அறிமுகம்
இக்கட்டுரைத்தொடரின் முதல் பகுதி ஜூலை மாத தமிழ் மார்க்சிஸ்ட் இதழில் வெளிவந்தது. அதில் நாடு விடுதலை பெற்ற பிறகு தமிழக பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்தும், தாராளமய கொள்கைகள் அமலாக்கப்பட்டு வரும் கடந்த 25 ஆண்டுகளில் தமிழக வேளாண் வளர்ச்சி பற்றியும், மிக முக்கியமாக இந்த வளர்ச்சிப்போக்குகளின் வர்க்கத்தன்மை கிராமப்புறங்களில் எவ்வாறு இருந்துள்ளது என்பது பற்றியும் சுருக்கமாக எழுதியிருந்தோம். கட்டுரையின் இந்த மாதப்பகுதியில் கடந்த 25 ஆண்டுகளில் தமிழக தொழில் துறை வளர்ச்சி பற்றியும் அதன் வர்க்கத்தன்மை பற்றியும் பார்ப்போம்.
தொழில்துறை வளர்ச்சி 1950-1990
விடுதலைக்குப்பின், அகில இந்திய அளவில் (1) அரசு முதலீடுகள் மூலமும், (2) இறக்குமதியை கட்டுப்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்த கொள்கைகளாலும், (3) விவசாயத்தில் முதலாளித்துவ வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலான ஒரு எல்லைக்கு உட்பட்ட அளவிலான நிலச் சீர்திருத்தங்களாலும், தொழில் வளர்ச்சி வேகம் அடைந்தது. காலனி ஆதிக்க கால தேக்கம் தகர்க்கப்பட்டு ஆண்டுக்கு எட்டு சதமானம் என்ற வேகத்தில் தொழில் உற்பத்தி பெருகியது. இதில் பொதுத்துறை முதலீடுகளும் சோசலிச நாடுகளின் உதவியும் முக்கிய பங்கு ஆற்றின. இதன் பிரதிபலிப்பு தமிழகத்திலும் இருந்தது.
1960 முதல் 1970 வரையிலான பத்து ஆண்டுகளில் தமிழகத்தின் மாநில நிகர உற்பத்தி மதிப்பில் (Net State Domestic Product or NSDP) ஆலைத்துறையின் பங்கு மிக வேகமாக ஆண்டுக்கு 7.41% என்ற அளவில் அதிகரித்தது. எனினும் 1971 இல் தமிழக உழைப்பாளிகளில் 9 % தான் குடும்பத்தொழில் அல்லாத ஆலை உற்பத்தியில் ஈடுபட்டிருந்தனர்.
1952-53 ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்த தொழிற்சாலைகளின் மொத்த எண்ணிக்கை 400 க்கும் குறைவு. இந்த எண்ணிக்கை 1960 இல் 5900 ஐ நெருங்கியது. 1982 இல் 9750 ஐத் தாண்டியது. 1960 இல் தமிழகத்தில் ஆலைகளில் பணிசெய்த உழைப்பாளிகளின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சம் தான். 1982 இல் இது ஏழு லட்சத்து முப்பத்து எட்டாயிரமாக உயர்ந்தது.
மத்திய பொதுத்துறை ஆலைகள் தமிழக தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு ஆற்றின.
- 1955 இல் ஐ. சி. எப். ஒருங்கிணைந்த ரயில் பெட்டி உற்பத்திசாலை பெரம்பூரில் நிறுவப்பட்டது. பின்னர் அதற்கு அடுத்த ஆண்டில் நெய்வேலி நிலக்கரி கார்ப்பரேஷன்.
- 1960 இல் ஹிந்துஸ்தான் டெலிப்ரிண்டர்ஸ், அதே ஆண்டில் திருச்சியில் பாரத மிகுமின் ஆலை (BHEL) மற்றும் ஊட்டியில் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ், அதற்கு அடுத்த ஆண்டில் ஆவடியில் கன வாகனங்கள் ஆலை (Heavy Vehicles Factory)
- 1963இல் இந்திய மருந்து உற்பத்தி நிறுவனம் ஐ.டி.பி.எல்.
- 1965 இல் சென்னை அருகே மணலியில் மதறாஸ் (பெட்ரோலியம்) எண்ணய் சுத்திகரிப்பு ஆலை, அதே ஆண்டில் குமரியில் அபூர்வ தாது மணல் ஆலை (Indian Rare Earths), அடுத்த ஆண்டில் மதராஸ் உர உற்பத்தி ஆலை, அதன்பின் இரண்டு ஆண்டு கழித்து
- 1968 இல் திருச்சியில் சிறு ஆயுதங்களுக்கான ஆலை மற்றும் சென்னையில் மொடர்ன் ப்ரேட்ஸ்
- 1977 இல் சேலம் ஸ்டீல்
- 1980 இல் ராணிப்பேட்டையில் பி.ஹெச்.இ..எல்.என்று பல ஆலைகள் பொதுத்துறையில் தமிழக எல்லைக்குள் அமைக்கப்பட்டன.
இவை தவிர மாநில அரசும் பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருடனான கூட்டு நிறுவனங்களையும் உருவாக்கியது.
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளின் துவக்கத்தில் தமிழக மாநில நிகர உற்பத்தியில் பதிவு செய்யப்பட்ட ஆலைத்துறையின் உற்பத்தியின் பங்கு பதினெட்டு சதமாக இருந்தது.[1] மொத்த உழைப்பாளிகளில் ஏறத்தாழ 9 சதம் வீடுசாரா ஆலைகளில் பணிபுரிந்தனர்.
தொழில்துறை உற்பத்தி அதிகரித்தது மட்டுமல்ல. அதன் உள்ளடக்கத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. 1950 இல் இருந்து அடுத்த 30 ஆண்டுகளில் தமிழகத்தின் பாரம்பர்ய துறைகளின் (கைத்தறி, பஞ்சு மற்றும் நவீன ஜவுளி, சிமன்ட், தோல் பொருட்கள்,சர்க்கரை) உற்பத்தி அதிகரித்த போதிலும் மொத்த தொழில் உற்பத்தியில் அவற்றின் பங்கு குறைந்தது. பஞ்சு மற்றும் ஜவுளித்துறை ஆலைகள், சர்க்கரை ஆலைகள், சிமண்ட் ஆலைகள், தோல் துறை ஆலைகள் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை இக்காலகட்டத்தில் ஓரளவு அதிகரித்த போதிலும், மறுபுறம், ப்ளாஸ்டிக் உள்ளிட்ட ரசாயனத்தொழிற்சாலைகள், இயந்திர உற்பத்தி ஆலைகள் ஆகியவற்றில் மிக வேகமான வளர்ச்சி ஏற்பட்டது. ஐ,சி.எப்.(ரயில்பெட்டிகள்), பி.ஹெச்.இ.எல்.(மின்கலன்கள்), எம்.ஈர்.எல். (கச்சா எண்ணய் சுத்திகரிப்பு ஆலை) என்று பல நவீன தொழிற்சாலைகள் உருவாகின. தமிழக மின் உற்பத்தியும் 1950களில் இருந்து 1980கள் வரையிலான காலத்தில் வேகமாக அதிகரித்தது. 1950-51 இல் 156 மெகாவாட் என்ற நிலையில் இருந்து தமிழக மின் உற்பத்தி திறன் 1984-85 இல் 3344 மெகாவாட்டாக உயர்ந்தது.
தமிழக தொழில் வளர்ச்சியின் ஒரு அம்சம் அன்றும் இருந்தது, இன்றும் தொடர்கிறது. அது என்னவெனில், தொழில் வளர்ச்சி மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே ஏற்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 1982-83 இல் மொத்த ஆலைகளில் 21 % சென்னை – காஞ்சிபுரம் –திருவள்ளூர் மாவட்டங்களிலும் 17.2% கோவை – திருப்பூர் மாவட்டங்களிலும் இருந்தன. ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களில் கிட்டத்தட்ட சரி பாதியினர் இந்த ஐந்து மாவட்டங்களில் தான் பணியில் இருந்தனர். நிலைமூலதனத்தில் (fixed capital) கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கும் இந்த மாவட்டங்களில் தான் இருந்தன.
மேலும் அகில இந்திய அளவில் அறுபதுகளின் பிற்பகுதியில் இருந்து தொழில் துறை நெருக்கடி தீவிரம் அடைந்தது. இதன் பிரதிபலிப்பு தமிழகத்திலும் இருந்தது. 1960-61 இல் இருந்து 1970-71 வரை பதிவு செய்யப்பட்ட ஆலை உற்பத்தி தமிழகத்தில் ஆண்டுக்கு 7.45% என்ற வேகத்தில் அதிகரித்துவந்தது. ஆனால், 1970-71 இல் இருந்து அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த வேகம் ஆண்டுக்கு 1.41% ஆக சரிந்தது. மத்திய அரசு பொதுத்துறை முதலீடுகளை வெட்டியதன் விளைவாக ஏற்பட்ட தொழில் மந்த நிலை தமிழகத்திலும் வெளிப்பட்டது. மேலும், மின்பற்றாக்குறை பிரச்சினையும் ஏற்பட்டது.
1950 களிலும் 1960 களிலும் தமிழகத்தில் தொழில் உற்பத்தி வேகமாக வளர்ந்தது என்பதையும், பல புதிய துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு நவீனமாக்கப்பட்டது என்பதையும் பார்த்தோம். 1970 களில் தொழில் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 1.41% ஆக சரிந்தது என்றாலும் 1980 களில் தமிழக தொழில் வளர்ச்சி மீட்சி அடைந்து ஆண்டுக்கு 4.6 % என்ற வேகத்தில் அதிகரித்தது.
தாராளமய காலத்தில் தொழில் வளர்ச்சி
1960-61 இல் தமிழக மொத்த உற்பத்தி மதிப்பில் தொழில்துறையின் பங்கு 20.47 % ஆக இருந்தது. இது தொடர்ந்து அதிகரித்துவந்தது. 1990-91 இல் 33.1% ஆக இருந்தது. 1995-96 இல் 35.16% ஆக உயர்ந்தது. ஆனால் 1999-2000 இல் 31.05% ஆக குறைந்தது. குறிப்பாக 1980களில் 30% ஆக இருந்த ஆலைஉற்பத்தியின் பங்கு, 1990களில் 25 % ஆக குறைந்தது. வேறு வார்த்தைகளில் கூறினால், தாராளமயக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட முதல் பத்து ஆண்டுகளில் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சியும் ஆலை உற்பத்தி வளர்ச்சியும் மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தைவிட குறைவாக இருந்தது என்பது தெளிவாகிறது. சிறுகுறு தொழில்கள் குறிப்பாக பாதிக்கப்பட்டன. இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் சிறு குறு தொழில்களுக்கான (ஏற்கெனவே இருந்த) சலுகைகள் விலக்கிக் கொள்ளப் பட்டதும் வங்கிக் கடன் வசதி குறுக்கப்பட்டதும் சிறுகுறு தொழில்களை பாதித்தது. இதனால வேலை வாய்ப்புகளும் பாதிப்புக்கு உள்ளாயின.
தமிழக ஆலை உற்பத்தி மற்றும் தொழில்துறை வளர்ச்சி விகிதத்தில் 1990 களில் ஏற்பட்ட சரிவு 2003 வரை தொடர்ந்தது. பின்னர் ஓரளவு மீட்சி ஏற்பட்டது. 2004-05 தொழில் உற்பத்தி குறியீடு 100 என்று வைத்துக்கொண்டால், 2013-14 இல் 161.6 ஆக உயர்ந்தது. இதுவும் பிரமாதமான வளர்ச்சி விகிதம் என்று சொல்ல முடியாது. கடந்த மூன்று ஆண்டுகளில் (2011-14) முறையே 4%, 1% மற்றும் 4.3% என்ற அளவில் ஆலை உற்பத்தி வளர்ச்சி மிக மந்தமாகவே இருந்துள்ளது.
அனைத்திந்திய அளவில் தமிழகம் தொழில் துறையில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. 2011-12 கணக்குப்படி தமிழகத்தில் கிட்டத்தட்ட 37000 தொழிற்சாலைகள் உள்ளன; இந்த ஆலைகளில் 19.41 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்; ஆலை உற்பத்தியின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 6 லட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாய்; உற்பத்தியில் சேர்க்கப்பட்ட மதிப்பு 76179 கோடி ரூபாய்.
2011-12 கணக்குப்படி இந்தியாவின் மொத்த பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளில் 17% தமிழகத்தில் உள்ளன; மொத்த ஆலைத் தொழிலாளிகளில் 14.45 %; மொத்த ஆலை உற்பத்தி மதிப்பில் 10.54%; மொத்த நிலைமூலதனத்தில் 8.28 %; உற்பத்தியில் சேர்க்கப்பட்ட மதிப்பில் 9.11%.
ஆக, தமிழகம் தொழில் துறையிலும் குறிப்பாக ஆலை உற்பத்தியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்று. இந்தியாவின் ஆலைத் தொழிலாளி வர்க்கத்தில் ஏழில் ஒரு பங்கு தமிழகத்தில் உள்ளது.
தமிழக அரசுகளின் முதலீட்டுக் கொள்கைகள்
இதுவரை தமிழகத் தொழில் வளர்ச்சியின் பல விவரங்களை சுருக்கமாக பார்த்தோம். இந்த வளர்ச்சிக்கும் அதன் தன்மைக்கும் ஒரு முக்கிய காரணம் காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் அதற்கு பின்பு வந்த திராவிட கட்சிகள் ஆட்சியிலும் அரசுகள் பின்பற்றிய கொள்கைகளாகும். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது 1967 வரை தான். விடுதலைக்குப் பின் முதல் இருபது ஆண்டுகளில் தமிழகத்திலும் மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அக்கட்டத்தில் பொதுத்துறை முதலீடுகளும் இறக்குமதிக்கு மாற்றாக உள்நாட்டு உற்பத்தி என்ற கொள்கையும் ஓரளவு நவீன தொழில் வளர்ச்சியை சாத்தியமாக்கின. பின்னர் 1966 முதல் 1970களின் இறுதிவரை தொழில் துறையில் நாடு தழுவிய தேக்கம் இருந்தது. அடுத்த பத்து ஆண்டுகளில் நாட்டின் தொழில் வளர்ச்சி வேகம் அடைந்தது. தமிழகத்திலும் இது பிரதிபலித்தது. ஆனால் 1991 இல் துவங்கி மத்திய மாநில அரசுகளின் தொழில் கொள்கைகள் மாறின. தொழில் வளர்ச்சி என்பதில் அரசுக்கு பொறுப்பு மிக குறைவாகவே இருக்க வேண்டும் என்பதே கொள்கை நிலையாக மாறியது. தனியார் முதலாளிகளை, குறிப்பாக அந்நிய மற்றும் இந்தியப் பெரும் கம்பனிகளை தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்ளவைக்கும் வகையில் அவர்களுக்கு ஏராளமான வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டன. மேலும் இக்கம்பனிகள் தங்கு தடையின்றி உற்பத்தியை மேற்கொள்ள வசதியாக அவர்களுக்கு நிலம், நீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து துணை வசதிகளும் உத்தரவாதமாகவும் சலுகை விலையிலும் அளிக்கப்பட்டன. உற்பத்தி தங்கு தடையின்றி நடந்திட தொழிலாளிகளின் தொழிற்சங்க உரிமைகளும் இதர ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்பட்டன. இது தான் ஹூண்டாயிலும் நோகியாவிலும், பாக்ஸ்கானிலும் இன்னபிற பன்னாட்டு, இந்நாட்டு பெரும் கம்பனிகளின் ஆலைகளில் நாம் காண முடிந்தது. அந்நிய, இந்திய கம்பனிகளுடன் முதலீட்டுக் கொள்கை என்ற பெயரில் அரசுகள் போட்டுக்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பெரும் பாலும் வெளிச்சத்திற்கே வரவில்லை. இவை பற்றி வெள்ளை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியினர் திமுக ஆட்சியிலும் கோரினர், அதிமுக ஆட்சியிலும் கோரினர். ஆனால் இன்றுவரை அத்தகைய எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை.
உள்நாட்டு சிறு குறு முதலாளிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு அரசின் உதவி கிடைப்பதில்லை. மறுபுறம் தாராளமய கொள்கைகளின் கீழ் சிறு குறு தொழில்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த ஏறத்தாழ அனைத்து துறைகளும் பெரும் கம்பனிகளுக்கு திறந்து விடப்பட்டுள்ளன. கடன் வட்டி விகிதங்கள் உயர்வு, மின்சார பற்றாக்குறை உள்ளிட்ட தாராளமய கொள்கைகளின் விளைவுகள் சிறு குறு தொழில்களை கடுமையாக பாதித்துள்ளன. இது வேலை வாய்ப்பையும் பாதித்துள்ளது.
பொதுத்துறை முதலீடுகள் வெட்டப்பட்டு கட்டமைப்பு வசதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவும் தொழில் துறை வளர்ச்சியையும் அதன் தன்மையையும் பாதித்துள்ளது.
இந்த அரசு முதலீட்டு கொள்கைகளின் பின்புலத்தில் தமிழக தொழில் வளர்ச்சியின் வர்க்கத்தன்மை பற்றி பார்ப்போம்.
தொழில் வளர்ச்சியின் வர்க்கத்தன்மை
தமிழக தொழில் வளர்ச்சியிலும் குறிப்பாக ஆலை உற்பத்தியிலும் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளில் வளர்ச்சியும் தேக்கமும் இருந்தாலும் உழைப்பாளி மக்களின் கடும் உழைப்பாலும் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாகவும் மூலதனசேர்க்கையாலும் கணிசமான அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது. நவீன மயமாக்கல் ஏற்பட்டுள்ளது.உற்பத்தியின் கட்டமைப்பு பெருமளவிற்கு மாறியுள்ளது. ஆனால் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த ஆலை தொழிலாளிகளின் நிலைமை என்ன? அவர்களுக்கு இந்த வளர்ச்சியில் எவ்வளவு பங்கு கிடைத்தது? வேலை வாய்ப்பு எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது?
முதலா`வதாக, 2011-12 கணக்குப்படி ஆலைஉற்பத்தியில் சேர்க்கப்பட்ட மதிப்பு (இது மொத்த உற்பத்தி மதிப்பில் இருந்து கூலி, சம்பளம் தவிர இதர –மூலப்பொருள், இயந்திர தேய்மானம் ஆகிய – செலவுகளை கழித்தால் கிடைக்கும் தொகை) 100 என்று கொண்டால், அதில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் சம்பளமும் தொழிலாளிகளின் கூலியும் சேர்ந்து மொத்தமாக 35% தான். அதாவது ஒருநாள் உழைப்பில் (மேலாண்மை பொறுப்பில் உள்ளவர்களின் சம்பளத்தை சேர்த்துக்கொண்டாலும்) உழைப்பாளிகளுக்கு கிடப்பது 35%. முதலாளி உபரியாக பெறுவது 65%. மார்க்சின் மொழியில் கூறினால் சுரண்டல் விகிதம் – உபரி உழைப்புக்கும் அவசிய உழைப்புக்கும் உள்ள விகிதம் – 65/35 அல்லது கிட்டத்தட்ட 185%. அதாவது, உழைப்பாளிகள் தமிழகத்தில் ஆலை உற்பத்தியில் கடுமையாக சுரண்டப்படுகின்றனர்.
இரண்டாவதாக, ஒருவிஷயத்தைப் பார்க்கலாம். 1980களில் உற்பத்தியில் சேர்க்கப்பட்ட நிகர மதிப்பில் உழைப்பாளர் கூலியின் பங்கு 45% ஆக இருந்தது. 1990களில் 35% ஆக குறைந்தது. 2011-12 க்கு வரும் பொழுது இது மேலும் குறைந்து, உழைப்பாளர் கூலியும் மேலாண்மை ஊதியங்களும் சேர்ந்தே 35% பங்கு தான் உற்பத்தியில் சேர்க்கப்பட்ட நிகர மதிப்பில் பெற்றன. தாராளமய காலகட்டம் உழைப்பாளிகள் மூலதனத்தால் சுரண்டப்படுவது மேலும் அதிகரித்துள்ள காலகட்டம் என்பதை தெளிவாக பார்க்கலாம்.
ஆலை உற்பத்தி துறையை பொறுத்தவரையில், உற்பத்தி அதிகரித்தாலும், பணி இடங்கள் மிக குறைவாகவே அதிகரித்துள்ளன. பதிவு செய்யப்பட ஆலைகளில் உழைப்பாளர் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ள போதிலும், பதிவு செய்யப்படாத ஆலை உற்பத்தியில் பணி இடங்கள் குறைந்துள்ளன. சிறு குறு தொழில்முனைவோர் தாராளமய கொள்கைகளின் காரணமாக எதிர் கொள்ளும் நெருக்கடிகளும் இதன் பின் உள்ளன.
ஆக, ஆலை உற்பத்தி துறையின் தாராளமய கால வளர்ச்சி உழைப்பாளி மக்களுக்கு வேலை இழப்பையும் அதிகமான சுரண்டலையும் பரிசாக அளித்துள்ளது. தொழில் துறையின் இதர பகுதிகளான கட்டுமானம், மின்சாராம், எரிவாயு மற்றும் தண்ணீர் வழங்கல் ஆகியவற்றை பொறுத்தவரையில் கட்டுமானம் மட்டுமே வேகமான வளர்ச்சியை கண்டுள்ளது.
மின் உற்பத்தி துறை நெருக்கடியில் தொடர்வதை நாம் அறிவோம். 1990களிலேயே பொதுத்துறையில் முதலீடுகளை மேற்கொண்டு மின் உற்பத்தி திறனை பெருக்குவதற்குப் பதில் இத்துறையை தனியாருக்கு திறந்துவிட்டு அவர்களிடம் இருந்து காசு கொடுத்து மின்சாரம் வாங்கும் தாராளமய கொள்கைகள் துவங்கின. அகில இந்திய அளவிலும் தமிழகத்திலும் கடந்த பத்து-பதினைந்து ஆண்டுகளாக தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. தமிழகத்தில் மின் உற்பத்தி துறை உள்ளது.வளர்ச்சி மிகவும் மந்தமாக உள்ளது.
கட்டுமானத்துறையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் இது சீரான வளர்ச்சியாக இல்லை. பொதுவான பொருளாதார நிலாமையை ஒட்டியே இத்துறையின் வளர்ச்சி அமைய முடியும். இத்துறையிலும் இயந்திரமயமாக்கல் வேகமாக நிகழ்ந்து வருகிறது. இதனால் துறையின் வளர்ச்சிக்கு இணையாக வேலை வாய்ப்பு கூடுவது சாத்தியம் இல்லை. மேலும் இத்துறையில் கிட்டத்தட்ட அனைத்து உழைப்பாளிகளுமே தினக் கூலிகளாகவோ ஒப்பந்தத் தொழிலாளிகளாகவோ உள்ளனர். கடும் உடல் உழைப்பு செய்கின்றனர். தொழில்செய்கையில் விபத்துக்களுக்கு உள்ளாகின்றனர். எனவே, தின கூலி பிற துறைகளின் அத்தக் கூலியை விட கூடுதலாக தோன்றினாலும் கட்டுமானத்துறையும் கடும் சுரண்டல் நிலவும் துறை தான்.
நிறைவாக
தமிழக தொழில் வளர்ச்சி பற்றிய இக்கட்டுரை நமக்கு சில அடிப்படை விஷயங்களை தெரிவித்துள்ளது. ஒன்று, இந்தியா விடுதலை பெற்ற பிறகு தமிழகத்திலும் தொழில் வளர்ச்சி வேகமடைந்தது. 1950 முதல் 1990 வரையிலான காலத்தில் தமிழக தொழில் துறையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. அரசு உதவியுடன் கைத்தறி போன்ற துறைகள் ஓரளவு பாதுகாக்கப்பட்டாலும் ஒட்டுமொத்தமாக தொழில் துறை நவீனமயமாகியது. பாரம்பரிய துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டது. எனினும் ரசாயன பொருட்கள், ப்ளாஸ்டிக்ஸ், இயந்திர துறை ஆகியவை இன்னும் மிக வேகமாக வளர்ந்தன.
அரசின் கொள்கைகள் பிரதானமாக தொழில்வளர்ச்சியை பெரும் மூலதனங்களுக்கு ஊக்கம் அளிப்பதன் மூலம் சாதிக்க முயன்றுள்ளன. 1990களுக்கு முன் மாநில தொழில் வளர்ச்சியில் மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை முதலீடுகள் முக்கிய பங்காற்றின. அதன் பிறகு தாராளமய கொள்கைகள் அமலுக்குவந்தன. இக்காலத்தில் தொழில் வளர்ச்சி சற்று மந்தமாகவே இருந்துள்ளது. ஆலை உற்பத்திவளர்ச்சி விகிதம் ஒருசில ஆண்டுகளில் அதிகமாக இருந்தாலும் பிற ஆண்டுகளில் மிகவும் குறைவாக இருந்தது. வேலை வாய்ப்புகளில் பின்னடைவு ஏற்பட்டது. குறிப்பாக, சிறு குறு தொழில்கள் நலிவுற்றன. பன்னாட்டு பொருளாதாரத்தின் பின்னடைவும் தமிழக ஏற்றுமதி சார்ந்த தொழில்களான ஜவுளி மற்றும் என்ஜினீயரிங் தொழில்கள் கடும் பாதிப்புக்கு அவ்வப்பொழுது உள்ளாயின.
வளர்ச்சி விகிதமும் நவீன மையமும் ஒருபுறம் இருக்க, வளர்ச்சியின் வர்க்கத்தன்மை எவ்வாறு இருந்தது? உழைப்பாளி மக்களுக்கு பெரும் பயன் தரவில்லை. மாறாக, வேலை வாய்ப்புகள் வளரவில்லை. வேலையின்மை பெரும் பிரச்சினையாக தொடர்ந்துள்ளது. உற்பத்தி திறனும் மொத்த உற்பத்தியும் பன்மடங்கு உயர்ந்துள்ள போதிலும் இந்த வளர்ச்சியை சாத்தியமாக்கிய உழைப்பாளி மக்களுக்கு உற்பத்தியில் சேர்க்கப்பட்ட மதிப்பில் கிடைத்த பங்கு குறைந்தது. சுரண்டல் விகிதம் அதிகரித்துள்ளது. தமிழக தொழில் வளர்ச்சி ஏற்றுமதியை கணிசமான அளவிற்கு சார்ந்து நிற்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் அந்நிய பெரும் மூலதனமும் இந்திய பெரும் மூலதனமும் ஏராளமான சலுகைகளை பெற்று தங்கள் லாபங்களை பன்மடங்கு பெருக்கிக் கொண்டுள்ளன. ஆனால் அவர்கள் விரும்பும் பொழுது, சலுகைகளை அனுபவித்த பின்பு, ஆலைகளை மூடி தொழிலாளிகளை வீதியில் நிறுத்துவது என்பது தமிழகத்தின் அனுபவம். தொழிலாளிகளின் ஜன நாயக உரிமைகள் பறிக்கப்படுவதும் தமிழக அனுபவம்.
தாராளமய கொள்கைகளை எதிர்த்து உழைப்பாளி மக்களை திரட்டுவதன் அவசியத்தை இச்செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.
[1] பத்துக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பணிபுரியும், மின்சாரம் பயன்படுத்தும் ஆலைகளும் மின்சாரம் பயன்படுத்தாவிட்டாலும் இருபதுக்கு மேற்பட்ட தொழிலாளிகள் பணியாற்றும் ஆலைகளும் பதிவு செய்யப்பட்ட ஆலைத்துறை என்பதன் வரையறையாகும்.