மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


சீத்தாராம் யெச்சூரியுடன் சிறப்பு கேள்வி – பதில் பகுதி …


சமீபத்தில் தமிழகம் வந்திருந்த, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இளைஞர்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளித்தார். அதில் மார்க்சிஸ்ட் வாசகர்கள் சார்பில் எழுப்பப்பட்ட கேள்விகளும், பதில்களும் இங்கே தொகுத்து வழங்கப்படுகின்றன (பேட்டியை காணொலியாக http://www.youtube.com/tncpim என்ற முகவரியில் காணலாம்):

மென்பொருள் துறையில் நெருக்கடி உருவாகிவருகிறதே?

மென்பொருள் உற்பத்தித் துறையின் வேலைவாய்ப்புகள் சர்வதேச தேவையை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருந்தால் அது நெடுநாட்கள் நீடித்திருக்காது. இந்திய மென்பொருளாளர்கள் பிபிஓ மற்றும் கால் செண்டர் சேவைகளை விடவும் அதிகம் செய்ய முடிந்தவர்கள். உள்நாட்டு மென்பொருள் சேவைக்கான தேவையை மையமாகக் கொண்டு இத்துறையை வளர்த்தெடுக்க வேண்டும். சில பத்தாண்டுகளுக்கு முன்னர் சீனாவின் வன்பொருள் உற்பத்தியும், இந்தியாவின் மென்பொருள் உற்பத்தியும் இணைந்திருந்தால் உலகின் மிகப்பெரும் சக்தியாக இரு நாடுகளும் மாறியிருக்கும். இப்போது சீனா மென்பொருள் உற்பத்தியிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. அது நமக்கு போட்டியாளனாக வளர்ந்துவருகிறது. உள்நாட்டுத் தேவைகளை அதிகரிப்பதும், புதிய பகுதிகளுக்கு விரிவடையச் செய்வதும் அவசியம், வன்பொருள் உற்பத்தியையும் இங்கேயே மெற்கொள்ள வெண்டும். இது சற்று கடினமான பணிதான். ஆனால் நமக்கு மாற்று வழி வேறில்லை. அந்தந்த நாடுகளின் வேலை வாய்ப்புகளை அந்தந்த நாடுகளுக்கே தர வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் எழுப்பப்படுகிற சூழலில் நாம் வேகமாக செயல்பட்டாக வேண்டும்.

தனியார் மூலதனத்தை நிராகரித்துவிட்டு ஒரு தேசம் வளர முடியுமா?

தனியார் மூலதனத்தை யாரும் நிராகரிக்கவில்லை. ஒரு நாட்டை நவீனமாக நிர்மாணிப்பதில் தனியார் முதலாளிகளின் பங்கு குறைவுதான். அமெரிக்காவும் சீனாவும் வெவ்வேறு கொள்கைகளின் அடிப்படையில் இயங்குகின்றன. ஆனால், இரண்டு நாடுகளிலுமே தேச நிர்மாணத்தில் அரசு முதலீடுதான் அடிப்படையாக அமைந்துள்ளது. அரசு முதலீட்டிற்கு தக்க அளவில் தனியார் மூலதனம் குறிப்பிட்ட பங்கை செலுத்துகிறது. இந்த இராண்டையும் சரியான விகிதத்தில் பயன்படுத்த வேண்டும். நாம் அன்னிய மூலதனத்தை ஏற்க விரும்புகிறோம். ஆனால், இந்தியாவிற்கு முதலீடுகள் வருவதில்லை. சீனாவே முதலீட்டை எடுத்துக்கொள்வதாக புகார் செய்கிறோம். தனியார் கையில் உள்ள மூலதனத்தை எங்கே முதலீடு செய்வதென அவர் முடிவு செய்கிறார். நாம் நம்முடைய பொது முதலீடுகளைப் பயன்படுத்தி இந்திய உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். அப்போதுதான் தனியார் மூலதனத்தை இந்தியாவை நோக்கி ஈர்க்க முடியும்.

தனியார் துறையில் இட ஒதுக்கீடு ஏன் வேண்டும்? அது சாத்தியமான ஒன்றா?

இந்தியாவில் நடைபெற்ற நீண்ட விவாதத்தில் ஏற்பட்ட புரிதலில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை உருவானது. பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு அவர்களையும் சம தளத்திற்கு கொண்டுவருவதுதான் இட ஒதுக்கீட்டின் நோக்கம்.

இன்று பன்னாட்டு நிறுவன வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு எதுவும் பின்பற்றப்படுவதில்லை. அந்த நிறுவன பணி வாய்ப்பு மற்றும் பதவி உயர்வுகளில் ஒடுக்கப்பட்ட சமூகப் பின்னணி கொண்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இட ஒதுக்கீடு அமலாகாத பகுதிகளில் சமத்துவமற்ற சூழலே தொடர்கிறது.

அரசுத்துறை வேலைவாய்ப்புகள் குறுகிவரும் நிலையில், இட ஒதுக்கீட்டுக்கான வாய்ப்பு குறைகிறது. இட ஒதுக்கீட்டால் பலனடைந்த பிரிவினர் மற்றவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏன் என்று கேள்வியெழுப்புகின்றனர். மற்றொரு பகுதி தங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்கின்றனர். வேலைவாய்ப்புகள் குறைவதன் காரணமாக இந்த சமூக பதட்டம் ஏற்படுகிறது. கிடைக்கும் வேலைவாய்ப்புகளை யார் பயன்படுத்திக் கொள்வது? என்ற மோதல் எழுகிறது. இதனால்தான், தனியார் துறை வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை அமலாக்கக் கோருகிறோம்.

எந்த வடிவத்தில் அமலாக்குவதென்பதை விவாதித்து இறுதிப்படுத்த வேண்டும். அமெரிக்காவில் ஒரு நிறுவனம் அமைந்துள்ள பகுதியில் வாழ்வோரின் விகிதத்துக்கு ஏற்ப இட ஒதுக்கீடு என்ற முறை உள்ளது. இந்தியாவில் இது சாத்தியமான ஒன்றுதான்.

சாதி அடிப்படையிலான கட்சிகள் பற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் புரிதல் என்ன?

சாதிக் கட்சிகளில் இரண்டு விதமானவை உள்ளன. முதலாவது, ஒடுக்குதலுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட சாதியிலிருந்து வெளிப்படும் கலகக்காரர்கள். இத்தகைய ஒடுக்குமுறைக்கு எதிரான கலகம் சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்கும். மற்றொன்று, ஒரு சாதிக்கு மட்டும் உட்பட்டு நடைபெறும் கலகம் சாதி அடையாளத்தை உள்ளடக்கிய வாக்கு வங்கி அரசியல்.இது அந்தக் கட்சிகளை ஜனநாயக மைய ஓட்டத்திற்கு இழுத்துவருவதில்லை.

இந்தியாவில் மிகப்பெரிய அளவில் சாதி எதிர்ப்பு போராட்டங்கள் நடந்திருக்கின்றன. ஜோதிபாபூலே, அம்பேதகர், பெரியார் என தலைவர்கள் ககோடிக்கணக்கான மக்களை ஈர்த்தனர். ஆனால், இன்னமும் ஏன் இந்த முழக்கங்கள் வெற்றியடைவில்லை. காந்தி உள்ளிட்டவர்கள் மக்களின் மனநிலையில் மாற்றம் கோரினார்கள். நிலைமை அப்படியே தொடரும்போது மனநிலை மட்டும் மாறாது. பொருளாதார ஏற்றம் இல்லாமல் சமத்துவத்துக்கான போராட்டத்தை வெற்றியடையச் செய்ய முடியாது. இந்தப் புரிதலுடனேயே மார்க்சிஸ்டுகள் இரண்டுக்குமான போராட்டத்தை நடத்துகிறோம்.

சாதி வலைப்பின்னலைப் பயன்படுத்திக்கொள்ளும் சாதிக் கட்சிகள், அந்த சாதி மக்களின் எதிர்காலத்துக்கும் நல்வாழ்வுக்கும் நாங்கள்தான் வழிவகுப்போம் என்று நம்பிக்கை ஏற்படுத்தி, அரசியல் திரட்டளை மேற்கொள்கின்றனர். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் முந்தைய கொள்கைகளையே தொடர்கின்றன. மக்கள் நலவாழ்வுக்கும், எதிர்காலத்துக்கும் உதவாத அந்தக் கொள்கைகளை நாம் அம்பலப்படுத்த வேண்டும். சாதி அடிப்படையிலான அடையாள அரசியலை எதிர்கொள்ள இதுதான் வழி.

 %d bloggers like this: