கியூபாவின் ராணுவ சர்வாதிகாரி படிஸ்ட்டா அரசை வீழ்த்திடும் நோக்கில், மான்கடா படைத் தளத்தின் மீது ஃபிடல் தலைமையிலான புரட்சிகர குழு தாக்குதல் துவக்கிய நாள் 1953ம் ஆண்டு ஜூலை 26. 1959 ஜனவரியில் புரட்சி வெற்றி பெற்று, தன்னை சோசலிச நாடாக பிரகடனம் செய்த நாள் முதல், கியூபாவின் தேசிய விடுமுறை தினமாக ஜூலை 26, அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அரசு அலுவலகங்களில் இனிப்பு வழங்கும் விழாவாக காண இயலவில்லை. இல்லம் தோறும் இனிப்பு தயாரிப்பையும், விநியோகத்தையும், கோலாகல கொண்டாட்டங்களையும், கியூபா முழுவதும் காணமுடிகிறது. ஒவ்வொரு அருகமைப் பகுதி (Neighbour hood) குடியிருப்புகளிலும், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் இடம் பெறுகிறது. புரட்சி குறித்து அறிந்த முதியவர் முதல் வரலாற்றைக் கற்றுக் கொள்ளும் குழந்தைகள் வரை அனைவரும் பங்கேற்பதாக இருக்கிறது.
”அக்னி குஞ்சொன்று கண்டேன்,
அதை ஆங்கோர் காட்டிடை,
பொந்தினில் வைத்தேன்,
வெந்து தனிந்தது காடு”
என்ற வரிகள் இந்தியாவின் விடுதலை வேட்கையைத் தூண்டும் வகையில், பாரதி பாடியது. அதேபோல் தென் அமெரிக்காவின் இன்றைய இடதுசாரிகள் தலைமையில் ஆட்சியமைப்பிற்கும், அரசியல் மாற்றங்களுக்கும், சின்னஞ்சிறிய கியூபா அக்னிக் குஞ்சாக இருந்து, பற்றி எரியும், அரசியல் ஈர்ப்பைக் கொண்டதாக வளர்ந்து வருகிறது.
கியூபா குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21 வது அகில இந்திய மாநாட்டு அரசியல் தீர்மானம், “பொருளாதாரத் தடைகளை திரும்பப் பெறாவிட்டாலும், கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்கா பின்பற்றி வந்த கியூபாவைத் தனிமைப் படுத்துவது என்ற கொள்கையின் தோல்வியை, அமெரிக்க அதிபர் ஒபாமா பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்”, என்று கூறுகிறது. இப்படி மதிப்பீடு செய்ய காரணமாக, இரண்டு நிகழ்வுகள் நடந்துள்ளன. ஒன்று அமெரிக்கா கியூபாவுடன் தனது அரசு முறை உறவுகளை மீண்டும் ஏற்படுத்தும் என அறிவித்தது. இரண்டு 17 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க சிறையில், உளவாளிகள் என குற்றம் சுமத்தி, வேண்டுமென்றே சிறையில் அடைக்கப் பட்டிருந்த 5 கியூபர்களை அமெரிக்க அரசு விடுதலை செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவானதும் ஆகும்.
மேற்படி இரண்டு நிகழ்வுகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீதான நிர்பந்தம் காரணமாக உருவானது. குறிப்பாக அமெரிக்காவிற்கு நெருக்கமாக அமைந்துள்ள, தென் அமெரிக்க நாடுகள் ஏற்படுத்திய தாக்கம் ஆகும். தென் அமெரிக்க நாடுகள் பற்றியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டு அரசியல் தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது. ”ஹியுகோ சாவேஸ் மரணத்தால் ஏற்பட்ட பின்னடைவைக் கடந்து, வெனிசுவேலா மற்றும் இதர தென் அமெரிக்க இடதுசாரி அரசாங்கங்களும், நவீன தாராளமயம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்குச் சவால் விடுத்து, தமது மாற்றுப்பாதையில் முன்னேற கடுமையாகப் போராடி வருகின்றன” என்பது தீர்மானத்தின் முக்கிய வரிகள். கியூபாவுடன் அமெரிக்கா தனது உறவை புதுப்பித்துக் கொள்ள முன் வந்தது, இந்தப் பின்னணியில் தான் எனத் தீர்மானம் சுட்டுகிறது. மேலும் தென் அமெரிக்காவின் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து அளித்த குரல், கியூபா தனிமைப் படுத்தப்படக் கூடாது என்பதாகவே இருக்கிறது. அமெரிக்காவால் அதைப் புறக்கணிக்க முடியவில்லை, என தீர்மானம் மதிப்பீடு செய்கிறது.
இது கியூபா மீதான மனிதாபிமான உணர்வு என்பது மட்டுமல்ல. கியூபாவின் அரசியல் மீதான நாட்டமும், கியூபா பின்பற்றி வரும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகள், மீதான ஈர்ப்பும் இணைந்த ஒன்று ஆகும்.
குரலின் வலிமை:
உலகறிந்த நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர், கேபரியேல் கார்சியா மார்க்வஸ், ஃபிடல் காஸ்ட்ரோ குறித்துக் குறிப்பிடும்போது, சொன்ன வார்த்தைகள் ”குரலின் வலிமை”. “காதுமடல்கள் சிலிர்க்க, தங்களின் அன்றாட வேலைகளை மறந்து, இந்தக் குரலின் வலிமையில் லயித்துப் போனார்கள், நேரம் செல்ல செல்ல, தங்களின் வேலைகளைச் செய்து கொண்டே, காதுகளை, ஃபிடல் காஸ்ட்ரோ விண் உரையின் மீது வைத்த வண்ணம் செய்து கொண்டிருந்தனர். அது ஏழு மணிநேர உரை, நாங்கள் தங்கியிருந்த ஸ்டார் ஹோட்டல் துவங்கி, தெருக்கள், வேலைத்தலங்கள், வீடுகள் என எல்லா இடங்களிலும், அந்த உரை ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. கைகள் வேலையில் இருந்தாலும், கவனம் ஒலித்த குரலில் இருந்ததைக் காண முடிந்தது”, என மார்க்வஸ் தன்னுடைய முதல் கியூப அனுபவம் பற்றி, இவ்வாறு எழுதியுள்ளார்.
இது ஏதோ ஒரு புகழ்ச்சிக்காக பேசப்பட்ட வார்த்தைகள் அல்ல. பேச்சு என்பது தனிச்சிறப்பாக இருந்தாலும், ஃபிடல் தனது, அரசியல் உறுதியைக் குறிப்பாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை வெகுமக்கள் முழுமையாகப் பங்கேற்கும் திருவிழாவாக, மாற்றிக் காட்டிய பெருமை கொண்டவர். உதாரணமாக 6 வயது சிறுவன் ஏலியன் கோன்சலாஸ், அவனுடைய பெற்றோரிடம் இருந்து பிரிந்து, அமெரிக்காவின் மியாமி யில் குட்டிவைக்கப்பட்டிருந்த விவகாரத்தில், கியூபா முழுவதும் நடந்த போராட்டத்தைக் குறிப்பிடலாம். இறுதியில் அமெரிக்காவின் நீதிமன்றம், ஏலியன் என்ற சிறுவனை அமெரிக்காவில் வைத்து இருக்கக் கூடாது. அவன் பெற்றோருடன் வசிக்க அனுமதிக்க வேண்டும், அதற்காக அவனை கியூபாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும், எனத் தீர்ப்பு வழங்கியது. ஒரு குழந்தைக்கும், தந்தைக்குமான உறவை அமெரிக்கா, கியூபாவிற்கு எதிராகப் பயன்படுத்த நினைத்தது, இறுதியில் கியூப மக்களின் போராட்டங்களால், அமெரிக்கா அம்பலப்பட்டு நின்றது. 2001 ம் ஆண்டில் அந்தச் சிறுவன் ஹவானா நகரத்திற்கு வந்த போது, ஃபிடல் தலைமையில் லட்சக்கணக்கான மக்கள் ஆர்ப்பரித்து வரவேற்றனர்.
மற்றொரு உதாரணம் எழுத்தாளர் மார்க்வஸ் குறிப்பிடுகிறார், “ஒருமுறை எங்களுடன், சேகுவேரா சுற்றி வளைத்துக் கொல்லப்பட்டது குறித்தும், மொண்டென் அரண்மனை முற்றுகையிடப்பட்டு, அலெண்டே கொல்லப்பட்டது குறித்தும் ஃபிடல் ஆற்றிய உரைகள் வரலாற்றுச் சொற்சித்திரங்கள்” என்கிறார். லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான, வெளிநாட்டுக்கடன் குறித்து ஃபிடல் ஆற்றிய உரை மிகச் சிறப்பு வாய்ந்தது. “இந்தக் கடன் திருப்பிச் செலுத்த முடியாதது. கடனால் லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள விளைவுகள், பொருளாதார வீழ்ச்சி, சமூக பொருளாதார பாதிப்புகள், சர்வதேச உறவுகளில் பின்னடைவு என சகல பரிமாணத்தையும் தொட்டு, லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒற்றுமைக்கான வரைவாக நீட்சி பெற்று, வானத்தைப்போல் விரிந்து பரந்து, அந்த உரை அமைந்ததாகக் கூறுகிறார். அந்த விவாதங்களின் தொடர்ச்சியாக, ஹவானாவில் மிகப்பெரிய கருத்தரங்கம் நடத்தி, பல துறை நிபுணர்களைப் பங்கேற்கச் செய்து, அவரின் வரைவு தீர்மானத்தைக் காட்சிப்படுத்தினார். அதுவே பின்னாளில், பொலிவாரிய மாற்று வங்கி அல்லது, லத்தீன் அமெரிக்க கரீபியன் நாடுகளின் சமூகம் போன்ற அமைப்புகள் உருவாக அடித்தளம் இட்டது.
வக்கிரமான தடைகள்:
இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம், உலகின் எல்லாத் திசையிலும் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த ராணுவ நடவடிக்கைகளை கையாள்வதைப் பார்க்கிறோம். 100க்கும் மேற்பட்ட நாடுகளில், அமெரிக்கா தனது ராணுவ நிலைகளைக் கொண்டுள்ளது, என மைக் மார்க்வஸ், என்ற எழுத்தாளர் தனது ”பேரரசு என்பதன் பொருள் என்ன?” என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார். இந்நிலையில் கியூபா அமெரிக்காவின் மிக அருகில் உள்ள நாடு. அங்கு புரட்சி நடைபெற்றதையோ, தனது பொம்மை அரசான பாடிஸ்ட்டா விரட்டப்பட்டதையோ, சோசலிச அரசியல் கொள்கை உருவானதையோ அமெரிக்காவினால் அங்கீகரிக்க முடியவில்லை.
ஒரு சில தடைகள் அல்ல, ஏராளமான பொருளாதார தடைகளை அமெரிக்கா கியூபா மீது விதித்தது. அதாவது ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள், 10 சதம் அளவிற்கு அமெரிக்க உதிரிபாகத்தைக் கொண்டிருக்குமானால், அப்பொருள் கியூபாவிற்கு அனுப்பப்படக் கூடாது, என்ற தடையை அமெரிக்கா விதித்தது. சர்வதேச நாணய பரிவர்த்தனையாக அமெரிக்காவின் டாலர் இருந்தாலும், அதை கியூபா பயன்படுத்தக் கூடாது. லத்தீன் அமெரிக்க நாடுகளில், “கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, உலக வங்கி மற்றும் அமெரிக்க கண்டத்தின் வளர்ச்சி வங்கி ஆகியவையிடம் இருந்து கடன் பெற இயலாத, ஒரே நாடு கியூபா”, என ஃபிலிப் பெரஸ் ரோக, என்ற எழுத்தாளர், லத்தீன் அமெரிக்கா ஒரு பார்வை, என்ற இதழில் குறிப்பிடுகிறார்.
ஃபர்ஸ்ட் கரீபியன் இண்டர்நேசனல் பேங்க் மற்றும் இங்கிலாந்து வங்கியான பார்க்லேஸ் ஆகியவை, கியூபாவுடன் செய்து கொண்ட பலக் கோடி டாலர் ஒப்பந்தங்களை, அமெரிக்காவின் மிரட்டல் காரணமாக நிறுத்திக் கொண்டன. ஏனென்றால் சுவிட்சர்லாந்து நாட்டின், வங்கியான யுபிஎஸ், கியூபாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதற்காக, 100 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. ஐரோப்பாவின் பெரிய நிறுவனமான சிரான் கார்ப்பரேசன் குழந்தைகளுக்கான நோய் தடுப்பு மருந்து வர்த்தகத்தை மனிதாபிமானம் கருதி, கியூபாவுடன் செய்து வந்தது. இதற்காக, அந்த நிறுவனத்திற்கு 168500 டாலர் அபராதம் விதிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து அந்த நிறுவனம், கியூபாவுடன் தனது வர்த்தகத்தை நிறுத்திக் கொண்டது. அமெரிக்க நிறுவனமான, ஜெனரல் எலெக்ட்ரிக், ஃபார்மாசியா, அமெர்ஷம் ஆகிய சுவிஸ் மற்றும் இங்கிலாந்து மருந்து தயாரிக்கும் நிறுவனங்களை விலைக்கு வாங்கி, கியூபாவுடனான வர்த்தகத்தை தடை செய்தது.
கனடா நாட்டின் ஷெரிட் என்ற நிறுவனத்தின் இயக்குநர்கள், கியூபாவுடனான வர்த்தகத்தை நிறுத்தாததால், அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப் பட்டார்கள். அமெரிக்காவின் தடைகளை மீறி செயல் பட்ட அமெரிக்க குடிமக்கள் 316 பேர், 537 விதமான அபராதங்கள் விதிக்கப்பட்டு 2005 அக்டோபர் 12 அன்று, அமெரிக்க அரசினால் தண்டிக்கப்பட்டார்கள். 2004ம் ஆண்டில் மட்டும், 77 நிறுவனங்கள், வங்கிகள், அரசு சாரா அமைப்புகள் ஆகியவை, அமெரிக்காவின் தடையை மீறி, கியூபாவுடன் உடன்பாடு கண்ட காரணத்திற்காகத் தண்டிக்கப்பட்டுள்ளன. இவை தவிர்த்து எண்ணற்ற நிகழ்வுகளை, ஃபிலிப் பெரஸ் ரோக, குறிப்பிடுகிறார்.
2005 ஏப்ரல் 29ல், அமெரிக்க அதிபர் புஷ், அமெரிக்காவின் வங்கிகளில், கியூபாவைச் சேர்ந்தோர் வைத்து இருந்த, சட்ட விரோதமான 198 மில்லியன் டாலர் பணத்தை, அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் இருந்து, கியூபாவிற்கு எதிராகச் செயல்பட்ட, தீவிரவாத இயக்கத்திற்கு அளிக்க வேண்டும் என்ற உத்தரவை வெளியிட்டார். இத்தகைய தடைகள் துவக்கத்தில் இருந்தே அமலாகி வருகிறது. சோசலிச சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு, 1992ல் சீனியர் புஷ் ஆட்சியில் கியூபா ஜனநாயகச் சட்டம் என்ற பெயரில் டாரிசெல்லி தடை மசோதாவை அமல்படுத்தி தனது ஆதரவு நாடுகளையும், கியூபாவுடனான, வர்த்தகத் தொடர்பைத் துண்டிக்கச் செய்தது. இதைத் தொடர்ந்து 1996 கிளிண்டன் தலைமையிலான, ஜனநாயகக் கட்சியின் ஆட்சியிலும் ஹெல்ம்ஸ் – பர்ட்டன் சட்டத்தின் மூலம், சர்வ தேச அளவில், எந்த ஒரு நிறுவனம் அல்லது அமைப்பு கியூபாவுடன் வர்த்தக உடன்பாடு கண்டால், அது அமெரிக்காவின் எதிரியாகப் பிரகடனப் படுத்தப்படும், என அறிவித்தார்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக பொருளாதாரத் தடையை சந்தித்து வந்தாலும், கியூபா அமெரிக்காவின் மிரட்டலுக்கும், தடைக்கும் அடிபணியவில்லை. இத்தகைய தடைகளால், கியூபா சுமார் 83 ஆயிரம் மில்லியன் டாலர் (சுமார் 15லட்சம் கோடி ரூபாய்) இழப்பைச் சந்தித்துள்ளது. இவ்வளவு பொருளாதார நெருக்கடி இருந்தாலும், தனது நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் எதிலும் கியூபா கை வைக்கவில்லை. மாறாக மக்களை எளிமையானவர்களாக வாழ வேண்டுகோள் விடுத்தது. இறக்குமதி செய்து பயன்படுத்தும் பொருள்களைத் தவிர்க்க வேண்டுகோள் விடுத்தது. இதற்கு மக்கள் செவி சாய்த்தனர், என்பதில் இருந்தே இன்றைய கியூபாவின் வளர்ச்சியை மதிப்பிட முடியும்.
சோசலிச நாடுகளின் பின்னடைவும் – கியூபாவின் அரசியலும்:
உலகின் ஆதர்ச சக்தியாக விளங்கிய சோவியத் யூனியன் சிதருண்டு, சோசலிச கொள்கைகளைக் கைவிட்ட போது, கியூபா கடுமையாகப் பாதிக்கப்படும் என்று தான் எதிர்பார்த்து இருந்தனர். உண்மையில் பாதிப்பு இருந்தது. கியூபாவின் சர்க்கரை ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மின்சாரம் உள்ளிட்ட எரிபொருள் இறக்குமதி நின்றுபோன நிலையில், அதை எதிர்கொண்டு முன்னேறிய சோசலிச நாடு என்ற பெருமைக்குரியது கியூபா.
அமெரிக்காவின் ஹெல்ம்ஸ் – பர்ட்டன் சட்டத்தின் காரணமாக, கியூபாவின் சர்க்கரையை இறக்குமதி செய்து கொண்டிருந்த 17 நாடுகள், தங்களின் வர்த்தகத்தை நிறுத்திக் கொண்டன. ஏற்கனவே சோவியத் யூனியனின் இறக்குமதி நின்று போன நிலையில், கியூபா நிலை குழைந்து விடும் என எதிர்பாத்தார்கள். மாறாக கியூபா தனது சந்தை வியூகத்தை உள்நாடு சார்ந்ததாக மாற்றிக் கொண்டது. கச்சா எண்ணெய் தேவையைக் குறைக்க கியூபர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதற்கு செவி சாய்த்த மக்கள்,
1. வட அமெரிக்க முறை வாழ்வை நிறுத்தி, எளிய ஆற்றல் முறை வாழ்விற்குத் திரும்பினர்.
2. கூட்டு வாழ்வின் மூலம் எரிசக்தி பயன்பாட்டைக் குறைத்தார்கள்.
3. நகரங்களுக்கும், கிராமப்புறங்களுக்குமான வாழ்முறை இடைவெளியைக் குறைத்தார்கள்.
12 மணிநேரம் மின்வெட்டு, மக்கள் தங்களின் பெட்ரோல் வாகனங்களான மகிழ்வுந்து, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைக் கைவிட்டு பொதுவாகணங்களான பெரிய டிராம் பேருந்துகளில் பயணிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு, முடிந்த அளவு நடந்தே செல்வது அல்லது மிதிவண்டிகளைப் பயன்படுத்துவது, என்ற அரசின் வேண்டுகோள். ஆகியவற்றை எதிர் கொண்ட விதம் வளரும் நாடுகள் பலவும் பின்பற்ற வேண்டிய ஒன்று. நாட்டின் மக்கள் அத்துணை பேரும் ஒத்துழைக்காமல் இந்தத் துணிச்சலான முடிவை, ஒரு அரசு எடுத்திட முடியாது. இங்கேயும் கியூபாவின் அரசின் தலைவர் பொறுப்பில் இருந்த ஃபிடலின் குரலின் வலிமையை உணர முடியும்.
இவை சாதாரண வேண்டுகோள் என்பதை விடவும், இக்கொள்கையைப் பின்பற்றுவதற்கும், அதைத் தொடர்ந்து, மேற்படித் துறைகளில் மேம்பாடு காண மக்களின் ஒத்துழைப்பை நாடவும், சாலைகளில் சின்ன சின்ன விளம்பரங்களைப் பார்க்க முடியும். மின்னாற்றல் புரட்சி, விவசாயப் புரட்சி, சோசலிசமா? பார்பாரிசமா? (சமத்துவமா? காட்டுமிராண்டித் தனமா?) என்ற சிறிய அளவிலான, ஃபிளெக்ஸ் விளம்பரங்கள் சாலையின் ஓரத்தில், யாருக்கும் இடையூறு இல்லாமல், ஆனால் பார்வையில் படும்வகையில் திட்டமிட்டு வைக்கப்பட்டிருப்பதைக் காணமுடியும். மக்களின் உணர்வோடு கலந்ததாக மேற்படி விளம்பரங்கள் அமைந்தன.
இது உள்நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்றுத் தந்தது. அதேபோல் உலக அளவிலான மக்களின் ஆதரவையும் கியூபா திரட்டியது. ஆசியா பசிபிக் பிராந்தியத்தில், கியூபா ஆதரவு மாநாடு, 4 முறை நடந்துள்ளது. தமிழகத்தின் சென்னை மாநகரில் 2வது ஆசிய – பசிபிக் மாநாடு, 2006 ஜனவரி, 20,21 தேதிகளில் சிறப்புற நடத்தப்பட்டது. இதுபோல், பல்வேறு கண்டங்களில் நடந்த மாநாடுகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்க நடவடிக்கைகளை அம்பலப்படுத்திடவும், கியூபாவிற்கான ஆதரவை வென்றெடுக்கவும் உதவியது. இது மிகப்பெரிய அளவில் பேசப்பட வேண்டிய, ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் ஆகும்.
லத்தீன் அமெரிக்க நாடுகளுடனான நட்பு:
அமெரிக்கா உலகின் பல நாடுகளை இணைத்து, கியூபாவிற்கு எதிரான தடைகளை உருவாக்கி, நிர்ப்பந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் கியூபா மிகச் சாதாரணமாக தனது அண்டை நாட்டினரை மிக நெருக்கமான நண்பர்களாக மாற்றிக் கொண்டிருந்தது. லத்தீன் அமெரிக்கா முழுவதுமே, அமெரிக்காவிற்கான செல்வ சுரங்கமாக இருந்தது. அந்தளவிற்கு நேரடி சுரண்டல் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டது. கடந்த 500 ஆண்டுகளாக லத்தீன் அமெரிக்காவின் 85சதம் நிலம் அமெரிக்க ஆதரவு கைக்கூலிகளின் வசம் இருந்தது. உலகமயம் என்ற சொல் உருவாகும் முன்பே அதன் கொடூர மாதிரிகளை, அமெரிக்கா லத்தீன் அமெரிக்க நிலங்களில் தான் அமலாக்கிப் பார்த்தது.
அங்கு இருந்த பொம்மை அரசுகளைத் தூக்கி எரியும், புரட்சிக்குழுக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்த பின்னணியில் தான், கியூபாவின் அரசியல் உறுதியும் ஒரு இணையாகச் செயல்பட்டு வந்தது. வெனிசூவேலா வில் சாவேஸ் தலைமையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், 2சதம் பேரிடம் மட்டுமே இருந்த நிலத்தை அபகரித்து, 63 சதமான வெனிசூவேலாவின் ஏழைமக்களுக்கு வழங்கினார். இதேபோல் பொலிவியா, சிலி, அர்ஜெண்டைனா, நிகரக்குவா போன்ற நாடுகளில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், பன்னாட்டு நிறுவனங்களை நாட்டுடைமையாக அறிவித்தது ஆகியவை, மேற்படி அரசியல் ஒற்றுமையின் வெளிப்பாடு என்றே கருதிட முடியும்.
2005ம் ஆண்டில் ஃபிடல் வெனிசூவேலாவிற்கு சென்ற போது, அவருக்கு வெனிசூவேலா அரசின் விருதான அன்கோஸ்தூரா வழங்கப்பட்டது. சாவேஸ் உரையாற்றுகிற போது, “எங்கள் சகோதரரை, தோழரை, புரட்சிப்போராளியை, இந்தக் கண்டத்தின், பெருங்கடலின், சொர்க்கத்தின் மாண்பைக் காத்தவரை நாங்கள் வரவேற்கிறோம்”, என உணர்ச்சி மேலோர்கள்க் கூறினார். அதே ஆண்டில் தான், அமெரிக்கா முன்வைத்த, அமெரிக்க கண்ட நாடுகளுக்கான திறந்த வர்த்தக தளம் என்ற அமைப்பிற்கு எதிராக, அமெரிக்க நாடுகளுக்கான பொலிவாரிய மாற்று, என்பதை அறிவித்தனர். இவை கியூபா லத்தீன் அமெரிக்காவிற்கான அரசியல் வழிகாட்டி, என்ற அங்கீகாரத்தை வெளிப்படுத்துகின்றன.
இத்தகைய தொடர் முயற்சிகளின் பலனாகத் தான் கியூபா மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கா விலக்க வேண்டும் என்ற தீர்மானம், ஐக்கிய நாடுகள் சபையில், கியூபாவினால் 17 முறை முன்வைக்கப்பட்டு, 195 நாடுகள் கொண்ட அவையில் அமெரிக்கா உள்ளிட்ட ஒருசில நாடுகளின் எதிர்ப்பால் தொடர்ந்து ரத்து ஆகி வருகிறது. இந்த நடவடிக்கைகள், கியூபாவைத் தனிமைப்படுத்துவதற்கு பதிலாக அமெரிக்காவைத் தனிமைப்படுத்தியுள்ளது.
தன்னிறைவுக்கான வளர்ச்சியை நோக்கி:
வெனிசூவேலாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், கியூபாவிற்கான எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்ய உதவியது. சுற்றுலாவில் கியூபா செலுத்திய கவனம், மிகப்பெரிய அந்நிய செலாவணியை ஈட்டித் தந்துள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து, மொத்தமாக கியூபாவின் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்த உதவியது. குறிப்பாக விவசாயத்தில் கியூபா மேற்கொண்ட நடவடிக்கை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
2000 ஆண்டுகளின் துவக்கத்தில் தோமஸ் ஃபோர்கே என்ற பத்திரிகையாளர், ஃபிடலிடம் நடத்திய உரையாடல், புத்தகமாக தமிழிலும் வந்துள்ளது. நேருக்குநேர் என்ற அந்த புத்தகத்தைத் தமிழில் அமரந்த்தா என்ற எழுத்தாளர் மொழி பெயர்த்துள்ளார். அதில் ஃபிடல் தனது கருத்தை பதிவு செய்கையில், “ ஒரு கட்டத்தில், விவசாயம் குறித்து குவியல் குவியலாக புத்தகங்கள் படித்தேன். குறிப்பாக மேய்ச்சல் நிலம், மாற்றுப் பயிர்கள் குறித்து ஆழமாகப் படித்தேன், வெப்ப மண்டல விவசாயம், விவசாய நுணுக்கங்கள் குறித்து 100 புத்தகங்களாவது படித்திருப்பேன்”, எனக் கூறுகிறார்.
இந்தப் பின்னணியில் தான் கியூபாவின் விவசாயத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் காண வேண்டும். ஃபிடல் இத்தகைய விவாதங்களை நடத்துகிற போது, அந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள் மேலும் கற்பதும், அதற்கேற்ப மாற்றங்களை மேற் கொள்வதும், வேகமான செயல்பாடு நடைபெறுவதும் சாத்தியமாகும். 1990 – 2000 ஆண்டுகளில் கியூபாவின் விவசாயம் 6 மடங்கு அதிகரித்தது. விவசாய நிலங்களில் அளவு 4 மடங்கு அதிகரித்தது. காய், கனிகளின் உற்பத்தியைப் பெருக்கி, அரிசி, கோதுமை ஆகியவற்றின் உற்பத்தியைக் குறைத்துள்ளனர். பலரும் ஹவானாவில் இருந்து கிராமங்களுக்கு திரும்பிச் செல்லும் அளவிற்கு விவசாயத்தில் கூலி கிடைத்தது. நகரங்களில் மொட்டைமாடி தாவர பயிர் முறை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கோழி, முயல், பன்றி, போன்ற இறைச்சிக்கான விலங்குகளை புறநகர் மற்றும் கிராமப்புற வீட்டு மேல் தளங்களில் வளர்க்கும் முறை உருவானது. விவசாயப் பண்ணைகளை, அரசின் ஆலோசனைப்படி பெண்கள் நடத்துகின்றனர்.
கியூபாவின் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்களிப்பு செய்திருப்பது கல்வி. அனைவருக்கும் இலவச, கட்டாயக் கல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது. “லத்தீன் அமெரிக்காவில் மாபெரும் குற்றமொன்று இழைக்கப்பட்டு வருகிறது. நிலத்தின் விளைபொருளினாலேயே, முழுமையாக வாழ்ந்து வரும் நாடுகளில், மக்கள் நகர வாழ்க்கைக்கான அடிப்படையில் அறிவூட்டப்படுகிறார்கள். பண்ணை வாழ்க்கை முறையில் பயிற்றுவிக்கப் படுவதில்லை. தமது மக்களை அவர்களின் உணர்வுகளின் போக்கிலும், சிந்தனைப் பயிற்சியிலும் கல்வியூட்டும் நாடே சிறந்த நாடு. கல்வி வளமிக்க நாடு என்றும் வலிமையுடனும், சுதந்திரத்துடனும் திகழும்”, என ஃபிடல் மான்கடா படைத் தளத்தின் மீது நடத்திய தாக்குதலின் காரணமாக, கைதியாக, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது, குறிப்பிடுகிறார். இதுவே புரட்சிக்குப் பின் அமலாக்கப் பட்ட துவக்க கட்ட கல்விக் கொள்கையாக இருந்தது. புரட்சி முடிந்த ஒரே ஆண்டில், கியூபா முழு எழுத்தறிவு பெற்ற நாடாக வளர்ச்சி பெற்றது.
வியத்தகு மருத்துவ வளர்ச்சி:
கியூபாவிற்கு, எய்ட்ஸ் நோய் சிகிச்சைக்கான மருந்து கலந்த இறைச்சியை பிரேசில் நாட்டு நிறுவனம் வழங்கி வந்தது. ஆனால் அமெரிக்கா தனது தடை உத்தரவினால், பிரேசிலில் இருந்து இறக்குமதியான இறைச்சியை தடை செய்தது. இன்றைய கியூபாவோ, தனது சொந்த முயற்சியில் மருத்துவத் துறையில் பெரு வளர்ச்சி கண்டுள்ளது. எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட தாய்க்குப் பிறக்கும் குழந்தைக்கு எய்ட்ஸ் நோயில் இருந்து விடுதலை பெற்றுத் தர தக்க அளவிற்கு, மருத்துவத் துறையில் வளர்ச்சி கண்டுள்ளது.
கியூபா அரசு வட அமெரிக்கா மீது பல குற்றங்களை முன்வைத்துள்ளது. அதில், “வட அமெரிக்க அரசின் பயங்கரவாதங்கள் எங்கள் மக்களின் மீது ஏற்படுத்தியுள்ள குறிப்பிடத்தக்க தீய விளைவுகள் குறித்தது. டெங்கு வகை – 2 நோய் பரப்பும் திறன் பெற்ற ஏடிஸ் ஏகிப்தி எனும் வகைக் கொசுவை வாங்கிப் பரப்பினார்கள் என்பதை, 1979ம் ஆண்டு பசிபிக் பெருங்கடல் பற்றிய நிகழ்வில், கர்னல் ஃபிலிப் ரஸ்ஸல் அளித்த தகவல் கூறுகிறது. ஒமேகா 7 என்ற பயங்கரவாத இயக்கத்தின் தலைவன், எட்வர்ட்டோ அரோசினோ, கியூபாவில் டெங்கு காய்ச்சலைப் பரப்பியதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டான்.
இதை எதிர் கொள்ள கியூபாஉயிரி தொழில் நுட்ப வளர்ச்சியை, முக்கிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப செயல்பாடாக மாற்றிக் கொண்டது. இதன் வெற்றியாக டெங்கு 2 வகையான நோய்க்கு எதிர்வினையாற்றி, பாதிக்கப்பட்டோரை விரைவில் விடுவிக்கும் சாத்தியக் கூறுகளை உருவாக்கியது. நாலாயிரம் கியூப அறிவியல் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். புரதம், ஹார்மோன், ஊசிமருந்து, நோய் கண்டுபிடிப்பு முறை, கலப்பிணங்கள் என பல்வேறு கோணங்களில் தேவையில் இருந்து, ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர், என பத்திரிகையாளர் தோமஸ் ஃபோர்கே கூறுகிறார்.
உலகமே மிரண்டு போயிருந்த எப்போலா வைரஸ்க்கு எதிர் மருந்தைக் கண்டறிந்து, வெற்றிகரமாக செயலாற்றியமைக்காக கியூபாவை உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் பாராட்டியுள்ளது. ஆயிரம் குழந்தைகளுக்கு 4.5 குழந்தைகள் என்கிற அளவிற்கு இறப்பு விகிதம் கியூபாவில் உள்ளது. அமெரிக்காவில் 6.1 எனவும், இந்தியாவில் 49 எனவும் உள்ளது. இது குறித்து ஃபிடல் ”சிசு மரணத்தை 20 லிருந்து குறைக்க மிக செலவு பிடித்தது. நம்மால் அதைக்குறைக்க முடியும் என்றால், அதற்கு முக்கியத்துவம் தர வேண்டும். ஆயிரக்கணக்கானக் குழந்தைகள் மரணம் அடையும் நாட்டில் மனித உரிமைகள் எப்படி இருக்கும்?” என கேள்வி எழுப்புகிறார்.
சூறாவளியும் அடிபணியும்:
கியூபாவிற்கு மற்றும் ஒரு பொருளாதாரத் தொல்லை தருவது, தீவைச் சுற்றி அடிக்கும் சூறாவளி ஆகும். இதை எதிர் கொள்வதில், மனித இழப்பைத் தடுப்பதில் பெரும் சாதனையை கியூபா செய்துள்ளது. 1944 ல் இருந்து வீசிய சூறாவளிகளிலேயே, மிச்சேல் 2001 தான் மிகப்பயங்கரமானது. இந்தத் தாக்குதலில் இருந்து பல்லாயிரம் மக்களைக் காப்பதில் கியூபா வெற்றி கண்டது சாதாரணமானது அல்ல. சுமார் 70 ஆயிரம் மக்கள் மிச்சேல் சூறாவளியின் போது பாதிக்கப்பட்டார்கள், ஆனால் 4 பேர் மட்டுமே பலியாயினர். 8 பேர் மட்டுமே காயமடைந்தனர். கியூபா ஒரு ஏழை நாடு என்பதை வைத்துப் பார்க்கும் போது, இந்தச் செய்தி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது என செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.
ஆக்ஸ்ஃபேம் என்ற ஆய்வு நிறுவனம் 1994 – 2003க்கு இடைப்பட்ட காலத்தில், 129 சூறாவளிகள் வீசியுள்ளன. இதில் 19 பேர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர். கியூபாவின் பொருளாதார நெருக்கடி, போக்குவரத்து வசதிகள் மற்றும் இதர வசதிகளை வைத்துப் பார்க்கும் போது, கியூபா சாதித்துள்ளது என்றே கூற வேண்டும், என பதிவு செய்துள்ளது. கியூபாவின் அனைத்து மட்டத்திலும், ஆய்வு மேற்கொண்ட ஆக்ஸ்ஃபேம், அசையா சொத்து மற்றும் அசையும் சொத்து என இரண்டு அம்சங்களை கியூபாவில் கண்டதாகக் கூறுகிறது.
அசையா சொத்து எனும் போது, தேசிய பாதுகாப்புத் துறை, முன்னெச்சரிக்கை அமைப்புகள், தேவையான அனைத்துக் கருவிகளும் கொண்ட மீட்புக் குழுவினர் மற்றும் அவசர கால சேமிப்புக் கிட்டங்கிகள் ஆகியவை கியூபாவின் அசையா சொத்துக்கள் ஆகும். சமூகத்தைக் கட்டமைப்பது, மக்கள் ஆதரவைப் பெறுவது, மனித உயிர்களைக் காப்பாற்றுவதில் உண்மையான தெளிவான அரசியல் உறுதி, ஈடுபாடு, பேரிட்டர் விழிப்புணர்வு அதை எதிர்த்துச் சமாளிக்கும் விவரக்களைத் தரத் தக்க கல்வியறிவு கொண்ட மக்கள் தொகை என்பது அசையும் சொத்து, இதன் காரணமாகவே, கியூபா சூறாவளிகளின் பெரும் தாக்குதலில் இருந்து தப்ப முடிகிறது. வேறு எந்த அரசுகளாலும் இந்தக்கைய சாதனையை நிகழ்த்த முடியவில்லை, என பகிரங்கமாகக் குறிப்பிடுகிறது.
நிறைவாக கியூபா தனது புரட்சிக்குப் பின் அடைந்த வெற்றிகளும், தற்போது சோசலிச முகாம் இல்லாத நிலையில் 25 ஆண்டுகளாக எதிர் நீச்சலில் செய்திருக்கும் மகத்தானச் சாதனைகளும், ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களுக்கு எதிரான போராட்ட உணர்வை, காட்டுத் தீயாக வளர்க்கிறது. வாழ்க கியூப புரட்சி தினம்.
உதவிய நூல்கள்:
1. ஃபிடல் காஸ்ட்ரோ உரைகள் – 1997 – சவுத் விஷன் வெளியீடு
2. குற்றவாலிக் கூண்டில் வட அமெரிக்கா – 1999 – பரிசல் வெளியீடு
3. குரலின் வலிமை – 2005 – வாசல் வெளியீடு
4. சாவேஸ் – 2006 – வாசல் வெளியீடு
5. நேருக்கு நேர் – 2002 புதுமலர், கோவை வெளியீடு
6. சூறாவளியும் அடிபணியும் – 2006 – என்.சி.பி.ஹெச்
7. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – 21வது காங்கிரஸ் அரசியல் தீர்மானம்
8. Cuba The Blockade and The declining Empire – 2005 – Pablo Neruda School of Spanish