மார்க்சிஸ்ட் கட்சி துடிப்புடன் எழுச்சி பெற கட்டியம் கூறும் அரசியல் தீர்மானம்


இடதுசாரிகள் இந்தியாவுக்குப் பொருத்தப்பாடு அற்றவர்களாகி விட்டார்கள் என்று வண்டி வண்டியாக எழுதிக் களைத்தவர்களுக்கு, பொதுசெயலாளர் பொறுப்புக்குப் போட்டி என்று மாநாடு நடந்த அத்தனை நாட்களும் தினம் தினம் பேசி மகிழ்ந்தவர்களுக்கு மாநாட்டு விவாதங்களும், தீர்மானங்களும், ஏகமனதான தேர்வுகளுமே பதிலடியாக அமைந்து விட்டன.

அரிவாளும் சுத்தியலும் தடுத்து நிறுத்தும் !

சமூக வலைத்தளங்கள் விடுவதாயில்லை. மார்க்சிஸ்ட் கட்சிக்கு இறுதிச்சடங்கு செய்யும் பொறுப்பு யெச்சூரிக்கு அளிக்கப் பட்டிருக்கிறது என்று ஒரு பதிவு; மூழ்கிக் கொண்டிருக்கும் டைட்டானிக் கப்பலுக்குக் கேப்டனாக யெச்சூரி நியமிக்கப் பட்டிருக்கிறார் என்று மற்றொரு பதிவு. நிதானமாகவே பதிலளித்தார் புதிய பொது செயலாளர் தோழர் யெச்சூரி. “21வது மாநாடு எதிர்காலத்திற்கானதாகும். கட்சியின் எதிர்காலம் மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலமும் இதனுடன் இணைந்ததே. நம்மால் போராட முடியும், வெற்றி பெறவும் முடியும்” என்பதே அவரது உரையின் அழுத்தம். நவீன தாராளமயமும், மத வெறியும் அஸ்வமேத யாகக் குதிரைகளாக இறுமாந்து ஓடும் போது, அவற்றை அரிவாளும் சுத்தியலும் நிறுத்தும், தடுக்கும் என்ற யெச்சூரியின் வார்த்தைகள், தோழர்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்காக மட்டும் சொல்லப் பட்டதல்ல, அது உலகத்தின் அறிவியல்பூர்வ நிதர்சனம்.

கம்யூனிஸ்டுகள் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்பன போன்ற செய்திக் குறிப்புகளுக்கு மத்தியில் தெளிவான திசை வழியைக் காட்டும் அரசியல் தீர்மானம், அனைத்து மாநிலங்களையும் சார்ந்த 44 தோழர்களின் விவாதத்துக்குப் பின் எந்தக் குழப்பமும் இன்றி ஒரு மனதாக நிறைவேற்றப் பட்டது. இதை நடைமுறையாக்கும் திறன் வாய்ந்ததாக ஸ்தாபனத்தை ஆக்குவதற்கு இவ்வருட இறுதிக்குள் ஸ்தாபன சிறப்பு மாநாடு (plenum) நடத்துவது என்றும் தீர்மானிக்க பட்டுள்ளது.
தோழர்களின் விவாதம் பொதுவாக நகல் தீர்மானத்தை வழி மொழிந்தே அமைந்திருந்தது. நவீன தாராளமயக் கொள்கைகளும், வகுப்புவாதமும் தொடுக்கும் தாக்குதலை அவரவர் மாநிலத்தில் போராட்டங்களின் மூலம் எப்படி எதிர்கொண்டனர் என்ற அனுபவப் பகிர்வும் இருந்தது.

தேவை அரசியல் மாற்று !
சோஷலிசம் பொருத்தமல்ல, முதலாளித்துவமே எல்லாவற்றையும் சாதித்து விடும் என்ற பொய் தினசரி உற்பத்தி செய்யப்படும் சூழலில், உண்மையில் முதலாளித்துவம் நெருக்கடிகளுக்கு மத்தியில் எப்படி விழி பிதுங்கி நிற்கிறது என்பதை அரசியல் தீர்மானம் அழகாய் விளக்குகிறது. 2007-08 கால கட்டத்தில் உருவான உலக நிதி நெருக்கடியிலிருந்து முதலாளித்துவம் இன்னமும் மீளவில்லை. ஆங்காங்கு சிறிய அளவில் உற்பத்தி மீட்சி ஏற்பட்டாலும் வேலையின்மை நெருக்கடி சிறிதளவும் குறையவில்லை. மாறாகத் தீவிரமடைந்துள்ளது. கொஞ்ச நஞ்ச மீட்சியும் திடகாத்திரமாக இல்லை, கீறல் விழுந்தாலே நொறுங்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இவர்களே உருவாக்கிய நெருக்கடியைத் தீர்க்க, உழைக்கும் மக்களின் தலையில் சுமைகளைத் தூக்கி வைக்கின்றனர். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் மக்கள் பிழியப் படுகின்றனர். இக்கொடுமைகளை எதிர்த்து மக்கள் பெரும் திரளாகத் தெருவில் இறங்கிப் போராடுவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இருப்பினும், இப்போராட்டங்கள் ஓர் அரசியல் மாற்றை உருவாக்கும் தன்மை கொண்டதாக மாறினால் தான், அடுத்த கட்டத்துக்குப் போக முடியும் என்று தீர்மானம் பதிவு செய்கிறது.

இப்பின்னணியில் கிரீசில் சிரிஸா என்ற இடதுசாரி அமைப்பு ஆட்சிக்கு வந்திருப்பது வரவேற்புக்குரியதாகும். நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றும் கட்சிகளை நிராகரித்து, மக்கள் சிரிஸாவைத் தேர்வு செய்துள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சியும் தன் வாக்கு பலத்தை உயர்த்தியிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி, சிரிஸாவுக்கு ஆதரவு அளிக்காததால், ஒரு வலதுசாரிக் கட்சியின் உதவியுடன் சிரிஸா அரசு அமைத்திருக்கிறது. கடன் வலை, சிக்கன நடவடிக்கையின் தாக்கம் போன்றவற்றை இது எப்படி எதிர்கொள்கிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஸ்பெயினிலும் ஒரு புதிய அமைப்பு உருவாகியிருக்கிறது. இது, தன்னை இடதுசாரி என்று அழைத்துக் கொள்வதில்லை. மேலே இருக்கும் மேட்டுக் குடியினருக்கும் கீழே இருக்கும் பாமர மக்களுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளில் தலையீடு செய்கிறோம் என்று கூறுகிறது. இருப்பினும் இது ஒரு புதிய வளர்ச்சிப் போக்கு. என்ன விளைவுகள் ஏற்படும் என்று பார்க்க வேண்டும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. அது அரசியல் மாற்றாக அமைய வேண்டும் என்பதைத் தான் தீர்மானம் அழுத்துகிறது.
மேலாதிக்கத்தை நிலை நிறுத்தும் அமெரிக்க முயற்சிகள்
ஏகாதிபத்திய நாடுகளின் தலைவரான அமெரிக்காவைப்பற்றிய மதிப்பீடும் தீர்மானத்தில் மையமாக இடம் பெறுகிறது. அதன் பொருளாதார ஆதிக்கம் சற்று பலவீனம் அடைந்த சூழலில், அதன் மேலாதிக்கத்துக்கு சவால்கள் உருவாகின்றன. அவறை எதிர்கொள்ள ராணுவ தலையீட்டை முதன்மைப் படுத்துகிறது. அரசியல் ரீதியாகவும், தனது தொழில்நுட்ப முதன்மை நிலை, நிதி அமைப்புகளின் மீது கட்டுப்பாடு, டாலர் உலகப் பண பரிமாற்றத்தில் செலுத்தும் பங்கு இவற்றை வைத்தும் சமாளிக்கிறது. டாலரின் ஆதிக்கத்தை எதிர்த்து சில மாற்று ஏற்பாடுகளும் சில நாடுகளால் செய்யப் பட்டு வருகின்றன.
அதே போல் இக்காலத்தில் மேற்கு ஆசியாவைத் தன் ஆதிக்கத்தில் கொண்டு வர அமெரிக்க ஏகாதிபத்தியம் எடுத்த முயற்சிகள், அது விரும்பும் பலனை அளித்ததாகக் கூற முடியாது. ராணுவ தலையீடுகளுக்குப் பின்னரும், அமெரிக்காவுக்குத் தோதான ஆட்சியை அங்குள்ள நாடுகளில் அமர்த்துவதில், ஒரு நிலையான தன்மையை உருவாக்குவதில் அது வெற்றி அடையவில்லை. சில இடங்களில் விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கிறது, பின் வாங்க வேண்டியிருக்கிறது. அமெரிக்க தலையீட்டின் விளைவாக உருவான இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் கை மீறிப் போன சூழலில், அவற்றை அடக்குவதற்கு என்ற பெயரில் இரண்டாம் சுற்று ராணுவ தலையீடுகளை செய்யத் துவங்கியிருக்கிறது அமெரிக்கா. உக்ரேனிலும் ரஷ்யாவின் கடும் எதிர்ப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்த அமெரிக்க ரஷ்ய மோதலை ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையிலான முரண்பாடு என்று சொல்லலாமா என்ற கேள்வி எழுகிறது. சில ஐரோப்பிய கம்யூனிஸ்ட் கட்சிகள் இவ்வாறு மதிப்பீடு செய்கின்றன. மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரை ரஷ்யாவை முதலாளித்துவ நாடாகத் தான் தற்போது நிர்ணயிப்பு செய்துள்ளது. ஏகாதிபத்தியமாக அல்ல. எனவே, இதை முதலாளித்துவ நாடுகளுக்கிடையிலான மோதலாக வரையறுப்பது தான் சரி.
அமெரிக்காவின் ஆதரவில் இஸ்ரேலின் நேதன்யாகு அரசு, கடும் வலதுசாரிப் பாதையில் செல்லுகிறது. பாலஸ்தீனத்தைப் பற்றிப் பேசக் கூட மறுக்கிறது. இச்சூழலில் பாலஸ்தீனத்துக்கான ஆதரவு குரல் முன்னை விட உரத்து ஒலிக்க வேண்டுமென்று மாநாடு கவனப்படுத்தியுள்ளது. தற்போது அமெரிக்கா, தனது கவனத்தை ஆசிய பகுதிக்குத் திருப்பி இருக்கிறது. சீனாவின் வளர்ச்சி பெரும் உறுத்தலாக உருவெடுத்திருப்பதை சமாளிக்க அமெரிக்கா வகுக்கும் வியூகத்தில் இந்தியாவை முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானித்துள்ளது. எனவே, இம்முயற்சிகளை எதிர்த்து, வரும் காலத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்புக் குரலை வலுப்படுத்தும் சர்வ தேசக் கடமையை நாம் செவ்வனே செய்ய வேண்டியுள்ளது.
பொதுவாக அமெரிக்காவின் ஒரு துருவ உலகுக்கு மாறாக, பல துருவ உலகை நோக்கிய முயற்சிகள் அதிகரித்து வருவது இக்கால கட்டத்தின் ஆக்கபூர்வ போக்காகும். ஆங்காங்கே நாடுகளுக்கிடையே பிரதேச ரீதியான ஒத்துழைப்பு, லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி அரசாங்கங்கள், கியூபாவின் மீதான பொருளாதாரத் தடை அகற்ற அமெரிக்கா ஏற்பு என்று பல உதாரணங்களைத் தீர்மானம் சுட்டிக் காட்டுகிறது. பிரிக்ஸ் நாடுகள் உருவாக்கியிருக்கும் புதிய வளர்ச்சி வங்கி, சீனா உருவாக்கி ரஷ்யா உள்ளிட்ட 57 நாடுகள் இணைந்திருக்கும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி போன்றவையும் குறிப்பிடத் தகுந்தவையாகும். அமெரிக்க நாடுகளின் உச்சி மாநாட்டில் முதன் முறையாகக் கியூபா கலந்து கொண்டிருக்கிறது. லத்தீன் அமெரிக்காவுடன் ராஜிய உறவை வலுப்படுத்தும் அமெரிக்க நோக்கமும், கியூபாவுடன் சகஜ நிலைக்குத் திரும்பும் முயற்சிக்குப் பின் இருக்கக் கூடும்.
ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களுடன் கரம் இணைப்போம்
மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரை தெற்காசிய நாடுகளில் உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளுடன் உறவை வலுப்படுத்தும் என்று தீர்மானம் உறுதிபடத் தெரிவிக்கிறது.
தெற்காசிய நாடுகளில் உள்ள அரசுகள் நவீன தாராளமயக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வருகின்றன. மக்களின் நிலை வீழ்ச்சியடைந்து கொண்டே வருகிறது. தீவிரவாத, அடிப்படைவாத சக்திகள் வளர்ந்து வருகின்றன. இது இந்தியாவின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இலங்கையில் பொறுப்பேற்றிருக்கும் புதிய அரசு சில நடவடிக்கைகளை எடுத்தாலும், நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிப் போக வேண்டியிருக்கிறது.
சோஷலிச நாடுகள்:
சோஷலிச நாடுகளைப் பொறுத்த வரை சீனாவின் பிரமிக்கத் தக்க வளர்ச்சி, வியட்நாமின் வெற்றிகரமான வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை வட கொரியா எதிர்கொண்டது, கியூபா அதன் பொருளாதாரத்தைத் தற்காலப்படுத்த எடுக்கும் முயற்சிகள் போன்றவை சுருக்கமாக சுட்டிக் காட்டப் பட்டுள்ளன. தற்போது சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி விகிதம் குறைந்து வருவது தற்செயலானதல்ல. திட்டமிட்டு செய்யப் படுகிறது. மடமடவென்று உருவான வளர்ச்சி தக்க வைக்கப் பட வேண்டும், மக்களின் வாழ்க்கைத் தரம் அதனுடன் இயைந்ததாக உயர வேண்டும் என்பதை நோக்கிய சீனாவின் முயற்சி அது. வட கொரியாவைப் பொறுத்த வரை, அது இன்னமும் சோஷலிச நாடு தான். சில திரிபுகள் உள்ளன. நமக்கு அவை குறித்து கருத்து மாறுபாடுகள் உண்டு. ஆனால், ஊடகங்கள் செய்திகளைத் திரித்து வெளியிடுகின்றன என்பதும், மேற்கத்திய நாடுகளின் பிரச்சாரம் இருக்கிறது என்பதும் கவனத்தில் கொள்ளப் பட வேண்டும்.
14வது மாநாட்டிலும், 20வது மாநாட்டிலும் தத்துவார்த்த பிரச்னைகள் குறித்து நிறைவேற்றப் பட்ட தீர்மானம் சோஷலிச நாடுகள் குறித்து நமது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளது. எனவே, கடந்த 3 ஆண்டுகளில் சர்வதேச தாக்கத்துடன் நடந்த சில விஷயங்கள் மட்டும் அரசியல் தீர்மானத்தில் அந்தந்தப் பகுதியில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளன. உதாரணமாக வெனிசுவேலாவுக்கு எதிராக ஏகாதிபத்தியப் பின்புலத்துடன் அளிக்கப் படும் நிர்ப்பந்தத்தை எதிர்கொள்ள சீனா பெருமளவு உதவுகிறது.

மத்திய பிஜேபி அரசு:

தொடரும், தீவிரமடையும் தாராளமயக் கொள்கைகளும் மதவெறி அரசியலும்
இந்தியாவில் பெரும்பான்மை பலத்துடன் பிஜேபி ஆட்சி பீடத்தில் ஏறியிருக்கிறது. வலதுசாரிப் போக்குகள் உறுதிப்படுத்தப் பட்டு, வலதுசாரி தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. ஒரு புறம் கார்ப்பரேட்டுகளின் நலன் காக்கும் கொள்கைகள் அதாவது சாதாரண மக்களின் வாழ்க்கை தர சரிவு, மறு புறம் இந்துத்வ மத வெறி. இடதுசாரிகளோ பலவீனப்பட்டிருக்கும் சூழல். மக்களைப் பிரிக்கும் முயற்சிகள் அதிகரிப்பு. இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே இடைவெளி உயர்வு. பெண்கள் குழந்தைகள் மீது சொல்ல முடியாத தாக்குதல். விவசாயிகள் மீது ஏற்றப் பட்ட பெரும் சுமைகள். தொழிலாளர் நல சட்டங்கள் தளர்த்தப் படும் ஏற்பாடு. நவீனதாராளமயத்தை செலுத்த ஏதுவாக வேலை வாய்ப்புகளின் தன்மையிலேயே மாற்றங்கள். சிறுபான்மை மக்களுக்கான சச்சார் குழு பரிந்துரைகள் கோப்பிலேயே மூடப்பட்ட நிலை. ஊழல் தொடர்கிறது. வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப் பட்டுள்ள கருப்புப் பணத்தைக் கைப்பற்றுவோம் என்ற சவடால் சாயம் வெளுத்த நிலை. இது தான் இன்றைய தேசிய சூழலாக உள்ளது. காங்கிரசின் கொள்கைகளை இன்னும் தீவிரமாக பிஜேபி அமல்படுத்தி வருகிறது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதிக்கம்:
வாஜ்பாயி பிரதமராக இருந்து நடந்த பிஜேபி ஆட்சியையும் பார்த்தோம். இப்போது மோடி ஆட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இரண்டும் ஒன்றல்ல. பிஜேபி தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில் தற்போது ஆர்.எஸ்.எஸ்., அரசு அதிகாரத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இது ஒரு பெரும் வித்தியாசம். மோடி, ஆட்சியின் தலைமையில் இருப்பது ஆர்.எஸ்.எஸ். – அரசு ஒருங்கிணைப்பை சுலபமாக்குகிறது. மோடி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழு நேர ஊழியர் என்பதை மறந்து விடக் கூடாது. மேலிருந்து ஆர்.எஸ்.எஸ். தலையீடு இவ்விதமாக நடக்கிறது. கீழீருந்து இந்துத்வ அமைப்புகளின் மோதல் நடவடிக்கைகள் மூலம், ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நிரலை முன்னுக்குக் கொண்டு வருகின்றனர். இவ்வாறு இரண்டு விதங்களில் காய் நகர்த்தப் படுகிறது என்று சுட்டிக் காட்டும் அரசியல் தீர்மானம் வகுப்புவாதத்தை எதிர்கொள்ள திட்டவட்டமான வழிகாட்டுதலை அளிக்கிறது. இதில் 2 அம்சங்கள் உண்டு.

ஒன்று, பிஜேபி அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மக்களின் வாழ்க்கையை நாசப்படுத்துவதை எதிர்த்துப் போராட்டங்களை உருவாக்கி, அதில் மத வித்தியாசமின்றி ஒன்றுபடும் மக்கள் மத்தியில் ஒற்றுமையின் அவசியத்தைப் பேசுவது என்ற அணுகுமுறை தேவைப்படுகிறது. அதாவது இரண்டுக்கும் எதிரான போராட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும். மற்றொன்று, வகுப்புவாதம் அரசியல் தளத்தில் மட்டுமல்ல, சமூகம், வரலாறு, பண்பாடு, கல்வி என்று பல தளங்களில் இயங்குவதைக் கணக்கில் கொண்டு, அத்தனையிலும் அதனை எதிர்கொள்வதற்கான முயற்சிகளை எடுப்பது என்பதாகும். துவக்கப் பள்ளி முதல் மெட்ரிக் வரை ஒரு லட்சம் கல்வி நிலையங்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால் நடத்தப் படுகின்றன. ஆதிவாசி மக்கள் மத்தியில் பெருமளவு வேலை செய்கின்றனர். எனவே, சாதாரணமாக நினைத்து விடக் கூடாது. வெறும் முழக்கங்களும், கூட்டங்களும், சொற்பொழிவுகளும், தீர்மானங்களும் போதாது. கம்யூனிஸ்டுகளுக்கு எப்போதும் துல்லியமான திட்டமும், நடவடிக்கையும் வேண்டும். இதற்கு மிகப் பரந்த அளவிலான சக்திகளை, அமைப்புகளை ஒருங்கிணைத்து மேடை உருவாக்க வேண்டும். இது ஒரு பிரதான கடமை.
அதே நேரம், சிறுபான்மை அடிப்படைவாதம் எழுந்து வருவதைக் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது. இளைஞர்கள் அதில் வசீகரிக்கப் படுவார்கள். இதைப் பிரதான அபாயமாகக் கணக்கிட முடியாது என்றாலும், பிரச்னைகளையும், தாக்குதல்களையும் ஜனநாயக ரீதியாக எதிர்கொள்வதை இது பலவீனப் படுத்தும். பெரும்பான்மை தீவிரவாதத்தை வலுப்படுத்தும். இப்போக்கை எதிர்க்க வேண்டும்.

சர்வாதிகாரப் பாதையில்:
அரசும் நவீன தாராளமய ஆட்சியும் என்ற தலைப்பில் சில முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இன்றுள்ள ஆட்சி நவீன தாராளமயக் கொள்கைகளைத் தீவிரமாக அமலாக்கி வருவதைப் பார்க்கிறோம். உதாரணமாக அரசு அமைப்புகளின் கண்ணோட்டம், நவீன தாராளமய தாக்கத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இயற்கை வளங்களை சூறையாடி மூலதன சேர்க்கையை உறுதிப்படுத்த பெரு நிறுவனங்களின் ஆயுதமாக அரசு பயன்படுத்தப் படுகிறது. நல நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப் படுகின்றன. பெரும் தொழில் நிறுவன சொந்தக்காரர்களுக்கும் அரசுக்கும் நெருக்கம் அதிகரித்திருக்கிறது. இது ஜனநாயக அமைப்புகளை அரித்து வருகிறது. நாடாளுமன்ற ஜனநாயகம் ஓரம் கட்டப் படுகிறது. அடிப்படை பொருளாதார முடிவுகள் நாடாளுமன்ற விவாதத்துக்கு உட்படுத்தப் படாமலேயே எடுக்கப் படுகின்றன. மாநில அரசுகள் மீது உலகமய நிபந்தனைகள் திணிக்கப்படுகின்றன. மேலும் அரசு நிறுவனங்கள் வகுப்புவாதமயமாக்கப் படுகின்றன. கூட்டம் கூடுவது, எதிர் கருத்துக்களைத் தெரிவிப்பது, விமர்சிப்பது போன்ற ஜனநாயக மற்றும் குடியுரிமைகளில் வலுவாகக் கை வைக்கப் படுகிறது. நீதித் துறையும் அதற்குப் பயன்படுகிறது. கடுமையான சட்டங்கள் பொய் வழக்கு போட உதவுகின்றன. காவல்துறை ஆளும் கட்சியின் நலனைப் பாதுகாக்கும் கருவியாக நடந்து கொள்கிறது. சர்வாதிகார அமைப்பு முறை நோக்கி நிலைமை போய்க் கொண்டிருப்பது தெரிகிறது.

சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்ற அமைப்புகளை மக்களுக்காக வாதாடும் மன்றமாக மாற்ற கம்யூனிஸ்டுகள் முயல வேண்டும். ஆனால், அவற்றில் உள்ளே நுழைவதே கடினமாக மாறிக் கொண்டு வருகிறது. தேர்தல் முறையும், பணம் பெரும் அளவில் பயன்படுவதும் முக்கிய காரணங்களில் சில. எனவே தேர்தல் சீர்திருத்தங்கள் கோரும் இயக்கம் பலப்பட வேண்டும். ஜனநாயக, குடியுரிமைகள் பாதுகாக்கப்பட பெரும் இயக்கம் உருவாக்கப் பட வேண்டும். ஏராளமான அமைப்புகளை இதில் இணைக்க வேண்டும்.

மாநில முதலாளித்துவ கட்சிகள்:
நடைமுறை உத்தி பரிசீலனை அறிக்கை மாநில முதலாளித்துவ கட்சிகள் குறித்த நிர்ணயிப்புகளைத் தெளிவு படுத்துகிறது. அதன் அடிப்படையில் அரசியல் தீர்மானமும், கடந்த 15 ஆண்டுகளில் அவற்றின் குணாம்சம் மாறி வந்துள்ளதைக் கணக்கில் எடுத்துள்ளது. பெருமுதலாளிகளுக்கும் இதர முதலாளி பகுதிகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகள் ஓரளவு மட்டுப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டும் தீர்மானம், மாநில முதலாளிகளின் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநில முதலாளித்துவ கட்சிகள், நவீன தாராளமயத்தை ஏற்றுள்ளதையும், மாறி மாறி காங்கிரசுடனும், பிஜேபியுடனும் உறவு கொள்வதையும் பதிவு செய்கிறது. பழைய ஜனதா தளத்தின் பகுதியாக இருந்த 6 கட்சிகள் தற்போது ஒரு கட்சியாக இணைந்திருந்தாலும், அவர்களால் கருத்தொற்றுமையுடன் ஜனநாயக, சமூக, பொருளாதார அம்சங்களை உள்ளடக்கிய ஒரு திட்டத்தை உருவாக்க முடிகிறதா என்று பார்த்தே அது குறித்த நிர்ணயிப்புக்கு வர முடியும். இக்கால கட்டத்தில் ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. கடந்த காலத்திலும், பல மாநிலங்களில் காங்கிரசுக்கு எதிராக அல்லது காங்கிரஸ்-பிஜேபி இரண்டையும் தாண்டியதாக மாநில முதலாளித்துவ கட்சிகள் வந்துள்ளன. ஆனால் சாதி, மதம் அல்லது இனம், மொழி போன்றவை சார்ந்த அறைகூவல்கள் இல்லாமல் ஆம் ஆத்மி வந்திருக்கிறது. அனைத்துப் பகுதி மக்கள் மத்தியிலிருந்தும் ஒரு பொது ஆதரவு கிடைத்திருக்கிறது. இவர்களின் அனுபவத்திலிருந்து நாம் சில படிப்பினைகளைப் பெற முடியும். அதே சமயம் பல்வேறு பிரச்னைகள் குறித்த இவர்களின் கொள்கை தெளிவான பிறகே, இக்கட்சி குறித்த மதிப்பீட்டுக்குப் போக முடியும்.

(அரசியல் உத்தி குறித்த பகுதி அடுத்த இதழில் வெளியாகும் … http://marxist.tncpim.org/polresol2/)