- உ.வாசுகி
கட்சியின் அகில இந்திய 21வது மாநாடு, இடது ஜனநாயக அணி கட்டுகிற கடமைக்கான முக்கியத்துவதை மீட்டெடுக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறது. இந்தியாவில் சோஷலிச அமைப்பை உருவாக்குவதே மார்க்சிஸ்ட் கட்சியின் நோக்கம் என்றாலும், அதற்கு முன்னதாக மக்கள் ஜனநாயகமே இந்திய சூழலில் புரட்சியின் கட்டமாக இருக்கிறது. மக்கள் ஜனநாயகப் புரட்சியை நடத்த தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் மக்கள் ஜனநாயக அணி அமைக்கப் பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் வரையறுக்கிறது. இதில் இடது ஜனநாயக அணி எங்கு இடம் பெறுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
மக்கள் ஜனநாயக அணியைக் கட்டுவது குறித்துக் கட்சித் திட்டம் பின் வருமாறு விளக்குகிறது – ”தொழிலாளி விவசாயி கூட்டணியை மையமாக வைத்து அனைத்து தேச பக்த, ஜனநாயக சக்திகளின் புரட்சிகர ஒற்றுமையைக் கட்டி, மக்கள் ஜனநாயகப் புரட்சியை நடத்துவதற்கான போராட்டம் என்பது சிக்கலானதும், நீண்டதுவும் ஆகும். பல்வேறு சூழல்களில், பல்வேறு கட்டங்களில் இதற்கான போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கும். புரட்சிகர இயக்கத்தின் நிகழ்ச்சிப் போக்கின் போது வெவ்வேறு வர்க்கங்களும், ஒரே வர்க்கத்தில் உள்ள வேறு பட்ட பகுதிகளும் குறிப்பிட்ட சூழலில் வித்தியாசமான நிலைபாட்டை எடுப்பார்கள். புரட்சிகர தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக கம்யூனிஸ்ட் கட்சி உருவாக வேண்டிய முக்கியத்துவத்தை இது உணர்த்துகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் திரட்டுவதற்கு இடைக்கால முழக்கங்களும், மேடைகளும் உருவாக்கப் பட வேண்டும். போராட்டங்களின் மூலம், பல கட்டங்களைக் கடந்து அமைக்கப் பட வேண்டிய மக்கள் ஜனநாயக அணிக்கான முன் தயாரிப்பாக இவற்றைப் பார்க்க வேண்டும்.”
மேலும் இறுதி இலக்கை அடையும் பயணத்தில் அன்றாட நிகழ்வுகளை, திருப்பங்களை எதிர்கொண்டு வர்க்கப் போராட்டங்களின் மூலம் புரட்சிகர சக்திகளை முன்னேற்ற வேண்டும். இதற்குப் பயன்படும் விதத்தில் அரசியல் நடைமுறை உத்திகளை வகுக்க வேண்டும். மொத்தத்தில், வர்க்க பலாபலன்களில் தொழிலாளி வர்க்கத்துக்குச் சாதகமாக மாற்றம் கொண்டு வரும் விதத்தில் நடைமுறை உத்தியும், முழக்கங்களும் அமைய வேண்டும். இவற்றைக் கணக்கில் எடுத்து, கட்சித் திட்டத்தின் வழிகாட்டுதல் படி, இடது ஜனநாயக அணி இவ்வாறான இடைக்கால முழக்கமாக, அரசியல் நடைமுறை உத்தியின் ஒரு திசைவழியாக உருவானது.
இடது ஜனநாயக அணி முன்வைக்கப் பட்ட பின்னணி:
1978ல் ஜலந்தரில் நடந்த 10வது கட்சி காங்கிரசில் இடது ஜனநாயக அணி என்ற இடைக்கால முழக்கம் முன் வைக்கப் பட்டது. 7வது, 8வது, 9வது மாநாடுகளில் காங்கிரசுக்கு ஒரு ஜனநாயக மாற்று கட்டப் பட வேண்டும் என்பதே அறைகூவலாக இருந்தது. ஆனால் 10வது மாநாட்டின் போது ஜனதா அரசு பதவியில் இருந்த நேரம். சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக அது நிலை எடுத்த போதும், வர்க்கத் தன்மை என்று பார்த்தால், முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்க நலனைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகவே இருந்தது. அப்படியானால் ஏற்கனவே உள்ள காங்கிரசுக்கு மாற்று என்று மக்கள் முன் வருவதும் அதே வர்க்கத் தன்மை கொண்டதாக இருக்கிறது. இது அல்லது அது என்று எதை மக்கள் தேர்ந்தெடுத்தாலும் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்க நலனைப் பாதுகாக்கும் ஏற்பாடாகவே அது அமையும், அவர்களின் கொள்கை தான் ஆட்சியில் அமரும் நிலை இருக்கும். எந்த சக்திகளை புரட்சியின் மூலம் முறியடிக்க வேண்டும் என நினைக்கிறோமோ, அவை முன்னேறும் நிலை தொடரும். ஜனநாயக உரிமைகளுக்காகவும், மக்கள் பிரச்னைகளுக்காகவும் நாம் போராட்டங்களை நடத்தியிருந்தாலும், நமது வர்க்கங்கள் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளின் செல்வாக்கிலிருந்து விலகி நம்மை நோக்கி வரவில்லை, அதாவது வர்க்க சமன்பாட்டில் புரட்சிகர சக்திகளுக்கு சாதகமாக மாற்றம் பெரிதாக நிகழவில்லை. ஆனால் அத்தகைய மாற்றமே மக்கள் ஜனநாயக அணியைக் கட்டுவதை நோக்கி முன்னேற வைக்கும். இடது ஜனநாயக அணி கட்டப் படும் நிகழ்முறையின் மூலம் வர்க்க சமன்பாட்டில் மாற்றம் சாத்தியமாகும்.
அதற்கு மக்கள் தேர்வு செய்ய முதலில் மாற்று சக்திகளும், மாற்றுக் கொள்கைகளும் உள்ளன என்பதை அவர்களுக்குக் கொண்டு போக வேண்டும். அதாவது, முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கு மாற்றாக இடதுசாரி சக்திகளும், ஜனநாயக சக்திகளும் முன்னிறுத்தப் பட வேண்டும். அவர்களின் திட்டங்களுக்கும், கொள்கைகளுக்கும் முற்றிலும் மாறுபட்ட திட்டத்தை மக்கள் முன் வைக்க வேண்டும். அப்போது தான், மக்கள் இந்தக் கொள்கையா அந்தக் கொள்கையா என்று தேர்வு செய்ய முடியும்.
இரண்டு அணிகளுக்கும் என்ன வித்தியாசம்?
இடது ஜனநாயக அணி என்பது மக்கள் ஜனநாயக அணிக்கு பதிலாக முன் வைக்கப் படுவது அல்ல. மக்கள் ஜனநாயக அணி புரட்சிகர இலக்கின் பகுதி. இடது ஜனநாயக அணி என்ற நடைமுறை திசைவழியின் மூலமே இதை நோக்கி முன்னேற முடியும். எனவே தான் இலக்கு என்கிற இறுதி முழக்கத்தை எட்டுவதற்கு முன்னதான இடைக்கால முழக்கமாக இடது ஜனநாயக அணி முன்வைக்கப் பட்டது. ஜனநாயக உரிமைகளுக்கான பரந்து பட்ட போராட்டங்களைக் கட்டுவதன் மூலமும், வர்க்க போராட்டங்களை வலுப்படுத்துவதன் மூலமும் புரட்சிக்கான வர்க்கங்களைத் திரட்டி, உறுதிப்படுத்தி, வர்க்க சமன்பாட்டில் மாற்றம் கொண்டு வருவது தான் மக்கள் ஜனநாயக அணிக்கான சூழலை உருவாக்கும். எனவே இலக்கு மக்கள் ஜனநாயக அணியைக் கட்டுவது என்றாலும், அதில் இடம்பெற வேண்டிய வர்க்கங்களைத் திரட்டுவதற்கான நடைமுறை உத்தியாக இடது ஜனநாயக அணி உருவெடுத்தது. பொதுவாக நடைமுறை உத்தி மாற்றத்துக்கு உட்பட்டது, ஆனால் இடைக்கால முழக்கம் என்பது இலக்கை நோக்கிய திட்டவட்டமான திசைவழி.
இரண்டிலும் இடம் பெற வேண்டிய வர்க்கங்கள் ஒன்று தான். மக்கள் ஜனநாயக அணிக்குத் தொழிலாளி வர்க்கம் தலைமை தாங்கும் என்பது ஒரு வித்தியாசம். இது சாதாரணமாக நடந்து விடாது என 11வது காங்கிரஸ் சுட்டிக் காட்டுகிறது – “இடது ஜனநாயக அணியைக் கட்டுவதற்கும், சாத்தியமாக்குவதற்குமான போராட்டம், சிபிஎம் மற்றும் தொழிலாளி வர்க்கம் தலைமை சக்தியாகப் பார்க்கப் படாத சூழலில் தான் துவங்கும். முக்கிய அல்லது சமமான பங்குதாரர்களாகப் பார்க்கப் படுவோம். இடது ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையும், அதன் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான போராட்டமும் தொழிலாளி வர்க்கத்தின் செல்வாக்கை அதிகரிக்கும். ஆனாலும் கூட, அது தலைமை பொறுப்புக்கு வருவது என்பது வர்க்க சமன்பாடு பெருமளவு மாறுகிற சூழலில் தான் நடக்கும்.” மேலும் மக்கள் ஜனநாயக அணி புரட்சியின் மூலம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றும், அரசு கட்டமைப்பில் மாற்றத்தைக் கொண்டு வரும். மக்கள் ஜனநாயக அரசை அமைக்கும். அதற்கான திட்டம் என்பது தனி.
இடது ஜனநாயக அணியின் திட்டம் வேறு. இடது ஜனநாயக அணி குறித்து ஜலந்தர் மாநாடு, இது மக்கள் ஜனநாயக அணிக்கு வர வேண்டிய வர்க்கங்களைத் திரட்டிப் போராடும் அணி சேர்க்கை என வரையறை செய்ததுடன், ”இதைத் தேர்தலுக்கான அணியாக அல்லது அமைச்சரவைக்கான ஏற்பாடாக மட்டும் பார்க்கக் கூடாது. இது மக்களின் அரசியல், பொருளாதார உடனடி முன்னேற்றங்களுக்காகவும், அதிகாரத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிற்போக்கு வர்க்கங்களைத் தனிமைப்படுத்தவும் போராடுவது” என்று விளக்குகிறது.
இடது ஜனநாயக அணி என்ற முழக்கம் ஏன் பின் தள்ளப் பட்டது?
10, 11, 12 மாநாடுகளில் இடது ஜனநாயக அணிக்கு இருந்த அழுத்தம் பின்னர் வந்த மாநாடுகளில் எப்படி குறைந்தது, இந்த முழக்கம் எப்படி பின்னுக்குத் தள்ளப் பட்டது என்பதை, 21வது மாநாட்டின் ஆவணம் விளக்குகிறது. அகில இந்திய அளவில் பிராந்திய முதலாளித்துவ கட்சிகளை ஒருங்கிணைத்து கொள்கை அடிப்படையிலான ஒரு மாற்றாக முன்னிறுத்தும் முயற்சி, மாநிலங்களில் இடது ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கும் பணியிலிருந்து நம் கவனத்தைத் திசை திருப்பியது. இடது ஜனநாயக அணி ஓரளவு வடிவம் பெற்று முக்கிய சக்தியாக விளங்கும் 3 மாநிலங்களில், சிறிய பிராந்திய முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளுடன் உடன்பாடு கொள்வது பெரிதாக பிரச்னைகளை ஏற்படுத்துவது கிடையாது. ஆனால் இதர மாநிலங்களில், இடது ஜனநாயக சக்திகள் வளர்ச்சி பெறாத சூழலில், அகில இந்திய தேவை என்ற அடிப்படையில் பெரிய பிராந்திய கட்சிகளுடன் தொடர்ச்சியாகத் தேர்தல் உடன்பாடு கொண்டது, நமது முக்கிய நோக்கத்தை சிதறடித்துள்ளது. மக்கள் பிரச்னைகளில் சில சமயம் கொள்கை ரீதியாக எதிர்க்க வேண்டிய கட்சிகளாக இவை இருந்த போதும், அகில இந்திய நிலைபாடு என்பதால், இவற்றுடன் தேர்தல் அணி சேர்க்கைக்குப்போக வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இது நமது சொந்த வளர்ச்சிக்கு உதவவில்லை. சுய அடையாளத்தைப் பாதுகாக்கவில்லை. நமது சுய பலம் அதிகரிக்காத போது, இக்கட்சிகளுடனான ஐக்கிய முன்னணி உத்தியும் பெரிதாகப் பலன் தரவில்லை. அதாவது, இவர்களின் பின்னால் உள்ள நமது வர்க்கங்களை ஈர்க்க முடியவில்லை. வேறு காரணங்களும் உண்டு என்றாலும், இக்கட்சிகளை 3வது மாற்றாகவும், தேர்தல் மாற்றாகவும் முன்னிருத்த வேண்டும் என்ற உடனடிக் கடமை, இடது ஜனநாயக அணியைக் கட்டுவது என்ற முக்கிய கடமையைப் பின்னுக்குத் தள்ளியது என்று பரிசீலித்திருக்கிறோம். இந்தப் பின்னணியில் தான் 21வது மாநாட்டின் அரசியல் தீர்மானம், கட்சியின் சொந்த பலம் அதிகரிப்பு, இடது ஜனநாயக அணி உருவாக்குவது என்ற இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது.
விடுதலைக்குப் பிறகு முன்னுக்கு வந்த வேறுபட்ட திட்டங்களும் திசை வழிகளும்:
இடது ஜனநாயக அணி குறித்த கண்ணோட்டம் இடதுசாரி இயக்கத்தின் பொதுக்கருத்தா என்றால் இல்லை. இதற்கான காரணம், ஒவ்வொரு கட்சியின்/அமைப்பின் தத்துவார்த்த கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு, ஆளும் வர்க்கத்தை முறியடிக்க, அதிகாரத்தைக் கைப்பற்ற இடதுசாரி இயக்கங்கள் பல திட்டங்களை முன்வைத்தன. அதிகாரத்துக்கு வந்த அரசின் வர்க்கத் தன்மை குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம், இந்திய அரசு, பெரு முதலாளிகள் வழி நடத்தும் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்க ஆட்சியின் அங்கம், அந்நிய நிதி மூலதனத்துடன் கூட்டை அதிகரிப்பது என்று வரையறுத்துள்ளது. மற்ற பல நாடுகளைப் போல நிலப்பிரபுத்துவத்தை முற்றாக ஒழித்து முதலாளித்துவம் இந்தியாவில் வரவில்லை. நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்து கொண்டதாக இருந்தது. எனவே முதலாளித்துவ சமூக அமைப்புக்கும் முந்தைய மிச்ச சொச்சமான நிலப்பிரபுத்துவம், அரசுக்குத் தலைமை ஏற்கும் ஏகபோக முதலாளித்துவம், சர்வ தேச அளவில் ஏகாதிபத்தியம் இந்த மூன்றையும் எதிர்க்கக் கூடியதாக புரட்சியின் நோக்கம் இருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வரையறுத்தது. அப்படியானால் இந்திய சூழலில் சோஷலிச புரட்சிக்கு முன்னதாக ஜனநாயகப் புரட்சி நடக்க வேண்டும். இது அடிப்படையில் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான விவசாய புரட்சியே. அதாவது முதலாளித்துவ ஜனநாயக புரட்சி (தேச விடுதலை போராட்டம்) நிறைவேற்ற தவறிய கடமையை நிறைவேற்ற வேண்டும். ஆனால் அவர்கள் எப்படி நிறைவேற்றியிருப்பார்களோ அதே போல் அல்ல. அடிப்படையில் வேறுபட்ட, மக்கள் ஜனநாயகப் புரட்சியாக அது அமையும் என்பதே மார்க்சிஸ்ட் கட்சியின் புரிதல்.
பல்வேறு கம்யூனிஸ்ட் குழுக்கள், கட்சிகள் அரசின் வர்க்கத் தன்மையை நிர்ணயித்ததில் வேறுபாடுகள் இருந்தன. எனவே புரட்சியின் கட்டமும், அணி சேர்க்கையும் கூட மாறுபட்ட நிலையில் வரையறுக்கப் பட்டன.
உதாரணமாக சிபிஐ – எம்.எல். – இந்தியா அரசியல் ரீதியாக விடுதலை அடையவில்லை; அரை காலனி ஆதிக்கத்தில் இருக்கிறது; இந்திய முதலாளிகள் தரகு முதலாளிகளாக உள்ளனர். ஏகாதிபத்தியம், தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்களின் கையில் அரசு உள்ளது. எனவே இவர்களை எதிர்த்து தேச விடுதலை போராட்டம் நடத்த வேண்டும். விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் மூலம் இது சாத்தியமாகும். நாடாளுமன்ற பங்கேற்பும், ஐக்கிய முன்னணி உத்தியும் வர்க்க சமரச பாதை; வெகுஜன அமைப்புகள் தேவையில்லை. தொழிற்சங்கம் கூட சீர்திருத்தவாதப் போக்கு என்பது தான் அவர்கள் நிலை. ஆனால் இன்றைக்கு அவர்கள் பல பிரிவுகளாக, மேற்கூறிய நிர்ணயிப்பின் பல அம்சங்களை மாற்றத்துக்கு உட்படுத்தியவர்களாக செயல்படுகின்றனர்.
சிபிஐயைப் பொறுத்த வரை இந்திய அரசு, ஒட்டு மொத்த தேசிய முதலாளிகளின் வர்க்க ஆட்சியின் அங்கம்; பெரு முதலாளிகள், அரசு அதிகாரத்தில் சக்தி மிக்க செல்வாக்கு செலுத்துகின்றனர், இந்த வர்க்க ஆட்சி, நிலப்பிரபுக்களுடன் வலுவான தொடர்பில் உள்ளது என்று வரையறுத்தனர். எனவே தேசிய ஜனநாயகப் புரட்சியை நடத்த வேண்டும் என்றனர். ஏகாதிபத்தியம் பற்றி எதுவும் இல்லை. புரட்சி எந்த வர்க்கத்தின் தலைமையில் நடக்கும் என்பது இல்லை. முதலாளித்துவத்தை ஒட்டு மொத்தமாக எதிர்ப்பது என்றால் அது சோஷலிச புரட்சி. அப்படியானால் நிலப்பிரபுத்துவத்தை முறியடிக்க வேண்டிய ஜனநாயகப் புரட்சி என்ன ஆகும்? அரசின் அயல்துறை கொள்கையை மெச்சுவதாகவும் அவர்கள் திட்டம் இருந்தது. மொத்தத்தில் குழப்பத்தின் உச்சகட்டமாக இருந்தது. இது வர்க்க சமரச பாதை என்று விமர்சித்தோம். இந்தப் பாதை, அவசர கால நிலையை ஆதரிப்பதில் போய் அவர்களை நிறுத்தியது.
தற்போது மாற்றி அமைத்திருக்கக் கூடிய திட்டத்தில், நிலப்பிரபுத்துவம், ஏகபோகம், ஏகாதிபத்திய எதிர்ப்புடன் புதிய ஜனநாயக புரட்சி நடத்தப்பட வேண்டும், தொழிலாளி வர்க்கம் தலைமை ஏற்க வேண்டும், தொழிலாளி விவசாயி கூட்டணி பலப்பட வேண்டும். அரசின் வர்க்கத் தன்மையைப் பொறுத்த வரை – பெரு முதலாளிகள், கார்ப்பரேட்டுகள் தலைமை தாங்கும் முதலாளித்துவ அரசு, அரை நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவ நிலப்பிரபுத்துவம் போன்றவற்றுடன், இது வலுவான தொடர்பில் இருக்கிறது. சர்வ தேச நிதி மூலதனத்துடன் இணைப்பில் இருக்கிறது என்று கூறுகின்றனர். மார்க்சிஸ்ட் கட்சி, இனி தான் சிபிஐ திட்டம் குறித்துப் பரிசீலித்து ஒரு கணிப்புக்கு வர வேண்டும். ஆனால் கடந்த கால நிலைபாட்டிலிருந்து ஒரு பெரும் மாற்றம், திட்டத்தின் இலக்கில், வழிமுறையில் ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்க முடியும்.
சோஷலிஸ்ட் கட்சிகள், காங்கிரசுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்று பட வேண்டும் என்ற அறைகூவலை வைத்தன. இது, ஜனதாவில் அவர்களை ஐக்கியமாக்கியது.
மார்க்சிஸ்ட் கட்சியும் திட்டத்தை மேம்படுத்தியது. ஆனால், அரசின் வர்க்கத் தன்மை, புரட்சியின் கட்டம் போன்றவற்றில் மாறுதல் செய்ய வில்லை. அது தேவைப்படவும் இல்லை. மொத்தத்தில் சுதந்திர இந்தியாவில் ஆளும் வர்க்கத்தை வீழ்த்த தேச விடுதலை போராட்டம், தேசிய ஜனநாயகப் புரட்சி/புதிய ஜனநாயகப் புரட்சி, மக்கள் ஜனநாயகப் புரட்சி என்று பல வழிகள் இடதுசாரி இயக்கங்களால் முன்வைக்கப் பட்டன. இன்றைக்கும் தத்துவார்த்த புரிதலில் வேறுபாடுகள் இருந்தாலும், குறைந்த பட்ச கருத்தொற்றுமையின் அடிப்படையில் மக்களைத் திரட்டி, ஆளும் வர்க்கத்தையும், ஏகாதிபத்திய தாக்குதலையும் சந்திக்க வேண்டும் என்பதன் தேவை முன்னிலும் அதிகமாக உணரப்பட்டிருக்கிறது. அதே சமயம் நிகழ்ச்சிப் போக்குகள், இந்திய அரசின் வர்க்கத் தன்மை குறித்த மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாட்டை உறுதி செய்துள்ளன. இந்த சரியான நிலைபாட்டின் அடிப்படையில் தான் கட்சித் திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. அதை ஒட்டி, இடது ஜனநாயக அணி என்பதை இடைக்கால முழக்கமாக, நடைமுறை உத்தி பயணிக்க வேண்டிய திசை வழியாக (tactical direction) மார்க்சிஸ்ட் கட்சி முன்வைத்துள்ளது. சிபிஐ, சிபிஐ – எம்.எல். உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளுக்கு இந்த நிலைபாடு இல்லை. எனவே, இதில் நாம் தான் முன்முயற்சி எடுக்க வேண்டியுள்ளது.
இடது ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்தல்:
மாநிலத்துக்கு மாநிலம் இடது ஜனநாயக அணியைக் கட்டுவதில் வெவ்வேறு அனுபவம் எழலாம். ஆந்திராவில் அண்மையில் ஒரு முயற்சி எடுக்கப் பட்டிருக்கிறது. தமிழகத்திலும் ஒரு சுற்று விவாதிக்கப் பட்டிருக்கிறது. கீழ்க்கண்ட அம்சங்களை 21வது மாநாட்டு அரசியல் தீர்மானம் முன்வைக்கிறது:
- அகில இந்திய அளவிலான இடது ஜனநாயக அணி உருவாக்கப் படுவதன் ஒரு பகுதி முயற்சியாகவே கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா மாநிலங்களில் உள்ள இடது முன்னணி/இடது ஜனநாயக முன்னணியைப் பார்க்க வேண்டும். இவை தேர்தலுக்காக உருவாக்கப் பட்டவை அல்ல. மக்கள் பிரச்னைகளுக்கான போராட்டங்களில், ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் போராட்டங்களில் விளைந்தவை. பின்னர், தேர்தல் வெற்றியையும் பெற்றன. எனவே தான் கட்சியின் 21வது காங்கிரஸ், இடது ஜனநாயக அணியை உருவாக்கும் முயற்சியின் முக்கிய பகுதியாக, இந்த 3 மாநிலங்களில் உள்ள அணியைப் பாதுகாப்பதும், பலப்படுத்துவதும் அவசியம் என்பதை சுட்டிக் காட்டுகிறது.
- அணியின் அஸ்திவாரமாக இடதுசாரி கட்சிகள், அவற்றின் வர்க்க வெகுஜன அமைப்புகள் இடம் பெறும். எனவே, இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்துவதை ஒரு முக்கிய கடமையாகக் கொள்ள வேண்டும். 4 கட்சிகளின் ஒருங்கிணைப்பாக இருந்தது இன்று 6 கட்சிகளின் கருத்தொற்றுமையைக் கட்டும் முயற்சியாக மேம்பட்டிருக்கிறது. மேலும் விரிவடைய வேண்டும். இடதுசாரி சக்திகள் என்பதில் கட்சிகள் மட்டுமல்ல, இடதுசாரி குழுக்கள், அறிவு ஜீவிகள் போன்றவையும் அடங்கும்.
- ஜனநாயக சக்திகளையும் அடையாளப்படுத்த வேண்டியிருக்கிறது. ஜலந்தர் மாநாடு, அன்றைய கால கட்டத்தில் திமுக, அதிமுக, அகாலி தளத்தை ஜனநாயக சக்தியாக அடையாளம் கண்டது. ஒரு தேசிய இனத்தின் மொழி, கலாச்சார மதிப்பீடுகளை, மாநில உரிமைகளை முன் வைக்கும் தன்மை கொண்டதாக அவை இருந்தன என நிர்ணயிப்பு செய்தோம். திமுகவின் அணுகுமுறை என்பது, பெரு முதலாளிகளுக்கும் பிராந்திய முதலாளிகளுக்கும் இடையிலான முரண்பாட்டின் ஒரு பிரதிபலிப்பாகவும் இருந்தது. அதைப் பயன்படுத்த வேண்டும் என்பதும் நமது உத்தியாக இருந்தது. தற்போது இத்தகைய மாநில முதலாளித்துவ கட்சிகளின் கண்ணோட்டம் மாறியிருக்கிறது, நவீனதாராளமய கொள்கைகளை ஆதரிக்கின்றனர், அமல்படுத்துகின்றனர், பெரு முதலாளிகளுக்கும் பிராந்திய முதலாளிகளுக்கும் இடையிலான முரண்பாடு மட்டுப் பட்டுள்ளது. இத்தகைய சூழலில், 10வது மாநாடு அடையாளப் படுத்திய ஜனநாயக சக்திகளில் மாநில நிலைக்கேற்ப பொருத்தமான மாற்றம் தேவைப்படுகிறது. இன்றைய நிலையில், பிரதான பிராந்திய மதச்சார்பற்ற முதலாளித்துவ கட்சிகள், கட்சி என்கிற அடிப்படையில் இடது ஜனநாயக அணியில் இடம் பெறும் சூழல் இல்லை. இக்கட்சிகளுக்குள் உள்ள ஜனநாயகப் பகுதியினரை அணுகுவதற்கான வழிமுறைகளை யோசிக்கலாம்.
தவிரவும், ஜனநாயக சக்திகள் என்றால் இன்றுள்ள கட்சிகளுக்குள் மட்டும் தேட வேண்டிய அவசியம் இல்லை. இவ்வணியில் இடம் பெற வேண்டிய சக்திகள் குறித்து, 21வது மாநாட்டின் அரசியல் தீர்மானம் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறது: ”தொழிலாளி வர்க்கம், விவசாயி, விவசாய தொழிலாளி, நடுத்தர வர்க்கம், கை வினைஞர்கள், சிறு கடைகள் நடத்துபவர்கள், வியாபாரிகள் போன்றவர்கள் மத்தியில் உள்ள போராடும் பகுதியினரின் அணியாக இடது ஜனநாயக அணி இருக்க வேண்டும். இதன் மையமாக இடதுசாரி கட்சிகள், அவற்றின் வர்க்க வெகுஜன அமைப்புகள், இடதுசாரி குழுக்கள், அறிவுஜீவிகள் இருப்பார்கள். பல்வேறு கட்சிகளில் சிதறிக் கிடக்கும் சோஷலிஸ்டுகள், மதச்சார்பற்ற முதலாளித்துவ கட்சிகளில் இருக்கும் ஜனநாயகப் பகுதியினர், பழங்குடியினர், தலித், பெண்கள், சிறுபான்மையினர் மத்தியில் செயல்படும் அமைப்புகள், ஒடுக்கப் படும் பகுதியினரின் பிரச்னைகளை எடுக்கும் சமூக அமைப்புகள் போன்றவர்களை ஒருங்கிணைத்து, பொது மேடைக்குக் கொண்டு வர வேண்டும்.” இவற்றில் சில நம்முடன் நிற்காமல் வெளியேறலாம். புதிதாக சில இணையலாம். கடந்த கால மேற்கு வங்க, கேரள அனுபவமும் அது தான்.
வர்க்க வெகுஜன அமைப்புகளை வளர்ப்போம்
பொது மேடைக்குக் கொண்டு வந்து என்ன செய்ய வேண்டும் என்பது அடுத்த பிரச்னை. முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு முற்றிலும் வேறுபட்ட மாற்றுத் திட்டத்தை உருவாக்க வேண்டும். அதன் அடிப்படையில் வர்க்க, வெகுஜன போராட்டங்களைப் பெருமளவில் கட்டவிழ்த்து விட வேண்டும். தொழிலாளி விவசாயி கூட்டுப் போராட்டங்களுக்குத் திட்டமிட வேண்டும். அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு, தத்துவார்த்த போராட்டங்களின் அடிப்படையிலேயே இந்த அணிக்கு ஒரு வடிவம் கிடைக்கும்.
அப்படியானால் முதலில் நமது வர்க்க வெகுஜன அமைப்புகள் பலம் பொருந்தியவையாக மாற வேண்டும். “இடதுசாரி ஜனநாயக ஒற்றுமைக்கான அடிப்படைகளை உருவாக்குகின்ற வேலையில் வெகுஜன ஸ்தாபனங்கள் முக்கியமான பாத்திரம் வகிக்க வேண்டியிருக்கிறது” என்று 10வது மாநாடு சுட்டிக் காட்டுகிறது. இடது ஜனநாயக அணி கட்டப் பட வேண்டும் என்ற அரசியல் உத்திக்கு ஏற்ற வகையில் ஸ்தாபனம் இருக்க வேண்டும் என்பது தான் சால்கியா பிளீனத்தின் நோக்கம். வர்க்கங்களைத் திரட்டி அணி உருவாக்கப் பட வேண்டும் என்றால், அதற்குப் பொருத்தமான வர்க்க வெகுஜன அமைப்புகள் தேவை என்று பார்க்கப் பட்டது. இந்த அரசியல் உத்தியை நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடன் தான், பல்வேறு வர்க்க வெகுஜன அமைப்புகள் அடுத்தடுத்து உருவாக்கப் பட்டன. இன்றும், 21வது மாநாட்டின் அரசியல் உத்தியை அமல்படுத்தும் திறன் பெற்றதாக ஸ்தாபனத்தைக் கட்டி அமைக்கவே, கல்கத்தா பிளீனம் நடைபெறவுள்ளது.
வர்க்க வெகுஜன அமைப்புகளை பலப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு முதலில், கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும், ஏதாவது ஒரு வெகுஜன அமைப்பில் பணி செய்வதை உறுதி செய்ய வேண்டும். வர்க்க வெகுஜன அமைப்பின் கமிட்டிகளில் இருக்கும் கம்யூனிஸ்டுகள் இந்த அரசியல் நோக்கத்துடன் முறையாகப் பணியாற்ற வேண்டும். தொடர்பில் வருபவர்களை ஸ்தாபன ரீதியாக உறுதிப்படுத்த வேண்டும், அரசியல் படுத்த வேண்டும். பொதுவான அரசியல் பணி வேறு. நாம் வேலை செய்யும் அரங்கில் அரசியல் பணியாற்றுவது வேறு. பின்னது மிக முக்கியம். குறிப்பாகத் தொழிற்சங்க அரங்கின் மூலம் வர்க்க அரசியல் கண்ணோட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று 8வது மாநாடு முதல் கட்சி வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. பணியிடத்தில் உள்ள கட்சிக் கிளையில் உறுப்பினராக வேண்டும் என்பது இந்த நோக்கத்துடன் தான்.
இதன் ஒரு பகுதியாக இடதுசாரி கட்சிகளின் வர்க்க வெகுஜன அமைப்புகளை ஒரு பொது கோரிக்கை பட்டியலின் அடிப்படையில் ஒருங்கிணைக்கலாம். இவற்றை இணைத்து ஏற்கனவே இருந்த என்.பி.எம்.ஓ. போன்ற மேடையை உருவாக்கலாம் என்றும் 21வது மாநாட்டு அரசியல் தீர்மானம் வழி காட்டுகிறது. இது தவிர, ஒவ்வொரு அரங்கமும், இணைந்து போராடும் இதர அமைப்புகளை அடையாளம் கண்டு கூட்டு இயக்கத்துக்கு முயற்சிக்க வேண்டும். தொழிற்சங்க அரங்கில் காங்கிரஸ்/பிஜேபியின் சங்கங்கள் உட்பட பல்வேறு சங்கங்களை இணைத்த ஒற்றுமை கட்டப்பட்டாலும், அதற்குள் இடதுசாரி அமைப்புகளின் ஒருங்கிணைப்பு பலப்பட வேண்டும்.
கருத்தியல் தளத்தில் போராட்டம்:
இத்துடன் மார்க்சீய சித்தாந்தம் எவ்வாறு உயர்ந்தது என்பதை உணர்த்துகிற தத்துவார்த்த செயல்பாடும், போராட்டமும் தேவை. முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சித்தாந்த நிலைபாடுகளையும், அடையாள அரசியல் நிலைபாடுகளையும் அம்பலப்படுத்த வேண்டும். சமூக ஜனநாயகக் கண்ணோட்டத்தைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும். காந்தியத்தை விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகி, யாருடைய வர்க்க நலனுக்காக அது செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்த வேண்டும். திராவிட இயக்க தத்துவம், தமிழ் தேசிய வாதம் உள்ளிட்டவற்றுடன் கருத்து மோதல் நடத்திட வேண்டும்.
பெரியார், அம்பேத்கர் போன்றவர்களின் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான பங்களிப்பு வர்க்கமும் சாதியும் இணைந்து நிற்கும் இந்திய சமூக அமைப்பில் புரட்சிகர மாற்றம் கொண்டு வருவதற்கான பாதைக்கு வலு சேர்க்கிறது. அதே வேளையில் வர்க்க அரசியல் பார்வையுடன், வர்க்கப் போராட்டத்தையும், சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும் ஒருங்கே நடத்துவதற்கு வழி காட்டும் மார்க்சீய தத்துவம் அனைத்திலும் சிறந்தது என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வலியுறுத்த வேண்டும். ஒரு உயர்ந்த வாழ்க்கையை மார்க்சீயத்தால் தான் கொடுக்க முடியும், உழைப்பாளி மக்களின் விடுதலை அதில் தான் சாத்தியம் என்பதைக் கொண்டு போக வேண்டும்.
மார்க்சீய நிலைபாட்டின் அடிப்படையில் மோத வேண்டும், பதிலடி கொடுக்க வேண்டும் என்றால் நமது ஊழியர்களும், உறுப்பினர்களும் சித்தாந்த ரீதியாக பலம் பெற்றவர்களாக மாற வேண்டும். ஏகாதிபத்திய சக்திகள், ஊடகங்கள் தொடர்ந்து மார்க்சீயம் குறித்த தவறான பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கும் சூழலில், சித்தாந்த போராட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. பிற கட்சிகளின் பின்னுள்ள மக்கள் அவற்றின் செல்வாக்கிலிருந்து விலகி வர, அதாவது வர்க்க சமன்பாட்டில் மாற்றம் ஏற்பட இது நிச்சயம் தேவை.
சித்தாந்த போராட்டம் வெளியில் மட்டுமல்ல, இடது ஜனநாயக அணிக்குள்ளும் செய்யப் பட வேண்டும். அதாவது திருத்தல்வாத சக்திகள், அதிதீவிரவாத சக்திகள், குட்டி முதலாளித்துவ சக்திகள் போன்றவற்றின் தலைமையிலான கட்சிகளும், குழுக்களும் இந்த அணிக்கு வரக்கூடும். ”இவர்களை ஒருங்கிணைப்பது என்பது, இந்த சித்தாந்தங்களுடன் ஒத்துப் போவது அல்லது சமரசம் செய்து கொள்வது அல்ல” என்று தோழர் இஎம்எஸ் எச்சரிக்கை செய்கிறார். ”இது மார்க்சீயம் என்கிற ஆயுதத்தைப் பறித்துக் கொண்டு தொழிலாளி வர்க்கத்தை நிராயுதபாணி ஆகுவதற்கு சமம்” என்று சுட்டிக் காட்டுகிறார். மார்க்சீய சித்தாந்த போராட்டமும், கட்சியின் சுயேச்சையான நடவடிக்கைகளும், பிரச்சாரமும் இடது ஜனநாயக சக்திகளுடனும், வெளியிலும் மிகவும் தேவை.
செய்ய வேண்டியது என்ன?
வரவேண்டிய கட்சிகள், சக்திகளை அடையாளம் கண்டு, அழைத்துப் பேசி, இனி இது ஒரு போராடும் இடது ஜனநாயக அணியாக செயல்படும் என்று அறிவிப்பு செய்வதன் மூலம் இது நடக்காது. குறிப்பிட்ட பிரச்னையில் அமைக்கப் படும் பொது மேடை போன்றதல்ல இது. இதை உருவாக்குவது ஒரு போராட்ட நிகழ்முறையின் மூலமே சாத்தியம். இடது ஜனநாயக அணியை நீண்ட கால முழக்கமாக தொலைவில் நிறுத்தக் கூடாது, இது நடைமுறை சாத்தியமானது என்பது உண்மை தான். அதற்காக இது ஒரு நாளில் நடந்து விடும் வாய்ப்பு இல்லை. இடது ஜனநாயக திட்டத்தில் இடம் பெற வேண்டிய அம்சங்கள், பல்வேறு பகுதி மக்களின் உடனடி நிவாரணத்துக்கான கோரிக்கைகளாக இருக்கும். இதன் அடிப்படையில் சாத்தியமான மேற்கூறிய சக்திகளை இணைத்துக் கொண்டு அரசியல் பிரச்சாரம், இயக்கங்கள், போராட்டங்களை நடத்த வேண்டும். இது மத்திய அரசை மட்டுமல்ல, மாநிலத்தின் பிரதான முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளின் கொள்கைகளை எதிர்த்த போராட்டமாகவும் இருக்கும். உள்ளூரில், குறிப்பாக கிராமப்புறங்களில் நிலவும் முரண்பாடுகளை அடையாளம் கண்டு, உழைப்பாளி மக்களைத் திரட்டி உள்ளூர் மட்ட போராட்டங்களை நடத்த வேண்டும். ”மக்களின் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களை சரியான படி வழி நடத்தி, சரியான படி இணைத்து நடத்தினால் ஏகபோகவாதிகள், பெரும் முதலாளிகள், நிலப்பிரபுக்கள் ஆகியோரது மேலாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்துடன் இணைந்து விடும். அடிப்படையான சமூக பொருளாதார மாற்றங்களுக்கான போராட்டமாக விரிவடையும்” என்றும் 10வது மாநாடு எடுத்துக் காட்டுகிறது. மொத்தத்தில் பல்முனை போராட்டங்களின் மூலமே இடது ஜனநாயக அணிக்கு உருவம் கிடைக்கும் என்பதை அழுத்தமாகக் கூற வேண்டியிருக்கிறது.
மேலும், நமது வர்க்கங்கள் பெருமளவு, பிரதான முதலாளித்துவ கட்சிகளின் பின்னால் உள்ள நிலையில் அவர்களை வென்றெடுக்க, அரசியல் நடைமுறை உத்திக்கு உட்பட்டு, அக்கட்சிகளுடன் கூட்டு இயக்கம் நடத்துவதற்கான வழிமுறையைக் கண்டறிய வேண்டும். 21வது மாநாட்டின் அரசியல் நடைமுறை உத்தி, பிஜேபி, காங்கிரசை முறியடிக்க அறைகூவி அழைக்கிறது. இதர கட்சிகளுடன் பிரச்னைகள் அடிப்படையில் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஒருங்கிணைப்புக்கு முயற்சி செய்யலாம். வெகுஜன அமைப்புகள், இத்தகைய கட்சிகளின் மக்கள் அமைப்புகளுடன் கூட்டு இயக்கங்களுக்குப் போகலாம். சொல்லப் போனால், பிஜேபி, காங்கிரசின் பின்னுள்ள பகுதிகளைத் திரட்டுவதற்குமான அணுகுமுறையையும் வர்க்க வெகுஜன அமைப்புகள் கையாள வேண்டும் என்று அரசியல் உத்தி வழிகாட்டுகிறது.
ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். கட்சியின் தேர்தல் அணுகுமுறையை மையமாக வைத்து, அதற்கான உத்தியாக இடது ஜனநாயக அணி முழக்கத்தை நாம் உருவாக்கவில்லை. அதற்கு நேர்மாறாக, இடது ஜனநாயக அணி அமைப்பது என்ற அரசியல் முடிவுடன் ஒன்றிணைந்ததாகவே தேர்தல் அணுகுமுறையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று மாநாடு வழி காட்டுகிறது. எனவே தான் மாநிலங்களில் கட்சியின் சொந்த பல அதிகரிப்புக்கும், இடது ஜனநாயக சக்திகளை சேகரிக்கவும் உதவும் என்றால் பொருத்தமான தேர்தல் உடன்பாடுகளை செய்யலாம் என்றே 21வது மாநாட்டின் அரசியல் தீர்மானம் கூறுகிறது.
எந்தெந்த வர்க்கங்களின் ஒற்றுமைக்குப் பாடுபடுகிறோமோ, அதனை சீர்குலைக்கும் சாதியம், வகுப்புவாதம் போன்றவற்றை எதிர்த்துப் போராட வேண்டும். அந்நிய வர்க்கக் கருத்தியலை எதிர்த்து நெறிப்படுத்துக் கொள்ள வேண்டும். சமூக ஒடுக்குமுறை பிரச்னைகளில் (சாதிய ஒடுக்குமுறை, பாலின ஒடுக்குமுறை) தலையீடு செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தின் மூலமாகவும், போராட்டக் களத்தின் மூலமாகவும் இந்தியாவில் வர்க்க சமன்பாட்டில் புரட்சிகர சக்திகளுக்குச் சாதகமான மாற்றம் கொண்டு வரும் நடவடிக்கைகளுக்குத் திட்டமிட வேண்டும்.
சிபிஎம் முன்னேறாமல், அகில இந்திய அளவில் வலுப்பெறாமல் இடது ஜனநாயக அணியைக் கட்டுவது என்பது இயலாது. ”தொழிலாளி வர்க்கம், அதன் கட்சி ஆகியவற்றின் தனிப்பட்ட அரசியல் நடவடிக்கைகளும், வளர்ந்து வரும் அதன் வலிமையும் இடது ஜனநாயக அணியை உருவாக்குவதற்கு மிக அவசியமாகும்” என்று 11வது காங்கிரஸ் வலியுறுத்துகிறது. இன்று வரை அந்த அழுத்தம் தொடர்கிறது. மேலும் வர்க்க வெகுஜன அமைப்புகளின் விரிவாக்கமும், போராட்டங்களின் மூலம் வெகுஜன தளம், செல்வாக்கு அதிகரிப்பும் தான் கட்சியின் சுயேச்சையான பலத்தை அதிகப்படுத்துவதற்கான வழி, அது தான் இடது ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க இட்டுச் செல்லும். இதற்கு வர்க்க, சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான சுயேச்சையான மற்றும் கூட்டுப் போராட்டங்கள் அதிகரிப்பது அவசியம்.
ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் இந்த அரசியல் புரிதலையும், கட்சியின் அன்றாட செயல்பாட்டையும் இணைப்போம். இதற்கு ஏற்ப ஸ்தாபனத்தைப் பலம் பொருந்தியதாக மாற்ற நவம்பரில் கல்கத்தாவில் நடக்கும் ஸ்தாபன சிறப்பு மாநாடு உதவட்டும்.