நெட் நியூட்ராலிட்டிக்கான போராட்டம் என்பது என்ன?


கேள்வி: கே.எல்.ராஜன், சத்தியமங்கலம்.

பதில்: நெட் நியூட்ராலிட்டி என்பதை தமிழில் சமநிலை இணையம் எனலாம். இணைய இணைப்பு​ வசதி இன்று 2ஜி, 3ஜி, பைபர் நெட் என பல முறைகளில் அணுகி பயன்படுத்தப்படுகிறது. அதற்கான கட்டணத்தை இணைய இணைப்பு வழங்கும் நிறுவனத்திடம் செலுத்திவிடுகிறோம். இந்தக் கட்டணத்தை, இணைய இணைப்பின் வேகம் மற்றும் தரவிறக்கம் செய்யும் கோப்பின் அளவு ஆகியவற்றைப் பொருத்து முடிவு ​செய்கிறார்கள்.

மற்றபடி எந்த தளத்தில் செயல்படுவது என்பது ஒவ்வொரு பயன்பாட்டாளரின் முடிவு. எந்த இணைய முகவரியையும் நாடலாம்.

சமீபத்தில் ரிலையன்ஸ் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இணைய இணைப்பு பெறாமலே, இணையத்தை பயன்படுத்தும் வசதியை வழங்குவதாக கவர்ச்சி அறிவிப்பை வெளியிட்டார்கள். இதற்காக பேஸ்புக் உள்ளிட்ட பிரபல தளங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டனர். ‘இலவசம்’ என்பது கவர்ச்சிகரமாக இருந்தாலும். அது ஒரு குறிப்பிட்ட தளத்துக்கு மட்டும், கூடுதல் முக்கியத்துவம் வழங்கும் நடவடிக்கையாகிறது. ஒட்டுமொத்த இணையத்துக்கும் இணைப்பு வழங்குதல் என்பதை மாற்றி குறிப்பிட்ட சேவையை மட்டும் வழங்கி, பிற சேவைகளை வழங்காமல் இருக்கலாம் என்ற நிலையில் தொலைபேசி நிறுவனங்களை இருத்துகிறது.

குறிப்பிட்ட தளங்கள் இலவசம் எனும் இந்த அறிவிப்பு – இணையத்தில் காணக் கிடைக்கும் பல லட்சக்கணக்கான தளங்களுக்கும் இடையே உள்ள சமநிலையை சிதைக்கிறது. இது ஒவ்வொரு தளத்திற்கும் தனித்தனியாக கட்டணம் செலுத்தும் நிலையை உருவாக்கும்.

 

இப்பிரச்சனையில் தலையிட்டு முறைப்படுத்தியிருக்க வேண்டிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அமைப்பு, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சாதகமான சில பரிந்துறைகளை சுற்றுக்கு விட்டது. அந்தப் பரிந்துறைகள் மேற்குறிப்பிட்ட நம் அச்சத்தை நிரூபிப்பவையாக அமைந்தன.

இப்போது ஒருவர் தன்னுடைய கணிணியைப் பயன்படுத்தி, தான் விரும்பும் தகவலை  இணையத்தில் பரப்பிடமுடியும். ஆனால், இணைய சமவாய்ப்பு மறுக்கப்பட்டால், அந்த சுதந்திரம் பாதிக்கப்படும். இணைய இணைப்புக் கொடுக்கும் நிறுவனத்திடம் ஒவ்வொரு தளத்திற்கும், வெவ்வேறு கட்டணத்தைச் செலுத்த நேரிடலாம். அவர்கள் நினைத்தால் சில தளங்களை தடை செய்யலாம். அதைத்தான் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விரும்புகின்றன.

இந்த நிலையில்தான், இணையதள செயல்பாட்டாளர்கள் “இணையத்தை பாதுகாப்போம்” என்ற முழக்கத்துடன் களத்தில் இறங்கினார்கள்.எல்லா இணைய தளங்களையும் ஒரே வேகத்தில், ஒரே கட்டணத்தில் அணுகும் நிலைமையை உறுதிப்படுத்துவதற்கான போராட்டமே – சமநிலை இணையத்துக்கான போராட்டமாகும்.​