சமுக நிகழ்வுகளை எவ்வாறு மதிப்பிடுவது?…


பிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு… 4

என்.குணசேகரன்

1917-ஆம் ஆண்டு ரஷிய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் ஏற்பட்ட ஆண்டு.அடுத்தடுத்து மூன்று அதிரடியான வரலாற்று மாற்றங்கள் நிகழ்ந்த கட்டம் இது.

ஒன்று,1868-ஆம் ஆண்டிலிருந்து ஆட்சியிலிருந்த ஜார்மன்னர் இரண்டாம் நிகோலஸ் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட நிகழ்வு.இரண்டாவதாக,மன்னராட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டபிறகு இடைக்கால அரசாங்கம் 1917-பிப்ரவரியில் ஆட்சியதிகாரத்திற்கு வந்தது.

மூன்றவதாக,இடைக்கால அரசாங்கம் முதலாளித்துவ அரசாங்கமாக இருத்ததால்,அது வீழ்த்தப்பட்டு,லெனின் தலைமையிலான பாட்டாளி வர்க்க அரசாங்கம் 1917-அக்டோபரில் அமைந்தது.

இந்த மூன்று நிகழ்வுகளையும் ஆராய்ந்திருக்கின்ற பல வரலாற்றுப் பேராசிரியர்கள்,நிபுணர்கள்,எழுத்தாளர்கள் அவை நிகழ்ந்ததற்கான காரணங்களை பல கோணங்களில் விளக்கியுள்ளனர்.ஜார் மன்னனின் திறமையின்மை,இடைக்கால அரசாங்கத்தில் பொறுப்புக்கு வந்த ‘தலைவர்களின்’ தலைமை,லெனினுடைய அதிகாரப் பேராசை என்று பல கருத்துக்கள் ‘ஆராய்ச்சிகள்’எனும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.

மார்க்சிய தத்துவம் முன்வைத்த இலட்சியம்,விஞ்ஞான சோசலிசம்.அதனை அடையும் நோக்கத்துடன் ரஷியக் கம்யூனிஸ்ட்கள் சாதித்த வரலாற்று மாற்றங்களை இன்று வரை கொச்சைப்படுத்தி வருகின்றனர்.ஒன்று,அந்நிகழ்வுகளை சிறுமைப்படுத்துவது,அல்லது அவற்றை அலட்சியப்படுத்தி,மறைத்துவிடுவது என்ற வகையில் இந்த இரண்டு போக்குகளும் அறிவுலகத்தில் தொடர்ந்து வருகிறது.

கடந்த நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே,குறிப்பாக,1917- பிப்ரவரியிலிருந்து அக்டோபர் வரையுமான காலத்தில் தொழிலாளர்களின் தீவிர அரசியல் செயல்பாடு இருந்து வந்துள்ளது.இவை அனைத்தும் வரலாற்றில் மறைக்கப்படுகிறது.

தொழிலாளர்கள் ‘வேலைநிறுத்தம்’ என்பதனை மாற்றத்திற்கான ஆயுதமாகப் பயன்படுத்தினர்.அரசாங்கத்தின் அடக்குமுறை துப்பாக்கி சூடுகள்,என அனைத்தையும் தாங்கி தங்களது போராட்டத்தை நடத்தினர்.

தெருக்களில் அணியணியாக ஒன்று சேர்வது,கலைக்க முற்படுகிற எதிரியுடன் மோதுவது, தாக்க வருகின்ற இராணுவ வீரர்களின் கைகளைப்பிடித்து இழுத்துத் தள்ளி வீழ்த்துவது,படைவீரர்கள் வரும் குதிரைகளின் வயிற்றைப்பிடித்துகொண்டு வீரர்களை தாக்குவது,தரையில் பரவலாக படுத்துக்கொண்டு மறியல் நடத்துவது,துப்பாக்கி குண்டுகளுக்கு பலியான உடல்களை சாலையில் கிடத்தி வழி மறித்துப் போராடுவது,கையெறி குண்டுகளை வீசுவது,பேஸ்புக்,டிவிட்டர் இல்லாத அந்தக் காலத்தில் வாய்மூலமாகவும்,துண்டுத்தாள்கள் வழியாகவும் போராட்ட செய்திகளை பரப்புவது,வதந்திகளை பரப்பி விடும் விஷமிகளின் விஷமத்தனத்தை அம்பலப்படுத்துவது போன்ற செயல்கள், பெரிய வரலாற்றுப் பேராசிரியர்களுக்கு அற்பமானதாக இருக்கலாம்;அவர்களுக்கு பட்டத்து இராணியாக இருந்த ஜாரின் மனைவி செய்த அரசியல் வேலைகள் ஜார் ஆட்சி அகன்றதற்கு முக்கிய காரணம் என அவர்கள் வாதிடலாம்.

ஆனால் புரட்சி மாற்றத்தில் ஈடுபட்ட உழைக்கும் மக்களின் இந்த “அற்ப”செயல்கள் வரலாற்று இயக்கத்தினை உந்தித் தள்ளின.என்பதுதான் உண்மை.குறிப்பாக பிப்ரவரி நாட்களில் இந்த செயல்கள் வலிமை படைத்தவையாக மாறின.

எனவே மார்க்சிய அரசியல் இலட்சியமான சோசலிசத்தை அடைவதற்கு நடந்த ரஷியப் புரட்சியை பயில்வதற்கும் மார்க்சிய தத்துவ அணுகுமுறையான இயக்கவியல் பொருள்முதல்வாதம் தேவைப்படுகிறது. இயக்கவியல் பொருள்முதல்வாதம் வரலாற்றை வர்க்கப் போராட்டங்களின் இயக்கமாகப் பார்க்க கற்றுக் கொடுக்கிறது.

“சமுக அமைப்பாக்கம்”

லெனின் துவக்க காலத்தில் மார்க்சின் மூலதனத்தை எவ்வாறு கற்றார் என்பதை குறிப்பிடுவது இந்த இடத்தில் பொருத்தமானது. 1894-ல் “மக்களின் நண்பர்கள் யார்?அவர்கள் எவ்வாறு சமுக ஜனநாயகவாதிகளை எதிர்கின்றனர்?”என்ற நூலில் மார்க்சிய ஆய்வுமுறையைப் பற்றி லெனின் விளக்குகிறார்.மார்க்சின் மூலதனத்தைப் பற்றி எழுதுகிற போது,கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

“….பொருளியல்ரீதியான சமுக உறவுகளை ஆராய்வது என்று துவங்குகிறபோதே உடனடியாக “சமுக அமைப்பாக்கம்” பற்றிய புரிதல் ஏற்படுகிறது…..

“…..வெவ்வேறு நாடுகளின் சமுக இயக்கத்தை பொதுவாகப் புரிந்து கொள்ள “சமுக அமைப்பாக்கம்” என்ற கருத்தாக்கம் உதவுகிறது.சமுக நடப்புக்களை விவரிக்கவும்,மதிப்பிடவும்,அதையொட்டி நமது நோக்கத்திற்கு ஏற்றவாறு செயல்படவும் “சமுக அமைப்பாக்கம்”என்ற பொதுக் கருத்தாக்கம் பயன்படுகிறது.

…..அது அறிவியல்ரீதியாக துல்லியமாக சமுகத்தை ஆராய்வதாகும்…

மேலும் லெனின் விளக்குகிறபோது கூறுகிறார்:

“சமுக உறவுகள்,உற்பத்தி உறவுகளாகவும்,,பிறகு ஒட்டுமொத்த உற்பத்தி சக்திகளாகவும் பார்க்கிற பார்வை சமுகத்தை ஆராய்வதற்கான வலுவான அஸ்திவாரத்தை ஏற்படுத்துகிறது.இது,சமுக அமைப்பாக்கங்கள் ஒரு இயற்கையான வரலாறாக பார்க்கும் புரிதலை ஏற்படுத்துகிறது.” என்கிறார்.

எனவே வரலாறு முழுவதும் வர்க்க சமுக உறவுகள் அதில் ஏற்படும் முரண்பாடுகள் புரட்சிகர சமுக மாற்றங்களுக்கு இட்டுச் செல்கின்றன.ரஷியாவிலும் இது நிகழ்ந்தது. களத்தில் போராடும் தொழிலாளர்கள் போராட்டக் களத்திலிருந்து வீடு திரும்பினாலும் குடியிருப்புப் பகுதியில் குடும்பத்தோடும் சக மக்களோடும் அன்று நடைபெற்ற போராட்ட அனுபவங்களை பகிர்ந்துகொண்டு தீவிர கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடுவது வழக்கம்.இது அவர்களின் அரசியல் கூர்மையை உணர்வுரீதியில் செழுமைப்படுத்தும்.

இவை ஒரு வாசிப்பு வட்டங்கள் போன்று செயல்பட்டதை அறிய முடிகிறது.இந்த வாசிப்பு வட்டங்களில் மார்க்சின் மூலதனம் உள்ளிட்டு பிளக்கனாவ்,லெனின் உள்ளிட்டோரின் எழுத்துக்களை வாசித்து உட்கிரகிக்கும் அனுபவங்களாகவும் திகழ்ந்தன.

முதல் நாள் இரவில் நிகழ்ந்த வாசிப்பு, கருத்துப் பரிமாற்றம் போன்றவை ஏற்படுத்திய புதிய தெம்பு மறுநாள் வேலைத் தளத்திற்கு செல்லுகிற போது தொழிலாளர்களுக்கு போராட்ட வீர்யம் அதிகரித்திருக்கும்.மேலும் உக்கிரமான போராட்டங்களில் ஈடுபடுவார்கள்.

இந்த அன்றாட தொழிலாளி வாழ்க்கைதான் மனிதகுலம் முதன்முறையாக அடிமைத்தனத்திலிருந்து அகன்று உண்மையான சுதந்திரம் நிலவும் ஒரு புதிய சமுக அமைப்பை உருவாக்கிட வித்திட்டது.

ஜார் ஆட்சி வீழ்ச்சியும், ஜனநாயகமும்

ஜார் மன்னனின் ஆட்சி வீழ்ந்தது வரலாற்றின் முக்கிய தருணம்.

பல நூற்றாண்டுகளாக ரஷியாவை ஆண்டு வந்த ஜார் மன்னர் கூட்டம் ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க முடியுமா என்ற கேள்வி 1917-ஆம் ஆண்டின் துவக்க நாட்களில் அலைமோதியது.

ஜார் ஆட்சி ஊழல் மலிந்துபோன ஆட்சியாக மாறியது.பொருளாதாரம் கடும் தேக்கத்தில் மூழ்கியது.முதல் உலகப்போரில் ரஷியாவை ஈடுபடுத்தியதால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள்,அதிக அளவிலான உயிரிழப்புக்கள் அனைத்தும் நாட்டை உருக்குலைத்தது.தனது செயல்களுக்கு அவ்வப்போது எதிர்ப்பு தெரிவித்த ரஷியப் பாராளுமன்றமான டூமாவை,நிகோலஸ் தனது இஷ்டம் போல கலைத்ததும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.இவை அனைத்தும் ஜார் ஆட்சியின் ஆயுட்காலம் முடிவுக்கு வந்துவிட்டதை அறிவித்தன.

உண்மையில் டூமா என்ற பாராளுமன்றம் கடற்படையினர் போராட்டம், ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தம் உள்ளிட்ட மக்கள் போராட்டத்தால் உருவான ஜனநாயக நிறுவனம்.1905-ஆம் ஆண்டு எழுச்சி அடக்கி ஒடுக்கப்பட்ட பிறகு,சில சீர்திருத்தங்களை கொண்டு வந்தால்தான் தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற கட்டயத்திற்கு மன்னர் நிக்கோலஸ் தள்ளப்பட்டார்.சில ஜனநாயக உரிமைகளை வழங்குவது என்ற அடிப்படையில் டூமா அமைக்கப்பட்டது.

ஏன் அமைக்கப்பட்டது, பிறகு ஏன் அது கலைக்கப்பட்டது என்ற கேள்விகள் ஆழமாக சிந்திக்க வேண்டியவை. இது போன்ற வரலாற்று நிகழ்வுகளை மார்கசிய அடிப்படையில் ஆய்வு செய்து இந்திய சூழலுக்கு ஏற்ப சில வரையறைகளை மார்க்சிஸ்ட் கட்சி உருவாக்கியது.மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்தில்

“நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கோ, ஜனநாயகத்திற்கோ உழைக்கும் மக்களிடமிருந்தோ, அவர்களது நலனை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகளிடமிருந்தோ ஆபத்து வரவில்லை. சுரண்டும் வர்க்கங்களிடமிருந்துதான் ஆபத்து வருகிறது. தங்களது குறுகிய நலனைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நாடாளுமன்ற அமைப்பின் உள்ளிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ இதை பலவீனப்படுத்தி தங்கள் கருவியாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.”

“பெரு முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவச் செல்வாக்கிலிருந்து விடுபட்டு நாடாளுமன்ற அமைப்புகளை தங்களது முன்னேற்றத்திற்கு பயன்படுத்த மக்கள் முற்பட்டால், இந்த வர்க்கங்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கவும் தயங்குவதில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களை மத்திய அரசாங்கம் பலமுறை கலைத்ததிலிருந்து இது தெளிவாகும். இந்த ஆளும் வர்க்கங்கள் எந்த அளவு படுமோசமான நிலைக்குச் செல்லும் என்பதற்கு அனைத்து அரசியல் சாசன நெறிமுறைகளையும் மீறி மேற்குவங்கம் மற்றும் திரிபுராவில் கட்டவிழ்த்துவிடப்பட்ட அப்பட்டமான, அரைப்பாசிச அடக்குமுறைகள் கண்கூடான எடுத்துக் காட்டுகளாகும். சர்வதேச நிதி மூலதனத்தின் நிர்ப்பந்தம் காரண மாகவும், தாராளமயமாக்கல் வளர்ந்து கொண்டிருப்பதன் காரண மாகவும் ஜனாதிபதி ஆட்சி முறையைக் கொண்டுவரப்போவதாகவும், நாடாளுமன்ற ஜனநாயக முறையைத் துண்டாடவுமான பேச்சுக்கள் உலவுவது எதேச்சதிகாரத்தின் அடையாளங்கள் ஆகும். மக்கள் நலனைப் பாதுகாக்க நாடாளுமன்ற ஜனநாயக முறை மற்றும் ஜனநாயக அமைப்புகளுக்கு எதிராக விடப்பட்டுள்ள இத்தகைய மிரட்டல்களை முறியடிக்க வேண்டியது ஆகப் பெரிய முக்கியத்தவம் வாய்ந்ததாகும். இத்தகைய நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புகளை நாடாளுமன்றத்திற்கு வெளியிலான நடவடிக்கைகளோடு இணைத்து கவனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.”

(பாரா:5.23:கட்சிதிட்டம்)

இதில் “நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புகளை நாடாளுமன்றத்திற்கு வெளியிலான நடவடிக்கைகளோடு இணைத்து கவனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”என்ற கோட்பாடு லெனினியத்திலிருந்து பெறப்பட்டது.

ரஷியாவில் அன்று நாடு முழுவதும் தொழிலாளர் வேலை நிறுத்தங்களும்,மக்கள் போராட்டங்களும் தீவிரமான சூழலில்,ஆளுகிற வர்க்கங்கள் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நிலை ஏற்பட்டது.;அவர்களால் காலம் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டு வந்த உழைக்கும் வர்க்கங்களும் இருக்கிற நிலைமைகளை சகித்துக்கொள்ள முடியாத கட்டத்திற்கு வந்துவிட்டனர்.இந்நிலையில் ரஷியாவில் சிறிய அளவில் இருந்த ஜனநயாக அமைப்புக்களையும் அழித்தொழிக்கும் நிலைக்கு ஆளும் வர்க்கம் தள்ளப்பட்டது.

மறுபுறத்தில்,முதலாளித்துவ நிலப்பிரத்துவ ஆட்சிக்குப் பிறகு, அடுத்து வருவது எப்படிப்பட்ட மாற்றமாக இருக்க வேண்டுமென்ற சிந்தனையும் ரஷிய மக்களிடம் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

இந்தக் கட்டத்தில்தான் புரட்சி என்ற கருத்தாக்கம் ஆழமான விவாதமாக முன்னுக்கு வந்தது.லெனின் ரஷிய உழைக்கும் வர்க்கத்திற்கு புரட்சி பற்றிய புரிதலை ஏற்படுத்தியதோடு புரட்சி நிகழ்த்துவதற்கான திட்டத்தையும் முன்வைத்தார்.

(தொடரும்)