மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தீர்மானம் … 2


இப்பின்னணியில் கட்சியின் அடுத்த 3 ஆண்டுகளுக்கான அரசியல் உத்தி 5 அம்சங்களை உள்ளடக்கியதாக உள்ளது:

1. பிஜேபி அரசின் கொள்கைகளை எதிர்ப்பது பிரதான அரசியல் கடமை. ஏற்கனவே கூறியது போல் பொருளாதாரக் கொள்கை மற்றும் அனைத்து தளங்களிலும் செயல்படும் வகுப்புவாதக் கொள்கை மற்றும் நடவடிக்கைகள் தடுக்கப் பட வேண்டும். ஒருங்கிணைந்த போராட்டமாக இது இருக்க வேண்டும்.
2. பிஜேபிக்கு எதிரான போராட்டத்துக்குப் பிரதான அழுத்தம் கொடுக்கப் பட்டாலும், காங்கிரஸ் எதிர்ப்பு தொடரும். எவ்விதப் புரிந்துணர்வும், தேர்தல் கூட்டும் காங்கிரசுடன் இல்லை. இந்தியாவில் நவீன தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்தைத் துவங்கியதே இக்கட்சி தான். பெருமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ நலனின் பாதுகாவலராக விளங்கியதும் இவர்கள் தான். இன்றும் அதைத் தான் பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர். நவீன தாராளமயக் கொள்கைகளை எதிர்த்த போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்பது அரசியல் தீர்மானத்தின் பிரதானமான அம்சமாக இருக்கும் போது, இவர்களுடன் தேர்தல் கூட்டுக்கு இடம் இல்லை.
3. நவீன தாராளமய எதிர்ப்பு என்று சொன்னால் மத்திய அரசு மட்டுமல்ல, மாநில அரசாங்கங்கள் பின்பற்றும் மக்கள் விரோத கொள்கைகளும் எதிர்க்கப் பட வேண்டும். அதாவது, மாநில முதலாளித்துவ கட்சிகளின் கொள்கைகளுக்கும் இது பொருந்தும். பொதுவாக முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கொள்கைகளை அவை எங்கிருந்து வந்தாலும் எதிர்ப்பதாக நமது அணுகுமுறை அமைய வேண்டும். அப்போது தான் நம்மை வேறு படுத்திக் காட்ட முடியும், இக்கட்சிகளுக்குப்பின் உள்ள மக்களைக் கொள்கை அடிப்படையில் இடது ஜனநாயக அணியை நோக்கி ஈர்க்க முடியும்.
4. நமது கட்சியின் சொந்த பலம் உயர்வதன் மீது முழு கவனமும் இருக்க வேண்டும். வர்க்க பிரச்னைகள், சமூக ஒடுக்குமுறை பிரச்னைகள், ஸ்தல பிரச்னைகள் மீது திட்டவட்டமான தலையீடுகள் வேண்டும். பெருமளவு மக்கள் பங்கேற்புடன் போராட்டங்களை உருவாக்கி, கிடைக்கும் தொடர்புகளை ஸ்தாபன படுத்தி, அரசியல் படுத்த வேண்டும். அதே சமயம் இதர மதச்சார்பற்ற அமைப்புகள், கட்சிகளுடன் குறிப்பான பிரச்னைகளின் மீது கூட்டு இயக்கங்கள் நடத்துவதிலும் முன்னேற்றம் வேண்டும். வர்க்க வெகுஜன அமைப்புகளும் சொந்த பலத்தை அதிகரிப்பதிலும், கூட்டு இயக்கங்களை பலப்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். இவற்றின் மூலம் பெரும் திரள் மக்கள் நம் பக்கம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
5. இடது ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து இடது ஜனநாயக அணியைக் கட்டுவது முக்கிய கடமை. கூட்டு இயக்கங்கள், போராட்டங்களின் மூலமே இது சாத்தியம்.
தேர்தல் உத்தி என்பது, கட்சியின் நலனுக்குப் பயன்படுவதாகவும், இடது ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைப்பதாகவும் இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் இடதுசாரிகள் அல்லாத கட்சிகளுடன் தேவைப்பட்டால் மாநில அளவில் தொகுதி உடன்பாடு கொள்ளலாம். அரசியல் நடைமுறை உத்தி பரிசீலனை கூறுவது போல், அகில இந்திய அளவில் மாநில முதலாளித்துவ கட்சிகளை ஒரு அரசியல் மாற்றாக முன்னிறுத்துவது இருக்காது.
இடதுசாரி ஒற்றுமை:
இடது ஜனநாயக அணியைக் கட்டுவதற்கு இடதுசாரி ஒற்றுமை இன்றியமையாதது. 4 இடதுசாரிக் கட்சிகளின் கூட்டு இயக்கம் என்பது விரிவடைந்து 6 கட்சிகளாக தேசிய அளவில் மாறியுள்ளது. சில மாநிலங்களில் எண்ணிக்கை கூடியுள்ளது. உதாரணமாக, மேற்கு வங்கத்தில் 17 கட்சிகளும், ஆந்திரா தெலுங்கானாவில் 11 கட்சிகளும் பிரச்னைகளின் அடிப்படையில் கூட்டு இயக்கம் நடத்திக் கொண்டிருக்கின்றன. எல்லா பிரச்னைகளிலும் இவற்றுக்கு ஒத்த கருத்து கிடையாது. இருக்கும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால் ஒத்த கருத்து உள்ள பிரச்னைகளில் இணைந்து செயல்படுவது, இடதுசாரிக் கண்ணோட்டத்தை, நிலைபாட்டை மக்கள் முன் நிறுத்த உதவும். அதாவது ஒரு புறம் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கண்ணோட்டம், மறு புறம் இடதுசாரிகளின் கண்ணோட்டம் என்று பிரித்துக் பார்க்க மக்களுக்கு இது உதவும்.
இந்த நேரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைவது குறித்துக் கருத்துக்கள் தொடர்ந்து எழுப்பப் படுகின்றன. எதற்காகக் கட்சி பிரிந்தது என்று நினைவுபடுத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது. தலைவர்கள் அல்லது தலைமைக்கு இடையிலான பிரச்னை காரணம் அல்ல, அதே போல் அவ்வப்போது எழும் அரசியல் நிகழ்வுகளில் கருத்து வேறுபாடுகள் என்பதும் காரணமல்ல. இவை சுலபமாகத் தீர்க்கப் படக் கூடியவை. அடிப்படையான சித்தாந்த போராட்டத்தின் காரணமாகவே கட்சி பிரிந்தது. திருத்தல்வாதத்துக்கு எதிரான போராட்டமாக அது இருந்தது. கட்சி திட்டத்தின் முக்கிய அம்சமான இந்திய அரசின் வர்க்கத் தன்மை பற்றிய மதிப்பீட்டில் துவங்கி வேறு சில கொள்கை சார் பிரச்னைகளிலும் கருத்தொற்றுமை ஏற்படாமல் இரு கட்சிகளும் ஒன்றிணைவது குறித்து சிந்திக்க இயலாது. எனவே, தற்போது பிரச்னைகள் அடிப்படையில் கூட்டுப் போராட்டத்தை உறுதி செய்வது, வர்க்க வெகுஜன அமைப்புகளுக்கிடையே கூட்டு இயக்கங்களை சாத்தியமாக்குவது போன்றவை குறித்தே திட்டமிட முடியும். அதில் ஒரு முன்னேற்றத்தை எட்ட வேண்டும்.
நமது அடிப்படை தளங்களான மேற்கு வங்கம், கேரளா, திரிபுராவை வலுப்படுத்த வேண்டும். மேற்கு வங்கத்தில் இன்று வரை தொடரும் படுகொலைகள், தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். மேற்கு வங்கத் தோழர்கள் பல அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். நம்பிக்கையுடன் பேசினர். மாநாடு நடக்கும் நேரத்தில் கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் இடது முன்னணி அரசின் நீண்டகால சட்டமன்ற அவைத்தலைவராக இருந்த அப்துல் ஹலீம் மீது துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நடந்தது. மயிரிழையில் அவர் உயிர் தப்பினார். 2011 தேர்தலுக்குப் பின் இன்று வரை 163 தோழர்கள் கொல்லப் பட்டுள்ளனர். அவர்களது தியாகங்கள் வீண் போகாது, செங்கொடி பட்டொளி வீசிப் பறக்கும் காலம் மீண்டும் வரும் என்ற நம்பிக்கையை மாநாட்டு விவாதம் ஏற்படுத்தியது. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் ஆதரவு குரல்கள் ஒலிக்க வேண்டிய அவசியத்தைத் தீர்மானம் சுட்டிக் காட்டுகிறது. கட்சியின் சொந்த பலம் அதிகரிப்பு, இடதுசாரி ஒற்றுமை, இடது ஜனநாயக அணியைக் கட்டுவது என்று எதை எடுத்தாலும், கட்சியின் தளங்களாக இருக்கும் மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா மாநிலங்களில் கட்சியைப் பாதுகாப்பது என்பது அத்துடன் இணைந்ததாகும்.
இடது ஜனநாயக அணி:
வரும் காலத்தில் இடது ஜனநாயக சக்திகளை இனம் கண்டு, இடது ஜனநாயக அணியைக் கட்டிட வேண்டும் என்று தீர்மானம் விரிவாகக் கூறுகிறது. இது தேர்தலுக்கான அணி அல்ல. வர்க்க பலாபலனில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய வர்க்க அணி. இந்தக் கட்சி சரியில்லை, அந்தக் கட்சி பரவாயில்லை என்பதல்ல பிரச்னை. முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளின் திட்டம் என்ன, அதற்கு மாற்றாக இடது ஜனநாயக அணி வைக்கும் திட்டம் என்ன என்பது தான் முக்கியம். அதை மக்களிடன் கொண்டு சேர்ப்பது தான் முக்கியம். மாற்றுத் திட்டம் சுருக்கமாக வரையறுக்கப் பட்டிருக்கிறது. தோழர்கள் ஏராளமான திருத்தங்களை முன்மொழிந்துள்ளனர். அவற்றையெல்லாம் உள்வாங்கி, அந்த பத்திகள் இறுதிப்படுத்தப் படும் என்று முடிவு செய்யப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் அடிப்படையிலேயே இடது ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டும்.
இந்த அணிக்கு வர வேண்டிய சக்திகள் எவை என்பது ஒரு முக்கிய கேள்வி. பொதுவாக இதன் மையம் இடதுசாரிக் கட்சிகள் அவற்றின் வர்க்க வெகுஜன அமைப்புகள். பிறகு இடதுசாரிக் குழுக்கள், இடதுசாரி கண்ணோட்டமுள்ள அறிவு ஜீவிகள், பல கட்சிகளில் சிதறிக்கிடக்கும் சோஷலிஸ்டுகள், ஜனநாயக சக்திகள். அத்துடன் ஆதிவாசி, தலித், பெண்கள், சிறுபான்மையினர் மத்தியில் செயல்படும் ஜனநாயக அமைப்புகள், ஒடுக்கப் பட்ட பகுதியினருக்காகக் குரல் கொடுக்கும் சமூக இயக்கங்கள் போன்றவற்றை இதில் கொண்டு வர வேண்டும். கொண்டு வருவது என்றால், மாற்று திட்டத்தின் அடிப்படையில் இவற்றுடன் இணைந்து போராட்டங்களை உருவாக்கிட வேண்டும். போகப் போக இது ஒரு வடிவம் பெறும். இந்த அனுபவம் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடலாம். ஆனாலும் இவை எல்லாம் அகில இந்திய அளவில் இடது ஜனநாயக அணி கட்டப்பட பங்களிப்பு செய்யும். இனி வரும் காலத்தில் நமது அனைத்து உத்திகளும் இடது ஜனநாயக அணியைக் கட்டுவதை நோக்கியே இருக்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் கட்சியும், வர்க்க வெகுஜன அமைப்புகளும் பெருமளவு விரிவாக்கம் அடைந்தால் தான், இடதுசாரி ஒற்றுமையை விரிவாக்கி, இடது ஜனநாயக அணியைக் கட்ட முடியும். இது முன் வைக்கும் மாற்றுத் திட்டமே, முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கொள்கைகளிலிருந்து மக்கள் முன் நம்மை மாறுபடுத்திக் காட்டும். இடது ஜனநாயக அணி, ஒரு கட்டத்தில் தொழிலாளி வர்க்கத் தலைமையிலான மக்கள் ஜனநாயக அணி அமைக்கப் படும் நிலைக்கு இட்டுச் செல்லும். இது தான் நாம் பின்பற்ற வேண்டிய பாதை. கட்சித் திட்டம் குறிப்பிடுவதும் இதைத் தான். இதை கவனத்திலிருந்து அகற்றாமல், இதை நோக்கியதாக நமது பணிகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஒரு துடிப்பான, எழுச்சியான தொழிலாளி வர்க்கக் கட்சியாக, பல பகுதி உழைக்கும் மக்களை ஈர்க்கக் கூடியதாக மார்க்சிஸ்ட் கட்சி நிச்சயம் பலம் பெறும் என்பதே அரசியல் தீர்மானத்தின் சாரம்.%d bloggers like this: