– காஞ்சிபுரம் வாசகர் வட்டம்
ஒரு சமூகம் எந்தக் கட்டத்தில் உள்ளதென்பதை அங்குப் பிரதானமாக நிலவும் உற்பத்தி முறையே தீர்மானிக்கிறது. முதலாளித்துவச் சமூகத்தில் பெரும்பகுதி உற்பத்தி ஆற்றலையும், உற்பத்திக் கருவிகளையும் கொண்ட முதலாளி வர்க்கம் ஆளும் வர்க்கமாக உள்ளது. உற்பத்திக் கருவிகள் உடைமையாக இல்லாத தொழிலாளிவர்க்கம் சுரண்டலுக்கு ஆட்படுகிறது. இந்தக் கட்டம் பற்றிக் காரல் மார்க்ஸ் “வர்க்கப் பகைமைகளை அது (முதலாளித்துவச் சமூகம்) எளிமைப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த சமுதாயமும், இருபெரும் பகை முகாம்களாக, ஒன்றையொன்று நேருக்குநேர் எதிர்த்து நிற்கும் – முதலாளித்துவ வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்னும் – இருபெரும் வர்க்கங்களாக, மேலும் மேலும் பிளவுபட்டு வருகிறது.” என்கிறார்.
வர்க்கப் புரட்சி வெற்றியடைந்தவுடன் முதலாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்திலிருந்து வீழ்த்தப்படுகிறது. ஆனால் முந்தைய சமூகத்தில் நிலவிய நிலைமைகளை மாற்றாமல், முன்னேறிய சமூகத்தை ஏற்படுத்த முடியாது. முதலாளித்துவச் சமூகத்தால் வடிவமைக்கப்பட்ட தனி மனித சிந்தனை, கலை, கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், நிர்வாக முறை என அனைத்தும் தொடர்கின்றன. “இந்த நிலைமைகளைப் புரட்சிகரமாக மாற்றியமைப்பதற்குப் பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசை நிறுவுதல் அவசியம்” எனக் குறிப்பிடுகிறார் மார்க்ஸ். இவ்வாறு அரசு அமைக்கப்பட்டவுடன் அந்தச் சமூகம் சோசலிசக் கட்டத்தை எட்டுகிறது. முழுமையான சோசலிச அமைப்பை எட்டுவது நேர் பாதை அல்ல. ஏற்ற இறக்கங்கள் நிறைந்த பல நிலைப் போராட்டங்கள் தேவைப்படுகின்றன.
சோசலிச சமூகம் மனித வரலாற்றின் முக்கிய நவீன உற்பத்தியமைப்பாகும். உற்பத்திக் கருவிகள் சமூகத்தின் சொத்தாக்கப்படுவதுடன், பெரும்பான்மைப் பாட்டாளிகளுக்கான ஜனநாயகத்தை உறுதி செய்கிறது. லாப வெறிக்கு மாறாக மனித சமூகத் தேவை அடிப்படையில் செயல்பட்டு இயற்கையை, சூழலைப் பாதுகாக்கிறது.
தன்னுடைய அரசும் புரட்சியும் நூலில் இதுபற்றிய விவாதத்தை விளக்குகிறார் வி.இ.லெனின், அரசியல் மாறுதலுக்கான ‘முதல் நிலை கம்யூனிச’ (அல்லது) சோசலிசக் காலகட்டத்தில் உற்பத்தி ஆற்றல்கள் சமூக உடைமையாக இருக்கும், உற்பத்தியில் விளைவதும் சமூகத்திற்கே சொந்தமாக அமைந்திடும். முதலாளி வர்க்கத்தை அரசு அதிகாரத்திலிருந்து அகற்றி, உற்பத்திச் ஆற்றல்களை வளர்த்தெடுக்கும் இந்தக் காலகட்டம் சோசலிச சமூகம் எனப்படுகிறது. ‘சக்திக்கேற்ற உழைப்பு, உழைப்புக்கேற்ற ஊதியம்’ என்ற லட்சியத்தை எட்டுவதில், ஒவ்வொரு நாடும், தன் சொந்த தேசிய நிலைமைகள், உற்பத்தி ஆற்றல்களின் வளர்ச்சி, உலக நிலைமைகளைக் கணக்கிட்டு பாதை வகுத்து நகர்கிறது.
உலகம் பல நாடுகளாகப் பிரிந்திருக்கும் சூழ்நிலையில், பின் தங்கிய நாடுகளிலேயே சோசலிசப் புரட்சிகள் வெற்றியடைந்துள்ளன. பின்னடைவுகளையும் சந்தித்துள்ளன. அந்த அனுபவங்களை உள்வாங்கியே தற்கால உத்திகள் வகுக்கப்படுகின்றன.
மக்கள் சீனம் சோசலிச கட்டத்தின் ஆரம்ப நிலையில் உள்ளதாகவே குறிப்பிடுகிறது. சோசலிசத்துக்கும், முதலாளித்துவத்துக்குமான முரண்பாடு முக்கியமாக அமைந்துள்ள நிலையில் – முதலாளித்துவ நெருக்கடிகளை, சோசலிசப் புரட்சிக்கான வாய்ப்பாக மாற்றியமைப்பதே இன்றைய அவசியக் கடமையாகும். முதலாளித்துவ அரசாட்சியை வீழ்த்திய பிறகுதான் சோசலிசத்தைக் கட்டமைப்பது பற்றிய சோதனைக்கான அவசியம் எழுகிறது.
கேள்வி பதில்: சோசலிசம் என்பது சமூகக் கட்டமா?
