Rosa Luxemburg

ரோசாவின் வாழ்க்கையும், எழுத்துக்களும் – ஓர் அறிமுகம்


ரோசா லக்சம்பர்க்
ரோசா லக்சம்பர்க்

பெண்களின் அரசியல் விடுதலையுடன் ஒரு வலிமையான புதிய காற்று அதன் (சமூக ஜனநாயகம்) அரசியல் வாழ்க்கைக்குள் சீவ வேண்டும். அது நமது கட்சி உறுப்பினர்கள், தொழிலாளர்கள் மற்றும் தலைவர்கள் மீது கூட ஐயமில்லாமல் ஊடுருவுகின்ற தற்போதைய ரசனையற்ற குடும்ப வாழ்க்கையின் சுவாசத் திணறலை அகற்றிவிட வேண்டும்… (1902ல் பெண் விடுதலைக்கான போராட்டம் பற்றி ரோசா செய்தியேட்டில் எழுதியது).


மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தன்று மகளிர் விடுதலை, பாலின சமத்துவம் பற்றி பேசுவதும், எழுதுவதும், அது முடிந்த உடனேயே பெண்கள் பற்றிய பிற்போக்குத்தனமான சிந்தனைகளை பேசுவதும் எழுதுவதென்பதும் தொடர் கதையாய் நாம் காண்கிறோம். உலகளவில், ஆண்களுக்கென்றிருந்த தளங்களில் பெண்கள் நுழைந்து, மிகச் சிறப்பாக பணியாற்றுவது ஒருபுறம். ஆனால், மறுபுறம் பெண்கள் மீதான ஒடுக்குமுறை பல மோசமான வடிவங்களை எடுத்திருப்பதை காண முடியும். 2015 பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் பெண்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவது கவலையளிக்கும் அம்சமென சுட்டிக்காட்டியுள்ளது. பல நிறுவனங்களின் தலைவர்களாக பெண்கள் செயல்பட்ட போதிலும், ஊதியத்தைப் பொறுத்த வரை, உயர்மட்டங்களில் கூட, பாலின சமத்துவம் என்பது இல்லையென்பதை ஐ.நா மகளிர் துறை புள்ளி விபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன பாலின சமத்துவம் என்பது இன்னமும் ஏட்டளவில் உள்ளதென்பது கசப்பான உண்மையாகும். இந்தப் பின்னணியில் பெண் விடுதலைக்காக போராடிய உலகின் தலைசிறந்த இடதுசாரி தலைவர்களில் ஒருவரான ரோசா லக்சம்பர்கின் வாழ்க்கை வரலாற்றையும், எழுத்துக்களையும் பரிசீலிப்பது பொறுத்தமானதாகும்.

ரோசா லக்ஸம்பர்க் வரலாறும் கட்டுரைகளும்
ரோசா லக்ஸம்பர்க் வரலாறும் கட்டுரைகளும் வெளியீடு: பாரதி புத்தகாலயம்
ஆசிரியர்: மிலிட்டரி பொன்னுசாமி

ரோசா லக்சம்பர்க்: வரலாறும் கட்டுரைகளும் என்ற நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. 248 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் முதல் பகுதி, ரோசாவின் இளம்பருவம், கல்வி, அரசியல் வாழ்க்கையை விளக்குகிறது. இரண்டாம் பகுதியில் உள்ள கட்டுரைகள், பெர்ன்ஸ்டீன் என்ற திருத்தல்வாதி, சீர்திருத்தவாதியின் எழுத்துக்களுக்கு மார்க்சிய அடிப்படையில் பதிலடி கொடுப்பதாக அமைந்துள்ளன.

ரோசாவின் வாழ்க்கை

ரோசாவின் குடும்பம் யூதர் குடும்பமாக இருந்தபோதும், ஜெர்மானிய கலாச்சாரத்தில் ஊறித்திளைத்து குடும்பம் ரோசாவின் தந்தை ஜார் மன்னனின் அடக்குமுறைக் கெதிராக, போலிஷ் தேசியவாதிகளுடன் இணைந்து பணியாற்றியவர். எனவே, சிறுவயது முதலே, அநீதிக்கு எதிரான உணர்வு ரோசாவிடம் இருந்தது ஆச்சரியமில்லை. ரோசா சிறுவயதிலேயே நோயால் தாக்கப்பட்டு அவரது கால்கள் வலுவிழந்தன. ரோசா, அதிபுத்திசாலியான மாணவியாக திகழ்ந்தாள். ஆனால், “கலக மனப்பான்மை கொண்டவள் என முத்திரை குத்தப்பட்டு, தங்கப் பதக்கம் மறுக்கப்பட்டது.” முனைவர் பட்டத்திற்காக ரோசாவின் “போலிஷ் தொழில்துறை வளர்ச்சி” பற்றிய ஆய்வுரை, அவரது அறிவுத் திறமைக்கு சான்றாகும். தத்துவம், அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றில் ரோசா சிறந்து விளங்கினார். நல்ல மாணவி மட்டுமல்ல, மிகச்சிறந்த ஆசிரியையும் கூட. 1906-1914 வரை கட்சிப் பள்ளியில் அவர் நடத்திய பொருளாதார வகுப்புகள் மிகவும் பிரபலம் கடினமான பொருளாதார விஷயங்களை நகைச்சுவையுடன், எடுத்துக்காட்டுகளுடன் அவர் எளிமையாகக் கற்றுத் தருகையில், …. ரோசாவின் வகுப்புகளில் தாங்களும் இருந்திருக்கலாம் என கருதுவார்கள். மார்க்சிய பொருளாதாரம், ஏகாதிபத்தியம் பற்றி சரியான புரிதல் கிடைக்கச் செய்தார் ரோசா.

சிறந்த பேச்சாளர், எழுத்தாளர்:

ரோசா சிறந்த மார்க்சிய சிந்தனையாளர் மட்டுமல்ல, அசாத்திய பேச்சுத்திறன் கொண்ட வர். ரோசாவின் நாவன்மையை பற்றி ஃபுரோலிச் கூறுகையில், ரோசா ஆடம்பர மான சொற்களை பயன்படுத்தவில்லை. “தன் தாக்கத்தை தன் உரைவீச்சின் உள்ளடக் கத்தாலேயே சாதித்தார்” என்கிறார். தெளி வான சிந்தனை, உணர்ச்சி நயம் கொண்ட, இனிமையான, செழுமையான குரல் ரோசாவின் சொத்துக்கள், கைகளில் குறிப்பு இராது. சில சொற்களிலேயே கேட்போருடன் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார். அரசியல் ரீதியாக, அவருடன் வாதம் செய்ய மற்றவர்கள் அஞ்சுமளவுக்கு இருந்தார். முற்றிலும் மாற்று கருத்து கொண்டவர்கனைக் கூட, கோர்வையான பேச்சு, வாதங்களை முன்வைக்கும் திறமை மூலம், தன் பக்கம் வென்றெடுத்து விடுவார். லெனினுடன் பல முறை கருத்துவேறுப்பாடு காரணமாக விவாதம் செய்த போதிலும், லெனினும் ரோசாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர் என்பது குறிப்பிட தக்கது. அவரது பேச்சுக்கள் இதமானதாக, வெளிச்சம் பாய்ச் சுவதாக அமைந்தன என்று பாராட்டப்பட்டது.

Leo Jogiches
Leo Jogiches

ரோசாவின் எழுத்துக்களும் கூர்மையானவை. “சாரமற்ற, யந்திரத்தனமான எழுத்துக்களை சுயமற்ற, இயக்கமற்ற அரசியலின் அடையாளமாக ரோசா பார்த்தார். அதற்கு, மாறாக, சோசலிசத்தின் உயிருள்ள, உணர்வுள்ள சாரத்தை வார்த்தைகளில் தெரிவிக்க முயற்சித்தார்.” என்கிறார் ஹெலன் ஸ்காட். ரோசாவே கட்சிக்காரர்கள் எழுத்துக்களைப் பற்றி கீழ்கண்டவாறு விவரிக்கிறார் “…நம் எழுத்துக்கள் வண்ணமோ, ஓலி அதிர்வோ அற்ற ஒரு இயந்திர சக்கரத்தின் விர்ரென்ற ஓலி போன்று இருக்கின்றன. இதற்கான காரணம் அவர்கள் எழுதும் போது, தங்களுக்குள்ளேயே ஆழமாகச் சென்று பார்க்கவும், நாம் எழுதுவது என்னவென்பதன் முழுமையான பொருளையும், உண்மையையும் உணர மறந்து விடுகிறார்கள் என்பதில்தான் இருக்கிறதென்று நான் நம்புகிறேன்…..” ரோசாவின் எழுத்துப் பணிக்கு ஜோகிச் நிறைய உதவிகள் செய்துள்ளார். “உன்னைப் போல யாராலும் எழுத முடியாது” என்று நோகிச் புகழாரம் சூட்டு கையில் ரோசாவுக்கு போதை அளிக்கும் (காம்ரேட் அண்டுவ்வர்) சிறப்பாக எழுதும் திறமை கள் இருந்ததால்தான் இருபதே வயதான ரோசா வால், ஒரு புதிய நாட்டிற்கு புதிதாக வந்திருந்த ரோசாவால், ஒரு மாபெரும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. ரோசாவின் எழுத்துக்கள் கட்சியின் மிகவும் மரியாதைக்குரிய நபர்கள் சிலரின் பிற்போக்குத்தனமான தாக்கங்களை அம்பலப்படுத்த உதவியது. மார்க்சியத்தின் மீதான பெர்ன்ஸ்டீனின் தாக்குதல்களை முன்னர் சகித்துக் கொண்ட மற்றவர்களை அந்த தாக்குதல்களுக்கெதிரான ஒரு நிலைபாட்டை எடுக்க வைத்தது என்பது ரோசாவின் ஆச்சரியப்படத்தக்க சாதனை என்கிறார் ஹெலன் ஸ்காட்.

ரோசா மன உறுதி கொண்ட போராளி. தனது பெயரை மாற்றிக் கொண்டும் அரசியல் பணியை அயராது செய்தபொழுது, உண்மை தெரிய வந்து சிறையிலடைக்கப்பட்டார். 6 நாட்கள் உண்ணாவிரதம். அவரது குடும்பத்தினர் அவரைக் காண வந்தபோது நிற்கக்கூட முடியாத நிலை. உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட போதும், கவுட்ஸ்கிக்கு எழுதிய கடிதத்தில், ‘எல்லாவற்றையும் துச்சமாக கருதுங்கள்….. புரட்சி நீடுழி வாழ்க’ என்று எழுதினார். ரோசா வெகுஜன இயக்கங்களின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருந்தார். அவரது நிலைபாட்டை ஏற்க மறுத்து கவுட்ஸ்கியும், தனக்கு எதிரான நிலைபாட்டை எடுத்தபொழுது, கட்சியில் பலவித திரிபுகளை கவனித்த ரோசா, கட்டுரைகள் மூலம் கட்சி கட்டும் பணியை செய்தார். போருக்கு எதிராக குரலெழுப்பினார். கிளாரா ஜெட்கின், பிரான்ஸ் மெஹ்ரிங் போன்றோருடன் இணைந்து ‘ஸ்பார்டகஸ் லீக்’ என்ற பத்திரிகையை நிறுவினார். முதல் உலகப்போர் மூண்ட உடனேயே சிறையிலடைக்கப்பட்டார். சிறையிலும், அவரது வாழ்நாளில் பிரசுரிக்கப்படாத அரசியல் பொருளாதாரத்திற்கு அறிமுகம் என்ற நூலை எழுதினார். “ஜெர்மன் சமூக ஜனநாயகத்தில் நெருக்கடி” என்ற புகழ்பெற்ற நூலையும் எழுதினார் ரோசா போரை அறவே வெறுத்தார். ரோசாவின் “ஜூனியஸ் ப்ரோஷர்” உலகப்போரின் கோரமான முகத்தை வெளிப்படுத்தியது.

முதலாளித்துவம் ஒன்று சோஷலிசத்திற்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை அளிக்கிறது அல்லது காட்டுமிராண்டித்தனத்திற்கு திரும்புவதற்கு வாய்ப்பளிக்கிறது எனும் ஏங்கல்லின் நிலைபாட்டை விளக்கி போர் என்கிற பைத்தியகார வெறிக்கு ஒரே மாற்று சோஷலிச புரட்சி மட்டுமே ரோசா.

ரோசாவின் அந்த பிரசுரம், போர் குற்றங்களுக்கெதிரான மிக வலுவான ஆவணங்களில் ஒன்றாக ஆகிவிட்டது, என்று கவுட்ஸ்கி வர்ணிக்குமளவுக்கு அது பிரபலமாகிவிட்டது.

ரஷ்யத் தொழிலாளர்கள் போராட்டம் ஜெர்மனியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பயங்கரவாதிகள் புரட்சிகரத் தலைவர்களை திட்டமிட்டு கொலை செய்தனர். எதிர்ப் புரட்சியாளர்களின் எதிரே புரட்சிகர மக்கள் திரள்கள் மற்றும் அவற்றின் தலைமையின் பலவீனம் எத்தகையது என்பதை தனது கடைசி கட்டுரையில் ரோசா எழுதியுள்ளார். தொழிலாளர்கள் படுகொலை பற்றி அவர் எழுதியுள்ளது, தனக்கு நேரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்ததாகவே தெரிகிறது. ரோசா கைது செய்யப்பட்டு உடலில் கற்கள் கட்டப்பட்டு, அவரது உடல் கால்வாயில் வீசப்பட்டுவிட்டது. (ஜனவரி 1919ல்) பல மாதங்கள் வரை அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. ரோசாவின் மரணம் அவரது ஆதரவாளர்களால் ஜீரணிக்க இயலாத ஒன்றாக இருந்தது.

சீர்திருத்தமா அல்லது புரட்சியா?

ரோசாவின் கட்டுரைகள் பெர்ன்ஸ்டீனின் கட்டுரைகளுக்கு பதிலடி தரும் வண்ணம் உள்ளன. பெர்ன்ஸ்டீன் பெயரில் “பரிணாமவாத சோஷலிசம்” என்ற நூலை எழுதி வெளியிட்டார். மார்க்ஸ் மீது வெளிப்படையான தாக்குதல் தொடுக்காத அவர், மாறிவரும் சூழலுக்கேற்ப மார்க்ஸை மேம்படுத்துவதாகக் கூறிக்கொண்டு, திருத்தல்வாத கருத்துக்களை முன்வைத்தார். 1898ல், பெர்ன்ஸ்டீனுக்கெதிராக ரோசா பேசியபோது, இளம்பெண் என்பதால் கேலி செய்யப்பட்டார். பெர்ன்ஸ்டீனின் கருத்துக்களை ஏற்காதவர்களுக்கு இல்லாத துணிச்சல் ரோசாவிடம் இருந்தது. சீர்திருத்தவாத தந்திரங்கள் மற்றும் கட்சியின் புரட்சிகர இலக்கு ஆகியவற்றிற்கிடையேயான உறவு என்ன என்பதை விளக்குவதை தனது கடமையாகக் கொண்டார். பெர்ன்டீஸ்னுக்கு எதிரான கருத்துப் போரில் ரோசா வெற்றி பெற்றார். பெர்ன்ஸ்டீனைப் பொறுத்தவரை, “கோட்பாடு சார்ந்த சர்ச்சை என்பது அறிவு ஜீவிகளுக்கானது” ஆகும். இதை வன்மையாக கண்டித்த ரோசா இத்தகைய போக்கு, தொழிலாளர்களை அவமதிப்பதாகும் என்றார்.

பெர்ன்ஸ்டீன் முதலாளித்துவம், அதன் வளர்ச்சி பற்றி தெரிவித்துள்ள கருத்துக்களை “சந்தர்ப்பவாதமுறை” என்ற கட்டுரையில் ரோசா, சாடுகிறார் நிதி தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் மூலம், முதலாளித்துவம் தன்னை வலுப்படுத்திக் கொள்கிறது என்பதை விளக்க, பல்வேறு சோஷலிசத்திற்கு புறம்பான கருத்துக்கள் பெர்ன்ஸ்டீனால், முன்வைக்கப்பட்டன. ரோசாவைப் பொறுத்த வரை, முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கையே கேள்விக்குள்ளாக்கி, அதன் விளைவாக, சோஷலிசத்திற்கு மாறும் சாத்தியத்தையே பெர்ன்ஸ்டீன் கேள்விக்குள்ளாக்குகிறார். அதன் மூலம் மார்க்சியத்தின் அடிப்படையான விஞ்ஞான சோஷலிசத்திலிருந்து அவர் விலகுகிறார் என ரோசா விமர்சிக்கிறார். முதலாளித்துவத்தின் தகவமைவு எப்படி உள்ளது? கடன்/நிதி என்னென்ன செய்யும். நெருக்கடியை உருவாக்கும் பலம் வாய்ந்த கருவியாக கடன் உள்ளது. முதலாளித்துவ உலகின் அடிப்படை முரண்பாடுகள் யாவை, அதிலும் குறிப்பாக உழைக்கும் வர்க்கத்திற்கு, திரட்டப்பட்ட மூலதனத்திற்குமிடையே உள்ள முரண்பாடு எப்படி உள்ளது. இவை பற்றிய மார்க்சிய கோட்பாடுகளை பெர்ன்ஸ்டீன் நிராகரித்தார். அவர் நிராகரித்தது தவறு என்பதை நிரூபிக்கும் வண்ணம் நெருக்கடி வெடித்தது.

சோஷலிசத்தை எப்படி அடைவது?

பெர்ன்ஸ்டீனைப் பொறுத்தவரை, தொழிற்சங்கங்கள், சமூக சீர்திருத்தங்கள் மற்றும் அரசியல் ஜனநாயகம் மூலம் சோஷலிசத்தை அடைய இயலும். முதலாளித்துவ சமுதாயத்தில் போர் என்பது முக்கியமான ஒன்று ராணுவமயத்தை முதலாளித்துவமும், ஏகாதிபத்தியமும் ஊக்குவிக்கிறது. இன்றும் நாம் இதை காண இயலும். சமூக சீர்திருத்தங்கள் மூலம் சோஷலிசத்தை அடைய முடியுமா? சமூக சீர்திருத்தம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன? சீர்திருத்தங்களின் இயல்பு என்ன? இவற்றை புறந்தள்ளி சோஷலிசம் பற்றி எப்படி விவாதிக்க இயலும்? உழைக்கும் வர்க்கத்தின் போராட்டங்கள் தாமாகவே சோஷலிசத்தை அமைக்க உதவாது என்று கூறும் ரோசா, சோஷலிச சமுதாயத்தை அமைக்கத் தேவையானவற்றை விளக்குகிறார். முரண்பாடுகள் முதலாளித்துவ அமைப்பில் கூர்மையடைந்து கொண்டே வருகின்றன. ஒரு சமூக மாற்றம் வரும்போது, இந்த முரண்பாடுகள் ஒடுக்கப்பட வேண்டும் என்பதன் அவசியத்தை பாட்டாளி வர்க்கம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு தனி முதலாளித்துவ கோணத்திலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு பொதுக்கருத்து திருத்தல்வாதம், தனது நிலைபாடு முதலாளித்துவ சப்பைகட்டுவாதம் என்பதை ஒப்புக்கொள்ள திருத்தல்வாதம் விரும்பவில்லை என்பது பெர்ன்ஸ்டீன் எழுத்துக்களில் வெளிப்படுகிறது.

“பொருளாதார வளர்ச்சியும் சோஷலிசமும்” என்ற பகுதியில் முதலாளித்துவ அமைப்பில் பொருளாதார வளர்ச்சி பற்றிய பெர்ன்ஸ்டீனின் புரிதல் எவ்வளவு தூரம் தவறானது என்று ரோசா புள்ளிவிபரங்கள் மூலம் விளக்குகிறார். மூலதனம் சிதறிப்போகிறது, குவிவதில்லை என்றும் வர்க்க முரண்பாடு சோஷலிசத்தை அடைவதை பலவீப்படுத்துகிறது என பெர்ன்ஸ்டீன் கூறுகிறார்.

மார்க்சின் மதிப்பு கோட்பாடு உட்பட, பொருளாதார கோட்பாடுகளை பெர்ன்ஸ்டீன் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அவரால், ரோசாவைப்போல கோர்வையாக வாதிட இயலவில்லை.

“பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க முடியுமா?” ஜனநாயகத்தின் தலைவிதி, உழைக்கும் வர்க்கத்தின் தலைவிதியுடன் இணைந்தது. “பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்தை கைப்பற்றுவது ஒரு வெற்று வாக்கியம்” என்று பெர்ன்ஸ்டீன் கூறுவது முற்றிலும் தவறு என்றும், பெர்ன்ஸ்டீன் நுனிப்புல் மேய்கிறார் என்றும் ரோசா சாடுகிறார்.

முதலாளித்துவத்தின் வீழ்ச்சி கோட்பாட்டை கைவிடுவதன் மூலம் பெர்ன்ஸ்டீன் தனது சமூக ஜனநாயக திருத்தல்வாதத்தை தொடங்கினார். முதலாளித்துவம் வீழ்ச்சி அடையுமென்பது விஞான சோஷலிசத்தின் முக்கியமான அம்சமாகும். முதலாளித்துவத்தின் வீழ்ச்சியை நிராகரிப்பதன் மூலம், பெர்ன்ஸ்டீன், விஞ்ஞான சோஷலிசம்/ சோஷலிச தத்துவத்தை முற்றிலுமாக நிராகரிக்கிறார். பெர்ன்ஸ்பீனின் நூல், தத்துவத்திலும், நடைமுறையிலும் உள்ள சந்தர்ப்பவாதத்தை விளக்குகிறது. சந்தர்ப்பவாதத்திற்கு அவரது நூல் ஒரு தத்துவார்த்த அடித்தளத்தை உருவாக்கித் தந்தது. மார்க்சிய கோட்பாடு மூலமாக, சந்தர்ப்பவாதம் கோட்பாடு ரீதியாக தவறு என நிரூபிக்க முடியுமென்று ரோசா கூறுகிறார். அதை நிரூபித்தும் காட்டியுள்ளார்.

ரோசாவின் பல கட்டுரைகள், ரஷ்யாவில் நடைபெற்ற வெகுஜன வேலைநிறுத்தம், அதன் தாக்கம், படிப்பினைகள் பற்றியவை. 1906ல், காவுட்ஸ்கிக்கு ரோசா எழுதிய கடிதத்தில், ரஷ்யாவில் நடைபெற்ற தொழிலாளர்களின் போராட்டங்கள் மகத்தானவை என்றும், ஜெர்மானிய தொழிலாளி வர்க்கத்தின் மீது அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். சிலர் வாதிடுவது போல, வெகுஜன வேலை நிறுத்தம் தன்னெழுச்சியாக புரட்சிக்கு இட்டுச் செல்லும் என்று ரோசா கூறவில்லை. “வெகுஜன வேலை நிறுத்தத்தின் உள்ளார்ந்த சக்தியை உணர்வுபூர்வமாக விழிப்புடனிருக்கும் சோஷலிசத் தலைமையால் மட்டும்தான் வெற்றிகரமான புரட்சியாக மாற்ற முடியும்.” இதில் ரோசா, லெனின் இருவருக்குமே ஒரே கருத்து என்பது குறிப்பிடத்தக்கது. 1905ல் ரஷ்யாவில் நடந்த நிகழ்வுகள் பொதுவேலை நிறுத்தம் என்ற சிந்தனையை மெய்ப்படுத்தியுள்ளது. பொது வேலை நிறுத்தத்தில் “அராஜகவாதிகள்” முன்னால் நிற்கவில்லை. உழைக்கும் மக்களை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை அராஜகவாதிகள் என ரோசா குறிப்பிடுகிறார். பொது வேலை நிறுத்தம் என்பது செயற்கையானதல்ல. அது ஒரு வரலாற்றியல் விளைவாகும் என அவர் விளக்குகிறார். வெகுஜன வேலை நிறுத்தத்தின் தோற்றுவாய்கள் குறித்து விருப்பு வெறுப்பின்றி ஆராய்வதன் மூலம்தான் பிரச்சனையை புரிந்து கொள்ளவோ, விவாதிக்கவோ இயலும்.

ரஷ்யாவின் வெகுஜன வேலை நிறுத்தத்தின் வளர்ச்சிப் போக்குகள் குறித்த நீண்ட கட்டுரையில் வேலை நிறுத்தங்கள் நடைபெற்ற விதம், நடைபெற்ற தொழிற்சாலைகள் பற்றியும், அவற்றிலிருந்து கிடைக்கப் பெற்ற படிப்பினைகளையும் ரோசா விளக்குகிறார். போராட்டங்கள் மூலம் எத்தகைய கோரிக்கைகளை வென்றெடுக்க முடிந்தது என்று சுட்டிக் காட்டுகிறார். அரசியல் போராட்டங்களும் பொருளாதார போராட்டங்களும் ஒன்றோடொன்று இணைந்தவையா, எப்படி ஒன்றையொன்று சார்ந்துள்ளன என்ற கட்டுரை மிகவும் பயனுள்ளதாகும். “பொருளாதாரப் போராட்டம் ஒரு அரசியல் மையத்திலிருந்து மற்றொன்றுக்காக மாறிச் செல்லும் கருவியாக இருக்கிறது. “அரசியல் போராட்டத்தின் துவக்கமும், வெற்றியும் பொருளாதாரப் போராட்டங்களுக்கு உந்து சக்தியாக விளங்குகின்றன. ரஷ்ய வேலை நிறுத்தம், ஜெர்மானிய தொழிலாளர்களுக்கு பெரும்பாடமாக அமைந்துள்ளது என்று கூறும் ரோசா, உழைக்கும் வர்க்கம் வெற்றிபெற அமைப்பு ரீதியாக திரட்டப்பட்ட தொழிலாளர்களும் அமைப்புசாரா தொழிலாளர்களும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன், பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்படுவது இன்றியமையாதது என்று கூறுகிறார். இந்த கட்டுரையிலிருந்து நமது தொழிற்சங்க இயக்கம் கற்றுக் கொள்ள நிறையவே உள்ளது.

புரட்சியில் பொது வேலை நிறுத்தம் ஆற்றியுள்ள பங்கு என்ன? உழைக்கும் வர்க்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் முக்கிய பங்கை செலுத்த முடியும். இதுபற்றி ஏராளமான விபரங்களுடன் தொழிற்சங்கத் தலைவர்கள் செயல்பட வேண்டிய விதம் பற்றி விளக்குகிறார்.

“தொழிற்சங்க இயக்கமென்பது ஒரு சிறுபான்மையான தொழிற்சங்கத் தலைவர்களின் புரிந்து கொள்ளக் கூடிய, அதனால் முற்றிலும் அறிவிற்கு ஒவ்வாத மாயையில் பிரதிபலிக்கப்படும் இயக்கம் இல்லை. மாறாக, அது வர்க்கப் போராட்டத்திற்காக வென்றெடுக்கப்பட்டுள்ள பாட்டாளி மக்களின் உணர்வில் வாழ்கிறது. அந்த உணர்வில் தொழிற்சங்க இயக்கம் சமூக ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.”

ரோசாவின் வாழ்க்கை மற்றும் அரசியல் பொருளாதாரக் கட்டுரைகளை உள்ளடக்கிய இந்த நூல் ரோசாவின் பன்முகத் திறமைகளை வெளிப்படுத்துகிறது. கொடிய ரோசா (Bloody Rosa) சிவப்பு ரோசா (Red Rosa) தன்னெழுச்சியாளர் என ரோசாவுக்கு பல பட்டப்பெயர்கள் உண்டு. அவர் இரக்கமற்ற பயங்கரவாதி போல சித்தரிக்கப்பட்டார். ஆனால் பெண்கள், பழங்குடிகள், இனக்குழுக்கள், உழைக்கும் மக்களின் நலன்களைப் பற்றி சிறு வயது முதல் சிந்தித்து, செயல்பட்டார். ஒடுக்கு முறையின் அனைத்து வடிவங்களையும் எதிர்த்து போராடினார். ரோசாவின் வாழ்க்கை ஒரு சிறந்த பாடமாகும். ரோசா பற்றி லெனின் கூறியதை நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

“ரோசா மொத்த உலகிலுமிருக்கும் கம்யூனிஸ்டுகளின் நினைவில் நேசத்துக் குரியவராக இருப்பார் என்பதுடன் அவருடைய வாழ்க்கை வரலாறும், அவருடைய நூல்களின் முழுமையான பதிப்பும், கம்யூனிஸ்டுகளின் பல தலைமுறைகளுக்கான கல்வியில் மிகவும் பயனளிக்கும் பாடமாக விளக்கும்”.

இந்த நூலை வாசிப்பதற்கு முன்பு பெர்ன்ஸ்பீனின் எழுத்துக்களை படிப்பது உதவியாக இருக்கும். அதேபோல் ரோசாவின் மென்மையான உணர்வுகளையும், அன்றைய ஐரோப்பிய அரசியல் சூழலையும் புரிந்து கொள்ள, ரோசா ஜோகிச்சுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு நூல் (Comrade and Lover) உதவும்.

இந்த நூலை மிலிட்டரி பொன்னுசாமி தமிழாக்கம் செய்துள்ளார். பாராட்டுக்கள் ஆனால் பல இடங்களில் மொழியாக்கம் நெருடலாக உள்ளது. ஏராளமான அச்சுப் பிழைகள் உள்ளன. பாரதி புத்தகாலயம் அடுத்த பதிப்பின் போது அவற்றை கவனத்தில் கொள்வது நல்லது. திருத்தல்வாதம், சீர்திருத்தவாதம், பற்றி புரிந்து கொள்ள, கட்சித் தோழர்களுக்கு உதவும் சிறந்த நூல் என்பதில் ஐயமில்லை.