எம்.கலியமூர்த்தி
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
இந்த முதுமொழி இன்றும் மக்கள் வாழ்வின் அனுபவ மொழியாக விளங்குகின்றது. ஆக உடல் ஆரோக்கியமான,
நோயற்றவாழ்வேஒருமனிதனின்மிகப்பெரியசொத்து. பொதுவாக நமக்குத் தேவையான பொருட்களை ஒவ்வொரு மனிதனும் தன் விருப்பத்திற்கு ஏற்பவே தேர்வு செய்கிறான். ஆனால் நமக்குத் தேவையான மருந்துகளை நாம் அவ்வாறு தேர்வு செய்ய முடியாது அதை மருத்துவர்தான் நமக்காகத் தேர்வு செய்வார் .
இதையே மூலதனமாக்கி மருந்து நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன. இந்தச் சூழலில் அரசின் கொள்கைகள் இந்திய மக்களின் சுகாதாரத்திலும் அதனோடு தொடர்புடைய மருந்துத் துறையிலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை சுதந்திரத்திற்கு முன்பு, சுதந்திரத்திற்குப் பிறகு (1947-1990), உலகமயக் கொள்கை அமலாக்கத்திற்குப் பின்பு (1990க்குபிறகு) என மூன்று காலகட்டமாக வெவ்வேறு மதிப்பீடு உள்ளதை அறியலாம்.
சுதந்திரத்திற்குமுன்பு
நம் நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின போது பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் தங்கள் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து அதிக விலையில் விற்றுக் கொள்ளை லாபம் சம்பாதித்தனர்.
உலகத்திலுள்ள அனைத்து நாடுகளையும் விட மருந்துகளுக்கு அதிக விலை கொடுக்கும் நாடு இந்தியாதான் என்று அமெரிக்க செனட் உறுப்பினரான எஸ்டஸ் கோபர் தலைமையிலான கமிட்டி சுட்டிக்காட்டியும், இந்திய மக்கள் காலரா முதலான பல தொற்று நோய்களினால் செத்துமடிந்த போதும் தங்கள் மருந்துகளைத் தேவையான அளவு வழங்கவோ அவற்றின் விலைகளைக் குறைக்கவோ இப்பன்னாட்டு நிறுவனங்கள் முன்வரவில்லை.
சுதந்திரத்திற்குபின்பு
இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 1948ல் பலசலுகைகளை அறிவித்து இந்தியாவில் தொழில் தொடங்க அழைத்தது.
ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் சலுகைகளைப் பெறுவதற்காக இங்கு தங்கள் கிளைகளைத் துவக்கி மூலப்பொருள்களை இறக்குமதி செய்து மருந்து தயாரித்தார்களேயொழிய அடிப்படை மருந்துகளை இங்கு தயாரிக்கவோ தொழில்நுட்பத்தை இங்கு கொண்டுவரவோ எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
இதை உணர்ந்த அன்றைய மத்திய அரசு இந்திய மக்களின் சுகாதார மேம்பாட்டிற்கு பொதுத்துறைதான் ஒரேவழி என்று உலகசுகாதார நிறுவனம் (WHO) மற்றும் யூனிசெப் உதவியுடன் 1954ல் ஹிந்துஸ்தான் ஆண்டிபயோட்டிக்ஸ் (HAL) என்ற பொதுத்துறை நிறுவனத்தை புனேவில் தொடங்கியது.
இந்த நிறுவனம் (Maharastra anti biotics ) மற்றும் (Karnataka anti biotics Ltd ) ஆகிய இரண்டு துணைநிறுவனங்களை ஏற்படுத்தி மிகச்சிறப்பாக செயல்பட்டது. பிறகு சோவியத் ரஷ்யா உதவியோடு 1961-ல் ரிஷிகேஷிலும் , ஹைதராபாத்திலும் மற்றும் குர்கானிலும் இரண்டாவது பொதுத்துறை நிறுவனமான இந்தியன் டிரக்ஸ் அண்டு பார்மசூட்டிகல்ஸ் தொடங்கப்பட்டது. பின்னர் இந்த நிறுவனம் தங்கள் துணை நிறுவனங்களை சென்னை மற்றும் முசாபர்பூர் ஆகிய இடங்களிலும் விரிவுபடுத்தியது.
பெங்கால் கெமிக்கல்ஸ் அண்டு பார்மா சூட்டிகல்ஸ் என்ற நிறுவனத்தை 1977ல் இந்திய அரசு நாட்டுடைமை ஆக்கியது. இந்நிறுவனம் 1901 ல் ஆச்சாரியா பி.சி.ராய் அவர்களால் தொடங்கப்பட்டது.
கேரளா ஸ்டேட் ட்ரக்ஸ் அண்டு பார்மாசூட்டிகல்ஸ் என்ற நிறுவனம் 1974 ல் கேரள அரசால் ஆரம்பிக்கப்பட்டது.
நோய் தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்களான இமாச்சல் பிரதேசத்திலுள்ள கசௌலி என்னும் இடத்தில் சென்ட்ரல் ரிசர்ச் இன்ஸ்ட்டியூட் என்ற நிறுவனம் குன்னூரில் உள்ள பாஸ்டர் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா என்ற நிறுவனமும் சென்னை கிண்டியிலுள்ள பிசிஜி தடுப்பு மருந்து லெபாரட்டரி என்ற நிறுவனம் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் இந்திய மக்களுக்கு தேவையான அனைத்து மருந்துகளையும் தயாரித்து மிகக்குறைந்த விலையில் வழங்கி வந்தன.
இதை இன்னும் மேம்படுத்தும் விதமாக 1974 ல் இந்திய மக்களுக்கான ஒரு மருந்துக் கொள்கையை உருவாக்க ஜெய்சுக்லால் ஹாத்தி தலைமையிலான ஒரு கமிட்டியை அமைத்து. அந்தகமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் 1978 ல் இந்திய மருந்துக் கொள்கையும் 1979ல் மருந்து விலை கட்டுப்பாட்டுக்கொள்கையும் (DPCO)அறிவிக்கப்பட்டது.
மேலும் ஹங்கேரி முதலான சோவியத்நாடுகளின் உதவியால் ஏராளமான மருந்துக் கம்பெனிகள் இந்தியாவில் துவங்கப்பட்டன. இதனால் இந்திய மருந்துத் துறை மிகப்பெரிய வளர்ச்சி கண்டதோடு இந்திய மக்களின் சுகாதாரத்திலும் நல்ல முன்னேற்றத்தினை ஏற்படுத்தியது.
உலகமயக்கொள்கைகள்அமலாக்கத்திற்குபிறகு
1991 க்குப் பிறகு இந்திய அரசு கடைபிடித்த புதியபொருளாதாரக் கொள்கையினால் இந்தியப் பொதுத்துறை நிறுவனங்கள் படிப்படியாக செயலிழக்க ஆரம்பித்தன.
அதன் விளைவு பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் மருந்துகளின் விலைகளைப் பலமடங்கு உயர்த்திவிட்டன. மற்ற நிறுவனங்களின் மருந்துகளை வாங்குவது மற்றும் சிறிய நிறுவனங்களை வாங்குவது அல்லது தங்களோடு இணைத்துக் கொள்வது என்ற முறையின் மூலம் சில மருந்து நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் உருவெடுத்துள்ளது.
இன்று இந்திய மருந்துத்துறையின் உள்நாட்டு விற்பனை 11.8 சதமான வளர்ச்சியுடன் ரூ 85000 கோடியாகவும்ஏற்றுமதி 22 சதமானவளர்ச்சியுடன் ரூ95000 கோடியாவும் (2013-14) 10500 மருந்து தயாரிப்பு தொழிற்சாலைகளோடும் சுமார் 3000 மருந்து நிறுவனங்களோடும் உலக மருந்துத் துறையில் 3 வது மிகப் பெரிய நாடாக இந்தியா மாறியிருக்கிறது.
கடந்த மாதம் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட இந்திய பில்லியனர்கள் பட்டியலில் ஒரு மருந்து நிறுவன முதலாளி (சன்பார்மா ) திலிப் சாங்வி அவர்கள் 23.42 பில்லியன் டாலர் (இந்தியரூபாயில் 1,49,419 கோடி ) சொத்து மதிப்புகளோடு முதலிடம் பிடித்துள்ளார். இவர் 1983 ஆம்ஆண்டு 5 மருந்துகளும் 2 விற்பனையாளர்களுடன் குஜராத் மாநிலத்தில் தொடங்கப்பட்ட சன்பார்மா என்ற மருந்து நிறுவனத்தின் மூலம் இத்தைகைய வளர்ச்சியடைந்துள்ளார் இந்திய அரசின் உலகமயக் கொள்கை மருந்துத்துறையில் பொதுத்துறை நிறுவனங்களையும் , ஏராளமான சிறு நிறுவனங்களையும் கபளிகரம் செய்து மருந்துகளின் விலை உயர்வுக்கு வழிவகுத்து பன்னாட்டு மற்றும் இந்தியப் பெருநிறுவனங்களின் அசுரவளர்ச்சிக்கு உதவியுள்ளது.
இந்தியசுகாதாரம்
இந்திய மக்கள் தொகையில் சரிபாதிக்கும் மேல் ( 62 கோடிமக்கள்) கழிப்பறை வசதி கூட இல்லாமல் தினம் திறந்த வெளியில் மலம் கழிக்கின்றனர். இதன் மூலம் ஏற்படும் சுகாதார சீர்கேட்டால் நிமோனியா, டையேரியா போன்ற நோய்களினால் 5 வயதிற்குட்பட்டகுழந்தைகள்தினம் 5000 பேர் உயிரிழக்கிறார்கள்.
நலவாழ்வுக் குறியீட்டு எண்
(யுஎன்டிபி) (UNITED NATION DEVELOPMENT PROGRAMME )ன் 2014 ம் ஆண்டு அறிக்கையின்படி இந்தியா மனித நலவாழ்வுக் குறியீட்டில் பட்டியலிட்ட 187 நாடுகளில் 135 வதுஇடத்தில்உள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளிலும் இந்தியா கடைசி நிலையிலேயே உள்ளது. இதில் ரஷ்யா 57, பிரேசில் 79 , சீனா 81 மற்றும் தென் ஆப்ரிக்க நாடுகள் 118 வது இடத்திலும் உள்ளன.
கீழே குறிப்பிட்டுள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பிற்கு நிமோனியா, டையேரியா மற்றும் மலேரியா போன்ற நோய்களும் போஷாக்கின்மையும் முக்கியக் காரணமாகின்றன. இவற்றில் பாதிக்கு மேற்பட்ட இறப்பு தடுக்கக்கூடியது.
ஒன்று முதல் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைத்தல்
(Reduction of infant mortality rate )
வ.எண் ஆண்டு குழந்தைகள்இறப்புவிகிதம்குறைத்தல்
1 வயதிற்குட்பட்ட 5 வயதிற்குட்பட்ட
1 1970 முதல் 1980 15 சதம் 20 சதம்
2 1980 முதல் 1990 27 சதம் 36 சதம்
3 1990 முதல் 2000 10 சதம் 15 சதம்
மேலும் மேற்படி அட்டவணையில் குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் உலகமயக் கொள்கைகள் அமலாக்கப்படுவதற்கு முன்பு நல்ல முன்னேற்றம் கண்டது. பின்பு மேற்கூறிய கொள்கைகளினால் இறப்பு விகிதம் குறைப்பு என்பது 1990 முதல் 2000 ஆண்டுகளில் வெறும் 10 சதம் , 15 சதம் குறைப்பு என்ற அளவில் சுருங்கிவிட்டது.
இரத்தசோகை(Anaemia )
இரத்த சோகையினால் பேறுகாலத்தில் இறக்கும் இந்தியப் பெண்களின் சதவிகிதம் 20 முதல் 40 வரை உள்ளது. மேலும் உலகளவில் இந்த நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கையில் 50 சதமானத்திற்கு மேல் இந்தியாவில் நிகழ்கிறது என்பது மனசாட்சி உள்ள ஒவ்வொருவரையும் உலுக்கும் செய்தியல்லவா!
இரத்தசோகைபாதிப்பு
வளர்ந்தநாடுகள் 14 சதம்
வளரும்நாடுகள் 51 சதம்
இந்தியாவில்மட்டும் 65 முதல் 75 சதம்
தொற்று அல்லாத நோய்கள்
உலக சுகாதார நிறுவனத் (WHO)தின் சமீபத்திய ஆய்வறிக்கையின்படி இதய நோய்கள் நீண்டகால சுவாசமண்டலநோய்கள் , சர்க்கரை நோய் மற்றும் புற்று நோய் ஆகிய தொற்று அல்லாத நோய்களினால் இந்தியமக்களின் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் 60 சதமான மக்கள் இந்நோய்களினால் உயிரிழக்கின்றனர் என்றும் தெரிவிக்கின்றது.
சுகாதார செலவுகளும் அரசின்பங்கும்
மேற்கூறிய நோய்களினாலும் விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் மருந்துகளின் விலை உயர்வினாலும் இந்திய மக்களின் மருத்துவச்செலவுகள் நாளுக்குநாள் அதிகரித்திருக்கின்றன. மருத்துவத்திற்காக செய்யப்படும் செலவில் இந்தியாவில 78 சதமானத்தை மக்களே எதிர்கொள்கிறார்கள். இதுவே இலங்கையில் 53 சதம், தாய்லாந்தில் 31 சதம், பூடானில் 29 சதம், மாலத்தீவில் வெறும் 14 சதம்தான் மருத்துவப்பராமரிப்பிற்காக மக்கள் செலவிடும் ஒட்டுமொத்த செலவில் இந்திய அரசின் பங்களிப்பு சர்வதேச அளவில் மிகக்குறைவாக உள்ள மூன்றுநாடுகளில் இந்தியாவும்ஒன்று ஹைத்தியும், சியாராலியோலும் மற்ற இருநாடுகள். நம்மைப்போல் பெரும் மக்கள் தொகை கொண்ட சீனாவுடன் ஒப்பிட்டால் சீனஅரசு செலவிடுவதில் 4 ல் 1 பங்கையே இந்திய அரசு செலவிடுகிறது. இதன் விளைவு ஒவ்வொரு ஆண்டும் 3.9 கோடி மக்கள் மோசமான உடல்நிலை காரணமாக வறுமை நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இந்தியாவில் வறுமை காரணமாக கிராமங்களில் சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்களின் எண்ணிக்கை 1995 ல் 15 சதம் இதுவே 2004 ல் 30 சதமாக அதிகரித்திருக்கிறது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்காக நகர்புறங்களில் 31 சதம் பேரும் கிராமப்புறங்களில் 47 சதம் பேரும் கடன்வாங்குகிறார்கள் அல்லது உடைமைகளைவிற்கிறார்கள்.
அரசின்செயல்பாடு
இந்திய மக்களின் சுகாதாரமும் அவர்களின் வாழ்நிலைகளும் மேற்கூறிய நிலையில் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் அரசு பொது சுகாதாரத்திற்கான தன் பங்களிப்பை அதிகரித்து மருந்துகளின் விலைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு மாறாக நேர் எதிர்திசையில் செயல்படுகிறது.
ஒட்டுமொத்த சுகாதார செலவில் அரசின் பங்கு
வளர்ந்தநாடுகள் அரசின்பங்கு வளரும்நாடுகள் அரசின்பங்கு
1 இங்கிலாந்து 96 சதம் – எத்தியோப்பியா 36 சதம்
2 நார்வே 82 சதம் – பாகிஸ்தான் 23 சதம்
3 ஜப்பான் 80 சதம் – நைஜீரியா 28 சதம்
4 ஜெர்மன் 78 சதம் – இந்தியா 16 சதம்
5 பிரான்ஸ் 76 சதம்
6 கனடா 72 சதம்
7 ஆஸ்திரேலியா 70 சதம்
8 அமெரிக்கா 44 சதம்
அவற்றின்சிலமருந்துகளின்பட்டியல்
நோய்களின்வகை/மருந்துகளின்பெயர்/ பழையவிலை விலை/
கட்டுப்பாட்டை நீக்கியபின்பு
CANCER /Tab Glevec/ 8500/ 108000
CANCER /Tab Geftinate/ 5900/ 11500
CANCER/ Tab Veenat/ 8500/ 11500
BLOOD PRESSURE/ Tab Plavix/ 147/ 1615
ANTI BIOTICS Tab/ Taxim O/ 118/ 198
ANTI BIOTICS/ Augmentin/ 150/ 263
EYE DROPS/ Xalatan /450/ 1187
EYE DROPS /Xalacon/ 515 /1348
INJECTION /Albumin /3800 /5500
INJECTION /Anti D /2200/ 3500
INJECTION /Anti Rabis/ 2670/ 7000
மருந்துவிலைகட்டுப்பாட்டுஆணையம்(DPCO)
1979 மார்ச் 31 அன்று அத்தியாவசியமருந்துகளின் விலைகளை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான ஆணை (DPCO) பிறப்பிக்கப்பட்டது. ( ஹாத்திகமிட்டிபரிந்துரைபடி) இந்தஆணை 347 மருந்துகள் அடங்கிய பட்டியலைத் தயாரித்து (NLEM) அவற்றின் விலைகளை மேற்கண்ட அமைப்பு நிர்ணயித்தது. மேலும் மருந்துகளின் லாப விகிதம் கீழ்கண்டவாறு அறிவித்தது. உயிர்காக்கும் மருந்துகளின் லாபவிகிதம் 40 சதம் , அத்தியாவசிய மருந்துகளின் லாபவிகிதம் 55 சதம் பிறமருந்துகளின் லாபவிகிதம் 100 சதம் . மேலும் இந்த விலை நிர்ணயம் என்பது மருந்து உற்பத்திச் செலவின் அடிப்படையில் (cost based) நிர்ணயித்தது. இதனால் உலகத்திலேயே அதிகவிலையில் மருந்துகளைப் பெற்றுவந்த இந்திய மக்களுக்கு மிகக்குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் நாடாக இந்தியா மாறியது. ஆனால் பிறகு வந்த அரசுகள் தொடர்ச்சியாக இந்த விலைக் கட்டுப்பாட்டில் உள்ள மருந்துகளை ஒவ்வொன்றாக வெளியேற்றியது.
அதனால் மருந்துகளின் விலைகள் மீண்டும் உயர ஆரம்பித்தன. சில முற்போக்கு அமைப்புகள் மற்றும் இடதுசாரிகளின் தொடர்ச்சியான போராட்டத்தினாலும் உச்சநீதிமன்றத்தின் ஆணையினாலும் கடந்த காங்கிரஸ் அரசு மீண்டும் 347 மருந்துகளுக்கான பட்டியலை தயாரித்து அவற்றின் விலைகளைக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.
ஆனால் அவற்றின் விலை நிர்ணயம் என்பது முன்பு இருந்த உற்பத்திச் செலவின் அடிப்படையில்(cost based) என்பதை மாற்றி சந்தை விலையின் சராசரி என்று அறிவித்தது. அதாவதுசந்தையில் 1 சதமானத்திற்கும் அதிகமாக விற்பனையாகக் கூடிய மருந்து விலைகளின் சராசரி, உதாரணமாக் ’டைக்லொபெனாக்’ என்ற மருந்தினை வோவிரான் என்ற பெயரில் நோவார்ட்டிஸ் என்ற பன்னாட்டு நிறுவனம் ஒரு மாத்திரை ரூ 3.50 என்ற விலையில் விற்றது. இதேமருந்தை இந்தியபொதுத்துறை நிறுவனமான எச்ஏஎல் என்ற நிறுவனம் ஒருமாத்திரை 0.49 பைசா என்ற விலையில் விற்றுவந்தது. சந்தை விலையின் சராசரி என்ற முறையில் (3.50 + 0.49/ 2 ) ஒரு மாத்திரையின் விலை ரூ 2.00 என்று அரசு நிர்ணயித்தது. இதனால்வெறும் 0.49 பைசாவுக்குவாங்கியமருந்துரூ 2 கொடுத்துவாங்கும்நிலைஏற்பட்டது.
இதற்கு மேலும் இந்த மருந்துகளின் விலைகளை ஆண்டிற்கு ஒரு முறை ஏற்றிக்கொள்ளவும் வழிவகை செய்துள்ளது. மீண்டும் இடதுசாரிகளின் வலுவான போராட்டத்தினால் என்பிபிஏடிபிசிஓ(DPCO) வின் புதிய அவதாரம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மேலும் 108 மருந்துகளை மருந்து விலைக்கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வந்தது.
இந்த மருந்துகள் இரத்தஅழுத்தம், சர்க்கரை மற்றும் புற்றுநோய்களுக்கான மருந்தாகும்.
பிரதமர் திருநரேந்திரமோடி அவர்கள் மருந்து நிறுவனங்களின் அழுத்தத்தின் காரணமாக செப்டம்பரில்இந்த 108 மருந்துகளுக்கான விலைகட்டுப்பாட்டை நீக்கி உத்தரவிட்டார். அதோடு இது போன்ற(Appart From NLEM) மருந்துகளைவிலை கட்டுப்பாட்டில்கொண்டுவருவதற்கு என்பிபிஏவிற்கு இருந்த அதிகாரத்தையும் (பாரா 19 ) நீக்கிவிட்டார். (குதிரை கீழே தள்ளியதோடு குழியும் பறித்த கதையாக) இதன் விளைவு இனி எந்த மருந்தையும் விலைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடியாது. மேலும் நமது நாட்டின் காப்புரிமைச் சட்டத்தில் பிரிவு 3 டி என்பது இந்திய நாட்டு மக்களின் சுகாதாரத்தின் பாதுகாப்பு அரணாக இருந்தது. இதனைதிருத்துவதற்காக அமெரிக்க அரசோடு ஒரு இருதரப்பு உயர்மட்டக்குழு அமைப்பதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளார். ( நமது நாட்டுச் சட்டத்தை விவாதிக்கவும் திருத்தம் செய்யவும் அமெரிக்காவிற்கு அனுமதி) அரசின் மேற்கண்ட செயல்பாட்டினால் மருந்துகளின் விலைகள் பலமடங்கு உயர்ந்துவிட்டன.
மத்திய அரசு இந்திய மக்களின் சுகாதாரத்தை சீரழிக்கும் வேலையினைச் செய்து விட்டு தேசப்பிதா மஹாத்மாகாந்தி பிறந்த நாளில் ஸ்வட்ச்பாரத் ( தூய்மைஇந்தியா) என்றபெயரில் இந்தியாவின் சுகாதாரம் மீதும் இந்திய மக்களின் மீதும் மிகவும் அக்கறை கொண்டவர்கள் போல் காட்டிக்கொள்ளும் அரசு கடந்த பிப்ரவரியில் சமர்ப்பித்த இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் சுகாதாரத்திற்கான நிதியிணைக் கடந்த ஆண்டை விட (2014-15 ரூ35163 கோடி , 2015-16 29653 கோடி ) சுமார் 20 சதமானம் குறைத்து ஒதுக்கியிருப்பதிலிருந்து இவர்களின் கபட நாடகத்தைப் புரிந்துகொள்ளலாம்.
ஒருநாட்டின் வளர்ச்சிக்குப் படிப்பறிவுமிக்க ஆரோக்கியமான சமுதாயத்தைவிட வேறுஎதுவும் காரணமாகிவிட முடியாது. எனவே இந்திய மக்களின் சுகாதார உரிமைக்கான போராட்டமே இன்றைய காலகட்டத்தின் அவசியத் தேவையாகட்டும்