹேமா மொழி பெயர்த்துள்ளார். இஸ்லாம் அவர்கள் கந்தரி ஹோமியார் என்ற கவிதையை எழுதினார். அந்த பாடலை கேட்ட சுபாஷ் சந்திர போஸ் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாடப்படும் தேசிய கீதங்களை கேட்டிருக்கிறேன். ஆனால், நஸ்ரூலின் பாடலில் காணப்படும் வரலாற்றை பற்றிய புரிதலும் உத்வேகமும் வேறு எந்த பாடலிலும் காணப்படவில்லை என்று கூறியுள்ளார். மீரத் சதி வழக்கில் அவரது பெயர் இணைக்கப்படவில்லை என்ற போதிலும் அவரது சகாக்கள் சிறைபட்ட பொழுது தனிமையில் வாடினார். நஸ்ரூலுக்கு புரட்சி கவிஞன் என்ற பெயர் நிலைத்துவிட்டது.

தோழர் சு.பொ.அகத்திலிங்கம் அவர்கள் கே.பி.ஜானகி அம்மாள் பற்றி எழுதியது தமிழக தோழர்களுக்கு நன்கு அறிமுகம் ஆன ஒரு கட்டுரை ஆகும். விடுதலைப் போரில் பங்கேற்ற தமிழக வீரர்களில் அம்மா குறிப்பிடத்தகுந்தவர். நல்ல பாடகர், பேச்சாளர், மக்களை ஒன்றிணைத்து போராடுவதில் வல்லவர் என அவருக்கு பல பரிமாணங்கள் உண்டு. அனைத்துக்கும் மேலாக கட்சியை நேசித்தவர். அதனால்தான் கட்சி பட்டறை நடத்த பணம் இல்லை என்ற பொழுது, தனது நகைகளை விற்று பணம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறைவாசம் அவருக்கு தந்த பரிசு ஆஸ்த்மா நோய். இருப்பினும் இறுதி மூச்சு வரை எந்த விளம்பரத்தையும் விரும்பாமல், விவசாயிகள், தொழிலாளர்களுக்கே தமது வாழ்வை அர்ப்பணித்த அம்மா பற்றிய குறிப்புகள் இந்நூலில் இடம் பெற்றிருப்பது அருமை.

சரண்சிங் விர்தி எழுதியுள்ள பண்டிட் கிஷோரிலால் என்ற தோழர் சிறந்த கவிஞர் பஞ்சாப் மாநில கம்யூனிஸ்ட் இயக்கப் போராளி. அவரது குடும்பமே விடுதலைப் போரில் பங்கேற்றது. அவரது செயல்பாடு, அம்மாநில இளம் தோழர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது எனில் மிகையாகாது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்பும் எட்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். அவரது வாழ்வில் 25 ஆண்டுகளை சிறையிலேயே கழித்த கிஷோரிலால் கோவாவின் விடுதலைக்காகவும் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மித்தாலால் என்ற ராஜஸ்தான் போராளியைப் பற்றி மோகன்லால் நெனராம் எழுதியுள்ள கட்டுரை ராஜஸ்தான் மாநிலத்தில் அப்பொழுது நிலவிய நிலப்பிரபுத்துவ கொடுமைகளை விவரிக்கிறது. வெளி உலகத்தை பற்றி எதுவுமே அறியாத அம்மக்களுக்கு புரட்சி பற்றி மட்டும் எப்படி தெரியும்? காகா பாபு என்று அழைக்கப்பட்ட மித்தாலால் முற்போக்கு சிந்தனை உடையவர். அவரது குடும்பம் பழமையில் ஊறிய குடும்பம். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் முக்கிய பங்காற்றினார். அவரது நண்பர் நாராயன் வியாஸ் முதல் அமைச்சராகிய பின்னர் அவரிடம், உனக்கு மந்திரி பதவி என்ற இடம் வந்துவிட்டது. நீ இங்கே இறங்கி விடுவாய். நான் வண்டியை விட்டுஇறங்க வேண்டிய இடமோ இன்னும் வெகுதூரத்தில் இருக்கிறது. நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ சுரண்டல் தொடரும் வரை நானும் இந்த அமைப்பை எதிர்த்து தொடர்ந்து போராடுவேன் என்று குறிப்பிட்டார். அரசு அவருக்கு கொடுத்த கௌரவங்களை ஏற்க மறுத்தார். உதவித்தொகை, பத்திரம் இரண்டையும் நிராகரித்தார். கம்யூனிஸ்ட் கட்சி பிளவு பட்டதும் சிபிஎம்-மை ஆதரித்தார். எளிமை, சிக்கனம் இவற்றின் மொத்த உருவமான காகா கட்சி கட்டுப்பாடு, போராட்டங்கள் என்று வரும்போது கறாரானவர். என் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில்தான் நான் சரியான இடத்திற்கு வந்து சேர்ந்தேன். ஒரு பூர்ஷ்வா கட்சியில் தலைமை பொறுப்பில் இருந்த நான் பாட்டாளி வர்க்கத்தின் படை வீரனானேன் என்று அடிக்கடி கூறுவாராம். ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயிகள் இயக்கத்தை கட்டியதில் முக்கிய பங்காற்றியவர். சோகர் என்ற அவரது ஊரில் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது.

பங்கிம் முகர்ஜி பற்றி ஜோதிபாசு எழுதியுள்ள கட்டுரை அக்கால கல்கத்தாவில் நிலவிய அரசியல், பொருளாதார சூழலை புரிந்து கொள்ள பெரிதும் உதவுகிறது. பல மொழிகளை கற்று தேர்ந்தவர். காவல் துறையால் துரத்தப்பட்டவர்களுக்கு தலைமறைவாக இருக்க மறைவிடங்களை தயார் செய்வார். பங்கிம் பாபு பல திறமைகள் உள்ளவர் என்று தோழர் ஜோதிபாசு புகழாரம் சூட்டுகிறார். அவர் ஜோதிபாசுவுக்கு எழுதிய கடிதம் மனதை நெகிழ வைக்கிறது.

சுனில் மித்ரா, சதீஷ் பக்ராஷி என்ற தோழரை பற்றி எழுதிய குறிப்பு புரட்சியாளர்களின் வாழ்வு எவ்வளவு அபாயங்கள் நிறைந்தவை என்பதை வெளிப்படுத்துகிறது. கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்ட சதீஷ் ஐந்து ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையில் ஏராளமான இடர்களை சந்தித்தவர். அவரை சிறையில் செய்த கொடுமைகள் பற்றி படிக்கும் பொழுது பக்கம் 92 எப்படிப்பட்ட அளப்பரிய தியாகத்தை செய்துள்ளார் என்று தெரிகிறது. அந்தமான் சிறையில் மார்க்சீய சித்தாந்தத்தை நன்கு கற்றார். கட்சி பிளவுபட்ட பின், மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்து இறுதி மூச்சு வரை அடித்தட்டு மக்களுக்காக போராடினார்.

சிவாஜி பட்நாயக் என்ற தோழர் ஒடிசா மாநிலத்தில் பகவதி பாணிகிரஹி என்ற தோழர் விடுதலைப் போரில் ஆற்றிய பங்கு குறித்து எழுதியுள்ளார். மீரத் சதி வழக்கு அவர் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ஆறு உறுப்பினர்களை கொண்டு துவக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அவர்களின் அர்பணிப்பால் வளரத் தொடங்கியது. முக்தி யுக்த என்ற பத்திரிகையை தொடங்கினார். கஞ்சம் மாவட்டத்தில் நிவாரண பணிகளில் ஈடுபட்டு பணியாற்றி கொண்டிருந்தபோது நோய் அவரை தாக்கியது. 1943ல் இறக்கும் பொது அவரது வயது 35 மட்டுமே. ஆனால் அவ்வளவு இளம் வயதில் அவர் சிறந்த கம்யூனிஸ்டாக செயல்பட்டு ஒடிசா மாநிலத்தின் ஒப்பற்ற மைந்தர் என புகழ் பெற்றார்.

தோழர் அசோக் தாவலே ஷாம்ராவ் மற்றும் கோதாவரி பருலேகர் தம்பதியினரின் அற்புதமான வாழ்க்கையை படம் பிடித்து காட்டியுள்ளார். அவர்கள் பற்றி ஏற்கனவே நிறைய எழுதப்பட்டுள்ளன. வசதியான குடும்பத்தில் பிறந்த அந்த இருவரும் ஏழை எளிய மக்களுக்காக, குறிப்பாக, ஆதிவாசிகளின் வாழ்க்கையில் மலர்ச்சியை ஏற்படுத்தியவர்கள். கோதாவரி சிறை சென்றதால் குடும்ப உறவுகள் அற்றுப்போயின. இந்தியாவின் சேவகர்கள் என்ற சங்கத்தின் நிரந்தர உறுப்பினராக்கப்பட்ட முதல் பெண் அவர். ஷாம்ராவ் கோட்டி என்ற நிலப்பிரபுத்துவ முறை ஒழிக்க காரணமாக இருந்தார். பல வகை தொழிலாளர்களை ஒன்று திரட்டும் பணியில் இருவரும் ஈடுபட்டனர். முப்பதுகளிலேயே, வீட்டுவேலை செய்யும் பணியாளர்களை ஒன்று திரட்டிய பெருமை கோதாவரியை சேரும். சிறையிலிருந்தபோது கோதாவரி எழுதிய “மனிதர்கள் விழிப்படையும் போது” என்ற நூல் மிகவும் பிரபலமானது. இந்த ஆதர்ச தம்பதி தங்களுக்கு குழந்தையே வேண்டாம் என முடிவெடுத்தனர். ஷாம்ராவ் இறந்தபோது, மராட்டிய சட்டமன்ற தலைவர், இரட்டை குழல் துப்பாக்கி ஒன்றின் ஒரு குழல் நிரந்தரமாக மௌனமாக்கப்பட்டது என்றார். அகில இந்திய விவசாய இயக்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பெண் கோதாவரி மட்டுமே. அவர்களின் வாழ்க்கை அனைவருக்குமே உற்சாகம் அளிக்க வல்லது.

கேரளா கம்யூனிஸ்ட் இயக்கத்தின் துவக்ககால அமைப்பாளர் கிருஷ்ணபிள்ளை. சாதாரண தொழிலாளியாக தொடங்கி தீண்டாமை கொடுமைகளை எதிர்த்து போராடி தனி இடம் பிடித்தவர். சிறைவாசம் காந்திய சிந்தனைகளைத் தாண்டி அவரை சிந்திக்க தூண்டியது. குருவாயூர் கோவில் போராட்டம் தவிர, பல்வேறு விவசாயிகள், தொழிலாளர் போராட்டங்களில் பங்கேற்று கட்சி வளர உதவினார். கேரளாவில், கட்சி முதன்மையாக உருவாக இவரது ஸ்தாபன திறமை முக்கிய காரணம். பலமுறை கைது செய்யப்பட கிருஷ்ணபிள்ளை தலைமறைவாக இருக்கும்பொழுது இறந்தார். இறக்கும் முன்பு, தோழர்களே முன்னேறுங்கள், செவ்வணக்கம் என்று எழுதினார். அவருடைய வாழ்க்கை வீரம் செறிந்த வாழ்க்கை என்றால் மிகையாகாது.

தோழர் பி.ராமமூர்த்தி பற்றி தோழர் பி.ஆர்.சி. எழுதியுள்ளார். அவரது குடும்ப பின்னணி, திறமை, கல்வி அறிவு, போராடும் குணம், மார்க்சியத்தின் மீதான பிடிப்பு, விடுதலைப் போரில் அவர் ஆற்றிய மகத்தான பணி என விரிவான குறிப்புகளை கொண்ட கட்டுரையில் தரப்பட்டுள்ள விஷயங்கள் ஏற்கனவே தோழர்களுக்கு அறிமுகமானவைதான் என்றாலும் மீண்டும் பதிவு செய்யத் தக்கவையே. வித்தியாசமாக சிந்திப்பதும், செயல்படுவதும் அவரது திறமைகளில் குறிப்பிடத்தக்கதாகும். சிறந்த தலைவராக, பேச்சாளராக, எழுத்தாளராக அவர் கட்சிக்கு ஆற்றிய பணி அளப்பரியது.

தோழர் விமலா ரணதிவே இந்திய விடுதலைப் போரில் முக்கிய பங்காற்றிய பெண் ஆவார். படிக்கின்ற காலத்திலேயே, விடுதலை போரில் ஈடுபட்டு இந்து – முஸ்லிம் ஒற்றுமையை கட்டியவர். அந்நிய துணி பகிஷ்கரிப்பு போரில் மைனராக இருந்த காரணத்தால் போலீஸ் அவரை கைது செய்ய மறுத்தபோது மன்னிப்பு கேட்க மறுத்து கைதாகினார். சிறையில் நாடகம் போடுவதும் படிப்பதும் என இருந்து விடுதலை ஆன பின்னர் உழைக்கும் பெண்களை திரட்டப் பாடுபட்டவர்.

இந்நூலில் இடம் பெற்றுள்ள மற்றொரு பெண் போராளி அகல்யா ரங்கநேகர். பன்முக திறமைகள் கொண்டவர். அவரது குடும்பம் முற்போக்கு சிந்தனைகளில் திளைத்த குடும்பமாகும். ஆண்-பெண் சமத்துவம், பெண்விடுதலை, கல்வி என்ற பின்னணியில் வளர்ந்ததால் இயல்பாகவே அவர் ஒரு போராளியாக இருந்தார். சிறையில் இருந்தபோது அவரும், இதர சகாக்களும் சேர்ந்து மூவர்ண கொடியை ஏற்றிய விதம் சுவாரஸ்யமானது. பஞ்சாலை தொழிலாளர்கள் போலிசின் தாக்குதலுக்கு ஆளாகினர். அவருடன் இருந்தவர் துப்பாக்கி குண்டுக்கு ஆளானது அகல்யாவை பெரிதும் பாதித்தது. அதை ஒரு கொடூரமான சம்பவம் என அவர் கூறுகிறார். பலமுறை சிறை சென்ற அகல்யா நல்ல பேச்சாளர். மக்களை ஒன்றிணைப்பதில் வெற்றி கண்டவர். மானினி சட்டர்ஜி இதை எழுதியுள்ளார்.

கேப்டன் லட்சுமி ஷேகால் விடுதலைப் போரில் நேதாஜியின் ராணுவத்தில் தலைமை தாங்கி பணியாற்றியவர். மருத்துவர், வசதியான, முற்போக்கு சிந்தனை கொண்ட குடும்பத்தில் பிறந்த அவர் இந்திய தேசிய ராணுவத்தில் பணி புரிந்தார். எந்த அரசியல் கட்சியிலும் சேர வேண்டாம் என்று இருந்த அவர், தனது மகள் சுபாஷினி மார்க்சிஸ்ட் கட்சியில் பணி புரிந்ததை பார்த்தும், வங்கப் போரில் நிவாரண பணியில் ஈடுபட்ட பொழுது கட்சியுடன் கிடைத்த அறிமுகம் மூலம் கட்சி உறுப்பினராகி, இறுதி வரை பணி செய்ய வைத்தது.

சுனில் மித்ரா வங்க மண்ணில் சிறப்புடன் செயல்பட்ட நிரஞ்சன் சென்குப்தா பற்றிய கட்டுரையில் அவர் விடுதலைப் போரில் செயல்பட்ட விதத்தை விளக்கியுள்ளார். விவசாயிகளும், தொழிலாளர்களும் இணைந்து போராட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக் காட்டியுள்ளார். நிரஞ்சனும் அந்தமான் சிறையில் பல கொடுமைகளை அனுபவித்தவர். விடுதலைக்குப் பின்னர் தலைமறைவாக கட்சி பணி செய்து வந்தார். 1967ல் முதல் ஐக்கிய முன்னணி அமைச்சரவையில் அகதிகள் மறுவாழ்வுத்துறை அமைச்சரானார். திறமையுடன் செயல்பட்டார்.

மகாதேவ் சாஹா, ராகுல் சாங்கிருத்யாயன் பற்றி விரிவாக எழுதியுள்ளார். மிகச் சிறந்த மார்க்சிய சிந்தனையாளர். ஏராளமான நூல்களை எழுதியவர். வசதியான குடும்பத்தில் பிறந்த அவர், வீட்டைவிட்டு ஓடி ஊர் ஊராக சென்று பல மொழிகளை பயின்றவர். ஆன்மிகம், நாத்திகம் என இரண்டிலுமே நிறைய எழுதியவர். பல நாடுகளுக்கு சென்றவர். ஆனால் அவர் கம்யூனிஸ்ட் ஆனது முப்பதுகளில் என சாஹா குறிப்பிடுகிறார். விவசாயிகள் நிலை குறித்து ஒடிசாவில் அவர் ஆய்வு செய்ய சென்ற பொது நிலச்சுவாந்தாரின் கூலிப்படைகளால் கொடூரமாக தாக்கப்பட்டார். சிறையில் இரண்டு ஆண்டுகள் இருந்து பின்னர் விவசாய சங்க தலைவராக செயல்பட்டார். முஸ்லிம்கள் தொடர்பாக அவர் எழுதிய விஷயங்கள் கட்சி நிலைபாட்டுக்கு மாறி இருந்ததால் கட்சியில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், தன் தவறுக்காக மன்னிப்பு கேட்ட அவர் மீண்டும் கட்சியில் இணைந்து இறுதிவரை செயல்பட்டார்.

துர்க்காதாஸ் சிக்டர், திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர். அவரது குடும்பம் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து செயல்பட்ட குடும்பமாகும். யுகாநதர் மற்றும் அனுசீலன் என்ற புரட்சி அமைப்புகளின் தலைவர்களுடன் ஏற்பட்ட தொடர்பு அவரை விடுதலைப் போரில் செயல்பட வைத்தது. சிட்டகாங் சிறையில் பல கொடுமைகளை அனுபவித்த அவர், அந்தமான் சிறையிலும் கொடுமைகளை அனுபவித்தார். விடுதலை ஆன பின், விவசாயிகள், விவசாய தொழிலாளர்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார்.

வங்கம் அளித்த மற்றொரு வீரர் அமலேந்து முகர்ஜி. உழைக்கும் வர்க்கத்தின் கொடியை பார்த்தது குறிப்பிடத்தக்க மாற்றத்தை அவரிடம் ஏற்படுத்தியது. உப்பு சத்தியாகிரகம் தொடங்கி பல போராட்டங்களில் பங்கேற்று அந்தமான் சிறை கொடுமைகளை அனுபவித்தவர். அங்கு பல மார்க்சிஸ்டுகளின் அறிமுகம் அவரை கட்சியுடன் சேர்ந்து பணி புரிய உதவியது.

மேஜர் என அழைக்கப்படும் ஜெயபால் சிங் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து படித்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டவர். சுய கல்வியால் தனது பணிகளை மேம்பட செய்ய பழகினார். தலைமறைவு வாழக்கையும் சிறை வாழ்க்கையும் நிறைய பாடங்களைக் கற்றுத் தந்தன. தெலுங்கானா போராட்டத்தில் பங்கேற்க அனுப்பப்பட்டார். பின்னர் வேறு சில போராட்டங்களில் பங்கேற்கவும் அனுப்பப்பட்டார்.

தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் பற்றி மணிநி சட்டர்ஜி எழுதியுள்ளார். சுர்ஜீத் பற்றி ஏற்கனவே நிறைய எழுதப்பட்டுள்ளது. இருப்பினும் மீண்டும் அவரது பேட்டியை படிப்பது விடுதலை போராட்ட சூழலை புரிந்து கொள்ள உதவும். விடுதலைப் போரில் பங்கேற்று, உயிர் துறந்தவர்கள் ஏராளம். பல புரட்சியாளர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளனர். பகத்சிங்கின் குழுவில் இருந்த ஷிவ் வர்மா பற்றி மானினி சட்டர்ஜி எழுதிய கட்டுரை அற்புதமானது. தீவிரவாதிகள் ஆயுதம் தாங்கிய போரினால் பிரிட்டிஷ் அரசை துரத்த முடியும் என நம்பினார். ரஞ்சித்துடனான அவரது நட்பு, அவர்கள் நடத்திய விவாதம் போன்றவை பற்றி படிக்கையில் நெகிழ்ச்சி ஏற்படுகிறது. பகத்சிங் செயல்பாடு பற்றியும் இதில் வருகிறது. ஷிவ் வர்மா மிக சிறந்த எழுத்தாளர். பகத் சிங் ஷிவ் வர்மாவிடம் சொன்ன சொற்கள் (பக்கம் 211) நம்மை உலுக்கிவிடும். பகத் சிங்கின் எதிர்பார்ப்புகளை ஷிவ் வர்மா பொய்யாக்கவில்லை எவ்வளவு உண்மை!!

இறுதியாக சமர் முகர்ஜி விடுதலை போரில் பங்கேற்று செயல்பட்டதையும் கம்யூனிஸ்டு இயக்கம் வளர்த்ததையும் மானினி சட்டர்ஜி விளக்கியுள்ளார். சிறையிலிருந்த காலத்தில் நிறைய படித்தார். இரண்டாம் உலகப்போர் நடந்த காலம், அப்போது நமது நிலை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து-முஸ்லிம் ஒற்றுமையை குலைக்க நடந்த செயல்களை விவரிக்கிறார். சமர் முகர்ஜி திருமணம் செய்து கொள்ளவில்லை. புரட்சிகரமான சமூக மாற்றம் வேண்டி சிறு வயது முதல் பாடுபட்ட சமர் இறுதி வரை அதே வேகத்துடன் செயல்பட்டார்.

இந்த நூல் எத்தகைய வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தியுள்ளனர் என்பது மட்டுமின்றி, சமரச போக்கு இன்றி கொண்ட கொள்கையில் உறுதியுடன் கம்யூனிஸ்டுகள் செயல்படுவார்கள் என்பதை விளக்குகிறது. இதில் இடம்பெற்ற ஒவ்வொரு தோழரின் வாழ்க்கையும் நமக்கு சிறந்த பாடங்கள் ஆகும்.

ஆங்கிலம் படிக்க இயலாத தோழர்கள் இந்த வீரர்களைப் பற்றி படித்து பயன் பெறும் வண்ணம் எளிய தமிழில் மொழியாக்கம் செய்துள்ள தோழர் ஹேமா பாராட்டுக்குரியவர். இதை வெளிக்கொணர்ந்த பாரதி புத்தகாலயத்திற்கு வாழ்த்துக்கள்.

Memoirs: 25 Communist Freedom Fighters;

People’s Democracy Publications,

New Delhi, 2005; Pages 194, Rs.125.