கிரீஸ் – சிரிசாவின்வெற்றிவிடுக்கும்செய்தி


ஐரோப்பிய அரசியல் களம் ஒரு புதிய நிகழ்வினை அரங்கேற்றியுள்ளது. ஜனவரி மாதம் நடந்த பொதுத் தேர்தலில் கிரீஸ் நாட்டு மக்கள் இடதுசாரி கண்ணோட்டம் கொண்ட சிரிசா என்ற அமைப்பினை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியுள்ளனர். நிதிமூலதனத்திற்கும் மக்களுக்கும் இடையே பல்வேறு வடிவங்களில் உலகின் பல இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதில் கிரீஸ் நாட்டு மக்கள் நிதிமூலதனத்தின் வலிமையினை எதிர்த்துப் போராடி அதன் அரசியல் ரீதியான தாக்குதலை சற்றே பின்னடைய செய்துள்ளனர் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக உள்ளது. சர்வதேச நிதிமூலதனத்தின் மேலாதிக்கத்தை எதிர்த்து சில லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள இடதுசாரி சக்திகள் தங்களின் இருப்பை உறுதி செய்துள்ளன. ஆனால், கிரீஸ் மக்கள் தங்கள் மீது ஐரோப்பிய கமிஷன், ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச நிதி நிறுவனம் (IMF) ஆகிய “டிராயிகா” எனப்படும் முக்கூட்டு “சிக்கன நடவடிக்கைகள்” என்ற பெயரில் தொடுத்த நிர்ப்பந்தங்களுக்கு எதிராக நேரடி போரில் இறங்கியதன் விளைவுதான் சிரிசாவின் வெற்றிக்கு அடித்தளமிட்டது. சிக்கன நடவடிக்கைகள் தொடர்பாக (முந்தைய) அரசு செய்து கொண்ட ஒப்பந்தங்களை கைவிட்டால் கிரீஸ் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரும் என்ற அந்த டிராயிகாவின் அச்சுறுத்தலை தூக்கி எறிந்து கிரீஸ் மக்கள் சிரிசாவை தேர்ந்தெடுத்துள்ளனர். அலெக்சிஸ் சிப்ராஸ் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

சிக்கன நடவடிக்கைகளின் விளைவுகள்

கிரீஸ் நாட்டின் பொருளாதாரம் கடன் வலையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. பொருளாதார மந்தம் நாட்டை கவ்விப் பிடித்திருக்கிறது. ‘சிக்கனம்’ பொது சுகாதாரத்தை சீரழித்தது; மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதற்கு ஒதுக்கீடு 6 சதவிகிதம் என குறைந்தது. கிரீஸின் சுகாதார அமைச்சர் அதற்கான நிதி ஒதுக்கீடு “அறுவை சிகிச்சைக்கான கத்தியால் வெட்டப்படவில்லை, கசாப்புக் கடைக்காரர் கத்தியால் வெட்டப்பட்டது” என்றார்; அதன் உடனடி விளைவு, நோய் பாதுகாப்பு வசதிகள் குறைந்தன; வேலைக்கு தகுதி பெற்ற இளைஞரிடையே வேலை வாய்ப்பின்மை 50 சதவிகிதம் என உயர்ந்தது; தனியார் துறையில் உழைப்போரின் சராசரி ஊதியம் 16 சதவிகிதம் குறைந்தது; கடந்த 5 ஆண்டுகளில் 19 சதவிகிதம் வேலை இழப்பு பதிவு செய்யப்பட்டது. 2010லிருந்து 2014 வரை கிரீஸ் நாட்டின் பொருளாதார நெருக்கடியினை சமாளிக்க அந்நாடு வாங்கிய கடன் 240 பில்லியன் ஈரோ (சுமார் 270 பில்லியன் டாலர்). அக்கடனில் 10 சதவிகிதம்தான் மக்களின் தேவைக்காக செலவிடப்பட்டது, 90 சதவிகிதம் முன்பே வாங்கிய கடனை திரும்பிக் கொடுக்கும் தவணைகளுக்கும் அதற்கான வட்டிக்கும் செலவிடப்பட்டன. இந்த நிலையிலிருந்து மீள்வதற்கு ஜனநாயக முறையில் மக்கள் தெரிவு செய்த முடிவுதான் சிரிசாவை ஆட்சிப் பொறுப்பில் வைத்திருக்கிறது.

சிரிசாவின் அறிவிப்புகள்

பிப். 8ந் தேதி கிரீஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் அரசின் கொள்கையினை அறிவித்தார். சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான பொருளாதார வேலைத்திட்டம் உருவாக்கப்படும் என்றார். எடுக்க விரும்பும் சில நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைக் கேட்டார். நிறுத்தி வைக்கப்பட்ட ஓய்வூதியத்தை திரும்ப அளிப்பதற்கும், வருமான வரி விலக்குக்கான வரம்பினை 5000 ஈரோவிலிருந்து 12000 ஈரோவாக உயர்த்தவும், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு உணவு மான்யம் வழங்கவும் ‘பொதுச் செலவினங்கள் குறைப்பு’ என்ற சிக்கன நடவடிக்கையின் விளைவாக வேலை இழந்த 3500 அரசு ஊழியர்களை மீண்டும் வேலையில் அமர்த்தவும், தனியார் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாதாந்திர ஊதியத்தை 586 ஈரோவிலிருந்து 751 ஈரோவாக (2011ல் இருந்தது) உயர்த்தவும் ஒப்புதல் கேட்டார். மேலும், தொழிலகங்களில் கூட்டு பேர முறையினை மீண்டும் கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்படுவதாக அறிவித்தார்.

கிரீஸ் தொடர்ந்து ஈரோ மண்டலத்தில் உறுப்பினராக இருக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்தது. சிப்ராஸ் தன் உரையில் “ஈரோ மண்டலத்தின் செயல் விதிகளை மதிக்கும் தேசிய மறுகட்டமைப்புக்கான இடைக்கால திட்டம் முன்வைக்கப்படும்” என்றார். ஆனால், பொருளாதாரத்தில் சிக்கன நடவடிக்கைகள் அடிப்படையில் ஏற்பட்ட மந்த நிலையினை கொண்டு வந்த வெளிநாட்டு நிர்பந்தங்களை அவர் கண்டனம் செய்யவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கிரீஸ் ஈரோ மண்டலத்தில் தொடர்ந்து இருக்க வேண்டுமென்பது ஐரோப்பிய யூனியனின் பொறுப்புக்கு உட்பட்டது என்று கூறினார். ஐரோப்பா தனது “கடந்த கால இருட்டிலிருந்தும் இரக்கமற்றவர்களின் யுக வாழ்க்கையிலிருந்தும்” வெளியே வரவேண்டும் என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்.

கிரீஸ் மக்களின் முன் ஒரு கேள்வி எழுகிறது. ஐரோப்பிய யூனியன் கடந்த கால இருட்டிலிருந்து வெளி வருமா? என்பதுதான். உதாரணத்திற்கு ஒரு நிகழ்வினைக் கூறலாம். ஐரோப்பிய யூனியனோடு, குறிப்பாக ஜெர்மனியோடு கிரீஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. ஜெர்மனியின் நிதிமூலதனம்தான் கிரீஸின் பொருளாதாரத்தில் பிரதான இடத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. கிரீஸ் ஒரு கோரிக்கையினை வைத்தது. இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலத்தில் கிரீஸ் ஜெர்மனியின் கட்டுப்பாட்டுக்கள் இருந்தது. நாஜிக்களின் கொடுமையினையும் பொருளாதார சுரண்டலையும் கிரீஸ் சந்தித்தது. இப்பொழுது ஜெர்மனி அதற்கான இழப்பீட்டினை கிரீசுக்கு கொடுக்க வேண்டும் என கிரீஸ் கோரியது. கிரீஸ் அமைத்த விசாரணைக் கமிஷன் போர் நடந்தபோது கிரீஸ் நாஜி ஜெர்மனிக்கு கொடுத்த கடன், வட்டி, பொருளாதார இழப்புக்கான ஈடு – இன்றைக்கு அதன் மதிப்பு 160 பில்லியன் ஈரோ – ஆகியவற்றை திருப்பித்தர வேண்டும் என்று கேட்டது. மேலும், தற்போது கிரீஸ் வாங்கியிருக்கும் கடன் சிலவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் திருப்பித்தரும் கால அட்டவணையினை நீட்டிக்க வேண்டும் என்றும் கிரீஸ் கோரியது. வரலாற்றில் அம்மாதிரி முடிவுகள் எடுக்கப்பட்டதும் உண்டு. இரண்டாம் உலகப் போருக்கு பின் அப்படி முடிவுகள் எடுக்கப்பட்டதால்தான் ஜெர்மனியின் பொருளாதாரம் பெரும் அழிவிற்குப் பிறகு இன்றைய உயர்நிலையினை அடைய முடிந்திருக்கிறது. அமெரிக்கா பிரிட்டனுக்கு அந்த காலத்தில் கொடுக்கப்பட்ட கடனை கீன்ஸ் போன்ற பொருளாதார நிபுணர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக திரும்ப கொடுப்பதற்கான காலம் தள்ளி வைக்கப்பட்டது; பிரிட்டன் பொருளாதாரம் குறிப்பிட்ட அளவு உயர்ந்தவுடன் கடனை திருப்பிக் கொடுக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது. ஜோசப் ஸ்டிக்லிட்ஜ் போன்ற பொருளாதார அறிஞர்கள் இந்த முன்மாதிரி நிகழ்வுகளை சுட்டிக்காட்டி கீரிசுக்கு உதவ வேண்டும் என்றும், ‘சிக்கன நடவடிக்கைகள்’ என்ற நிர்ப்பந்தத்திலிருந்து கிரீஸ் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால் ஜெர்மன் அரசு அந்த கோரிக்கையினை நிராகரித்தது. சிரிசா இன்றைய மோசமான பொருளாதார நிலையினை சமாளிக்க சில முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கிரீசின் கோரிக்கைகளுக்கான ஆதரவு பெருகி வரும் சூழலில், கிரீஸ் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதுதான் கேள்வி.

அளவுக்கு மீறிய கடனை திருப்ப முடியாமல், கிரீஸ் ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேறுமேயானால் என்ன நடக்கும்? ஒன்றுபட்ட ஐரோப்பா என்ற கோட்பாட்டினை சில ஆண்டுகளாக பேணி பாதுகாத்து வந்தது கடுமையான சோதனைக்குள்ளாக்கப்படும். மக்களின் நலன்களை முன்னிறுத்தியதற்கு கிரீஸ் பாராட்டுக்களை பெறும் என்பதோடு, ஐரோப்பாவில் அதன் தாக்கம் பரவும். சிரிசாவின் கண்ணோட்டத்தையே கொண்டிருக்கும் ஸ்பெயினில் உள்ள இடதுசாரி போடேமாஸ் கட்சி அதன் செயல்பாட்டின் வேகத்தை அதிகரிக்கும் நிலை உள்ளது. ஐரோப்பிய யூனியனில் உள்ள ஜெர்மனி போன்ற நாடுகள் இந்த நிலை உருவாவதை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. சிரிசாவின் நிலை என்ன?

சிரிசாவின் செயல்பாடு

பதவியேற்றவுடன் சிரிசா கடந்த கால ஒப்பந்தங்களை நிரகாரிக்க வேண்டும், “சிக்கன நடவடிக்கைகள்” கைவிடப்படும் என்ற வாக்குறுதிகளின் அடிப்படையில் தான்அதை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். கிரீசில் நிலவும் அரசியல் சூழலில் ஒரு முரண்பாடான நிலையினை சிரிசா சந்திக்க வேண்டியுள்ளது. கிரீஸ் மக்கள் ஒரு பக்கம் சிக்கன நடவடிக்கைகள் நீக்கப்பட வேண்டுமென விரும்புகின்றனர்; மறுபக்கம் ஐரோப்பிய யூனியனில் கிரீஸ் தொடர்ந்து இருக்க வேண்டுமென்ற கருத்தையும் கொண்டுள்ளனர். இந்த இரண்டு அம்சங்களை எடுத்துக்கொண்டு தான் சிரிசா செயல்பட வேண்டும். சிரிசா ஒரு இணைப்பு செயல்திட்டத்தை முன்வைத்து ஐரோப்பிய யூனியனுடன் (ஐ.யூ) பேச விரும்பியது; அதன்படி எந்த நிபந்தனைகளையும், ஆய்வுகளையும் (கிரீசின் பொருளாதாரத்தை ஆய்வு செய்யும் நிதி மூலதனத்தின் செயல்), கிரீஸ் ஏற்றுக் கொள்ளாது; அந்த இணைப்புத் திட்டத்திற்கு மாறும் காலகட்டத்தில் கிரீஸ் அதன் நிதிக் கொள்கையினை முன்வைத்து கடன்களை மறுகட்டமைப்புக்கு உட்படுத்தி அதை குறைப்பதற்கான திட்டங்களை முன்வைக்கும். இதை ஐ.யூ எப்படிப் பார்க்கிறது? ஜெர்மனியின் நிதியமைச்சர் உல்பாங்ஷாபில் “கிரீஸ் பேசுவது முந்தைய தொடர்புகளை முடிவுக்கு கொண்டு வரும் இணைப்பு திட்டமல்ல, உண்மையில் அவைகளை நீடிக்கச் செய்யும் முயற்சி” என்கிறார். பிப்ரவரி 20ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி கிரீஸ் ஒப்புக் கொண்ட அம்சங்கள்: டிராயிகாவின் ஆய்வுகள் தொடரும், முன்பே ஒப்புக் கொண்டவைகளும், நிபந்தனைகளும் நீடிக்கும், திரும்பக் கொடுப்பதாக ஒப்புக் கொண்ட கடன் தவணைகள் கொடுக்கப்படும், டிராயிகாவின் சாதகமான ஆய்வுகள் இருந்தால், கிரீஸ் பணப்பத்திரங்களால் ஐரோப்பிய கமிஷன் வங்கி அடைந்த லாபம் 1.9 பில்லியன் ஈரோ கிரீசுக்கு திரும்ப கொடுக்கப்படும், கிரீசின் உடனடி பணத் தேவைக்கான ஏற்பாடுகள் பற்றி தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்றாலும், ஐரோப்பிய கமிஷன் வங்கிதான் முடிவில் அதை தீர்மானிக்கும், மிகை நிதிதான்  கிரீஸ் கடன் திரும்ப செலுத்துவதை தீர்மானிக்கும், அதாவது கடனை குறைப்பதோ, மறுகட்டமைப்புக்கு உட்படுத்துவதோ அதைப் பொறுத்து இருக்கும்.

கிரீசுக்கு என்ன கிடைத்தது? மிகை நிதி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை; ஓய்வூதியம் குறைக்கப்பட வேண்டும் என்றும் மதிப்புக் கூட்டுவரி அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் உள்ள டிராயிகாவின் முந்தைய நிபந்தனை வற்புறுத்தப்படாது; அதன் நிதிநிலை ஒருங்கிணைப்பு கெடாத வகையில் பொருளாதார நடவடிக்கைகளை கிரீஸ் எடுக்கலாம். இதன் பொருள் என்ன? டிராய்காவின் மேலாதிக்கப் போக்கு நிராகரிக்கப்பட வேண்டும் என்ற பொதுவான மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லை. கிரீஸ் தன்னுடைய நிதிநிலையினை ஒருங்கிணைத்து செயல்பட இன்றைய கடினமான சூழலிருந்து விடுபட சற்றே வழி திறக்கப்பட்டிருக்கிறது, டிராய்கா நிறுவனங்கள் கிரீசுக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுத்திருக்கின்றன.

பிப்ரவரி 20 ஒப்பந்தம் விடுக்கும் செய்தி

கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சியும், சிரிசாவின் கணிசமான பகுதியினரும் இந்த ஒப்பந்தம் சிரிசாவின் தேர்தல் கால வாக்குறுதிகளின் கீழிறக்கம் என்று கருதுகிற்னர். மானலிஸ் கிளெஜோஸ் – நாஜிப் படையினை எதிர்த்து போராடிய வீரர், 1941ல் கிரீசின் அக்ரோ பொலீஸ் கட்டிடத்தில் ஏறி நாஜிக்களின் ஸ்வன்திகா கொடியினை கிழித்தெறிந்ததற்காக மரண தண்டனை பெற்றவர், இவருக்கு மரியாதை செலுத்தும் முறையில் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டு சோவியத் யூனியனின் போற்றுதலை பெற்றவர், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சிரிசாவின் உறுப்பினராக உள்ள 92 வயதான இவர், டிராய்காவின் மேலாதிக்கத்தை முறியடித்து புதிய அமைப்பை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியினை முன்வைத்த சிரிசா அதிலிருந்து பின்வங்கியதற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டார். மறுபக்கத்தில் பால் க்ருக்மன் போன்ற பொருளாதார அறிஞர்கள் அந்த ஒப்பந்தம் ஆரோக்கியமான வளர்ச்சிப் போக்கு என்றும் சிரிசா எடுத்திருக்கும் முடிவு நாட்டை முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிரிசா மிகவும் கடினமான சூழலை சந்திக்கிறது. கிரீசிலிருந்து மூலதனம் வெளியேறுகிறது. நம்பிக்கை அளிக்கும் வாக்குறுதிகள் இல்லையென்றால் கிரீஸ் வங்கிகள் நெருக்கடியில் மாட்டிக் கொள்ளும், மூலதன வெளியேற்றத்தை சிரிசா கட்டுக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும்; அதை செய்தால் ஐரோப்பிய யூனியன் உறுப்பினர் என்ற நிலையை இழக்க வேண்டியிருக்கும். அது, முன்பே குறிப்பிட்டது போல், மக்களின் மனநிலையை ஒத்ததாக இருக்க முடியாது. இந்த நிலையில் அந்த ஒப்பந்தம் சிரிசா வெற்றிகரமாக மேற்கொண்ட போர் நிறுத்த உடன்படிக்கை  என வாதிடப்படுகிறது; சிரிசாவுக்கு மூச்சுவிட காலம் கிடைத்திருக்கிறது. தேர்தல் கால வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் காலம் தூரத்தில் இருந்தாலும் சுமார் 4 மாதம் (பிப்ரவரி 20 ஒப்பந்தப்படி மாற்றத்திற்கான கால அவகாசம்) கடன் கொடுத்த அமைப்புகளை பேச்சுவார்த்தையில் நிறுத்தி வைக்க முடியும்.

கவலை தரும் அம்சங்கள்

ஒரு இடதுசாரி அரசை துவக்கத்திலேயே குற்றம் சாட்டுவது முறையாக இருக்க முடியாது. ஆனாலும் சில கவலை தரும் அம்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஆட்சிப் பொறுப்பில் சிரிசாவுடன் வலதுசாரி கட்சியான ஏனெல் பங்கேற்றிருப்பது கவலை தரும் அம்சமாகும். அது நடைமுறை உத்தி என சிரிசா வாதிட்டாலும் அது முரண்பட்ட அமைப்புகள் சேர்ந்திருக்கும் சந்தர்ப்பவாத கூட்டணி என்ற கருத்து வலுவாக உள்ளது.

ஒப்பந்தத்தில் உள்ள கடுமையான பகுதிகளை எந்த சூழலில் ஏற்க வேண்டிய அவசியம் உள்ளது என்பதை நேரடியாக மக்களிடம் சென்று சிரிசா விளக்கியிருக்க வேண்டும்; மாறாக, அதை மிகப்பெரிய வெற்றி என்று பிரதமர் உட்பட அனைவரும் பிரகடனம் செய்வது வரவேற்கத்தக்க செயல் அல்ல.

ஜெர்மன் நிதிமூலதனத்தோடு மோதாமல் சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவது எளிதான காரியமல்ல என்பது சிரிசாவுக்கு நன்றாக தெரியும். அமெரிக்கா, சிரிசா ஐரோப்பிய யூனியனிடமிருந்து வேண்டியதை பெற தன்னால் முடியும் என்ற கருத்தை சிரியாவிடம் விதைக்க முயல்கிறது; அதன் நோக்கம் புடினின் ரஷ்யா பக்கம் சிரிசா சாய்வதை தடுப்பது தான்.

சிக்கன நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும் என்றால் ஐரோப்பிய யூனியனிலிருந்து கிரீஸ் வெளிவர வேண்டும் என்ற நிலைக்கு மக்கள் தயாராக வேண்டும். அது மட்டும் போதுமானதல்ல. அந்த நிலையினை எதிர்கொள்வதற்கான மாற்று ஏற்பாடுகள், செயல் திட்டங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். சர்வதேச அளவில் நிதி உதவி பெறுவதற்கான, குறிப்பாக ஜெர்மனியின் நிதிமூலதனத்தின் மீது நிர்ப்பந்தம் கொடுக்கக் கூடிய, புதிய வழிமுறைகளை உடனடியாக ஒப்பந்தம் கொடுக்கும் கால இடைவெளியில் கண்டறிதல் வேண்டும்.

சிரிசா ஐரோப்பாவின் பொதுக்கருத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும்; இடதுசாரி சக்திகளோடு நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டு போராட்ட வியூகங்களை உருவாக்க வேண்டும்; ஸ்பெயின் ஒரு தேர்தலை நோக்கி இருக்கும் போது அங்கே அம்மாதிரியான தொடர்புக்கு அதிக சாத்தியக்கூறு உள்ளது. அத்தகையதொரு செயல்திட்டத்தை பிரச்சனையின் ஆழத்தை அதன் அனைத்து அம்சங்களிலும் பரிசீலிக்கும் தன்மையினைக் கொண்ட ஒரு அரசால் மட்டுமே கொண்டு வர முடியும். பிப்ரவரி 20 ஒப்பந்தத்தை மிகப் பெரிய ‘வெற்றி’ என்று கொண்டாடும் அரசால் முடியாது.

உள்நாட்டு பணக்காரக்குழுக்களை நேரில் எதிர்கொள்ள தயாராக வேண்டும்; அவர்களின் வரி ஏய்ப்புக்களையும் லஞ்ச லாவண்யங்களையும் அம்பலப்படுத்த வேண்டும். அதற்கான அரசியல் உறுதியினை சிரிசா பெற்றிருக்கிறதா?

கிடைத்திருக்கும் கால இடைவெளியில் “சிக்கன நடவடிக்கைகளை” மாற்றுவதற்கான செயல்முறைகளை உடனடியாக உருவாக்க வேண்டும். குறிப்பிட்ட சூழலில் எந்த இடதுசாரி அரசுகளுக்கும் அம்மாதிரியான ஒப்பந்தங்களில் இணைவது தவிர்க்க முடியாததாக இருக்கக் கூடும். ஆனால் அதைத் தொடர்ந்து என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது தான் முக்கியம். தற்போது சிரிசாவின் போக்கு உற்சாகமளிப்பதாக இல்லை.

சிரிசா ஒரு பரிசோதனை களம் தான். கிரீசுக்கு மட்டுமல்ல, ஐரோப்பாவுக்கு மட்டுமல்ல, எங்கெல்லாம் இடதுசாரிகளின் தோல்வியில் வலதுசாரிகளின் வெற்றி சாத்தியமாக்கப்படுகிறதோ அங்கு சிரிசா அனுபவம் முக்கியம் வாய்ந்ததாக இருக்கக் கூடும். உலகம் முழுமையும் புதிய தாராளமயத்தை எதிர்த்து போராடும் இடதுசாரி சக்திகளுக்கு இது முக்கியத்துவம் கொண்டது தான். அதனால் தான் கிரீசின் இடதுசாரி சக்திகள் தேர்தல் கால வாக்குறுதிகளை கைவிட்டு ஜெர்மானிய நிதிமூலதனத்திடம் சரணாகதி அடையாமல் தடுப்பதற்கு மக்களைத் திரட்டி போராட அணிவகுத்து வருகின்றன.

 

One thought on “கிரீஸ் – சிரிசாவின்வெற்றிவிடுக்கும்செய்தி

Comments are closed.