தொழிலாளி வர்க்கத்திடம் இழப்பதற்கு ஒன்றுமில்லையா?


தொழிலாளி வர்க்கத்திடம் இழப்பதற்கு ஒன்றுமில்லையா? கம்யூனிஸ்ட் அறிக்கை எழுதிய காலத்தில் இக்கருத்துச் சரியாக இருந்திருக்கலாம்இன்று பொருந்துமா?

– பி.ஆர்.பரமேஸ்வரன்

இத்தகைய கேள்வி இன்று பலரிடமிருந்து வருகிறது. இன்றைய தொழிலாளி வர்கத்தினர் ஓரளவு சொத்துடைமை உள்ளவர்களாகிவிட்டனர் என்ற கருத்தை முதலாளித்துவ அறிவுஜீவிகள் முதற்கொண்டு அதி தீவிரப் புரட்சியாளர்களான நக்சலைட்கள் வரையில் கொண்டுள்ளனர். இது பிரச்சனையை முழுமையாக நோக்காததால் ஏற்படும் பாதிப்பு.

மனிதர்கள் கல்லையும், கம்பையும், வில்லையும், அம்பையும் மட்டும் ஆயுதங்களாகக் கொண்டு காடுகளில் அலைந்து திரிந்த காலத்தில் அவர்களில் தனியாக யாருக்கும் உடைமை என்று ஏதும் இருக்கவில்லை.

 

புரட்சிகரமான மாறுதல்:

ஆனால், உலோகங்கள் கண்டெடுத்த பிறகு, உலோகத்தினால் கருவிகள் செய்த பிறகு, மனித சமுதாயத்தின் பொருளுற்பத்தி – வினியோக முறையில் புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்பட்டன. மனிதனின் சமுதாய வாழ்க்கையில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. ஒருவன் உழைத்தால் அவன் உண்டது போக உபரி ஏற்படும் நிலைமை ஏற்பட்டது. சமுதாயத்தில் உழைப்பை விற்பவனும், உழைப்பை வாங்குபவனும் தோன்றினர்.

ஒருவனை உழைக்க வைத்தால் உபரி – லாபம் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டது. இதனால் கருவி இல்லாதவர்களைப் பலவந்தமாக அடிமைப்படுத்தி உழைக்கச் செய்யும் முறை – அடிமை முறை தோன்றியது. மனித சமுதாயத்தில் அடிமைகள் – ஆண்டைகள் என இரண்டு வர்க்கம் தோன்றியது. அப்போதுதான் உள்ளவன் – இல்லாதவன் என்ற வேற்றுமை தோன்றியது.

 

உலோகமும், உலோகக் கருவிகளும் தோன்றிய காலத்திலிருந்தே அன்றாடம் உண்டது போக ஏதாவது கொஞ்சம் உபரியாகப் பெற்றிருந்தவர்களும் சமுதாயத்தில் இருந்தனர். ஆனால் இந்த உபரியானது நிரந்தரமானதாக, வசதியான வாழ்க்கையை உறுதி செய்வதாக இருக்கவில்லை. அவர்களது உழைப்புக்கும், உபரிக்கும் எந்த உத்திரவாதமும் இருக்கவில்லை. சந்தையின் ஏற்ற இறக்கம் அவர்களது வாழ்க்கையின் ஏற்ற இறக்கத்தைத் தீர்மானித்தது.

 

ஆழ்ந்து பரிசீலித்தால் அதே நிலைமை இன்றைக்கும் இருப்பதைப் புரிந்துகொள்ள முடியும். இன்றைய நிலைமை நமக்கு அறிவிப்பது நாளையும் இதே நிலைமை தொடரும் வளரும் என்பதைத்தான்.

 

முதலாளி வர்க்கத்தின் உபரி – லாபம் அதிகரிக்கும் :

 

உலக ரீதியாகவே இன்று முதலாளி வர்க்கம் அதிக லாபத்திற்கான போராட்டத்தை நடத்திவருகிறது. அதற்கான வழிமுறைகள்தான் தனியார் மயம், நவீனமயம், உலகமயம், தங்கக் கைகுலுக்கல், தொழிலாளி ஒப்பந்தக் கூலியாக மாறுவது ஆகிய பல்வேறு நவீனத் திட்டங்களை முதலாளி வர்க்க நிபுணர்கள் உருவாக்கியுள்ளனர். சுருக்கமாகச் சொன்னால் இன்று வேலையில் இருப்பவனுக்கு நாளை வேலையில்லை. வருமானம் இல்லை. வாழ்க்கை இல்லை. இதுதான் உண்மை. இதனை உணராமல் இன்றைய தொழிலாளி எதிர்கால நல்வாழ்வுக்கு உத்தரவாதம் பெற்றுள்ளான். சொந்த வீடு கட்டியுள்ளான்: வாடகைகளுக்கு வீடுகளை விட்டிருக்கிறான். அவன் வீட்டில் இப்போது டிவி உள்ளது, குளிர் பதனப் பெட்டி உள்ளது, சலைவை இயந்திரம் உள்ளது, மேசை, நாற்காலிகள் உள்ளன, இரு சக்கர வண்டி அல்லது வாகனங்கள் உள்ளன, இன்னும் இது போல இன்னும் பல வசதிகள் பெற்றுள்ளான். ஆகவே தொழிலாளி இழப்பதற்கு ஒன்றுமில்லாதவனல்ல என்று பேசுவது இது பற்றி ஆழ்ந்து பரிசீலிக்காமல் பேசுவதேயாகும்.

இவற்றைத் தொழிலாளர் தவணை முறையில் கடனுக்குப் பெறுகின்றனர். இதற்கான பணத்தை, பொருட்களைத் தயாரித்த கம்பெனியின் இடைநிலைக்காரர்களாக உள்ள வங்கிநிர்வாகம் செலுத்துகிறது. தொழிலாளி வாங்கிய பொருளுக்கான பணத்தை ஆலை நிர்வாகம் வட்டியுடன் தொழிலாளியின் பணத்தில் பிடித்தம் செய்து வங்கியில் செலுத்திவிடுகிறது. இந்தப் பரிவர்த்தனையில் ஆலை முதலாளிகள் லாபம் சம்பாதிக்கிறார்கள். வங்கி, வட்டியைப் பெற்றுக்கொள்கிறது. இந்த லாபத்தையும் வட்டியையும் கொடுப்பவன் யார்? உழைக்கும் தொழிலாளி?.

 

இது மட்டுமா, முதலாளித்துவம் வாழ வேண்டுமானால் அதற்கு லாபம், அதிக லாபம் மேலும் மேலும் அதிக லாபம் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் வாழ முடியும். அதற்கென்ன வழி? கூலி கொடுக்காத உழைப்பு; குறைந்தபட்சக் கூலிக்கு அதிகபட்ச உழைப்பு! இதுதான் ஒரே வழி! இன்னொரு வழி, உற்பத்தியான பொருட்களை அதிக விலைக்கு விற்பது! இதற்ற்கென்ன்ன வழி? குறைந்த ஆட்களைக் கொண்டு அதிக உழைப்பு அதற்கென்ன வழி? ஆட்குறைப்பு. எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காத நிறுவனங்களை மூடுவது, ஆயிரக்கணக்கானத் தொழிற்சாலைகள் இப்போது மூடப்படுகின்றன. அவைகளெல்லாம் நோய்வாய்ப்பட்டுள்ளனவென்று கூறுகின்றனர்.

 

சென்னையில் உள்ள பின் அண்டு சி ஆலையைச் சாராய உடையார் மேற்கொண்ட போதூ அங்கு 15,000 தொழிலாளர்கள் வேலை செய்துவந்தனர். ஐந்தாண்டுகளில் அது ஆயிரமாகக் குறைந்துவிட்டது. இப்படி எத்தனை ஆலைகளில் ஆட்குறைப்பு? எத்தனை ஆலைகள் மூடப்பட்டுள்ளன?. இந்தப் பல்லாயிரக்கணக்கான தொழிலாளரெல்லாம் இப்போது எங்கே வாழ்கிறார்கள்? எப்படி வாழ்கிறார்கள்? ஆட்சியாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் அதைப்பற்றிக் கவலையில்லை.

 

நவீன எந்திரங்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு ஆலையிலும் அலுவலகத்திலும் தொழிலாளர்களை நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் வேலையைவிட்டு நீக்குகின்றனர். இதற்கு அவர்கள் வெலை செய்த காலத்திற்கான இழப்புத் தொகை என்ற பேரில் ஒரு தொகையை ஆலை அல்லது அலுவலக நிர்வாகம் அளிக்கிறது. இதனைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியோடு, கற்பனையில் தங்கக் கைகுலுக்கல் செய்து விடை பெற்றுச் செல்லலாம் என்று நிர்வாகம் கூறுகிறது. தொழிலாளர்களுக்கும் இது கவர்ச்சியாகத் தெரிகிறது. இதில் மயங்கி பலர் நிரந்தரத் தொழிலாளி என்ற நிலையை விட்டு கம்பெனியின் ஒப்பந்தக் கூலிக்காரராக மாறுகின்றனர். சில கம்பெனிகல் பழைய எந்திரங்களையும் அவர்களுக்குக் கொடுத்து உதவுகின்றனர்.

 

இது ஆலை நிர்வாகம் அதிக லாபம் சம்பாதிப்பதற்கான ஏற்பாடு. உற்பத்தி செய்வதற்கான இடம் கம்பெனி பொறுப்பல்ல. தொழிலாளியின் வீட்டிய்லேயே வைத்துக்கொள்ளலாம். மின்சாரம், தண்ணீர் வசதி இவற்றுக்கு முதலாளி பொறுப்பல்ல. கேண்டீன் வசதியும் இல்லை. சுகாதார வசதியும் செய்ய வேண்டாம். ஒரு உறுப்பு உற்பத்தி செய்தால் குறிப்பிட்ட தொகை கூலி என்பதுதான் காண்டிராக்ட்ட். போனஸ், வருடாந்திர சம்பள உயர்வு போன்ற பொறுப்பு எதுவும் முதலாளிக்கு இல்லை. அதிக உற்பத்தி செய்து கொடுத்தால், அதிகப் பணம் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. ஆசையைத் தூண்டி, பொழுதெல்லாம் குடும்பம் முழுவதையும் உழைக்க வைக்கின்றனர். மத்திய மாநில அரசுத் துறைகளிலேயே அதிகாரிகள் பல தொழிலாளர்களுக்குக் காண்டிரேக்ட் எடுக்கச் செய்கின்றனர். அரசு இலாக்காக்களில் பணியாட்களின் எண்ணிக்கை குறைகிறது. இலாகா ஊழியர் என்ற முறையில் ஊழியருக்கு இருந்த அந்தஸ்தும், பாதுகாப்பும், வசதிகளும் பறிக்கப்படுகின்றன.

தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு ஒரே உத்திரவாத வழி, உழைப்பு மட்டுமே. கூலிக்கு வேலை செய்யாமல் உடலுழைப்பை மூலதனத்தின் சொந்தக் காரர்களிடம் , அதாவது தனிப்பட்ட முதலாளிகளிடமோ அல்லது அவர்களின் அரசிடமோ விற்பனை செய்யாமல் எந்தவொரு தொழிலாளியும் – தொழிலாளி வர்க்கக் குடும்பத்தில் பிறந்த குடிமகனும் இன்றைக்கு வாழ முடியாது. தொழிலாளியின் குடும்பம் வாழ்வதற்கு (அலுவலக ஊழியர்) மூளை உழைப்பு, (மற்றவர்கள்) உடலுழைப்பு தவிர வேறொன்றும் இல்லை. அனைத்து அனுபவங்களும் அதைத்தான் பறைசாற்றுகின்றன.

 

இன்றைய தொழிலாளி, உழைக்கமல் வாழும் நிலையில் இருக்கிறான் என்பது முதலாளித்துவச் சுரண்டல் கொடுமையை மறைக்க முதலாளி வர்க்கம் முயற்சிக்கிறது. ஆனால் உண்மை என்ன என்பதை அனுபவங்கள் உழைப்பாளி மக்களுக்கு உணர்த்திவருகிறது.

 

மத்திய அரசின் 5 வது சம்பள கமிஷன் அதன் சிபாரிசை அமல்படுத்துகிறபோது ஒரு வரத்தில் 3.5 லட்சம் பேரை வேலையை விட்டு நீக்க வேண்டும். 10 வருடத்தில் மத்திய அரசு ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்குபேர் என ஒட்டுமொத்தமாக 15 லட்சம் பேரை வேலையை விட்டு நீக்க வேண்டுமென ரத்னவேல் பாண்டியன் கமிஷன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 

தொழிலாளி வர்க்கத்தின் மீது இத்தகைய தாக்குதல் அதிகரித்துவருகிறதே தவிரக் குறைவதில்லை. உடைமை வர்க்கம் ஒன்றுதான் உழைக்காமல் பிறர் உழைப்பைச் சுரண்டி வாழ முடியும். அந்தச் சுரண்டலின் கொடுமைதான் கூலி அடிமைத்தனம் என்ற வடிவில் உழைப்பாளி மக்களின் மீது திணிக்கப்படுகிறது. முதலாளித்துவம் நீடுக்கிறவரை அதன் கொடுமைகளிலிருந்து மனித சமுதாயம் விடுதலை பெற முடியாது.

 

கம்யூனிஸ்ட் அறிக்கை கூறுவதுபோலப் பலவந்தமான ஒரு புரட்சியின் மூலம் இன்றைய சமுதாய நிலைமைகள் அனைத்தையும் பலவந்தமாக வீழ்த்தினால்தான் நமது லட்சியங்கள் அனைத்தையும் அடைய முடியும் என்று அவர்கள் பகிரங்கமாகக் கூறுகிறார்கள்.

கம்யூனிஸ்ட் புரட்சியை நினைத்து ஆளும் வர்க்கங்கள் நடுநடுங்கட்டும், பாட்டாளிகளுக்கு இழப்பதற்குத் தங்களின் அடிமைத் தளைகளைத் தவிர வேறொன்றுமில்லை. அவர்கள் வெல்வதற்கு ஓர் உலகம் இருக்கிறது. இந்த உண்மையை மூடி மறைக்க முதலாளித்துவ அறிவு ஜீவிகல் மிகத் தீவிரமாகச் செயல்படுகிறார்கள். எதிர்பார்த்த வேகத்தில் புரட்சி நடைபெறாததனால், புரட்சி நடக்காதோ என்ற சந்தேகத்தில் சில தொழிலாளி வர்க்க ஊழியர்களுக்கும் இத்தகைய கருத்துகள் ஏற்படலாம். பாட்டாளி வர்க்க புரட்சி இயக்கம் உலக ரீதியாக வளர்ச்சியடைந்துள்ளது. ஒவ்வொரு நாட்டிற்கும் உரித்தான சில பிரத்தியேக அம்சங்களைப் பொறுத்துதான் அதன் வெற்றியின் காலம் தீர்மானிக்கப்படும். பாட்டாளிவர்க்கப் புரட்சியின் மூலம்தான் மனித சமுதாயம் அதன் விடுதலையை நோக்கிச் செல்ல முடியும் என்ற தெளிவும், உறுதியும் பெறுவதுதான் பாட்டாளிவர்க்கப் புரட்சிக்காரர்களின் இன்றைய தேவை.