மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


ஆர்எஸ்எஸ் பயங்கரவாதம் – வெளிப்படும் கோர முகம்!


இஸ்லாமிக் ஸ்டேட் என்னும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில், பிரிட்டானியர்களும், ஜெர்மானியர்களும் சேருகின்றனர், என்ற செய்தியை ஊடகங்கள் தொடந்து வெளியிடுகின்றன. ஆனால் இந்துத்துவா பயங்கரவாதம் தன் பயங்கரவாதச் செயல்களுக்கு, ஆள்சேர்க்கும் நடவடிக்கைகளை செய்து வருகிறது, என்பதை எந்தவொரு மைய ஊடகமும், பெரிய செய்தியாக ஆக்கிடவில்லை. காரணம் இன்றைய அரசியல் சூழலில் இந்துத்துவ பயங்கரவாதத்திற்கு, பின்புலமாக அமைந்துள்ள இந்துத்துவக் கோட்பாட்டை பின்பற்றுவோர், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளதாகும்.

கேரவன் என்னும் ஆங்கில இதழின் ஆசிரியர்குழு உறுப்பினர், லீனா கீதா ரெங்கநாத் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு கைதாகியுள்ள அசீமானந்தா என்ற ஆர்.எஸ்.எஸ் நபரை, அவர் அடைக்கப்பட்டுள்ள சிறையில், பேட்டி கண்டு வெளியிட்டார். அந்தப் பேட்டியை தமிழில் ஊடகவியலாளர் ஞாநி, ”நரேந்திர மோடி ஆதரவு பெற்ற ஒரு காவிபயங்கரவாதியின் ஒப்புதல் வாக்குமூலம்” என்னும் தலைப்பில் சிறுநூல் வடிவில் வெளியிட்டுள்ளார். 48 பக்கங்களில் வெளியிடப்பட்ட அந்த நூல், ஏராளமான தகவல்களைக் கொண்டுள்ளது. இந்தப் பேட்டியும், அசீமானந்தா வழக்குகளும் இந்துத்துவா பயங்கரவாதத்தின் செயல்பாடுகளையும், பின்னணியையும், ஆபத்தையும் வெளியுலகிற்குச் சொல்கிறது.

வகுப்புவாதம் தன்னை பகிரங்கப்படுத்துகிறது:

1990களில் மகாராஷ்ட்ராவில் பாஜக? சிவசேனை கூட்டாட்சி அமைந்தபோது, “நான் நாதுராம் கோட்சே பேசுகிறேன்” என்ற நாடகத்தை துணிவோடு நடத்தினார்கள். அதே காலகட்டத்தில், உ.பி அரியணையை பாஜக கைப்பற்றிய போது, அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பை அரங்கேற்றினர். குஜராத்தில் ஆட்சி பீடம் ஏறியபோது, மாநிலம் முழுவதும் சிறுபான்மையினரைக் குறிவைத்த கலவரங்களை நடத்தினர். இந்த செய்திகளுக்கு பின்னால் உள்ள இந்துத்துவா கோட்பாடுதான் இன்று, ”நாது ராம் கோட்சேக்கு சிலை வைப்போம்” என்ற கொக்கரிப்புக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது. அதாவது மத்திய ஆட்சி அதிகாரத்தில் பாஜக அமர்ந்திருப்பதானது, இந்துத்துவம் தனது வகுப்புவாத செயல்களை நியாயப்படுத்து வதற்கான தைரியத்தை அதிகப்படுத்தியுள்ளது.

காந்தியைக் கொலை செய்தது நாதுராம் கோட்சே என்பதும் அவரின் ஆர்.எஸ்.எஸ் பின்புலமும், புலன் விசாரணையில் வெளிப்பட்டபோது – பொதுமக்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீது வெறுப்பு ஏற்பட்டது. அன்றைக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கோட்சேவின் செயலுக்கு ஆதரவாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் துணிச்சலைப் பெற்றிருக்கவில்லை. காரணம் அந்த அமைப்பு மக்களிடம் தனிமைப்பட்டிருந்ததுடன், அதிகாரத்திலும் இல்லை.

ஆனால் அதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, பல பயங்கரவாத நடவடிக்கைகளின் மூலம் 119 மனித உயிர்களின் பலிக்கு பின்புலமாக இருந்த, அசீமானந்தா கைது செய்யப்படுவதற்கு, சில நாள்கள் முன் ஆர்ப்பாட்டத்திலும் போராட்டங்களிலும் துணிச்சலாக ஈடுபட்டது. இதுபற்றி, ஆர்.எஸ்.எஸ் இதழான ஆர்கனைசர் “700 மறியல் போராட்டங்களில், 10 லட்சம் பேர் பங்கெடுத்ததாக” எழுதியது. வரலாற்றில் இதற்கு முன் ஆர்.எஸ்.எஸ் போராட்டங்களில் ஈடுபட்டதில்லை.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “நம் சங்கத்தின் வரலாற்றிலேயே முதல் முறையாக சர்சங் சாலக் தர்ணாவில் ஈடுபட்டது மட்டுமல்ல, பொதுக் கூட்டங்களிலும் பேசுகிறேன். காரணம் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு பயங்கரவாத முத்திரை குத்திட நடக்கும் சதியை எதிர்க்கத்தான்”, என்று பேசியுள்ளார். இந்தப் போராட்டத்திற்கு காரணமும் இருந்தது. நாதுராம் கோட்சே கைது செய்யப்பட்டதுபோல், அசீமானந்தா கைது செய்யப்படும்போது அவருடன் இந்திரேஷ் குமார் என்ற ஆர்.எஸ்.எஸ் தலைவர் கைது செய்யப்பட்டு, மீண்டும் ஆர்.எஸ்.எஸ் தனிமைப்படுத்தப்பட்டுவிடக் கூடாது என்ற காரணமாகும்.

அசீமானந்தாவுடன் லீனா கீதா நடத்திய பேட்டி மூலம், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயங்கரவாதம் அம்பலமாகியுள்ளது. குறிப்பாக ஞாநி தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது போல், “போலி தேச பக்தியும், போலி தெய்வ பக்தியும் எவ்வளவு ஆபத்தானவை என்பதற்கு சிறந்த அடையாளமாக அசீமானந்தாவின் இந்த ஒப்புதல் வாக்குமூலம் விளங்குகிறது. மெய்யாகவே சமூக சேவை செய்யும் எண்ணத்துடன், ஆர்.எஸ்.எஸ்-ன், உண்மையான நோக்கங்களை அறியாமலேயே, அதில் இணைந்திருப்போரின் கண்களைத் திறக்க, இந்த பேட்டியை வாசிக்கச் செய்ய வேண்டும்.

கோபால் கோட்சே இருந்த அதே கொட்டடியில்:

காந்தியைக் கொன்ற பின் கைதான நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே அவர்கள் இருவரும் தூக்கிலிடப்பட்டு தகனம் செய்யப்பட்டது, அம்பாலா சிறையில்தான். கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சே 18 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டதும், இதே அம்பாலா சிறையில்தான். ”என்னை கோபால் கோட்சே அடைக்கப்பட்ட அறையில்தான் அடைத்துள்ளனர்”, என்று பெருமை பொங்க தன்னைப் பற்றி அறிமுகம் செய்துள்ளார் அசீமானந்தா. அதுமட்டுமல்ல, “தான் செய்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து திமிரான பெருமிதம் கொண்டிருக்கிறார்”, என்று லீனா தெரிவிக்கிறார்.

மத துவேசமே அடிப்படை

மேற்கு வங்கம், `ஹூப்ளியை சார்ந்தவர் அசீமானந்தா. கோட்சே போலவே, சகோதரர் ஆதரவைப் பெற்றவர். இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

1978 ஆம் ஆண்டில் மேற்கு வங்க மாநில ஆர்.எஸ்.எஸ் தலைவர் வசந்த்பட்டுடன் இணைந்து, புரூலியா மாவட்டத்திற்கு உட்பட்ட பாக் முண்டி காடுகளில் வசிக்கும் பழங்குடி மக்களிடையே பணியாற்றுவதற்கான ‘வனவாசி கல்யாண் ஆசிரமம்‘ நிறுவப்பட்டது. இந்த அமைப்பின் நோக்கம் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பழங்குடியினரின் மதமாற்றத்தைத் தடுப்பது என அறிவிக்கப்பட்டது. விளையாட்டுக் குழுக்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றை இந்த அமைப்பு நடத்தியது. மத துவேஷத்தை வளர்த்து, அதனடிப்படையிலான வன்முறையை ஏற்படுத்துவதே இவர்களின் மெய்யான நோக்கமாகும்.

தேவைகளை நிறைவேற்றுவது மட்டும் பலனளிக்கவில்லை. கூடவே மிரட்டுகிற நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். அதற்கான அடியாள் கூட்டத்தையும் அசீமானந்தா உருவாக்கியுள்ளார். மேலும் அந்தமானில் இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுகிறபோது, நிவாரணப் பணிகளுக்காக அசீமானந்தா சென்று வரும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார். நிவாரண உதவிகளை இந்துக்களாக உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கியதாகக் கூறுகிறார். அதனால் இந்துக்களின் வாழ்வில் முன்னேற்றம் உருவானதா? என்ற கேள்வி இவர்களைப் பொருத்த அளவில் நியாயமற்றது.

சுனாமி நிவாரணப் பணியின் போது, ஒரு கிருத்துவ தாய் தன் குழந்தைக்கு பால் கேட்டு இவர்கள் முகாமிற்கு வந்தபோது, தரமறுத்துள்ளனர். குழந்தை செத்துவிடும் என மன்றாடியபோது, சுவாமிஜியிடம் கேள், என அசீமானந்தாவிடம் அனுப்பி உள்ளனர். அவர் இரக்கமே இல்லாமல், ”அவர்கள் செய்தது சரிதான்” எனக் கூறியுள்ளார். இதை அடிக்கடி சொல்லி மகிழ்வதாகவும், கீதா தனது கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் டாங்ஸ் பகுதிக்கு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினால் அனுப்பப்பட்டுள்ளார் அசீமானந்தா. அங்கு வனவாசி கல்யாண் அமைப்பு, அசீமானந்தாவின் வழிகாட்டுதலின்படி ஷ்ரத்தா ஜாக்ரண் விபாக் என்னும் அமைப்பை, மத வெறுப்பை உசுப்பிவிடும் நோக்கத்திற்காக, உருவாக்கியது. இது குறித்து அசீமானந்தா கூறுகையில், “எப்போதுமே ஒருவர் தனக்கு மனத்திருப்தி அளிக்கும் வேலையைத்தான் செய்ய வேண்டும். வடகிழக்கு மாநிலங்களை விட, குஜராத்தின் டாங்ஸ், பழங்குடியினருடன் தங்கியிருந்து, அவர்களை நம் பக்கம் இழுப்பது என்ற வேலை தனக்குப் பிடித்தமானதாக இருந்தது”, என்று பதிவு செய்துள்ளார்.

குஜராத் பொருத்தமான களம்:

1998-2004 காலகட்டத்தில், வாஜ்பாய் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்றபோது, 1999ம் ஆண்டில் டாங்ஸ் மாவட்டத்தில் தேவாலயங்களுக்கு தீ, பைபிள் எரிப்பு, கன்னியாஸ்திரிகள் மீது தாக்குதல் போன்ற செய்திகள் வெளிவந்தன. இவை தற்செயலாக நடந்தவை அல்ல. சங் பரிவாரின் திட்டமிட்ட, ஏற்பாடு என அப்போது கம்யூனிஸ்ட்டுகள் முன்வைத்த குற்றச்சாட்டு உண்மை என்பதை இந்த நேர்காணல் நிரூபித்துள்ளது.

டாங்ஸ் மாவட்டத்தில் 93 சதம் பழங்குடி மக்கள், 75 சதம் பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள். முதல்கட்டமாக, ஒவ்வொரு ஆண்டும், 24 இளைஞர்களை ஆசிரமத்தில் தங்க வைத்து, இலவச உணவும், இருப்பிடமும் அளிக்கப்பட்டு, உள்ளூர் அரசுப் பள்ளியில் படிக்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆசிரமத்தில் சில பயிற்சிகள் அளிக்கப்பட்டது. முக்கிய இந்தியர்கள் என கருதியோரை போற்றிப்பாடுவது. அதில் காந்தி முதல் கோல்வாக்கர் வரையிலும் போதிக்கப்பட்டனர்.

பூல்சந்த் பாப்லொ என்ற மாணவர் டாங்ஸ் மாவட்டம் முழுக்க நன்கு அறிந்தவர். அவர் பின்னாளில் அசீமானந்தாவிற்கு, வழிகாட்டியாக, அந்த பிராந்தியம் முழுவதும் செயல்பட்டுள்ளார். வனவாசி கல்யாணில் இருந்து, `ஹிந்து ஜாக்ரண் மஞ்ச், பஜ்ரங் தள், விஸ்வ ஹிந்த் பரிஷத் ஆகிய அமைப்புகள் உருவான பின்னணியில், வேலைத் திட்டங்களும் முன்வைக்கப்பட்டன. டாங்ஸ் மாவட்டத்தில், ஒருபுறம் சாத்வீகமான இந்து சமயப் பிரச்சாரம் செய்த படியே, தீவிரமான கலகங்களும் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டன. கிருத்துவர்கள் கட்டாயமாக இந்து மதத்திற்கு திருப்பப்படும் நிலை உருவானது.

மற்றொருபுறம் பழங்குடி கிராமம் ஒவ்வொன்றிலும், குறிப்பிட்ட நாட்கள் தங்கியிருந்து, மத உபதேசம் செய்வது, குழந்தைகளுக்கு அனுமான் சாக்லேட் விநியோகம் செய்வது, யாரையெல்லாம் ‘கர் வாபசி’ நிகழ்ச்சிக்கு வரவைப்பது, என்பதை பட்டியலிட்டு, அதை செவ்வனே அமலாக்கியுள்ளனர். இதனோடு இணைந்து, வனவாசி கல்யாண் அமைப்பில் இருந்து உதயமான, இந்து ஜாக்ராண் மஞ்ச், பஜ்ரங் தளம், விஸ்வ `ஹிந்து பரிசத் ஆகியவற்றின் உறுப்பினர்களைக் கொண்டு கிருத்துவப் பள்ளிகளின் மீது தாக்குதல் தொடுக்கும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, முதல் கட்டமாக 6 கிராமங்களில் இருந்த தேவாலயங்கள் தாக்கப்பட்டுள்ளன. இதற்கு வனத்துறையின் ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த செயல்களின் விளைவாக, 1998 மத்தியில் இருந்து, 1999 ஜனவரி வரையிலான கால கட்டத்தில் மட்டும் 40 ஆயிரம் கிருத்துவர்கள், இந்துக்களாக, மதம் திரும்பினர், என்று அசீமா னந்தாவின், நெடிய பேட்டி குறிப்பிடுகிறது. மதம் திருப்புதல் முடிந்த பின் தேவாலயங்களுக்கு என்ன வேலை, எனவே 30 தேவாலயங்களை இடித்து தரைமட்டமாக்கிவிட்டு, அங்கு இந்து கோவில்களைக் கட்டினோம், என்பது அசீமானந்தாவின் வாக்கு மூலம். அந்த மக்களிடையே 15 ஆண்டுகளுக்கு முந்தைய அதே வறுமைக்கோடு தொடர்கிறது.

கலவரங்களுக்கான திட்டமிடல்:

”மதமாற்றத்தைத் தடுப்பது சுலபம், மத வழியைத்தான் பயன்படுத்த வேண்டும், இந்துக்களை மதவெறியர்களாக மாற்றினால் போதும், மீதியை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். எல்லா ஆர்.எஸ்.எஸ் வேலைகளையும், நாங்கள் வனவாசி கல்யாண் மூலம் செய்ய முடியாது. பழங்குடியினரைக் கொண்டே இந்து ஜாக்ரண் மஞ்ச் அமைப்பை ஏற்படுத்தினோம். செயல்பாடுகள் என்ன? பிரசுரங்களில் என்ன எழுத வேண்டும்?, பேச வேண்டும் என்பதையெல்லாம், நாங்களே முடிவு செய்வோம். பழங்குடியை அவன் பழங்குடி என்பதற்காக, எங்கள் முகமாக வைத்திருப்போம். சங்கத்தின் எல்லா வேலைகளையும் பழங்குடி மக்கள் செய்து முடித்து விடுவார்கள்” என அசீமானந்தா கூறியதாக கீதா எழுதியுள்ளார்.

மத பிரச்சாரத்தின் உத்வேகத்தால் கவரப்பட்ட மற்றும் தாக்குதலால் நிர்பந்திக்கப்பட்ட சிறுபான்மையினர், 50 அல்லது 100 பேர் ஒன்று சேரும் நிகழ்வுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. அப்படி நடைபெற்ற நேரங்களில், அவர்களை திறந்த ஜீப்பில் அல்லது லாரியில் ஏற்றி சூரத்தில் இருக்கும் உனாய் கோவிலுக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். திரும்ப வரும் போது அவர்கள் கையில் அனுமார் படம் மற்றும் பாடல் வரிகள் கொடுக்கப்பட்டு, அதை சப்தமாக, ஒலிபெருக்கியில் வழி நெடுகப் பாடி வருவர். இது மாற்று வழிபாடு கொண்ட மக்களுக்கு அச்சம் தருவதாக மாறி வந்திருக்கிறது.

டாங்ஸ் மாவட்டத்தில் எல்லா வன்முறைகளையும் துவக்கி வைத்தது, அசீமானந்தா ஏற்பாடு செய்த, `ஹிந்து ஜாக்ரண் மஞ்ச் ?அமைப்பின் மூன்று ஊர்வலங்கள்தான், என கீதா குறிப்பிடுகிறார். 1999ல் கிருஸ்துமஸ் தினத்தன்று, அந்த பகுதியில் மூன்று பேரணிகள் நடைபெற்றுள்ளன. இதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் திரிசூலங்கள் மற்றும் கம்புகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் 3500 பேர் வரையிலும் பங்கெடுத்துள்ளனர். அசீமானந்தா வழிகாட்டிய கிருத்துவ எதிர்ப்பு முழக்கங்களே முழுமையாக முன்வைக்கப்பட்டுள்ளன.

வளர்ச்சிக்கும் இந்துத்துவாவிற்குமான தொடர்பு?

பழங்குடியினர் வழிபடுவது ராமரையா? கர்த்தரையா? என்பதைப் பற்றி மட்டுமே ஆர்.எஸ்.எஸ் அமைப்பும், அசீமானந்தாவும் கேள்வியெழுப்புகின்றனர். 1999ல் வீக் இதழுக்கு அசீமானந்தா அளித்த பேட்டியில், “வறுமை ஒழிப்பிலோ வளர்ச்சி திட்டங்களிலோ, எங்களுக்கு அக்கறை இல்லை”, என்று குறிப்பிட்டு உள்ளார். ஆர்.எஸ்.எஸ்ன் பிரதிநிதியான மோடிக்கு மட்டும் எப்படி தனியாக மக்கள் வளர்ச்சி குறித்த சிந்தனை வர முடியும்?

ராமரின் 14 வருட வனவாசத்தின்போது அவருக்கு உதவியதாக ராமாயணம் கூறுகின்ற பழங்குடிப் பெண் கதாப்பாத்திரமான சபரியின் பெயரில் ஒரு ஆலயம், டாங்ஸ் மாவட்ட வனத்தில் கட்டப்பட்டது. அசீமானந்தாவின் இந்த ஏற்பாட்டிற்கு, இன்றைய பிரதமரான அன்றைய குஜராத் முதல்வர் மோடி, அரசு மூலமான உதவிகளைச் செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளில் ஒன்றாக, எட்டு நாட்கள் ராமர் குறித்த இசைச் சொற்பொழிவிற்கு ஏற்பாடாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வராக இருந்த மோடி, தன்னுடைய வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒருநாள் முழுவதும் செலவிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சி மூலம் 10 ஆயிரம் பழங்குடி மக்களை ஈர்த்துள்ளனர்.

கர்வாபஸிக்கான ஏற்பாடாக, ராமர் குறித்த இசைச் சொற்பொழிவை நிகழ்த்திய, மொராரி பாபு என்பவர், அசீமானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து 6 கிமீ தூரத்தில் உள்ள ஆற்றில் கும்ப மேளா நடத்த வலியுறுத்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளார். புனித நீராடி தன்னை தூய்மைப்படுத்திக் கொள்வதன் மூலம், பழங்குடியினர், தங்களை கிருத்துவ மதத்தில் இருந்து விடுவித்து, இந்து மதத்திற்கு திரும்பியவர்கள் என அடையாளப்படுத்தி உள்ளனர். ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், நாடு முழுவதிலும் இருந்து பழங்குடி மக்களைத் திரட்டும் பணியை மேற்கொண்டும் வந்துள்ளனர். மொத்தத்தில் சபரி கும்ப மேளா என்பது, “சாது, சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் அரசாங்கம்“ ஆகிய மூன்றின் திருவேணி சங்கமாக நிகழ்ந்துள்ளது.

மேற்படி கும்பமேளா நிகழ்விற்கு, ஆற்றில் நீரில்லாத நிலையில், கோடிக் கணக்கான ரூபாய்களை நீர் எடுத்து வருவதற்காக அரசு செலவிட்டு உள்ளது. அதேபோல் குஜராத் அரசின் சுற்றுலாத்துறை, ராமாயணத்தின் நாயகரான, ராமர் சென்ற வழித்தடத்தில், ஆன்மீக சுற்றுலாப் பயணம் என்பதை 2012ல் உருவாக்கியுள்ளனர். ஆனால் அதே டாங்ஸ் மாவட்டத்தில், சமூக ரீதியில் பின்தங்கிய பகுதிகளின் மேம்பாட்டிற்கான, சிறப்புத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 11.6 கோடி ரூபாய்க்கான செயல்திட்டத்தை வடிவமைக்க அரசு தயாரில்லை.

அசீமானந்தா நடத்திக்காட்டிய இந்த கர்வாபஸி மற்றும் புனித நீராடுதல் நிகழ்வு, ஆகியவற்றிற்குக் காரணமான, உனாய் கோவில் சுற்றுலா செல்லும் திட்டம் என்ற பெயரில், குஜராத் அரசு 3.63 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததாக அசீமானந்தா குறிப்பிட்டு உள்ளார். இப்படி அரசு இயந்திரத்தை எல்லா வகையிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் தங்கள் கருத்துத் திணிப்பிற்கும், அணிதிரட்டுதலுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் வகுப்புவாத அரசினைப் பொருத்த வரையில் பின்தங்கிய மக்களின் பொருளாதாரத்திலும், சமூக வாழ்க்கையிலும் முன்னேற்றம் ஏற்படுத்துவதைவிடவும், மத உணர்வை, மதவெறியாக மாற்றுவதிலேயே கவனமாகச் செயல்படுகின்றனர்.

தமிழகம் தனித்து இல்லை:

அந்தமானில் தன்னுடைய பணிகளைப் பற்றிக் குறிப்பிடுகிற அசீமானந்தா, தங்களின் திட்டமிட்ட சில செயல்பாடுகளையும், விளக்கிச் செல்கிறார். அதில் தமிழகத்தின் சில பயிற்சி மையங்களின் பங்களிப்பையும் தெளிவுபடுத்தியுள்ளார். அந்தமானில் முதியவர்களைத் தங்கள் நண்பர்களாக உருவாக்கிக் கொண்ட பின், அந்த பழங்குடி சமூகத்திலிருந்து முதலில் இளம் பெண்கள் 7 பேரைத் தேர்ந்தெடுத்து கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு பஜனைப் பாடல்கள் கற்று தரப்பட்டு, அனுமன் பக்தைகளாக மாற்றப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து ஜஸ்பூரில் உள்ள பயிற்சி மையத்தில், மூன்று மாதங்கள் போதனை பெற்றுள்ளனர். இதேபோன்று வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்த சிறுவர் சிறுமியர் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டனர்.

தமிழ்நாட்டில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில், மேகாலயா மாநிலம் காசி பழங்குடி சிறுமியர் 20 பேர் கிருஷ்ணகிரியில் இருந்து மீட்டு, திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். காசி மலைப்பகுதியில் உள்ள, சென்சார் கலாச்சார சொசைட்டி, தமிழ்நாட்டில் உள்ள சேவா ட்ரஸ்ட் விடுதிக்கு இந்த சிறுவர்களை அனுப்பி வைத்து உள்ளது. இந்த விடுதிக்கு ஆதரவாக பாஜக கட்சியின் வழக்கறிஞர்கள் வாதாடியுள்ளனர், என்ற விவரத்தை, வழக்குத் தொடுத்த பாடம். நாராயணன் குறிப்பிடுகிறார்.

தொடர்ந்து மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததன் விளைவாக, அந்தமானில், 1999ல் விஷ்ணு பாத ரே என்பவர் பாஜகவின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதற்கு தன்னுடைய ஆரம்ப முயற்சிகள்தான் அடித்தளம் இட்டன, என்று அசீமானந்தா, கேரவனுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இந்த விஷ்ணு பாத ரே-வை வேட்பாளராக தேர்வு செய்ததில் தன்னுடைய பங்கினைக் குறிப்பிடும்போது, அரசியலும், எங்கள் வேலையின் ஒரு பகுதிதான் என அவர் குறிப்பிடுகிறார்.

மதசார்பற்ற சக்திகள்:

மத வெறியைப் பரப்பிடும் மேற்சொன்ன திட்டமிட்ட அனுபவங்களைக் கணக்கிலெடுத்துச் செயல்படுவதன் மூலமே, மதச்சார்பற்ற சக்திகள் இவைகளைத் தடுக்க முடியும். மாற்றுப் பண்பாட்டு அணுகுமுறைகளையும், பாரம்பரியமாகத் தொடர்ந்து வரும் மதச்சார்பற்ற சிந்தனைகளையும், கருத்துப் பிரச்சாரத்திலும், செயல் வடிவங்களிலும் முன்வைக்க வேண்டியுள்ளது. குறிப்பாக பழங்குடியினர் அல்லது இதர இனக்குழுக்கள், ஒருங்கிணைந்த மத அடையாளங்களைக் கொண்டவர்கள் அல்ல. இதனை நன்கு அறிந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் திட்டமிட்டு ஒருங்கிணைந்த மத அடையாளங்களுக்குள் இந்த உழைக்கும் மக்களை இழுப்பதுடன், மத துவேசத்துக்கான களத்தையும் தீவிரமாக செயல்பட்டு ஏற்படுத்துகின்றனர்.

ஒரு அசீமானந்தா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இன்னும் ஏராளமானோர் உலா வந்தவாறு உள்ளனர். இன்னும் புதிய கலவரங்களுக்கான வாய்ப்புகள் உண்டு. பயங்கரவாதத்திற்கான சாத்தியங்களும் உண்டு. எப்படியானாலும் பாதிக்கப்பட இருப்பது எந்த மதமாக இருந்தாலும் உழைப்பாளிகளே, இன்றைய பாஜக ஆட்சியின் கொள்கை, இச்செயல்களுக்கு கவசமாக இருக்கும் சூழல் இருப்பதால், மேற்படி அமைப்புகள் தங்கள் தளத்தை விரிவாக்கம் செய்ய எடுக்கும் முயற்சிகளை மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும். வகுப்புவாத வெறியின் வித்தாக அமைந்துள்ள இந்துத்துவத்தை தத்துவார்த்த அடிப்படையில் எதிர்கொண்டு வீழ்த்த வேண்டும்.%d bloggers like this: