-இரா.சிந்தன்
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நம் எல்லோருக்கும் தெரிந்ததே. அவரை விடுதலை செய்து வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பில் கணக்குப் பிழைகள் உள்ளது முதலில் வெளிவந்தது. பின், அந்தத் தீர்ப்பின் ஊடாக நீதிபதி முன் வைத்துள்ள வாதங்கள் – அதிகாரத்தில் இருப்பவர்களின் முறைகேடுகளை நியாயப்படுத்துவையாக இருப்பது பின்னர் வெளிவந்தது.
ஆள்வோர், அதிகாரம் படைத்தோருக்கு நீதித்துறை எவ்வளவு விரைவாக செயல்படுகிறதென்பதைக் காட்ட – சம காலத்தில் பல உதாரணங்கள் உள்ளன. இந்தியச் சிறைகளில் உள்ள 2.8 லட்சம் கைதிகளில் 40 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள் (1.1 லட்சம் பேர்) என்பதையும் அவர்கள் ஜாமீன் பெற முடியாமல் உள்ளதையும், லட்சக்கணக்கான வழக்குகள் விசாரணைக்கே வராமல் தாமதமாகிவருவதையும் இணைத்துப் பார்த்தால், இந்திய நீதித்துறை அனைவருக்கும் சமமானதாக இல்லை என்றே புலப்படுகிறது.
அரசின் முக்கிய அங்கமாக அமைந்திருக்கும் நீதித்துறை – ஜனநாயகத்தையும், சமத்துவத்தையும் உறுதிப்படுத்த வேண்டுமென நாம் எதிர்பார்க்கிறோம். இந்திய நீதித்துறை சுயேட்சையானதாகவும், அனைவருக்கும் சமமான நீதியை பரிபாலனம் செய்ய விருப்பமுடையதாகவும் தன்னை அறிவித்துக் கொண்ட போதிலும் மேற்சொன்ன நிலை ஏன் ஏற்படுகிறது?
நடைமுறைச் சிக்கல்கள்:
நீதித்துறை அரசின் கருவியாக அமைந்துள்ளதுடன், அது தத்துவார்த்தத் துறையின் ஒரு பிரிவாகவும் செயல்படுகிறது. ஆளும் வர்க்கத்தின் தத்துவமே இந்தத் துறையிலும் ஆதிக்கம் செய்கிறது. சட்டங்கள் பொதுவானவை. பிரச்சனைகள் குறிப்பானவை. குறிப்பான பிரச்சனைகளில் பொதுவான நீதியை வழங்குவதுதான் நீதித்துறையின் பணி. அவ்வாறு செய்திட ஒரு நீதிபதி தேவைப்படுகிறார். நீதிபதிகள் பலவீனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. அவர்களுக்கு சாய்மானம் இருக்காதென்றும் கருத முடியாது. சாய்மானம் இருக்கும்போது நீதி பிழையாகிறது. இத்தகைய வாய்ப்பு ஏற்படாத வகையில் உரிய கட்டுப்பாடுகளும், ஜனநாயகமும் வெளிப்படைத்தன்மையும் கொண்ட நீதித்துறையை உறுதி செய்வது தொடர் போராட்டமாகும்.
நம்முடைய நீதித்துறை அவ்வாறு தன்னை புதுப்பித்துக் கொண்டுள்ளதா? என்பதுதான் மையமான கேள்வி. இன்றும் தொடரும் ஜனநாயகத்துக்கு வழியற்ற நியமன முறையும், விமர்சனத்திற்கு வாய்ப்பளிக்காத அதிகாரமும், வெளிப்படைத் தன்மையின்மையும் இந்த தத்துவார்த்தச் சாய்மானத்தைத் தக்க வைக்கின்றன. முதலில் அவை பற்றி பார்ப்போம்.
நியமன முறை: நீதியரசர்கள் நீதியரசர்களாலேயே நியமிக்கப்படும் முறை இந்தியாவில் மட்டும்தான் உள்ளது. உலகின் பல நாடுகளில் அரசு, அரசு நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறை பிரதிநிதிகள் இணைந்த குழுவே நீதியரசர்களை நியமிக்கிறது. சோசலிச நாடுகளில் வாக்களித்துத் தேர்வு செய்யப்படும் முறையும், பொதுமக்கள் கருத்துக்கான வாய்ப்பும் வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் 1993 ஆம் ஆண்டு வரை, நீதியரசர்களை நியமிக்கும் குழுக்களில் அரசு நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான இடம் வழங்கப்பட்டு வந்தது. அந்த ஆண்டில் இதற்கு எதிராக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் அமைப்பினர் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்கள். இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வில் பெரும்பான்மை நீதிபதிகள் அரசமைப்புச் சட்டத்திற்கு ஒரு விநோதமான விளக்கத்தைக் கொடுத்ததன் மூலம், அந்த வாய்ப்பை அடைத்துவிட்டனர்.
ஜனநாயக நடைமுறை இல்லாதபோது, அது ஜனநாயக மனநிலையையும் இல்லாமல் செய்துவிடும் – மேலும் இது ஒரே விதமான தத்துவார்த்த, சித்தாந்த நிலைப்பாடு கொண்டவர்களே அடுத்தடுத்து நீதியரசராக நியமிக்கப்படும் சூழலை உருவாக்கும்.
கேள்வியற்ற அதிகாரம்: ஆங்கிலேய நிலப்பிரபுத்துவ அமைப்பிலிருந்து பெறப்பட்ட ‘நீதிமன்ற அவமதிப்பு’ குறித்த சட்டம் தற்போதும் அமலில் உள்ளது. 1967 ஆம் ஆண்டு கேரள முதல்வராக இருந்த இ.எம்.எஸ் அவர்கள், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்ட கருத்துகளுக்காக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இங்கே நினைவில் கொள்ளத்தக்கது.
நீதித்துறையும் ஆளும் வர்க்கங்களில் ஒடுக்குமுறைக்கான கருவிதான் என்ற மார்க்சின் கருதுகோள்களை அவர் மேற்கோள் காட்டி பேசினார். இதற்காகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில் ‘(அவரின் கூற்று) நீதிபதிகளின் சார்பு நிலை குறித்த சந்தேகத்தை எழுப்புவதுடன், மக்கள் முன் நீதிபதிகளின் மரியாதையைக் குறைப்பதாக அமைந்துள்ளது’ என்ற விளக்கத்தைக் கொடுத்தனர். ஒரு சாதாரண விமர்சனத்தைக் கூட நீதிமன்ற அவமதிப்பென்று கருதிவிட முடிவதானது, நீதிமன்றங்களின் செயல்பாடுகள் குறித்த பொது விமர்சனத்துக்கும், தலையீட்டுக்குமான வாய்ப்பைத் தடை செய்கிறது.
வெளிப்படைத் தன்மை இல்லாதது: இப்போதுள்ள சூழலில் நீதியரசர்களின் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதும், தண்டிப்பதும் நடைமுறைச் சாத்தியமற்றதாகும். ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியின் மீதான நடவடிக்கையைத் தொடங்க ராஜ்யச்சபாவில் குறைந்தது 50 உறுப்பினர்களின் ஆதரவும், மக்களவையில் 100 உறுப்பினர்களின் ஆதரவும் தேவை. குற்றச்சாட்டுகளை பரிசீலிக்கும் நீதிபதிகள் குழு தன்னுடைய அறிக்கையை நாடாளுமன்றத்திற்கு அளிக்கும். ஒரு நீதிபதியின் மேல் நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு அவையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதுடன், அன்று வருகை தந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் ஆதரவு தர வேண்டும். இதன் பிறகுதான் ஒரு ஜனாதிபதியால் நீதியரசரை பதவி நீக்கம் செய்ய முடியும்.
நீதித்துறையின் பல மட்டங்களிலும் ஊழல் மலிந்து வருகிறது. நீதியரசர்கள் பலரும் இதுபற்றிய கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இன்னும் விவாதக் கட்டத்திலேயே உள்ளன. இவையெல்லாம், நீதித்துறையில் கேள்வியற்ற சர்வாதிகாரச் சூழலை ஏற்படுத்துவதுடன், மேட்டுக்குடி மனநிலையிலும் இருத்துகிறது.
லட்சக்கணக்கான வழக்குகள் தேக்கத்தில் இருப்பதுடன், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் ஒப்புக்கொள்ளப்பட்ட 1017 பணியிடங்களில் 36 சதவீதம் காலியாக உள்ளன. நீதித் துறையை அணுகுவதற்கான சட்ட உதவியும் – செலவு பிடிக்கும் விசயமாக ஆகியிருக்கிறது. இவற்றின் காரணமாக நீதித்துறை ஆளும் வர்க்க தத்துவ சாய்மானத்திற்கு ஆளாகிறது. புதிய தாராளவாதக் கொள்கைகளை புகுத்த நினைப்போருக்கு மற்ற துறைகளை விடவும், நீதித்துறை எளிய கருவியாகிறது.
தொழிலாளர் விரோதப் போக்குகள்:
உச்ச நீதிமன்றம் ஒரு குறிப்பான வழக்கில் வழங்கும் தீர்ப்பாக இருந்தாலும், அது பொதுவானதாகிவிடுகிறது. இதன் காரணமாக சில தனிப்பட்ட வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் – மக்கள் தங்கள் வரலாற்றில் போராடிப் பெற்ற ஜனநாயக உரிமைகளையே கேள்விக்கு உள்ளாக்குவதாக அமைந்திருக்கின்றன. தொழிலாளி வர்க்கத்தை நேரடியாகப் பாதிக்கும் ஐந்து மோசமான போக்குகளை பேராசிரியர் பிரபாத் பட்நாயக் பட்டியலிடுகிறார்.
அவை : 1) மக்கள் போராட்டங்களுக்கான உரிமைகளை மறுத்தல், 2) இட ஒதுக்கீடு உள்ளிட்ட உறுதி செய்யப்பட்ட உரிமைகளை திரும்பப் பெறும் விதமான தீர்ப்புகள், 3) சுற்றுச்சூழல் பாதுகாப்பின் பெயரால், மக்கள் வாழ்வாதாரத்தை திடீர் சிக்கலுக்கு உள்ளாக்கும் தீர்ப்புகள், 4) பிழைப்புக்காகத் தஞ்சமடைவோரை ‘சட்டவிரோதக்’ குடியேற்றம் என அழைப்பதன் மூலம் வலதுசாரிப் பிரச்சாரத்திற்கு வலுச் சேர்ப்பது 5) புதிய தாராளவாதக் கொள்கைகளை அமலாக்குவதற்கான ஒத்துழைப்பை அளித்தல்.
வர்க்க ஆட்சியின் கருவி:
இவை தவிர, பிற்போக்குக் கண்ணோட்டத்துடன் பாலின சமத்துவத்திற்கு எதிராகவும், பெரும்பான்மை மத அடிப்படைவாதக் கண்ணோட்டத்துடனும், சாதிப் பாகுபாடுகளை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துவிடும் தீர்ப்புகளும் வந்திருக்கின்றன. சமீபத்தில் பாலியல் பலாத்காரக் குற்றம் செய்த குற்றவாளிக்கு பிணை வழங்கிய தீர்ப்பில் ‘சமரச மையத்தை’ அணுகுமாறு குறிப்பிட்டு அதிர்ச்சி கொடுத்தார் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி.
சமயங்களில் வரவேற்கத் தக்க தீர்ப்புகளையும் இந்திய நீதித்துறை வழங்கியிருக்கிறது. ஆனால், முதலாளித்துவ ஜனநாயக சமூகத்தில் வெளிப்படும் ஊழல் முறைகேடுகள், அரசியல் வாழ்வியலின் வீழ்ச்சி, மற்றும் சமூக ஒடுக்குமுறைகளைக் கட்டுப்படுத்தும் அளவு செயல்பட்டுள்ளதா என்பதுதான் கேள்வி. இந்திய ஆட்சியதிகாரக் கட்டமைப்பின் தத்துவார்த்த ஆதிக்கமே இந்த பலவீனத்திற்கு காரணமாக அமைகின்றன.
இதன் காரணமாகத்தான், இந்திய நீதித்துறை பற்றி மார்க்சிஸ்ட் கட்சி தனது திட்டத்தில் (பாரா 5.15) ”தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இதர பகுதி உழைக்கும் மக்களுக்கு எதிரானதாகவே நீதித்துறை நிறுவப்பட்டுள்ளது.” என்றும், “பணக்காரர்களும், ஏழையும் சமம் என்று சம்பிரதாயபூர்வமாகக் கூறப்பட்டாலும் … சாராம்சத்தில் சுரண்டும் வர்க்கத்தின் நலனை பாதுகாப்பதாகவும், அவர்களது வர்க்க ஆட்சியை உயர்த்திப் பிடிப்பதாகவுமே உள்ளது.” என்றும் குறிப்பிட்டுள்ளது.
தேவை தொடர் சீர்திருத்தம்:
சோலிச நாடுகளில் நீதித்துறை எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி விவாதித்த இரண்டாவது கம்யூனிஸ்ட் அகிலம், நீதிபதிகள் தேர்வில் பொது வாக்கெடுப்பு முறையைப் பரிந்துரைத்தது. சீன அனுபவத்தைப் பரிசீலிக்கும்போது, புரட்சிக்குப் பின்னர் நான்கு முறை அந்த நாட்டின் நீதியமைப்பு சீர்திருத்தப் பட்டுள்ளது. கால மாற்றத்துக்கு தக்க முறையில் சீர்திருத்தங்கள் தொடரும் என அந்த அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் நீதித்துறை சீர்திருத்தத்துக்கான அவசியம் உள்ளது. நீதிபதிகளின் நியமனம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதையும், தேசிய சட்ட ஆணையம் ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதையும் , அந்த ஆணையம் நீதிபதிகள் குறித்தான முறைகேடுகளை விசாரிக்கும் அதிகாரத்துடன் செயல்பட வேண்டும் என்றும் வற்புறுத்துகிறது. “நீதித்துறை நிர்வாகத்தில் ஜனநாயக மாற்றங்கள்” என்பதுடன் “உரிய காலத்தில், நேர்மையான நீதி” எனவும் “நலிந்த மக்கள் சிரமமின்றி சட்டப்படியான தீர்வு பெறும் வகையில் இலவச சட்ட உதவி மற்றும் ஆலோசனைகள்” உறுதி செய்யப்பட வேண்டுமென்று விரும்புகிறது.
போராட்டங்களை உருவாக்குவோம்:
இன்று ஆள்வோர் – பெருமுதலாளிகள் – அதிகாரிகள் இடையிலான கூட்டுக் காரணமாக ஊழல்கள் பிரம்மாண்டமாகியுள்ளன. தேர்தல் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் எழுந்திருக்கிறது. புதிய தாராளவாதக் கொள்கைகளை அமலாக்குவதற்காக, அரசு நடைமுறைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. இந்தப் போக்குகள் நீதித்துறையிலும் மலிந்துள்ளன.
அரசியல் மதிப்பீடுகளில் ஏற்பட்டிருக்கும் சரிவும், பொது வாழ்வியல் சந்திக்கும் சரிவும் – முதலாளித்துவ வளர்ச்சிப்போக்கோடு தொடர்புடையவையே. இத்தகைய போக்குக்கு எதிரான போராட்டங்களை கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து உருவாக்க வேண்டும். அதுதான் சமூகத்தில் மெய்யான நீதி நிலவுவதை உறுதி செய்வதற்கான பாதையும் ஆகும்.
(அக்டோபர் – டிசம்பர் 2005 ஆங்கில மார்க்சிஸ்ட் இதழில் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் எழுதிய ”நீதித்துறையும், மக்களின் மேம்பாடும்”, சிபிஐ(எம்) கட்சித் திட்டம், 2007 மே மாதம் பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழ் “நீதித்துறையும் முன்னுக்கு வந்துள்ள விவாதங்களும்” – எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, மற்றும் நீதித்துறை இட ஒதுக்கீடு தொடர்பான நீதியரசர் சதாசிவம் உரை, நீதித்துறை இணையதள தகவல்கள் மற்றும் கம்யூனிஸ்ட் அறிக்கை – காரல் மார்க்ஸ் எங்கல்ஸ் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது)