மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


தொழில்நுட்ப வளர்ச்சி யுகத்தில் முதலாளித்துவம்


எஸ்.பி. ராஜேந்திரன்

1

2007-08ம் ஆண்டு அமெரிக்காவில் மையம் கொண்டு, உலகெங்கிலும் பரவி, இன்றைக்கு ஒட்டுமொத்த முதலாளித்துவ பொருளாதாரத்தையும் திணறச் செய்திருக்கிற மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியானது, முதலாளித்துவம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள புதிய வழிகளைத் தேடியே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே மேற்கத்திய பொருளாதாரங்கள் தொழில் சமூகங்களாக இருந்த நிலையிலிருந்து மாறி தொழில் வளர்ச்சிக்குப் பிந்தைய சமூகங்களாக வளர்ச்சி பெற்றிருக்கின்றன. இது அடுத்த கட்ட மாற்றத்தை நோக்கி மிக வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது.

ஒருபுறத்தில் ஏற்கனவே போராடிப் பெற்ற அனைத்துவிதமான உரிமைகளும் பறிக்கப்பட்டு வரும் நிலையில், `உரிமைகள் பெற்றிருப்பதே ஒரு உரிமை” என்ற நிலைக்கு உலகின் பெருவாரியான மக்களை முதலாளித்துவம் தள்ளியிருக்கிறது. மறுபுறத்தில் அனைத்துவிதமான தொழில்நுட்ப வளர்ச்சியையும் முற்றிலும் தனது லாபத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவும் முதலாளித்துவம் தீவிரமானப் பயணத்தை துவங்கியிருக்கிறது.

தொழில் மூலதனம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள – தனது லாபத்தை மேலும் மேலும் பெருக்கிக் கொள்ள நிதிமூலதனமாக மாறி உலகெங்கிலும் எல்லைகளை உடைத்துக் கொண்டு பயணித்தது. நிதி மூலதனம் அளவிட முடியாத தாக்குதலை உலகெங்கிலும் ஏழை, எளிய மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த கட்டமாக அது தனது லாப எல்லையை மேலும் விரிவுபடுத்திக் கொள்ளும் பொருட்டு தொழில்நுட்ப மூலதனமாக உருமாற்றிக் கொண்டுள்ளது.

இன்றைக்கு இந்த உலகையே ஆட்டுவிக்கும் அம்சமாக தொழில்நுட்ப மூலதனம் மாறியிருக்கிறது.

மேற்கத்திய நாடுகளில் மார்க்சிய மற்றும் இடதுசாரி ஆய்வாளர்கள், அறிஞர்கள் தொழில்நுட்ப மூலதனத்தின் வீச்சான வளர்ச்சி பற்றியும் அடுத்த தலைமுறை சமூகத்தினரிடம் அது ஏற்படுத்தப்போகும் விளைவுகளைப் பற்றியும் விரிவாக விவாதித்து வருகிறார்கள்.

முதலாளித்துவத்தின் துவக்க கால தொழில்சமூகத்தில் பிரதானமான முரண்பாடு அந்த தொழிலின் மூலதனத்திற்கும், தொழிலாளி செலுத்திய உழைப்புக்கும் அதில் இடையிலானதாக இருந்தது; இதில் தொழிலாளியே மிக முக்கிய சமூக நபராக இருந்தார். தொழில்வளர்ச்சிக்குப் பிந்தைய சமூகத்தில் இப்போதும் பொருட்கள் உற்பத்தி என்பதே பிரதான இடம் பெற்றிருக்கிறது. ஆனால் இதற்கு இடையிலேயே தகவல் தொழில்நுட்பத்தின் அறிமுகமும் படிப்படியான அதன் பிரம்மாண்ட வளர்ச்சியும் புதிய விதமான சமூக உறவுகளை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே நெருக்கடியில் சிக்கியுள்ள உலகமய நிதி மூலதனத்தை மீட்டு காப்பாற்றவும் அதை மேம்படுத்தி இன்னும் கொள்ளை லாபம் அடிக்கவும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் முதலாளித்துவத்தால் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. அதே நேரத்தில் இந்த தொழில்நுட்பங்களின் வீச்சைக் கொண்டு, வழக்கமான போராட்ட முறையில் எழுச்சிபெற முனையும் தொழிலாளர் அமைப்புகளை மவுனமாக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

2

நெருக்கடிகள் நிறைந்த முதலாளித்துவம், அந்த நெருக்கடியிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள சமூகத்தின் படைப்பாக்கத் திறன்களை சக்திவாய்ந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள முனையும் என்று கம்யூனிஸ்ட் அறிக்கையில் மாமேதைகள் கார்ல் மார்க்சும் பிரடெரிக் ஏங்கெல்சும் கூறுகின்றனர். வேகமாக தீவிரமடைந்துவரும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் அந்தக் கண்டுபிடிப்புகளின் வாயிலாக மேலும் மேலும் அதிகரிக்கும் மூலதனக் குவிப்பு ஆகியவை பற்றிய இயக்கவியல் புரிதல் நமக்கு இருக்குமானால், ஒவ்வொரு நாளும் வேகமாக மாறிவரும் இந்த உலகின் சமூக வாழ்க்கையின் அடிப்படை அம்சங்களைப் பற்றி எளிதாக ஆய்வு செய்திட முடியும்.

முதலாளித்துவத்தின் கீழ் அறிவியலும் தொழில்நுட்பமும் மக்கள் சமூகத்தை விட்டுவிட்டு தானாகவே அந்தரத்தில் வளர்ச்சி பெற்றுவிட முடியாது. ஆனாலும் முதலாளித்துவத்தின் தேவைகளுக்கேற்பவே தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த கண்டுபிடிப்புகள் வரலாறு நெடுகிலும் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகித்திருக்கின்றன. இதை 180 ஆண்டுகளுக்கு முன்பே மார்க்ஸ் மிக அழகாக குறிப்பிட்டிருக்கிறார். மனிதனின் சமூக உறவுகளின் மீது பிரதானமாக செல்வாக்கு செலுத்துவது தொழில்நுட்பத்தில் ஏற்படுகிற மாற்றங்களே… குறிப்பாக உற்பத்தி சார்ந்த தொழில்நுட்பத்தில் ஏற்படுகிற மாற்றங்களே என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் ஏற்படும் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார வளர்ச்சியினைச் சுற்றியே அந்த சமூகத்தின் கட்டமைப்பும், அந்த சமூக உறவுகளும் அதன் கலாச்சார நடவடிக்கைகளும் வடிவம் பெறும் என்றும் மார்க்ஸ் விளக்குகிறார். மார்க்சின் இந்தச் சிந்தனை நடப்பு சமூகத்தில், நடப்பு உலகத்தில் மிகச்சரியாக பொருந்துகிறது. அதன் புதிய வெளிப்பாடே தொழில்நுட்ப மூலதனம் என்பதை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவம் ஆகும்.

3

தொழில்நுட்ப வளர்ச்சி யுகத்தின் முதலாளித்துவம் என்பது, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்புகளின் கீழ் வேர்பிடித்து நிற்கிற சந்தை முதலாளித்துவத்தின் அடுத்த வடிவமே ஆகும். எதிர்காலத்தில் பெரிதாக உருவாகப்போகும் சகாப்தமாக அது இருக்கும் என்று மேற்கத்திய மார்க்சிய அறிஞர்கள் மதிப்பிடுகிறார்கள். தற்போது அது துவக்கக் கட்டத்தில் இருக்கிறது. சமூகத்தின் படைப்பாக்கத்திறனும் செறிந்த அறிவு வளர்ச்சியுமே முதலாளித்துவத்தின் அடிப்படையான மூலதனமாக இருக்கிறது.

தொழில்சார்ந்த முதலாளித்துவத்தின் அடிப்படை அம்சமாக மூலப்பொருட்கள், மூலதனம் மற்றும் தொழிற்சாலைகள், வேலைசெய்யும் தொழிலாளியின் உழைப்பு ஆகியவை இருந்தன. அந்த முதலாளித்துவத்தில் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் அதிக மதிப்புவாய்ந்தவையாக இருந்தன. அந்த தொழிற்சாலையில் நடக்கும் உற்பத்தி, அதற்காக செலுத்தப்படும் உழைப்பு, அதன் விளைவாக மிகப்பெருமளவில் கிடைக்கும் லாபம் என்பதே அடிப்படை அம்சமாக இருந்தது.

ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சி யுகத்தில் வளர்ந்து வரும் முதலாளித்துவத்தின் சகாப்தத்தில் இந்த உற்பத்தி சாதனங்களெல்லாம் இரண்டாமிடத்திற்கு சென்றுவிட்டன. மாறாக படைப்பாக்கத் திறனும் அறிவுமே தொழில்நுட்ப யுக முதலாளித்துவத்தின் அடிப்படை மூலதனமாக இருக்கிறது. இதில் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், இந்தப் புதிய தொழில்நுட்பங்களும் அறிவுச் சொத்தும் முழுக்க முழுக்க ஏகபோக கார்ப்பரேட் கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்பதுதான். புதிய தொழில்நுட்பங்களும் அவற்றின் முழுமையான பலன்களும் ஒட்டு மொத்த மக்களையும் சென்றடையவிடாமல் அவற்றுக்கு மிக அதிகமான விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தையும் இந்த ஏகபோகக் கம்பெனிகளே பெற்றிருக்கின்றன.

சமூகத்தின் படைப்பாக்கத் திறன் மற்றும் அறிவு வளர்ச்சியின் விளைவாக ஏற்பட்ட புதிய தொழில்நுட்ப வளர்ச்சியின் பலன் அனைத்தும் முற்றிலும் ஒரு பொதுச் சொத்தே ஆகும். ஆனால் அதைத் தனது லாபத்திற்காக முதலாளித்துவம் முற்றிலும் கைப்பற்றியுள்ளது என்பதே தொழில்நுட்ப வளர்ச்சி யுக முதலாளித்துவத்தின் அடிப்படை சாராம்சமாகும்.

தொழில்நுட்ப வளர்ச்சி யுகத்தில் மூலதனக் குவிப்பு

தொழில்நுட்ப வளர்ச்சி யுக முதலாளித்துவத்தின் வளர்ச்சியையும், சமூகத்தில் அதன் வீச்சையும் புரிந்து கொள்வதற்கு இரண்டு விதமான அணுகுமுறைகளை கையாளலாம்.

ஒன்று, தொழில்நுட்ப வளர்ச்சி யுக முதலாளித்துவம் என்பது நீண்ட கால அடிப்படையிலான தொழில்நுட்ப மூலதனத்தை குவிப்பதில் குறியாக உள்ளது. இது, தொழில் உற்பத்தி மூலதனத்தைப் போல ஒரு தொழிற்சாலை அல்லது அந்தத் தொழில் சார்ந்த சந்தை என்ற அளவில் மட்டும் நிற்பதல்ல; ஒட்டு மொத்த சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவது; ஒட்டுமொத்த சமூகத்தையும் சந்தையாக மாற்றுவது; அதற்கான கட்டமைப்பை உருவாக்குவது; எந்தவொரு தனிப்பட்ட நபர் அல்லது தனிப்பட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் அடங்காதது.

இரண்டாவது, மிக நுணுக்கமான அறிவு வளர்ச்சியையும் படைப்பாக்கத் திறனையும் மிகப் பிரம்மாண்டமான முறையில் கட்டவிழ்த்து விடுவது; இது முற்றிலும் தனி நபர்கள், தனி நிறுவனங்கள், குழுக்கள் என தனியாகவோ அல்லது கூட்டாகவோ விதவிதமான துறைகளில் எல்லையற்ற அறிவு வளர்ச்சியை எட்டுவது.

இந்த இரண்டு தளங்களிலும் தொழில்நுட்ப வளர்ச்சி யுக முதலாளித்துவம் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சி யுக முதலாளித்துவம் என்பது ஒரு புதிய சகாப்தம் ஆகும். இதன் எல்லைகளோ, எதிர்காலத்தில் இது எப்படி பயணிக்கும் என்பதோ இன்றைக்கு அறுதியிட்டுக் கூற முடியாத அளவிற்கு நாளுக்கு நாள், நிமடத்திற்கு நிமிடம் மாற்றத்தை உள்வாங்கிக் கொண்டே இருக்கிறது என்பதுதான் நம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம்.

4

தொழில்நுட்ப வளர்ச்சி யுக முதலாளித்துவத்தை உந்தித் தள்ளுகிற பிரதான அம்சங்களில் குறிப்பிடத்தக்கது புதிய புதிய கண்டுபிடிப்புகள் மிக வேகமாக குவிந்து கொண்டிருப்பது என்பதே. இருபதாம் நூற்றாண்டின் இரண்டாவது பிற்பகுதியில் எண்ணற்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறப்பட்டது. மனித குல வரலாற்றில் இதற்கு முன்பு ஒருபோதும் இப்படி நடந்ததில்லை. வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நடந்த புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அதற்கு காரணமான படைப்பாக்கத் திறன் ஆகியவையே தொழில்நுட்ப வளர்ச்சி யுக முதலாளித்துவத்தின் தோற்றத்திற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது.

புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ‘மேலும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சிந்தனைகள் அறிவுச் சொத்தாக வகைப்படுத்தப்பட்டன. இவை அனைத்தும் பொருளாதார அல்லது சமூக நோக்கத்திற்காக தேவைப்படும் என்று வகைப்படுத்தி இருப்பு வைக்கப்பட்டன. இத்தகைய புதிய புதிய சிந்தனைகள், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் மதிப்பு வாய்ந்த பொருளாகக் கருதப்பட்டது. இத்தகைய வளர்ச்சி சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூகத்தின் படைப்பாக்க மற்றும் கண்டுபிடிப்புத் திறனை அதிகப்படுத்தியது.

மேலும், இருபதாம் நூற்றாண்டின் இரண்டாவது பிற்பகுதியில்தான் மிகப் பெரிய அளவிற்கு கல்வி என்பது வெகு மக்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. குறிப்பாக தொழில்நுட்பக் கல்வி படிப்படியாக முக்கியத்துவம் பெற்றது. தொழில்நுட்ப வளர்ச்சி யுக முதலாளித்துவத்தின் தோற்றத்திற்கு இதுவும் உதவி செய்தது.

1940களின் பிற்பகுதியில்தான் உலகின் பல நாடுகளில் உயர்கல்வி பெறுவது ஒரு உரிமையாக மாற்றப்பட்டது. அதற்கு பிறகு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் உயர்கல்வி பெறுவதற்காக சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்தது. அதன் அடுத்த கட்டமாக தகவல் தொழில்நுட்பத் துறை என்பதும் பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றிருக்கிறது.

கட்டமைப்பு ரீதியாகவும் எளிதில் உலகம் முழுவதும் பரவும் விதத்திலுமான தொழில்நுட்ப மூலதனக் குவிப்பு என்பது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக அதிகரித்துள்ளது. கல்வி நிறுவனங்கள், ஆய்வுக் கூடங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் போன்றவை இதற்கு முன் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு சமூகத்தைச் சென்றடைந்துள்ளன. உள்ளூர் அளவில் தகவல் தொடர்பு ஏற்பாடுகள், இணையதள நெட்வொர்க் வசதிகள், அன்றாட வாழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் போன்றவையும் தொழில்நுட்ப வளர்ச்சி யுக முதலாளித்துவத்திற்கு உந்து சக்தியாக அமைந்துள்ளன.

 

தொழில்நுட்ப மூலதனக் குவிப்பால் உலகின் பல பகுதிகளிலும் இதற்கென்றே பிரேத்யேகமான தொழில்நுட்ப பிரதேசங்கள் புவியியல் ரீதியாகவே உருவாகிவிட்டன. அமெரிக்காவில் இதற்கு உதாரணமாக சிலிக்கான் பள்ளத்தாக்கு, தெற்கு கலிபோர்னியா, கிழக்கு டெக்சாஸ், வடக்கு கரோலினா, வடக்கு விர்ஜினியா போன்ற மாகாணங்களைக் குறிப்பிடலாம். இந்தியாவில் இதற்கு உதாரணமாக பெங்களூரு, ஹைதராபாத், சென்னை போன்ற இடங்களைக் குறிப்பிடலாம். நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் – உலகின் பல பகுதிகளில் இருந்தும் கூட இந்த குறிப்பிட்ட இடங்களுக்கு மிகப்பெரிய எண்ணிக்கையில் இளைய தலைமுறையினர் இடம் பெயர்ந்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. அவர்களது படைப்பாக்கத் திறனும் அறிவுச் சொத்தும் ஓரிடத்தில் குவிக்கப்பட்டு, அது தொழில்நுட்ப வளர்ச்சி யுக முதலாளித்துவத்தின் அடிப்படையான வளர்ச்சிக்கு நிரந்தர ஏற்பாடாக மாற்றப்பட்டுள்ளது.

 

5

மறுபுறத்தில் படைப்பாக்கத் திறனையும் அறிவுச் சொத்தையும் மிக வேகமாக கட்டவிழ்த்து விடுகிற நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. மனித குலத்தின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அறிவை பெருக்கிக் கொள்வதும் அதை கட்டவிழ்த்து விடுவதும் தற்போது எளிமையாகியுள்ளது. அ) முந்தைய காலத்தில் பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றிருந்த தொழில்நுட்ப அறிவு என்பது இன்று ஒட்டு மொத்த சமூகத்தின் வாய்ப்பாக மாறியுள்ளது. ஒட்டு மொத்த சமூகத்திற்கும் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்ற போதிலும் அறிவுப் பெருக்கம் என்பது இன்னும் கூட அமைப்புகள் மற்றும் ஓரளவிற்கு வசதி படைத்த நடுத்தர வர்க்கத் தனிநபர்களுக்கே எளிதாகக் கிடைக்கும் என்ற நிலை இருக்கிறது.

இன்றைக்கு கண்டுபிடிப்புகள் என்பவை முற்றிலும் கார்ப்பரேட் மயமாக்கப்பட்டுள்ளன. ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு என்று ( ரிசர்ச் அண்டு டெவலப்மெண்ட்) தனித்துறைகள் இயங்குகின்றன. இந்த நிறுவனங்களின் மிகப்பெரும் நிதி முதலீட்டுடன் ஏராளமான புதிய புதிய கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவிற்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் கண்டுபிடிப்புகள் உச்சத்தை எட்டியுள்ளன. இந்த கண்டுபிடிப்புகளின் குவிப்பு முழுக்க முழுக்க கார்ப்பரேட் மயமானவை. இது தொழில்நுட்ப வளர்ச்சி யுக முதலாளித்துவத்தின் உந்து சக்தியாக இருக்கிறது. புதிய புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்பாக்கத் திறன் ஆகிய தொழில்நுட்ப மூலதனம் மேற்படி ஏகபோக கார்ப்பரேட் கம்பெனிகளிடம் மேலும் மேலும் குவிந்து வருகிறது. இந்த மூலதனத்தைக் கொண்டு, உலகில் விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய வெகு சில ஏகபோக கார்ப்பரேட் கம்பெனிகள் உலகம் முழுவதும் மிகப் பிரம்மாண்டமான சந்தையை உருவாக்கியுள்ளன. அந்தச் சந்தையில் மிதக்கும் சிறிய ரக, பெரிய ரக நிறுவனங்கள் அனைத்தையும் விலை கொடுத்து வாங்குவது அல்லது இணைத்துக் கொள்வது என்ற முறையில் முழுமையாக கபளிகரம் செய்து கொண்டிருக்கின்றன.

கண்டுபிடிப்புகளும் அதற்கு உந்து சக்தியான படைப்பாக்கத் திறனும் ஒரு தொடர் நிகழ்வாக இருக்கும் விதத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி யுக முதலாளித்துவம் தற்போது ஒரு கட்டமைப்பை உருவாக்கி விட்டது. பயோ டெக்னாலஜி ( உயிரி தொழில்நுட்பம்), சாப்ட்வேர் (மென்பொருள்), சிந்தடிக் பயோ இன்ஜினியரிங் (செயற்கை பொருள் சார்ந்த உயிரி பொறியியல்), நேனோ டெக்னாலஜி( நுண் தொழில்நுட்பம் ), பயோ இன்பர்மேட்டிக்ஸ்( உயிரி தகவல் தொழில்நுட்பம்), ரோபோடிக்ஸ் (மின்னணு தொழில்நுட்பம்) எனப் பல்வேறு விதமான துறைகளில் தொழில்நுட்ப வளர்ச்சி யுகத்தில்முதலாளித்துவத்தின் பிரதிநிதிகள் இடைவிடாமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தங்களது படைப்பாக்கத் திறனை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் நுண்ணிய அளவில் இந்த படைப்பாக்கத் திறன் பல விதங்களில் மறு உற்பத்தி செய்யப்படுகிறது. உதாரணத்திற்கு, ஒரு திரைப்படம் வெளியான அடுத்த நிமிடமே- வெளியாவதற்கு முன்பே கூட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பிரதிகளை கண்ணிமைக்கும் நேரத்தில் மறு உற்பத்தி செய்திட முடியும். இன்றைக்கு தொழில்நுட்ப படைப்பாக்கத் திறன் என்பது மாறாத- நிலையான ஒன்று அல்ல. இது ஒவ்வொரு தனிநபரையும் நிறுவனத்தையும் குழுவையும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி ஈர்க்கிறது. தேடச் செய்கிறது. ஏற்கனவே உள்ளதை மறு உற்பத்தி செய்ய வைக்கிறது.

மேலே குறிப்பிட்ட இந்த அனைத்து விதமான செயல்பாடுகளுக்கும்அடிப்படையான உந்து சக்தியாக இருப்பது நெட்வொர்க் எனப்படும் உலகளாவிய வலைத்தளப் பின்னலே. மறு உற்பத்திக்கான படைப்பாக்கத் திறன், புதிய கண்டுபிடிப்புகளுக்கான படைப்பாக்கத்திறன், தொடர்ச்சியான புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் எல்லையில்லாத புதிய புதிய துறைகளிலான அறிவுப் பெருக்கம் ஆகியவற்றுக்கு இந்த வலைப்பின்னலே அடிப்படைக் காரணமாகும்.

உலகளாவிய வலைப்பின்னலும் இணையதளமும் இந்தத் துறையில் இடைவிடாமல் மாற்றங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. இவை அனைத்தும் உலகளாவிய மிகப் பிரம்மாண்டமான தொழில் நுட்பச் சந்தையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஏகபோக கார்ப்பரேட்டுகளின் உற்பத்தி சாதனங்களாகும்.

 

6

முதலாளித்துவத்தின் அடிப்படையான கட்டமைப்பின் நவீன கால வளர்ச்சியே தொழில்நுட்ப வளர்ச்சி யுக முதலாளித்துவம் ஆகும். குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி யுகத்தில்சகாப்தத்தில், மார்க்சியத்தின் அனைத்து அடிப்படைக் கூறுகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இயக்கவியல், முதலாளித்துவம், பண்டம்/உற்பத்தி, அனைத்தையும் நுகர்பொருள் மயமாக்குதல், உபரி மதிப்பு, சுரண்டல், வர்க்கச்சார்பு, உலகமயம், சித்தாந்தம், கலை மற்றும் படைப்புத் திறன், தொழில்நுட்ப அறிவு கிடைக்கப்பெறாத பொதுமக்கள், சமூகத்தில் தொழில்நுட்பத்தின் தாக்கம்… என மார்க்சியத்தின் கூறுகள் அனைத்தும் தொழில்நுட்ப வளர்ச்சி யுக முதலாளித்துவத்தை இயக்கிக் கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகின்றது.

இடைவிடாமல் மாறிக்கொண்டே இருக்கிற தொழில்நுட்ப மாற்றங்களின் இயக்கம், அவை அனைத்தையும் மூலதனமாக மாற்றிக் குவிக்கிற முதலாளித்துவம், தொழில்நுட்ப வளர்ச்சி யுகத்தில்மாற்றங்களையும் அதற்கு காரணமான அறிவுச் சொத்தையும் ஒரு பண்டமாக மாற்றியிருப்பது, அதை மேலும் மேலும் உற்பத்தி செய்து நுகர்பொருளாக மாற்றியிருப்பது, மிகப்பெருவாரியான மனிதர்களுக்கு வேலைவாய்ப்பே வழங்காமல் அவர்களது உழைப்பைச் சுரண்டுவது, அதன் மூலமாக அளவில்லாத முறையில் உற்பத்தியை அதிகரித்து உபரி மதிப்பை எட்டியிருப்பது, இதன் விளைவாக தொழில்நுட்ப மூலதனத்தை பெற்றிருக்கும் வர்க்கம்- அதில் கூலி உழைப்பைச் செலுத்தும் வர்க்கம் என்ற வர்க்க வேறுபாடுகளை உருவாக்கியிருப்பது, தொழில்நுட்ப படைப்புகள் அனைத்தும் உலகமயமாக்கப்பட்டு அனைத்துச் சந்தைகளையும் கைப்பற்றியிருப்பது, இவற்றின் அடிப்படையாக உழைப்பைச் செலுத்தும் தொழில்நுட்பப் பாட்டாளியின் கலை மற்றும் படைப்புத்திறனைச் சுரண்டுவது… என இதை விரிவுபடுத்திக் கூறிக் கொண்டே செல்லலாம்.

எனவே தொழில்நுட்பம் பிரம்மாண்டமான வளர்ச்சி பெற்றிருக்கிற தொழில்நுட்ப வளர்ச்சி யுக முதலாளித்துவ யுகத்திலும் மார்க்சிய இயக்கவியலே கோலோச்சுகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி யுக முதலாளித்துவம் பற்றி விமர்சனப்பூர்வமாக பல நூல்களை எழுதியுள்ள அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் லூயிஸ் ஸ்வரேஜ்-வில்லா, இப்படிக் கூறுகிறார்:

“ஏகபோக கார்ப்பரேட் கம்பெனிகளின் நவீன ராஜ்யம் என்பது ஒட்டுமொத்த மனித சமூகத்தையும், இயற்கையையும், ஒட்டுமொத்த பூமிப்பந்தையும் தனது காலனியாக மாற்றியிருக்கிறது; அதன் மூலமாக மனித குலத்தின் விலை மதிக்க முடியாத படைப்பாக்கத்திறன்களையெல்லாம் அப்பட்டமான லாபம் சம்பாதிக்கிற பண்டங்களாக மாற்றியிருக்கிறது. நமது படைப்பாக்கத்திறன், நமது அறிவு மற்றும் நமது கற்றுக் கொள்ளும் ஆர்வம் ஆகியவை நம்மை மேம்படுத்திக் கொள்வதற்கான தகுதிகளாக பார்க்கப்படவில்லை; மாறாக ஒவ்வொரு மனிதனையும் சக மனிதனிடமிருந்து, சமூகத்திடமிருந்து, இயற்கையிடமிருந்து தனிமைப்படுத்தி வெறுமனே உற்பத்திப் பண்டங்களாக மாற்றியுள்ளது. மனித மாண்புகளை இப்படி மலினப்படுத்தியிருப்பது என்பது நிச்சயமாக தொழில்நுட்பம் சார்ந்தது அல்ல; அது முற்றிலும் முதலாளித்துவத்தின் குணமே ஆகும். ஒரு புதிய வகை கார்ப்பரேட் குணாம்சம் வலுவாக வேரூன்றி இருக்கிறது; அது தொழில்நுட்பத்தின் மீது எதேச்சதிகாரமான கட்டுப்பாட்டைச் செலுத்துகிறது. இந்த வகை கார்ப்பரேட் மயம் என்பது இன்னும் அறிவுப்பூர்வமாக, இன்னும் வேகமாக, இன்னும் ஊடுருவிச் செல்கிற தன்மை கொண்டது. ஒட்டுமொத்த மனித குலத்தையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்கிற ஏகாதிபத்தியத்தின் அதிகார வெறியும், மேலும் மேலும் லாபம் என்கிற கொள்ளை வெறியும் தொழில்நுட்பம் சார்ந்த சமூகத்தின் அனைத்து அம்சங்களையும் முற்றிலும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சிக்கிறது.”

பேராசிரியர் லூயிஸ் சொல்வதை சமீப சில ஆண்டுகளில் பேராசிரியர் பிரான்கோ பெரார்டி, ஹென்றி கிரவ்க்ஸ், ஜைக்மண்ட் பௌமேன் போன்ற நிபுணர்கள் வேறு வேறு வார்த்தைகளில் குறிப்பிடுகிறார்கள்.

ஆனால் இந்த அம்சங்கள் அனைத்தையும் 150 ஆண்டுகளுக்கு முன்பே மாமேதை காரல் மார்க்ஸ் விரிவான முறையில் ஆய்வு செய்து கூறிவிட்டார்.

7

கார்ல் மார்க்ஸ் 1883ம் ஆண்டு காலமானார். இன்றைக்கு ஏற்பட்டுள்ள பிரம்மாண்டமான தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு சிறு அளவு கூட அவரது காலத்தில் ஏற்பட்டிருக்கவில்லை. பதினெட்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற் புரட்சியின் பின்னணியில், 1867ல் மார்க்ஸ் தனது மகத்தான ‘மூலதனம்’ நூலை நிறைவு செய்தார். அந்தக் காலத்தில் தொழிற்புரட்சி, சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்களை அவர் விரிவாக ஆய்வு செய்தார்.

தனது `மூலதனம்’ நூலில் அன்றைய நாளில் ஏற்பட்டிருந்த முன்னேறிய தொழில்நுட்பம் குறித்து-அதாவது தொழிற்சாலைகளின் இயந்திரங்கள் குறித்து ஒரு பெரிய அத்தியாயத்தையே எழுதியுள்ளார். அந்த அத்தியாயத்தை மார்க்ஸ் இவ்வாறு துவக்குகிறார்:

“ ஜான் ஸ்டூவர்டு மில் (ஜே.எஸ். மில்) தனது அரசியல் பொருளாதாரத்தின் கோட்பாடுகள் என்ற நூலில் கூறுகிறார்: ‘ அனைத்து விதமான இயந்திரக் கண்டுபிடிப்புகளும் எந்தவொரு மனிதனின் துயரத்தை குறைத்துவிட்டதா என்றால் அது கேள்விக்குறியதே.’ ஏன் என்றால், இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ள முதலாளித்துவத்தின் இலக்கு எந்த விதத்திலும் மனிதனின் துயரத்தைக் குறைப்பது அல்ல என்பதுதான். (ஒரு தொழிலாளி செலுத்தும்) உழைப்பின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான வழிகளில் ஒன்றாக, இயந்திரம் என்பது பொருட்களை இன்னும் அதிகமாக உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டதே; இதன் மூலமாக பொருள் உற்பத்திக்கு உழைப்பைச் செலுத்தும் நாளின் அளவு குறைக்கப்படும்; இயந்திரம் இருப்பதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் தொழிலாளி தனது கூலிக்கான வேலையை முடித்துவிடுவார்; அதற்கடுத்த நேரத்தில் அவர் ஏற்கனவே கொடுத்த உழைப்பிற்குச் சமமாக மற்றொரு உழைப்பைத் தருவார்; அந்த உழைப்பு முற்றிலும் முதலாளிக்குச் சொந்தமாகி விடும். சுருக்கமாகச் சொன்னால் தொழிலாளி மிக அதிகமான உபரி மதிப்பை உற்பத்தி செய்கிறார் என்று பொருள்.”

150 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்ஸ் சொன்னது இன்றைய தொழில்நுட்ப சகாப்தத்திற்கும் பொருந்தும். அளவிட முடியாத தொழில்நுட்ப வளர்ச்சி என்பது , உலகின் எந்தப் பகுதியிலும் பாட்டாளி வர்க்கத்தின் வேலை நேரத்தையோ அல்லது துயரத்தையோ குறைக்கவில்லை. மாறாக வேலை நேரமும் துயரமும் அதிகரித்திருக்கிறது.

தொழில்நுட்பம் வளர்ந்தால் அது தொழிலாளர்களுக்கு மிகப்பெரும் பலன்களைக் கொண்டுவரும் என்று அன்று முதல் இன்று வரை முதலாளித்துவவாதிகள் கூறி வருகிறார்கள்.

1983ல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரொனால்டு ரீகன், ஒரு கூட்டத்தில் பேசுகையில், உயர் தொழில்நுட்பம் இன்றைக்கு வேலையில்லாமல் இருக்கிற லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை கொடுப்பது மட்டுமல்ல, எதிர்வரும் புதிய தலைமுறைத் தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலை கொடுத்துக் கொண்டேயிருக்கும் என்று கூறினார். ஆனால் இது முதலாளித்துவவாதிகளின் வார்த்தை ஜாலமேயன்றி எந்த விதமான வேலை வாய்ப்பும் உருவாகாது; மாறாக உள்ளதையும் பறித்துவிடும் என்பதை ரீகனுக்கு முன்பே மார்க்ஸ் கூறினார்.

1830களில் பிரிட்டனில் இயந்திரங்களின் வருகையால் கைத்தறி நெசவாளர்கள் எத்தகைய கொடூரமான துயரத்தை எதிர்க்கொண்டார்கள் என்பதை வரலாற்றுச் சான்றுகளோடு மார்க்ஸ் விளக்கியிருக்கிறார்.

1980 – 90களில் ஹை-டெக் என்ற பெயரில் உயர் தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது நியூயார்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் பாயே டச்சின், உலகம் முழுவதும் வேலை வாய்ப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்தார். “புதிய தொழில்நுட்பங்கள் வேலை வாய்ப்பை உருவாக்கும் என்று சொன்னது பொய்யாகி விட்டது. கணிசமான இளைஞர் பட்டாளம் ஏற்கனவே இருந்த வேலையிலிருந்து துரத்தப்பட்டிருக்கிறது. அவர்களது எதிர்காலம் எந்த வருவாய் ஆதாரமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்குகிறது.” என்று அவர் எழுதினார்.

ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் ஹென்றி எம் லெவின், ரசல் டபிள்யூ ரம்பர்க்கர் என்ற இரண்டு ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்புக்கும் இடையிலான தொடர்பு குறித்து விரிவாக ஆய்வு செய்தார்கள். அந்த ஆய்வின் முடிவில், “கணினி தொழில்நுட்பத்தில் திறமை வாய்ந்த ஊழியர்கள் கூட ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் வேலையை இழந்துவிடுவார்கள்; அதைவிட புதிய தொழில்நுட்பம் வரும்போது அதுவரையிலான அவர்களது திறமையை முதலாளித்துவம் பயன்படுத்திக் கொண்டு அவர்களை குப்பையைப் போல தூக்கி எறிந்து விடும்”என்று எழுதினார்கள்.

1850களில் மார்க்ஸ் கூறியதும், 1990களில் மேற்கண்ட ஆய்வாளர்கள் கூறியதும் தற்போதைய தொழில்நுட்ப சகாப்தத்திலும் அப்படியே பொருந்துகிறது.

முதலாளித்துவம் என்பது மொத்த முரண்பாடுகளின் உருவம். ஒரு புறத்தில் தனது இருப்பை உறுதி செய்து கொள்வதற்காக உற்பத்தி சாதனங்களில் மிகப் பிரம்மாண்டமான மாற்றத்தை ஏற்படுத்தும். மறுபுறத்தில் அதே முதலாளித்துவம் தனது லாபத்தை உறுதி செய்து கொள்வதற்காக, அந்த பிரம்மாண்ட தொழில்நுட்ப வளர்ச்சியின் பலனை பெருவாரியான மக்களின் கைக்கு கிடைக்கவிடாமல் செய்யும்.

மூலதனம் நூலில் மார்க்ஸ் இன்னும் தெளிவாக விளக்குகிறார்.

“முதலாளித்துவம் என்பது தனது உற்பத்தி சாதனங்களில் காலத்திற்கேற்றவாறு புரட்சிகரமான மாற்றங்களை இடைவிடாமல் ஏற்படுத்திய வண்ணம் இருக்கும்; அப்படிச் செய்யாமல் முதலாளித்துவம் நீடிக்க முடியாது. எனவே அந்த மாற்றங்களுக்கேற்ப உற்பத்தி உறவுகளிலும் மாற்றம் ஏற்படும். அது ஒட்டுமொத்த சமூக உறவுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். உற்பத்தி சாதனங்களின் இடைவிடாத மாற்றமானது, அது சார்ந்த உற்பத்தியிலும் இடைவிடாத மாற்றத்தை நிகழ்த்தும். இது சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் இடைவிடாத தாக்கத்தை ஏற்படுத்தும். நிலையற்ற தன்மை தொடர்ந்து நீடிக்கும்.”

எனவே அன்று முதல் இன்று வரை எத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சியாக இருந்தாலும் அது உற்பத்தி சாதனங்களின் புரட்சிகர மாற்றங்களே. ஆனால் அந்த மாற்றங்கள் முதலாளித்துவ யுகத்தில், மூலதனத்தின் லாபத்தை மேலும் மேலும் அதிகரிப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. அந்த மாற்றங்கள் முதலாளித்துவத்தால் கட்டுப்படுத்தப்படும் வரையில் அது ஒருபோதும் ஒட்டு மொத்த மனிதகுலத்தின் நலனுக்காக பயன்படுத்தப்படாது. அதன் காரணமாகத்தான் நீக்கமற அனைத்துத் துறைகளிலும் நவீன தொழில்நுட்பங்கள் கோலோச்சும் இந்த சகாப்தத்திலும் கூட உலகெங்கும் உழைப்பாளியின் வேலை நேரம் குறையவில்லை. பணிச்சுமை அதிகரித்து இருக்கிறது. வேலை பறிப்பு அதிகரித்து இருக்கிறது.

மறுபுறத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிப்படையான படைப்புத் திறனும் தொழில்நுட்பக் கருவிகளும்- அதாவது இணையதளங்கள், வலைத்தளங்கள் உள்ளிட்ட அனைத்தும் பெரும் ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்கு மட்டுமே; அது பொதுச் சொத்து அல்ல என்ற கட்டுப்பாடுகள் தீவிரமடைகின்றன. எனவே தான் இன்றைக்கு இணையச் சமநிலை குறித்து தொழில்நுட்ப பாட்டாளி வர்க்கம் பேச வேண்டிய நிலை எழுந்துள்ளது.

இதற்கு மார்க்ஸ் என்ற மகத்தான புரட்சியாளரே தீர்வு சொல்கிறார்.

தொழில்நுட்ப வளர்ச்சி-எப்படிப்பட்டதாக இருந்தாலும்- எதிர்காலத்தில் இன்னும் எப்படிப்பட்ட பிரம்மாண்ட வளர்ச்சி ஏற்பட்டாலும் அவை அனைத்தும் பொதுவில் வைக்கப்படவேண்டும். இந்த பிரம்மாண்ட தொழில்நுட்ப வளர்ச்சி யுகத்தில்வளர்ச்சிக்கு காரணமான உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் தனியார் ஏகபோக கார்ப்பரேட் கம்பெனிகளின் கைகளில் உள்ளன. அந்த ஏகபோகம் ஒழிக்கப்பட்டு, மனித குலத்தின் ஒட்டு மொத்த நலனுக்கானதாக மாற்றப்பட வேண்டும்.

மார்க்ஸ் காட்டும் இந்தப் பாதையே அடுத்தடுத்த சகாப்தங்களுக்கும் பொருந்தும்.

———-

 

ஆதாரம்:

 

  • Luis Suarez-villa. Technocapitalism: A Critical Perspective on Technological Innovation and Corporatism
  • Karl Marx@Internet studies; Christian Fuchs (University of Westminster, UK) & Nick Dyer-Witheford (University of Western Ontario, Canada)
  • Karl Marx on “High Tech”; By Robert Bills (An address delivered at the Finnish Brotherhood Hall Berkeley, California, Sunday, Nov.17,1985.)
  • Marx K (1867) Capital, vol. 1.London: Penguin.
  • Marx K (1894) Capital, vol.3. London: Penguin
  • Communist Manifesto.


%d bloggers like this: