ரஷ்யா ஜார் மன்னர்களின் ஆட்சியில் நீண்டகாலம் இருந்தது. இரண்டாம் அலெக்சாண்டரின் காலத்தில் தொழில்மய நடவடிக்கைகள் தீவிரமாகின. அதே காலகட்டத்தில் முடியாட்சிக்கு எதிராக, அரசியல் அமைப்பில் மாற்றங்கள் வேண்டிய போராட்டங்கள் அதிகரித்து வந்தன. அப்போது, புனித பீட்டர்பெர்க் நகரத்தின் வீதிகளில், அதிதீவிர அரசு எதிர்ப்புக் குழுவின் குண்டுவீச்சில் ஜார் அலெக்சாண்டர் கொல்லப்பட்டார். அதன் பின்னர் அவருடைய மகன் மூன்றாம் அலெக்சாண்டருக்கு முடிசூட்டப்பட்டது. மூன்றாம் அலெக்சாண்டரின் ஆட்சி முன்னதை விடவும் பிற்போக்குத்தனமானதாக அமைந்தது.
- 1894 இல் – மூன்றாம் அலெக்சாண்டர் மரணத்திற்குப் பின், இரண்டாம் நிக்கோலஸ் அரசராகிறார். இரண்டாம் நிக்கோலஸ் காலத்தில் ரஷ்யா முதல் உலகப்போரில் ஈடுபடுகிறது. இக்காலகட்டத்தில் தொழிலாளர்கள் போராட்டம் ஆண்டுக்கு 176 வேலை நிறுத்தங்கள் என்ற அளவு அதிகரிக்கிறது.1895 – சமூக ஜனநாயகக் கொள்கைகளால் ஈர்க்கப்படும் லெனின், பிளக்கனோவை சந்திக்கிறார். தொழிலாளார்கள் மத்தியில் ‘தொழிலாளர் நிலை’ என்ற பத்திரிக்கை நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சிறைப்பட்ட காலத்தை, தத்துவ கல்விக்காக செலவிடுகிறார்.1897 – விசாரணை எதுவுமின்றி, லெனின் மூன்று ஆண்டுகள் நாடு கடத்தப்படுகிறார். சில நாட்கள் மட்டும் ரஷ்யாவில் இருக்க அவகாசம் தரப்படுகிறது. சமூக ஜனநாயகவாதிகளைச் சந்திக்கிறார் அந்த அமைப்பின் பெயர் ‘தொழிலாளர் முன்னேற்றத்திற்கான போராட்ட லீக்’ என மாற்றப்படுகிறது.
1898 – ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி உருவாகிறது. 1903 இல் இக்கட்சியில் போல்ஸ்விக்குகள் (பெரும்பான்மை) மற்றும் மென்ஸ்விக்குகள் (சிறுபான்மை) என இரண்டு போக்குகள் உருவாகின்றன.
1901-1905 ரஷ்ய பொருளாதார வீழ்ச்சியும் அதைத் தொடர்ந்து உள்நாட்டுக் கலகங்கள் அதிகரிக்கின்றன. இக்காலகட்டத்தில் காடெட்டுகள் எனப்பட்ட சீர்திருத்தவாதிகளும், நரோத்னிக்குகள் எனப்பட்ட அதிதீவிர புரட்சிகரவாதிகளும் கட்சியாக உருவெடுக்கின்றன.
1904 பிப்ரவரியில் ரஷ்யா – ஜப்பான் யுத்தம் நடைபெற்று, பின் அது தோல்வியில் முடிகிறது.
1905 ஜனவரியில் – புனித பீட்டர் பெர்க் என்று அழைக்கப்படும் பகுதியில் நடைபெற்ற அமைதியான போராட்டத்தில் ராணுவம் புகுந்து துப்பாக்கியால் சுடுகிறது. இந்த நிகழ்வு ரத்த ஞாயிறு என அழைக்கப்படுகிறது. ஏற்கனவே மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளாகியிருந்த ரஷ்ய மக்கள் அரசின் அடக்குமுறைப் போக்குக்கு எதிராக கூர்மையடைகின்றனர். விவசாயிகளின் எதிர்ப்புணர்வும் அதிகரிக்கிறது.
- 1905 பிப்ரவரி – இக்காலகட்டத்தில் ரஷ்ய நகர்ப்புறங்களில் தொழிலாளர்கள், விவசாயிகள், ராணுவ வீரர்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய சோவியத்துகள் உருவாகின்றன.
- 1905 அக்டோபர் பொது வேலை நிறுத்தம் ரஷ்யா முழுமையும் ஸ்தம்பிக்கச் செய்கிறது. ரத்த ஞாயிறு நிகழ்வினால் உந்தப்பட்ட மாஸ்கோ சோவியத்துகளின் ஐந்து நாள் தொடர் தாக்குதல் நடக்கிறது. இதனையடுத்து அக்டோபர் அறிக்கையை வெளியிட்டு, நாடாளுமன்றம் ஏற்படுத்த ஜார் மன்னனின் அரசு ஒப்புக்கொள்கிறது. முதல் டூமாவுக்கான தேர்தலை இடதுசாரிகள் புறக்கணிக்கின்றனர். அது குறுகிய காலமே வாழ்கிறது.1906 – டூமாவில் சமூக ஜனநாயகவாதிகள் உள்ளிட்டு இடதுசாரிகள் தேர்தலில் பங்கெடுத்து பெரும்பான்மை பெறுகின்றனர். நிலவுரிமை உள்ளிட்ட விசயங்களில் விவாதம் நடக்கிறது. ஜார் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்து டூமாவை கலைப்பதுடன், சட்டத்தில் இருந்த ஜனநாயக அம்சங்களையும் திரும்பப் பெறுகிறார்.1911-1914 பொருளாதார நெருக்கடி தொடர்ந்துகொண்டிருந்தபோதும், ரஷ்யாவை முதல் உலக யுத்தத்தில் ஈடுபடுத்துகிறார் ஜார் நிக்கோலஸ். இது ரஷ்ய பொருளாதாரத்தை பாதித்து கடும் விலைவாசி உயர்வையும், உணவுத் தட்டுப்பாட்டையும் ஏற்படுத்துகிறது. போருக்கு எதிரான் மனநிலை பரவலாகிறது.
1917 பிப்ரவரி – பல நாட்கள் புனித பீட்டர் பெர்க் (பெத்ரோகிராடு) நகரத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்குகின்றனர். சர்வதேச பெண்கள் தினத்தை ஒட்டி கூடும் பெண்கள், அடுத்தடுத்த போராட்டங்களில் இணைகின்றனர். போராட்டங்களை அடக்குவதற்காக அரசு துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிடுகிறது. ஆனால், ராணுவத்தினரும் கலகத்தில் இணைகின்றனர். புரட்சியில் மாஸ்கோவும் இணைந்துவிட்டதைக் கேள்வியுற்ற ஜார் ராஜினாமா செய்கிறார். கெரன்ஸ்ட்கி தலைமையில் இடைக்கால அரசு ஏற்படுத்தப்படுகிறது. பெத்ரோகிராட் சோவியத்துகளுக்கும், இடைக்கால அரசுக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்படுகிறது. மார்ச் 12 ஆம் தேதி இடைக்கால அரசு மரண தண்டனை ஒழிக்கிறது.
1917 ஏப்ரல் அரசின் போர் லட்சியங்களில் மாற்றமில்லை என மில்யுக்கோவ் அறிவிக்கிறார். இதற்கு எதிராக கொந்தளிப்பு உருவாகிறது.
இதைத் தொடர்ந்து மில்யுக்கோவ் ராஜினாமா செய்கிறார். சில மென்சுவிக்குகளும், சோசலிச புரட்சியாளர்களும் அரசில் இணைகின்றனர். சோவியத்துகள் பலம்பெருகின்றன. அவற்றை பலவீனப்படுத்துவதற்கான நடவடிக்கையில் இடைக்கால அரசு ஈடுபடுகிறது. - 1917 நாடுகடத்தப்பட்டிருந்த லெனின் ரஷ்யாவுக்குத் திரும்புகிறார். தன்னுடைய ஏப்ரல் கருத்தாய்வை உருவாக்குகிறார். ரயில் நிலையத்தில் குழுமியிருந்த போல்ஸ்விக்குகளிடம் ‘அனைத்து அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே’ என பிரகடனப்படுத்துகிறார்.
- 1917 ஜூன் 3, ரஷ்ய தொழிலாளர்கள், சோவியத் படையினர் முதல் மாநாடு நடக்கிறது.1917 ஜூன் 18 ஆஸ்திரியாவுக்கும், ஹங்கேரிக்கும் எதிராக ரஷ்யா தாக்குதல் தொடுக்கிறது. மிக மோசமான முறையில் அது தோல்வியில் முடிகிறது. படைக் களத்துக்கு செல்லும்படியான கெரன்ஸ்கி அரசின் உத்தரவுக்கு ராணுவ வீரர்கள் செவிசாய்க்கவில்லை.1917 ஜூலை – தொழிலாளர்களும், ராணுவத்தினரும் மாலுமிகளும் பெத்ரோகிராடு வீதிகளில் இறங்கி ‘அனைத்து அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே’ என்ற முழக்கத்துடன் போராட்டத்தை தொடர்கின்றனர். கெரன்ஸ்கி அரசால் டிராட்ஸ்கி கைது செய்யப்படுகிறார். லெனின் தலைமறைவாகிறார். போல்ஸ்விக் உறுப்பினர் சேர்க்கை அதிகரிக்கிறது.
- 1917 ஜூலை 12 கெரன்ஸ்கி அரசு மரண தண்டனையை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
- 1917 ஆகஸ்ட் மாதத்தில் ‘கார்னிலோவ் புட்ச்’ என்ற ராணுவ தளபதி, வலதுசாரி ராணுவ சர்வாதிகாரத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார். தந்தி மற்றும் ரயில்வே துறையில் வலுவாக இருந்த போல்ஸ்விக்குகள் உடனடியாக செயல்பட்டு, ராணுவத் தாக்குதலைத் தடுக்கின்றனர்.
- 1917 செப்டம்பர் தொடக்கத்தில், டிராட்ஸ்கி உள்ளிட்டு கைது செய்யப்பட்டிருந்தவர்களை பெத்ரோகிராடு சோவியத் விடுவிக்கிறது.
- 1917 – அக்டோபர் 23 போல்ஸ்விக் மத்தியக் குழு – ஆயுதப் புரட்சி தவிர்க்க இயலாததென்ற முடிவை மேற்கொள்கிறது.
- 1917 நவம்பர் 7 – பெத்ரோகிராடு சோவியத் கட்டுப்பாடு போல்ஸ்விக்குகளின் கைக்கு வருகிறது. திட்டமிட்ட விதத்தில் தகவல் தொடர்பு, அரசு அலுவலகங்கள் என கைப்பற்றும் செம்படை பெரும்பாலும் உயிரிழப்புகள் ஏதுமின்றியே அனைத்தையும் கைப்பற்றுகிறது. பெத்ரோகிராடுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த போர்க்கப்பல் அரோராவிலிருந்து குளிர்கால அரண்மனையின் மீதான தாக்குதல் தொடங்குகிறது. 140 பேர் மட்டுமே பெண்களின் ராணுவப் படைப்பிரிவு அரண்மையைக் கைப்பற்றுகிறது. சுமார் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் சரணடைகின்றனர்.1917 நவம்பர் 13 நாட்டுப்புறங்களில் விவசாயிகள் – நிலவுடைமையாளர்களிடமிருந்து நிலம் கையகப்படுத்திக் கொண்டே தம்போவை அடைகின்றனர். 1917 13 நவம்பர் அன்று போல்ஸ்விக்குகள் மாஸ்கோவை கைப்பற்றுகின்றனர்.
இதன் பின்னர் வெண்படைகள் எனப்படும் எதிர்ப் புரட்சியாளர்களுடனான செம்படையின் கடும் போராட்டத்திற்கு பின்னர் 1922 டிசம்பரில் சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் உருவாகிறது.