மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்பின் தோற்றுவாய் எது?


பேராசிரியர்: நோம் சோம்ஸ்கியுடன் ஒரு நேர்காணல்

தமிழில்:கி.ரமேஷ்

 (பேராசிரியர் நோம் சோம்ஸ்கியுடன் பத்திரிகையாளர் டேவிட் பர்சமியானின் நடத்திய நேர்காணல், பீப்பிள்ச் டெமாக்ரசி இதழில் ‘நம் பேரக் குழந்தைகளின் உலகம்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியானது. அதன் மொழியாக்கப் பகுதிகள் கீழே தரப்படுகின்றன.)

கேள்வி: லிபியாவிலிருந்து ஈராக் வரை மத்திய கிழக்கு பற்றியெரிந்து கொண்டிருக்கிறது. புதிய ஜிகாதிக் குழுக்கள் தோன்றியுள்ளன. தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ். மீது கவனம் திரும்பியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அதன் மூலம் குறித்து?

                சில நாட்களுக்கு முன்னர், முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரியும், மத்தியகிழக்கின் முன்னணி உளவுத்துறை அதிகாரிகளில் ஒருவரும் முக்கிய ஆய்வாளர்களில் ஒருவருமான கிரகாம் ஃபுல்லருடனான ஆர்வமூட்டும் பேட்டி ஒன்று வெளியானது. அதன் தலைப்பு “அமெரிக்கா ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸை உருவாக்கியது”. சதி பற்றி மத்தியக் கிழக்கில் உலவிவரும் ஆயிரக்கணக்கான கருத்துருக்களில் இதுவும் ஒன்று.

ஆனால் மற்றுமொரு மூலக் கருவானது: அமெரிக்க அமைப்பின் நடுநாயகமாக அமைந்துள்ளது. கிரகாம் ஃபுல்லர் ’அமெரிக்கா ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸை உருவாக்க முடிவெடுத்து அதற்கு நிதியளித்தது என்பதல்ல தன் கருத்து என அவசர அவசரமாக சுட்டிக்காட்டுகிறார்’. அவர் சொல்வது என்னவெனில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு உருவாகி வளர்வதற்கான பின்னணியை அமெரிக்கா உருவாக்கியது என்பதைத்தான். அது துல்லியமான கருத்தென்று நானும் கருதுகிறேன். சம்மட்டியடி அணுகுமுறை எப்போதும் அதன் வழக்கமாக அமைந்துள்ளது: பிடிக்காவிட்டால், அடித்து நொறுக்கித்தள்ளு.

2003 ஆம் ஆண்டில் அமெரிக்காவும், பிரிட்டனும் ஈராக் மீது படையெடுத்தது பெருங்குற்றம். இதே நாளின் மதியத்தில்தான் பிரிட்டிஷ் அரசாங்கம் ஈராக் மீது குண்டு வீச மீண்டும் அரசுக்கு அதிகாரமளித்தது. இப்படையெடுப்பு ஈராக்குக்குப் பேரழிவாக அமைந்தது. ஈரானுடனான பத்தாண்டு நீண்ட போரில் ஏற்கனவே ஈராக் அனேகமாக அழிந்து விட்டிருந்தது. இதில் ஈராக்குக்கு அமெரிக்கா ஆதரவளித்தது என்பதையும், அதன் பிறகு தடைகளைப் பத்தாண்டுகளுக்கு விதித்தது என்பதையும் நிகழ்வுப் போக்கில் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

அத்தடைகள் “இன அழிப்பு” என அவற்றை நிர்வகித்த சம்பந்தப்பட்ட சர்வதேச தூதரக அதிகாரிகளால் விளக்கப்பட்டன. அந்தக் காரணத்துக்காகவே அவர்கள் இருவரும் ராஜினாமா செய்தனர். அத்தடைகள் சிவில் சமூகத்தை அழித்தன, சர்வாதிகாரியை வலுப்படுத்தின, மக்கள் உயிர்பிழைக்க அவரையே சார்ந்திருக்குமாறு நிர்ப்பந்தித்தன. அவர் மற்ற பல சர்வாதிகாரிகள் தூக்கியெறியப்பட்ட அதே பாதையில் அனுப்பப்படாமலிருக்க அனேகமாக அதுதான் காரணமாகும்.

இறுதியாக 2003ல் அமெரிக்கா அந்த நாட்டைத் தாக்க முடிவெடுத்தது. இத்தாக்குதல், பல ஈராக்கியர்களால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற மங்கோலியர்களின் படையெடுப்புடன் ஒப்பிடப்படுகிறது. பேரழிவுமிக்கது. லட்சக்கணக்கானவர்கள் மரணமடைந்தனர், பத்துலட்சக்கணக்கில் அகதிகளாயினர், பத்துலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர், சுமேரிய நாகரிக காலம் தொடங்கி ஏராளமான தொல்லியல் வளங்கள் அழிக்கப்பட்டன.

அமெரிக்கப் படையெடுப்பின் ஒரு உடனடி விளைவாக குறுங்குழுவாதத்தின் தோற்றம் அமைந்தது. இத்தாக்குதலில் ஈடுபட்ட படையினரும் அதன் சிவிலியன் இயக்குனர் பால் பிரேமரும் அறிவுக் கூர்மையுடன் ஷியா, சன்னி, குர்து இனக் குழுக்களை பிளவுபடுத்தி ஒருவர் மற்றொருவரின் கழுத்தை நெறிக்கும்படி செய்தனர். இந்தப் படைகள் இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே அங்கு கொடூரமான பிரிவினைவாத முரண்பாடுகளை வெடிக்கச் செய்தன.

பாக்தாதில் உங்களால் இதனைப் பார்க்க முடியும். பாக்தாதின் 2002ம் ஆண்டு வரைபடத்தை எடுத்துக்கொண்டால், அதுவொரு கலவையான நகரமாக அமைந்திருந்தது. சன்னியும், ஷியாவும் ஒரே பகுதியில் அருகருகே வசித்தனர், கலப்பு மணங்களும் நிகழ்ந்தன. உண்மையில் சில சமயங்களில் அவர்களுக்கே யார் சன்னி, யார் ஷியா என்பதும் கூடத் தெரியாமலிருந்தது. அது உங்கள் நண்பர்கள் ஒரு புராட்டஸ்டண்ட் குழுவில் உள்ளனர் அல்லது வேறொரு புராடஸ்டண்ட் குழுவில் உள்ளனரா என்பதை அறிவதைப் போன்றதே. அவர்களிடையே வேறுபாடுகள் இருந்தாலும், வெறுப்பு இல்லை.

அந்த ஆண்டுகளில், சன்னி-ஷியா மோதலே இருக்காது என்று இருதரப்பினரும் கூறினர். வாழும் முறை, வாழிடம் மற்றும் பல விதங்களில் நாங்கள் மிக மிக ஒன்று கலந்துவிட்டோம் என்றனர். ஆனால் 2006 ஆம் ஆண்டில் போர்கள் வெடித்தன. இந்த மோதல், பிரதேசம் முழுதும் பரவியது. இப்போது பிரதேசம் முழுதும் சன்னி-ஷியா மோதல்களால் கிழித்தெறியப்படுகிறது.

அந்த மோதலின் இயல்பான இயக்கவோட்டத்தை அதிதீவிர சக்திகள் கையிலெடுக்கத் தொடங்கினார்கள். அவைகளுக்கு வேர் இருந்தது. அந்த வேர்கள், அமெரிக்காவின் பெரும் கூட்டாளியான சவூதி அரேபியாவில் அமைந்திருந்தன. அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா தன் மூக்கை நுழைக்கத் தொடங்கிய காலத்தில் இருந்தே, சவூதி அரசுக்கு அடித்தளம் இடப்பட்ட காலத்தில் இருந்தே அது அவர்களின் கூட்டாளியாக இருந்து வருகிறது. அது ஒருவிதமான குடும்ப சர்வாதிகாரமாகும். அங்குள்ள மிக அதிகமான எண்ணெய் வளம் இதற்கு காரணமாக அமைந்தது.

அமெரிக்காவுக்கு முன்னரே பிரிட்டன் மதச்சார்பற்ற தேசியவாதத்தை விட்டு, தீவிர இஸ்லாத்தை தன் வழக்கமான தேர்வாக அமைத்துக் கொண்டிருந்தது. அந்த இடத்தைப் பிடித்த அமெரிக்காவும், அதே நிலைப்பாட்டை மேற்கொள்வது அவசியமென்று கருதியது. தீவிர இஸ்லாம் சவுதி அரேபியாவை மையமாகக் கொண்டிருக்கிறது. அதுதான் உலகின் மிகத் தீவிரமான, இஸ்லாமிய தீவிரப் போக்கு கொண்ட நாடு. அதனோடு ஒப்பிட்டால், ஈரான் ஒரு நவீன, சகிப்புத்தன்மை கொண்ட நாடாகத் தோன்றும், மதச்சார்பற்ற மத்தியக் கிழக்கு அரபு நாடுகளை மேலும் நவீனமாக்கிவிடும்.

அது இஸ்லாத்தின் தீவிர வடிவமான வஹாபி – சலாஃபி வடிவத்தால் இயக்கப்படுவது மட்டுமல்ல, அது மதத்தைப் பரப்பும் நோக்கமுடைய நாடும் ஆகும். எனவே அது தன் கோட்பாடுகளைப் பிரதேசம் முழுதும் பரப்பிட, தன்னுடைய மிகப்பெரும் எண்ணெய் வளத்தை உபயோகிக்கிறது. பாகிஸ்தான் முதல் வட ஆப்பிரிக்கா வரை பள்ளிகள், மசூதிகள் மற்றும் மதகுருக்களை நியமிக்கிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ். கைக்கொண்டுள்ள கோட்பாடு, சவூதி தீவிரவாதத்தின் அதிதீவிர வடிவமாகும். இஸ்லாத்தின் அதி தீவிர வடிவமான சவூதியிலிருந்து அது தன் கோட்பாட்டை வளர்த்தெடுத்தது. ஈராக்கை தாக்கியழித்த அமெரிக்க சம்மட்டித் தாக்குதலால் அது எங்கும் பரவியுள்ளது. இதைத்தான் ஃபுல்லர் குறிப்பிடுகிறார்.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தீவிரவாதத்திற்கு வழிவகுத்த கோட்பாட்டை மட்டுமல்ல, அவர்களுக்கான நிதியையும் சவூதி அரேபியா வழங்குகிறது. சவூதி அரசு அல்ல, ஆனால் குவைத், சவூதியில் வாழும் செல்வந்தர்களும் பிறரும் – அனைத்து இடங்களிலும் பல்கிப் பரவும் இந்த ஜிகாதிக் குழுக்களுக்கு – கோட்பாட்டு ஆதரவையும், நிதி உதவியையும் வழங்குகின்றனர். அமெரிக்காவாலும், இங்கிலாந்தாலும் நடத்தப்பட்ட தாக்குதல்தான் இந்த விசயங்கள் பிறப்பெடுத்த தோற்றுவாய். அமெரிக்காதான் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை தோற்றுவித்தது என்று ஃபுல்லர் சொல்வதன் மெய்ப்பொருள் இதுதான்.

முரண்பாடுகள் உருவாகும்போது அது மேலும் அதிதீவிர நிலைக்குத்தான் செல்லும் என்பதில் நீங்கள் உறுதியோடிருக்கலாம். மிகவும் கொடூரமான, கடுமையான குழுதான் அந்த சூழலை கைப்பற்றும். வன்முறையால் தலையீடு நிகழ்த்தப்படும் எந்த இடத்திலும் அதுதான் நடக்கிறது. அது கிட்டத்தட்ட தன்னியல்பான வளர்ச்சிப்போக்கு. இதுதான் அண்டைப் பகுதிகளிலும், சர்வதேச பிரச்சனைகளிலும் மெய்வெளிப்பாடு. இந்த இயக்கப்போக்கு மிகவும் வெளிப்படையான ஒன்று. அதுதான் தற்போது நடந்துகொண்டிருக்கிறது. அதனால்தான் ஐஎஸ்ஐஎஸ் உருவானது. அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை அழித்தொழிப்பதில் வெற்றிகண்டால், இன்னும் அதிதீவிரமான ஒன்றைப் பெறுவார்கள்.

ISIS

மேலும், ஊடகங்களும் கீழ்ப்படிந்துள்ளன. அமெரிக்காவின் தீவிரவாத எதிர்ப்பு உத்தியின் வெற்றிக் கதைகளாக இரண்டு நாடுகளை தன் செப்டம்பர் உரையில் ஒபாமா சுட்டிக் காட்டினார். எவை அந்த இரண்டு நாடுகள்? சோமாலியாவும், ஏமனும். ஆச்சர்யமூட்டும் செய்திதான் என்றாலும் அடுத்த நாளில் ஊடகங்க கருத்துப் பக்கங்களில் வெளிப்படையான அமைதியே நிலவியது.

 

சோமாலியா விசயம் சற்று கொடூரமான ஒன்று. ஏமனும் மோசமானது. சோமாலியா ஒரு படு ஏழ்மையான நாடு. நான் அதன் மொத்த வரலாற்றிற்குள் செல்லவில்லை. ஆனால் புஷ் நிர்வாகத்தின் தீவிரவாத எதிர்ப்பு வெற்றிகளில் ஒன்று, அது மிகவும் தற்பெருமையடித்துக் கொண்ட ஒன்று சோமாலியாவில் தீவிரவாதத்துக்குத் தீனி போட்டுக் கொண்டிருந்த, பராகத் உதவிநிதிக்கு மூடுவிழா நடத்தியதாகும். இதுபற்றி பத்திரிகை உலகம் மகிழ்ச்சியுற்றது. அது ஒரு உண்மையான வெற்றி.

சில மாதங்களில் உண்மைகள் கசியத் தொடங்கின. சோமாலியாவில் அந்த உதவி நிதிக்கும், பயங்கரவாதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது செய்து கொண்டிருந்ததெல்லாம் வங்கிப் பணி, வர்த்தகம், நிவாரணம், மருத்துவமனைப் பணிகள் மட்டுமே. அது ஒரு வகையில் மிகவும் வறுமைப்பட்டு சீரழிந்து போன சொமாலியப் பொருளாதாரத்தை உயிருடன் வைத்திருக்கும் பணி. அதை மூடுவதன் மூலம் புஷ் நிர்வாகம் இந்தப் பணிகளுக்கு முடிவு கட்டியது. இது தீவிரவாதத்தை ஒழிக்கும் ஒரு பங்களிப்பு. அது கவனிப்பைப் பெற்றது. நீங்கள் சர்வதேச நிதிய புத்தகங்களில் அது பற்றி அறியலாம். சோமாலியாவுக்குச் செய்யப்பட்டது இதுதான்.

இஸ்லாமிய நிறுவனங்கள் என்றழைக்கப்பட்ட இஸ்லாமிய நீதிமன்றங்கள் சோமாலியாவில் ஒருவித அமைதியை ஏற்படுத்தியிருந்தன. மிகச் சிறப்பானதல்ல என்றாலும், அமைதி நிலவியது, குறைவாகவோ அதிகமாகவோ மக்கள் அதனை ஏற்றுக் கொண்டிருந்தனர். அமெரிக்கா இதனை சகித்துக்கொள்ளவில்லை, எனவே அது எத்தியோப்பிய படையெடுப்புக்கு ஆதரவளித்து அதனை அழித்ததுடன், பெரும் குழப்பமான நிலைமைக்கு மீண்டும் இழுத்துவந்தது. அது மிகப்பெரிய சாதனையே(!)தான்.

ஏமனும், தன்னளவிலேயே ஒரு பயங்கரமான கதை.

 

தேசியப் பொது வானொலியில், டேவில் கிரீனுடைய காலைச் செய்திகளில் காசாவைச் சேர்ந்த ஒரு நிருபரை பேட்டியெடுத்தார். அந்தப் பேட்டியின் தொடக்கம் இவ்வாறு அமைக்கப்பட்டிருந்தது: “இரு தரப்பும் மிகப்பெரிய அழிவைச் சந்தித்துள்ளன”. எனவே நான் எனக்குள் நினைத்துக் கொண்டேன், ஹைஃபாவும், டெல் அவிவும் காஸாவைப் போல இடிபாடுகளாகி விட்டனவா? என்று – வியட்னாம் பற்றிய ஜிம்மி கார்ட்டரின் கருத்து உங்கள் நினைவுக்கு வருகிறதல்லவா?

அது மட்டும் என் நினைவுக்கு வரவில்லை, என் நினைவுக்கு எட்டிய அளவில் நான்தான் அதுபற்றி முதல் கருத்தை வெளியிட்டேன், அனேகமான இன்றுவரை நான் மட்டுமே அதுபற்றிய கருத்தை வெளியிட்டிருக்கிறேன். மனித உரிமைக்காகக் குரல் கொடுத்த கார்ட்டரிடம் 1977ல் ஒரு பத்திரிகைச் சந்திப்பில் ஓரளவு மென்மையான கேள்வி எழுப்பப்பட்டது: போருக்குப் பின் வியட்னாமியர்களுக்கு உதவ நமக்கு சிறிது பொறுப்பிருக்கிறது என்று நினைக்கிறீர்களா?. அவர் கூறினார்: ”நமக்கு பொறுப்பிருக்கிறது என்பதில் ஐயமில்லை, ஆனால் இருதரப்புமே அழிவைச் சந்தித்துள்ளன.”

அது எந்தக் கருத்துமின்றிக் கடந்து சென்றது. அது அவரது வாரிசை விட சற்று மேலானது. சில வருடங்களுக்குப் பிறகு ராஜதந்திரியான ஜார்ஜ் புஷ் சீனியர் வியட்னாம் போரில் பொறுப்புகள் குறித்து கருத்துத் தெரிவித்த போது அவர் கூறினார்: “வியட்னாம் போருக்குப் பிறகு ஒரு தார்மீகப் பிரச்சனை இருந்து வருகிறது. வட வியட்னாமியர்கள் நம்மிடம் அமெரிக்க விமான ஓட்டிகளின் எலும்புகளை ஒப்படைக்கப் போதிய நிதியை ஒதுக்கவில்லை. இந்த அப்பாவி விமான ஓட்டிகள் மத்திய லோவா மீது பறந்து பயிரையோ எதையோ தூவிக் கொண்டிருந்த போது கொலைகார வியட்னாமியர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அவர்களது உடல்கள் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. அவர் கூறினார்: நாம் இரக்கமுள்ளவர்கள். எனவே நாம் இதனை மன்னித்து அவர்களை நாகரீக உலகுக்குள் அனுமதிப்போம்.

நாம் (அமெரிக்கர்கள்) அவர்களுடன் வர்த்தக உறவு கொள்வதை அனுமதிப்போம் என்பதன் பொருள், (வியட்னாமியர்கள்) அவர்கள் தம் பணிகளையெல்லாம் விட்டு, அவர்களின் நிதியை வியட்னாம் போரில் நிகழ்த்தப்பட்ட இக்குற்றத்திலிருந்து விடுவிக்க ஒதுக்கினால்தான் – அத்தகைய வர்த்தக உறவில் ஈடுபடுவோம் என்பதாகும். ஒன்றும் சொல்வதற்கில்லை.

இஸ்ரேல் அதிகாரிகள் ஒவ்வொருமுறையும் குறிப்பிடுவதும், கார்ப்பரேட் ஊடகங்களால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டும் அலுத்துப்போன விசயங்களில் ஒன்று ஹமாஸ் சாசனம். அவர்கள் இஸ்ரேல் அரசின் இருப்பை ஏற்பதில்லை, அதனை வரைபடத்திலிருந்தே அகற்றிவிட விரும்புகின்றனர். அந்த சாசனம் பற்றியும், அதன் பின்னணி குறித்தும் உங்களிடம் சில விபரங்கள் உள்ளன.

1988 ஆம் ஆண்டு காலகட்டத்தில், இஸ்ரேலின் கடுமையான தாக்குதலுக்கு காஸா உள்ளாகியிருந்த காலத்தில், ஒன்றிரண்டு நபர்களால் அந்த சாசனம் உருவாக்கப்பட்டது. உங்களுக்கு ராபினின் உத்தரவுகள் நினைவிருக்கும். பெரும்பாலும் வன்முறையற்ற அந்த எழுச்சிக்கு இஸ்ரேல் மிகவும் வன்முறையான பதிலடியைக் கொடுத்தது, ராபினின் உத்தரவுப்படி தலைவர்களைக் கொன்று, கொடுமைப்படுத்தி, எலும்புகளை உடைத்து இன்னும் இதுபோன்ற செயல்களில் இறங்கி எதிர்வினையாற்றினர். அதன் நடுவே ஹமாஸ் சாசனம் என்றழைக்கப்பட்ட ஒன்றை ஒரு சிறு பகுதியினர் நிறைவேற்றினர்.

அதன்பின்னர் அதன் மீது யாரும் கவனம் செலுத்தவில்லை. நீங்கள் அதைப் பார்த்தால் அது ஒரு மோசமான ஆவணம் என்பது தெரியும். அதன் பிறகு அதன் மீது கவனம் செலுத்தியவர்கள் அமெரிக்க ஊடகமும். இஸ்ரேலிய உளவுத்துறையும் மட்டுமே. அவர்கள் அதை விரும்புகின்றனர். வேறு யாரும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. காஸாவின் அரசியல் தலைவர் காலத் மஷால் சில ஆண்டுகளுக்கு முன் கூறினார்: பாருங்கள், அது கடந்த காலம், அது போய் விட்டது. அதற்கு முக்கியத்துவம் கிடையாது. ஆனால் அது ஒரு விஷயமல்ல. அது ஒரு மதிப்புடைய பிரச்சாரம்.

அதனை அவர்கள் சாசனம் என்றழைப்பதில்லை என்றாலும், இஸ்ரேலின் ஆளும் கூட்டணியின் நிறுவனக் கோட்பாடுகள் உள்ளன.   தாக்குதலுக்குள்ளாவது ஏதோவொரு குழுவினரல்ல, மாறாக ஆளும் கூட்டணியான லிகுட்-தான் தாக்குதலுக்குள்ளாகிறது. லிகுடின் கோட்பாடுகளுடைய மூலம் மெனாகெம் பெகினின் ஹெரூத் என்பவர் ஆவார். அவர்களிடம் அடிப்படை ஆவணங்கள் உள்ளன. அவர்களது நிறுவன ஆவணங்கள் இன்றைய ஜோர்டான் இஸ்ரேலின் ஒரு பகுதியென்று கூறுகின்றன; இஸ்ரேல் ஒருபோதும் ஜோர்டான் மீதான தனது உரிமைக் கோரலைக் கைவிடாது. இன்று ஜோர்டான் என்றழைக்கப்படுவதை அவர்கள் இஸ்ரேலின் வரலாற்று நிலங்கள் என்றழைக்கின்றனர். அவர்கள் அதை ஒருபோதும் கைவிடவில்லை.

அதே ஆளுங்கட்சியான லிகுடிடம் ஒரு தேர்தல் திட்டம் உள்ளது. அது 1999க்கானது என்றாலும் அது ஒருபோதும் கைவிடப்படவில்லை. இன்றும் அது அப்படியேதான் உள்ளது. அது ஜோர்டானுக்கு மேற்கே எந்த பாலஸ்தீன நாடும் இருக்காது என்று குறிப்பிட்டுக் கூறுகின்றது. வேறு வார்த்தைகளில் அதைச் சொன்னால் பாலஸ்தீனத்தை அழிக்கும் விஷயத்தில் கோட்பாட்டளவில் நாம் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்.

இவை வெறும் வார்த்தைகளல்ல. அதை அமல்படுத்துவதற்கு நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். லிகுத், ஹெரூத்தின் நிறுவனக் கோட்பாடுகளை யாரும் கூறுவதில்லை. நானும் சொல்வதில்லை, ஏனென்றால் யாரும் அவற்றை தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. உண்மையில் அது கிபுட்ஸ் இயக்கத்தின் பெரும்பான்மையினரின் கோட்பாடாகவும் இருந்தது. கிபுட்ஸ் இயக்கத்தின் பெரிய பகுதியான அச்டுத் ஹா-அவோதா இதே கோட்பாடுகளைக் கொண்டிருந்தது, அதாவது ஜோர்டான் நதியின் இரு பகுதிகளும் நமதே என்ற கோட்பாடு.

”ஜோர்டானின் இந்தப் பகுதியும் நமது, அந்தப் பகுதியும் நமதே” என்றொரு கோஷமும் இருந்தது. வேறு வார்த்தைகளில் மேற்கு பாலஸ்தீனம், கிழக்கு பாலஸ்தீனம் இரண்டும் நமதே. யாராவது இப்படிக் கூறுகிறார்களா?: சரி, வாருங்கள், இஸ்ரேலுடன் நாம் விவாதிக்க முடியாது? இதை விட முக்கியமானது உண்மையான தேர்தல் திட்டங்கள். இதை விட முக்கியமானது நிகழும் செயல்பாடுகள். அவை பாலஸ்தீனத்தை அழிப்பது பற்றிப் பேசுவது மட்டுமல்ல, அழித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் நாம் ஹமாஸ் சாசனம் பற்றிப் பேச வேண்டும்.

பாலஸ்தீன விடுதலை அமைப்பின் (PLO) சாசனம் என்றழைக்கப்படுவது குறித்து ஒரு ஆர்வமூட்டும் வரலாறு இருக்கிறது. 1970 வாக்கில் இஸ்ரேலிய உளவுத்துறையின் முன்னாள் தலைவர் பெரிய இஸ்ரேலிய பத்திரிகையில் ஒரு கட்டுரையை எழுதினார். அதில் அவர் பாலஸ்தீன விடுதலை அமைப்பின் சாசனம் அல்லது அது போன்ற ஒன்று குறித்து கவனத்துக்குக் கொண்டு வந்தார். யாரும் அதுவரை அது குறித்துக் கேள்விப்படவில்லை, யாரும் அதன் மீது கவனமும் செலுத்தவில்லை.

சாசனம் கூறியது: இதுதான் எங்கள் இலட்சியம். இது எங்கள் நிலம் என்பதுதான் எங்கள் லட்சியம். நாங்கள் அதனை எடுத்துக்கொள்வோம். உண்மையில் அது ஹெரூத் கோருவதை விடவும் வேறுபட்ட ஒன்றல்ல. அது ஊடகங்களில் உடனடியாக ஊதிப் பெருக்கப்பட்டது. அது பாலஸ்தீன விடுதலை அமைப்பு கூட்டு உடன்படிக்கை என்றழைக்கப்பட்டது. பி.எல்.ஓ. கூட்டு உடன்படிக்கை இஸ்ரேலை அழிக்கத் திட்டமிடுகிறதென்றது. அது பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. யாருக்குமே அதுபற்றி எதுவும் தெரியாது. ஆனாலும், அதுவொரு பெரிய பிரச்சனையாக்கப்பட்டது.

நான் இஸ்ரேலிய இராணுவ உளவுத்துறை அதிகாரி ஹர்காபியை சில ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தேன். தற்செயலாக அவர் ஒரு புறாவைப் போல் காணப்பட்டார். அவர் இஸ்ரேலின் கொள்கையை மிகவும் விமர்சித்தார். அவர் ஆர்வமூட்டினார். நாங்கள் இங்கு எம்.ஐ.டியில் ஒரு நேர்காணலை நடத்தினோம். தற்செயலாக அப்போது அராபிய செய்திகளில் ஒரு செய்தி வெளிவந்தது. அதாவது நான் பாலஸ்தீனர்கள் சாசனம் ஒரு வகையில் சங்கடமளிப்பதாக உள்ளதால், அதனை அவர்கள் அதிகாரப்பூர்வமாகக் கைவிடுவது குறித்து சிந்திக்கிறார்கள் என்று நான் கூறுவதாகவும், பேசுவதாகவும் அது கூறியது.

எனவே, “அவர்கள் அதனைக் கைவிடுவதற்கு சிந்தித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் நீங்கள் ஏன் அதை முதன்முதலில் வெளியே கொண்டு வந்தீர்கள்?” என நான் அவரிடம் கேட்டேன். அவர் ஏதோ ஆவியுடன் பேசுவதைப் போல வெறுமையான பார்வையை வீசினார். அவர்கள் நாம் பேசுவதை புரிந்துகொள்ள முடியாதது போலிருக்க பயிற்சியளிக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் அதை மிகத் துல்லியமாகப் புரிந்து கொண்டிருப்பார்கள்.

அவர் சொன்னார், “ஓ, நான் அதைப் பற்றிக் கேள்விப்படவேயில்லை”. இது நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று. பெய்ரூட்டிலிருந்து வெளியாகும் அராபிய செய்திப் பத்திரிகைகளிலிருந்து துளித் துளியாக நான் படித்து அறிந்து கொண்டது இஸ்ரேலிய இராணுவ உளவுத்துறை தலைவருக்குத் தெரியாது என்பது சாத்தியமற்றது. அவருக்கு அது நிச்சயம் தெரியும்.

அது மிகவும் பயன்படக்கூடிய பிரச்சார செய்தியாக இருக்கும், பாலஸ்தீனர்களை அதற்கு வெளியே நிறுத்தும் முயற்சியை உறுதிப்படுத்த அது மிகவும் சிறந்தது என்பதை அவர் உணர்ந்ததாலேயே, அதாவது இஸ்ரேலிய உளவுத்துறை உணர்ந்ததாலேயே அதை அவர் முக்கியமாக வெளியே கொண்டுவர முடிவெடுத்தாரென நம்புவதற்கு அனைத்துக் காரணங்களும் உண்டு. நாம் அதைத் தாக்கினால் அவர்கள் பின்வாங்கிக் கூறப் போகிறார்கள்: ஹமாஸ் சாசன விஷயத்தில் நடந்து கொண்டிருப்பது போல் நாங்கள் நிர்ப்பந்தம் காரணமாக அதைக் கைவிடப் போவதில்லை.

அவர்கள் அதைப் பற்றிப் பேசுவதை நிறுத்தினால் ஒவ்வொருவரும் அதைப் பற்றி மறந்து போய் விடுவார்கள், ஏனென்றால் அது பொருளற்றது. ஒரு எளிமையான காரணத்தால் அதை ஆவணப்படுத்துவது இப்போது சாத்தியமற்றது. ஆவணங்கள் அனைத்தும் பெய்ரூட்டில் பாலஸ்தீன விடுதலை அமைப்பின் அலுவலகங்களில் இருந்தன. இஸ்ரேல் பெய்ரூட் மீது படையெடுத்த போது, அனைத்து ஆவணங்களையும் கொள்ளையடித்து விட்டது. அவர்கள் அவற்றை எங்கே வைத்திருப்பர் என்று நான் ஊகித்தாலும், யாராலும் அவற்றை நெருங்கி விட முடியாது.

இஸ்ரேலை ஆதரிப்பதில் அனேகமாக முழு (அமெரிக்க) நாடாளுமன்றமும் ஒரே குரலில் பேசுவதற்கு என்ன காரணம்?   மெசாசூட்டி பகுதியிலிருந்து வரும் செனட் உறுப்பினர், அதிகமாக வேவு பார்க்கப்படும் ஜனநாயகவாதி எலிசபத் வாரன் உட்பட “தற்காப்பு” என்று பெயரிடப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அனேகமாக அவருக்கு மத்திய கிழக்கு குறித்து எதுவும் தெரியாது. அது அப்படித்தான் இருக்கும் என்பது யூகிக்கக்கூடிய ஒன்று. இராணுவ நடவடிக்கைக்கையில் அமெரிக்கா பயன்படுத்துவதற்காக, ஆயுதங்களை இஸ்ரேலில் அமெரிக்கா முன்கூட்டியே குவிப்பதை எடுத்துக் கொள்ளுங்கள். அதுவே மிக நீண்டகாலம் முன்னர் நடைபெற்ற மிக நெருக்கமான இராணுவ, உளவு கூட்டணியின் சிறிய பகுதி. அது உண்மையில் 1967க்குப் பிறகு நிகழ்ந்தாலும், அதற்கு முன் சிறிதளவுகளில் இருந்தது.

அமெரிக்க இராணுவ, உளவுத்துறைகள் இஸ்ரேலை ஒரு பெரிய தளமாகப் பார்க்கின்றன. உண்மையில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஒரு ஆர்வமூட்டும் இரகசியச் செய்தி உலகம் முழுதும் மிகவும் கேந்திரமான மையங்கள் என பென்டகனின் வரிசைப் பட்டியலைக் காட்டியது. அவை எவ்வளவு சிறியவையென்றாலும் எப்படியாவது காப்பாற்றப்பட வேண்டும். அவற்றில் ஒன்று மிகப்பெரிய இராணுவத் தொழிற்சாலையான ஹைஃபா, ரஃபேல் இராணுவத் தொழிற்சாலைகளிலிருந்து சில மைல் தூரத்தில் உள்ளது.

சிறிய அளவிலான பறக்கும் உளவுக் கருவிகளுக்கான தொழில்நுட்பமும் பிறவும் அங்குதான் உருவாக்கப்படுகின்றன. அது உலகிலேயே அதிக முக்கியத்துவமுடைய அமெரிக்க கேந்திர நலன்களில் ஒன்று. எந்த அளவுக்கு ரஃபேல் நிறுவனத்துக்கு அது புரியும் என்றால், பணம் புரளும் வாஷிங்டனுக்கு தனது தலைமையகத்தைக் கொண்டு செல்லுமளவுக்கு அது புரியும். அதுவே இருக்கக்கூடிய உறவுமுறையை சுட்டிக் காட்டுவதாகும்.

 

அதற்கு அப்பாற்பட்டும் விசயங்கள் உள்ளன. அமெரிக்க முதலீட்டாளர்கள் இஸ்ரேல் மீது காதல் கொண்டிருக்கின்றனர். வாரன் பஃப்பட் சில பில்லியன் டாலர்களுக்கு சில இஸ்ரேல் நிறுவனங்களை வாங்கினார். அமெரிக்காவுக்கு வெளியே அமெரிக்க முதலீட்டுக்கு சிறந்த இடம் இஸ்ரேல்தான் என்று அவர் அறிவித்தார். பெரிய நிறுவனங்களான இன்டெல் போன்றவை இஸ்ரேலில் பெருமளவு முதலீடு செய்கின்றன. அது ஒரு மதிப்புடைய வாடிக்கையாளர்: அது மிகக் கேந்திரமான இடத்தில் அமைந்துள்ளது, அமெரிக்கா விரும்பியதைச் செய்கிறது, ஒடுக்குமுறைக்கும், வன்முறைக்கும் அது காத்துக்கிடக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றமும், மக்களும் விதிக்கும் தடைகளை சுற்றி வளைத்து மீறி தன் வன்முறையைத் தொடர்ந்து அரங்கேற்றுகிறது.

முடிப்பதற்கு முன்னால் உங்களது சமீபத்திய புத்தகமான ‘அதிகார முறைகள்’ என்பதிலிருந்து சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். “உங்களுக்குப் பேரக் குழந்தைகள் இருக்கின்றன. எந்த வகையான உலகை அவர்கள் வரித்துக் கொள்ள வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?” என நான் கேட்க விரும்புகிறேன்.

                நாம் நமது பேரக்குழந்தைகளுக்காக உருவாக்கும் உலகம் கொடுமையானது. அதுபற்றிய பெரும் கவலை ஒன்று கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெற்ற பேரணியில் வெளிப்படுத்தப்பட்டது. நியூயார்க்கில் திரண்ட சில லட்சக்கணக்கானவர்கள், புவி வெப்பமாதல் பிரச்சனையைக் கட்டுக்குள் கொண்டுவர, சில தீவிரமான நடவடிக்கைகளைக் கோரினர்.

இது நகைப்புக்குரிய விசயமல்ல. மனித உயிர்களின் வரலாற்றில் முதல்முறையாக, நமது பேரக்குழந்தைகளின் கண்ணியமான பிழைத்திருத்தலை தீர்மானிக்கும் ஒரு முடிவை எடுக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. முன்பு ஒருபோதும் இப்படி நடந்ததில்லை. நாம் ஏற்கனவே எடுத்த முடிவுகள் உலகெங்கும் பெருமளவில் இனங்களை அழித்தொழித்து வருகின்றன.

இன்று உலகில் நடந்து வரும் இனப் பேரழிவுகள் சுமார் அறுபத்தையாயிரம் ஆண்டுகளுகு முன் ஒரு மிகப்பெரும் விண்கல் பூமியைத் தாக்கிய போது ஏற்பட்டதற்கிணையான மிரட்சியூட்டும் சுற்றுச்சூழல் விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. அது டைனோசர்களின் சகாப்தத்தை அழித்தது; அவை துடைத்தழிக்கப்பட்டன. அது சிறிய பாலூட்டிகளின் வளர்ச்சிக்கான வாய்ப்பையும் ஏற்படுத்தியது. அவை வளர்ந்தன, இறுதியாக நாம் (மனித இனம்) வந்தோம். அதேதான் இப்போது நடைபெறுகிறது, ஆனால் நாம்தான் விண்கல்லாக இருக்கிறோம். நாம் இப்போது சுற்றுச்சூழலுக்குச் செய்து வரும் விஷயங்கள் அறுபத்தைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூழலை உருவாக்கி வருகிறது. மனித இனம் அதன் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இந்தக் காட்சி மிகவும் மோசமான ஒன்று.

எனவே பேரணி நடைபெற்ற செப்டம்பர் 21 ஒரு நேர்மறையான முன்னேற்றத்தைக் காட்டுகிறது. உங்களால் சில விஷயங்களைச் செய்ய முடியும், அனைத்தையும் நாம் அழித்தொழிக்கப் போகிறோம் என்பதுதான் ஒரே முடிவில்லை என்பதன் அறிகுறியாக இருந்தது. அதே நாளில் ஒரு பெரிய சர்வதேச அறிவியல் கண்காணிப்பு முகமை 2013ம் வருடத்துக்கான பசுமைக்கூட வாயுக்களுக்கான புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அவை சாதனை அளவை எட்டிவிட்டன: அதற்கு முந்தைய ஆண்டை விட அவை 2% அதிகரித்து விட்டன. அமெரிக்காவைப் பொறுத்த வரை இன்னும் அதிகமாக 3% வரை அதிகரித்து விட்டன.

அதே நாளில் அமெரிக்க மருத்துவ சஞ்சிகை நியூயார்க்குக்கு கணிக்கப்படும் அதிவெப்ப நாட்களின் எண்ணிக்கை குறித்து ஒரு ஆய்வை வெளியிட்டது. அதிவெப்பம் என்றால் 90 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல். அது நியூயார்க்கில் மும்மடங்காகுமென்றும், தூரத்தெற்கில் மிக மோசமான விளைவுகள் ஏற்படுமென்று அவர்கள் கணித்துள்ளனர். இதுவெல்லாம் கடலின் மட்டம் அதிகரிக்குமென்ற கணிப்புக்களுடன் ஒத்துப் போகின்றன. அது பாஸ்டன் நகரின் பெரும்பகுதியைக் கடலுக்குள் ஆழ்த்தப் போகிறது. பங்களாதேஷ் கடல்புறத் திட்டத்தை விடுங்கள், பல லட்சம் பேர் வாழும் அது அழிந்து விடப் போகிறது.

இவையெல்லாம் தவிர்க்க இயலாதவை. இந்தத் தருணத்தில் நமது நிறுவனங்களின் தர்க்கம் அதை முன்னே கொண்டு சென்று கொண்டிருக்கிறது. எனவே மிகப்பெரும் மின்னுற்பத்தி நிறுவனமான எக்சான் மோபில், தனது முயற்சிகளையெல்லாம் நிலத்தடி எண்ணெயை எடுப்பதில் செலுத்தப்போவதாக அறிவித்துள்ளது, ஏனென்றால் அது அதிக இலாபம் கொடுக்கக்கூடியது. இதற்கு நாம் அவர்களைக் குறை கூற முடியாது. அதுதான் முதலாளித்துவத்தின் அமைப்பின் இயல்பு, அதன் தர்க்கம். நிறுவனக் கட்டுமானத்தின்படி அதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும். அவர்கள் இலாபமீட்ட வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. அது அவர்களது பேரக்குழந்தைகளுக்கு நாகரீகமான வாழ்வை அழித்தொழிக்குமென்றால், அது அவர்கள் பிரச்சனையல்ல.

இன்னொரு பெரிய மின்னுற்பத்தி நிறுவனமான செவ்ரானிடம் ஒரு சிறிய தாக்குப்பிடிக்கும் திட்டம் இருந்தது. நற்பெயருக்காக அவர்கள் அதனை செயல்படுத்திவந்தனர். அதிலிருந்து லாபமும் கிடைத்தது. ஆனாலும் அவர்கள் அதனை மூடி விட்டனர். காரணம் நிலத்தடி எண்ணை அதைவிட இலாபகரமானது.

அமெரிக்காவில் இப்போது எங்கு நோக்கினும் பூமியைக் குடைந்து கொண்டிருக்கிறார்கள். அது வரம்புக்குப்பட்டிருக்கும் இடமும் ஒன்றுண்டு அது மைய அரசின் நிலங்கள். ஒபாமா மைய அரசின் நிலங்களுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்தி விட்டதாக மின்னுற்பத்தி நிறுவனங்கள் கசப்புடன் குற்றம் சாட்டுகின்றன. உள்துறை இப்போதுதான் புள்ளி விவரங்களுடன் வந்துள்ளது. அது நேர்மாறாக உள்ளது. ஒபாமாவின் ஆட்சியில் மைய அரசின் நிலங்களில் துளையிடுவது நிலையானபடி அதிகரித்து வந்துள்ளது. கடலுக்குள் துளையிடுவதுதான் குறைந்துள்ளது.

ஆனால் அது மெக்சிகோ வளைகுடாவில் பிரிட்டிஷ் பெட்ரோலியக் கிணறுகளில் உண்டான கசிவால் ஏற்பட்ட எதிர்வினை. அந்தப் பேரழிவுக்குப் பிறகு உடனடி எதிர்வினை பின்வாங்குவது. மின்னுற்பத்தி நிறுவனங்கள் கூட ஆழ்கடலில் துளையிடுவதிலிருந்து பின்வாங்கின. லாபிக்கள் இப்போது இந்த விஷயங்களை ஒருங்கிணத்து வருகின்றன. நிலத்தில் துளையிடுவது இப்போது அதிகரித்து வருகிறது. இந்தப் போக்குகள் மிகவும் ஆபத்தானவை. உங்கள் பேரக்குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட உலகம் கிடைக்குமென்பதை நீங்கள் கணித்து விட முடியும்.

நன்றி: ஜாகோபின் சஞ்சிகை (2015, பிப்ரவரி 14, பீப்பிள்ஸ் டெமாக்ரசி)%d bloggers like this: