புதுவை தியாகிகளின் 80 ஆண்டு நினைவு!


– கே.வைத்தியநாதன்

புதுவைத் தியாகிகளுக்கு இது என்பதாம் ஆண்டு நினைவுதினம் ஆகும். பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரி 1956 ஆம் ஆண்டு விடுதலையடைந்தது. அன்றுமுதல் புதுவை தியாகிகள் தினம் புதுவைத் தியாகிகளால் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது.

1930 ஆம் ஆண்டுகளில் புதுவையில் சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமான பஞ்சாலைத் தொழிலாளர்கள் இருந்தனர். பிரஞ்சு முதலாளிகளுக்குச் சொந்தமான மூன்று பஞ்சாலைகள் இருந்தன.சவானா மில்- இன்றைய சுதேசி மில்,ரோடியர் மில்- இன்றைய ஆங்கிலோ பிரஞ்ச் ஆலை, கப்ளே மில்- இன்றைய பாரதி மில். ஆப்ரிக்கச் சந்தைக்கான துணி இங்கிருந்து ஏற்றுமதியாகியது.

இத்தகைய மில்கள் வருவதற்கு முன்பே புதுச்சேரியில் சாயமிடுதலும், ஜவுளி உற்பத்தியும் நடைபெற்ற பாரம்பரியம் உண்டு. டாட்டா நிறுவனத்தின் முதல் பஞ்சாலை இங்குதான் தொடங்கப்படுவதாக இருந்தது. பிரெஞ்சு முதலாளிகள் முந்திக்கொண்டதால், அந்த ஆலை நாக்பூரில் திறக்கப்பட்டது வரலாறு.

தொழிலாளர் நிலை:

இந்த ஆலைகளில் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டார்கள். வேலைக்குப் பாதுகாப்பு இல்லை. விபத்துக்கு உரிய நிவாரணம் இல்லை, பெண்கள் மிக இழிவான நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். தொழிலாளர்களுக்கு ஒருவேளை உணவிற்கும் எட்டாத ஊதியம் தரப்பட்டது. ஓய்வுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை இல்லை. தொழிலாளர்தம் குழந்தைகளுக்கு எவ்விதப் பாதுகாப்பும் கிடையாது. ஆறுவயதுக் குழந்தையும் மில்களில், கல் உடைக்கும் களங்களில், சுமை தூக்குவதில், கட்டிடக் கட்டமைப்புப் பணிகளில் ஒரு சில காசுகளுக்காகப் பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டிய மோசமான நிலைமை இருந்தது.

வ.சுப்பையா:

பஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்கம் அமைக்க வழிகாட்டியாக இருந்து செயல்பட்ட தலைவர் வ.சுப்பையா. தீவிர காந்தியவாதியாக தன் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், தொழிற்சங்கத் தலைவராக உருவெடுத்தார், இறுதிவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து செயல்பட்டார்.

1934 ஆம் ஆண்டு காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு ராமகிருஷ்ணா வாசகசாலை ஏற்படுத்தினார். காந்தியின் இரண்டாவது சுற்றுப்பயணத்தின்போது அவரை புதுச்சேரிக்கு அழைத்தும் வந்தார். அரிஜன மாணவர்கள் மத்தியில் செயல்பட்டபோது, அவர்களின் பெற்றோர் சந்திக்கும் பிரச்சனைகளும் தெரியவந்தன. அக்காலத்தில் அவருக்கு முதுபெரும் தொழிற்சங்கத் தலைவர் வி.வி.கிரியுடன் தொடர்பு இருந்தது. தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டியமைக்க வந்த அமீர் ஹைதார் கான் மற்றும் சுந்தரய்யா ஆகியோர் சுப்பையாவை சந்தித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

சங்கம் ஏற்படுத்துதல்:

த.சுப்பையா சங்கம் தொடங்கிய காலகட்டம் மிக நெருக்கடிகள் நிறைந்தது. தொழிற்சங்க கூட்டத்தை அப்போதைய இந்தியப் பகுதியான தென் ஆற்காடு மாவட்டத்தின் பெரம்பை கிராமத்தில் நடத்தியதாக த.சுப்பையா தெரிவித்திருக்கிறார். 8 மணி நேர வேலை என்பது ஆசியாவிலேயே எங்கும் இல்லை. தொழிற்சங்கம் என்று தொடங்கினால் அடித்து கடலில் போட்டுவிடுவார்கள் என்ற அளவுக்கு நிலைமை மோசமாக இருந்துள்ளது. சங்கத் தலைவர்கள் உணவு விற்பனை செய்வது போல்தான் ஆலைகளுக்குள் நுழைவார்கள். தொழிலாளர்கள் அவர்களை தோளில் தூக்கி வைத்துக்கொண்டபடிதான் கூட்டமே நடக்கும்.

முதல் போராட்டம்:

முதலில், 1935 ஆம் ஆண்டு தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணி நேரக் குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடத் தொடங்கினர். பெண்களுக்கு இரவுப் பணி கூடாது, குழந்தைத் தொழிலாளர் வேலைக்கு அமர்த்துதல் கூடாது, பேறுகாலத்தில் சம்பளத்துடன் விடுப்பு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிலாளார்கள் முன்வைத்தனர். சவானா பஞ்சாலையில் தொழிலாளர்களின் போராட்டம் வேலை நிறுத்தமாக மாறியது. சுமார் 84 நாள்கள் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால் அமலாகவில்லை.

1935 ஜுலை 25 ஆம் தேதியிலிருந்து அனைத்து மில் தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் இரண்டாவது முறையாக வேலை நிறுத்தத்தில் இறங்கினார்கள். இரண்டரை மாத காலம் வேலை நிறுத்தம் நீடித்தது. ஆலை முதலாளிகள் மீண்டும் ஒரு ஒப்பந்தத்திற்கு முன்வந்தனர். இதனைத் தொடர்ந்து பஞ்சாலைத் தொழிலாளர்களின் முதல் மாநாட்டுக்கு திட்டமிட்டனர். பிரெஞ்சு ஏகாதிபத்திய அரசு மாநாட்டுக்கு தடை விதித்ததுடன் தொழிற்சங்கத் தலைவர்கள் வி.வி.கிரி, எஸ். குருசாமி ஆகியோரை வெளியேற்றியது. பிரெஞ்சு இந்திய எல்லையில் தென் ஆற்க்காடு மாவட்டத்திற்கு உட்பட்ட பெரம்பை கிராமத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டு மாநாடு நடத்தினர். இந்த மாநாட்டுத் தீர்மானங்கள் பிரான்சில் இருந்த தொழிற்சங்கங்களின் தலைமைக்கு அனுப்பியும் வைத்தனர்.

ஆயுதப்படையின் அடக்குமுறை:

தொழிலாளர்களின் மீதான சுரண்டல் தொடர்ந்துகொண்டிருந்தது. எனவே, மீண்டும் 1936 ஜுலை 23 ஆம் தேதியிலிருந்து மூன்று மில்களிலும் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தைத் தொழிலாளர்கள் தொடங்கினார்கள். 1936 ஜுலை 30-ஆம் நாள் காலை பிரெஞ்சு ஆயுதம் தாங்கிய காவல் படை வந்திறங்கியது. ரோடியர் பஞ்சாலையின் நுழைவாயிலின் கதவை இறுக அடைத்திருந்தனர். ரோடு ரோலர் இயந்திரத்தை வைத்து அந்தக் கதவை உடைத்துத் தகர்த்து உள்ளே நுழைந்தது ஆயுதப் படை. ஆலை மேலாளர் ஒரு தொழிலாளியைச் சுட்டார். இதனால் கொதிப்படைந்த தொழிலாளர்கள் ஆயுதப்படையை எதிர்த்துக் கொளர்ந்தனர். சவானா ஆலைக்குச் சென்ற ஆயுதப்படை கடலூர் சாலைக்கு எதிரே நின்று ஆயத்தமானது.

பஞ்சாலை வளாகத்தில் பெரும் கட்டடங்களின் மேல்தளத்தில் நின்றிருந்த தொழிலாளர்களை நோக்கி எந்திரத் துப்பாக்கியால் சுடத் தொடங்கியது. இதில் 12 தொழிலாளர்கள் பலியாகினர். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் அமலோற்பவநாதன், ராஜமாணிக்கம், கோவிந்தசாமி, ஜெயராமன், சுப்பராயன், சின்னையன், பெருமாள், வீராசாமி, மதுரை, ஏழுமலை, குப்புசாமி, ராஜகோபால் ஆகிய 12 பேர் ஆவர். இந்தப் படுகொலைகளைக் கண்ட தொழிலாளர்கள் கொதிப்படைந்தார்கள். ஆயுதப்படையை எதிர்த்துத் தாக்கி விரட்டியடித்தனர்.

பிரான்சு அரசு சட்டம்:

இச்சம்பவம் பற்றி அறிந்ததும் பண்டித நேரு வ.சுப்பையாவை தொடர்புகொண்டு பிரான்சில் உள்ள மக்கள் முன்னனிக் கட்சியின் அமைச்சரோடு ஆலோசிக்குமாறு அனுப்பினார். நேருவின் அறிமுகக் கடிதத்துடன் பிரான்சு சென்ற சுப்பையா அரசோடு இப்பிரச்சினை குறித்து விவாதித்தார். காலனி ஆதிக்க எதிர்ப்பு அமைப்பு பிரென்சு அரசை எதிர்த்துப் போராடினர். அதன் விளைவாக 1937 ஏப்ரல் 6-இல் பிரஞ்சிந்தியாவிற்கான தொழிற்சங்கச் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி தொழிலாளர்களுக்கு 8மணிநேர வேலையும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையும் வழங்கப்பட்டது. ஆசிய நாடுகளிலேயே 8 மணி நேர வேலை என்பது புதுச்சேரியில் தான் முதன்முதலில் அமுலாக்கப்பட்டது. அத்துடன் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தம், ஓய்வுக்கால ஊதியம், பெண் ஊழியர்களுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் சமூகப் பயன் அளிக்கும் திட்டங்களும் வரையறுக்கப்பட்டன.

பிரெஞ்சு மொழியில் இயற்றப்பட்ட சட்ட விதிகள் கப்பல் மூலமாக வரவழைக்கபட்டன. பாவேந்தர் பாரதி தாசனாக பிற்காலத்தில் அறியப்பட்ட கனக சுப்பு ரத்தினம், பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்தார். இந்திய சட்டம் அமலுக்கு வரும் காலம்வரை இதுதான் நடைமுறையில் இருந்தது. அரவிந்தர் ஆசிரமத்தில் வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கம் ஏற்படுத்த இந்தச் சட்டமே வழிவகுத்தது. வீட்டுவேலைத் தொழிலாளர்களுக்கான முதல் சங்கம் அதுதான்.