தமிழகப் பல்கலைக்கழகங்கள் ,பிரச்சனைகளும், தீர்வுகளும்


– விஜயகுமார்

“A critical reflection on human values and principles should be central to everything that goes on in universities, not just to the study of Rembrandt or Rimbaud”.   —Terry Eagleton

பல்கலைக்கழகங்களின் உயர்வான நோக்கங்கள் குறித்து டெரி ஈகிள்டன் (ஆங்கில இலக்கிய திறனாய்வாளர்) கொண்டுள்ள கருத்துக்கும், தமிழகத்தில் இன்றுள்ள பல்கலைக்கழகங்களின் நிலைகளுக்கும்தான் எவ்வளவு பெரிய இடைவெளி நிலவுகிறது. இந்திய விடுதலையின் போது தமிழகத்தில் இருந்த ஒரே உயர்கல்வி நிறுவனம் சென்னைப் பல்கலைக்கழகம் மட்டுமே. ஆனால் இன்று தமிழகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு பல்கலைக்கழகத்தின் அடிப்படைத் தேவைகளான சிறந்த கற்றல், கற்பித்தல் முறைகள், நேர்மையான ஆராய்ச்சி நெறிகள், தூய்மையான நிர்வாகச் செயல்பாடுகள் இவைகள் எல்லாம் இன்றி தமிழகப் பல்கலைக்கழகங்கள் சீரழிந்து வருகின்றன. இவற்றின் அவலங்களையும், அவைகளை அகற்றும் வழிகளையும் காண விழைகிறது இக்கட்டுரை.

ஜனநாயகமற்ற பல்கலைக்கழக அமைப்புகள் :

ஆட்சிக் குழு, பேரவை (செனட்), கல்விக் குழு போன்ற முக்கியமான அமைப்புகளே பல்கலைக்கழகத்தை வழி நடத்திச் செல்லுகின்றன. இவ்வமைப்புகள் ஜனநாயகப் பூர்வமாகச் செயல்பட்டால்தான் பிரச்சனைகள் ஆழமாக விவாதிக்கப்பட்டு பல்கலைக்கழகம் சரியான முடிவுகளை எடுக்க முடியும். பல்கலைக்கழகத்தின் முக்கிய பங்கேற்பாளர்களான ஆசிரியர்கள், மாணவர்கள், நிர்வாக அலுவலர்கள் இவ்வமைப்புகளில் முறையான விகிதத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும். அவர்களும் தேர்தல் வழி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அக்கறையுடன் விவாதித்து சரியான முடிவுகளை எடுப்பார்கள். தமிழகத்தில் எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் இவ்வமைப்புகள் ஜனநாயக ரீதியில் செயல்படுவதில்லை என்பதே கசப்பான யதார்த்தம். காலனிய காலத்தில் நிறுவப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகத்தின் சட்டம் சந்தேகங்களுக்கு இடமின்றி ஜனநாயகத் தன்மைகளற்றது. அடுத்து வந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சட்டம் சென்னைப் பல்கலைக்கழக சட்டத்தின் நகல்தான். பின்னர் வந்த பல்கலைக்கழகங்களின் சட்டங்கள் சற்று வித்தியாசமானவை என்றாலும் வளமான சட்டங்கள் அல்ல. பல்கலைக்கழகங்களின் நிர்வாகங்கள் திறம்பட நடந்திட அதன் சட்டங்கள் திருத்தப்பட்டு அதன் அமைப்புகள் அனைத்தும் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும், பல்கலைக்கழகச் சட்டங்களை திருத்தச் சொல்லி ஆசிரியர் சங்கங்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் மாறி மாறி ஆட்சிக் கட்டிலேறும் தி,மு,க. மற்றும் அ.தி.மு.க. அரசுகள் இதைக் கண்டுகொள்வதே இல்லை.

பல்கலைக்கழகங்களின் நிதி நிலைமை :

இந்தியாவில் இருக்கும் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் மத்திய அரசின் கீழ் செயல்படும் பல்கலைக்கழக மான்யக் குழுவிடமிருந்தே பெரும்பான்மையான வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி உதவியைப் பெறுகின்றன. ஆசிரியர், அலுவலர் சம்பளம்போன்ற அன்றாடச் செலவுகளுக்கான நிதியை மாநில அரசிடமிருந்து பெறுகின்றன. பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி உரிமைகள் பெற்றவை என்று சொல்லப்படுவதெல்லாம் வெற்று வார்த்தைகளே. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் எல்லாம் உரிமைகள் ஏதும் இல்லாமல், அரசின் மற்றுமொரு துறைபோலவே செயல்படுகின்றன. அதிலும் குறிப்பாக நிதி சம்பந்தமான முடிவுகளை அரசின் நிதித் துறைச் செயலரின் தலையீடின்றி எடுக்கவே முடியாது. பல்கலைக்கழகங்கள் போதிய நிதி வசதிகளின்றித் தவிக்கின்றன. பல்கலைக்கழகத்தில் செயல்படும் தொலைதூரக் கல்வி மையம் ஈட்டும் நிதியிலிருந்தே பல்கலைக்கழகங்கள் சாமாளிக்கின்றன. எல்லா பல்கலைக்கழகங்களும் அஞ்சல் வழிக்கல்வித் துறையைத் துவக்கிவிட்டதால் இதிலும் போட்டி ஏற்பட்டு போதிய நிதி ஆதாரம் கிடைப்பதில்லை. இல்லையேல் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம், பிற கட்டணங்களையும் கூட்டி மாணவர்களையும் பெற்றோர்களையும் சிரமத்திற்குள்ளாக்கி நிதி திரட்டுகின்றன. எனவே, மத்திய, மாநில அரசுகள் பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான மான்யங்களைக் கொடுத்து, பல்கலைக்கழகங்களின் நிதி நிலைமையை மேம்படுத்த வேண்டும். அவைகளின் சுயேட்சையான செயல்பாடுகளுக்கும் வழிவகுக்க வேண்டும்.

துணைவேந்தர் நியமனம் :

முன்பெல்லாம் லெட்சுமணசாமி முதலியார், மால்கம் ஆதிசேஷய்யா, தெ.பொ.மீ., மு.வ., ஆணந்தகிருஷ்ணன், வசந்தி தேவி, போன்ற நிர்வாகத் திறமையும், நேர்மையுமிக்க சிறந்த கல்வியாளர்களே துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், சமீப காலமாகத் தமிழகப் பல்கலைக்கழகங்கள் நல்ல துணைவேந்தர்களின்றித் தவிக்கின்றன. துணவேந்தர் நியமனங்களில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. சாதிய அரசியல் கோலோச்சும் ஆட்சிக் காலத்தில் துணைவேந்தர்கள் சாதி அடிப்படையில் நியமனம் பெறுவது உயர்கல்வியின் சாபக்கேடாகும். இல்லையேல் நல்ல கல்வியாளர்களையெல்லாம் புறக்கணித்துவிட்டு, கோடிக்கணக்கில் பணம் கொடுப்பவரைத் துணைவேந்தராக நியமிக்கின்றார்கள். பல கோடி ரூபாய்கள் கொடுத்து பதவிக்கு வருபவர்களிடம் என்ன நியாயத்தையும், கண்ணியத்தையும் எதிர்பார்க்க முடியும்?. எனவே, துணைவேந்தர் நியமனம் குறித்து தற்போதுள்ள முறைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்து, துணைவேந்தரைத் தெரிந்தெடுக்கும் குழுவிற்கு அரசு நிர்பந்தங்களை கொடுக்காமல் முழு சுதந்திரம் கொடுத்து, நல்ல நேர்மையான கல்வியாளர்கள், துணைவேந்தர்களாக நியமிக்கப்படுவதற்கு வழி வகுக்க வேண்டும்.

பிற நியமனங்கள் :

பல்கலைக்கழகங்களில், ஆசிரியர்கள், அலுவலர்கள் நியமனங்களிலும் நேர்மையான வழிகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஆசிரியர் நியமனங்களுக்கு பல்கலைக்கழக மான்யக் குழு பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தாலும், அவைகள் மீறப்பட்டு பல லட்ச ரூபாய்களுக்கு ஆசிரியப் பணியிடங்கள் விற்கப்படுகின்றன. பணம் கொடுத்து உயர்கல்வியின் பீடங்களில் அமரும் ஆசிரியர்களிடமிருந்து என்ன தர்மங்களை எதிர்பார்க்க முடியும்? இப்படி பணம் கொடுத்து பணியில் அமரும் ஆசிரியர்கள் கொடுத்த பணத்தை திரும்ப எடுக்க வேண்டும் என்ற முறையில் ஆராய்ச்சி மாணவர்களிடம் கூச்சங்கள் ஏதுமின்றி பணம் பறிக்கின்றனர். பல்கலைக்கழக வளாகங்களில் நடக்கும் இத்தகு பணப் பரிமாற்றங்களைப் பார்க்கும் நல்லவர்களின் நெஞ்சமெல்லாம் பதறுகின்றன. இந்த அசிங்கம் தொடரும்பட்சத்தில் தமிழகத்தின் உயர்கல்வி நிலை என்னவாகும்? கல்வித்துறையில் லஞ்சம் என்பது சமுதாயத்தையே நாசமாக்கிவிடும். பல்கலைக்கழக ஆசிரியர், அலுவலர் நியமனங்களில் நடந்திடும் மோசடிகளைக் களைந்திட பணி நியமன ஆணையத்தை ஏற்படுத்தி நியாயமான முறையில் விதிகளுக்குட்பட்டு தகுதியானவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.