பிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு…3
தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள்
அன்றைய ஜார் ஆட்சியும், அதனுடன் கைகோர்த்து வலிமை பெற்று வந்த முதலாளித்துவ சக்திகளும் மக்கள் போராட்டங்களை வளர விடாமல் ஒடுக்கி வந்தனர்.தொழிலாளர் வேலைநிறுத்தம் தடை செய்யப்பட்டிருந்தது.
எனினும், வேலை நிறுத்தம்,சட்டவிரோதக் கூட்டங்கள்,தலைமறைவு வாழ்க்கையின் போதே நடத்தப்பட்ட மார்க்சிய பயிற்சி வட்டங்கள்,தெருமுனை ஆர்ப்பாட்டங்கள், காவல்துறையோடும், இராணுவத் துருப்புகளோடும் நடைபெற்ற கடும் மோதல்கள் போன்ற நடவடிக்கைகள்தான் புரட்சியை கற்றுத்தரும் பள்ளிக்கூடங்களாக மாறின.
1903 –ஆம் ஆண்டிலிருந்து 1917 வரை ரஷ்யாவில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டங்கள் ரஷ்ய வரலாற்றில் மட்டுமல்ல,அன்றைய ஐரோப்பிய வரலாற்றிலும் முக்கியத்துவம் பெற்ற ,நிகழ்வுகளாக அமைந்தன.
ஒரு பின்தங்கிய நாட்டில், அதிலும் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் ஒரு நாட்டில், வேலைநிறுத்தங்களும், அவற்றில் பங்கேற்ற தொழிலாளர் எண்ணிக்கையும் மிக அதிகமாக இருந்தது என்பதை சாதாரண விஷயமாகக் கருத முடியாது.
19௦5 ஆண்டில் நடைபெற்ற வேலைநிறுத்தங்களில் கலந்துகொண்ட தொழிலாளர் எண்ணிக்கை1,843,000.இது படிபடியாக ஆண்டுதோறும் அதிகரித்தது.
ஆனால் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக எழுந்த வேலைநிறுத்தங்கள் அத்துடன் நின்றுவிடவில்லை.அவை அரசியல் போராட்டங்களாக சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக எழுந்த போராட்டங்களாக பரிணமித்தன.
1917-ஆம் ஆண்டின் ஜனவரி,பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் 5,75,௦௦௦ தொழிலாளிகள் கலந்து கொண்ட, முற்றிலும் அரசியல் கோஷங்கள் ஒலித்த, வேலைநிறுத்தங்கள் நடந்தன.இந்தப் போராட்டங்கள் புரட்சியினை சாத்தியமாக்கியது என்பது வரலாறு.
சோவியத்துகள் என்ற உள்ளூர் அமைப்புகள் இந்தப் போராட்டங்களில் ஆற்றிய பங்கினை அனைத்து நாட்டுக் கம்யூனிஸ்டுகளும் கற்பது அவசியம்.
இந்த சோவியத்துகள் எனும் உள்ளூர் அமைப்புகள்,போராட்டங்களின் அரசியல் தரத்தை உயர்த்தி மாற்றத்தை நோக்கிக் கொண்டு செல்லும் பணியை செய்தன.இந்த அமைப்புகள் முதலில் வேலைநிறுத்தப் போராட்டங்களின் கருவியாக உருவெடுத்து பின்னர் அதிகாரத்தை பாட்டாளி வர்க்கத்திடம் ஒப்படைக்கிற அரசியல் கருவியாக செயல்பட்டன.
துவக்கத்தில், சோவியத்துகளில் கம்யூனிஸ்டுகள் குறைவாக இருந்தனர்.எனினும்,தொழிலாளர்கள் போர்வீரர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் கொண்ட இந்த ஜனநாயக அமைப்புகளை அவர்கள் திறம்பட செயல்படவைத்தனர்.
அத்துடன் இணைந்ததாக ஒரு புரட்சிகர கட்சி அமைப்புகளை உருவாக்கிட அவர்கள் முயற்சி மேற்கொண்டனர்.ஒவ்வொரு தொழிற்சாலையிலும் போல்ஷிவிக்குகள் இணைந்த ஒரு சிறு தலைமை அமைப்பாக கட்சி அமைப்பு ஏராளமாக உருவாக்கப்பட்டன.
ஒரு அமைப்புக்குள் தத்துவார்த்த, கோட்பாடுரீதியான விவாதம் நடத்தி,புரட்சிகர செயல்பாட்டை மேற்கொள்ளும் பாணியை ரஷ்யக் கம்யூனிஸ்டுகள் புரட்சிகாலத்தில் பின்பற்றி வந்தனர்.இதற்காக வெளியில் எதிரி வர்க்கங்களுக்கு எதிரான போராட்டத்தை நடத்திக்கொண்டே,உட்கட்சிக்குள்ளும் போராடினர்.ஏனென்றால் கட்சி அமைப்பு புரட்சிக்கு முக்கியமானது.இதனை அவர்கள் ஒரு கணமும் மறக்காமல் செயல்பட்டனர்.
இதனால்தான் புரட்சிக்குப் பிறகு ரஷ்ய அதிபராக இருந்த ஸ்டாலின் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபனம் கட்சிக்கு இருக்கும் ஒரே ஆயுதம் என்று எழுதினர்.இராணுவம் உள்ளிட்ட வன்முறை அமைப்புகளுடன் ஆயுதபாணியாக உள்ள முதலாளித்துவ எதிரி அரசினை எதிர்கொள்ள கம்யூனிஸ்டுகளுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் ஸ்தாபனம் என்று அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
புரட்சிகர கோட்பாடு அடிப்படையிலான ஸ்தாபனம் கட்ட வேண்டுமென்பதில் அக்கறையற்ற போக்கு இருந்தால் இயக்கம் இலக்கை நோக்கி முன்னேறிடாது.அக்டோபர் புரட்சி வரலாறு இந்தப் படிப்பினையை உணர்த்துகிறது.
பொருளாதாரக் கோரிக்ககைகளுக்கான போராட்டம் என்பதிலிருந்து அரசியல் அதிகாரத்திற்கான போராட்டமாக உயர்த்துவதில் போல்ஷிவிக்குகள் என்றழைக்கப்பட்ட ரஷ்யக் கம்யூனிஸ்டுகளின் அயராத ஆற்றல் மிகுந்த சித்தாந்தப் பணி முக்கியமானது.
கட்சி அமைப்புக் கோட்பாடுகளுக்காக நடைபெற்றப் போராட்டம் ஏற்கெனவே கட்சிக்குள் ஒரு பிளவையே ஏற்படுத்தியிருந்தது.ரஷ்ய தொழிலாளி வர்க்க இயக்கத்தில் இரண்டு பிரிவுகள் எழுந்தன. ஒன்று மென்ஷிவிசம், மற்றொன்று போஷிவிசம்.1903-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் கட்சியில் பிளவு ஏற்பட்டு இந்த இரண்டு பிரிவினரும் செயல்பட்டு வந்தனர். மென்ஷிவிசம்.புரட்சி இலட்சியத்தைக் கைவிட்ட ஒரு சிறு பகுதி தொழிலாளர்களின் சித்தாந்தத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் போக்காக மென்ஷிவிசம் செயல்பட்டது.
விவசாய சிக்கல்கள்:
ரஷ்யாவில் புரட்சி முன்னேறி வெற்றி பெற வேண்டுமானால் விவசாயிகளின் ஆதரவு முக்கியமானது என்ற புரிதல் போல்ஷிவிக்குகளுக்கு இருந்தது.மக்கள் தொகையிலும் கூட, தொழிலாளிகளைவிட அதிக எண்ணிக்கையில் விவசாயம் சார்ந்த மக்கள் இருந்தனர்.
இந்தப் பிரச்னை குறித்து ரஷ்ய புரட்சியின் வரலாறு நூலில் டிராட்ஸ்கி எழுதுகிறார்:
“ரஷ்யப் பாட்டாளிவர்க்கம் தன்னிடத்தில் மட்டும்தான் புரட்சிகர ஆற்றல் இருப்பதாக கருதக்கூடாது என்பதை உணர்ந்து கொண்டது. தேசத்தில் தான் சிறுபான்மைதான் என்ற நிலையில் அதிக மக்கள் திரளாக விளங்கும் விவசாயிகளிடம் வலுவான ஆதரவு இல்லாமல் தனது போராட்டம் விரிவடையாது என்பதனை அது உணர வேண்டியிருந்தது.இந்தப் புரிதல் இல்லாமல் அது அரசுக்கு தலைமை ஏற்கும் வர்க்கம் என்ற நிலையையும் அடைய இயலாது.” இந்த கருத்தாக்கத்தை தொழிலாளி வர்க்கத்திடம் பதிய வைத்திட போல்ஷிவிக்குகள் கருத்துரீதியாகவும் போராடினர்.
புரட்சிக்கு ஆதரவாக விவசாயிகள் திரள்வதற்கான சூழலும் அன்றைய ரஷ்யாவில் நிலவியது. இதுபற்றி தனது நூலில் டிராட்ஸ்கி கூறுகிறபோது “கடும் விவசாய நெருக்கடி விவசாயிகளின் ஆதரவு அதற்கு கிட்டுவதற்கு சாதகமாக இருந்தது” என்கிறார்.
இரு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த நிலையில்தான் ரஷ்ய விவசாயத் தொழில் இருந்தது.கடும் தேக்கம்,மிகப் பழைமையான உற்பத்தி முறைகள் போன்றவற்றால் கிராமப்புற மக்களின் வறுமையை அதிகரித்தது.
மன்னர் குடும்ப நிலம்,கிருத்துவ தேவாலய நிலங்கள்,மற்றும் 30,000 நிலப்பிரபுக்கள் கைப்பிடியில் இருந்த நிலங்கள் என விவசாயத்தில் நிலப்பிரபுத்துவத் தனியுடைமை ஆதிக்கம் இருந்தது.இது விவசாயப் பிரச்சனையின் அடிப்படைக் காரணமாக இருந்தது.
’சமூகப் புரட்சியாளர்கள்’ என்ற கட்சியும் ‘காடட்டுகள்’ என்ற கட்சியும் விவசாயிகள் மத்தியில் ஆதரவுத் தளங்களை வைத்திருந்தனர்.
1908-ஆம் ஆண்டுகளில் விவசாய இயக்கமும் தொழிலாளர் இயக்கம் போன்றே வலுப்பெற்று வந்தது.ஆங்கங்கே விவசாயிகள் நிலப்பிரபுக்களுக்கு எதிராக தீவிரமான போராட்டங்களில் ஈடுபட்டனர்.பல இடங்களில் நிலப்பிரபுக்களின் நிலங்களையும் கைப்பற்றினர்.ஆயுதம் ஏந்திய தாக்குதல்களும் நிகழ்ந்தன.
முதலாம் உலகப் போரில் ரஷ்யா ஈடுபட்டது விவசாயக் குடும்பங்களையும் கடுமையாக பாதித்தது.அரசாங்கம் ஒரு கோடி விவசாயத் தொழிலாளர்களை போருக்கு அனுப்பியது மட்டுமல்ல,விவசாய வேலைகளுக்குப் பயன்படும் 2௦ இலட்சம் குதிரைகளையும் போர் முனைக்கு அழைத்துச் சென்றது.இது விவசாய வேலையின்மையை அதிகரித்தது.
எனவே போர் எதிர்ப்பு உணர்வு நகரப் புற தொழிலாளர்களிடம் பரவியது போலவே, கிராமப்புறங்களிலும் வேகமாகப் பரவியது.
புதிய பகுதிகளை கைப்பற்றி தனது எல்லைகளை விரிவுபடுத்திக்கொள்ளவே முதல் உலகப் போரில் ரஷ்யா ஈடுபட்டது என்ற ஜாராட்சியின் உள்நோக்கத்தை அனைவரும் புரிந்து கொண்டனர். இந்தப் பேராசையை நிறைவேற்றுவதில் ரஷ்ய வீரர்கள் சிறிது சிறிதாக ஆர்வம் இழந்த நிலையில் மண்ணாசை பிடித்த மேட்டுக்குடியினரின் நலனுக்காகவே போர் நடக்கிறது என்பதையும்,அது நாட்டு நலனுக்கு எதிரானது என்பதையும் தொழிலாளர்கள் போன்றே விவசாயிகளும் உணரத் துவங்கினர்.
விவசாயிகள் மத்தியிலும்,பல அரசியல் கேள்விகள் விவாதப் பொருளாக மாறின.பல கூட்டங்கள் நடத்தப்படுவதும் அவற்றில் அரசாங்கம்,நிலப்பிரபுக்கள்,பெரு வர்த்தகர்களுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றுவதும் அன்றாட நடைமுறையாக மாறிப்போனது.பல புதிய,புதிய அமைப்புகள் உருவாகத் துவங்கின.
தொழிலாளி–விவசாயி கூட்டணி
எனினும் இந்த நிகழ்வுகள் எதை நோக்கி நகர்ந்தன?
ரஷ்ய புரட்சியின் வரலாறு நூலில் டிராட்ஸ்கி இவ்வாறு குறிப்பிடுகிறார்.:
“உலக வரலாற்றிலேயே முதன்முறையாக விவசாயி தனக்கு ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கும் சூழல் உருவானது.அந்த தலைவர், தொழிலாளிதான் என்பதை விவசாயி அடையாளப்படுத்ததிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. ஒரு அடிப்படை கருத்தாக்கம் எதிரொலித்தது.இதில்தான் ரஷ்யப் புரட்சிக்கும் இதற்கு முன்னர் நடந்த புரட்சிகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு அமைந்துள்ளது.”
தொழிலாளி–விவசாயி என்ற வர்க்க கூட்டணி மலருகிற உன்னதமான நிகழ்வு, ரஷ்ய சரித்திரத்தில் நிகழ்ந்தது.இதுவே,அக்டோபர் புரட்சிக்கு இட்டுச் சென்றது.அது மட்டுமல்ல, உலகப் புரட்சிகளுக்கும் உன்னதமான வழிகாட்டும் அனுபவமாக இது திகழ்ந்தது.
இந்தக் கூட்டணி உருவாகும் எதார்த்த சூழல் அன்றைய ரஷ்யாவில் இருந்தாலும், லெனின்தான், தொழிலாளி–விவசாயி என்ற வர்க்க கூட்டணி என்பதனை ஒரு வழிகாட்டும் நடைமுறைத் திட்டமாக உருவாக்கினார். இந்தப் புரட்சிகரக் கூட்டணி லெனினியத்தின் முக்கியமான புரட்சி உத்தி.
ஆனால்,ரஷ்யக் கம்யூனிஸ்டுகள் திட்டத்தை உருவாக்கிவிட்டு, அதனை புத்தக அலமாரியில் வைத்துவிடவில்லை.அந்தக் கனவுத் திட்டத்தை நனவாக்கும் பணியில் போல்ஷிவிக்குகள் அயராது ஈடுபட்டனர். இந்த அனுபத்தின் அடிப்படையில்தான் பின்னாளில் ஸ்டாலின் திட்டம்,தீர்மானம் என்பதெல்லாம் நமது எதிர்பார்ப்புக்களை பதிவு செய்து வெளியிடப்படும் பிரகடனம்தான்; அதனை நடைமுறைப்படுத்த உருவாக்கப்படும் திட்டங்களும், கட்டபடுகிற ஸ்தாபனமும்தான் முக்கியமானது என்பதை “லெனினிசத்தின் அடிப்படைகள்”என்ற தனது நூலில் விளக்குகிறார்.
தொழிலாளி–விவசாயி என்ற வர்க்கக் கூட்டணி என்ற புரட்சி நடைமுறை 1949 –ஆம் ஆண்டு சீனப் புரட்சியின் வெற்றிக்கு உதவியது.
இந்தியாவில் ரஷ்யப் புரட்சி பல வகைகளில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதில் முக்கியமானது, இந்தியப் புரட்சிக்கான வழி என்ன என்ற விவாதம் நடைபெற்றபோது இந்த ரஷ்யப் புரட்சி அனுபவம் உதவியது.தொழிலாளி–விவசாயி வர்க்கக் கூட்டணி அமைக்க கிராமப் புறங்களிலும், நகரப்புறங்களிலும் வர்க்கப் போராட்டத்தை வலுப்படுத்த வேண்டுமென்ற புரிதல் ஆழமாக இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பதிவானது. இது ரஷ்யப் புரட்சி அளித்த கொடை.
இந்திய நிலைமைகளை ஆராய்ந்து இந்தியவிற்கேற்ற பாதையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்ந்தடுத்துக் கொண்டது. இது மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. “உண்மையாகச் சொல்லப்போனால் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் அச்சாணியே இந்த விவசாயப் புரட்சிதான்”(கட்சி திட்டம் ;7.3). என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் அழுத்தமாக விளக்குகிறது.
ரஷ்யாவில் புரட்சி வெற்றிக்கு வித்திட்ட தொழிலாளி–விவசாயி வர்க்கக் கூட்டணி என்ற புதிய உத்தி உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு பெரும் அளவில் பயன்பட்டது.